Wednesday, November 21, 2012

பன்னீர் செம்புவரலாற்றுப் பின்புலம் காண; 
http://www.michaelbackmanltd.com/1290.html

வட இந்திய இஸ்லாமியர்களுடய திருமனச் சடங்குகளில் இடம்பெற்ற இது ஐரோப்பிய மரபு முறையைப் போலன்றி திறந்து பூட்டுகின்ற பகுதி கி.பி. 18ம் நூற்றாண்டின் இந்திய மரபுக்கேற்ப கடிகாரம் ஓடுவதற்கு எதிர் புறமாகப் பூட்டும் தன்மையைக் கொண்டிருந்ததென்று கூறப்படுகிறது.

தற்போது:

பித்தளையில் அல்லது வெள்ளியினால் ஆக்கப்படும் தமிழ் பண்பாட்டோடு சேர்ந்த மற்றுமொரு செம்பு வகையைச் சார்ந்தது  இப் பன்னீர் செம்பு. கிண்ணத்தைப் போன்ற கீழ் பகுதியையும் நீண்டு உயர்ந்த குளாய் போன்ற வடிவில் துளைகள் இடப்பட்ட முனையையும் கொண்டு காணப்படும்.

பொதுவாகத் தமிழ் பண்பாட்டு மரபில் நிறைகுடம் வைத்தல் என்பது ஒரு சுப தின சம்பிருதாய நிகழ்வாகும். அது ஒரு சுபீட்சத்தை வரவேற்கும் மங்கல நிகழ்வைக் குறிப்பாகக் சுட்டி நிற்கின்றது.அதில் வைக்கப் படுகின்ற நிறைகுடம், குங்குமம், சந்தனம், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு, குத்துவிளக்கு,ஊதுபத்தி  முதலானவற்றோடு இப் பன்னீர் செம்புக்கும் ஒரு தனி இடம் இருக்கின்றது.

இதற்குள் வாசனை கலந்த நறுமண நீர் ஊற்றி வைக்கப் படும்.அந் நறுமண நீரைப் பன்னீர் என அழைப்பர். அதனால் இப்பாத்திரத்துக்கு பன்னீர் செம்பு என்பது பெயராயிற்று. சுப தினத்துக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு பன்னீர் தெளித்து சந்தனம்,குங்குமம், கற்கண்டு கொடுத்து அவர்களை உபசரித்தல் சம்பிருதாயமாகும்.

பன்னீர் தெளித்தல் என்பது ஒரு மரியாதையை வெளிப்படுத்தும் அடையாளமாகக் கருதப் படுகிறது.

பருவமடைந்த பெண்ணுக்கான இந்துமதச் சடங்கின் போதும் அக் கன்னிப் பெண்ணின் கையில் நிறைகுடம் அல்லது பன்னீர் செம்பு கொடுப்பது ஈழத்துத் தமிழர் வழக்கம். அது ஒரு மங்கலத்தினதும் முழுமையினதும் நல் வரவு ஒன்றுக்கான வரவேற்பினதும் அடையாளமாகக் அக் கன்னிப் பெண்ணின் கையில் அது கொடுக்கப் படுகின்றது.

இந்தியாவில் இடம்பெறும் இந்துத் திருமண நிகழ்வுகளின் போதும் குறிப்பாக நலுங்கு நிகழ்ச்சியின் போது மணமகள் மணமகனுக்கு பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் இடுவதும் அதுபோல மனமகள் மணமகனுக்குச் செய்வதும் சம்பிருதாய நிகழ்வாகும்.

ஈழத்தின் இந்துத் தமிழ் திருமண நிகழ்வுகளில் மணமகளைத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு முன்னால் மணமகனின் பெற்றோருக்கு மணமகளின் பெற்றோர் பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் இட்டு விடுவதும் பின்னர் மணமகனின் பெற்றோர் மணமகளின் பெற்றோருக்கு அதனைத் திருப்பிச் செய்வதும் வழக்கம்.

இன்றும் புழக்கத்தில் இருக்கின்ற செம்பு இனத்தைச் சார்ந்த இச் சாதனம் ஒருவருக்கு மரியாதை செய்வதற்காக - ஒருவரை அல்லது ஒன்றினை வரவேற்கும் ஒரு சாதனமாக - இன்றும் அது நிறைகுடக் குடும்பத்தோடும் தமிழியல் வாழ்வினோடும் சேர்ந்திருக்கின்றது.


