Monday, December 17, 2018

இயற்கையின் மொழியை கற்றல்

இந்தப் பூமியை நாம் வந்தடைந்திருக்கிறோம்.

இந்தப் பூகோளப்பந்து நமக்கு இருக்க நிலமும் சுவாசிக்கக் காற்றும் குடிக்க நீரும் உண்ண உணவும், மழையும், கடலும்,  மகிழ பூக்கள், பழங்கள், நீர்வீழ்ச்சிகள், பறவைகள், காடுகள், களனிகள், கனிம வளங்கள், நட்சத்திரங்கள் என எண்னிறைந்தவைகளை தந்திருக்கிறது.

எப்போதேனும் அதற்கு அதாவது இயற்கைக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

இல்லைத் தானே! நல்லது நானும் அப்படித்தான்.

நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது! எத்தனை பொறுமையோடும் தாய்மையோடும் பற்றோடும் பரிவோடும் அது எம்மை காத்திருக்கிறது!

இயற்கை எத்தகைய ஒரு மாபெரும் பிரமிப்பு!

மழை பெய்யும் அழகு, பூக்களில் மிளிர்ந்து வரும் வாசம் அதன் அழகு; பழங்கள்; அதன் சுவைகள்; மூலிகைகள்; தண்ணீர், கடல், அதனுள்ளே மின்னும் உயிரினங்கள், காடு, அதற்குள்ளே இருக்கும் வேறொரு உலகு, அங்கு நிலவும் ஒரு பண்பாடு, பருவ காலங்கள்; அது கொண்டு வரும் உலக எழில்; நட்சத்திரங்கள், சூரியன், நிலவு, பறவைகள், பிராணிகள்... இவைகள் எல்லாவற்றினூடாகவும் இயங்கி வரும் ஒரு சமநிலை.....

பிரபஞ்சம் பேசும். அது ஒரு மொழியைக் கொண்டிருக்கிறது.

பொறுமையினை மீறி அது இப்போது பேச ஆரம்பித்திருக்கிறது. அதன் மொழி செயலாக  பரிநமித்திருக்கிறது.

மனிதர்களின் பொறுப்பற்ற தனங்களை; பேராசையை; சுயநலன்களை அது புடம் போட்டு காட்ட ஆரம்பித்திருக்கிறது.

இப்போது புயலும் பூகம்பங்களும் வரட்சியும் எரிமலைகளுமாக அவற்றை மாற்றிக் கொண்டுவிட்டோம். பூமியின் வெப்பநிலையை கனிசமான அளவுக்கு உயர்த்திக் கொண்டு விட்டோம். அதன் கனிம வளங்களைச் சுரண்டினோம்; மரங்களை வெட்டி கட்டிடங்களை உருவாக்கி சீமேந்தால் நிலத்தை அடைத்து; நிலத்தடி எண்ணைகளை உறிஞ்சி; மிருகங்களை கொன்று தின்று; பிளாஸ்டிக்குகளால்; இரசாயணங்களால் பூமியை நச்சுக்காடாக்கி விட்டோம்.

இது நமக்குத் தெரியாததில்லை; ஆனாலும் ஒரு உதாசீனம்; ஒரு பாராமுகம்; எனக்கென்ன என்றொரு பொறுப்பற்றதனம்.சரி இதற்கு நாங்கள் என்ன செய்யலாம்?

எத்தனையோ செய்யலாம்....

கொஞ்சம் பொறுப்போடு இருந்தாலே போதும்! என்னால் இந்த பூமிக்கு எந்த சேதத்தையும் நான் ஏற்படுத்தவில்லை எண்ணும் வண்ணம் நம்மால் செய்யக் கூடிய எத்தனையோ உண்டு.

1.மிகக் குறைந்தளவு தேவைகளோடு வாழப்பழகுதல். எத்தனை தேவையறற பொருட்களை நாம் வாங்கிக் குவிக்கிறோம்....எவ்வளவு உணவுகளை தேவை இல்லாமல் சமைத்துக் கொட்டுகிறோம்?

