Tuesday, August 23, 2011

பெண்ணம்சம்


இன்று சற்றே வேலைத் தலைவலி.ஏதாவது ஒரு மாற்றுத் தேவை.வேலையில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு அதனை மறக்க மது,புகைத்தலைப் போல போதையைத் தரும் பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்யும் அல்லது தளர்த்தி விடச் செய்யும் வாசிப்புக்குள் புகுந்து கொண்டேன்.

அவற்றை வாசித்து முடித்த பின் அதனை இங்கு பகிராமல்,பதியாமல் இருக்க முடியவில்லை.

கைக்குக் கிட்டிய இன்றய பத்திரிகை ஞாயிறு தினக்குரல்.இலங்கையில் இருந்து வெளிவருவது.மறு நாளே இங்கு வாசிக்கக் கிட்டுவது.அதில் அ.முத்துலிங்கம் அவர்களுடய ஆக்கம் ஒன்று கண்ணில் பட்டது.(21.08.2011.பக் 31 பனுவல்)அது இப்படி ஆரம்பிக்கிறது.

”எடுத்த ஒரு வேலையை உற்சாகத்தோடும் கச்சிதத்தோடும் நேர்த்தியோடும் செய்து முடிப்பதற்கு சில பேரால் மட்டுமே முடியும்.இவர்கள் வேலை செய்யும் போது பாடிக்கொண்டே செய்வார்கள்.அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வேலை அது.பார்ப்பதற்கு ஒரு கலை நிகழ்ச்சியைப் போலவே இருக்கும்.அதில் ஒரு நேர்த்தியும் கலையம்சமும் நிறைந்திருக்கும்”

தொடர்ந்து அவற்றுக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகிறார்.எஸ்.ராமகிருஸ்னனின் துயில் என்ற நாவலில் வரும் ஓரிடம்.‘என்னை ஞாபகம் வச்சிருக்கிற ஆளு கூட இருக்காங்களா’ என்று கேட்கும் பெண்பாத்திர வார்ப்புப் பற்றி கூறி, அந்த ஆதங்கத்தில் அவளுடய மொத்த வாழ்வின் சாரமும் அடங்கியிருந்தது.மனித அவலத்தையும் தோல்வியையும் நிர்க்கதியையும் ஒரே வசனத்தில் கொண்டு வந்திருப்பார் ஆசிரியர் என்று வியந்திருந்தார் அதில்.

அது போல குறுந்தொகையில் இருந்தும் ஒரு காட்சியைக் கூறியிருந்தார்.தலைவி தோழியிடம் சொல்கிறாள்.’பார் என் நிலைமையை.அவர் பாட்டுக்கு என்னைச் சுகித்து விட்டுப் போய் விட்டார்.நான் இப்படி ஆகி விட்டேன்.யானை முறித்த கிளையைப் போல தொங்கிக் கொண்டு கிடக்கிறேன்.மரக்கிளை முன்பு போல இல்லை.முறிந்து நிலத்திலும் விழவில்லை.அது போல நானும் பாதி உயிரோடு அங்கும் இங்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறேன்’(குறுந்தொகை - 112) என்று சொல்வதை கச்சிதமான விளக்கத்துக்கு உதாரணமாகக் காட்டியிருந்தார்.

அது போல வீரியத்தோடு மனதில் இறங்கும் ஒரு உணர்வின் இயல்பைச் சொல்ல அவர் எடுத்தாண்ட உதாரணத்தை அப்படியே தருகிறேன்.’சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எழுதிய ,’For the love of Shakespeare' என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது.நண்பர் தன்னுடய 75வது வயதில் எழுதிய முதல் புத்தகம் அது....அவர் தரும் சொற்சித்திரத்தைப் படிக்கும் போது இவருக்கு மாத்திரம் எப்படி இப்படித் தோன்றுகிறது என்ற வியப்பு நீடித்துக் கொண்டே போகும்.Tempest நாடகத்தில் ஓரிடம்.புரஸ்பரோ தன் மகளுக்கு தான் நாட்டை இழந்து விட்ட ஓர் அரசன் என்ற உண்மையைச் சொல்கிறான்.அவளால் நம்ப முடியவில்லை.அதிர்ச்சி அடைகிறாள்.your tail,sir,would cure deafness' ’உங்களுடய கதை,ஐயா!செவிட்டுத் தன்மையைக் குணமாக்கும்’ என்ன ஒரு சொல்லாட்சி என்று வியக்கிறார்.

