Sunday, July 21, 2013

இலக்கிய சந்திப்பு - 14 -



வணக்கம் இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?

மாதம் ஒன்று மிக விரைவாக உருண்டோடி விட்டது.

அது பற்றி அறியாமலே நம் முதல் நாள் சந்திப்பில் கலந்து கொண்டு இந்தச் சந்திப்பிற்கு உரமான ஓர் அடிக்கல்லை நாட்டி வைத்த ஆசுகவியாரும் மெல்லினம் சஞ்சிகையின் இணையாசிரியரும் கடந்த மே மாதம் புதிதாக ஓர் உணவு விடுதியினை ஆரம்பித்து வைத்துள்ளவருமான உயர்திணையின் உற்ற தோழனும் நிர்வாக உறுப்பினருமான திரு. குமார செல்வம் நமக்கு தன் அஞ்சப்பர் உணவு விடுதியில் உணவோடு கூடிய ஓர் இலக்கிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

அவருக்கு நம் உயர்திணை அமைப்பின் சார்பில் நம் மனமார்ந்த நன்றியைக் கூறிக் கொள்ளும் அதே வேளை நமக்கு உணவளித்து உபசரிக்கப் போகும் அவருக்கு அந் நாளின் நிறைவில் உங்கள் வாழ்த்துக்களையும் நன்றியினையும் உங்கள் வழியில் தெரிவித்துக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

வருகின்ற வார சந்திப்பில் நம்முடய மனங்களின் ரசனைகள்; அது பெற்றுத் தந்த ஆற்றல்கள்; அதனை நீங்கள் வெளிப்படுத்திய விதம், அதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்,அது உங்களை அழைத்துச் சென்ற பாதை; அதன் பயணக்கால அநுபவங்கள் இவற்றைப் பற்றிப் பேசலாம் என தீர்மானித்திருக்கிறோம்.

உங்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டிருக்கிறீர்கள் என்ற உங்கள் ரசனா அனுபவங்களை; அதன் வியாபகங்களை செட்டிநாட்டு உணவோடு பகிர்ந்து கொள்ள உயர்திணை இலக்கிய அமைப்பு உங்களை அன்போடு அழைக்கிறது.

( ஒரு சிறு குறிப்பு:புதிதாக எவரும் வர விரும்பின் வருபவர்கள் முன்கூட்டியே உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்க.)

நன்றி.

அமைப்புக் குழு சார்பில்

யசோதா.பத்மநாதன்.

Tuesday, July 16, 2013

(Lady Boy Show விற்குப் போக முன்) - தாய் தேசத்தில் - 7 -


இன்று நாம் ஒரு நிறைவான மனநிலையில் இருந்தோம்.வித்தியாசமான அனுபவங்களால் நிறைந்திருந்தோம். ஏற்கனவே வெளியே சென்று நாள் முழுவதையும் கழித்து / களித்து வந்ததாலும் மேலும் lady boy show விற்குப் போக இருப்பதாலும் மீண்டும் ஒரு தடவை வெளியே போய் தெப்பலாய் நனைந்து வரச் சங்கடப்பட்டதாலும் நாம் தங்கியிருந்த ஹொட்டேலிலேயே இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டுத் தயாராவோம் என்று தீர்மானித்தோம்.

புத்தரைச் சேவிக்கும் அந்த நாட்டில் எங்கு போனாலும் அவரை எல்லோரும் சேவிக்கக் காணலாம். இங்கும் அப்படித்தான். கீழ் தளத்தில் அமைந்திருந்த உணவு விடுதியில் விடுமுறைக்கால அமைதி. இரண்டு இளைஞர்கள் மாத்திரம் நெஞ்சருகில் கைகளைக் குவித்து புன்முறுவலோடு குனிந்து புதுவருட வாழ்த்துக்களோடு வணக்கம் தெரிவித்து வரவேற்றார்கள்.





அங்கும் ஒரு பொது மூலையில் புத்தபகவான் வீற்றிருக்கிறார். இந்த இளைஞர்கள் நம்மை அங்கு அழைத்துப் போய் வாசனை நீரை அவருக்கு அபிஷேகித்து வனங்கச் சொல்லித் தந்து அணிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் மல்லிகை மொட்டுக்களாலும் ஓக்கிட் பூக்களாலும் ( அட, உயிர் பூ தாம்பா )ஆன மாலையை அணியத் தந்தார்கள்.



இன்று தாய் நிலத்தின் பாரம்பரிய உணவை உண்பதெனத் தீர்மானித்தோம்.முதலில் கீழ் கண்ட பதார்த்தம் வந்தது. என்னவென்று நினைக்கிறீர்கள்? அப்பளம்பா! அப்பளம். பப்படம்,பப்படம்!! அதனை வித்தியாசமான வடிவத்தில் செய்து களிம்பு போன்றதான ஸோசோடு தருகிறார்கள்.

இந்திய மரபின் பாதி உணவிலும்!




சோறு, மற்றும் சூப்பும் தேங்காய் பாலில் அமைந்த உறைப்புக் குறைந்த ஆனால் சுவையில் கொஞ்சமும் குறைவு படாத கறிகளும் பச்சைக் காய்கறிகளும் அருமை. நாம் அங்கு நின்ற சொற்ப நாட்களில் உண்ட உணவு வகையறாக்களில் சேற்று நாற்றம் வராத தரமான real தாய் உணவினை இங்கு ருசி பார்த்தோம். சுடச் சுட தரம் குன்றாது செய்து பரிமாறினார்கள்.

புது வருஷத்திலும் வேலைத் தலத்தில் நின்று நமக்குப் பொங்கிப் போட்ட புன்னகை பூத்த முகங்கள் - அவை ஒரு போதும் மறக்க முடியாதவை. 

சாப்பாட்டுக்கு எல்லாமா ஒரு பதிவு? என்று ஓரமாய் மனதில் ஒரு குரல் ஒலிக்கவே செய்கிறது. உண்மையில் இப்பதிவை lady boy show பற்றி எழுதுவதெனவே ஆரம்பித்தேன்.இந்த உணவைப் பற்றியும் அவர் தம் பணிவன்பான பண்பாட்டைப் பற்றியும் சொல்லாமல் அப்பால் நகர இயலவில்லை. அப்படிச் செய்தால் அது இம்மக்களுக்கு - தாய் தேசத்துக்கு நான் செய்கிற பெருந் துரோகமாக இருக்கும்.



பணத்துக்கு புன்னகைத்து; பணத்துக்கு முகமன் கூறி பழக்கப்பட்ட ஒரு முதல் தர நாட்டில் இருந்து போய் ஓர் உண்மையான புன்னகையை; மரபார்ந்த அக்கறையை; பண்பாட்டின் பணிவன்பை பரிமாறிய இந்த மக்கள் - விருந்தாளிகளுக்கு விருந்தோம்பலின் சிறப்பைக் காட்டிய இந்த இளைஞர்கள் - அவர்களுக்காகவும் அவர்கள் தம் பண்பாட்டின் சிறப்பை கட்டாயமாக நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும்; அந்தப் பண்பாட்டுக்கெனவும் ஒரு இடம் ஒதுக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும் இந்தப் பதிவு. 



மன்னிக்க நண்பர்களே!ஏன் ஈழத்திலோ பாரதத்திலோ இவ்வாறு இல்லையா என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும். பாரத தேசத்துக்குப் போக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. விரைவில் போகக் கூடும். ஈழத்தில் எப்படி என்ற கேள்விக்கு என் மனதில் பதிந்து போயிருக்கிற ஒரு சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாய் இருக்கும்.


அப்போது எனக்கு 11 அல்லது 12 வயதிருக்கும். கணுக்காலில் ஒரு காயம். வவுனியா பெரியாஸ்பத்திரிக்கு மருந்து கட்ட வரிசையில் நிற்கிறேன். கட்டும் இடத்தை வரிசை நெருங்க நெருங்க மனதில் கிலி. நோகப்போகிறதே என்ற பயம். எனக்கு முன்னால் நின்றவர் கட்டுப் போட்டுக் கொண்டு போகிறார். நேர்ஸிடம் எனக்கு உரஞ்சாமல் மருந்து கட்டிவிடும் படி கேட்டேன். அவருக்கு வேலைச் சலிப்பு.மேலும் என்னோடு செல்லம் கொஞ்ச நேரமில்லை. ‘வா சும்மா கட்டி விடுவது தானே, கட்டி விடுகிறேன்’ என்று விட்டு சுத்தம் செய்யாமல் கட்டத் தயாராகிறார். இதைக் கேட்ட எனக்கு முன்னால் அப்போது தான் காயத்துக்குக் கட்டுப்போட்ட மனிதன் நேர்ஸிடம் சொன்னார், ‘நான் ஆளப் பிடிக்கிறன். நீங்கள் வடிவாக் கட்டி விடுங்கோ’ என்று சொல்லி நான் அழ அழ கால்களை இறுகப் பிடித்து வடிவாகக் கட்டப் பண்ணி விட்டு அந்த மனிதன் நகர்ந்தார்.

ஏனோ இந்த மனிதனின் இயல்பு மனதில் மிக ஆழத்தில் பதிந்து விட்டது. யாரோ ஒரு மனித ஜீவனிடம் அந்த மனிதன் காட்டிய அக்கறை! நான் யாரோ அந்த மனிதன் யாரோ என்றாலும் எனக்கு இப்பிடி இருந்தால் சுகமாகாது என்று தன் பிள்ளைக்கு போல காலைப் பிடித்து விட்டு விட்டுப் போன தன்மை! இன்று வரை மனதில் பதிந்து போன ஒன்றாகவே இருக்கிறது.


