Thursday, December 26, 2019

ஸ்ரீ காந்த லக்ஷ்மி - 25.12.2019


ஸ்ரீ காந்த லக்ஷ்மி

இவரை நான் சந்திக்க முடிந்தது இரு வருடங்களுக்கு முன்னர் தான். அதுவும் மிகவும் தற்செயலான ஒரு நிகழ்ச்சி. 

என் தம்பி முறையான ஒருவன் - கோபி - என்னைப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் போயிருந்தான். 1995 இற்குப் பின்னர் நான் கண்ட பல்கலைக் கழகம் அது! 

அப்போதெல்லாம் வெளிச்சமும் வெளியுமாக இருந்த இடமெல்லாம் இப்போது இருளையும் நிழலையும் கொண்டிருந்தது.

அந்தக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்தமாய் போயிருந்ததும் அதிக நேரத்தைச் செலவளித்ததுமான நூலகத்தை பார்க்காமல் வர முடியுமா? அங்கே போன போது தான் ஸ்ரீ அக்கா அங்கு நூலகராக இருப்பதை அறிய முடிந்தது. 

படித்த காலத்தில் அவரை நான் கண்டதுண்டு. - அப்போது அவர் உதவி நூலகராகக் கடமையாற்றி இருந்தார். அவரோடு நேரடியாக எனக்குப் பழக்கமோ தொடர்போ இல்லாது போயினும்; போகும் போதும் வரும் போதும் முன்னால் அமைந்திருந்த சிறு சிறு பெட்டிக்குள் அப்படி என்ன தான் தேடுகிறார் என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும்.

கூடவே, அவர் கம்பீரமாக அணிந்து வரும் பருத்திச் சேலைகளிலும் கொஞ்சம் கவனம் சென்று திரும்பும்! அத்தனை நேர்த்தியோடும் தனித்துவத்தோடும் அதை அவர் அணிந்திருப்பார். நகைகள் அதிகம் இல்லாத; கடும் நிறங்கள் எதையும் கொண்டிராத; அந்தப் பருத்திச் சேலைகள், அவருக்கு மிகுந்த கம்பீரத்தைக் கொடுப்பதாகவும்; தனித்துவம் மிளிர்வதாகவும் அப்போதெல்லாம் தோன்றும். அதுவே அவரை தனியாக நினைவில் வைத்திருக்கவும் இப்போது உதவியது.

பல்கலைக்கழக நூலகம் நிறைய மாற்றங்களைக் கொண்டிருந்தது. நாம் அங்கிருந்த போது ஒரு தளத்தில் மட்டுமாக இருந்த நூலகம் இப்போது பெருத்திருந்தது. உள்ளக அமைப்புகளிலும் நிறைய மாற்றங்கள். பாதுகாப்புகள்...தெரிந்த முகங்கள் என்று எதுவும் இல்லை. 

சரி வந்தது தான் வந்தேன். நூலகரையும் பார்த்துப் போகலாமே என அவரது அறைக்குச் சென்றேன். கம்பீர லக்ஷ்மியாக அவர் அதே தோற்றத்தோடு அமர்ந்திருந்தார். அவரது தோற்றத்தை விட அந்த அறை இன்னும் வசீகரமாக இருந்தது. அவருக்கு முன்னால் இருந்த நீண்ட மேசைக்கு முன்னால் ஒரு சுவர் நிறைந்த கண்ணாடி அலுமாரி. அதற்குள்ளே பாரம்பரியமானதும் இப்போது வழக்கொழிந்து போய் விட்டதுமான பொருட்கள் நெருக்கடி இல்லாமல் வசதியாக உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்தன. அவருக்கருகே வலது புறமாக ஒரு கருங்காலி மேசை. நிறைந்த கலை வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த அது, சேர். பொன் இராமநாதன் பாவித்ததாம். என் கண் போன போக்கை பார்த்து விட்டு, அவர் உடனே அதைச் சொன்னார். 