எல்லாவற்றிலுமே நேர்த்தியையும் அழகையும் காணும் அ. முத்துலிங்கம் அவர்கள் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கு நியதியின் பிரகாரமே இயங்குகின்றது என்பார்.பூக்கள்,பறவைகள், மிருகங்கள், அவற்றின் வகைகள் வாழ்விடங்கள் எல்லாவற்றிலுமே ஒரு நேர்த்தி இயங்கு முறை இருக்கும் போது மனிதன் மட்டுமே அதைத் தவற விடுகிறான் என்பது அவரது ஆதங்கமாக இருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் Liverpool என்ற இடத்திற்குச் பரிசுச் சேலைகள் சில வாங்கச் சென்றிருந்தேன். அநேக இந்தியப் புடவைக் கடைகள் அங்கு இருக்கின்றன.மேலைத்தேய நாகரிகங்களோடு போட்டி போடும் நவீன ரகப் புடவைகள் அங்கு ஏராளம்.உயர் விலைகள்,பட்டு ரகம்,அண்மைய வெளியீடு,வசீகர நிறம் என்று அநேகம் இருந்தாலும் மிகக் குறைந்த விலையில் இருக்கும் பருத்திச் சேலைகளின் மீதான மோகம் என்னை விட்டு அகன்று போகும் பாடாய் இல்லை.இது ஒரு நோயைப் போல என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது.’இங்க எல்லாரும் நல்ல கிறாண்டா நல்ல பட்டுச் சீலையள் தான் உடுத்திறது.சும்மா ஒரு கொட்டன் சீலையை எடுத்துக் கொண்டு வராதைங்கோ’ என்று என் தங்கை ஏற்கனவே என்னை எச்சரித்தும் விட்டிருந்தாள்.

’ஓடுக!ஊரோடுமாறு’என்று என் பாடசாலைப் பிரிவின் போது என் ஓட்டோகிறாவ்பில் என் பள்ளித் தோழி ஒருத்தி எழுதி இருந்தது இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது.

அத்தனை களைப்பு! வாழ்க்கைமீது!! :)

’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்!!’என்று ராஜு முருகன் எழுதிய வரி ஒன்று வந்து போகிறது மனதில்.(ஆனந்த விகடன்;24.08.2011; ப்க்;63 -66)

சரி, அதை விட்டு விடயத்துக்கு வருவோம்.கடையில்,வழமை போலவே வாங்க வேண்டயவற்றை எல்லாம் வாங்கி விட்டு எனக்கே எனக்காக ஆரம்பத்திலேயே என் கண்ணில் பட்டும் புறந்தள்ளிக் கொண்டிருந்த சேலையை மீண்டும் எடுத்து வாங்குவதா விடுவதா என்ற தீர்மானத்துக்கு வர முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தேன்.மெல்லிய உடல்வாகு உள்ளவர்களுக்கே பருத்திப் புடவை அழகு என்பது தற்போதய என் சமாதானத் தீர்மானம். அதுவே என்னை வாங்கும் ஆசையைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.

அதனைப் பார்த்துக் கொண்டிருந்த குஜராத்திப் பெண்ணொருத்தி - அந்தக் கடைப் பெண்மணி - அண்மையிலேயே அவள் இந் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் - அருகில் வந்தாள்.அதில் ஒரு சிநேகம் இருந்தது. எனக்கும் பருத்திச் சேலைகள் மிகவும் பிடிக்கும் என்றாள். அதில் உடனடியாகவே என்னை மீறிய ஒரு நெருக்கமான இதத்தை உணர முடிந்தது.

