காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அது தன் கணக்கை சற்றும் பிசகாமல் மெளனமாகச் செய்த படி இருக்கிறது.உயிருள்ள உயிரற்ற என்ற பாகுபாடின்றி அது எல்லார் மேலும் எல்லாவற்றின் மேலும் தன் கோலங்களை படரவிட்டபடி நகர்கிறது.மரங்கள் முதிர்ந்த இலைகளை உதிர்க்கின்றன.சிறியவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள்.இன்று புதிதாய் முளைத்த கட்டிடங்கள் நாளை பழையவை ஆகின்றன.அனுபவங்கள் நம்மைச் செதுக்க நாமும் உருமாறியபடி இருக்கிறோம். நம் வாழ்க்கைப் பயணமும் நகர்ந்த படி இருக்கிறது.
ஒவ்வொரு மனித வாழ்வும் அனுபவங்களின் தொகுப்பு.அனுபவம் செதுக்கிய சிலைகள்.அதற்கூடே தவழ்ந்து,நடந்து,விழுந்து,ஓடி,பாய்ந்து,வருகிறது அனுபவம் தரும் வாழ்வு.ஒரு முறை இயக்குனர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப் பட்டது. வினா ’எது அழகு?’ அதற்கு அவர் சொன்ன விடை, ’வயது முதிர்ந்த ஒருவர் குழந்தையைப் போல சிரிக்க முடிந்தால் அந்த சிரிப்பின் ஒளி தான் அழகு’.அது கசப்பான அனுபவம் எதுவும் தொட்டு விடாத சிரிப்பல்லவா?
ஒரு விடயத்தை வைத்து ஒருவரை மதிப்பிட்டு விடும் பண்பு நம்மிடம் உண்டு.ஏற்கனவே நம்மிடம் சில அளவுகோல்கள் இருக்கும்.இதனைச் சமூகம் தந்ததா? பண்பாடு தந்ததா?வாழ்க்கை முறை கற்றுத் தந்ததா? சமயம் ஊட்டியதா? எதுவென்று தெரியவில்லை.நல்ல மகிழ்ச்சியாகப் இயல்பாகப் பழகுவார்கள்.கதை மேலும் பெருத்து பிள்ளைகள் எத்தனை என்பதில் சம்பாசனை வந்து நிற்கும்.’பிள்ளை இல்லை’ என்றால் அதற்குப் பிறகு அவர்கள் சொல்லும் ஓ.. வில் பல கருத்து தொனிக்கும்.சம்பாசனையின் போக்கு மாறும். அது போலவே ஒருவர் விவாக ரத்தானவர் என்றறியும் போதும் அங்கு வரும் ஓ... வும் அதன் பின்பான சம்பாசனையும் இன்னொரு விதமாகும்.தனியாக ஒருவர் இருக்கிறார் என்றால் அதற்கு வரும் ஓ.. இன்னொரு விதமாகும். இப்படிப் பல.ஆனால் மேலைத் தேயத்தவர்களிடம் இத்தகைய பண்பு இருப்பதில்லை.
அது போல ஒரு ஸ்ரியோ ரைப் தொலைக் காட்சி பார்ப்பதற்கும் இருக்கிறது.சிட்னியின் தொலைக்காட்சி சேவையில் நான் விரும்பிப் பார்க்கும் சணல்கள் ABC,SBS போன்றவை. இவ்வாறு சொன்னவுடன் பலர் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். ‘ஓ..நீ ’அந்த’ ரைப்பா என்ற கேள்வி கண்ணில் மின்ன என்னை விட்டு விலகுவார்கள். காரணம் பின்னிரவு வேளைகளில் அதில் ஒளிபரப்பாகும் சர்வதேச திரைப்படங்கள்.அதில் வரும் சில செக்ஸ் காட்சிகள். அவற்றைத் தாண்டி பல தமிழர்களால் திரைப்படங்களை ரசிக்க முடிவதில்லை.அவர்கள் அதிலேயே மிகவும் தடங்கல் பட்டு விடுகிறார்கள்.உண்மையில் அதில் வரும் திரைப்படங்களின் கருப் பொருள்,நடிப்பு,தரம்,எல்லாக் கோடுகளையும் தடைகளையும் தாண்டிய கலா சுதந்திரம்,சொல்லும் முறை.. இவற்றை எல்லாம் நம்முடய சினிமா பெற ஒரு சந்ததிக் காலம் போதுமோ தெரியாது.அங்கு சினிமாவின் தரம் அத்தனை உயரத்தில் இருக்கிறது.