ஒரு தரம் சுவிற்சிலாந்து போன போது என் தங்கையோடு (அவள் அங்கு கிராமப் புறத்தில் இருக்கிறாள்) கடைகளுக்குச் சென்று விட்டு திரும்பும் போது வீதியோரத்தில் பூசணிக்காய்களை (தம் தோட்டத்தில் விளைந்தது) வரிசைக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். அருகில் யாரும் இல்லை. விருப்பமானவர்கள் அதை எடுத்துக் கொண்டு தமக்கு பிடித்த பணத்தை அங்கு அருகில் வைத்து விட்டுப் போகலாமாம். யாரும் கேட்பார் இல்லை. சிலர் எடுத்து விட்டு மறு நாள் காசை வைத்து விட்டும் போவதுண்டாம். நாம் அதில் இறங்கி பூசணிக்காய் ஒன்றை எடுத்து விட்டு அருகில் யாரோ வைத்து விட்டு போன பணத்தோடு நம் பணத்தையும் வைத்து விட்டு வந்தோம். அது ஒரு புதினமான முறையாக அப்போது இருந்தது. சக மனிதர்கள் மீது தான் அந்த மக்களுக்கு எத்தகைய ஒரு நம்பிக்கை இல்லையா?



 விபுலானந்தர் ஒரு வரி பாடி இருப்பார் இப்படி,

"வெள்ளைநிற மல்லிகையோ?
வேறெந்த மாமலரோ?
வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல!
வேறெந்த மலருமல்ல!

உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது!"

மனதுக்கும் வயிறுக்கும் நிறைவளித்த தாய் தேசத்துக்கு என் பணிவன்பான வந்தனம்.வாழ்க தாய் தேசம்!!
















Saturday, July 13, 2013

தாய் தேசத்தில் எனக்காக எழுதப்பட்டிருந்த புது வருடம் - 6 -

பொற் கோயிலை விட்டு வெளியே வந்தோம். தாய் தேசத்து மக்கள் அன்று தண்ணீரால் அபிஷேகம் செய்யப்படுவார்கள் என்று தாய்த் தாய் நினைத்தாளோ என்னவோ வெய்யில் சுள் என்று கொழுத்தியது.

தாகத்தைத் தீர்த்துக் கொண்டாலும் பசியும் எடுக்கத் தொடங்கியிருந்தது. இனி சீனச் சந்தைக்குப் போய் பார்த்த வாறே ஏதேனும் வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டு வெளியே வந்தோம்.

வெளியே ஒரு பெரிய பெயர்பலகையில் இக்கோயிலைப்பற்றிய விபரங்கள் தாய் பாஷையிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்க அதனை நின்று வாசிக்கத் தொடங்கினோம்.




அப்போது ஒரு மனிதர் அவ்வழியே வந்து, நலமாய் உங்கள் நாட்கள் அமைந்திருந்ததா என்று வினாவி, தான் எங்களுக்கு ஏதேனும் வகையில் உதவமுடியுமா எனப் பணிவாகக் கேட்டார். கூடவே தன்னை ஒரு கைட் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். நாம் விபரப்பலகையைப் பார்த்துக்கொண்டிருந்தது அவ்வாறு அவரை வினாவத் தூண்டியிருக்கலாம்.

நாம் map கொண்டு போயிருந்தோம் என்ற போதும், கண்ணியமாகப் பேசியிருந்த அந்த மனிதரிடம் நாம் சீனச் சந்தைக்குச் செல்லவேண்டியிருக்கிறது என்றும் பாதை காட்ட முடியுமா எனவும் வினவினோம். அதற்கு அம்மனிதர் இன்று புது வருடம் என்பதால் கடைகள் யாவும் மூடப்பட்டிருக்கும் என்று கூறி அருகிலே ஒரு Black Budda வும் seeping budda வும் இருக்கிறார்கள். பெரும்பாலான பயணிகள் Golden Budda வைப் பார்த்து விட்டு அப்படியே திரும்பி விடுகிறார்கள் என்றும், அதுவும் பார்க்க கூடிய பார்க்க வேண்டிய ஒரு ஆலயம் தான் என்றும் கூறி அதனைப்பார்த்து விட்டு அப்படியே தாய் மசாஞ்சிற்கும் போய் விட்டு நீங்கள் இருப்பிடம் திரும்பலாம் என்றும் இன்று நீங்கள் பார்ப்பதற்கு அதிகமாக எதுவும் இருக்காது என்றும் கூறி, அருகில் நின்ற ருக்ருக் வண்டிக்காரரை அழைத்து இவ்வளவுக்கும் எம்மை அழைத்துச் சென்று விட்டு நம்மை நம் இருப்பிடம் கொண்டு சேர்க்க 30 பட் கொடுங்கள் என்று பேரமும் பேசி நம்மை வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார்.

நமக்கு உள்ளூர வியப்பு! நம் இருப்பிடம் இருந்து தங்கப்புத்தரைப் பார்க்க வரவே 100 பட் பேசப்பட்டிருந்தது. இந்த மனிதர் எப்படி நம்மை இத்தனை இருப்பிடங்களுக்கும் அழைத்துச் சென்றுவிட்டு பின்னர் நம்மை நம் இருப்பிடம் கொண்டு சேர்க்கவும் 30 பட்களைக் கேட்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் இங்கு மொழிப்பிரச்சினை இருந்தது. அந்த ஓட்டுனர் மூலமாக நாம் அறிந்து கொண்டது என்னவென்றால் அவரது ருக்ருக் அரசாங்க ஆதரவில் ஓடுகிறது என்பதைத் தான்.

இப்போது சற்றுத் தூரம் நடந்து வந்து அவரது ருக்ருக்கில் ஏறிக் கொண்டோம். சுமார் 5 நிமிட நகர்வின் பின்னர் அமைதி சூழ்ந்த ஆளரவம் அதிகமற்ற கோயிலடியை வந்து சேர்ந்தோம்.

உங்களில் எத்தனை பேர் ஈழத்தின் வடபுலத்தில் அமைந்திருக்கின்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்குச் சென்றிருக்கிறீர்கள் என்று தெரியாது. எனக்கேனோ அந்தக் கோயிலுக்குப் போனதைப்போல ஒரு பூரிப்பு இந்தக் கோயிலை வந்தடைந்ததும் இருந்தது.

என்ன ஒரு அமைதி!
என்ன ஒரு தெய்வீகம்!

இந்தக் கோயில் அப்படியே என்னை ஆட்கொண்டு விட்டது என்றே சொல்வேன். இனியொரு தடவை தாய்லாந்துக்குப் போக ஆசைப்படுவாயா என்று கேட்டால் இல்லை என்பது தான் என் பதிலாக இருக்கும். ஆனால் இனியொருதடவை அங்கு போனால் என்ன முதலில் பார்க்க விரும்புவாய் என்று யாரும் என்னைக் கேட்டால் இந்தக் கோயில் என் விருப்பத் தெரிவில் முதலாம் இடத்தில் இருக்கும். அக்கோயிலின் படங்களையே கீழே காண்கிறீர்கள்.



















காந்தித் தாத்தாவும் அங்கு ஒரு ஓரமாக மதிப்பான இடத்தில் இருக்கிறார்.
















இந்த ஆலயத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது இந்தக் கோயிலில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் இரண்டு பேர் வந்து கோயிலின் விபரங்களை நமக்கு அறியத்தந்தார்கள். நாம் கோயிலுக்கு வருகை தந்ததையிட்டு தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். பலரும் தங்கப்புத்தபகவானைப் பார்த்துவிட்டு திரும்பி விடுவதால் நாம் வந்தது தங்களுக்கு மனத்திருப்தியையும் சந்தோஷத்தையும் தருவதாகச் சொல்லி நமக்குப் போதிய விபரங்களைத் தந்து நம்பயணம் நலமானதாய் அமைய வாழ்த்தும் கூறி புது வருட நல்லாசிகளையும் சொல்லி சொந்தக்காரர்களைப்போல நம்மை வழியனுப்பி வைத்தார்கள்.

இப்போது நமக்கொரு சங்கடம் நேர்ந்தது. நாம் சிரமபரிகாரம் செய்து கொள்ளவேண்டியிருந்தது. தாகத்துக்கு அருந்திய பதார்த்தம் செய்த வேலை அது. விருந்தாளிகளைப் போல நம்மை உபசரித்த அந்த மனிதர்களிடம் சிரமபரிகாரம் செய்து கொள்ள இவ்விடம் வசதியிருக்கிறதா என விசாரித்தோம்.அதற்கு அவர்கள் தம்முடய இடத்தை விட ஒரு பிரசித்தி பெற்ற தங்கம் இரத்தினக்கற்களைச் சர்வதேசத்துக்கு விற்கின்ற பெரிய கடைத்தொகுதி ஒன்றிருக்கிறது. அங்கு சிறந்த தரத்தில் அவற்றுக்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அது உங்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்று கூறி நம்முடய ருக்ருக் றைவரை அழைத்து நம்மை அங்கு அழைத்துச் செல்லுமாறு அவர்கள் அவருக்குக் கூறினார்கள்.

நமக்குப் பசி சற்றே தூக்கலாய் இருந்த போதும் அதற்கு முதல் இந்த வேலையை முடிப்பது அவசியமாக இருந்ததால் நகைகள் வாங்குகின்ற நோக்கம் இல்லாதிருந்த போதும் அந்த நகைக்கடைத்தொகுதிக்கு போனோம்.

போகிற பாதை எங்கும் தண்ணீர் அபிஷேகம் வஞ்சனையின்றி எல்லோருக்கும் கிட்டியது. தாய் மக்களுக்குத் தான் அதில் எத்தனை சந்தோஷம். தாத்தா பாட்டியில் இருந்து குழந்தைகள் வரை சந்திகளிலும் கடைத்தொகுதிகளின் ஓரங்களிலும் தம் வீடுகளுக்கு முன்னாலும் தண்ணீரை வைத்துக் கொண்டு போவோர் வருவோருக்கு தண்ணீரல் அபிஷிகம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களும் தண்ணீரில் தெப்பலாய் நனைந்திருந்தார்கள்.