எனக்கும் ஆரம்பத்தில் இருந்து இந்தச் சேலையில் ஒரு கண் இருக்கிறது என்று விட்டு ஏன் வாங்கத் தயக்கம் என்று கேட்டாள். நான் காரணத்தைச் சொன்ன போது புன்னகைத்து விட்டுச் சொன்னாள்.எத்தனை எத்தனை பட்டுச் சேலைகள் வாங்கினாலும் ஒரு பருத்திச் சேலையை உடுத்தி அதன் எளிய இயல்பில் நடந்து போகும் சுகம் இருக்கே! அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.அது நீ குண்டம்மா என்பதையும் கடந்தது.புற உலகக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது.அந்த சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக அதை உடுத்திச் செல்.அது உனக்கு வசீகரமான ஒரு அழகைத் தரும்.

அந்தச் சேலையை விட அந்தப் பாரதப் பெண் அப்போது மிகுந்த அழகாக இருந்தாள்!

’...சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை!’என்றொரு ஆறாம் நூற்றாண்டுப் பக்திப் பாசுரம் பேசும்.ஆறாம் நூற்றாண்டுத் தமிழின் வீரியம் அது!

சித்தம் அழகியர்!!

இந்தப் பெண்னையும் எனக்கு அப்படித்தான் பார்க்கத் தோன்றியது.

இந்தக் குணாம்சத்தினால் தான் பாரதத்துப் பெண்கள் அத்தனை அழகோ?



Monday, August 22, 2011

இளந்தமிழன்

என் சின்னஞ் சிறிய உலகத்தில் என்னைக் காண வரும் தோழமையுள்ள நண்பர்களே!

எல்லோரும் நலம் தானே? உங்களோடு பேச உரிமையோடு ஒரு நிமிடம் எடுத்துக் கொள்கிறேன்.

கடந்த சில மாதங்களாக என் வலைப்பூவுக்குள் அநேக குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணமாக உள்ளன. நண்பர்களுடய பின்னூட்டங்கள் காணாமல் போவதும் எழுதும் போது அலைக்கழிவுகள் நிகழ்வதும் எழுதி முடிகின்ற கட்டத்தில் அவை முழுவதுமாக இல்லாது போய் விடுவதும் அவற்றை மீளக் கட்டியெழுப்புவதுமாக அது மிகச் சிரமமான காரியமாக இருக்கின்றன.

எல்லாவற்றையும் விட எரிச்சலூட்டுகின்ற விடயம் என் நண்பர்களுடய பின்னூட்டங்கள் எனக்குத் தெரியாமலே களவாடப் படுவதோ அபகரிக்கப் படுவதோ தான்.

நான் ஒரு போதும் என் நண்பர்களுடய அல்லது இங்கு வரும் எவருடயதும் - அது சாதகமானதோ பாதகமானதோ வருகின்ற எந்தப் பின்னூட்டங்களையும் பிரசுரிக்காமல் விடுவதேயில்லை என்பதை என் பக்கம் வரும் உறவுகள் தயவு கூர்ந்து புரிந்து கொள்வார்களாக!

இங்கு மட்டும் என்றில்லை. என் மின் தபாலுக்கும் இதே நிலை தான்.என் தபால் முகவரியில் இருந்து எனக்கே தபால் வருகிறது. இப்படி மேலும் எத்தனை பேருக்குப் போகிறது என்பதையும் நானறியேன்.

எத்தனையோ தரம் கணணி விற்பன்னர்களைக் கண்டும் கணணியை மாற்றியும் சேவை வழங்குனரை மாற்றியும் கடவுச் சொல்லை மாற்றியும் பார்த்தாயிற்று.

பலவிதமான நோயாளிகளையும் கூட நாம் சகித்தும் கடந்தும் செல்லவேண்டி இருக்கிறது இந்தக் கணணி உலகத்தில்!