சரி, ஏனைய தொலைக்காட்சி சேவைகளான 7,9,10 போன்றவை எதைக் காட்டுகின்றன என்றால் அவை அமெரிக்காவைக் பெரும்பாலும் கொப்பியடிக்கின்றன.கனவுலகில் மக்களை வைத்திருக்கின்றன.பொருள் நுகர்வோரின் வர்த்தக மையமாகத் தொலைக்காட்சி நிலயங்கள் மாறி வருகிறன.(60,70% என்று சொல்லலாம்)அவை ஒரு விதமான மாய உலகில் அவர்களை வைத்திருக்கின்றன.அதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.
சில வேளை விரும்பியோ விரும்பாமலோ இந்த வர்த்தக சேவைகளைப் பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கேற்படும்.அது தப்பித் தவறி ஒரு அமெரிக்க நிகழ்ச்சியாக இருந்தால் அதைப் பார்ப்பதற்கு எனக்கிருக்கிற பொறுமை எவ்வளவு என்பதைப் பரிசோதிக்கும் சோதனைக் களமாக அதைப் பயன் படுத்திக் கொள்வேன்.
அதில் நடிக்கும் பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி அவர்கள் தம் வயதை மறைக்க போடும் முக ஒப்பனைகள் - இளமையாகத் தம்மைக் காட்டிக் கொள்ள அவர்கள் செய்யும் பிரயத் தனங்கள்,அடக்கம் தொனிக்காத அட்டகாசப் புன்னகை ...இவை தான் என் பொறுமையை அளக்கும் தராசுக் கற்கள்.
செய்கின்ற ஒப்பனையை அவர்கள் சரியாகச் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. முகத்துக்கு அவர்கள் காட்டும் கரிசனையை கழுத்துப் புறங்களுக்கு அவர்கள் காட்டுவதில்லை.பருவ வயதினர் போடும் ஆடைகளை 60,65 வயதைத் தாண்டியவர்கள் போடும் போது அது கேலிக்குரிய வேடிக்கையாகப் போய் விடுகிறது.80 வயதுப் பெண் என்ன தான் மேக்கப் போட்டாலும் பேசும் போது தள்ளாட்டம் கண்டு விட்ட இயக்கம்,பேச்சு என்பன அவர்களை மேலும் கேலிக்குரிய பொம்மைகளைப் போல அவர்களை ஆக்கி விட்டு விடுகிறது.அவர் மேலும் தன் இள வயதுக் காதலன் என்று ஒருவரை காட்டி தான் இன்னும் எவ்வளவு விரும்பப் படத்தக்க ஒருவராக இருக்கிறார் என்று காட்ட வெளிக்கிடும் போது அது நகைச்சுவையாகப் போய் விடுகிறது.அது அவர்களுக்குத் தெரியாதிருக்கிறது என்பது தான் கவலைக்குரியது.
இதற்குக் காரனம் என்ன என்று நினைத்துப் பார்த்த போது தான் பண்பாடு குறுக்கே வந்து நிற்கிறது.கீழைத்தேயப் பண்பாடு குடும்பம் என்ற மையத்தைச் சுற்றி தியாக வாழ்வை மையப் படுத்துகிறது. மேலைத் தேய பண்பாடு தனி அடையாளத்தை முதன்மைப் படுத்தி தன் மகிழ்ச்சியை மையப் படுத்துகிறது.அதனால் அவர்களால் முதுமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுகிறதோ என்று தோன்றுகிறது.கீழைத் தேயத்தவர்கள் அதனை வளர்ச்சியின் ஒரு படி நிலையாக; மிக இயல்பாகவும் விருப்புடனும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு குழந்தை குழந்தையாகவே இருந்து விடுவதில்லை.அது வளர்ந்து பாடசாலை போய்,பட்டம் பெற்று, வேலையில் சேர்ந்து,திருமணம் முடித்து, தானும் குழந்தைகள் பெற்று அவர்களை ஆளாக்கி, மணமுடித்துக் கொடுத்து.... என்று வருகின்ற கால மாற்றங்களுக்கேற்ப அவர்களும் அததற்கான பொறுப்புகளை ஏற்று அவ் அவ வயதுக்குரிய வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்க; மேலைத்தேயத்தில் பெரும்பாலானவர்களால் சிற்றின்பக் காலங்களுக்கப்பால் நகர்ந்து போக முடிவதில்லை. மறுமணங்கள், மன அழுத்தங்கள், உறவுச் சிக்கல்கள்,மது பாவனை,மாற்றுத் தந்தையால் முதல் தாரத்துக் குழந்தைகள் பாலியல் இம்சைகளுக்குள்ளாக்கப் படுவதுமாக சிதைந்து போய் விடுகிறது அவர்கள் வாழ்வியல் நெறிகள்.அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி விடுகிறார்கள்.அதனால் அவர்கள் முழுமையாக தாய்மையின் சுகங்களை,பின் நாளில் பேரப்பிள்ளைகளோடு வாழும் சுகங்களை... என்று பலவற்றை இழந்து விடுகிறார்கள்.இறுதியில் பாதி வாழ்வை முழுவாழ்நாளிலுமாக வாழ்ந்து முடித்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.