பெற்றோலில் நெருப்பு பத்தி விடுவதைப் போல நாங்கள் பத்திக் கொண்டோம்.

வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு அவரிடம் இருந்த வழக்கொழிந்து போன பாரம்பரிய பொருட்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறை என்னைச் சிலிர்க்கச் செய்தது. தன்னுடய திட்டங்கள் ; தன்னுடய ஆசைகள்; தன்னுடய எதிர்கால இலட்சியங்கள்; - அவற்றுக்கு போதாமையோடு இருக்கும் ஆர்வமற்றோர் அல்லது அது குறித்த விழிப்புணர்வோ தேடலோ இல்லாதோர் - தன்னிடம் இருக்கிற சேகரிப்புகள் - அவற்றுக்கு செய்யப்பட வேண்டி இருக்கும் பெரும் பணி - இவைகளைப் பற்றி எல்லாம் பேசப்பேச என் ஆதர்ச கனவு அவர் வாய் மூலம் வெளிவருவதாகவே எனக்குத் தோன்றியது.

இத்தனையும் பேசிய பிறகு பின் புறம் திரும்பி தான் வெளியிட்ட ஒரு புத்தகத்தையும் தந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

அன்று இரவு விருந்தினர் போக்கு வரவுகள் எல்லாம் இருந்த போதும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆசை எப்போது தனிமை கிட்டும் என்று எண்ண வைத்தது. ஒருபடியாக எல்லோரும் போன பிறகு, நடு இரவில் இருந்து பார்க்க ஆரம்பித்து  ஓரளவு மேலால் வாசித்துப் முடித்து, காலை 7.30 மணிக்கு என் மற்றய தம்பி மகிரன் வேலைக்குப் புறப்படும் போது ( அவர் பல்கலைக் கழக நூலகத்தில் தான் வேலை செய்கிறார்.) என்னை ஒரு தடவை பல்கலைக்கழக நூலகத்தில் இறக்கி விடக் கேட்டேன். 

இந்தப் பெண்மணியை நேரே மீண்டும் கண்டு, இந்த இலட்சியக் கனவுகள் குறித்து பேச கொண்டிருந்த ஆசை அது! ஒரு காதலன் காதலியைக் காணக் கொண்டிருக்கும் ஆவலுக்கு சற்றும் குறைந்ததல்ல அந்த ஆசை!

’ஓமக்கா வாங்கோ’ என்றவன், காங்கேசந்துறை வீதியைத் தாண்டி இணுவில் பக்கமாக விரைந்தான். ’எங்கேயடா போகிறாய்’ என்றேன். ‘உங்களுக்கு இன்னொரு இடம் காட்டுகிறேன்; பிறகு உங்களை நூலகம் அழைத்துச் செல்கிறேன்’ என்றான்.

அவன் என்னை இறக்கிய இடம் ஸ்ரீ அக்காவின் மாடி வீடு. இறங்கிய நேரம் அவர் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது இதை எழுதினால் உங்களுக்கு நம்பமுடியுமோ என்னவோ! வீடு முழுக்க கால்வைக்க இடமில்லாமல் அவர் சமூகத்துக்குத் சேர்த்து வைத்த சொத்துக்கள்!! ஓரமாக ஒரு அறையும் குசினியும் மட்டும் தமக்கென!

நான் அப்படி ஒரு ஆச்சரியத்தை அதற்கு முன் - ஓரளவு வாழ்க்கையைப் புரிந்துகொண்டதன் பின்பான - என் வாழ்நாளில் அடைந்ததில்லை; பூரிப்பும் பூரண மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்ட அந்த தருணம் கொண்ட அந்நாள் 
( 16.10.2017) என் வாழ்நாளில் மறக்கவொண்ணாதது!