கீழே இருக்கின்ற இந்தப்படம் மோட்டார் சைக்கிளில் போகிற ஒருவர் வைத்திருக்கின்ற தண்ணீர் துவக்கு.( ருக் ருக் ஒரு சிவப்பு விளக்கில் தரித்து நின்ற போது எடுத்தது )




சந்து பொந்துகளால் சுமார் 20 நிமிட நேரம் பயணிக்கிறோம். நாமும் நன்றாக தண்ணீரால் அபிஷெக்கம் செய்யப்பட்டோம் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். :) ருக்ருக் ஓட்டுனர் தண்ணீர் அடிக்க வேண்டாம் அடிக்க வேண்டாம் என்று சைகைக் காட்டியும் அதற்குப் பலன் இருக்கவில்லை. வாகனம் ஓட்டும் வழியெங்கும் நமக்கு தண்ணீர் எத்து நடக்கின்ற பொழுதிலெல்லாம் இந்த மனிதர் நம்மிடம் திரும்பிப் பார்த்துப் பார்த்து மன்னிப்புக் கேட்ட படி வந்தார்.



அந்த நகைக்கடைத்தொகுதியை வந்தடைந்தோம். அதன் வாசல் வழி எங்கும் வைக்கப்பட்டிருக்கின்ற கலைப்பொருட்களை படம் எடுத்துக் கொண்டேன். கடைப்பொருட்களை நாகரிகம் கருதி படம் எடுத்துக் கொள்ளவில்லை.




சிரம பரிகாரங்களையும் முடித்துக் கொண்டு வெளியே வந்த போது ருக்ருக் றைவர் அதே புன்னகை மாறாத முகத்தோடு நமக்காகக் காத்திருந்தார். பயனுடயதாக இருந்ததா என்ர அக்கறையான விசாரணையோடு நம்மை மசாஞ் சென்ரருக்கு அழைத்துச் செல்லத் தயாரானார். 

இப்போது நமக்குப் புதுசாய் ஒரு தேவை வந்தது. அது பசிக்கிறது; சாப்பிட வேண்டும் என்பது தான். உங்களுக்குத் தெரிந்த கடைகள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டோம்.அருகில் எதுவும் இல்லை. ஆனால் சற்றுத் தூரம் சென்றால் நல்ல ஒரு கடை இருக்கிறது அங்கு அழைத்துச் செல்லவா என்று கேட்டார். இந்த மனிதருக்கு கோபம் வந்தால் எப்படி இருப்பார் என்ரு சிந்தனை ஓடியது எனக்கு. காரணம் அந்த முகத்தில் கடுகடுப்பின் எந்த ரேகைகளும் சலிப்பின் எந்த ஒரு பின்னல்களும் அந்த முகத்திலும் நடத்தையிலும் இல்லை.

மீண்டும் சுமார் 30 நிமிட ஓட்டத்தின் பின் சுமார் 3.30 மணியலவில் ஒரு பெரும் முன் வளவு பின் வளவு கொண்ட மாமரங்கள் நிறைந்த வீட்டுப்பாணியிலான இடத்தில் நம்மைக் கொண்டு சென்று நிறுத்தினார்.

அந்த மனிதரும் சுமார் 30 பட்டுக்காக நம்மோடு அலைகிறாரே என்று விட்டு மேலும் அவரும் பசியோடு இருப்பாரே என்ற நினைப்பில் அவரையும் நம்மோடு உணவருந்த வருமாறு அழைத்தோம்.உடனே அதே புன்னகையோடு மறுத்த அவர் தன் மனைவி தனக்காக உணவு சமைத்துத் தந்திருக்கிறார் அது போதும் என்று விட்டு தான் இக்கரையின் நிழலில் ருக்ருக்கை நிறுத்தி விட்டுக் காத்திருப்பதாகவும் நம்மைப் போய் உணவருந்தி வருமாறும் நம்மை வழியனுப்பி வைத்தார்.

உணவு விடுதி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அநேகமானவர்கள் வெள்ளைக்காரர்களே. மது பியர் வகைகளுக்கான பகுதியையும் பாடல் ஆடல்களுக்கான பகுதியையும் அது உள்ளடக்கியிருந்தது. சாப்பாட்டுக்கான பகுதியை உள்ளேயும் வெளியேயும் புறத்தேயும் கொண்டிருந்த பெருந் தொகுதியில் ஒரு புறமாக ஒரு குடும்பத்தினருடய வீடும் அமைந்திருந்தது. சிறு குழந்தைகள் பீய்ப்பாய்களுக்குள் பெரியவர்கள் தண்ணீரை நிரப்பி விட நீராடி மகிழ்கிறார்கள். ஒரு வித வீட்டுச் சூழலில் வித்தியாசமான முறையில் ரசனையோடு செய்யப்பட்டிருந்த இவ்விடத்தில் வியாபாரமும் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.




நமக்கு உணவு வர நேரமாகி விட்டது. நாம் உணவருந்தி வெளியே வர சுமார் 4.30, 5.00 மணியாகி விட்டது. அப்போதும் இந்த மனிதர் நமக்காகக் காத்திருந்தார்.


இப்போது நாம் க:ளைத்துப் போயிருந்தோம். இருப்பிடத்துக்குப் போவோம் என்பது நமக்கான விருப்பமாக இருந்த போதும் ருக்ருக் றைவர் இப்போது நாம் போக வேண்டி இருக்கின்ற பாதை போக்கு வரத்துக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும் (கொண்டாட்டத்தினால்) மாலை 6.00 மணிக்குப் பின்னரே அது பொது மக்களின் பாவனைக்கு மீண்டும் திறக்கப்படும் என்றும் கறி நாம் விரும்பினால் மத்திய புகையிரத நிலையத்தில் நம்மை இறக்கி விடுவதாகச் சொன்னார்.

நாம் ஏற்கனவே களைத்துப் போயிருந்ததால் புகையிரத நிலையத்துக்குச் செல்வதை நாம் விரும்பவில்லை. மேலும் மறு நாள் Day trip ஒன்றுக்கு ஒழுங்கு செய்வது நமது நோக்கமாக வேறு இருந்ததாலும் இரவுக்கு Lady Boy Show ஒன்றுக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்தும் இருந்ததால் இன்றய இந்த நேரத்தை விட்டால் நமக்கு மசாஜ் இற்குச் செல்ல சந்தர்ப்பம் வராதெனக் கருத்தி மசாஜ்சிற்குப் போகலாம் எனத் தீர்மானித்தோம்.

நாம் இப்போது போகவேண்டி இருந்தது மசாஜ்சிற்கு. அவருக்கு அந்தப் பாதை தெரியும் போலும். நேரடியாக அங்கிருந்து நம்மை மசாஜ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். 








சுமார் 2 அரை மணி நேரத்தின் பின்னர் இந்த மசாஜ் நிலையத்தில் இருந்து புதிய மனிதர்களாக வெளியே வந்தோம். இந்த புதிய மனிதர்களாக என்ற பதத்தைச் சற்றே அழுத்திச் சொல்லவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் வாழ்க்கையில் முதன் முதல் மசாஜ் என்றால் என்ன என்பதை அன்று உனர்ந்து கொண்டேன். நீங்கள் எவரேனும் தாய் லாந்துக்குச் சென்றால் நல்ல ஒரு மசாஜ் நிலயத்துக்குச் சென்றுஅந்த அனுபவத்தைப் பெறாமல் திரும்பி வராதீர்கள்.
பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்பது மாதிரி மனம் வயிறு உடல் மூன்றும் நிறைந்த ஒரு மனநிலை நமக்கு!

வெளியே வந்த போது நமக்காக இவ்வளவு நேரமும் காத்திருந்த அந்த மனிதர் போய் விட்டிருந்தார். பணம் எதையும்  பெற்றுக்கொள்ளாமலே. நாம் ஏற்கனவே இந்த மனிதருக்கு ஒரு மேலதிக தொகை ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருந்த போதிலும்.

இந்த மனிதன் ஏன் எதிர் பட்டான்? ஏன் நம்மை இத்தனை இடங்களுக்கும் புன் முறுவல் பூத்த முகத்தோடு அழைத்துச் சென்றான் பிறகு ஏன் ஒரு சதமும் வாங்காமலே காணாமல் போனான் என்பதற்கு எனக்கு இன்று வரை விடை தெரியவில்லை.  இருப்பிடம் வந்ததும் இந்த மனிதனை படம் பிடித்திருக்கிறேனா என்று கமராவில் தேடினேன். ஆம் என்ற மனநிறைவான பதில் எனக்கங்கிருந்தது. அந்த மனிதர் தான் முன் இரு படங்களிலும் நீல நிற மேலாடையோடு காணப்படுகிறார். என் மொழி பெயர்ப்பில் தேவதூதன்! 30 பட்டுக்கு மனதில் ஏறி உட்கார்ந்து கொண்ட மாயவன்.

ஆசீர்வதிக்கப்பட்ட நாள் என்பது இது தானோ? புத்தபகவானின் நல்லாசிகளோடும் உபாதைகள் எதுவுமற்ற உடல் மன நிலைகளோடும் தாய் தேசம் தன் புதுவருட வாழ்த்துக்களை ஆசிகளால் நிறைத்து நமக்குத் தந்திருந்தது. குறிப்பாக எனக்கு!


இருப்பிடம் திரும்பிய போது ஹொட்டேலும் கொண்டாட்டத்தில்!