என் தலையில் சில நரைக் கோடுகள் விழ ஆரம்பித்து விட்டன.:) அவை மகிழ்ச்சிக் குரியதாகவே எனக்குத் தோன்றுகிறது.அனுபவம் என்னில் வரைந்த சித்திரம் அது.காலம் எழுதிய என் கணக்கு அது.அது எனக்கொரு அந்தஸ்தைத் தருகிறது.பலருக்கு முன்னால் மதிப்பினை உண்டாக்குகிறது.எனக்கது பிடித்திருக்கிறது. நான் அடுத்த கட்டத்துக்குப் பாஸாகி விட்டேன் என்பதை அது எனக்குத் தெரிவிக்கிறது.பார்க்கும் தோறும் என்னை நானே மதிக்க முடிகிறது. என் பொறுப்புகளை அது எனக்கு உணர்த்துகிறது.
கடந்த வாரம் விக்ரர் என்ற என் வேலை நண்பனோடு வேலை செய்ய வேண்டி இருந்தது.பரஸ்பர ஒத்துழைப்போடு வேலை சுலபமாக முடிந்த ஒரு முடிவுப் பொழுதில் அவன் கேட்ட கேள்வி தான் இத்தனை பெரிய அலட்டலுக்கும் காரணம். அவன் கேட்டது,’நீ ஏன் தலைக்கு டை போட முயற்சிக்கக் கூடாது?’
சொன்ன பதில்,’நான் ஏன் என்னை மறைத்து வேறொருவராக மற்றவருக்கு என்னைக் காட்ட வேண்டும்? இது தான் நண்பனே நான்;மற்றும் என் இருப்பு.’
நானாக நான் இருக்கும் மகிழ்ச்சியை வேறெப்படி நான் சொல்ல? நரை சொல்லும் காலத்தின் ரகசியங்களை;வாழ்க்கையின் வனப்புகளை நான் எதற்கு மறைக்க?
அதிசயப் பிறவியாக என்னைப் பார்த்துப் போனான் அவன்.’அடி லூஸூ’ என்ற தொனி அந்தப் பார்வையில் இருந்தது.
சொல்லுங்கள் அதற்கு நான் என்ன செய்யட்டும்?
வாழ்வில் வளர்ச்சி என்பது ஒரு சக்கர சுழற்சி என்பதை நன்கு விளக்கி விட்டீர்கள். ஒரு நெல் விதை, நாற்றாகி, பயிராகி, பூத்து, பாலூறி, கனிந்து, காய்ந்து, விளைந்து பின் சாய்வதில் தான் முழுமையடைகிறது. மாறாய்,மேலை மக்கள் போல், பயிராகி, பூத்து அப்படியே நின்று விட்டால், பின் விணாய் வெறும் சாவியாய், வைக்கோலாய் மாட்டுக்கு கூளமாய் முடிந்து விடிகிறது அதன் வாழ்வு.
ReplyDeleteகீழைத் தேய, மேலைத் தேயத்தவரின் மனப்பாங்கை துல்லியமாக கணித்திருக்கிறீர்கள் தோழி... நல்லதொரு சிந்தனை ஓட்டம்... எம்மையும் தெளிவிப்பதாய்... நரை பற்றிய விடயத்தில் நாமெப்படி ஒரே கருத்தினராய், ஒத்த அலைவரிசையில்... வியப்பும் மகிழ்வும்.
ReplyDelete//எனக்கது பிடித்திருக்கிறது. என் பொறுப்புகளை அது எனக்கு உணர்த்துகிறது.//
சபாஷ்.
மிகவும் மகிழ்ச்சியான நன்றிகள் வாசனுக்கும் நிலாவுக்கும்.:)
ReplyDelete