Thursday, April 23, 2009

திவ்யாவின் மேசையிலிருந்து....

ஒரு சிந்தனை

சில நாட்களின் முன் என் சகோதரியின் வீட்டுக்குப் போயிருந்தேன்.அவவினது மகளின் (13 வயது) அறைக்கு என் சகோதரி சொன்ன ஏதோ ஒரு காரணம் நிமித்தம் போக வேண்டி இருந்தது.சாத்தப் பட்டிருந்த அவரது அறைக் கதவில் 'இது இளவரசியினது அறை; வரும் போது கதவைத் தட்டி அனுமதி கேட்கவும்'என்ற இள ஊதா நிறத்தில் எழுதப் பட்ட வாசகம் தென்பட்டது.நான் சென்றிருந்த நேரம் அவர் இருக்க வில்லை.அதனால் தைரியமாகக் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தேன்.

அறை மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது.புத்தகங்கள் அதனதன் இடங்களில் அமர்ந்திருந்தன.படுக்கை விரிப்புகள் படுத்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் விரிப்புகள் ஒழுங்காக விரிக்கப் பட்டிருந்தன.மேற்சுவரில் இள நீல நிறத்தில் முகில் கூட்டங்களும் வெண்ணிலாப் படமும் ஒட்டப் பட்டிருந்தது.மேசையோடு போடப் பட்டிருந்த கண்ணாடி அலுமாரியில் அவர் பெற்றுக் கொண்ட பாடசாலைப் பரிசுகள் வரிசைக் கிரமமாக அடுக்கப் பட்டிருந்தன.அருகோடு இருந்த அவரது அலுமாரியிலும், பக்கச் சுவர்களிலும் அவரது நண்பர்களோடு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெற்றோரோடு சுற்றுலா போன போதும் எடுத்த புகைப்படங்களும் ஒட்டப் பட்டிருந்தன.

சட்டென்று வேறொரு உலகம் கண்ணில் பட்டது.முற்றிலும் வேறானதொரு உலகமாக அது இருந்தது.அவர் உருவாக்கியிருந்த உலகமது.

தற்செயலாகத் திரும்பிய போது மேசையில் குறையோடு விடப்பட்டிருந்த கொப்பி ஒன்று கண்ணில் பட்டது. அது அவரது சித்திரக் கொப்பி.ஆர்வ மிகுதியால் திறந்து பார்த்தேன். முதல் பக்கம் திவ்யா என்ற தலைப்பில் தன்னைத் தான் வரைந்திருந்தார்.அதன் கீழ் ஒரு வாசகம் காணப் பட்டது.அது,

"YOU ARE IN THIS WORLD TO SING YOUR OWN SONG"

அதன் பின் அங்கு நிற்கத் தோன்றவில்லை எனக்கு.

Wednesday, April 15, 2009

இலக்கியத்தில் விருந்தோம்பல்


இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

என்கிறது திருக்குறள்.செல் விருந்தினை ஓம்பிவிட்டு வரு விருந்தினைப் பார்த்திருப்பவருக்கு நல்விருந்து வானவர்களிடமிருந்து வர இருக்கிறது என்றும் மேலும் கூறிச் செல்கிறது குறள்.

நாட்டுக்கு நாடு; இடத்துக்கிடம்; வீட்டுக்கு வீடு; பண்பாட்டுக்குப் பண்பாடு உபசரிக்கும் முறைகளும் விருந்துகளும் வேறுபாடுடயன.தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பும் முறை பற்றி ஒரு பாடல் உண்டு.அது விருந்தினை அளிப்பவருக்கு இருக்க வேண்டிய ஒன்பது பண்புகள் பற்றிக் கூறுகின்றது.

'விருந்தின னாக ஒருவன் வந்து எதிரின்
வியத்த;நன் மொழி இனிது உரைத்தல்;
திருந்துற நோக்கல்;'வருக'என உரைத்தல்;
எழுதல்;முன் மகிழ்வன செப்பல்;
பொருந்துமற்று அவன்தன் அருகுற இருத்தல்;
'போம்' எனில் பின்செல்வ தாதல்;
பரிந்துநன் முகமன் வழங்கல்;இவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே!'