கதவுகளைப் புன்னகையோடு திறந்து விட்ட இளைஞனின் பெயர் ‘ஓம்’ என பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பட்டியைப் பார்த்த படி உள் நுழைகையில் நேரம்  சுமார் ஏழு மணி இருக்கும்.இன்னும் சில மணி நேரங்களில் இரவுணவை முடித்து விட்டு "lady boy show' விற்குப் போக வேண்டும்.



தெய்வீகம் பொலிந்த கொண்டாட்ட நன்நாள்!

எனக்குள்ளேயும் வெளியேயும்.









Tuesday, July 9, 2013

யாழ்ப்பாணத்து வட்டாரக் கதை

கடந்த இலக்கிய சந்திப்பு தந்து சென்ற ‘வட்டார வழக்குகள்’ சம்பந்தமான எண்ணங்கள் அது பற்றிய தேடலைத் தூண்டி இருந்தது. யுகமாயினி இதழில் ஆக்ஸ்ட் 2008 இதழில் ’கம்பங் கொழுக்கட்டை’ என்றொரு வட்டார வழக்குக் கதை (சற்றே பெரியது) குறவர் இன மக்களின் கற்பனையையும் வாழ்க்கை முறையையும் அழகுறச் சொல்லுகிறது. அதனை மீண்டும் எழுதுவதன் சிரமம் கருதி இணையத்தில் தேடினால் சித்தனின் குறிப்போடு கீழ் கண்ட கதையைத் தான் காண முடிந்தது.

இக்கதை யாழ்ப்பாணத்து நாச்சியார் கோயிலடி -  மிருசுவில் பகுதியைச் சார்ந்த மொழிநடையில் படைக்கப்பட்டுள்ளது. என்ற குறிப்பும் அதில் காணப்படுகிறது. என் இந்திய நண்பர்களுக்கு இதன் மொழி நடையும் சொல்லும் பொருளும் சற்றே கடினமாக இருக்கக் கூடும். எனினும் அதில் இருக்கின்ற தனித்துவம் கருதி அதனை இங்கு பிரசுரிக்கிறேன்.

நன்றி: இணையம்.



ஒரு வழி
சிறுகதை
ந.விநோதரன்/ லண்டன்


ஆசைப்பிள்ளை ஏத்தத்திலை ஏறியாச்சு.
இறக்கத்திலை நிக்கிற மருதமரங்களுக்கு ஒரு பழுதுமில்லை.
கண்டிவீதி நல்லாக் கிடக்குது.
ஓரமெல்லாம் பொடியள் நட்ட மரங்கள் ‘ஆள்’ பட்டிட்டுதுகள்.
ம்.....இவடந்தான் குஞ்சுக்கிளி கடையடி.....
ஓ.....அங்காலை கட்டையடி மரமும் தெரியுது.
இதிலைத்தான் கொக்கட்டிமூலை றோட் பிரிய வேணும்.
கந்தையா வாத்தியாற்றை மேல்வீட்டுக் கட்டிடம்.....
நடராசா வாத்தியாற்றை காணிப் புளியடியாலை ஒரு மணல் வீதி.......
கொக்கட்டிமூலை றோட்டைக் கண்டாச்சு.
இதுதான் கோயில் காணி.
ஏனெண்டா நடுவிலை நிக்குது ஒட்டில்லாத கறுத்தக் கொழும்பான் மாமரம்.
முன்னடிக்கு தென்னையள் இல்லை.
பின்னடி இளங்கண்டுகள் சோடையாகிட்டுது.
மூலைக்கு வந்தாச்சு.
அதுதான் செல்லக்கா வீடு.
அங்காலை பாதையைக் காணேல்லை.
இதிலை இருக்கிற ஆமி சேரிட்டை சொல்லிப்போட்டு சைக்கிளை விடுவம்.
இஞ்சினைதான் சிவலோகம் குஞ்சன் வீடு.
சேலன்மா ஒண்டு நிக்க வேணுமே.....
உசனிலை படிக்கேக்கை......
இந்த மாங்காயும் உப்பும் நல்ல வழித்துணை.
அங்காலை கரம்பக வீரபத்திர கோயில் தெரியுது. சடைச்ச நெல்லிமரத்தைக்
காணேல்லை.
முகப்பாலை ‘பண்ட்’ போகுது.
பனங்குத்தியள் தாறும் மாறும் அடுக்கிக் கிடக்குது.
பாலம்பள்ளப் பாதை மூடப்பட்டுக் கிடக்குது.
சற்குணண்ணையின்ரை காணியும் நடுக்கொள்ள ’பண்ட்’ இழுத்திருக்கு.
முத்துமனிசியின்ரை பால் பலாமரம் தெரியுது.
இனி அங்காலை காலவைக்கப் பயமாக் கிடக்குது.
எல்லா இடமும் பனங்குத்தியும்....
செல்பெட்டியும்.....
முள்ளுக்கம்பியளும்தான்.....
மாடுகள் அவடமெல்லாந் திரிஞ்சு கிடக்குது.
மாட்டுப்பாதை பிறகை போவம்.

இஞ்சை...இஞ்சை....இதுதான் தோட்டக் கிணறு.
கிணத்துக்கு ரண்டு பக்கமுமுள்ள தென்னம்பிள்ளையள்?
சூரியகாந்தி* இல்லை.....மற்றது நிக்குது.
அதைவிட அங்காலை தெரியறதும் இதொட்ட பிள்ளைதான்.
ஆக இரண்டு மிச்சம்.
இரண்டிலும் சிங்களத்திலை ‘போர்ட்’ போட்டிருக்கு.
‘வல்ல சீவனுகள்’ எண்ட பட்டமாக இருக்கலாம்.
இரண்டு மூலைக்கும் கனக்க பனையள் நிண்டதே
ஒண்டையும் காணயில்லை.
இதுக்கை மட்டுமில்லை.....
விசரன்காடு, பாலம்பள்ளமெல்லாம் ஒரு பனையுமில்லை.
புதுப்புது வடலியள் முளைச்சு பாளைவாற பருவம்!
சிலது பாளையும் வந்திட்டுது.
கணேசன் ‘பனைக்கள்ளு’ வைக்கிற புட்டியிலை
இரண்டு வடலி ஆணும் பெண்ணும்.....
கருப்பணிப்பனையடியிலை மூண்டு.....
இப்பதான் பாளை வருகுது....
பட்டையோலைப்பனை நிண்ட இடத்திலை ஒண்டே ஒண்டு மட்டுந்தான்.
அச்சொட்டாக முந்தி நிண்ட பனையைப் போலவே.....
தொட்டியடியைத் தெரியேல்லை.
சுரிபறிச்ச இடத்துக்கு அங்காலை தெரியுற....
வேப்பமரத்துக்கு கீழைதான் தொட்டி.
ஓம்....ஓம்....வேப்பம் வேராலை தொட்டி பாளம் பாளமா வெடிச்சுக் கிடக்குது.
புதுபுது மரங்களெல்லாம் முளைச்சு அடையாளமே தெரியல்லை....
வடமேற்கு மூலையில கொஞ்ச இடத்திலை ‘பண்ட்’ புகுந்திருக்கு.
வடக்கிலை ஒரு முட்கிளுவை நிக்குது. மேற்கிலை பத்தை மொண்டிக்குள்ளையும்
கதியாலுகள் தெரியுது.
இரண்டையும் முக்கோணமா நிமித்த எல்லை வந்திடும்......
மற்ற பக்கங்கள் அந்தளவு அழியேல்லை.
தெற்கிலை பூவரசும்
கிழக்கிலை பால் கிளுவையும்
‘ஊடுஞ் சுழியுமா’ தெரியுது
முன்னுக்கு நீண்ட பிலா மரம் நிறைய காய்ச்சு
நெட்டுகள் காய்ஞ்சிருக்கு-
பிலாவுக்குப் பக்கத்திலை
ரண்டு பெரிய பனங்குத்தியளை நட்டு ...
தண்டவாளமொண்டை குறுக்க வச்சிருக்கு.....
கீழை கொட்டுக்கடப்பு போல படிகள்
அதுவும் பனங் குத்தியிலைதான்
ஏதோ ‘ரெயினிங்’ பழகியிருக்க வேணும்
ஏனெண்டா
கனகுமாமான்ரை தோட்டத்துக்கையும்
பெரிய ‘கேடருகள்’ நட்டிருக்கு.

நீண்ட நாளைய ஆசை
பிள்ளையார் கோயிலைப்பார்க்க வேணுமெண்டு....
கனகுமாமான்ரை தோட்டத்து முடிவிலை
ஒரு வண்டிப் பாதை இருந்தது.
அவடத்துக்குப் போவம்.
விறும கோயிலடி ஆலமரம் தெரியுது.
ஐயோ! ஏதோ செத்துக் கிடக்குது.
எலும்புக்கூடு.....
மாட்டுத்தலைதான்!
விசரன்காட்டுக்குள்ள இறங்கியாச்சு
கார்த்திகை மார்கழி மாதந்தானை
கார்த்திகைப்பூ நிறையப் பூத்திருக்கு.
மாட்டுப்பாதை சிராவில் வயல்வெளிமட்டும் போனால் நல்லது.
எவடத்திலை போய் மிதக்குமோ தெரியாது.
தங்கம்மாப் பேத்தி வீட்டடிதான் இது.
சிராவில் பிள்ளையார் தெரியுது.
ஓடி நடக்கேலாது
நடைவரம்பு எல்லாத்தையும் மேவி
தண்ணி நிக்குது.....
புட்டிக்கிணத்தடி  வடலிக்கூடல் தெரியுது.
இது எங்கடை கரைவயல்.
அருவி வெட்டப் பழகினது.

