Friday, June 27, 2014

Robi McLean

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆஆஆ
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல......வா

சொல்லவா?

16.6.14 திங்கள்.

எல்லோருக்கும் போல சாதாரணமாகத் தான் விடிந்தது.

உண்டு, உறங்கி, விழித்து, குளித்து ,உடுத்து வேலைக்குப் போன சாதாரண நாள் அது.

கடந்து போயிருந்த வெள்ளி மாலையில் வந்து போயிருந்த நம் shift ன் இளம் அதிகாரி Robi Mclean அன்றய தினம் நம்மைக்காண வராமலே நம் வேலைகளுக்கு முதலான உடற்பயிற்சி நிறைவடைந்திருந்தது. இருந்த போதும் நம்மிடையே ஒரு எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. அதற்குக் காரணம் Robiசொல்லி இருந்த பெரிய ஒரு செய்திப்பகிர்வு இன்றய தினம் இருக்கும் என்பதும்; அது நம் வேலைத்தலத்தில் இடம்பெறப்போவதாக அரசாங்கம் ஊடகங்களில் அறிவித்திருந்த 900 பேரின் Job cut  பற்றியதாக இருக்கும் என்பதும் காரணம். அது சம்பந்தமான தயார் படுத்தலில் Robi ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதால் அவரது பிரசன்னம் பற்றிய கரிசனை எதுவும் இல்லாமலே நம் வேலைகள் வழக்கம் போல ஆரம்பித்து விட்டன.

வேலைக்குக் கலைந்து போன கூட்டத்தின் அன்றய பேசு பொருளாக இருந்தது இரண்டு விடயங்கள்.

1. யார் யாரெல்லாம் நீக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.
2. உலகக் கால்பந்து போட்டியில் அவுஸ்திரேலியாவின் இடம் எத்தகையதாக இருக்கும்.

 - இவை இரண்டும் தான்.

கூடவே Robi கடந்த வெள்ளியில் சொல்லிப் போன பியர் குடித்து கும்மாளம் போட்டு தூக்கத்தைத் தொலைத்து வேலைக்கு வந்து சினந்து வருத்தங்களையும் ஆபத்துக்களையும் வருந்தி அழைத்துக் கொள்ளாமல் சரியான தூக்கத்துக்கு சரியான நேரத்துக்கு நீங்கள் போனால் தான் சிறப்பாக அடுத்த நாள் கடமைகளை உற்சாகத்தோடு ஆற்ற முடியும். நீங்கள் எப்படி சுக ஆரோக்கியத்தோடு வேலைக்கு வந்தீர்களோ அதே ஆரோக்கியத்தோடும் சுகத்தோடும் வீட்டுக்கு நீங்கள் பத்திரமாகச் செல்வது மிக முக்கியம். உங்களைச் சார்ந்து ஒரு குடும்பம் இருக்கிறது. அது வேலையை விட முக்கியமானது. Have a safe day! என்று வெள்ளி மாலை நேரத்து வேலையை ஆரம்பித்து போனதுமான நிகழ்வும் நினைவுக்கு வராமல் இல்லை.

வேலை ஆரம்பித்து சுமார் 1 மணி நேரம் இருக்கும். இயந்திரசாதனங்கள் யாவும் எந்த ஒரு முன்னறிவித்தலும் இல்லாமல் நிறுத்தப் பட்டன. ஆபத்தை அறிவிக்கும் சிவப்பு விளக்குகள் எல்லா இடங்களிலும் ஒளிர்ந்தன. ஒரு பயம் கலந்த மெளனம் மளமளவென வியாபித்தது. அப்போதும் கூட இயந்திரசாதனம் பழுதடைந்து விட்டது. வேலைச்சுமை பலமடங்காகக் கூடக்கூடும் என்பதற்கப்பால் நினைக்க எதுவும் தோன்றவில்லை. வேலைத்தலத்து ஊழியர்கள் யாவரும் முகப்பு மண்டபத்துக்கு வந்தமருமாறு உள்ளார்ந்த தானியக்கி ஒலிபெருக்கி அறிவிக்க எல்லோரும் சென்றமர்ந்தோம்.

தொலைபேசிகளை அணைக்குமாறு அல்லது மெளன அதிர்வலையில் விட்டு வைக்குமாறு வேண்டப்பட்டோம்.

அறிவிக்கப்பட்ட செய்தி வேலைக்கு வந்த Robi McLean மாரடைப்பால் ஸ்தலத்தில் மரணமானார் என்பது தான்.

44 வயது.

கிறிஸ்டல் நீலக் கண்களும் பிங் ரோஜா இதழைப்போல தோலும் பொன்னிற கட்டையாக வெட்டப்பட்டிருக்கும் கேசமும் கொண்டிருந்த இளம் அதிகாரி.