அதனால் சில மாதங்களுக்கு இந்த வலைப்பக்கத்தை நிறுத்தி வைத்திருக்கத் தீர்மானித்திருக்கிறேன். அதே நேரம் புதிதாக ஒரு மின் தபால் முகவரி ஒன்றையும் உருவாக்கி இருக்கிறேன்.தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு சொல்ல ஏதேனும் இருந்தால் அந்த முகவரியில் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.முகவரி; may22nd11@gmail.com

நன்றி.

அது நிற்க!

.....................................................................................


என் தமிழ் பாடசாலை மானவர்களின் அனுபவங்களை அவர்களின் ஆற்றலை வளர்க்கும் முகமாக அவர்களுக்காக ‘இளந்தமிழன்’ என்ற பெயரில் அவர்களுக்கான வலைப் பூ ஒன்றைத் தனிப்பட்ட முறையில் அமைத்திருக்கிறேன்.அது என் வலைப்பூவின் அருகில் இருக்கின்ற ’சுவைக்க....’ என்ற பட்டியலில் இடம்பெற்றிருக்கக் காணலாம்.தயவு கூர்ந்து இங்கு வருகின்ற யாரும் கூடவே நேரமும் இருந்தால் அங்கும் சென்று,என் மானவர்களின் ஆக்கங்களைப் பார்த்து, அவர்களுக்கு தமிழில் எழுதும் ஆர்வத்தை தூண்ட முன்வருமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, August 8, 2011

புலமையும் நட்பும்



அது ஒரு காலம்!

புலமையும் நட்பும் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலம்!!மகாகவி,நீலாவாணன்,முருகையன்,நுஃமான்...என்று நீண்டு செல்லும் புலமையும் நட்பும் கொண்ட பாரம்பரியம் அது.

ஓலை என்ற சிறு சஞ்சிகையில் (ஜூன் 2003) வந்திருக்கின்ற பல ஆக்கங்கள் இதுவரை கண்டெடுக்கப் படாத பல புதிய விடயங்களைச் சொல்லிச் செல்கிறது.இரவல் புத்தகம் ; கொடுக்கவேண்டி இருப்பதால் பிடித்தவற்றைப் பதிவு செய்ய வேண்டியும் பகிர்ந்து கொள்ள வேண்டியும் அவற்றில் ஒன்றைத் தருகிறேன்.

”.....
இந் நாள் எல்லாம் எங்கள் வீட்டுப்
பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்!
முல்லையும் அருகே மல்லிகைக் கொடியும்
‘கொல்’லெனச் சிரித்துக் கொண்டிருக்குங்கள்’
அல்லவோ?....” - என்றும்

”....பழஞ்சோற்றுண்டி கிழங்கொடு பிசைந்து
வழங்கலை நினைத்தால் வாயூறாதோ? - என்றும்
....”

”நல்லவர்களுக்கிது தான் நாடு - பொய்
நாகரிகத்துக்கப்பால் ஓடு!
முல்லை நாடு! பக்கத்தில்
மூன்றறைகளோடு சிறு வீடு போதும்! எடு ஏடு!!”

என்றும் தன் ஊரைப் பாடிய மகாகவிக்கும் இன்று இலங்கையின் வானொலி உலகில் பிரபலமாக இருக்கும் எழில் வேந்தனின் தந்தையார் நீலாவாணன் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பொன்றைப் பற்றி ’ஓலை’ஜூன் 2003 இதழில் எழில் வேந்தன் எழுதி இருக்கிறார். அதில் நீலாவாணன் தன் டயறியில் எழுதி இருந்த இது வரை வெளிவந்திராத கவிதை ஒன்றை அதில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

புலமையும் நட்பும் நடைபோடும் அக் கவிதையையும் அதற்கு எழில் வேந்தன் கொடுத்திருக்கின்ற குறிப்பையும் கீழே தருகிறேன்.