அவர் வீட்டில் பார்த்த பொருட்கள் மீதான அதீத ஆசையினாலும்; அவர் சொன்ன இவ்வாறான பொருட்களை இப்போதெல்லாம் உருக்கு பட்டறைகளில் உருக்குவதற்கு முன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்; தென்பகுதி வியாபாரிகள் அறா விலைக்கு இவைகளை வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றும்; எங்கு இவைகளைத் தேடி வாங்கலாம் என்று விபரங்களும் சொல்ல, நானும் அடுத்து வந்த ஓரு நாளில் ஆர்வக் கோளாறினால் அந்த உருக்கு பட்டறைகளுக்குச் சென்று, பழய பொருட்கள் எல்லாம் கிண்டிக் கிளறி, சில பொருட்களை - என் அதீத அவா தெரிந்தே அறாவிலை சொல்லியும் கேளாமல் - அவைகளை கொள்வனவு செய்ததோடு மட்டுமல்லாமல், அவைகளை பொலிஷ் செய்யும் இடத்தில் கொடுத்து அதனை புதிது போலாக்கி ( இங்கு குடிவரவதிகாரிகள் விடவேண்டுமே) அந்த மகிழ்ச்சியை அவரோடு மிக்க குதூகலத்தோடும் ஒரு வித பெருமை கலந்த மகிழ்ச்சியோடும்  சொல்ல, அவர் சொன்ன ஒரு வசனம் எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. 

‘யசோ, பழைய பொருட்கள் பழசா இருக்கேக்க தான் அதுக்கு மதிப்பு; புதுசாக்கிறதில இல்ல:’

எத்தனை பெரிய உண்மை அது! அவர் அதனால் அதன் பழசு ஆகிய மெருகு கெடாமல் அதன் அத்தனை தார்ப்பரியங்களோடும் அவைகளைப் பாதுகாத்தார்! அதில் தெரிந்தது அவரின் மரபு குறித்ததான உண்மையான கரிசனம்!

அந்தப் பொருட்கள் மாத்திரமல்ல அந்த பெண்மணியும் சமூகத்தின் சொத்து தான்! அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் சமூகத்துக்கான எதிர்காலச் சொத்தினைச் சேர்ப்பதில் தன் முழு வாழ்நாளையும் தன் முழுப்பணத்தையும் செலவு செய்திருந்தார்.

சமூகம் அதனைக் கண்டு கொள்ளவில்லை.

என் தம்பிக்கு என் பைத்தியமும் அவவின் பைத்தியமும் பற்றி நன்கு தெரிந்திருந்த படியால் அவன், ’இனி அவவும் வேலைக்கு வர மாட்டா; நீங்களும் இனி நூலகத்துக்கு வர மாட்டீங்கள்; இரண்டு பேருமா இருந்து கதையுங்கோ; வரேக்க வந்து கூட்டிப் போகிறேன் எனக்கு நேரமாயிட்டுது வேலைக்கு’ என்று சொல்லி விட்டு, அவன் போய் விட்டான்.

இருந்து கதைத்தோம்; எங்கள் கனவுகள்; எதிர்பார்ப்புகள்; போதாமைகள்; சிக்கல்கள்; செய்யவேண்டியன; செய்யக் கூடியன ...எல்லாம் பேசினோம்; நிறைய திட்டங்கள் தீட்டினோம்.

இருவருக்குமே நிறையக் கனவுகளும் அவற்றை வென்றெடுப்பதற்கான சாத்தியங்களும் இருந்தன.

இன்று அவர் மாரடைப்பால் காலமானார்!

விடைபெற்றுச் சென்ற போது அவருக்கு வயது 58. போகிற வயதா இது?

தன் சமூகத்தை; அதன் எதிர்காலத்தை  கனவு கண்ட அந்த முகத்தைக் 
கடசி முறையாகவேனும் காணவேணும்!

அது என்னுடய கனவுக்குமான இறுதி ஊர்வலம் ஸ்ரீ அக்கா!

Monday, December 16, 2019

'உயர்திணை'யின் அவுஸ்திரேலியக் கவிஞர்களுக்கான அழைப்பு



அன்புடையீர்,

அவுஸ்திரேலியாவில் பல காத்திரமான கவிஞர்கள் இருக்கிறார்கள். சிலர் ஆசு கவிகள்! நினைத்தவுடனே கவி படைக்க வல்லோர். மேலும் சிலர் மரபுக் கவிஞர். வரம்புக்குள் நின்று வசீகரமாகக் கவிதர வல்லோர்! மேலும் சிலர் வீச்சு வாள் போலும் வார்த்தைகளை சுழல விட்டு சொற்போர் செய்ய வல்லார்! இவைகள் எல்லாம் கைக்கொள்ள வல்லாரும் நம்முள்ளே உளர்.
எனினும் அவர்களை ஒருங்கிணைத்து கவி இன்பம் பெற வாய்ப்புகள் நமக்குள்ளே அதிகம் இல்லை. வாழ்க்கையும் வேலையும் போட்டி போடும் உலகில் சுந்தரத்தமிழில் சிந்துக் கவி இயற்றவும் அதனை இயக்கவும் ஓர் உந்து சக்தி தேவையாகவே இருக்கிறது. ஏனைய கலைவெளிகளுக்கு வேண்டப்படுவது போலவே!

தவிரவும், அவுஸ்திரேலியச் சமூகம் நோக்கியதான கவிஞர்களின் சிந்தனைகளும் அவர்களின் கவிதா விசாலங்களும் கூட பெருமளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

அதன் காரணமாக, வருகிற 2020 புதுவருடத்திலிருந்து உயர்திணையின் செயல்பாடுகளின் ஒரு முன்னோட்டமாக அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களை ஒன்றிணைத்து மாதம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவிதைகளைக் கோருவதெனவும்; அவைகள் யாவும் வந்து சேர்ந்த காலக் கிரமத்தின் படி அடுத்த மாத ஆரம்பத்தில் திகதிவாரியாக உயர்திணை வலைப்பக்கத்தில் பிரசுரிப்பதெனவும் உயர்திணை நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

அதன் ஒரு முன்னூட்டமாகக் கடந்த மாதத்திற்கான தலைப்பாக, அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் முழுக்க பெரும் தாக்கத்தைச் செலுத்திய; செலுத்திக்கொண்டிருக்கும் ”காட்டுத் தீ” என்ற தலைப்பு தெரிவு செய்யப் பட்டிருந்தது.

இம்மாதம் “அகதிப்படகு” என் ற தலைப்பு கவிதைக்குரிய கருப்பொருளாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் பேசப்படும் ஒரு பிரச்சினைப் பொருளாக இவ் விடயம் ஆகியிருக்கிற பின்னணியில் கவிஞர்களாகிய உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் கவிதா பதிவுகளும் எவ்வாறு இருக்கிறதென்பதை அறிய ஆவலோடிருக்கிறோம்.

அவுஸ்திரேலியக் கவிஞர்களுக்கு மாத்திரமான இத்தலைப்புக்குரிய கவிதைகள் யாவும் இம்மாத இறுதி 31.12.19 இக்கிடையில் uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கவிதைகளை எழுதி அனுப்புமாறு கோருகிறோம்.

அனுப்பப்படும் சகல கவிதைகளும் அடுத்த மாத முதல் வாரத்திற்குள் வந்துசேர்ந்த திகதிவாரியாக https://uyarthinai.wordpress.com/ என்ற இணையப்பக்கத்தில் பிரசுரமாகும்.

எதிர்காலத்தில் சிறப்பானதாகவும், சமூகம் சார்ந்த விடயங்களைக் கொண்டதாகவும் விளங்கும் கவிதைகள் தக்க நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு, அக்கவிதைகளுக்கான கவிஞர்களின் அனுமதியோடும் அவர்களது பெயர்களோடும் உயர்திணை வெளியீடாக புத்தகமாக வெளிக்கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Sunday, December 15, 2019

பரிபாடலில் வைகை வெள்ளம்...

இந்த வைகை ஆறு குறித்து எழுதுவது மிகவும் தற்செயலானது. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதைபோலானதும்...

அண்மைக்காலமாக இந்த தமிழருடய அறம் குறித்த சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அவை குறித்த தேடலின் போது பரிபாடல் அகப்பட்டது. அதனைப் படித்துக் கொண்டு போகையில் அதில் விபரிக்கப்பட்டிருந்த இருந்த பெண்கள் மனதைக் கவர்ந்தபடியாக இருந்தார்கள். அவர்கள் குறித்துத் தனியாக முடிந்த போது பார்க்கவும் எழுதவும் வேண்டும்.

அது அவ்வாறு இருக்க,

இது வைகை ஆறு குறித்தது.



வைகைக்கரைக் காற்றே நில்லு! வஞ்சிதனைப் பார்த்தச் சொல்லு...
தென்மதுரை வைகைநதி தினம் பாடும் தமிழ் பாட்டு....
வைகைநதி பெருகி வர வண்ணமலர் ஊர்ந்து வர.....

என்றெல்லாம் சினிமாப்பாடல் சொல்லும் அதே வைகை தான் இன்றய பதிவின் கதாபாத்திரம்!

பரிபாடலில் புரண்டு வரும் நதி இது...

‘ நிறைகடல் முகந்துராய் நிறைந்துநீர் துளும்புந்தம்
பொறைதவிர் பசைவிடப் பொழிந்தன்று வானம்
நிலமறைவது போல் மலிர்புனல் தலைத்தலைஇ
மலைய இனங்கலங்க மலைய மயிலகவ
மலைமாசுகழிய கதழும் அரவி யிழியும்
மலிநீர் அதர்பல கெழுவு தாழ்வரை
மாசில் பனுவற் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை மாராமை
மேவிப்பரந்து விரைந்து வினைநந்தத்
தாயிற்றே தண்ணம் புனல்’

என்னவாமெனில்,

கடல் நீரை முகர்ந்து கொண்ட மேகங்கள் தங்களுடய நீரின் பாரத்தை தாங்க முடியாமல் இளைப்பாற நினைத்ததைப் போல பெரும் மழையைப் பொழிந்தன. ( கவனியுங்கள்; சங்க காலத்தில் மழை எப்படி பொழிகிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பின்நாளில் ஆண்டாளும் அதைக் தன் அழகு தமிழில் சொல்லுவாள் )

மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மலைவாழ் உயிரினங்கள் கலங்க; மயில்களோ களிப்பால் அகவுகின்றன. மலைப்பகுதிகளில் வீழ்ந்த மழைநீர் வருகிற வீச்சினால் மலைகளில் உள்ள  தூசிகளை நீக்கிக் கழுவிக்கொண்டே கீழிறங்குகின்றது. இப்போது வெள்ளம் அடிவாரத்தில் பெருகி ஓடுகிறது.

அது எப்படி இருக்கிறதென்றால் குற்றமற்ற நூலறிவு கொண்டவர்கள்  புலவர்கள். அவர்கள்  நா அறிவுரைகளைக் கூறும். அவர்கள் அழகிய நல்ல கவிதைகளைப் புனைவார்கள். அவை ஒருபோதும் பொய்யாகிப் போவதில்லை. அறிவுச் செல்வத்தின் வீரியம், அழகு எல்லா இடத்தும் பரவும். அதனால் பல நன்மைகள் விளையும்.

அது போல வைகைவெள்ளம் பெருகி வருகிறதாம்!

சரி, மலையிலிருந்து எல்லாவற்றையும் கழுவித் துடைத்துக் கொண்டு கீழே வந்து விட்டது வெள்ளம்.வைகை வெள்ளம். அதன் குணாம்சம் எப்படி இருக்கிறது?

”நளியிருஞ் சோலை....” என்ற பாடல் அதை இப்படிக் குறிக்கிறது.

நரந்தம் புற்களில் மேலாக; வேங்கைமரத்தின் உதிரல்களை எல்லாம் கூட்டிக் கொண்டு மலைகளில் இருந்து இறங்கும் போது முறித்தெடுத்துக் கொண்டு வந்த மரக்கிளைகளையும் தன்னோடு எடுத்துக் கொண்டு, உயரமான இடத்தில் இருந்தவற்றை எல்லாம் எடுத்து பள்ளமான இடங்களை நிரப்பிய படியுமாக அது வந்து கொண்டிருக்கிறது. கரைபுரண்டு வருகிறது வைகை.

அதனால் உழவர்களுக்கு மகிழ்ச்சி.அதனால் முழவுகளையும் பறைகளையும் ஒலிக்கிறார்கள்.

இந்தக் காட்சிக் கோலம் எப்படி இருக்கிறதென்றால்,

ஆடல்கலையை முறைப்பட தெரியாத ஒருத்தி தாறுமாறாக ஆடி வருவதைப் போலவும்; ஊடல் என்றால் என்ன என்று தெரியாத ஒருத்தி சந்தோஷப்படாமல் செருக்கோடு போவதைப் போலவும்; புது வெள்ளம் ஒரு வித செருக்கோடு போகிறதாம். அது தனக்கு பிடித்த வழியில் போகிறது. அது தடைகளை ஒரு பொருட்டாக மதிக்காத படி போகிறது. விதிமுறைகளுக்கு ஆட்படாத ( விதிமுறைகளைத் தெரியாத)  ஒருவன் தான் விரும்பியபடி உடலுக்கு பூசும் கலவைச் சாந்தினை ( பவுடர்) தயாரித்து பூசிக்கொண்டிருப்பதைப் போல ஒரு வித புது மணத்தோடு சிவந்த அழகிய வைகை நதி ஓடுகிறது.

என்ன அருமையான கற்பனை இல்லையா?

Saturday, December 7, 2019

அறிவுக்கு வழிகாட்டுதல் பற்றி....


அறிவு என்றவுடன் இரண்டு பேர் நினைவுக்கு வருகிறார்கள்.

ஒருவர் தமிழர்; வள்ளுவர். ’மெய்பொருளைக் காண்பது தான் அறிவு’ என்றவர். கீழைத்தேய தமிழ் சிந்தனை மரபின் முதல் பிரதிநிதியென அவரை நாம் அழைக்கலாம்.

மற்றவர் சோக்கிரட்டீஸ். கிரேக்கச் சிந்தனை திறனின் ஊற்றுக்கண். ‘எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள்’ என்று சொல்லித் தந்த மேற்கத்திய ஞானி.

இருவரும் இரு வேறு நாடுகளில் இருந்து இருவேறு பண்பாட்டு சிந்தனைப்புலத்தின் வழி சிந்தித்த தத்துவப் பிரதிநிதிகள்.

இதனை எழுதும் இந்தத் தருணத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் அடையாளச் சின்னம் நினைவுக்கு வருகிறது. 64 கலைகளையும் பிரதிதிநித்துவப்படுத்தும் 64 அடையாளங்கள் வட்டமாய் சுற்றி இருக்க மேலே ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்ற வாசகமும் கீழே யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் என்ற வாசகமும் அதில் பொறிக்கப்பட்டிருந்த ஞாபகம்...

அண்மையில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் பிரசங்கம் ஒன்றைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. ( எங்கே என்பது மறந்து போயிற்று.) அதில் அறிவு குறித்து ஒரு எளிய விளக்கத்தைத் தந்திருந்தார். நீர் இறைக்கும் இயந்திரத்தினை இயக்குவதற்கு முன்னர் கிணற்றுக்குள் இருந்து ஒரு குளாய் இயந்திரத்தோடு இணைக்கப்படும். அது போல இயந்திரத்தின் மறு வாயிலில் இருந்து இணைக்கப்படும் குளாய் நீரினை வெளியேற்றும்.