ஒருவர் விருந்தினராக நம் எதிரில் வந்தால்

*புது மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும்
*உபசாரமான இனிய சொற்களைப் பேச வேண்டும்
*அன்பு கனிந்த முகத்தோடு அவரைப் பார்க்க வேண்டும்
*வாருங்கள் என்று வரவேற்க வேண்டும்
*இருக்கையில் இருந்தால் இழுந்து வரவேற்க வேண்டும்
*மகிழ்ச்சியான சொற்களைப் பேச வேண்டும்
*விருந்தினருக்குத் தக்க முறையில் இருக்க வேண்டிய நெருக்கத்தில் இருக்க வேண்டும்
*அவர்கள் விடை பெறும் போது அவர்கலோடுபோக வேண்டும்
*அவர்களுக்கு வெற்றிலை பாக்கு சிற்றுண்டி என்பன கொடுத்து உபசரிக்க வேண்டும்

என்று அந்த 9 பண்புகளையும் பாடல் வடிவில் கூறுகிறது தமிழ் இலக்கியம்.

மேலும், ஒளவையார் சற்றுக் காட்டமாக விருந்தினர் ஒரு வீட்டுக்கு வருவதும் உபசரிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இப்பாடலில் சற்று இடித்தே உரைக்கிறார்,

'மாடில்லான் வாழ்வு,மதியில்லான் வாணிப, நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - சூடும்
குருவில்லா வித்தை,குணமில்லாப் பெண்டு,
விருந்தில்லா வீடு விழல்'

என்கிறார்.செல்வமில்லாதவனுடய வாழ்க்கையும் மதிநுட்பமில்லாதவனுடய வாணிபமும் நல்ல நாடில்லாதவனுடய செங்கோலும் நல்ல ஆசிரியனில்லாத கல்வியும் நல்ல குணமில்லாத பெண்களும் விருந்தினரில்லாத வீடும் வீண் -பயனற்றது என்கிறார் அவர்.

அக்காலத்தில் சில குடும்பத்தினர் சிறப்பாக பெண்கள் விருந்தினரைச் சிறப்பாகப் போற்ற வில்லைப் போலும். அது பற்றியும் ஒளவையார் சில இடங்களில் பாடியுள்ளார்.

அன்பில்லாமல் இட்ட அமுதினை உண்ணும் போது ஏற்பட்ட வலியினை அவர் பாடுகிறார் இப்படி,

காணக்கண் கூசுதே! கையெடுக்க நாணுதே!
மாணொக்க வாய் திறக்க மாட்டாதே!- வீணுக்கென்
என்பெல் லாம்பற்றி எரிகிறது;ஐயையோ!
அன்பிலாள் இட்ட அமுது!

விருந்தினரை உபசரிக்காத குடும்பத்துப் பெண்டிரைப் பற்றியும் அவர் பல இடங்களில் சாடியுள்ளார்.'கூறாமல் சன்னியாசம் கொள்' என்றும் 'நெருப்பினிலே வீழ்ந்திடுதல் நேர்' என்றும் அவ்வாறான குடும்பத்துப் பெண்டிரைக் கொண்ட கணவர்மாருக்கு அவர் புத்திமதியும் கூறுகிறார்.பின்வரும் பாடல் அது போன்ற ஒன்று தான்.குணக் கேடு கொண்ட மனைவியைக் கொண்ட கணவன் படும் பாட்டை அவர் இப்படி விபரிக்கிறார்,

'இருந்து முகந்திருத்தி,ஈரோடு பேன்வாங்கி,
'விருந்து வந்ததென்று' விளம்ப,- வருந்தி
ஆடினாள்;பாடினாள்;ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்'

ஆனால்,மிகக் கோபக் காரரான காளமேகம் சற்று வேடிக்கையும் நகைச்சுவயும் ததும்ப ஒரு பாடல் பாடுகிறார்.நல்ல வெய்யில் நேரம்! தொண்டை எல்லாம் வரண்ட தாகம்! இடைச்சி ஒருத்தி மோரோ மோர் என்று கூவியவாறு மோர் கொண்டு போகிறாள்.வாங்கி அருந்திப் பார்க்கிறார் காள மேகம்.அதுவோ மிக தண்ணீர் மிக்கதாகப் படுகிறது அவருக்கு.பெண் கையால் கிட்டிய மோர் அல்லவா! வைய மனம் வரவில்லை;நகைச்சுவையோடு பாடல் பிறக்கிறது அவருக்கு, இப்படி;

'கார்' என்று பேர் படைத்தாய்
ககனத்து உறும்போது
'நீர்' என்று பேர் படைத்தாய்
கொடுந்தரையில் வந்ததற்பின்
வார் ஒன்று மென்முலையார்
ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
'மோர்' என்று பேர் படைத்தாய்
முப்பேறும் பெற்றாயே'