“மகாகவியின் மரணச் செய்தி வானொலியில் வந்த போது அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.செய்தியைக் கேட்டதும் சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு அதிர்ச்சியோடு உட்கார்ந்திருந்தார்.மாமாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள வேண்டுமென எத்தனையோ முயற்சிகள் செய்தும் முடியாது போய் விட்டது.அப்போது ஜே.வீ.பி.கிளர்ச்சி முடிந்து நாடு பழைய படி வழமைக்குத் திரும்பாத நேரம்.நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் செல்ல முடியாது.எப்படியோ ஓடித் திரிந்து கூடிய விரைவில் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து விமானத்தில் நாம் யாழ்ப்பாணம் போனோம்.எங்களது முதலாவது விமானப் பயணமும் என் தந்தையாரின் ஒரே ஒரு விமானப் பயணமும் அது தான்......

மாமா இறந்து கிட்டத் தட்ட 3 தசாப்தங்கள்.அண்மையில் அப்பாவின் கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடு பட்டுக் கொண்டிருந்த போது அவரது பழைய டயறிகளையும் ஆராய்ந்தோம்.அப்போது மகாகவி மாமாவின் மரணச் செய்தி கேட்டு அப்பா எழுதி இருந்த கவிதை ஒன்று எனக்குக் கிடைத்தது.அது பற்றி அம்மா உட்பட யாருக்குமே அது வரை தெரியாதிருந்தது.அந்தக் கவிதை இது தான்” - எழில் வேந்தன் -

இதயம் இருந்ததடா! எண்ணங்கள் பொங்கின
இதயம் இருந்துமென்ன ஏக்கம் பிறந்துமென்ன
இறக்கை இரண்டிருக்கவில்லையடா என்னிடத்தில்
இறக்கை இரண்டிருந்தால்...
எப்படியோ கண்டிருப்பேன்
இந் நேரம் வந்திருப்பேன் எப்படியும் கண்டிருப்பேன்

இதயம் இருந்ததடா!
இறக்கை இருக்கவில்லை

வானொலியில் ஓர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன்
ஊனுருகி, உள்ளம் உருகி, விழி பெருகி
நானழவும் நண்பர் நமரழவும் நாடழவும்
வானொலியில் ஓர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன்!

இதயம் இருந்ததடா
இறக்கை இருக்கவில்லை!

‘புள்ளி அளவிலொரு பூச்சி’மடிந்த கதை
சொல்லி அழுகின்ற சோக நிறை செய்தியல்ல!
அன்னியர்தம் ஆட்சி அருங் ‘கோடை’ வேக்காட்டின்
பின்னணியில்,இந்நாட்டு மன்னவர்கள் தம்முடைய
காதலும் பண்பும் கலையும் தமிழ் வாழ்வும்
சாதலைக் கண்டு சலிப்புற்ற செய்தியல்ல!

வானொலியில் ஓர் செய்தி
வந்தது நான் கேட்டிருந்தேன்.

முடி சூடா மூவேந்தர் முட்டுதலும் ஒளவை
அடி கொடுக்க அஞ்சி அழுகின்ற காட்சி
படியென்றால் மட்டும் படியார்; படுத்துகிறார் என்றுன்
பொடிகளைப் பற்றிய புதுச் செய்தி இல்லையது!

வானொலியில் ஓர் செய்தி
வந்தது நான் கேட்டிருந்தேன்

‘சேரன் பிறந்த செருக்கடா என்னுடய
பேரன்பா’ என்ற பெருமை மிகு செய்தியல்ல
‘நாளை கடிதம் எழுதுகிறேன் இங்கு புதுச்
சோழனும் தாயும் சுகம்’என்ற செய்தியல்ல.

உண்ட செயல் நின்ற உதிரம் உறைந்ததடா
கண்கள் துயரக் கனியைப் பிளிந்தன ஆ...
என்னவாம் அந்த இழவறையும் வானொலியில்
உண்மையா? உன்னை உலகம் இழந்ததுவா!