படப்பிடிப்பு : யசோதா. 17.11.2012


Monday, November 19, 2012

தீர்த்தச் செம்பு

தெய்வீகம் பொருந்தியதென நம்பப்படும் நீர்.பால் என்பவற்றைத் தீர்த்தம் என அழைப்பர். பொதுவாக இந்து ஆலயங்களில் பூசைகளுக்குப் பின்னர் ஆலய குருக்களினால் பக்தர்களுக்கு வீபூதி, சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தப் பிரசாதங்களோடு தீர்த்தம் என அழைக்கப்படும் புனித நீர்,பால் போன்றன கொடுப்பது வழமை.

பக்தர்கள் அதனைப் பக்தி சிரத்தையோடு தம் இரு கைகளாலும் ஏந்தி அருந்துவதோடு தம் தலைகளிலும் தெளித்துக் கொள்வர். அவை தம்மை - தம் உடல் உள் உறுப்புகளைப் புனிதப் படுத்துகிறது என்பது அவர்களது மரபார்ந்த நம்பிக்கையாகும்.

இத்தகைய தீர்த்தத்தினை வழங்கும் செம்பு தீர்த்தச் செம்பென அழைக்கப்பட்டது. இதுவும் செம்பு வகையைச் சார்ந்திருந்தாலும் அதன் வடிவமும் தோற்றமும் தனித்துவமானது. இது மூடி, மூக்கு, பிடி ஆகியவற்றோடு மேற்புறம் ஒடுங்கி கீழே வர வர அகன்று அழுத்தமான அடிப்புறத்தைக் கொண்டிருக்கும்.
ஆலயங்களில் தீர்த்தத்தினை வழங்குகின்ற ஆலயக் குருக்கள் அதனைப் பக்குவமாக ஒரு கையால் பாத்திரத்தின் பிடியினையும் மறு கரத்தால் நுனிப்புற மூடியையும் பிடித்த படி பக்குவமாக அத் தீர்த்தத்தினைப் பக்தர்களுக்கு வழங்குவார்.

பாரமும் தனித்துவமான தோற்றப்பாட்டினையும் கொண்டிருந்த இவ்வகைத் தீர்த்தச் செம்புகள் தற்காலங்களில் பாவனையில் இருந்து மறைந்து பாவனைக்கு இலகுவாகச் சிறு கிண்ணமும் கரண்டியும் கொண்ட பொருளாக மாற்றமடைந்து வருவதைக் காணலாம்.

இந்து மக்களின் பாரம்பரியத்தில் ஆலயங்களில் மாத்திரமன்றி சில இல்லங்களிலும் இவை பவனையில் இருந்ததை அறிய முடிகிறது. வீடுகளில் நடைபெறும் சமய சம்பந்தமான கிரியைகளின் போதும்; குறிப்பாக சமய ஆசாரியார்கள் வீடுகளுக்கு வந்து நிகழ்த்தும் திவசம், ஆட்டத்திவசம், துடக்குக் கழிவுகள், மற்றும் மங்கல அமங்கல நிகழ்வுகளின் போதும் ஆசாரியாரின் தீர்த்தம் முதலானவற்றின் பாவனைக்காக இவை பாவிக்கப்பட்டன.

பித்தளையினாலான பலமான அடிப்புறமும் காத்திரமான பலமும் கொண்ட இப்பாத்திரமும் இப்போது பாவனையில் இருந்து மறைந்து வருகிறது.

தீர்த்தச் செம்பின் பின்புலம்:

கி.பி.13ம் நூற்றாண்டின் இறுதியிலும் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்களின் வருகையோடு சித்திரவேலைப்பாடுகளும் இதனையொத்ததும் சற்றே வேறுபாடான அமைப்பினைக் கொண்டதுமான இப்பாத்திர வகைகள் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப் படுகிறது. இந்திய ஓவியங்களில் இவ்வகையான பாத்திரங்கள் 17. ம் நூற்றாண்டுகளில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன. அவை பின்னர் அலங்காரம், தோற்றப்பாடு, வடிவங்களில் இந்தியப் பாரம்பரியத்தோடும் இணைந்து பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது.