மோரே! நீ வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயரைக் கொண்டிருந்தாய்.பரந்த மண்ணுலகைச் சேர்ந்தவுடன் நீர் என்று பெயர் கொண்டாய். கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய இடைச்சியர் கையில் சேர்ந்தவுடன் மோர் என்ற பெயரை பெற்றுக் கொண்டாய்.இவ்வாறு கார்,நீர், மோர் என்று மூன்று பெயரையும் பெற்றதால் முப்பேறும் பெற்றுவிட்டாய்.அதிகளவு நீர் கலக்கப்பட்ட மோர் என்பதை சிறிய எள்ளலும் நகைச்சுவையும் இழையோடப் பாடியிருக்கிறார் காள மேகம்.

'மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து'

அல்லவா?

சொற்சிலம்ப விளையாட்டு

தமிழ் இலக்கியத்தில் சிலேடைகள், சொற்சிலம்பங்கள்,விடுகதைகள் எனப் பல விளையாட்டுக்கள் உண்டு.இங்கு சில விளையாட்டுக்கள் உள்ளன. விடைகளைக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

விளையாட்டு ஒன்று;

இப்பாடல் அழகிய சொக்கநாதபிள்ளை பாடியது.

"முற்பாதி போய்விட்டால், இருட்டே ஆகும்;
முன் எழுத்து இல் லாவிட்டால், பெண்ணே யாகும்;
பிற்பாதி போய்விட்டால், ஏவற் சொல்லலாம்;
பிற்பாதி யுடன் முன் எழுத்து இருந்தால், மேகம்;
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி;
தொடர் இரண்டாம் எழுத்து,மா தத்தில் ஒன்றாம்;
பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா!
புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!

என்ன சொல்லென்று கண்டுபிடிக்க முடிகிறதா?


விளையாட்டு இரண்டு,

இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர்.

முன்னொரு ஊரின் பேராம்;முன்னெழுத்து இல்லாவிட்டால்
நன்னகர் மன்னர் பேராம்;நடுஎழுத்து இல்லாவிட்டால்
கன்னமா மிருகத்தின் பேர்;கடைஎழுத் தில்லாவிட்டால்
உன்னிய தேனின் பேராம்;ஊரின் பேர் விளம்புவீரே!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

விளையாட்டு மூன்று;

இப்பாடலைப் பாடியவர் கொட்டாம்பட்டிக் கருப்பையா பாவலர்.

'தேங்குழலப் பம்தோசை யித்தியமா உடலில்
திகழ்வடையப் பழம்பணியா ரங்கள்எலா நீத்தே
ஓங்கியழு தலட்டுப்பல காரமுழ அனைமார்க்கு
ஒடுங்கிப்பா யசநிகர்த்த உற்றார்க்கு மஞ்சி
வீங்கிபக்கோ டாமுலையில் பூந்தினவு கொண்டுன்
விரகத்தில் அதிரசமுற் றன்பிட்டு வந்தாள்
தாங்குதனின் கடன் செந்தில் வேலரசே அவணின்
றன்பாலா அடைதலெழில் தருமுறுக்குத் தானே!'

இதில் 12 பலகார வகைகள் சொல்லப் பட்டிருக்கின்றன.அதனூடாக இன்னொரு கருத்தும் பொதிந்திருக்கிறது.முடிந்தால் இரண்டு பொருள்களையும் பின்னூட்டத்தில் தாருங்கள்.

போவதற்கு முன் ஒரு பாடல்,

வெள்ளரிக் காயா? விரும்பும்அவ ரைக்காயா?
உள்ளமிள காயா? ஒருபேச் சுரைக்காயா?

நயம்;

ஒரு பெண்ணைப் பார்த்து நீ உள்ளமிளக மாட்டாயா? ஒரு பேச்சுரைக்க மாட்டாயா? என்பதைப் புலவர் பா நயம் தோன்ற வெள்ளரிக்காய்,அவரைக்காய், மிளகாய்,பேச்சுரைக்காய் முதலிய பெயர்களைக் கொண்டு இப் பாடலைப் பாடியுள்ளார்.பாடிய புலவர்,அழகிய சொக்கநாதபிள்ளை.