”கோடி புண்ணியம் கோபுர தரிசனம்”
மூலஸ்தானம் திறந்துகிடக்குது.
குறுட்டு வௌவால் தாறுமாறா பறக்குது.
தீர்த்தக் கிணத்திலை அள்ளிக்குளிச்சிருக்கு
கற்பூரக் கல்லடியிலை வெள்ளெருக்குப் பூத்திருக்கு.
மடத்தின்ரை இரண்டு தூண்மட்டும் தெரியுது.
நாகத்தம்பிரானை பித்தளைத் தாம்பாளத்தாலை மூடியாச்சு
வெள்ளைத் தேமா சரிஞ்சிட்டுது.....
புதுசா பட்டி நிறைய பூத்துட்டுது.
கழுதைக் குட்டியொண்டு படுத்திருந்து அருண்டு ஓடுது
அப்பனே.....பிள்ளையாரே.....
நீளப்பெருமூச்சு விரசன்காட்டுக்குள் பறக்கிறது.
இனி திரும்புவம்.
இதாலை நடப்பம்.
விசரன்காட்டு நடுப்பகுதி.
இதுக்காலையும் ‘பண்ட்’ போகுது.
பள்ளிக்கூடம் தெரியேல்லை
தூரத்து பெரிய வேம்பைக் குறிவைச்சு நகருவம்.
வர...வர....ஒண்டும் விளங்கையில்லை
மாட்டு அடியும் நெருக்கமா இல்லை
ஏதோ அகோரமா கதறிக் கேட்குது.
மயிலோ ஆந்தையோ தெரியாது
வழி நெடுக பொன்னாவரசு மதத்து பூத்திருக்கு
ஆ....காணியொண்டுக்கை வந்திட்டன்.
பொன்னம்பலண்ணேன்ரை வீட்டடிதான்.
வந்த பாதைக்கு வந்தாச்சு.
பதினைஞ்சு வரிச பிரிவு பாத்தாச்சு
இனி பதினெட்டு வரிசப்பக்கம் போவம்.
கண்டி வீதியின் வடக்குப்பக்கம்
அங்கதான் எங்க வீடு.

கொஞ்சத்தூரம் கண்டி வீதியாலை ஓடி.....
நாச்சியார்கோயிலடி வர இறங்குவம்.
நாச்சியார் கோயில் இடிஞ்சிட்டுது
முன்னாலை பருத்தி மரம் நிக்குது.
நாச்சியார்கோயில் வீதியும் தூர்ந்திட்டுது
இந்த ‘சேர்’ விடமாட்டன் என்குறார்.
அங்காலைப் போய் கேக்கட்டாம்.
நடராசா வாத்தியார் வீட்டடி ‘ சென்றியில’
சேராக்கள் நிக்கினம்.
கேட்டுப்பாப்பம்.
ஒரு ’சேரை’ என்னோட அனுப்பியிருக்கு
அவர்தான் வீட்டைபோக வழிகாட்டப்போறார்.
லதா ரீச்சரிண்டை வீட்டு பின்காணிக்கை
’ரொய்லெட்’ புழங்கப்படுகிறது.
அங்காலை எல்லாம் வடலிக்காடுதான்.
கல்லுறோட்டு வரவேணுமே.....
‘ மைன்ஸ் ‘ இல்லையோ?
சேர் சிரிச்சு மழுப்புகிறார்.
பாவம்! அநியாயம் சொல்லக்கூடாது
அவர்தான் முன்னுக்கு நடக்கிறார்.
அடுத்தது கெண்டைக்கால் தாழுற மண் ஒழுங்கைதான்
மூண்டு மா தெரியுது.
அது சின்னம்மா மாமியின்ரை வீட்டுப்புட்டி
இந்த அத்திவாரமும் கிணறும்
நேசம் அன்ரியின்ரைதான்
ஏனெண்ட கிணத்தடியில அலரி நிண்டது.
இப்பவும் நிக்குது.
சரி....சரி....இதுதான் நாகலிங்க அப்பான்ரை நாவல்மரம்
கிணத்தைக் காணயில்லையே....
சேர் சொல்லுறார் இவடத்திலை கிணறில்லையாம்.
அங்கால ‘பண்ட் பொயின்ற்’ பக்கமா இருக்காம்.
இஞ்சை தெரியுது கிணறு....
இதுக்கு அடுத்தது எங்கடை வீட்டுக்காணிதான்!

அந்தரப்பட...அந்தரப்பட.....சேரும் கவலைப்படுறார்.
ஒற்றையாக நிக்கிற கிளுவையைக் காட்டி
‘அதைத் தொட்டு’ மிச்சத்தைப் பார்க்கச் சொல்லுறார்.
எங்கை விளங்குது?
அரைவாசிக் காணியை ‘பண்ட்’ திண்டிட்டுது
புதுவீட்டுத் தென்னை மட்டும் ’பண்ட்’ கரையிலை
நிறை காயோடை ஆடுது.
விலாட்மா விழுற கட்டம்.
அத்திவாரம் கூட கிளறிக்கிடக்குது.
அங்காலை, இஞ்சாலை நடந்து பார்க்க ஆசை
கொஞ்ச நேரமெண்டாலும்
‘கொட்டுகளை’  தடவி அழவேணும் போல இருக்கு.....
சேர் அவசரப்படுத்துகிறார்.
அவருக்கும் ‘ராஜ காரிய’.
நாவல்கேணிக்குளத்தடி பார்க்கயில்லை.
மாட்டுக்கால் குளம்புகள் அங்காலை இல்லை.
சேர் திரும்பி....திரும்பி..... சொல்லுகிறார்.
மாட்டுப்பாதையில் நடக்கச் சொல்லி....
சேர் சொன்னதுதான் சரி.
மிருகங்களின்ரை தடங்களிலை
நாங்களும், சேராக்களும் நடந்து பழகுறது
நல்லதெண்டு நினைப்பம்.

Friday, July 5, 2013

இலக்கிய சந்திப்பு – 13 – நிகழ்ந்தவை – நிகழ்ச்சிக் குறிப்புகள்



ஞாயிற்றுக் கிழமை. காலையில் இருந்து மழை வேறு. வெள்ளெண இருட்டத்தொடங்கி விடும் குளிர்கால மாலை. Financial year இன் கடசி நாளும் இன்றைக்குத் தான். அலுவலகங்கள் தம் கடசி நேர வேலைப்பழுவை இறக்கி வைக்க விடுமுறைகளிலும் முனைப்போடு செயல் பட கிடைத்திருக்கும்  கடசிச் சந்தர்ப்பம். அதனால் வேலைக்குப் போய் பாதியில் இந்த நிகழ்ச்சிக்காக விடைபெற்று வந்த களை எனக்கும்.

பாடசாலைகளோ விடுமுறை. கார்த்திகாவுக்கு சுகவீனம். அவரின் வானொலி நிகழ்ச்சிகளிலும் ஒரு வாரமாக அவரைக் காணமுடியவில்லை என தொலைபேசிய போது தான் தன் சுரம் பற்றிச் சொல்லியிருந்தார். மழை ஷிரயா விடுமுறைக்குக் கடல் கடப்பதாக முன் கூட்டியே சொல்லி தன் நண்பரான திரு சத்திய நாதன் அவர்களை நமக்கு மின்னஞ்சலின் மூலமாக அறிமுகப்படுத்தி விட்டு நம் புத்தகப் பேரேட்டுக்கு தன் பங்களிப்பாக ………………. புத்தகத்தைத் தருவதாகக் குறிப்பிட்டு விட்டு போயிருந்தார்.

அதனால் என்னிடம் இம்முறை  பங்களிப்பாளர்கள் குறித்து நிறையவோ பெரிதாகவோ எதிர் பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை.வழக்கமாகவே வருபவர் தொகை 5 – 10 க்குள் தான்.அது குறித்து எனக்கு எந்தக் குறையும் இல்லை. மாறாக அது எனக்கு மகிழ்ச்சியே.தொகை குறைவாக இருக்கும் போது அவதானிப்பும் காத்திரமும் திசைமாறிப் போகாமல் இருக்கும்.

வருபவர் தொகை குறைவெனினும் அவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.அது போதுமாயிருந்தது. எனினும் இன்று தவறாமல் வந்து கலந்து கொள்ளும் ஷிரயாவும் கார்த்திகாவும் கலந்து கொள்ளமாட்டார்கள் என்றது ஏமாற்றமாகவே இருந்தது. அண்மையில் தென்றல் தந்து போன ஒரு உற்சாக வசனமான “ எதுவும் நேராதது போல நடந்து கொள்ளுங்கள்: என்ன நேர்ந்திருந்தாலும் சரி” என்ற வசனம் என்னை உந்தித்தள்ள போனேன்.

வேலையில் இருந்த ஓர் சமயம் யாழ் நிறுவனத்தார் அதே நாள் மாலை அவர்களின் இரண்டு அரங்கத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடாகி இருப்பதால் வேறொரு அறையை நமக்குத் தந்துதவுவதாக வாக்களித்திருந்தார்கள்.அதனை இளம் நிறுவனர் திரு.சுஜன் மேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்த படி இந்த ஏற்பாட்டை நமக்காக ஏற்பாடு செய்து தந்திருந்தார்.


5.15 மணியளவில் அங்கு நான் சென்ற போது இரு அரங்கங்களும் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலே நீங்கள் காணுகின்ற இந்த அழகிய பாத்ரங்கள் அந்த அலங்காரத்தின் ஒரு பகுதி தான்.