அக்காலங்களில் இவ்வகையான பாத்திரங்களை இஸ்லாமிய வாழ்க்கை முறையைப் பின்பற்றிய பாரத மக்கள் தம் வீட்டுக்கு வருகின்ற விருந்தினர்களை உபசரித்து, அவர்களின் கைகளையும் கால்களையும் கழுவுவதற்கு இவ்வகையான பாத்திரங்களில் தண்ணீருக்கு வாசனையூட்டிப் பயன் படுத்தியதாக ஒரு குறிப்புக் காணப்படுகின்றது.

http://www.michaelbackmanltd.com/1302.html

அங்கிருந்து பின்னர் ஏனைய நாடுகளுக்கு அவ் அவ் நாடுகளின் பயன்பாட்டு இயல்புகளுக்கு ஏற்றபடி உருமாறி இப் பாத்திர வடிவமைப்புகள் மற்றும் பாத்திரப் பயன்பாடுகள் பரவி இருக்கலாம்


( நன்றி: சந்தோஷமாக இதனைப் புகைப்படம் எடுக்க அனுமதி தந்த விமலனுக்கு நன்றி. படப்பிடிப்பு : யசோதா. 02.11.2012 )

Tuesday, November 13, 2012

கூசா

கூசா அல்லது கூஜா என்பது புடைத்த நடுப்பகுதியையும் சிறிய வாய்ப் பகுதியையும் அதற்கேற்ற மூடியையும் கொண்ட கலன் என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

கூஜா என்பது ஓர் உருது மொழிச் சொல்லாகும். இதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் குடுக்கை அல்லது குடுவை என்பதென சென்னைப் பேரகரமுதலி குறிப்பிடுகிறது.

முற்றிய சுரைக்காயின்  ஒடுங்கிய மேல் புறத்தினை வட்டமாக வெட்டி அதன் உட்புறத்தைக் கோதி எடுத்த பின் அதனை குடுவையாகப் பாவிக்கும் வழமை வழக்கில் இருக்கின்றது. இதனைச் சுரைக் குடுவை என அழைப்பதில் இருந்து கூஜா என அழைக்கப்படும் குடுவையையும் அதன் அமைப்பையும் ஓரளவு அறிய முடியும்.இக் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் அதன் பயன்பாடும் இடத்துக்கிடம் மாறுபடுகின்றது. குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிங்கள,தமிழ், ஸ்லாமிய  மக்கள் மத்தியில் கூஜா எனக் குறிப்பிடும் உபகரணம் மட்பாண்டத்தினால் செய்யப் பட்ட கழுத்துப் புறம் நீண்ட கீழ் புறம் அகன்று உருண்டை வடிவான அடிப்புறம் தட்டையான அமைப்புக் கொண்ட தண்னீர் தாங்கியாகும். அது தனக்கான தண்ணீர் குடிக்கும் குவளையையும் இணையாகக் கொண்டிருக்கும்.

மூடி கூஜாவின் மேற்புறத்தை மூடி தண்ணீருக்கும் பாதுகாப்பினை அளிக்கின்ற அதே வேளை தண்ணீரினை அதற்குள் ஊற்றி அருந்தும் வண்ணமாக அதனோடு சேர்ந்தும் இருக்கும்.

இம் மட்பாண்டத்தை ஆக்குகின்ற மட்பாண்டக் கலைஞர்கள் இதனை ஆக்குகின்ற போது தம் கலை வண்ணத்தை; எண்ண வெளிப்பாடுகளை பானையைப் புனைகின்ற பொழுதுகளில் வெளிப்படுத்தி இருப்பர்.அது அக் கலைஞர்களின் ஆற்றல், கற்பனை, இயல்புநிலை, விருப்பப் பாடுகள்  என்பன பொறுத்து பல தன்மைகளைப் பெற்றிருக்கும்.
சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த கூஜா என்ற குடிநீர் பாதுகாத்து வைத்திருந்த இவ் உபகரணத்தின் கழுத்துப் புறம் சுமார் ஒரு அடி வரை நீண்டிருந்தது. தற்போதய பாவனையில் அதன் கழுத்துப் புறம் மிகக் குறுகியதாக வந்திருப்பதைக் காணலாம்.

மின்சார சாதனங்கள் குறைந்திருந்த அல்லது அருகிக் காணப்பட்ட காலங்களில் இதன் பாவனை மிகப் பிரபலமாக இருந்தது. பொதுவாகக் கழிமண்ணினால் வனையப்பட்டு நெருப்பில் சுட்டு உருவாக்கப்படும் பாத்திரங்கள் வெப்பவலைய நாடுகளில் நாளாந்த பாவனைக்கு உகந்ததாக இருந்தது. குறிப்பாக கூஜாவினுள் ஊற்றி வைக்கப் படும் நீர் குளிர்ச்சியைப் பேணும் என பொதுவாக நம்பப் பட்டதால் அது அம் மக்களிடையே  மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

