Friday, March 28, 2025

ஐஸ் பழமும் நானும் - தீர்க்கமுடியாப் பெரும் கடனும்

 1976/ 77 காலப்பகுதி அது.

பாடசாலையில் நான் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலப்பகுதி.

மூன்றுமைல் தூரத்தில் பள்ளி. பஸ்ஸில் பள்ளிக்குப் போய் வர வேண்டும். ஆனாலும் பஸ்ஸோ நேரத்திற்கு வராது. வந்தாலும் பள்ளிக்குப் போக எனக்கும் மனம் வராது. பிந்தி வரும் பஸ்சில் ஏறிவிட்டு பின்னர் இறங்கமாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு நானிருக்க அப்பா என்னை அழைத்துக் கொண்டு பள்ளியில் (வீதியோரம் தான் பள்ளி அமைந்திருந்தது) விட்டு விட்டு காத்துக் கொண்டு நிற்கும் பஸ்ஸில் ஏறி வேலைக்குப் போவார். வருவார். 

பள்ளி விட்ட பின்னர் நேரத்திற்கு பஸ் வராது. சிவாண்ணையின் பால் வான் எப்பிடியும் வரும் அதில் ஏறலாம் என்றொரு நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்கும். நான் மட்டுமில்லை பல பிள்ளைகள் பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள்.  உயர்வகுப்புப் படித்த அக்காவை தாமாகவே எங்களைக் காக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள். 

பள்ளிப் பாடத்தில் வரும் வீட்டு வேலைகளைச் சில புத்திசாலிப் பிள்ளைகள் கூரை இல்லாமல் சுவர் மட்டும் இருந்த பஸ் நிலையத்து சுவர்களில் வைத்து எழுதிக்கொண்டு இருப்பார்கள். பெரிய வகுப்பு படித்துக் கொண்டிருந்த அக்காவை அருகில் இருந்த பிள்லையார் கோயில் திருத்த வேலைக்காகப் பறிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப் பட்டிருந்த கருங்கற் பாளங்களின் மேலும் வேர்கள் மேற்கிழம்பி நமக்கு இருக்க இலகுவாக்கி நிழலும் தந்து கொண்டிருந்த ஒரு பேர் தெரிய மரத்தின் வேர்களின் மேலும் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

என்னைப்போல ஒரு சில பேர் யாழ்ப்பாண வீதி வழியாகப் போகும் வாகனங்கள் அடித்து விட்டுப் போகும் சிதறு தேங்காயைப் பொறுக்கி சாப்பிடுவதிலும் எட்டுக் கோடு, ஓடிப்பிடித்து விளையாடுவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்போம்.

ஆனாலும் ஒரு பெரும் கொடுமை பாருங்கள். சைக்கிளில் வந்து ஐஸ்பழம் விற்கும் அந்த ஒற்றை வியாபாரி மட்டும் அங்கேயே நின்று கொண்டிருப்பார். அடிக்கடி தன் கறுப்பு நிற கோன் போன்ற ஒன்றால் பாம் பாம் என்று அடித்து தன் இருப்பை வேறு உறுதிப்படுத்திக் கொண்டும் இருப்பார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் எங்களின் பஸ் காசும் ஐஸ் பழம் ஒன்றின் காசும் ஒரே அளவு தான்.

எப்போதுமே!

ஒரு சிறு பிள்ளை எத்தனை மணி நேரம் தான் ஆசையை அடக்கிக் கொண்டு இருப்பது!  வேளைக்கு பஸ் வந்தால் பறவாயில்லை. வீடு போய் சேர்ந்து விடுவேன். பஸ் வேளைக்கு வராது. வந்தாலும் யாழ் நோக்கிப் போகும் பயணிகளை ஏற்றிப் போகும் களைப்பில் எங்களை ஏற்றி இறக்கி மினைக்கெட அவர்கள் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அவை திருகோண மலையில் இருந்தும் மட்டக்களப்பில் இருந்தும் மன்னாரிலிருந்தும் யாழ் நோக்கிப் போபவை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. 

நம்ம பிழைப்பு வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் போகும் பஸ்சினை எதிர் நோக்கியது. அது சிலவேளை இடர்பாடோடும் சன இடிபாடோடும் வந்தால் இந்தச் சின்னஞ் சிறுசுகள் சுமார் 15 - 20 வரை இருப்பவர்களை ஏற்ற அதற்கும் பாவம் இடமிருக்காது.

3.15 க்குப் பள்ளி விட்டு 5.30 , 6.00 மணி வரையும் பஸ் வரவில்லை அல்லது எங்களை ஏற்றவில்லை என்றால் பலரும் நடராசாவில் நடையைக் கட்ட ஆரம்பிப்பார்கள். யசோதா விளையாடியே களைத்து விடுவதால் இனியும் 3 மைல் தூரம் ஏற்ற இறக்கங்களோடு நடக்க அதற்கு மனசு வராது. எப்படியும் எங்களை விட தூரம் போகும் அக்காவை பஸ்சுக்காகக் காத்திருப்பார்கள் என்று விட்டு நானுமவர்களோடு காத்திருப்பேன்.

ஆனாலும் ஒன்று செய்வேன்.

கொஞ்ச நேரம் பொறுமையோடு கைக் காசை பார்ப்பதும் பின் அதனைச் சீருடைப் பொக்கற்றுக்குள்  போடுவதுமாக இருப்பேன். இனி ஐஸ்பழக் கார வியாபாரியும் போய் விடப் போகிறார் எனத் தெரியும் பட்சத்தில் ஒரு தயக்கமும் இல்லாமல் பஸ் காசினை கொடுத்து ஐஸ்பழம் வாங்கி நல்ல சந்தோஷமாக - உலகத்தில் இன்று தான் நான் வாழப்போகும் கடைசி நாள் என்பது மாதிரி ரசித்து ரசித்து சாப்பிடுவேன்.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 7.00 - 7.30 மணியளவில் மருதோடைக்குப் போகும் பஸ் வந்து நிற்கும். எனக்கு வீட்டுக்குப் போகக் காசு இருக்காது. அந்த உண்மை அப்போது தான் என் மண்டைக்குள் வெளிச்சமிடும். என்ன செய்வது என்றும் தெரியாது. அப்போது உயர்தர வகுப்புப் படித்த அக்காவை எங்களோடு பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள்.