ஓர் இளந்தமிழன் என்னை வரவேற்று கீழ் அரங்கில்  7.30 மணியளவில் தான் நிகழ்ச்சி நடக்கப் போகிறது. நீங்கள் அதற்குள்ளாக அந்த இடத்தைப் பாவித்துக் கொள்ளலாம் என்றான்.வெண்பட்டு விரித்த அரங்கம்.யாருக்காகவோ தயார் படுத்தப்பட்ட அந்த அழகு கலைந்து விடாமல் உள்ளே சென்று அதன் அழகில் லயித்திருக்க மிகச் சரியாக 5.30 மனிக்கு இரண்டு பேர் உள் நுழைந்தார்கள். புது முகங்கள். ஆண்கள்.இலக்கிய சந்திப்பு இங்கேயா நடக்கிறது என்றார்கள்.


என்ன ஒரு ஆச்சரியமான சந்தோஷம்! ஒருவர் திரு. சத்திய நாதன். ஷிரயா அறிமுகப்படுத்தியவர். மற்றயவர் தம் வலைப்பதிவில் தன்னைப் யாழ் புத்தன் என அடையாளப்படுத்திக் கொள்ளும் இரட்னசீலன்.இருவரும் இன்றய புது முகங்கள்.


சற்று நேரத்தில் எல்லோரும் வந்து சேர குறும்பட இயக்குனர் செல்வன் தன் பேச்சை ஆரம்பித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறும்பட இயக்குனர் செல்வனைப்பற்றிச் சற்றுச் சொல்வது பொருத்தமாக இருக்கும். அவரை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ‘மண்’ புகழ் திரைப்பட இயக்குனர் புதியவன். தன் திரைப்பட அலுவலாக இலண்டனில் இருந்து வந்த புதியவன் நம் கடந்த மாத இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் இந்த செல்வன்.( பாருங்கள் இலண்டனில் இருந்து ஒருவர் தேவையாய் இருந்திருக்கிறது நம் அருகில் இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்ய.) அந்த நாளிலேயே அவரை நாம் அடுத்த சந்திப்பின் அதிதியாக அழைப்பதாகத் தீர்மானித்திருந்தோம். அதற்கு அவரும் ஓம் பட்டிருந்ததன் காரணமாக இன்று அவர் பிரசன்னமாகியிருந்தார்.



இலங்கையின் தொழில்நுட்ப சூழல் மிக மங்கிப்போயிருந்த 2007ல் ’விழி’ என்ற குறும்படத்தை உருவாக்கிய செல்வன் மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். .Dark Moon’ என்ற ஆவணப்படத்தை பின்னர் எடுத்ததோடு இலங்கையின் திரைப்படக்கூட்டுத்தாபனத்திலும் சில ஆண்டுகள் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.அந்த சந்தர்ப்பத்தில் புதியவனின் அறிமுகம் தனக்குக் கிடைத்ததாகவும் அதன் காரணமாக 2000ம் ஆம் ஆண்டு புதியவனால் எடுக்கப்பட்ட ‘மாற்று’ என்ற திரைப்படத்தில் பங்குபற்றும் வாய்ப்பு தனக்கு கிட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து 2002 இல் கனவுகள் நிஜமானால் 2002ல் எடுக்கப்பட்ட போது அதன் கதையம்சத்தில் ஈர்க்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து 2005ல் எடுக்கப்பட்ட மண் திரைப்படத்தில் தானும் ஒரு பாத்திரம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறும் செல்வன் தான் அடிப்படையில் ஒரு நடிகனாகவே வர விரும்பியதாகவும் திரைப்படத்துறைக்கு வந்ததன் பிற்பாடே நடிப்பது என்பது வெறும் தோற்றப்பாடே என்பதுவும் அதில் ஒரு கருத்தைச் சொல்ல முடியாமல் இயக்குனரிடமே அதன் முழு உரிமைகளும் இருப்பதனால் இயக்குதல் என்ற பக்கத்தைத் அதன் பின்னர் தான் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவிக்கிறார்.மிகுந்த பொருட்செலவும் ஆட்பலமும் தொழில்நுட்ப ஆற்றல்களும் மிக வேண்டப்படும் இத்துறையில் குறும்படங்களும் ஆவணங்களும் கொடுக்கும் வீரியத்தை; சமூகத்திலும் அரசியலிலும் வரலாற்றிலும் அது பதித்துச் செல்லும் அழுத்தமான காலடிகளையும் தொடர்ந்து அவர் விபரித்தார்.



1 நிமிடத்தில் இருந்து 55 நிமிடங்கள் வரைக்குமான நேர வரையரை குறும்படங்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கும் செல்வன் சில இடங்களில் அதற்கு விதி விலக்குகளும் உள்ளன என்று கூறுகிரார்.

அதற்கு இருக்கும் அசாதாரன சமூகத் தாக்கம் குறித்து – அதன் வீரியம் குறித்து பேசுகின்ற போது பிரித்தானியாவில் எடுக்கப்பட்ட செம்மறியாடு பற்றிய ஒரு நிமிட குறும்படம் எவ்வாறு மக்களிடம் விழிப்புணர்வினையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தத்துக்கு வழிவகுத்து வைத்தது என்பது பற்றிக் கூறினார்.(அதன் கதை செம்மறியாடுகளில் இருந்து உரோமங்களை நம் தேவைகளுக்காகக் களைவதனால் ஒரு ஆடு எவ்வாறு அவஸ்தைப்படுகிறது என்பது தான். அதன் பின் செயற்கைக் கம்பளி தயாரிக்கும் படியான சட்டத்திருத்தம் ஒன்று பிரித்தானியப் பாராளுமன்ரத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறுகிறார்.)



அது மொழிகடந்து பேசும் தன்மை வாய்ந்தது என்பது குறும்படம் ஆவனப்படங்கள் சார்பாக அவர் முன் வைத்த இன்னொரு விடயமாக இருந்தது. மொழி கடந்து பேசும் அதன் காட்சிப்படுத்தல் உலக மக்கள் யாவருக்கும் பொதுவானது. அப்போது சுமதி ரூபனின் மனுஷி மெளன மொழியினால் பேசப்பட்ட உலகு தழுவிய மக்களைச் சென்றடையத்தக்க அற்புதக் கலை வெளிப்பாடு என நான் சொன்ன போது திரு சத்திய நாதன் சார்ளிசம்பிளினை இன்னொரு உதாரணமாகக் எடுத்துக்காட்டினார்.இந்த இடத்தில் மொழியின் மெளனமும் தொழில் நுட்பத்தின் பேட்டாற்றலும் கலை வெளிப்பாட்டின் விகசிப்பும், அதன் உலகு தழுவிய வியாபகமும் புத்தகங்களின் பயன்பாட்டுத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியிருந்தன.



மொழி குறித்த சிந்தனைகள் மறு பார்வைக்குரியனவா என்ற கேள்வி எழுந்த போது இல்லை என்பதே பலருடயதும் கருத்தாக இருந்தது.மொழி கொண்ட புத்தகங்களில் வாசகனின் கற்பனைக்கு அவனது சிந்தனைக்கு எப்போதும் இடம் இருக்கும் என்பதும்; ஆவனக் குறும்பட பக்கங்களில் இயக்குனரே அனைத்தையும் தீர்மானித்து விடுவதால் அங்கு வாசகனுக்கு அசைபோட மூழ்கிப்போக அதனுள் வாழ்ந்திருக்க முடியாமல் போய் விடுகிறது என்பது அதற்குரிய மாற்றுக் கருத்தாக இருந்தது.

அதற்கு உதாரணங்கள் பலவற்றை சத்திய நாதன் எடுத்துக் காட்டினார்.புத்தகங்களாக வந்து வெற்றி பெற்ற பல கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது தோல்வியைத் தழுவிக் கொண்டமைக்கு வாசகனுடய கற்பனைக்கும் இயக்குனரின் கற்பனைக்கும் இடையே காணப்பட்ட வேறுபாடே காரணம் என அவர் எடுத்துரைத்தார்.அதற்கு ஒரே ஒரு விதி விலக்கு தில்லானா மோகனாம்பாள் என்ற படம் மாத்திரமே என்றும்; அது வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அதில் கையாளப்பட்ட dynamic approach தான் என்றார்.



தொடர்ந்து அதன் சமூகத்தாக்கம் குறித்து பார்வைக்களம் திரும்பியது.அரசியலுக்கு வருவதற்கு திரைப்படம் எவ்வாறு ஒரு படிக்கல்லாக இருந்திருக்கிறது; இருக்கிறது இனியும் இருக்கும் என்பது பற்றிய விவாதக் களத்தை ஆரம்பித்து வைத்தார் இந்துமதி. இந்தியாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் இலங்கையில் விஜயகுமார ரணதுங்காவும் அமெரிக்காவில் பில் கிளிங்டனும் உதாரணமாக வந்து போனார்கள்.தற்போதய இலங்கையின் ஜனாதிபதி மகிந்தராஜபக்‌ஷ கூட அரசியலுக்கு வருவதற்கு முன்னர் நடிகராகவே இருந்தார் எனவும் அவர் கதாநாயகனாகக் கூட நடித்திருந்தார் என்ற செய்தியும் சுவாரிஷமானதாகவும் புதிதான தகவலாகவும் இருந்தது.

திரைப்படத்துக்குத் திரும்பியிருந்த பார்வையை மீண்டும் ஆவணங்கள் குறும்படங்களுக்கு கொண்டு வர தற்போதய நடைமுறைப் பூகோளச் சூழல் பற்றிய பார்வை வழிவகுத்தது. இன்றய தொழில்நுட்ப அபிவிருத்தியும் புலம்பெயர்ந்த சூழலும் கணணி அறிமுகப்படுத்தி இருக்கிற சாத்தியப்பாடுகளும் எவ்வாறு எல்லோரும் கலைப்படைப்பை தொழில் நுட்பத்தினூடாகச் செலவு அதிகமின்றி செய்ய உலக சமூகத்தை ஒரே நேரம் சென்றடைய அது எவ்வாறு உதவுகின்றது என்பது பற்றியும் அதன் வாய்ப்பு; சாத்தியப்பாடுகள் பற்றியும் பேச்சு திரும்பியது.