காலப் போக்கில் மின்சாரசாதனங்களின் பாவனை அதிகரிப்பு, தொழில் நுட்ப முன்னேற்றங்கள், மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு, இத்தகைய சாதனங்களைச் செய்கின்ற கலைஞர்களுக்கு போதிய அங்கீகாரம், பணவரவு, கெளரவம் கிட்டாமை போன்ற பிற காரணங்களால் கூஜாவின் பாவனையும் கூஜாவினைச் செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

தற்காலங்களில் filter water bottle water, என்பனவும் கண்ணாடிக் கூஜாக்கள் குவளைகளும் பிளாஸ்டிக்கினால் செய்யப் படும் தண்ணீர் கொள்கலன்களும் கூஜாவின் இடத்தை நிரப்ப, மட்பாண்டத்தினால் செய்யப்பட்ட கூஜா தன் இடத்தை இழந்து வருகிறது.

இந்தியாவில் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் வேறானதாகும். அதன் பாவனையும் பயன்பாடும் வேறானது. இலங்கையர்கள் தூக்குச் செம்பு அல்லது பூட்டுச் செம்பு என அழைப்பதையே இந்தியப் பண்பாட்டிற்குரிய மக்கள் கூஜா என அழைக்கின்றனர்.

அவர்களால் குறிப்பிடப்படும் கூஜா என்பது குடிப்பதற்கான நீர், பால் போன்ற திரவ பத்தார்த்தங்களைப் பாதுகாத்து வைக்கும் அதே நேரம் கொண்டு செல்லத்தக்க விதமாகவும் இருக்கும். இது  உலோகத்தினால் ஆக்கப் பட்ட பொருளாகும்.

காண்க: பூட்டுச் செம்பு.

”கூஜா தூக்கி” பாரத மக்களிடையே வழங்கி வரும் சொற்பதம் ஒருவர் தன் சுய இலாபத்திற்காக ஒருவரைத் திருப்தி செய்யும் நோக்கில்  தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்யும் ஒருவரைக் குறித்து நிற்கிறது.

படங்கள்: யசோதா: 30.10.2012.
எடுத்த இடம்: சிங்கள மக்களின் பண்பாட்டுப் பாவனைப் பொருட்கள் விற்கும் கடை seven hills, N.S.W. Australia.


பின்னிணைப்பு:

நரியும் கொக்கும் விருந்துண்ட நாட்டுப் புறக் கதை:

ஒரு ஊரில் நரியும் கொக்கும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்தார்கள். ஒரு நாள் நரியினுடய கழுத்தினுள் ஒரு முள்ளொன்று சிக்கி விட்டதால் அது பெருத்த சிரமத்துக்குள்ளானது. அதனால் அது தன் நண்பனான கொக்கினிடம் சென்று தன் தொண்டையில் சிக்கியிருக்கின்ற முள்ளை எடுத்து விடுமாறு கோரியது.கொக்கும் தன் நீண்ட அலகினால் நரியினுடய தொண்டைக்குள் இருக்கின்ற முள்ளை அகற்றி விட்டது.

அதனால் பெரிதும் மகிழ்ந்த நரி தன் நன்றிக் கடனையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதற்காகக் கொக்கினைப் பார்த்து ஒரு நாள் தன் வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு அழைப்பு விடுத்தது.

இதனால் பெரிதும் மகிழ்ந்த கொக்கும் அக் குறிப்பிட்ட நாளில் விருந்துக்குச் சென்றது. அங்கு விருந்துக்காகச் சூப் தயாரிக்கப் பட்டிருந்தது. சூப்பின் வாசனை நன்றாக இருந்ததால் சூப்பின் சூடு ஆறுவதற்கு முன்னர் இருவரும் விருந்துண்னத் தயாரானார்கள்.

நரி தன் உண்னும் இயல்புக்கேற்ற விதமாக சூப்பினை ஒரு தட்டையான அகன்ற கிண்ணத்தில் பரிமாறியது. அவ்வாறு பரிமாறப்பட்டிருந்ததைக் கண்ட கொக்கு பெரும் ஏமாற்றமடைந்தது. அதன் கூரிய நீண்ட அலகினால் அதற்கு தட்டையான பாத்திரத்தில் இருந்த சூப்பினைக் குடிக்க முடியவில்லை. ஆனால் நரியோ மிக இலகுவாக நாக்கினால் அதனை நக்கி நக்கிக் குடித்தது.