Thursday, April 9, 2009

வெள்ளந்தி உள்ளங்கள்

கடந்த இரண்டு வாரங்களில் கிடைத்த சில சொற்ப நிமிடங்களுக்குள் நட்பு வீடுகளை எட்டிப் பார்த்தேன். அகநாழிகை தன் மகளைப் பற்றிய அழகிய பதிவொன்று போட்டிருந்தார்.அவருக்கு 'நீங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்கள் வாசு'என்றுஒரு பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்து விட்டு இரண்டு நாட்களின் பின் மீண்டும் திறந்தால் அந்த அழகிய பதிவு எடுக்கப் பட்டு மன்னிப்புக் கேட்கப் பட்டிருந்தது.மிகுந்த ஏமாற்றமாகப் போய்விட்டது.ஆனாலும் அந்த அழகிய சுட்டிச் சிறுமி இடம் மாறி இப்போது மனதுக்குள் வந்துவிட்டாள்.

இருந்த போதும்,அவருடய பதிவு குழந்தைகள் பற்றிய என் எண்ணப் பதிவுகளை மீண்டும் கிளறி விட்டது.சிறியதாகவேனும் அது பற்றி ஒரு பதிவு இன்று போட வேண்டும் என்று நினைத்தவாறே வந்தால் 'மழை' வலைப்பூ சகோதரியும் அவ்வாறு ஒரு பதிவு போட்டிருக்கிறார்.சரி, இப்போது குழந்தைகளின் பூங்காவனத்தில் மழை போலும்.

முந்தய என் குழந்தைகள் பற்றிய பதிவில் சொல்ல மறந்த இப்போது அகநாழிகையால் ஞாபகத்துக்கு வந்த என் வட இந்தியத் தோழி சொன்ன கதை இது.தன் 5 வயது மகன் வீட்டில் மகாபாரதம் தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருந்தாராம்.அதில் குந்திதேவி சூரிய பகவானிடம் குழந்தையை வரமாகப் பெற்ற காட்சி நடந்து கொண்டிருந்ததாம்.அப்போது அவரது தந்தை,'மகனே நீ வளர்ந்து எங்களைப் பார்த்துக் கொள்வாயா?' என்று கேட்டாராம்.மகன் உடனே ஆம் எனப் பதிலளித்துவிட்டு சற்று தீவிரமாக யோசித்து விட்டு சொன்னாராம்,'அப்பா,உங்களை என்னால் பார்க்கமுடியுமோ தெரியாது, ஏனென்றால் அப்போது நான் சூரியனைக் குப்பிட்டு எனக்குச் சொந்தமாகப் பல குழந்தைகள் இருக்கக் கூடும்.அப்படி என்றால் நான் அவர்களைத் தானே முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று உள்ளங்கைகள் இரண்டையும் முன்னால் விரித்த படி மிகவும் தீவிர பாவனையோடு சொன்னாராம்.

ஆஹா! 'வெள்ளந்தி மனம்' என்பது இதைத் தானோ!

இந்த ஆண் குழந்தையின் தந்தை விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராம். அது போல் தன் மகனும் விளையாட்டில் ஆர்வமுள்ளவனாக இல்லையே என்பது அத் தந்தையின் கவலை.அதனால் குழந்தையின் தாயார் மகனுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஊட்டும் விதமாகக் கதைகள் சொல்வதும் விளையாட்டிடங்களுக்கு அழைத்துச் செல்வதுமுண்டாம்.5 வயதில் ஒரு நாள் பாடசாலையில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியோடு வந்து ' அம்மா, நான் இன்று விளையாட்டில் இரண்டாவதாக வந்தேன்' என்று மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவித்தாராம்.தாய்க்கோ மிகுந்த மனமகிழ்ச்சி;மனநிறைவு;பெருமை.மகனை மிகவும் உற்சாகப் படுத்தி நல்லது மகனே அப்படித்தான் இருக்க வேண்டும். 'அடுத்தமுறை இன்னும் நன்றாக முயன்றாயானால் முதலாம் இடத்தை நீ பிடித்து விடுவாய்' என்று பல வழிகளிலும் உற்சாகப் படுத்தி, குழந்தையின் தந்தை வீட்டுக்கு வந்த பின், மகன் விளையாட்டில் இரண்டாவதாக வந்த விடயத்தைப் பெருமையாகக் கூறினாராம். உடனே தந்தை மகனிடம் 'எத்தனை பேர் ஓடினீர்கள்' என்று கேட்டாராம்.உடனே மகன் ஒரு தயக்கமுமின்றிப் பதிலளித்தானாம்,'இரண்டு பேர் அப்பா.':)