அதற்கென்று தனித்துவமாக இருக்கின்ற பார்த்தல், கேட்டல், உணர்தல், என்பவற்றினூடான காட்சிப்படுத்தல் புலன் உணர்வுகளை சம நேரத்தில் சென்றடைவதும்; அதற்கென இருக்கின்ற வசதி, ஒரு வித கவர்ச்சிப் பாங்கும்; புத்தகங்களைச் சுமந்து திரியத் தேவையற்ற அதன் இலகுப் பாங்கும்; இன்றய அவசர உலகுக்கு எவ்வாறு ஏற்புடையதாகவும் சுலபமானதாகவும் ஆகிப்போகிறது என்பது உணரத்தக்க ஒன்றாகவும் அதிகரித்த பயன்பாட்டுத்தன்மையைப் பெற்ற ஒன்றாகவும் இருக்கின்றமை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட விழி என்ற செல்வனின் குறும்படம் பிரித்தானியக் குறும்பட விழாவில் நல் வரவேற்பைப் பெற்றதற்கும் முதல் 1500 இடங்களுக்குள் அது தெரிவானதற்கும் அதனிடம் இருந்த இத்தகைய பூகோள மாற்றங்களுடனான பயன்பாட்டுத்தன்மை முக்கிய காரனம் என்றார்.



இப்போது ஆவணப்படங்களின் சமூகப்பங்களிப்பு என்ற முக்கியமான இடத்துக்கு வந்திருந்தோம். முதல் நாள் தான் (29.6.13) Silver water, Bahai  Centre இல் நடந்த Channel 4 தொலைக்காட்சியின் ஆவனப்பட இயக்குனர் ………………. இன் “The killing Field -No fair sone ” ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஈழத்துக்கும் இலங்கைக்குமான இறுதிப் போர் பற்றிய ஆவணச் சித்திரிப்பைக் கொண்டிருந்தது அப்படம். அதற்குச் சென்று திரும்பியிருந்தார் திரு.ரட்னசீலன்.அது பற்றி அவர் பேசினார். அதன் வெளியீட்டுத் தாக்கம் அதிலிருந்த உண்மைத்தன்மை அது எப்படி உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது என்பது பறியும் ஒரு அரசொன்றுக்கெதிராக உலகம் சுட்டுவிரல் உயர்த்த; மூடப்பட்டு போயிருக்கக் கூடிய உண்மை ஒன்று இரத்தமும் சதையுமாக கிடந்ததைச் சொல்லிக் காட்ட கிட்டிய சாட்சியாக அது அமைந்த ஆற்றை; அது எவ்வாறு ஐ.நா. வுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது என்பது பற்றியும் பேச்சுத் திரும்பியது. விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் அதில் உணர்வு பூர்வமாக இணைந்து அதன் வீரியம் குறித்து பேசலானோம். அது நம் உயிரோடும் உணர்வோடும் கலந்ததல்லவா? ஆவணப்படத்தின் சிறப்பியல்பும் முக்கியத்துவமும் அது செல்லும் ஆழமும் அகலமும் தாக்கமும் குறித்து வியக்க; அதனை முழுவதுமாக ஒப்புக் கொண்ட செல்வன் தான் எடுத்துப் பாதியில் நிற்கும் ஆவனம் ஒன்றைப் உடனடியாகத் தன் கணனியில் இருந்து போட்டுக் காட்டினார்.



அது எல்லோரையும் ஆவணப்படம் ஆற்றத்தக்க அற்புத பங்களிப்பை உணர்ந்து கொள்ளப் போதுமானதாக இருந்தது.

ஆவணப்படங்களின் முன்னால் வரலாற்றுப் புத்தக ஏடுகள் மிகப் பலவீனப்பட்டுப் போயிருந்தது. எனினும் இவை இரண்டுக்கும் இடையே பல புறத்தாக்கங்கள் இருப்பதையும் நாம் பார்த்தே தீர வேண்டும்.ஒரு ஆவனப்படம் உயிரைப் பணயம் வைத்து எடுக்கின்ற அதே நேரம் மிகப்பெரிய விலையை – காலம் குறித்தும் செலவு குறித்தும் பாதுகாப்புக் குறித்தும்  - வரலாற்று பெறுமதியை நிலை நாட்டிச் செல்லும் ஒரு வாழ்கைக்கால படைப்பு. இப்போதைக்கு அதனை எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கலைப்பெறுமதியை விட அதற்கு வரலாற்றுப் பெறுமதியே அதிகம்.



கூடவே, தமிழ் இனி என்ற குறும்படம் உலகத் தமிழ் மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்றதற்கு சந்தைப்படுத்தும் யுக்திகளும் அதற்கு யூரியூப், முகப் புத்தகங்கள் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பதும் அந்தப்பக்கங்களைக் கையாளவேண்டிய அனுகுமுறைகளும் முக்கியத்துவங்களும் விதந்து பேசப்பட்டன.ஆனந்த விகடனில் வரவேற்பறைப் பகுதியில் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வந்த குறும் படங்கள் பற்றிய விமர்சனமும் பார்வையும் குறும்படம் பற்றிய சிறந்த அறிமுகத்தை மக்கள் மத்தியில் செய்ய மிகுந்த பங்காற்றியது என்று சத்திய நாதன் தெரிவித்தார்.


அது இயல்பாகவே நம்மை இணையப்பக்க உரையாடலுக்குக் கொண்டு சென்று நிறுத்தியது. தமிழ் எழுத்துருவின் அறிமுகமும் இணையத்தளங்களும், வலைப்பூக்களும் எப்படி உலகத்தை இணைத்து வைத்திருக்கிறது என்பது பற்றியதாக நம் உரையாடல் திசை மாறியது.தமிழ் மொழியோடு உறவாடும் மூன்று பேர் அங்கிருந்தும் மூன்று பேரும் வேறு வேறு விதமான தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி தமிழில் எழுதுவதை உரையாடலின் போது கண்டு கொண்டோம்.திரு ரட்னசீலன் யாழ்.கொம் மில் இருந்து டைப் செய்து கட் அண்ட் பேஸ்ட் செய்வதாகச் சொன்னார். திரு சத்திய நாதன் கட் அண்ட் பேஸ்ட் செய்கின்ற போதும் அதற்கான எழுத்துரு உயிர் எழுத்துக்களை அடியொற்றியதாக இருப்பதால் அது தனக்கு மிக இலகுவானதாக இருப்பதாகத் தெரிவித்தார். நான் பாவிக்கின்ற எழுத்துரு இந்தியாவில் இருக்கும் யுகமாயினி சித்தனால் எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பது பற்றிக் கூறி; நேரடியாகவே தமிழிலும் ஆங்கிலத்திலும் சகல பக்கங்களிலும் ( மின் தபால், வேர்ட், வலைப்பக்கங்கள், தேடுபொறி என யாவற்றிலும்) எழுத வசதி அமைத்துத் தந்தது பற்றியும்; தேவைப்படும் இடத்து அடுத்த சந்திப்பில் அதனை எடுத்து வருவதாகவும் விரும்பியவர்கள் அதனைப் பெற்றுக் கொள்லலாம் என்பது பற்றியும் தெரிவித்தேன்.

உண்மையில் தமிழ் எழுத்துரு அறிமுகம் புதிய உலகத்தை திறந்து விட்டது என்பதும் அந்த ஒரு அறிமுகமே வாழ்க்கை முறையை மாற்றப் போதியதாக இருந்தது என்பதும் கனணி யுகம் எவ்வளவு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதற்குச் சான்றே.


இந்த இடத்தில் நம் ஆசுகவியார் குமாரசெல்வம் ஓடோடி வந்து சேர்ந்தார். அவர் தற்போது புதிய உணவகம் ஒன்றை திறந்திருப்பதால் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடிவதில்லை என்றும் இருந்த போதும் கடந்த இரண்டு சந்திப்புக்கும் வர முடியாதிருந்ததால் இன்று எப்படியும் வரவேண்டும் என்று வந்ததாகச் சொல்லி அடுத்த சந்திப்பைத் தன் உணவகத்தில் சாப்பாட்டோடு செய்து கொள்லலாம் என அழைப்பு விடுத்தார்.முடிந்தால் இன்றைக்கே தான் அங்கே அழைத்துச் செல்லலாம் என்ர போதும் யாரும் அதற்கான ஆயத்தங்களோடு வராத படியினால் அடுத்த முறைக்காக அதனை நாம் ஒத்தி வைத்தோம்.

உணவு பற்றிய பேச்சு வந்த போது எனது தாயார் நம் சந்திப்புக்காக செய்து தந்திருந்த கொழுக்கட்டைகள் நினைவுக்கு வர,உணவும் இடமும் நம்சந்திப்புக்காக ஒதுக்கித் தரும் செல்வத்துக்கும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் அதனைப் பரிமாறினோம்.உடனே செல்வத்துக்கு கொழுக்கட்டை பற்றிய வட்டாரக் கதை ஒன்று நினைவுக்கு வர அக்கதையைப் பகிர்ந்து கொண்டார். அக்கதை இலங்கையிலும் வழங்கி வந்ததை ரட்னசீலனும் சத்திய நாதனும் உறுதிப்படுத்தினார்கள். ரவியும் பானுவும் இதனை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கோ இந்தக் கதை புதிதாகவே இருந்தது. அதன் கதைச் சுருக்கம் இது தான்.