அவர்களில் இரண்டு பேரை எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. ஒரு அக்காவின் பெயர் யோகா அக்கா. மற்றய அக்காவுக்குப் பேர் சறோ அக்கா.

பஸ் வந்து நின்றதும் நடத்துனர் இறங்கி ரிக்கற் போட ஆரம்பிப்பார். நான் மெல்ல சறோ அக்காவிடம் அல்லது யோகா அக்காவிடம் என்னிடம் பஸ்சுக்குக் காசில்லை என்பதைத் தெரிவிப்பேன்.

அவர்களுக்கு என்னைத் தெரிந்திருந்ததோ என்னவோ,’உம்மோட பெரிய கரைச்சல் யசோ’ என்று சொல்லி விட்டு எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுப்பார்கள். வீட்டுக்கு நான் வந்து இது பற்றி மூச்சுக் கூட விட மாட்டேன்.

இப்படி எத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்களை நான் கடந்திருக்கிறேன்....ஒரு நாள் கூட அந்த அக்காவை எனக்கு பஸ்ஸுக்கு டிக்கற் எடுத்துத் தர மறந்ததுமில்லை; மறுத்ததுமில்லை.  பின்னர் ஒருவாறு என் தந்தையாருக்கு  தெரிந்ததோ என்னவோ சீசன் ரிக்கற் வாங்கித் தரத் தொடங்கி விட்டார். சீசன் ரிக்கற் என்பது ஒரு மாதத்துக்கான பணத்தை முன் கூட்டியே டிப்போவில் கட்டினால் அவர்கள் ஓர் அட்டையை வழங்குவார்கள். அதனை நடத்துனரிடம் காட்டினால் அவர் அந்தத் திகதிக்குரிய பகுதியை மட்டும்  அடையாளப்படுத்தி விட்டுத் தருவார். 

பணப்புழக்கத்திற்கு அதன் பிறகு எனக்கு வாய்ப்பிருக்கவில்லை. கூடவே ஐஸ்பழத்திற்கும்!

என் வீட்டுக்கும் சொல்லாமல், பள்ளி ஆசிரியர்களுக்கும் சொல்லாமல், என்னை மட்டும் உரிமையோடு கடிந்து கொண்டும்; கண்காணித்துக் கொண்டும், அவ்வப்போது நான் செய்யும் குழப்படிகளைச் சகித்துக் கொண்டும் எங்களை பாடசாலை விட்ட பிறகும் கண்காணித்து பொறுப்போடு எனக்கு அவ்வப்போது பஸ்ஸுக்கு டிக்கற்றும் எடுத்துத் தந்த அக்காவை .......

அவை இப்ப எங்கை என்ன செய்து கொண்டிருப்பினம்?

சில நேரங்களில் யோசித்துப் பார்ப்பேன்....எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத அன்பென்பது இது தானோ?

அழிக்க முடியாக் கடன் கணக்கில் சேர்ந்து விட்ட இந்தக் கடன்களை இனி நான் எப்பிறப்பில் தீர்க்கப் போகிறேன்?

சறோ அக்கா, யோகா அக்கா! 

நீங்கள் செய்தவைகளை நான் என் ஆத்மாவில் சேமித்து வைத்திருக்கிறேன். ஜென்மங்கள் கடந்தேனும் இந்தக் கடனைத் தீர்க்க இறையருளை பிரார்த்திக்கிறேன், மனமுருகி வேண்டுகிறேன்.

வேறென்ன நான் செய்ய முடியும்.... 

சொல்லுங்கள்.....

Saturday, March 22, 2025

கம்பராமாயணத்தில் ஓர் அவலக் காட்சி

பாடல் எண் - 5976.

இலங்கை எரியூட்டுப் படலத்தில் இப்பாடல் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.


மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, 

ஒரு தனி மகவை அருங் கையால்பற்றி, 

மற்றொரு மகவு பின் அரற்ற,

நெருங்கினாரொடுநெறி குழல் சுறுக் கொள நீங்கிக்

கருங் கடல்தலைவீழ்ந்தனர், அரக்கியர் கதறி.


பொருள்:

 மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு - இடையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை அரும் கையால் பற்றி - மற்றொருசிறு குழந்தையை தன் அரிய கையால் பற்றிக் கொண்டு; மற்றொரு மகவு பின்அரற்ற - வேறொரு குழந்தை பின்னே அழுது கொண்டு வர; அரக்கியர் -அரக்கிமார்கள்; நெருங்கினாரொடு - நெருங்கிய சுற்றத்தினரோடு; நீங்கி -தமது இடம் விட்டுச் சென்று, நெறி குழல் சுறுக்கொள - நெறித்த கூந்தலிலே சுறு சுறு என்று நெருப்பு பற்ற; கதறி - வாய்விட்டுக் கதறிக் கொண்டு; கருங்கடல் தலை வீழ்ந்தனர் - கரிய கடலினிடத்துப் போய்விழுந்தார்கள். அரக்கியர் கூந்தலில் நெருப்புப் பற்றியதனால், வலி தாங்காமல் கதறிக்கொண்டு இடம் விட்டுச் சென்று, கடலில் குதித்தனர் என்பது கருத்து.   

இந்தத் தாயை என்னால் மறக்க முடியவில்லை. என்ன ஓர் அவலமான காட்சி! நினைத்துப் பாருங்கள்!! ஒரு பெண் தலைவிரி கோலமாகக் கூந்தல் எல்லாம் நெருப்புப் பற்றி எரிய, இடுப்பிலே ஒரு குழந்தையோடும்; கையினாலே ஒரு பிள்ளையைப் பிடித்துக் கொண்டும்; கடலை நோக்கி ஓடுகிறாள். அவளுடய இன்னொரு குழந்தை இவர்களுக்குப் பின்னாலே தொடர்ந்து ஓடி வருகிறது.

