Thursday, July 3, 2014

யவனரும் தமிழரும் - இலக்கிய சந்திப்பு - 20ஐ முன்வைத்து




क्व सूर्यप्रभवो वंशः क्व चाल्पविषया मतिः।

तितीर्षुर्दुस्तरं मोहादुडुपेनास्मि सागरम्॥

க்வ ஸூர்யப்ரப⁴வோ வம்ʼஸ²: க்வ சால்பவிஷயா மதி:|
திதீர்ஷுர்து³ஸ்தரம்ʼ மோஹாது³டு³பேனாஸ்மி ஸாக³ரம்||

ஒளிமிகு சூரிய வம்சம் எங்கே? அற்பமான என் சிறுமதி எங்கே? கடந்திட முடியாக் கடலை சிறுபடகின் மூலம் கடக்க ஆசை கொண்டேன்.

என்று ரகுவம்சம் தொடங்கும்.

இதனை எழுதத் தொடங்குகின்ற போதும் எனக்கு அவ்வாறான மன உணர்வே இருக்கிறது.
கடந்த 29ம் திகதி ஆங்கில இலக்கிய அறிமுகம்; ஷேக்ஸ்பியர் என்ற தலைப்பில் அதிதி உரையாற்ற வந்த தனபாலசிங்கம் ஐயா அவர்கள் பேசிக்கொண்டிருந்த விரிவுரை பல ஈரச் சுணைகளையும் ஊற்றுக் கண்களையும் புலப்படுத்திக் கொண்டு தமிழ் வெள்ளமென பரந்தன.

ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசும் போது தமிழகத்துக்கும் மேலைத்தேயத்துக்கும் (கிரேக்க ரோம) இடையே பண்டைக்காலம் தொட்டு நிலவி வந்த வணிகத் தொடர்புகள் பற்றியும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் யவனர் பற்றிய குறிப்புகளும் கவனத்தில் எடுக்கப்பட்டன.
அரிக்கமேடு போன்ற இடங்களில் மட்பாண்ட ஓடுகள், ரோம கிரேக்க நாணயங்கள் கிடைக்கின்றன எனவும்; பல பிராமிக் கல்வெட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றன என்றும் அவற்றை ஆராயவும் அகழ்வாய்வு செய்து மேலும் பல ஆதாரங்களை வெளிக்கொணரவும் அரசு ஆதரவு காட்டுவதில்லை என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இதனைக் கேட்ட போது 27.4.14 அன்று சிட்னி Art gallery யில் காட்சிக்கு வைக்கப்பட வந்திருந்த ஆப்கானிஸ்தான் பொக்கிஷங்கள் தான் உடனே எனக்கு நினைவுக்கு வந்தன.
ஆப்கானிஸ்தான் – பண்டைய காந்தார தேசம் – மகாபாரதத்துக் காந்தாரியின் பிரதேசம் - இன்றய யுத்த பூமி – யுத்தத்துக்குள்ளேயும் அவர்கள் கட்டிக் காத்த வரலாற்றுப் பொக்கிஷங்களைச் சிட்னியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரே காலம் – சங்ககாலத்தை ஒட்டிய காலப்பகுதி.- அதில் காட்சிப்படுத்தி இருந்தவைகளில் வைக்கப்பட்டிருந்த குறிப்புகளில் கிரேக்க ரோம சாம்ராஜ்யத்துக்கும் தென் தமிழகத்துக்கும் இடையே போக்குவரத்தின் மத்தியில் இப்பிரதேசம் அமைந்திருந்ததால் இந்திய மேலைத்தேயச் செல்வாக்கினை தம் கலைப்பொக்கிஷங்களில் காணமுடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இனி நான் குறுக்கே நிற்பது அழகல்ல; விலகிக் கொள்ளுகிறேன். நீங்கள் சென்று பாருங்கள். இந்திய சாயலில் தந்தங்களில் செதுக்கப்பட்டிருக்கிற வனப்புறு பெண்களைப் பார்க்கின்ற போதும் ரோமானிய வைன் கடவுளைப் பார்க்கின்ற போதும் இத்தகைய கலைப் பொக்கிஷங்கள் ஏன் தென் தமிழகத்தில் கிட்டவில்லை என்ற கேள்வி எனக்கு எழாமல் இல்லை.

