இவ்வாறான ஓர் அடிப்படை அமைப்போடு இருக்கும் இயந்திரத்தில் கிணற்றுக்குள் இருந்து வரும் குளாயை இணைக்கு முன்னர் கிணற்றில் இருந்து நீரை அள்ளி அந்தக் குளாயினுள் நீரை விட வேண்டியது அவசியம். அது நிறைந்ததன் பின்னர் அதனை இயந்திரத்தோடு இணைத்து தேவையான அளவு எரிபொருளைச் சேர்த்து இயந்திரத்தை இயக்கினால் முதலில் குளாய்க்குள் விட்ட நீர் ‘பொக்’ என்று முதலில் தள்ளும். பின்னர் இயந்திரம் கிணற்று நீரை வாரி வழங்க ஆரம்பிக்கும்.

கல்வி முறையும் கற்பித்தலும் கூட அவ்வாறு தான் இருக்க வேண்டும். ஆசிரியர்களோ வழிகாட்டிகளோ பெற்றோரோ ’குளாய்க்குள் விடும் நீரைப்போல’ இருக்க வேண்டும் என்றார்.

எத்தனை அழகான ஒரு எளிய விளக்கம் இல்லையா?

அது தாகமுள்ள ஒருவரை நன்நீர் நிலைக்கு கொண்டு சென்று விடுதல் மாதிரி.... இங்கே இதனைப் பெறலாம் என்று சொல்லும் ஒரு வழிகாட்டி. பெற்றோர், ஆசிரியர், பாதுகாவலர், பாடசாலை, கல்லூரி எல்லாவற்றின் பணியும் கடமையும் அதுவே.அதுவாகவே இருக்க வேண்டும் என்பது என் ஆசையும்.

தற்காலங்களில் நாம் பரீட்சைக்குத் தயார் படுத்தும் வாழ்வியலை மாணவர்களுக்குப் புகுத்துகிறோமே தவிர, தம் சொந்த வாழ்க்கைக்கும் சமூகத்துக்கும் தயார்படுத்தும் விதமான கற்பித்தலை மாணவர்களுக்கு வழங்குகிறோமா என்று தெரியவில்லை.

பரிபாடலில் ஒரு பாடல் வரும். வடபுலத்தாரின் சிந்தனைகளும் தென்புலத்தாரின் சிந்தனைகளும் ஒன்றுகலந்து விளங்கப்பெற்ற காலம் பரிபாடற்காலம். சங்ககாலத்தின் பிற்பகுதிக்குரியதும். அப்பாடல்களை முழுவதுமாகப்படிக்கும் போது அதில் இரண்டு பண்பாட்டுச் சிந்தனை மரபுகளும் சேருதலையும் ஒன்றுகலத்தலையும் சீர்தூக்கிப் பார்த்தலையும் தெளிவாகக் காணலாம்.

இந்தப்பாடல் (9) அந்த வகை சார்ந்த ஒன்றுதான். இரண்டுவிதமான காதல் நிலைகளை அது ஒப்பிட்டு தென்னகத்துக்குரிய தொல் காதலே சிறந்தது என்று கூறுகிறது. அந்தப் பாடல் இப்படியாகத் தொடரும்.

‘நான்மறை விரித்து நல்லிசை விளங்கும்
வாய்மொழிப் புலவீர்யீ! கேண்மின்சிறந்தது;
காதற்காமம் காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்தது மெய்யுறு புணர்ச்சி;
புலத்தலில் சிறந்தது கற்பே; அதுதான்
இரத்தலும் ஈதலும் இவையுள் ளீடாப்;
..........’

அதாவது, காதலித்துத் திருமணம் செய்யும் அன்பும் காதலும் காமமுமே காம இன்பத்துக்குள் சிறந்தது; கற்புக்காமம் என்பது தலைவன் பரத்தையிடம் போய் வருவதன் காரணமான  ஊடலினால் பெறப்படுகிற இன்பத்தின் பாற்பட்டது. அது அத்தனை உயர்வுடையதல்ல என்று விளக்குகிறது அப்பாடல்.

அறிவு என்பதற்கும் அதனை ஒப்பிட்டு பார்க்கலாம். மனதிற்கு பிடித்த ஒன்றைச் செய்வதற்கும் ‘விதிக்கப்பட்டு விட்ட ஒன்று’ என்பதற்காக ஒன்றைச் செய்வதற்குமான வேறு பாடு அது!