2. பூமியில் வாழ வந்திருக்கிற உயிரினங்கள் நமக்குச் சொந்தமானதல்ல; நாம் வாழ்வினை அவற்றோடு இந்த பூமியில் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறோம். அவற்றை வாழவிட்டு ரசிப்போம்; அவைகளின் மொழியை, வாழ்வை, குணங்களை கற்றுக் கொள்வோம். அது ஒரு பெரும் அறிவுப் புதையல்...இயற்கை நமக்கு படிக்கத் தந்த அழகிய அரிவரிப்  பாடம்.

3. வீட்டுத் தோட்டம் செய்வோம். மூலிகைத் தோட்டம் போடுவோம். இயற்கைத் தாயின் உன்னதங்களைக் கண்டு பிடித்து கொண்டு வருவோம். கொண்டாடுவோம். இயற்கையின் புதையலில் இருந்து நமக்கு பிடித்ததை இயற்கைக்கு நோகாமல் கொண்டுவந்து கொண்டாடி வாழ்வோம். மரக்கறித் தோட்டம்; பழத்தோட்டம், பூந்தோட்டம்...அங்கு வரும் வண்ணாத்துப் பூச்சிகள், தேனீக்கள், பறவைகள்....ஆஹா....

4. ஒரு பொருளை வாங்கினால் அதனை சேமமுறப் பேணி வாழ்நாள் முழுதுக்குமான அதன் பயனை முழுவதுமாக அநுபவிப்போம். உடைந்தால் தூக்கிப் போட்டுவிட்டு அடுத்ததை வாங்கும் அசட்டையீனங்களை இல்லாதொழிப்போம். உடைந்து போனால் அதனை எப்படித் திருத்துவது அதனை வேறு எவ்வகையில் உபயோகிப்பது என்று யோசிப்போம்.

5. தண்ணீரைச் சிக்கனமாகப் பாவிப்போம். நீரின்றி அமையாது இவ் உலகு. ஒழுகிக் கொண்டிருக்கும் நீர் குளாயை செம்மையாகத் திருத்தி உபயோகிப்பதே பெரிய விஷயம் தான்.

6.போக்குவரத்துக்கு முடிந்தவரை கால்களையோ சைக்கிளையோ பயன் படுத்துவது. இது ஒன்றும் இயலாத காரியமல்ல; நாம் அப்படியாகத் தான் இருந்து வந்திருக்கிறோம்; நுகர்வுக் கலாசாரம்; நவீன கண்டுபிடிப்புகள், ஒப்பீடுகள், அந்நிய மோகம்; அவசர உலகம் என இன்னபிற காரியங்கள் நம்மை சோம்பேறி வாழ்வுக்குள் தள்ளி விட்டது. தூர இடங்களுக்கு பொது போக்குவரத்து சேவைகளைப் பயன் படுத்தலாம்.

7. முதலாளிமார்கள்; வர்த்தக பிரமுகர்கள் தம் தொழில் ரீதியான விமானப் போக்குவரத்துகளை நிறுத்தி வீடியோ மாநாடுகள் மூலம் இருந்த இடத்தில் இருந்த படி தம் கூட்டங்களை நடத்தி முடிக்கலாம்.

8. வீட்டில் ஏசி, ஹீற்றருக்கும் பதிலாக பொருத்தமான ஆடைகள் மற்றும் வீட்டை சுற்றி மரங்கள் வளர்த்து ஜன்னல்களைத் திறந்து வைத்து சூரிய வெளிச்சமும் இயற்கையான காற்றும் உள்ளேயும் வரச் செய்து  வீட்டை அதற்குரியதாக ஆக்கிக் கொள்ளலாம்.

9.மின்சாரத்தைச் சிக்கனமாகப் பாவித்தல். ஒரு அறையில் நீங்கள் இருந்தால் மற்றய அறையில் வீணாக எரிந்து கொண்டிருக்கும் லைட்டை அனைத்து விடுவது கூட நீங்கள் இயற்கைக்குச் செய்யும் பெரிய உபகாரம் தான்.
ஆடைகளை சூரிய ஒளியில் காயவைப்பதும் கூட...