என்னருமை நண்பா இறுதியாய் உன் மனையில்
உன்னை நான் கண்டு உரையாடி உண்கையில்
தென்னிலங்கை போகிறேன் தேடியங்கும் வாருங்கள்
சொன்னாய்; அதிலிருந்த சூக்குமத்தை நானறியேன்

மூன்று திங்கள் ஆகவில்லை மூச்சு நின்றதென்கின்றார்
நானெந்த வாறிதனை நம்பிடுவேன் நண்பா ஓ....
ஏனிந்த வாறு எமை ஏமாற்றிப் போயினை யோ!
வானத்தன் ஆனான் மகாகவி என்றந்த
வானத் தொலியாகி வந்ததடா கேட்டிருந்தேன்.

பாண்டியனுக்கென்ன பகர்ந்தாய் இனியாளை
வேண்டும் வரையளவும் விட்டுப் பிரிந்தாயோ?
சேரன் ஒளைவை சோழனுக்கு செப்பியது தானெதுவோ?

வாரம் முடிவோ இவ் வையப் பெருவாழ்வு?

Tuesday, August 2, 2011

தபாலட்டைக் கவிதைகள்


கொழும்பு தமிழ் சங்கத்தில் இருந்து பிரசுரமாகும் ’ஓலை’ என்ற மாதாந்த மடல் ஒன்றை (ஜூன் 2003)காவலூர்.ராசதுரை ஐயாவிடம் சென்ற போது காணக்கிடைத்தது.வீட்டு உடையுடன் அவசரத்துக்கு ஓடிப் போய் புத்தகம் கேட்கிற அளவில் ஒரு கலைஞன் - அதுவும் வெளிநாட்டில்- இருக்கக் கிடைத்திருப்பது ஒர் அலாதியான ஆத்மானுபவம்.

பேச முடியாத நிலையும்; வயோதிபமும் தள்ளாட்டமும் இருந்த போதும்; முகத்தில் பூத்த புன் முறுவலும் புத்தகங்களை எடுத்துத் தரும் முக மலர்ச்சியும் என்னை மிகப் பெருமளவு நேரம் சஞ்சலத்துக்குள்ளாக்கின.

சென்ற நூற்றாண்டின் மனித இயல்பு!

மனைவியாரின் விசனங்களும் எந்தக் கலைஞர்களும் அவரை வந்து பார்த்தோ தொலைபேசியிலோ நலம் விசாரிப்பதில்லை என்ற ஆதங்கம் கலந்த மனத்தாங்கலும் 54 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்ததன் உண்மையான நேசத்தை எனக்கு உணர்த்துவதாயிருந்தது.

புலம் பெயர்ந்த நாட்டில் அது ஒரு தலைமுறையின் வாழ்வியல் அனுபவம்.

நான் சென்று பார்க்கவோ உதவவோ முடியாத குற்ற உணர்வும் வாழ்வியல் ஓட்டம் சொல்லும் இயலாமையும் இரட்டைக் கலாசாரத்துக்குள் சிக்கித் தவிக்கும் இரண்டாம் தலை முறையினரின் வாழ்வியல் அனுபவம்.

இரண்டும் ஒரு முறை சந்தித்து மீண்டன.

அதன் அதிர்வுகள் கவலையின் அலைகளாய்; இயலாமையின் அலைவுகளாய் சுற்றாடலைச் சுற்றிக் கொண்டிருக்கும்; இரு தலைமுறையிடமும். இருந்தது.

*** *** ***

அவரிடம் தான் இந்தச் சஞ்சிகையைக் காணக்கிடைத்தது.

அதில் அரிதாக இது வரை வெளிவந்திராத மகாகவியின் தபாலட்டைக் கவிதைகள் சிலவற்றைக் காணக்கிடைத்தது.அதிலிருந்ததை அப்படியே தருகிறேன்.

”தபாலட்டைகளில் சிறு சிறு கவிதைகளாகவே கடிதங்களை அனுப்புவதில் மகாகவி, முருகையன்,நீலாவாணன்,நுஃமான்,போன்றோர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளமை ஒரு சுவாரிஷமான செய்தியாகும்.தபால் அட்டைகளில் தான் எழுதி அனுப்பிய சிறு கவிதைகளை - சுவை மிக்க வெண்பாக்களை - மகாகவி நாட்குறிப்பு ஒன்றில் பிரதி பண்னி வைத்திருந்தார்.அந் நாட்குறிப்பில் இருந்து சில வெண்பாக்களை இங்கே தருகிறோம்.வெண்பாக்களோடு உள்ள குறிப்புக்களும் மகாகவியினுடயவை.” என்ற விபரங்களோடு தபாலட்டைக் கவிதைகளை அது பிரசுரித்திருக்கிறது.

அது ஒரு கால கட்டத்தில் ஈழத்துக் கலைஞரிடம் பூத்திருந்த அந்நியோன்னத்தையும் ஆத்மார்த்த அன்பையும் கூடச் சித்தரிப்பனவாக அவை இருக்கின்றன.

அவற்றில் சில கீழே.

1.சொற்கணக்குப் போட்டுச்
சுவை எடுத்துக் காட்டுகின்ற
அற்புதத்தைக் கண்டேன்
அலமந்தேன்! நிற்க
இறந்தாரையே ஏற்றுகின்ற
எங்களவர் நாட்டில்
அறந்தானோ நீ செய்த அன்பு?

(செ.கணேசலிங்கனுக்கு; 03.08.1955)

2.மெச்ச என்னாலும்
முடியாது! மெய்யாக
அச்சுக் கலைக்கோர்
அழியாத - உச்சி
அமைத்தாய்! அதன் அழகை
ஆரச் சுவைக்க
இமைக்காத கண்ணெனக்கு.

(வரதருக்கு; 19.07.1955)

பாட்டெழுதச் சொல்லிப்
படித்து விட்டுப் போற்றி அதை
ஏட்டில் அழகாய் அச்
சேற்றுவையே! - கேட்டுக் கொள்
என்னை எழுத்துத் துறையில்
இறக்கி விட்ட உன்னை
மறக்காதுலகு.

(அ.செ.முருகானந்தனுக்கு 26.07.1955)

3.ஊருறங்கும் வேளை
உறங்காமல் நாமிருந்தும்
சேருகிறாள் இல்லைச்
செருக்குடையாள்! - வரா அவ்
வெண்டாமரையாள்
விரைந்தாளோ தங்களிடம்?
கொண்டாடு நண்பா
குதித்து!

(நீலாவாணனுக்கு பெண் மகவு பிறந்தமைக்கு 15.08.1957)

(மகாகவிக்கு 3 ஆண்பிள்ளைகள் என்பதும்; சேரன்,சோழன்,பாண்டியன் என்பது அவர்களது பெயர் என்பதும்; மகளவைக்கு இனியாள், ஒளவை என்ற பெயர்கள் என்பதும் பலரும் அறிந்ததே)

4.பாட்டுப் படைக்கும்
பெரியோரை மக்களுக்குக்
காட்டி அவர் தம்
கருத்துகளை - ஊட்டும்
பணியில் மகிழ்வெய்தும்
பண்பாளர்க்கெங்கே
இணை சொல்ல ஏலும் எனக்கு!

(கனக.செந்திநாதனுக்கு 09.12.1958)

5.உள்ளதற்கும் மேலே
உயரப் புகழ்கின்ற
வள்ளல்! என் நன்றி;
வரக் கண்டேன் - பள்ளத்தில்
ஓடும் நீர் போல
ஒழுகும் அருங்கவிதை
பாடும் நீர் யாத்துள்ள பாட்டு.

(முருகையனுக்கு 06.05.1958)

6.தேன் தோண்டி உண்டு
திளைத்திடுக;பேரின்ப
வான் தேடி நும் வீட்டு
வாயிலிலே வந்தடைக;
தான் தோன்றிப் பாடும்
தமிழ் போல வாழ்க; இவை
நான் வேண்டுவன் இந் நாள்.

(சில்லையூர்.செல்வராசனின் திருமணத்திற்கு 09.01.1960)

*** *** *** *** ***