எல்லோரும் தீப்பற்றி எரிய கடலை நாடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவள் அரக்கியாக இருக்கலாம். என்றாலும் அவள் ஒரு தாய். தன் பிள்ளைகளைக் கைவிடாத தாய். பிள்ளைகளின் பிடியைக் கைவிடாது கடலை நோக்கி ஓடும் காட்சியும் இவளைப் பின் தொடர்ந்து பின்னாலே ஓடி வரும் மற்றய பிள்ளையும் மனசை உருகச் செய்கிறார்கள்.

என்ன ஒரு அவலக் காட்சி இது!!


சிவ புராணம் - சில சந்தேகங்கள்....சில திருத்தங்கள்........ சில குறிப்புகள்.........

 அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவைப் பணிந்து, தொழுது இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.

முற்குறிப்பு:

6 - 9 நூற்றாண்டுக்கிடைப்பட்ட காலப் பகுதியில் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கள் அச்சு இயந்திரத்தின் அறிமுகத்துக்குப் பிறகு அச்சுருப் பெற்றன என்பது வரலாறு.

ஓலையில் எழுத்துக்களை எழுதுகிற போது சில சிக்கல்கள் இருக்கின்றன. ஓலையிலே குற்றுகள், சுழிகள், கொம்புகள் போன்ற எழுத்துவடிவங்களை எழுதுகிற போது ஓலை கிழிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதனால் அதனை எழுதுகிறவர்கள் சந்தர்ப்பம் கருதி அவற்றைத் தவிர்த்து விடுவது வழக்கம்.

அதனைப் பிறகு வாசிக்கிறவர்கள் வேறு ஒருவராக இருந்தால் முதலில் அதனை வாசித்துப் பார்த்து, அதன் பொருளை இன்னதென உணர்ந்து, சொற்களை அனுமானித்து, ஒருவாறாக வசனத்தையோ பாட்டையோ வாசிப்பார்கள். அதனை எழுதியவரும் வாசிப்பவரும் வேறு வேறானவர்களாக இருக்கும் பட்சத்தில் அதில் தவறுகள் நேருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது நம் தேவார திருப்பதிகங்களுக்கும் பொருந்தும். 

இந்தப் பதிகங்களைப் படியெடுக்கின்ற போது நேர்ந்துவிட்ட தவறுகளை நான் மிகவும் போற்றி மகிழும் சிவபுராணத்தில் ஆங்காங்கே கணக்கிடக்கிறது. தேவார திருப்பதிகங்களில் பிழை கண்டுபிடிக்கலாமா என்று யாரேனும் என்னோடு சண்டைக்கு வந்து விடாதீர்கள். எனது கருத்தையும் அநுமானத்தையும் நான் சொல்கிறேன். அதில் ஏதேனும் கருத்துப் பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அது சரியாக இருக்கும் பட்சத்தில் நான் அதனை நிச்சயமாகத் திருத்திக் கொள்வேன். யாரும் எதிலும் நிபுணர்கள் கிடையாது. எல்லோருக்கும் தவறுகள் நேர்வது இயல்பு. யானைக்கும் அடி சறுக்கும் என்பதை ஏற்றுக் கொண்டு, திறந்த மனதோடு நாம் பாடல்களைச் சரியான அர்த்தத்தோடு பாடவேண்டுமே தவிர, எழுதி வைத்து விட்டதை சரியோ பிழையோ என்று பாராது அப்படியே ஒப்புவிப்பதைத் தவிப்பதற்காக இப் பாடலை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

நன்றி. தவறிருப்பின் பொருத்தருள்க. மறக்காமலெனக்கும் சுட்டிக் காட்டுக.


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க                                         வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க                                    கோள்களை ஆண்ட

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க                                   நின்று அன்னிப்பான்

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5


வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க                                வேதம் கொடுத்தாண்ட

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க           மெய்கழல்கள்

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க                பிறந்தார்க்குச் 

கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க              கரம் குவிப்பார்

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10        சிரம் குவிப்பார்


ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15


ஆராத இன்பம் அருளுமலை போற்றி

சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20


கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்                                           பல் மிருகமாகிப்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30                                          செல்லாது நின்ற


எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்                               விடை பகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35


வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40


ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்                    நின்று எழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45


கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50


மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை                                                        மலம் சேரும்

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55


விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60


தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனா ரமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65


பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே                                                   பேசாது நின்ற

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே                                      ஓதாதார் உள்ளத்து / ஒழிக்கும் ஒளியானே

நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70


அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே                               துன் இருளே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்                   வந்தறிவாய்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

ஊற்றான உண்ணா ரமுதே உடையானே        ஊற்றானார் உண்ணா அமுதை உடையானே 

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே                                          மீண்டு இங்கு வந்து

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90


அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 


மேலதிக குறிப்புகள்:

1.கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க  கோள்களை ஆண்ட

கோகழி என்பதற்கும் கோகழியினை ஆண்ட என்பதற்கும்  என்னால் சரியான அல்லது பொருத்தமான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது கோள்களை ஆண்ட என்று வருகிற போது நவக்கிரகங்களையும் கோள்களையும் அதன் வலிமைகளையும் நம்புகிற இந்துக்கள் அவற்றை ஆள்கின்றவனாக கடவுளைப் போற்றி, கோள்களை ஆண்ட குரு மணி (தன் - அவன்) தாள் வாழ்க என்று வருகிற போது அது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

2. ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க        நின்று அன்னிப்பான்

ஆகமமுமாகி அதிலிருந்து அன்னிப்பவனாகவும் ( ஆகமங்களில் இருந்து தள்ளி நிற்பவனும் ஆகியவனின் தாள் - பாதங்கள் வாழ்க.

3. வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க    வேதம் கொடுத்தாண்ட 

வேகங் கெடுத்தாண்ட என்பதற்கு எவ்வாறாக அர்த்தம் கற்பிக்க இயலும்? ‘வேதம் கொடுத்த ஆண்டவர்’ என்று நாம் இறைவனை துதிக்கிறோம். வேதங்கள் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை என்று இந்துக்களாகிய நாம் நம்புகிறோம். அதனால் வேதங்களைக் கொடுத்து ஆண்ட வேந்தன் - அரசனுடய அடிகள் வெல்க என்று வருவது பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

4.பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க   மெய்கழல்கள் 

பிறப்பினை இல்லாது செய்யும் பிஞ்ஞகன் ( அவனுடய) மெய்கழல்கள் - கழல் என்பது காலில் அணியும் ஒரு பாத அணி. இங்கு அதனை அணிந்திருக்கிறவனுடய பாதங்களைக் குறிக்கிறது.  உண்மையான பாதங்கள் வெல்க.

5.புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க  பிறந்தார்க்குச்

சேயோன் என்ற சொல்லுக்கு சிவன், சிறந்தவன், சிவந்தவன் என்றெல்லாம் தமிழில் பொருள் கூறப்படுகிறது. இந்து சமயத்தில் புறத்தார் என்று சிறு தெய்வ வழிபாடுகளைச் செய்துவரும் இந்துக்களை குறிப்பிடுவதாகச் சில கருத்துக்கள் காணப்படுகின்றன. இந்து சமயத்துக்குள் நல்லறிவும் ஞானமும் நல்லமைச்சுப் பதவியும் பெற்றிருந்த மாணிக்க வாசகர் இந்துசமயத்துக்குள்ளேயே பாகுபாடுகளைச் சுட்டிப் பாடி இருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

பிறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க - அதாவது பிறந்த எல்லாருக்கும் சிவனாக இருக்கிறவனுடய பூப் போன்றதும் கழல்களை அணிந்துருக்கிறதுமான பாதங்கள் வெல்க! என்பது பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

6.கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க  கரங் குவிப்பார்

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க    சிரங் குவிப்பார்

கரங் குவிவார் / சிரம் குவிவார் என்பதை விட கரம் குவிப்பார் / சிரம் குவிப்பார் என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கரம் குவிப்பவர்களுடய உள்ளங்கள் மகிழும் கோன் - அரசன்/ தலைவன் - அவனுடய கழல்கள் - கழல் அணிந்திருக்கிற பாதங்கள் வெல்க!

சிரங்குவிப்பார் - தலைகுனிந்து வணங்குபவர்கள் - அவர்களை ஓங்கி ( உயரச் செய்யும்) சீரோன் - சிறப்பானவன் - அவனுடய கழல்கள் - கழல் அணிந்திருக்கிற பாதங்கள் வெல்க!

7.பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்      பல் மிருகமாகிப்

பல் மிருகமாகி - பலவிதமான மிருகங்களாக உரு எடுத்து என்று வருதல் பொருத்தமாக இருக்கும். அதனை அடுத்துப் பறவையாய் பாம்பாகி என்று வருவதால் முன்னால் இருக்கும் சொல் பல்மிருகம் என்று வருதல் மிகவும் பொருளுடைத்து.

8.செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்     செல்லாது நின்ற

செல்லா அ - செல்லாது நின்ற - இதுவரை பிறபெடுக்காமல் இருக்கின்ற தாவரக் குழுமத்துக்குள் என்று பொருள் கொள்க.

9.மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்       விடை பகா வேதங்கள்.

இதில் ஓர் எழுத்துப் பிழை தான் நேர்ந்திருக்கிறது என்பது என் அனுமானம். விடைப்பாகா என்பது விடை பகா - அதாவது விடை பகராத - விடை தராத வேதங்கள் என்று வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

10.போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்  நின்று தொழுதால்

இது ஓரு மறை பொருளாய் நிற்கும்சொல் என்றே எனக்குத் தோன்றுகிறது. நிந்தொழும்பின் என்பது நின்று தொழுதால் - நிந்தொழும்பின் என்று பொருள் கொள்ளல் சாலப் பொருந்தும்.( நின்று வணங்குவீர்களானால்)

11மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை  மலம் சேரும்

மலம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் குறிக்கும். இந்துக்களாகிய நாம் நம் ஆத்மாவை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்கள் பீடித்திருக்கின்றன என நம்புகிறோம்.

மலஞ்சோரும்  என்பதற்குத் தனியாக அர்த்தம் காண்பதை விட அச் சொற்தொடருக்கு முழுதாக அர்த்தம் காணின் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

’ஒன்பது வாயில் குடில்’ என்று ஓர் அழகான பதத்தை உபயோகிக்கிறார் மாணிக்க வாசகர். எங்களுடய உடல் ஒன்பது வாயில்களைக் கொண்ட ஒரு குடில் என்று சொல்கிறார் அவர். அவை எவை ஒன்பது வாயில்கள்?

கண்கள் - 2

காதுகள் 2

மூக்குத் துவாரங்கள் - 2

சலவாசல் - 1

மலவாசல் - 1

யோனிவாசல் - 1 

இவ்வாறாக மொத்தம் ஒன்பது வாசல்கள் எங்கள் உடலுக்கு உண்டு. இந்த ஒன்பது வாயில்களைக் கொண்ட குடிலை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் சேரும். (சோரும் என்று அர்த்தமாக மாட்டது)

இந்த உடல் குறித்த உவமைகளை இந்து சமயக் குரவர்கள் பலவாறாகப் பாடியுள்ளார்கள்.

’.......மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி....’ 

என்று ஒளவையார் விநாயகர் அகவலில் செப்புகிறார்.

அது போல, 

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

என்கிறார் திருமூலர் தன் திருமந்திரத்தில். 

பூதத்தாழ்வார் தன் பாசுரத்தில் இவ்வாறு பாடுகிறார்,


‘அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியாக, – நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்’. 

எவ்வளவு அழகிய பாடல்கள் இல்லையா? 


திருமூலரின்  இன்னொரு பாடல் 

’உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே’ - என்றும்


’உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே

கள்ள மனமுடைக் கல்வி இலோரே’!

 - என்றும் உள்ளத்தினுள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெல்லாமோ தேடி அலையும் பக்தர்களைத் திருமூலர்  பாடுகிறார். 

அது போல ’ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி...’  என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தன் பிடித்த பத்து என்று தரும் இந்தப் பாடல்களில் வரும் பக்தி கனிரசத்தை சற்றே நுகர்ந்து பாருங்கள்.