சந்தோஷமும் உற்சாகமும் எல்லோரையும் சமாமாக நடத்தும் பாங்கும் புன்னகை பூத்த முகமும் பிரச்சினைகளை சுலபமாக நோ இன்றி தீர்த்து வைக்கும் வியத்தகு ஆழுமையும் கொண்ட புன்னகை பூத்த உருவம் மற்றும் பருவம்.

அவருடய புன்னகை பற்றி பலரும் சிலாகிப்பதுண்டு. அந்த மனிதனுடய புன்னகை உதட்டில் இருந்து உதிப்பதல்ல. அது இதயத்தில் இருந்து மலரும். அது யாருக்கு அளிக்கப்படுவதாக இருந்தாலும் அதில் ஒரு அந்தரங்க சுத்தியான அன்பு, அக்கறை, மகிழ்ச்சி என்று பல வாசங்கள் சேர்ந்திருக்கும். அதில் இவனோடு எதுவும் கதைக்கலாம் என்ற - பாதுகாத்து சரியான பாதையைக் காட்டுவான் என்ற நம்பிக்கையான செய்தி அந்த புன்னகையோடு பரிமாறப்பட்டிருக்கும்.

மணிக்கட்டு வரை பட்டின் பூட்டி காற்சட்டையின் உட்புறம் விடப்பட்டிருக்கும் சேர்ட்.  இடையிலே இடுப்புப்பட்டி. மற்றும் கழுத்திலே கழுத்துப் பட்டி. தனிக் கறுப்பு அல்லது தனி வெள்ளை சேர்ட். அது தான் எப்போதும் அவரின் தெரிவு.

பார்த்தவுடம் அதிகாரி என அறிய வைக்கும் நடை உடை பாவனை. ஆனால் வேலை, மனிதர்கள் என்று வந்து விட்டால் மாத்திரம் அவருக்கு எல்லா வேலையும் எல்லா மனிதர்களும் சமன் தான்.

நாம் வேலையோடு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பதை எங்கேனும் தூரத்தில் நின்று கண்டு விட்டால் உடனே மணிக்கட்டில் இருக்கும் சேர்ட் பட்டினை களற்றி முழங்கை வரை இழுத்து விட்டு விட்டு  எந்த ஒரு தயக்கமும் இன்றி ஏதேனும் ஒரு ஜோக் ஒன்றை சொல்லி நம்மைச் சிரிக்கப்பண்ணி அதே நேரம் நம்மை விட துரிதமாக அந்த வேலையை செய்து நம்மை அசுவாசப்படுத்தி விட்டு மிக இயல்பாக மீண்டும் சேர்ட் பட்டினைப் பூட்டிக்கொண்டு போகும் அந்த ஆழுமை மறக்க முடியாதது.

அதில் 18 வயதில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்த அனுபவம் மிளிரும்.

மிளிர்ந்தது.

ஆறுமாதங்களுக்கு  ஒரு தடவை மாறும் அதிகாரிகளுக்குள் கடந்த சில வருடங்களுக்கு முன்  நமக்கு வாய்த்திருந்த ஜூலிஎவனுக்குப் பிறகு நம் எல்லோருக்கும் ஏகோபித்த வகையில் பிடித்த ஒரு மனிதனாக அவர் இருந்தார்.

வாழ்க்கை என்பது அவ்வளவு தான்.

சூரியன் உதித்தது மறைந்தது.
நாள் ஒன்று வழமை போல நகர்ந்தது.
பசித்தது உண்டோம் கழித்தோம்.
உறங்கினோம் விழித்தெழுந்தோம்.
எல்லாம் வழமைக்கு மாறின.
இயந்திரங்கள் இயங்கின. வேலைகள் முடிந்தன.

Robi இல்லாமலே  இவை எல்லாம் நடந்தன; நடக்கின்றன. இனியும் நடக்கும்.

வாழ்க்கை என்பது அவ்வளவு தான்.

Robi என்றொரு மனிதன் நம்மோடு இருந்தான்; நல்லவனாய் எல்லோரது பிரியத்துக்குள்ளானவனாய் புன்னகை பூத்த முகத்தினாய் மனங்களில் நிலைத்திருப்பான் என்பதைத்தவிர வேறெந்தத் தடயங்களும் இனி இருக்கப் போவதில்லை.

இப்போது நினைவுக்கு வருகிறது  வைரமுத்து சொன்ன,

 “ நீ என்பது வேறொன்றுமில்லை; செயல்.”

சுமார் மூன்று மாதங்களுக்குள் வேலைத்தலத்தில் மாத்திரம் 4 மரணங்கள். அதில் இரண்டு வேலைத்தலத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. மற்றய நண்பன் விடுமுறை என்று போய் வராமலே விபத்தில் மரணமானான். அவனது முகத்தைக் கூட காண நமக்கு கொடுத்து வைக்கவில்லை. மற்றயவர் புற்று நோய் பற்றி மூன்று மாத இடைவெளியில் போய் சேர்ந்தார்.


காலப்போக்கில் இவர்கள் எல்லாம் நம் மனங்களில் இருந்தும் மறைந்து போகக் கூடும்.