முன்னொரு காலம்,1995ம் ஆண்டு,ஒக்ரோபர் மாதம் என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வடமராட்சிப் பகுதிக்கு முழு யாழ்ப்பாணமுமே வந்திருந்தது. அங்கு என் தூரத்து உறவினர்களுடய வீட்டில் நான் 3 நாட்கள் தங்கியிருக்க நேர்ந்தது.அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள்.இரவு வேளைகளில் தூரத்தே ஷெல் வீழ்ந்து வெடிக்கும் ஓசை அடிக்கடி கேட்கும்.நாம் இரவு உணவின் பின் பின்கட்டில் உட்கார்ந்து நாட்டு நிலைமைகள்,மக்களின் இறப்புகள், இனப்பூசல்கள்,பிள்ளகளின் எதிர்காலம் என்று பலதும் பத்தும் கதைப்போம். பிள்ளகளும் இதனைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு கதைத்துக் கொண்டிருந்த ஒரு நாள் வெடிச் சத்தங்கள் மிக அருகாமையில் கேட்கத் தொடங்கின.அவர்கள் எங்கும் போவதில்லை என்ற தீர்மானத்திலிருந்தார்கள்.அதனால் தந்தை தன் மூத்த மகனிடம்,'தற்சமயம் நாங்கள் இறக்க நேர்ந்தால் நீ எங்களுக்கு ஒன்றும் செய்யத்தேவை இல்லை, ஒரு சவப் பெட்டி வாங்கி எங்களை அதில் போட்டு எரித்து விட்டால் போதும்' என்று சொன்னார்.மகன் எதுவும் பேசவில்லை.மறு நாள் காலை நான் புறப்பட ஆயத்தமான போது மீண்டும் ஒரு முயற்சியாக அவர்களை என்னோடு வந்து விடுமாறு கேட்டேன்.அவர்களுடய முடிவில் மாற்றம் இருக்கவில்லை.அப்போது மகன் சொன்னான்.'அப்பா, நாங்கள் முதலிலேயே 2 சவப் பெட்டி வாங்கி வைத்து விட்டால் நல்லது.அந்த நேரத்தில் நாம் அதற்காக இந்த வெடிச்சத்தத்திற்குள் ஓடித்திரிய வேண்டியதில்லை அல்லாவா? நாம் இப்போதே அவற்றை வாங்கி வைத்து விடுவோமா?' என்று கேட்டான். இறைவனின் திருவருளால் அவர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்.ஆனால் இந்த நிகழ்ச்சியை ஏனோ என்னால் மறக்க முடியவில்லை.


சில வருடங்களுக்கு முன் Reader's Digest ல் என்று நினைக்கிறேன்.(நன்றாக நினைவில்லை)வாசித்த ஒரு தாயாரின் அனுபவக் குறிப்பு இது.தன் மகள் 3,4 வயதிருக்குமாம்.மலைப் பாங்கான ஒரு இடத்தில் அவர்களது வீடு அமைந்திருந்ததாம்.அவரது மகள் 3,4 வீடுகள் தள்ளி இருக்கும் வீட்டுக்குச் சென்று அங்குள்ள அவரது வயதை ஒத்த சினேகிதர்களோடு விளயாடுவது வழக்கமாம். ஒரு நாள் மாலை வழமை போல் அவர் விளையாடச் சென்றிருந்தாராம்.திடீரென மழை மேகங்கள் கூடி இருள் சூழ்ந்து கொண்டனவாம்.இடியும் மின்னலும் தோன்ற ஆரம்பித்து விட்டனவாம்.குளிர் காற்றும் கடும் இடியும் மின்னலும் சட்டென்று சூழ்ந்த இருளும் தாயாருக்கு பதட்டத்தை ஏற்படுத்த பிள்ளையைப் போய் கூட்டி வர வேண்டும் என்ற உந்தலில் அவசர அவசரமாக வீதிக்கு வந்தாராம். தூரத்தில் மகள் வருவதும் மின்னல் ஏற்படுகின்ற தருணங்களில் உடனடியாக நின்று புன்னகை பூத்து விட்டு மின்னல் நின்றபின் நடந்து வந்தாராம். ஒவ்வொருமுறை மின்னலுக்கும் அக்குழந்தை அதையே செய்தவாறு பயமிலாமல் வெகுஜோராக நடந்து வந்தாராம்.ஓடிச் சென்று பிள்ளையை அணைத்தவாறு 'ஏன் மகளே,பயமில்லையா உனக்கு மின்னல் மின்னுகின்ற போதிலெல்லாம் நின்று சிரித்தவாறு வருகிறாயே, ஏன்?' என்று கேட்டாராம்.அதற்கு மகள் சொன்னாளாம்,'ஆம் அம்மா நான் நின்று சிரித்து விட்டுத் தான் வந்தேன். கடவுள் photo எடுக்கும் போது நான் அழகாகச் சிரிக்கத்தானே வேண்டும்.' என்றாளாம்.(மின்னல் பிள்ளைக்கு கடவுள் எடுக்கும் photo வாகத் தெரிந்திருக்கிறது.)என்னே அழகு! குழந்தைகள் உலகு!!