10. கழிவு கடதாசிகளை தனியாக குப்பையில் போடுவதும் கழிவு பொருட்களை தனியாகவும் பிளாஸ்டிக்குகளை தனியாகவும் பிரித்து மீள் சுழற்சிக்கு உட்படுத்துதல் மூலம் இந்த பூமியில் உங்களால் எந்த தீங்கும் ஏற்படவில்லை என்று உங்களை நீங்கள் தட்டிக் கொடுக்கலாம்.

11. உடுப்போ தளபாடமோ மின்சார உபகரணங்களோ எது வாங்குவதாக இருந்தாலும் அவசியமென்றால் மட்டும் தேவைக்கேற்ப மட்டும் வாங்குதல்; தேவை இல்லையெனில் வாங்காதொழிதல்.  இப்போதய நுகர்வுக் கலாசாரம் பொருள்களை வாங்கு வாங்கு என்று துரத்திக் கொண்டே இருக்கிறது. ‘use &  thurow' கலாசாரத்துக்கு அதன் ஓட்டப் போட்டியில் சிக்காதிருப்பது; ( ஒவ்வொரு வருஷமும் புதிதாக வரும் மொபைலை வாங்கியே தீருவது என கங்கனம் கட்டி இருப்போர் சற்றே சிந்திப்பீராக!)

12. பிளாஸ்டிக்கின் பாவனையை முடிந்தவரை பாவிப்பதில்லை என கங்கணம் கட்டிக் கொள்வது. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகலைக் கொண்டு செல்வது.

‘பூமிக்கு மூச்சுவிட வழி இல்லாமல் சீமேந்தாலும் தாராலும் நிலத்தை அடைச்சிர்ராங்கப்பா. பூமி மூச்சு விடணும்’ என்று ஒரு பாமர இந்திய விவசாயி சொன்னது இன்னும் என் காதில் ஒலிக்கிறது; இங்கோ எனில் பழங்குடி மக்கள் கடவுள் எனப் போற்றிய பூமியின் நிலச் சுரங்கங்களைத் அரசே தோண்டி எடுத்து தான்தோன்றித்தனமான மமதையில் திளைக்கிறது. வரட்சி ஒருபக்கம் விவசாயிகளை வாட்ட தன்னார்வ நிறுவனங்கள் முடிந்தவரை சொல்லிக் கொண்டிருப்பினும் பேராசையும் மமதையும் சுயநலமும் அதை விட்ட பாடில்லை.

அவைகள் எல்லாம் இப்போதைக்கு ஒரு பக்கமாக இருக்கட்டும்; இந்த பூமியில் நாம் வந்து பிறந்திருக்கிறோம். இருக்க இடம் உண்ண உணவு சுவாசிக்க காற்று ஐம்புலன்களாலும் அனுபவிக்க அது தந்திருக்கும் கண்ணுக்கு இதமாகச் வண்னம் வண்ணமாக சிரிக்கும் பூக்கள்; மூக்குக்கு விதவிதமான நறுமணம்  வாய்க்கு ருசியான பழங்கள்; காதுக்கு இதமான ஒலிகள் மற்றும் இசை, தொட்டுணர எத்தனை எத்தனை பொருட்கள்....

இவற்றை எல்லாம் தந்து எம்மைக் காக்கும் இயற்கைக்கு நாம் என்ன செய்தோம்?

இயற்கை அன்னை பொறுமை இழந்து பேச ஆரம்பித்திருக்கிறாள். அவளுடய பேச்சு  சீற்றப்படுத்திய கோபக்கனலோடு வெளிப்படுகிறது. அவள் பேசும் புயலும் பூகம்பமும் வெள்ளப்பெருக்கும் காட்டுத்தீகளும் நமக்கு எதையோ சொல்ல வருகிறது.

குறைந்த பட்சம் நம்மால் ஆன நம் பங்கை நாம் ஆற்றலாமே!

இந்தப் பூமியை பத்திரமாக அடுத்த சந்ததியிடம் சேதம் எதுவும் செய்யாமல் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இவற்றில் ஏதாவது ஒன்றை புது வருஷத்தில் அமுல் படுத்துவோமா?

அவ்வாறு செய்ய இயலுமெனில் உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.