இதனால் பெரும் ஏமாற்றமும் அவமானமும் அடைந்த கொக்கு அதனை வெளிக்காட்டாமல் தன்னுடய வீட்டுக்கும் நரியார் வந்து தான் அளிக்கும் விருந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து விட்டு ஏமாற்றத்தோடு வீட்டுக்குச் சென்றது.

விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நாள் வர, நரியும் மிக்க மகிழ்ச்சியோடு கொக்கின் வீட்டுக்குச் சென்றது. கொக்கும் நல்ல சுவையான விருந்தைத் தயார் செய்து இரண்டு கூசாவுக்குள் சூப்பை வைத்துப் பரிமாறியது. கூரியதும் நீண்டதுமான அலகினைக் கொண்ட கொக்கு அதனைச் சுலபமாகக் குடிக்க நக்கிக் குடிக்கும் இயல்பினைக் கொண்டிருந்த நரியால் அதனைக் குடிக்க முடியாது போனது. அதனால் நரி மிக்க ஏமாற்றமடைந்தது.

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் “அவரவர் தன்மைகளை அறிந்து அவரவர் தன்மைக்கேற்ப அவர்களை உபசரிக்க வேண்டும்.”

தாகத்துக்குத் தவித்த காகம் ஒன்று கூஜாவுக்குள் கற்களைப் போட்டு தண்ணீர் உயரத்துக்கு வர, தண்ணீரை அருந்திப் பறந்த புத்திசாலிக் காகம் பற்றிய நாட்டுப் புறக் கதையில் வரும் பாத்திரமும் கூஜா எனவே அழைக்கப்பட்டமை மேலும் நினைவுகூரத்தக்கது.

இவ்விரு கதைகளும் நாட்டுப்புற மக்களிடையேயும் கூஜா என்ற சொல்வழக்கும் பொருள் பயன்பாடும் இருந்து வந்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.


Saturday, November 10, 2012

பூட்டுச் செம்பு

இறுக்கமாகப் பூட்டிப் பாவிக்கக் கூடியதாக இருந்ததால் பூட்டுச் செம்பெனவும் தூக்கும் கைப்பிடியைக் கொண்டு செம்பு வகையினைச் சார்ந்திருந்ததால் தூக்குச் செம்பெனவும் அழைக்கப் பட்டது.

இதனை பாரதத் தென்னகப் பண்பாட்டுக்குரியோர் கூஜா என அழைப்பர் என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

பித்தளையினால் ஆன செம்பு இனத்தைச் சார்ந்த இப்பாவனைப் பொருள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. செம்பு (அடிப்பகுதி), குவளை, மூடி என்பவையே அவையாகும். செம்பின் வாய் பகுதியோடு உள்ளார்ந்து இணைக்கத்தக்க விதமாக குடிக்கும் குவளையை உள்ளடக்கி அது வெளியே தெரியாத விதமாகவும் வெளியே திரவ பதார்த்தங்கள் சிந்தாத விதமாகவும்
7- 8 புரிகள் கொண்ட மூடி அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம்.


தற்போது வழக்கொழிந்து போய் விட்ட இப்பாவனை பொருள் பயணங்களும் வசதிகளும் தற்போதயைப் போல இலகுவற்றிருந்த காலங்களில் தம் நீண்ட வழிப்பயணத்துக்காக பானங்களை இதில் இட்டு நிரப்பி எடுத்துச் செல்ல பயன்பட்ட ஒரு சாதனமாகும்.

பானங்கள் ஒன்றோடு ஒன்று கலக்காத வகையிலும் அதே நேரம் வெளித்தெரியாத வகையிலும் தூக்கிச் செல்ல இலகுவான முறையிலும் தனித்துவமான வடிவிலும் அமைந்த இவ் வகைச் செம்புகள் பழந் தமிழரின் வாழ்க்கைத் தரத்தையும் நுட்பத் திறனையும் ரசனை உணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்தி நிற்பன.