2 மாதங்களின் முன்னால் இங்கு நடந்த சம்பவம் ஒன்று. நான் வசிக்கும் தொடர் மாடிக் குடியிருப்பில் ஒரு தமிழ் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.அவர்களுக்கு 5 வயதிலும் 1+ வயதிலும் குழந்தைகள் உள்ளன.அவர்கள் வேலை நிமித்தம் கிராமப் புறம் ஒன்றுக்கு மாற்றலாகி விட்டார்கள்.வார இறுதிகளில் அவர்களோடு தொலை பேசியில் நாம் கதைப்பதுண்டு.குறிப்பாக மூத்த மகள் தாரணி எங்கள் எல்லோரது உள்ளத்தையும் கவர்ந்தவர்.ஒரு முறை கதைக்கும் போது 'எப்போது சிட்னிக்கு வருகிறீர்கள் தாரணி' என்று கேட்டேன்.அவ சொன்னா, நான் கட்டாயம் ஒருமுறை வரத்தான் வேண்டும் யசோ அன்ரி.ஏனென்றால் நான் வரும் போது என் வீட்டை நன்றாகப் பார்த்து விட்டு வந்தேன். ஆனால் கராஜ் இனைப் பார்க்க மறந்து விட்டேன். நான் வந்து ஒருமுறை அதனைப் பார்த்து விட்டுப் போக வேண்டும்.'என்றார்.

2 நாட்களின் முன் என் வீட்டில் நடந்த ஒரு சம்பவம்.ஒரு குடும்பக் கொண்டாட்டம் ஒன்றுக்காக என் சகோதரி சுவிஸ் நாட்டில் இருந்து பிள்ளகளை கல்வி நிமித்தம் அங்கு விட்டு விட்டு 2 வாரத்திற்கு வந்திருந்தார்.11 வயதும் 6 வயதும் நிரம்பப் பெற்ற அவர்களுக்குக் காலையும் மாலையும் தாயாரோடு பேசுவதற்கும் கேட்பதற்கும் நிறைய விடயங்கள் இருக்கும்.மணிக் கணக்காகவும் அது நீளும்.இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னாலும் இவ்வாறு தான் பேச ஆரம்பித்தார்கள். நாம் வெளியே செல்வதற்கு ஆயத்தப் பட்டிருந்தோம். அதனால் மகளிடம் என் சகோதரி சொன்னார்,'மகள் நான் land phone ல் இருந்து பேசுகிறேன். காசு நிறைய விரயமாகிறது.நான் பிறகு கதைக்கிறேன்' என்று சொல்ல, 'சரி அம்மா அப்ப நீங்கள் வையுங்கோ' என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்கள்.மாலையில் அவர்கள் எடுத்தார்கள், 6 வயது மகள் சகோதரியிடம் சொன்னாள்,'அம்மா, நீங்கள் காசில்லை என்று கவலைப் படாதைங்கோ.என்னிடம் நிறையக் காசிருக்கிறது அதனை அழகாக வண்ணக் காகிதத்தில் சுற்றி றிபன் எல்லாம் கட்டி நான் அதனை airportக்கு நீங்கள் வரும் போது கொண்டு வருகிறேன்.அது மிகவும் பாரமாக இருக்கும்' என்று சொன்னாளாம்.(சில்லறைக் காசுகள் என்பதால்)

பரிசுத்தமான இந்த குழந்தை மலர்கள் எல்லாம் உலகத்தின் உன்னதங்களின்றி வேறென்ன!

கடவுள் தந்த அழகிய வாழ்வு........