காலமும் வாழ்க்கையும் நம்மை அப்படி விரட்டிக்கொண்டிருக்கிறது.

என்றேனும் ஒரு பொழுதில் - சாய்வு நாற்காலி மனிதராகி விடும் ஒரு நாளில் -  நம்மை யாரும் சீண்ட விரும்பாத தனிமை ஒன்று நம்மை வியாபிக்கும் அகால பொழுதொன்றில் - அப்படி ஒன்றுக்கு ஆள்பட வேண்டி இருந்தால்   - நம் கடந்த கால நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும் மூளை வளம் அப்போதொன்றில் இன்னமும் மிச்சம் இருந்தால் - அப்படி ஒரு பொழுதில் இந்த முகங்கள் நினைவுக்கு வந்து போகக் கூடும்.

வேறொரு பொழுதில் அமைதியும் சோகமுமாக என் வேலையில் ஆழ்ந்திருந்த பொழுதொன்றில் என் வியற்நாமிய தோழி ஆன்.வூ ( Anne. Vu) அவ் இடம் வந்தாள். அவளைக் கண்டதும் துளிர்த்த கண்ணீரை அவள் கண்டிருக்கக் கூடும்.

வாழ்க்கை ஒரு வட்டம்.

மூச்சு எடுக்கிறோம். மூட்சை விடுகிறோம் மீண்டும் எடுக்கிறோம். தண்ணீர் அருந்துகிறோம். வெளியேற்றுகிறோம். மீண்டும் அருந்துகிறோம். உயிரினங்களும் அவ்வாறு தான். ‘வீட்டில் ‘ இருந்து வருகிறோம். ‘ படிக்கிறோம்’ மீண்டும் நம் வீட்டுக்கு போவோம். வாழ்க்கை ஒரு வட்டத்தில் சுழல்கிறது. எதை நாம் இங்கு படிக்க வந்திருக்கிறோம் என்ற விடயத்தில் தெளிவிருந்தால் வருந்த எதுவுமில்லை என்ற தான் நம்பும் பெளத்த சித்தாந்தத்தை முதுகில் தட்டி சாதாரணமாய் சொன்ன படி நகர்கிறாள்.

வாழ்க்கை நகர்கிறது.

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆஆஆ
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல......வா

சொல்லவா?

8 comments:

  1. வாழ்க்கை என்பது அவ்வளவு தான்.
    மனம் கனக்கவைக்கிறது..

    ReplyDelete
  2. ஓம் தோழி.

    அந்த மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான வேறெந்த சுவடும் மிஞ்சி இருக்காது.

    கால்பந்து போல துள்ளித்திரிந்த வெகு ஆரோக்கியமான மனிதன்.

    எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு றோஜா மலரைப்போல வந்தான். ஒரு அதிகாரி எப்படி மனிதனாகவும் இருக்கவேண்டும் என்று ஒரு உதாரணத்தைக் காட்டிவிட்டு மறைந்து போனான்.

    சின்ன வயசு. வாழவேண்டிய இளசு.

    ReplyDelete
  3. இந்த பாடலை இப்படியொரு சூழ்நிலைக்கு இயைபாக்கும் மனநிலையை வியக்க/கனக்க வைத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. வாடா தம்பி. இப்பிடி பாக்க உன்னால தானே முடியும்.

      நாம் சோகமாக இருக்கும் பொழுதில் நம் மனதுக்கு நெருங்கியவர்கள் வரும் போது உடனே மிகச் சூடாக கண்ணீர் நிறைந்து விடுகிறது.

      வந்ததே சந்தோஷம் பையா.

      Delete
  4. வாழ்க்கையைப் பற்றி மிக தெளிவான சிந்தனை. அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொக்கன்.

      தெளிவு இன்னும் சீராக வரவில்லை என்றே தோன்றுகிறது சொக்கன்.

      வாழ்வின் சூட்சுமங்கள் புதிய புதிய வரைவிலக்கணங்களை அவ்வப்போது தந்து போகிறது.

      உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      Delete
  5. வாழ்வே ஒரு தவம்.....இளமையில் மரணம் என்பது சுற்றியிருப்போரை மிகவும் பாதிக்கும்....பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  6. வணக்கம் புத்தன்.

    நீங்களும் அண்மையில் இழப்பொன்றைச் சந்தித்தீர்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியும் இழப்பொன்றின் தாற்பரியங்கள் பற்றி.

    வாழ வேண்டிய வயசு என்பது தான் கடக்க கடினமாக இருக்கிறது.

    துன்பத்தை பகிர்வதென்பது எத்தனை ஆறுதல் அளிக்கக் கூடிய விடயம் என்பதை நீங்கள் எல்லோரும் வரும் போது அனுபவித்து அறிய முடிகிறது.

    நன்றி புத்தன் உங்களுக்கும்.

    ReplyDelete