 

1. உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு

வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே!

செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!

எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

2. விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே!

முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,

கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே!

இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

3.அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!

பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

4. அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!

பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!

தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!

இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

5. ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!

மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே!

செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

6. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,

பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!

திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!

இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

7. பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி,

பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே!

தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

8. அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச்

சித்தனே! பக்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!

பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்

எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

9. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உவப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

 

10. புன் புலால் யாக்கை புரை புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என்

என்பு எலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே!

துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ!

இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?


இது போல வள்ளலார் தரும் பாடல் ஒன்றும் இனிது நோக்கத் தக்கது. ( சொல்ல வந்த விடயத்தைத் தாண்டி பதிவு வேறு திசை திரும்பினாலும் பாடல்களின் பொருள்வளத்தினாலும் அதன் அருட் திறத்தினாலும் அர்த்தபுஷ்டியான பாடல் செழுமையினாலும் அவற்றையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.)

’கங்கையில் காவிரியில் நூறுமுறை மூழ்கி

கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி

வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி

வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து

பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து

பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு

தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்

தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்’.

என்கிறார் வள்ளலார்.


சரி நாம் இனி நம் விடயத்திற்கு வருவோம்.


12. பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே    பேசாது

பேராது என்பதற்குப் பதிலாகப் பேசாது நின்ற என்று வருவது பொருத்தமாக அமையும் போலத் தோன்றுகிறது. இறைவன் உயிர்களோடு நேரடியாகப் பேசுவதில்லை; என்றாலும் கருணைக்குரியவனாக; - கருணைக்குரிய பேராறாக அவன் விளங்குகிறான். அதனால், பேசாது நின்ற பெருங்கருணைப் பேராறே என்பதே பொருத்தமான சொல்லடியாக இருக்க வேண்டும்.

13.ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே       ஓதாதார் உள்ளத்து ஒழிக்கும் ஒளியானே

ஓதாதார் அதாவது ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவாய என்ற மந்திரத்தை ஓதாதவர்களுடய உள்ளத்தில் ஒழித்து ( மறைந்து) இருக்கும் ஒளி பொருந்தியவனே - ஒளியானே என்பது பொருத்தமான சொற்தொடராக எனக்குப் படுகிறது.

ஒழி- மறைத்தல்  / இல்லாது செய்தல்

ஒளி - வெளிச்சம் / பிரகாசம்

இந்த வரியில் வரும் இரண்டும்  ( ஒழி / ஒளி )  இருவேறு அர்த்தங்களில் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

14. மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்                  வந்தறிவாய்

 தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

 ஊற்றான உண்ணா ரமுதே உடையானே  ஊற்றானார்; உண்ணா அமுதை உடையானே

இந்த வரிகளுக்கு முதல் மூன்று வரிகளோடு சேர்த்து பொருள் கூறலே பொருத்தம் என்று தோன்றுகிறது. அதாவது, நீ இந்த உலகத்தில் எப்போதும் வந்து போகும் வெவ்வேறான மாற்றங்களாக அறியப்படுகிறாய். ( என்றாலும்) எம்மைத் தேற்றுகிறவனாகிய நீ தேற்றுவதனால் என் சிந்தனை தெளிவடைகிறது. ஊற்றானவனே! உண்ணாத அமுதை உடையவனே! அதாவது,உண்ணாத அமுதை உடையவர் சிவனார். 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, வெளிவந்த அமுதத்தை விழுங்கிய போது அது நஞ்சென்று அறிந்த பார்வதி சிவனாரின் தொண்டையை இறுகப் பற்ற, அது தொண்டயில் தங்கி விட்டது என்கிறது புராணம். அதனால் அவர் நஞ்சுண்ட கண்டன் ( கண்டம் - தொண்டை) ஆனார். அதனைத் நாவுக்கரசரின் திருஅங்கமாலை என்ற தேவாரத் திருப்பதிகம்  இப்படிப் பகரும். ( பதிகம் என்பது 12 பாடல்களால் ஆனது) ( அங்கங்கள் ஒவ்வொன்றும் இறைவனைத் தொழும் ஆற்றை அவர் பாடும் திறன் வியந்து நோக்கற்பாலது. அதனால் அதன் முழுப் பாடலையும் இங்கு பதிவிடுகிறேன்)

தலையே நீவணங்காய் - தலை

  மாலை தலைக்கணிந்து

தலையா லேபலி தேருந் தலைவனைத்

  தலையே நீவணங்காய்.  1  


கண்காள் காண்மின்களோ - கடல் 

  நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்

  கண்காள் காண்மின்களோ.  2  


செவிகாள் கேண்மின்களோ - சிவன்

  எம்மிறை செம்பவள

எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 

  செவிகாள் கேண்மின்களோ.  3 


மூக்கே நீமுரலாய் - முது

  காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை

  மூக்கே நீமுரலாய்.  4  


வாயே வாழ்த்துகண்டாய் - மத

  யானை யுரிபோர்த்துப்

பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை

  வாயே வாழ்த்துகண்டாய்.  5  


நெஞ்சே நீநினையாய் - நிமிர் 

  புன்சடை நின்மலனை

மஞ்சா டும்மலை மங்கை மணாளனை

  நெஞ்சே நீநினையாய்.  6  


கைகாள் கூப்பித்தொழீர் - கடி 

  மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

  கைகாள் கூப்பித்தொழீர்.  7 


ஆக்கை யாற்பயனென் - அரன் 

  கோயில் வலம்வந்து

பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 

  வாக்கை யாற்பயனென்.  8  


கால்க ளாற்பயனென் - கறைக் 

  கண்ட னுறைகோயில்

கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 

  கால்க ளாற்பயனென்.  9  


உற்றா ராருளரோ - உயிர் 

  கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்

  குற்றார் ஆருளரோ.  10  


இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் 

  பல்கணத் தெண்ணப்பட்டுச்

சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்

  கிறுமாந் திருப்பன்கொலோ.  11  


தேடிக் கண்டுகொண்டேன் - திரு

  மாலொடு நான்முகனுந்

தேடித் தேடொணாத் தேவனை என்னுளே 

  தேடிக் கண்டுகொண்டேன்.  12

இவ்வாறாக உண்ணா அமுதை உடையவனே என்பது பொருந்தும்.


15. மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே     மீண்டு இங்கு வந்து

மீண்டு இங்கு வந்து வினைகளினால் ஏற்படுகின்ற பிறவிகள் சேராமல் ( இந்தப் பூமியில் பிறந்து ஆனவம் கன்மம் மாயை இவைகளினால் பீடிக்கப் பட்டு நாம் நல்ல செயல்களையும் தீய செயல்களையும் ஆற்றி இறைவனை அடையும் பாக்கியத்தை மறந்து மீண்டும் மீண்டும் பிறவிச் சாகரத்தில் மூழ்கி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறோம். 

அவ்வாறு மீளவும் இந்த உலகில் பிறந்து வினைப் பிறவியினை எடுக்காமல் என்பது இதன் பொருளெனில் தவறாகா.

இறுதியாக,

.......சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர்

சிவபுரத்தில் உள்ளார் சிவனடிக்கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 

( இந்தப் பாட்டினைப் பொருளுணர்ந்து சொல்லுபவர்கள், பலரும் போற்றும் விதமாக, சிவபுரத்தில் இருக்கின்ற சிவனுடய திருவடியைச் சென்று சேர்வார்கள்.) என்று முடியும் இந்தச் சிவபுராணத்து இறுதி வரிகளோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி.

பிற்குறிப்பு:

பேசாப் பொருளொன்றைப் பேச நான் புகுந்தேன். சரி தவறு தெரியுமளவுக்கு நான் இன்னும் ஞானத்தை அடைந்து விடவில்லை. இருந்த போதும், இந்தச் சிவபுராணத்தை ஓதுகின்ற அன்பர்கள் அதன் பொருளுணர்ந்து பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதி இதனை நான் இங்கு பதிவிடுகிறேன்.

தவறெனில் சிறியேனின் பிழை பொறுத்து ஏற்பது உம் கடன்.

Friday, March 21, 2025

கமலேஸ்வரி. பத்மநாதன் - அம்மா நடந்து போன பாதை – சில காலடித்தடங்கள்

’நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு’

சாந்தம், உரத்துப் பேசாத குரல், சுத்தம், நேர்த்தி, அன்பு, அடக்கம், எளிமை, நன்றியுணர்வு, கொடுத்துப் பழகிய கை, புன்னகை, கட்டுக்கோப்பான நாளாந்த செயல்பாடுகள், 'பார்வையாளராகத்' தன்னை தகவமைத்துக் கொண்ட ஞானம், பண்புநலன் மாறா குணாம்சம், வந்ததை வந்தவாறு ஏற்றுக்கொண்டு மகிழ்ந்த வாழ்வு, முறைப்பாடுகள் சொல்லாத சுபாவம் ...இவைகளைச் சேர்த்து பார்த்தால் தெரிவது எங்கள் அம்மா.

நாம் பெரும் வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தவர்கள் அல்ல. அப்பாவின் அரசாங்க உத்தியோகமும் அம்மா கொண்டுவந்த காணி, தோட்டங்களோடும் ஒரு மத்தியதர வாழ்வை ஆரம்பித்தவர்கள் அவர்கள்.

மாற்றுச்சம்பந்தமாக தன் மாமன் மகனை கைப்பிடித்ததாலோ என்னவோ அப்பாவுக்கு எல்லா விதத்திலும் ஏற்ற ஒரு மனைவியாக அவர் இருந்தார். அப்பாவின் நிர்வாகமே ஓங்கியிருந்த எங்கள் வீட்டில் அம்மாவின் சிக்கனமும் விடாமுயற்சியோடு அவராகவே செய்த தோட்டங்களும் எங்களை ஆளாக்க பெரும் உதவிகளைச் செய்தன.  நம் உற்றார், உறவினர்கள் ஒரு ஆண்  ஒரு பெண் பிள்ளைகளோடு வசதியான ஒரு பெருவாழ்வை வாழ்ந்த போதும் தான் 3 பெண்பிள்ளைகளைப் பெற்றுவிட்டேன் என்று ஒருபோதும் அவர் கலங்கியதில்லை;மனவருத்தம் அடைந்ததில்லை. குறைப்பட்டுக் கொண்டதுமில்லை. கிடைத்த வாழ்வை கிடைத்தவாறு ஏற்றுக் கொண்டு அதில் மகிழ்ச்சியைக் கண்டடைந்தவர். 

தன் சிக்கனத்தாலும், பிரயாசையாலும், ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை வளர்த்தும்; நிலக்கடலை,மிளகாய், உழுந்து, பயறு போன்ற பயிர்களைப் பயிரிட்டும் வரும் பணத்தில் எங்களை வளர்த்து ஆளாக்கினார்.

எங்கள் கல்வியிலும் முன்னேற்றத்திலும் பெருத்த அக்கறை காட்டிய அவர் எங்கள் ஆசிரியர்களோடு எப்போதும் நேரடித் தொடர்பில் இருந்தார். பாடசாலைகளில் நடப்பவற்றை உடனுக்குடன் அறிவதில் பெரிய ஆர்வம் கொண்டிருந்தார். கல்வியே எங்கள் முன்னேற்றத்திற்கு ஒரே வழி என்பதில் மிகத் திடமான நம்பிக்கை வைத்திருந்தார். 

இருந்த போதும், நமக்கு தன்னால் இயன்ற வகையில் சீதனம் சேர்க்கவும் தவறவில்லை. தபால் கொண்டு வரும் தபால் காரர் வழியாக எங்கள் மூவருக்கும் 5/10/20/50 ரூபாய்களைச் சேமிப்புத் திட்டங்களில் போட்டு வந்தார். சிக்கனமாகக் காசுகளைச் சேர்த்து தன் பிள்ளைகளான நம் மூவருக்கும் நகைகள் சேர்த்தார். எல்லாத் தாய்மாரும் இவற்றை எல்லாம் செய்வார்கள் தான் என்ற போதும், அம்மா இவைகளை எல்லாம் தன் வாழ்வு பற்றிய எந்தவிதமான முணுமுணுப்புகளும் முறைப்பாடுகளும் கொள்ளாமல் இன்முகத்தோடு அவற்றைச் செய்தார். வாழ்க்கையைப் பற்றி அவருக்கு எந்தவிதமான மனக்குறைகளும் நான் அறிந்தவரை இருக்கவில்லை. 