(குறிப்பும் நன்றியும்: புகைப்படத்துக்காக இப் பொருளை மகிழ்ச்சியோடு  தந்துதவிய விமலனுக்கு நன்றி. படப்பிடிப்பு: யசோதா : 02.11.2012)

Monday, November 5, 2012

வெத்திலைத் தட்டம்

பித்தளையினாலான பாதமும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த தட்டமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் வெத்திலைத் தட்டம் அல்லது கால் தட்டம் என அழைக்கப் படுகின்றது.இந்த ஒளிப் படத்தில் காட்டப்படும் வெத்திலைத் தட்டம் இலங்கை நாட்டுக்குரியது. தற்போது பிரித்தானியாவில் விலைக்கு வந்திருக்கிறது. அதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் தட்டத்தின் நடுத்தண்டில்
ப + தோ + க + எனத் தமிழில்  எழுதப்பட்டிருக்கிறது. பழம் பொருட்கள் விற்கும் இந்த மனிதருடய இணையக் கடையில் பல அழகிய அரிய பழங்காலப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன. நேரமிருந்தால் சும்மா ஒருக்காப் போய் தான் பாருங்கள்!

முகவரி:

http://www.michaelbackmanltd.com/960.html


தமிழரது மரபு வழிப்பட்ட வாழ்க்கை நெறியில் வெற்றிலைக்கும் வெற்றிலைத்தட்டத்துக்கும்  தனியான ஓரிடம் உண்டு. விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது. அதனால் வெற்றிலையை வைத்திருக்கும் தட்டமும்  தனக்கென தனித்துவமான வடிவத்தையும் இடத்தையும் மக்கள் மத்தியில் பெற்றிருந்தது.

திருமணத்துக்கு வந்த விருந்தாளிகளுக்கு மணமக்களின் சார்பாக அவர்களுடய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முகமாக மணமக்களின் பெயர் அச்சடிக்கப்பட்ட காகிதப் பைகளில் வெற்றிலைபாக்கு,பூ, பலகாரம், கொடுத்து விடுவது மரபார்ந்த வழக்கமாக இருந்த அதே காலத்தில் திருமணக் கொண்டாட்டங்களின் போதும் மற்றும் சுக துக்க நிகழ்வுகளின் போதும் வெற்றிலையினதும் வெற்றிலைத்தட்டத்தினதும் பாவனை வெகுவாக வேண்டப்பட்டிருந்தது.

மங்கைப்பருவம் எய்திய கன்னிப் பெண்ணின் பூப்பு நீராட்டு விழாவின் போதும், மணமகனுடய, மணமகளுடய பால் அறுகு வைத்து குளிப்பாட்டும் சம்பிருதாயப் பொழுதுகளின் போதும், பால் அறுகு என்பவற்றை ஏந்தியவாறு இப்பித்தளைத் தட்டம் கன கம்பீரமாக முக்கியமான பார்வைக்குரிய பொருளாக மண்டபத்தில் வீற்றிருக்கும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை,பாக்கு சுண்ணாம்பு ஆகியன வைக்கப் படும் தட்டங்கள் அனேக வீடுகளில் காணப் பட்டன. பொதுவாக பித்தளை உலோகத்தில் ஒரு சாண் அளவு உயரத்தில் அழகான சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டனவாக அவை அமைந்திருந்தன.

அவை எலுமிச்சம் புளி அல்லது பழப்புளியினால் தென்னந்தும்பு, சாம்பல், சவர்க்காரம், மற்றும் ரின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் சலவைத் தூள்கள் ( விம்) எல்லாம் சேர்த்து மினுக்கிப்  பாவிக்கப் பட்டன.

காலப் போக்கில் வெற்றிலைப் பாவனையாளர்கள் குறைந்தமை, தட்டங்களின் கனதியான தன்மை, அவற்றைச் சுத்தம் செய்வதில் ஏற்படும் சிரமம்,பாவனைக்கு இலகுவான வேறு மென் உலோகங்களின் வருகை போன்ற இன்னோரன்ன காரனங்களால் வெற்றிலைப் பாவனையும் வெற்றிலைத்தட்டத்தின் பாவனையும் வெகுவாகக் குறைந்து போய் விட்டது.

( குறிப்பும் நன்றியும்: 4 வயதுக்குக் குறைந்த 3 குழந்தைகளின் தந்தையான விமலன் கடந்த வருடம் யாழ்ப்பாணத்துக்குத் தன் குடும்பத்தோடு சென்று திரும்பிய போது தன்னோடு,  உருக்கத் தயாராக இருந்த பழைய பித்தளைப் பொருட்கள் வாங்கும் கடையில் இருந்து தேடி எடுத்து சிட்னிக்குக் கொண்டு வந்து சேர்த்த  பொருளில் இந்த வெத்திலைத் தட்டமும் ஒன்று.

சந்தோஷமாகப் புகைப்படம் எடுக்க அனுமதி தந்த விமலனுக்கு நன்றி. படப்பிடிப்பு :  யசோதா : 02.11.2012.)