ஒரு குடியானவன் ஒரு ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் தன் உறவினரைக் காணும் நிமித்தம் போக வேண்டுமாம். மனைவிடம் விடைபெற்று அக்கரைக்கு போனதும்  உறவினர் வீட்டைச் சென்றடைகிறான். அங்கே இவரை வரவேற்று உபசரித்த பெண்மணி கொழுக்கட்டைகள் செய்து கொடுக்கிறாள். அதன் ருசியினால் உந்தப்பட்ட இக் குடியானவர் அதன் பெயரைக் கேட்டு வைத்துக் கொள்ளுகிறார். தன் மனைவியிடம் சொல்லி செய்விப்பதற்காக. அதனை மனனம் பண்ணியபடி வந்த அக்குடியானவன் ஆற்றைக்கடக்கின்ற போது ……………………… என மனனம் செய்து வீடு வந்ததும் …………..இதனை எனக்குச் செய்து தா எனக் கேட்கிறான். இதனைக்கேட்ட மனைவி ஐயையோ ஒரு நாளும் விரும்பிச் சாப்பாடு கேட்காத மனிதன் இன்று கேட்டு விட்டாரே என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லோரிடமும் ஒடி ஓடிப் போய் கேட்கிறாள். யாருக்குமே அந்த புதினமான தின்பண்டம் எப்படிச் செய்வதெனத் தெரியவில்லை. அவள் தனக்கு செய்யத் தெரியாது என சொன்ன போது அதன் ஏமாற்றத்தைத் தாங்க முடியாத குடியானவன் மனைவியின் கன்னத்தில் அடித்து விடுகிறான். கன்னம் வீங்கிப் போய் விட்டது. அவள் கவலையோடு உட்கார்ந்திருக்கிறாள். வழமை போல கைமாற்றுப் பெற்றுக் கொள்ள வரும் அயல் வீட்டுக்காறி அழுது கொண்டிருக்கும் இவளைப் பார்த்து ‘ என்னடி இது கன்னம் கொழுக்கட்டை மாதிரி வீங்கிப் போய் விட்டதே! என்னவாயிற்று என்று கேட்டாளாம். ஆ… அது தான் அந்தக் கொழுக்கட்டைதான் வேணும் என்றானாம் அந்தக் குடியானவன். இது தான் கதை.(இவர் இதனைச் சொன்ன போது ஞானம் சஞ்சிகையில் வந்து கொண்டிருக்கும் கொற்றாவத்தை கூறும் குட்டிக் கதைகள் நினைவுக்கு வந்து போனது. அதனைச் சொல்ல ஆர்வம் உந்திய போதும் நேரக்கட்டுப்பாடு காரணமாகவும் இலக்கு மாறிவிடும் சாத்தியங்கள் இருப்பதாகத் தோன்றியதாலும் என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். வேறொரு சந்தர்ப்பத்தில் அதனை பற்றிப் பேசலாம் என சமாதானமாகிக் கொண்டேன்.

இந்த வட்டாரக் கதைகள் பேச்சு வந்த போது திரு சத்திய நாதன் கவிப்பேரரசர் வைரமுத்துவின் ‘தோழிமார் கதையையும் அதில் தொனித்து நிற்கும் வட்டார பாஷை அது கொடுக்கும் அழகியல் பற்றி பேசி மதுரை வட்டார வழக்கில் அமைந்திருந்த தோழிமார்கதை என்ற கவிதையை வாசித்ததும் மனதில் அது பதிந்து போன ஆற்றைக் கூறி; அப்பழுக்கற்ற அவ் அழகிய கவிதையை அதன் சகல தார்ப்பரியங்களோடும் எந்த ஒரு தடங்கலுமற்ற ஆற்றொழுக்கான தமிழாலும் அதனை உடனேயே அனுபவித்து அனுபவித்து ஒவ்வொரு சொல்லுக்குள்ளாலும் வாழ்ந்து அந்தக் கவிதையை அவர் பிறப்பித்த போது நாம் பேச்சற்றவர்களானோம்! அங்கு தமிழ் தங்கச் சுடராய் மிளிர்ந்தது. என்ன ஒரு நினைவாற்றல்! என்ன ஒரு சொற்தேறல்!! அந்தப் பாடலை இங்கு நான் காட்டா விட்டால் என் ஆத்துமம் சாந்தி பெறாது. இது தான் அப்பாடல்.அதில் இருக்கிற பாமரத்தனம், நகைச்சுவை,அதை கதையாக்கும் அவர்களின் அழகு ………….





ஆத்தோரம் பூத்த மரம்
ஆனை கட்டும் புங்க மரம்
புங்க மரத்தடியில் பூ விழுந்த மணல் வெளியில்
பேன் பார்த்த சிறு வயசுப் பெண்ணே நெனப்பிருக்கா?

சிறுக்கி மக பாவாடை சீக்கிரமா அவுறுதுண்ணு
இறுக்கி முடி போட்டு எங்காத்தா கட்டி விட
பட்டுச் சிறு கயிறு பட்ட இடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் எண்ணை வச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டும் பானையில சிறுவாட்டுக் காசெடுத்து
கோணார் கடை தேடி குச்சி ஐசு ஒண்ணு வாங்கி
நாந்திங்க நீ கொடுக்க; நீ திங்க நாங் கொடுக்க
கலங்கிய ஐஸ் குச்சி கலர் கலராய்க் கண்ணீர் விட
பல்லால் கடிச்சுப் பங்கு போட்ட வேளையிலே
வீதி மண்ணில் ரெண்டு துண்டு விழுந்திடுச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூஞ்சி ஆடயிலே கால் கொலுச நீ துலைக்க
சூடு வப்பா கிழவீன்னு சொல்லி சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்கு போட்டனுப்பி
என் வீட்டில் நொக்குப் பெத்தேன் ஏண்டி நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில் போல நிலவடிக்க
பல்லாங்குழி ஆடயிலே பருவம் திறந்து விட
என்னமோ ஏதோன்னு பதறிப் போய் நானழுக
விறு விறுன்னு கொண்டாந்து வீடு சேர்த்தே நினப்பிருக்கா?

ஆடு கனவு கண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவு கண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம்; இடி விழுந்த ஓடானோம்

வரட்டூரு தாண்டி வாக்கப் பட்டு நான் போக
தண்ணியில்லாக் காட்டுக்கு தாலி கட்டி நீ போக
எம் புள்ள எம் புருசன் எம் புழப்பு என்னோட
உம் புள்ள உம் புருசன் உம் புழப்பு உன்னோட

நாளும் கடந்திருச்சு நரை கூட விழுந்திருச்சு
வயித்தில வளத்த கொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்த மரம் ஆனை கட்டும் புங்க மரம்

போன வருசத்து புயக் காத்தில் சாஞ்சிருச்சு!

பின்னர் நம் உரையாடல் கனனியில் தமிழும் பற்றிய பேச்சுக்குத் திரும்பியது.வாசிப்புப் பழக்கம் அருகி வருவது ஒரு புறம் நிகழ, மறுபுறம் தமிழ் கணணியில் எட்டிய இலக்குகள் பற்ரி பேச்சுத் திரும்பியது. இரண்டும் எதிர்மறையான இரண்டு விடயங்களாக நமக்குப் பட்டது. அவசரயுகம் ஒன்று படைப்பாற்றல் திறத்தோடு திறந்து விடப்பட்ட போது – ஊடகமாற்றம் ஒன்று வீரியமாக வெளிப்பட்ட போது அதன் சிந்தனைகளிலும் வெளிப்பாடுகளும் இன்னொரு தளத்தை சென்றடைந்திருக்கின்றன. அந்த வேகத்துக்கு தமிழ் ஈடு கொடுத்திருக்கிறதா என்ற கேள்வியும் சிந்தனைகளும் அடுத்து நம் கவனத்தைக் கவர்ந்தது.

தமிழ் இன்னொரு தளத்தை அடைந்திருக்கிறது எனதில் சந்தேகம் இல்லை என்று கூறிய திரு சத்திய நாதன் அவர்கள் புத்தக வாசனையை அது இன்னும் இலகு படுத்தி இருக்கிறது என்று கூறினார். எதிர்காலத்தில் புத்தகங்கள் கேள்விக்குறியாகுமா என்ற கேள்விக்கு இல்லை என்ற நம்பிக்கையை இந்த நிகழ்ச்சி தந்திருந்தது.



வட்டார வழக்குகளினூடே புத்தகங்களும் ஆவன மற்றும் குறும்படங்களும் கணனியைக் கொண்டுவந்த பூகோள புதுமையும் புகுந்து கொண்டு உறவாடிய நிகழ்வாக இம்மாத சந்திப்பு அமைந்திருந்தது.சரியாக 7.30 மணிக்கு நிகழ்ச்சி முடிவுற்றது.புதிய இரண்டுபேரின் வரவு நிகழ்ச்சிக்கு மிகுந்த நிறைவினையும் சிறப்பினையும்  ஏற்படுத்தித் தந்திருந்தது. நிகச்சிக்குப் போகும் போது வடிந்திருந்த உற்சாகம் திரும்பி வரும் போது மிகுந்திருந்தது. இந் நிகழ்ச்சியில் பங்களித்திருந்த எல்லோருக்கும் அந்த நிறைவின் பங்கு சாரும்.எனக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்து சென்றீர்கள் நண்பர்களே! எனினும் மனதுக்குள் ஒரு திட சங்கற்பம்! அடுத்த முறை நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்பது தான் அதற்குக்,

காரணம்1. புத்தகப் பேரேடு பற்றிய அறிமுகத்தை நான் கொடுக்கத் தவறினேன்.

காரணம்2. முறையான அறிமுகத்தை சரியாகச் செய்யத் தவறினேன்.

காரணம் 3. நன்றிகளைக் கூறி முறையாக நிகழ்ச்சியை நிறைவு செய்யவில்லை.

நிகழ்ச்சியில் பங்களித்திருந்த எல்லோருக்கும் என் தாழ்மையும் அன்பும் கனிந்த நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு