Saturday, March 13, 2010

அந்த மூன்று விடயங்கள்


அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் போனால் திரும்பி வராது.

1. நேரம்
2.சொன்ன சொல்
3. வாய்ப்பு.

அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் நாம் ஒரு போதும் இழந்து விடக் கூடாதது.

1.அமைதி
2.நம்பிக்கை
3. நேர்மை.

அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது.

1.அன்பு
2. தன்னம்பிக்கை
3.நண்பர்கள்.


அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் என்றும் நிரந்தரமில்லாதது.

1.கனவுகள்
2. வெற்றி
3.அதிஷ்டம்.


அந்த அழகான மூன்று விடயங்கள் மனிதனை எப்போதும் வடிவமைப்பவை.

1.விடா முயற்சி
2.உண்மையான ஆர்வம்
3.பொறுப்புணர்வு.


மனிதனை அழித்துவிடவல்ல மூன்று விடயங்கள் கீழ் கண்டவை.

1.மது
2.தற்பெருமை
3.கோபம்.

அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு முறை இழந்தால் மீண்டும் கட்டியெழுப்ப கடினமானவை

1.மரியாதை
2.நம்பிக்கை
3.நட்பு.


அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் என்றும் தோற்றுப் போகாதவை.

1.உண்மையான அன்பு
2.திடமான உறுதி
3.நம்பிக்கைகள்.

Monday, March 8, 2010

விடுமுறைக் காலம்


கடந்த 2 வாரங்கள் விடுமுறையில் நின்று விட்டு இதோ இன்று மீண்டும் வேலைக்குச் செல்ல ஆயத்தம்.தினந்தோறும் வேலைக்குப் போகும் போது எப்படா விடுமுறை வரும் என்று இருக்கும்.விடுமுறை வந்த பின் முதல் வாரம் நன்றாகவும் தான் போகும். பிறகுதான் பிரச்சினை ஆரம்பமாகும்.வேலையை, வேலைத் தலத்து நண்பர்களை நாளாந்தம் ஒரு வித லயத்தோடு போய்க்கொண்டிருந்த வாழ்க்கையோட்டத்தை மிஸ் பண்ணுவதாகத் தோன்ற ஆரம்பிக்கும்.

என்னுடய முதல் வாரம் பட்டியலிட்டு வைத்திருந்த முடிக்கப் படாத வேலைகளை செய்ததில் மிக விரைவாகப் போயிற்று.அடுத்த வாரம் முழுவதும் நாடு பூரா மழை என்று வானிலை அறிக்கை காட்டிய படி இருந்தது.அதனால் வீட்டிலேயே இருந்து உண்டு உறங்கி 3 கிலோ மேலதிகமாகப் போட்டாயிற்று.இருந்த பழைய புத்தகங்கள் சஞ்சிகைகள் எல்லாம் மீண்டும் ஒரு முறை தட்டிப் பார்த்தாயிற்று.கடந்த அந்த வாரம் இந்திய வாரம் என்று SBS 2 அறிவித்து திங்களில் இருந்து வெள்ளிவ்ரை 5 நாட்கள் இந்தியத் திரைப்படங்கள் போட்டார்கள். அவை, வோட்டர், தேவதாஸ், பரணீத், சலாம் நமஸ்தே, ஓம்சாந்தி ஓம் என்பவை.

வோட்டர் ஒரு காலகட்டத்து இந்திய விதவைச் சம்பிருதாயங்களை தோலுரித்துக் காட்டியது.அது சம்பிருதாயங்கள் போட்டிருந்த வேலிகளின் குரூரத் தன்மையை -ஆழமான வாழ்வின் சேதிகளைச் சொல்லிச் சென்றது.தேவதாஸ் ஐஸ்வர்யா ராய் ஐ - அப்பெண்ணின் அழகை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தது.அதுவும் கூட இறுதியில் அன்பை வெல்லும் மரபுகளின் வலிமையைச் சொல்லிச் சென்றது.பரணீத் சாதாரண இந்திய வாழ்வியல் சிக்கலைச் சித்தரித்துச் சென்றது.பின்னர் இடம் பெற்ற சலாம் நமஸ்தே மெல்போர்ன் நகரில் படமாக்கப் பட்டிருந்த அழகான பொழுது போக்குச் சித்திரம்.புன்னகையோடு தொடங்கி புன்னகையோடு படுக்கைக்குச் செல்லக் கூடிய படம். அதில் நடித்த பெண் மிக அழகாக தன் நடிப்பைச் செய்திருந்தார்.கூகுளில் போய் அந்தப் படத் தலைப்பைத் தட்டினால் படம் முழுவதையும் உடனடியாகவே பார்க்கும் வாய்ப்பு உள்ளது.நேரமும் விருப்பமும் இருந்தால் பாருங்கள். எந்த ஒரு பாரத்தையும் ஏற்றி வைக்காமல் மென்மையான கதையம்சமும் கொண்டு விளங்குகிறது அப்படம்.ஓம் சாந்தி ஓம் என்ற படம் சாருகான் நடித்தது.மறுபிறப்புச் சம்பந்தப் பட்டது.சற்று மசாலா கலந்திருக்கிறது என்பதால் சற்று இழுத்துக் கொண்டே போயிருந்தார்கள். அதனால் முழுவதுமாகப் பார்க்கப் பிடிக்கவில்லை.

ஆயிற்று எல்லாம் முடிந்து இன்று வேலைக்குப் புறப்படாக வேண்டும்.வழக்கத்துக்கு மாறாக மனதில் குதூகலம் நிரம்பி இருக்கிறது.வீட்டில் சும்மா இருப்பது எவ்வளவு கடினம் என்பதை கடந்த வாரம் உணர்த்திச் சென்றது ஒரு காரணமா அல்லது இண்டைக்கு ஒவ்வொருவருக்கும் என்ன ரோஸ்டர் என்பதை ஒவ்வொருவரையும் ஞாபகம் வைத்துச் சொல்லும் சில்லி,தாய்மையோடு புன்னகைக்கும் மரியா,வெள்ளிக் கிழமைகளின் கடசி நிமிடங்களில் என் ஞாயிற்றுக் கிழமை வேலையை நீ செய்கிறாயா என்று கண்ணில் நிறைய எதிர்பார்ப்புகளைச் சுமந்தபடி வரும் எல்சா,வேலையின் சுமை தெரியாமல் ஏதேனும் சுவாரிஸமாகப் பேசிய படியே வேலை செய்யும் ரூத்,ஏதேனும் தின்பண்டங்கள் செய்து கொண்டு மெளனமாக நான் இருக்கும் பொழுதுகளில் நீ நலம் தானே என்ற கரிசனையோடு தின்பண்டமும் கைக்குப் போடும் அமெரிக்கக் கிறீமும் தரும் மெள,வேலைக்குக் கள்ளமடிக்கும் மைக்கேல்,ஒவ்வொரு வருடமும் லீவே எடுக்காமல் ஓவர்டைம்மும் செய்து பாராட்டுப் பெறும் றே, சிக்கின் பேஸ்ட் வாங்கி வா எனக்கு இந்திய கறிவகைகள் பிடிக்கும் என்று சொல்லும் மிச்சேல்,அவரது இணைபிரியாச் சோடி கரன்,மிகப் பொறுமையாக கோபம் எதுவும் கொள்ளாமல் புன்னகையை எல்லோருக்கும் சமமாக வழங்கிக் கொண்டிருக்கும் கம்போடிய தூய பெளத்தன் லீஹான்,கிளீனிங் வேலை செய்யும் இந்திய கல்லூரி மாணவியை புகையிரத நிலையத்தருகில் இறக்கி விடும் போது அவள் சொல்லும் புன்னகையுடனான தாங்யூவில் மறந்து போகும் அவளின் வியர்வை மணம்,எல்லாவற்றுக்கும் மேலாக தன்னோடு வேலை செய்யும் பெண்களை ஒரு ராணியைப் போல் நடத்தும் அதே நேரம் 'எல்லாருக்கும் சொல்லுற பொய்யை எனக்குச் சொல்லாதே உண்மையா என்ன நடக்குது'என்று பொருத்தமான நேரம் நுட்பமாக ஆண்மாவைத் தொடும் கேள்விகளைக் கேட்கும் என் நண்பன் விக்ரர்,இவர்கள் எல்லோருடைய புன்னகைகளையும் "well come back" என்னும் சொல்லையும் கேட்கப் போகிறேன் என்பது காரணமா தெரியவில்லை.

என் வேலைத் தலம் பணம் என்பதைத் தாண்டி ஏதோ ஒரு பிணைப்பைக் கொண்டிருக்கிறது.அதனை இந்த விடுமுறைக் காலம் உணர்த்தியிருக்கிறது.மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவர்கள் எல்லோருக்கும் பிடித்தமான கேக் அவனில் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.

சின்னச் சின்னச் சந்தோஷங்களால் நிறைந்திருக்கிறதோ வாழ்வு?

Thursday, March 4, 2010

கொஞ்சம் சிரிங்களேன்


ஒரு லைட் ரீடிங்குக்காக கொண்டு செல்ல ஆனந்த விகடன் நல்லதொரு வார ஏடு. மிக இயல்பாக வந்து விழும் நகச்சுவைகள் களைத்திருக்கிற / கனத்திருக்கிற மனதை நொடிப் பொழுதில் இலகுவாக்கி விடும்.அத்தகைய வல்லமை அச்சிறு சஞ்சிகைக்கு நிறையவே உண்டு.வாராவாரம் எங்கிருந்து தான் சிறு சிறு துணுக்குகளாக அவற்றை எல்லாம் அள்ளி வருகிறார்களோ தெரியவில்லை.

இது நான் ரசித்துச் சிரித்தவை.நீங்களும் கொஞ்சம் சிரிங்களேன்!


*இன்னிக்கு டாக்டர் லீவுஅதனால உங்களுக்கு நாளைக்குத் தான் ஆப்பிரேசன்.

நீங்களே எனக்கு ஆப்பிரேசன் பண்ணிடுங்களேன் நேர்ஸ்.போற உசிரு உங்கட கையால போனதா இருக்கட்டுமே!


*ஒன்றே செய்..நன்றே செய்...அதையும் இன்றே செய்...னு கூட்டத்தில யாரோ சொன்னதும் தலைவர் ஏன் டென்ஷனாயிட்டாரு?

தேர்தலில் தோற்றால் அரசியலுக்கு முழுக்குப் போடுவேன்னு தலைவர் சொன்னப்ப தான் அப்பிடிச் சொன்னாங்களாம்.


*எதிர்கட்சித் தலைவர் உருவ பொம்மையை எரிச்சீங்களே..அதுக்காக உங்களைக் கைது பண்ணுறோம்.

நீங்க கூடத்தான் அதை அணைக்க அதும் மேல தண்ணி ஊத்தி மிதி மிதின்னு மிதிச்சீங்களே!விடுங்க சார்.


* மாடிப் வீட்டுப் பொண்ணைக் காதலிச்சியே என்னாச்சு?
படிப்படியா மறக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.


* லவ் பண்ணினாலே இது ஒரு கஸ்டம்.
என்ன?
உனக்கு மெரேஜ் ஆகுற வரைக்கும் நான் டென்ஷனிலேயே இருக்கணும்.


* உங்களப் பாத்தா என்னோட மூணாவது மனைவி மாதிரியே தெரியுது.
ஐயோ உங்களுக்கு எத்தன மனைவி?
இரண்டு!


* பேஷண்ட் வயித்துக்குக் குறுக்கே ஏன் றிபன் கட்டியிருக்கு?
டாக்டருக்கு இது முதல் ஆபிரேசனாம்.


* உங்களுக்காக என்னைப் பெத்து வளர்த்த அப்பா அம்மாவையே தூக்கி எறியத் துணிஞ்சிட்டேங்க...

அடிப் பாவி! அப்புறம் உனக்கு யாரு மாப்பிள பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க?


* டாலிங்!எங்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்னோட அறிவா..அழகா?

இப்படி எல்லாம் நீ கமெடியா பேசுறா பாரு, இதான் உங்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது.


* இப்ப விருட்டுன்னு கிளம்பிப் போன பஸ்ஸில யாரும் டிக்கட் எடுக்க வேண்டியதில்ல.

ஏன்?

கண்டாக்டர் நான் தான். இங்கல்ல நிக்கிறன்.