அவரிடமிருந்த இன்னுமொரு முக்கியமான குணம் விருந்தோம்பல். நாம் எல்லைப்புற கிராமமான ஓமந்தையில் இருந்ததால் பயணிகள் பலரும் இரவு தங்கி காலையில் தம் பயணத்தைத் தொடரும் போது காலைகள் எல்லாம் அவர்களுக்கு நம் கிணற்றடியிலேயே விடியும். எல்லோருக்கும் மாட்டில் உடன் கறந்த பாலோடு சிறந்த தேனீர் கொடுத்தே அவர் அவர்களை வழியனுப்பி விடுவார். இரவு தங்கும் பயணிகளுக்கு ஆகாரங்களும் எந்தவித சலிப்புமின்றி சமைத்துக் கொடுத்த கைகள் அவை.

இவைகளை எல்லாம் மனம்நிறைந்த மகிழ்ச்சியோடும் வேலைப்பழு பற்றிய முறைப்பாடுகள் ஏதுமற்றும் மிக மகிழ்ச்சியாக அவர் அவற்றைச் செய்தார். அப்பாவும் அதற்கு மிகுந்த ஆதரவோடு இருந்தார்.

கிராமத்தில் ஏழை எளியவர்களோடு எங்கள் இளமைக்காலம் கழிந்தது. எங்கள் வீட்டுக்கருகில் நாம் அன்போடு பாலன்கமத்து அங்கிள்/அன்ரி  என்றழைக்கும் தம்பதிகள் அமைதியாக அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் நம் கிராமத்தில் ஒரு கோயிலும் இல்லையே என்று கருதி ஒரு சித்திபுத்திவிநாயகரை யாழ்வீதியில் தம் வளவோரமாக ஸ்தாபித்து அதற்குத் தினசரி காலை மாலை அலங்காரமும் பூசனைகளும் செய்து வந்தனர். ஒருநாள் அந்தச் சிறு கோயிலுக்கு விநாயசதுர்த்தி பொங்கலைச் செய்வோம் என்ற வேண்டுகோளை  அம்மா விடுக்க, அவர்களும் அதற்குச் சம்மதித்தனர். அந்த நாளில் இருந்து இடப்பெயர்வு வரையும் கிரமமாக விநாயக சதுர்த்திப் பொங்கலை அவர் செய்து வந்தார். 

அந்தநாள் அந்தச் சிறு கிராமத்துக் குடி சனங்களுக்கு கொண்டாட்டமான நாள். தம் நாளாந்த தொழிலை முடித்துக்கொண்டு நம் வளவுக் கிணற்றில் குளித்துவிட்டு அவர்கள் பொங்கல் பிரசாதத்திற்கு வருவார்கள். சிறுவர்களுக்கோ சொல்லவே வேண்டாம். அவர்கள் தேக்குமர இலைகளை ஒடித்து வருவதிலும் சுள்ளிகள் பொறுக்கி வந்து தருவதிலும் தம் வயதொத்த நண்பர்களோடு வீதியோரம் ஓடி விளையாடுவதிலும் ஈடுபட்டிருப்பர். சிறுமிகள் தேங்காய் திருவுவதிலும், தண்ணீர் அள்ளி வருவதிலும் உதவி ஒத்தாசையாக இருப்பார்கள். 

ஒருவழியாகப் பொங்கல் முடிந்து பூசை ஆரம்பமாகும் மணி அடித்தால் போதும்! கிராமமே அங்கு திரண்டு விடும். யாழ் வீதியால் போகும் வாகனங்கள் தரித்து நின்று வழிபட ஆரம்பிக்கும். ஒருவர்  தேவாரம் பாட, ஒருவர் மணியடிக்க, ஒருவர் சங்கு ஊத, பூசைகள் நடந்தேறிய பின் எல்லோரும் தத்தம் இலைகளில் பொங்கலை வாங்கிச் செல்வர். அம்மாவிடம் நல்ல நிர்வாகத் திறன் இருந்ததையும் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். எல்லோருக்கும் சமனாகவும் நிறைவாகவும் பிரசாதம் கிடைத்ததை அவர் எப்போதும் உறுதி செய்து கொள்வதோடு பொங்கல்பானை கழுவுதல், இடத்தைச் சுத்தப்படுத்துதல், போன்ற காரியங்களையும் கவனிக்க பொருத்தமானவர்களை நியமித்து விடுவார்.

இதன் பிறகு அவருக்குத் திருவெம்பாவையும் நம் பிள்ளையாருக்குச் செய்யவேண்டும் என்று ஓர் ஆசை வந்தது. அதற்காக அவர் 10 நாட்களுக்கும் அயலில் வாழும் ஓரளவு வசதிவாய்ப்போடு இருந்த 10குடும்பத்தார்களை இணைத்துக் கொண்டார்.

அந்த நாட்கள் தான் எங்களுக்குத் திருவிழாக்கள். அதிகாலையில் எங்கள் எல்லோரையும் எழுப்பி விடுவார். நாம் நடுங்க நடுங்க முழுகி வர வேண்டும். மின்சார வசதியில்லாத அக்கிராமத்தில் லாந்தர்களோடு நாம் கிணற்றடியில் நிற்க அப்பா பெற்றோல் மக்ஸ் கொழுத்தி எடுத்துக்கொண்டு பற்றறியில் இயங்கும் ரேப்றைக்கோடரோடு கோயிலுக்குப் போவார். கோயில் மணி அடித்தவுடன் குடிசனங்கள் ஒவ்வொருவராக அங்கு உதவிக்கு வரத் தொடங்குவார்கள். கோயில் மணி ஓசையோடு பெற்றோல்மக்ஸ் வெளிச்சமும் சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் கேட்கும் விநாயகர் அகவலும் ஊரை எழுப்ப, பிறகென்ன அமர்க்களம் தான். யாருக்கும் எதுவும் சொல்லத் தேவையில்லை. எல்லோரும் தத்தம் வேலைகளை கடகடவென்று செய்து முடித்துவிடுவார்கள். பூசனைகள் சிறப்பாக ஒப்பேறும்.