விருப்பமான ஒன்றைக் கற்பதற்கும்; இதனால் எனக்கு நல்ல வருவாய் வரும் என்று ஒன்றை தெரிவு செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு போலாதானதாக அதைக் கொள்ளினும் தவறில்லை.

உயர்புள்ளி, உயர்பதவி, நல்ல பணவருவாய், வசதி வாய்ப்புகள், சமூக அந்தஸ்து - இவைகளை ஈட்டித்தரும் கல்வி - மாணவர்களின் மகிழ்ச்சியை - வாழ்வை அனுபவித்தலை - வாழ்க்கையைக் கொண்டாடுதலை - வாழுதலை - இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளி விடுகிறது. பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்ற தவறான புரிதலை அது வழங்குகிறது. பணம் வசதியை மட்டுமே வழங்கும் என்பதும் மகிழ்ச்சி என்பது ஆத்மாவுக்குப்  பிடித்தமான ஒன்றைச் செய்யும் போது உள்ளிருந்து ஊற்றெடுக்கும் ஒரு வஸ்து என்பதையும் நாம் கருத்தில் கொள்வதில்லை.

கூடவே ஒவ்வொரு குழந்தையும் தனக்குரிய தனித்துவம், குணஇயல்புகள், திறமைகள், ஆசைகள், அபிலாஷைகள், விருப்பங்கள், நோக்கங்கள் ஆகியனவோடு பிறக்கின்றன என்பதையும்; அவைகள் என்ன என்பதையும் கண்டறிய நாம் நேரம் ஒதுக்குவதில்லை. அவர்களின் தனித்துவம் என்ன என்பதே தெரியாத பெற்றோரும் நம் மத்தியில் இல்லாமல் இல்லை.

வீட்டில் குழந்தைக் காப்பகம் ஒன்றை நடாத்தி வரும் என் மரியாதைக்குரிய மாது ஒருவருடனான சாதாரண ஓர் உரையாடலின் போது ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். மாலையில் பிள்ளைகளைப் பொறுபேற்க வரும் பெற்றோரில் ஆங்கிலேயப் பெற்றோர்கள் ‘என்பிள்ளை இன்று மகிழ்ச்சியாக இருந்தானா’ என்று தவிப்போடு கேட்பார்களாம். தமிழ் பெற்றோரோ எனில்’ என் பிள்ளை இன்று உணவு சரியாகச் சாப்பிட்டானா’ என்று கேட்பார்களாம்.

இது போதும் நம் சிந்தனையின் மாறுபாட்டை - எது நம் வாழ்க்கைக்கு தேவை என எதை நாம் நினைக்கிறோம் என்பதை - எடுத்துச் சொல்ல....

 லெபனான் நாட்டுக் கவிஞன் கலில் ஜிப்ரான் அதனைத்தான் ’பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் உண்மையில் உங்கள் குழந்தைகள் அல்லர்; அவர்கள் உங்களால் வரவில்லை; மாறாக உங்கள் வழியாக வருகிறார்கள்’ என்றார்.

உலகின் எந்த மூலையில் எந்தப்பண்பாட்டில் எந்தக் காலப்பகுதியில் இருந்து வந்திருந்தாலும் என்ன! அறிவென்பதற்கான வரைவிலக்கணம் ’மெய்பொருளைக் காண்’ என்பதாகத் தானே இருக்கிறது!

எது மெய்பொருள் என்பதை உணர்வதும், அந்த மெய்பொருளைக் காண்பதற்கான பாதையைக் காட்டுவதும்,  இப்போதைக்குப் போதுமானது.

முதலில் அதற்கு  நாம் அதனை அறியத் தயாராக வேண்டும்.

பெருமானே அருளாளா!

நீள நினைந்தடியேன் உனை
    நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள்
    வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
    யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
    அட்டித் தரப்பணியே!