(குறிப்பு: முதல் ஓவியமும் கடைசி ஓவியமும்  Art gallery க்குச் சொந்தமானவை. ஆப்கானிஸ்தானுக்கு உரியதல்ல)

யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து, 20
புறம் -56
”தண்கமழ்தேறலை” ஒண்தொடிமாதர் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பொற்கலத்தில் ஊற்றிக் கொடுக்க உண்டு களித்த சங்க அரசனும் *********** அழகிய யவன ஆண்களைப் பார்த்து ஆசை கொண்ட உள்ளூர் பெண்களும் சங்க காலத்தில் நிறைந்திருக்க சிலம்பு ஒலித்த சங்கமருவிய காலத்தில் பெரு வணிக வளாகங்களாக இருந்த மருவூர்பாக்கமும் பட்டிணப்பாக்கமும் இந்திரவிழா ஊர் எடுத்த காதையில் 33 வரிகளில் சித்திரிக்கப்படுகிறது.வனப்புறு நகரங்களும் மாட மாளிகைகளும் நிறைந்த நகரை இளங்கோ அடிகளார் அங்கு காட்டுகிறார். அங்கு யவனர் இருக்கை தனியாக இருந்தது பற்றியும் அறிய இயல்வதால் பல நூற்றாண்டுகளாக வர்த்தக பண்பாட்டு தொடர்புகள் இருந்து வந்ததை அறிய முடியும். இரட்டைப்பிடி மதுச்சாடிகளின் சிதைவுகளும், கண்ணாடியாலான மதுக்கிண்ணங்களும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன என்கிறார் தமிழாய்வு அறிஞரான கே.கே. பிள்ளை அவர்கள்.

ஐராவதம் மகாதேவன் கரூருக்கருகில் அமராவதி நதிப்படுக்கையில் கிடைத்த மோதிரம் ஒன்று பற்றிக் குறிப்பிடுகையில்
“அண்மையில் கரூருக்கு அருகில் அமராவதி ஆற்றுப் படுகையில் இது கிடைத்தது. இப்பொழுது தனியார் வசம் உள்ள இப்பொன்னாலான இலச்சினை மோதிரத்தின் எடை ஒன்றரை தோலா 15.6 கிராம். இதன் முகப்பில் 25 மி.மீ நீளமும் 15.மி.மீ அகலமும் கொண்ட ஒரு குழிவான நீள்வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் ஒரு தலைவனும், தலைவியும் அணைத்து நிற்கும் கோலம். இலச்சினையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பக் கலை வல்லுநர் இக்காட்சியை மிதுனம் என்று கூறுவர்.

சிற்ப அமைதியைக் கொண்டும் கரூரில் அமராவதி ஆற்றுப் படுகையிலிருந்து அவ்வப்பொழுது கிடைத்துவரும் காசுகளிலிருந்தும், கைவினைப் பொருள்களிலிருந்தும் இந்தப் பொன் இலச்சினை மோதிரம் சங்க காலத்தைச் சேர்ந்தது என்றும், சுமார் கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்டது என்றும் கூறலாம். சங்க காலச் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாகக் கிடைத்துள்ள முதல் புறச்சான்று என்ற தனிச் சிறப்பினை இம்மோதிரம் பெறுகிறது.

தலைவி
தலைவி எழிற்கொடியாய் நிற்கிறாள். தலையில் உயர்த்தி ஒருபுறமாக சொருகியுள்ள கொண்டை. நாணிச் சற்றே திரும்பியுள்ள முகம், வேய் எனத் திரண்ட தோள், நீண்டு புறத்தே தொங்கும் இடக்கரம், தலைவனை சுற்றி அணைக்கும் வலக்கரம், உள்ளக் கிளர்ச்சியை எடுத்தியம்பி விம்மும் மார்பகம், மின் இடை, வலக்கால் நிலை பெற அதனை கொடியெனச் சுற்றிய இடக்கால், கைகளில் வளையல், கால்களில் கொஞ்சும் சிலம்பு, மேனியழகை மறைக்காத மெல்லிய துகிலுடை.

தலைவன்
அருகில் அணைந்து நிற்கிறான் தலைமகன். அவனும் தன் முடியைக் கொண்டையாகச் சொருகி, தலைவியைக் காதல் கூர் நோக்கோடு கண்டு களிக்கிறான். வலக்கரத்தில் அவளுக்கு அளிக்க ஒரு மலர், குறிஞ்சி மலரோ? (குறிஞ்சி என்றால் இணைதல் என்றும் பொருள்), உயர்ந்த திண்தோள்கள், இடக்கால் நெடித்து வலக்கால் மடித்து துடியிடையாள் படரும் கொம்பென நிற்கிறான்.

கொல்லிப் பாவை
இந்த இலச்சினை மோதிரத்தில் உள்ள மடந்தையின் உருவையும் எழிலையும் காணும்போது சங்க இலக்கியங்களில் அடிக்கடி குறிக்கப்பெறும் கொல்லிப்பாவையும் நினைவுக்கு வருகிறது. அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் கபிலர், பரணர், ஒளவை முதலிய பெரும் புலவர்கள் கொல்லிமலையில் வடித்திருந்த பாவையின் எழிலைப் பாடுகிறார்கள். எடுத்துக்காட்டாக

பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர்கொல்லி
கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்மெல் இயல்

என்று தலைவியின் எழிலைக் கொல்லிப்பாவைக்கு ஈடாகப் பரணர் கூறுகிறார்.

கொல்லிப்பாவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இந்த மோதிரத்திலுள்ள பெண் சிற்பத்தைப் பார்த்தால் இவளைப் போன்ற மடந்தைகளைத் தான் கொல்லிப்பாவைக்கு ஒப்பக் கூறியிருக்கிறார்கள் சங்கப் புலவர்கள் என்று சொல்லலாம்..” – என்கிறார்ஐரவதம்.மகாதேவன். (நன்றி: இணைய உலாவி)

இப்படி எத்தனை எத்தனை தென் தமிழகத்தில் புதையுண்டும் தனியார் வசமும் இருக்கக் கூடும்?


சோழர்காலத்து ஆலயச் சிற்ப வேலைப்பாடுகளுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிற மேலைத்தேய தொப்பி மனிதன். ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா?  தஞ்சைப் பெருவுடையார் கோயில். கி.(பி.985 முதல் 1070) ராஜராஜசோழன்.













6 comments:

  1. சிட்னி ஆர்ட் கேலரிக்கு அழைத்துச் சென்று அற்புதமான ஆப்கானிஸ்தான் படைப்பாக்கங்களைக் கண்ணுறச் செய்தமைக்கு மிக்க நன்றி மணிமேகலா. எவ்வளவு தத்ரூபமான கலைநுணுக்கமிகு சிலைகள். ஒவ்வொன்றும் ஒரு அழகு, கலைநயம். பார்க்கத் தந்தமைக்கு நன்றி தோழி.

    கரூரில் கிடைத்த இலச்சினை மோதிரம் வியக்கவைக்கிறது. 25 மி.மீ, 15 மி.மீ. அளவிலான நீள்வட்டத்துள் எப்படி அவ்வளவு நுணுக்கமான உருவத்தைப் பொறித்திருக்க முடிந்திருக்கும்? நுண்ணோக்கி இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது அல்லவா? கொல்லிப்பாவை பற்றிய தகவல்களும் புதிதாக அறிந்துகொண்டேன்.

    தொப்பி மனிதன் பெரும் ஆச்சர்யம். பண்டைக் காலத்துக்கே சென்றுவந்தாற்போன்றதொரு உணர்வு. பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  2. மிக்க சந்தோஷம் கீதா.

    எனக்கு என்ன யோசினை எண்டா சம காலப் பகுதியில் (சங்ககாலத்தை ஒட்டிய நூற்றாண்டு) கலிங்க தேசத்தில் இத்தனை அழகும் நுட்பமும் வாய்ந்த கலைப்பொருட்கள், தங்க ஆபரணங்கள் எல்லாம் கிடைத்திருக்க தென் தமிழகத்தில் ஏன் அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை என்பது தான்.

    இலக்கிய வடிவங்கள் இத்தனை வளர்ந்திருக்க; மருவூர்பாக்கமும் பட்டினப்பாக்கமும் நவீனகாலத்துக்கிணையாய் செழிப்புற்றிருக்க....

    அக்கண்காட்சியில் இவ்வாறான கலைச் செல்வாக்கு தமிழக கிரேக்க ரோமச் செல்வாக்கல் வந்தது என்ற குறிப்பு காணப்பட்டது. அது மாத்திரமல்ல அந்த வனப்புறு பெண்களில் இந்திய சிற்பக்கலையின் சாயலை நன்கு காண முடிகிறது இல்லையா?

    பாரத மண்ணின் அடியில் புதைந்து போயிருக்கிறது ஒரு கலாசாம்ராஜ்யம். வெளிவருமா என்று தான் தெரியவில்லை.

    ReplyDelete
  3. அழகான சிலைகள்...
    காணக் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் குமார்! நீங்கள் வந்ததே சந்தோஷம்.

    நலமாக இருக்கிறீர்களா?. கன நாளாய் காண முடியவில்லை.

    இன்னும் பல படங்கள் உண்டு குமார். எல்லாவற்றையும் பதிய முடியாதில்லையா?

    ReplyDelete
  5. ஏதேனுமோர் மனித விரல்களின் சாத்தியங்கள் தான் இவை என நினைக்கையில் பிரம்மிப்பின் உச்சத்தை தொடுகிறோம்.

    தஞ்சைக் கோயிலின் தொப்பி மனித சிற்பம் மேலும் பெருக்குகிறது ஆச்சர்யத்தை. அந்நாளைய மக்களின் திறன்மிகு நுண்ணறிவை எத்தனை பாராட்டினாலும் தகும்.

    வெளிப்படாத அல்லது அழிந்து பட்ட தென்னிந்தியாவின் மிச்சமிருக்கும் கலையர்புதங்களை வரும் காலமேனும் வெளிக் கொணர்கிறதா பார்க்கலாம்.

    ReplyDelete