இப்படியாக கோயிலும் தோட்டமும் தன் பிள்ளைகளுமாகத் தான் அவரது வாழ்வின் பெரும் பாகம் கழிந்தது. எங்கள் வாழ்வின் ஒவ்வொரு உயர்விலும் எங்கள் அம்மாவின் பெரும் பங்களிப்பு இருந்து வந்திருக்கிறது. ஏழைக்குடியான மக்களுக்கு பணக் கைமாற்றுக்களும், முட்டை, தேங்காய், பால் நெய் போன்றவைகளும் தாராளமாய் சென்று சேர்ந்திருக்கின்றன. சட்டை தைக்கவும், சாரம் மூட்டவும் துணிகளோடு வருபவர்களுக்கு அவர் தான் ரெயிலர். நம் வீட்டுக் கிணறு போலவே வருவோர் எல்லோருக்கும் பயன் கருதாது தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அவர்களுக்கு வாரி வழங்கினார்.

73 Jaffna road, Omanthai என்ற முகவரி அம்மாவினால் பலருடய முன்பின் தெரியாத பயணிகளின் மனங்களிலும் அந்தக் கிராமத்து ஏழை எளிய மக்களது மனங்களிலும் மறையாது பதிந்துபோயிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்றும் அவவைக் காணும் யாரேனும் அதனை நன்றியோடு நினைவு கூர்வதை நான் பலமுறை அவதானித்திருக்கிறேன். அம்மாவுக்குத் தான் அவர்கள் யார் என்பது நினைவிருப்பதில்லை.

ஒரு கர்ம வீரராக பயனேதும் கருதாத ஒரு வாழ்க்கைப் பயணியாக அவர் தன் வாழ்வை பயன்கருதாது பணிசெய்து வாழ்ந்து வந்தார். அதனை அவர் தன் வாழ்வின் இயல்பாகக் கொண்டிருந்தார். அவருக்கு அதில் எந்த விதமான மகிழ்வோ, துன்பமோ இருந்தில்லை. 10ம் வகுப்போடு அவர் படிப்பை  நிறுத்தி இருந்தாலும் இந்த இயல்பு இயற்கையாகவே அவருக்குக் கைகூடி இருந்தது. அத்தகைய ஞானத்தை இயற்கையாகவே அவர் கைவரப் பெற்றிருந்தார். நிலைத்து நிற்காத செல்வத்தை அதிகம் பெற்றிராத போதும் இருந்தவற்றைக் கொண்டு நிலையான அறச் செயல்களை அது அறச் செயல்கள் என்று தெரியாமலே செய்து வந்தார்.

அவரது வாழ்வின் இரண்டாம் பாகம் சிட்னியில் ஆரம்பித்தது. அவரது மூத்தமகள் சாந்தியும் அவரது கணவர் கதிர்காமநாதனும் இணைந்து அப்பா அம்மாவை 2007 ம் ஆண்டு பணம் செலுத்தி பெற்றார் விசாவில் இங்கு அழைத்திருந்தார்கள். விரைவிலேயே அவர்கள் நிரந்தர வதிவிட உரிமையையும் பெற்றுக் கொண்டார்கள். அதன்பிறகு என்னோடு வாழத் தொடங்கினார்கள். அன்பும் அரவணைப்பும் உற்சாகமும் மகிழ்ச்சியுமாக அவர்கள் வாழ்வு சிட்னியில் மலர்ந்தது. அரசாங்கம் அவர்களை கண்ணும் கருத்தோடும் எந்தக் குறையுமின்றிக் கவனித்துக் கொண்டது.  பொருளாதாரச் சுதந்திரமும் அச்சமற்ற பாதுகாப்பும் சகலருக்குமானதாயிற்று. அம்மா சமூகக் கூட்டங்களுக்கு போய் வந்தார். 

வெளியிலேயே போக விரும்பாத அப்பாவை அப்படியே ஏற்றுக் கொண்டதோடு அவருக்கு எந்தவிதமான மனக்குறைகளும் இல்லாது கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார். மிகவும் கட்டுக் கோப்பான வாழ்க்கையை அவர் தன் இறுதிக்காலம் வரை கடைப்பிடித்து வந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவர் 5.30 மணிக்கு எழுந்து விடுவார். முகம் கழுவி, சுவாமி கும்பிட்டு, திருநீறு பூசி, தகப்பனாரோடு சேர்ந்து தேநீர் குடிப்பதோடு தொடங்கும் அவரது நாள் ஒன்று பின்னர் இருவருக்குமான காலை நடைப்பயிற்சியோடும் மதிய சமையலோடும் மாலைநேர ஓய்வும் பொழுது போக்குகளோடும் கழியும். 

வகுப்புகள் இருக்கும் பிரத்தியேக நாட்களில் அப்பாவுக்குப்  பிடித்தவைகளை முன்கூட்டியே சமைத்து வைத்துவிட்டு  மகிழ்ச்சியாகக் கூட்டங்களுக்குப் போவார். பிறகு அப்பாவுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதற்காக வகுப்பு முடியுமுன் விரைவிலேயே வீட்டுக்கு வந்து சாப்பாடு போட்டுக் கொடுப்பார். ஆங்கிலம் அதிகம் தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரோடும் சினேகிதத்தோடு பழகி வந்தார். பஸ்ஸும் ரெயினும் பிடித்துக் கடைகளுக்குப் போய் மச்ச மாமிசங்களையும் மரக்கறிகளையும் தானே வாங்கி வருவார். விசேட தினங்களின் போது செய்யும் பலகாரம், பட்சணங்களையும்; தங்கை சுவீஸில் இருந்து வரும் போது கொண்டுவரும் சொக்கிளேட்டுக்களையும் தான் வழக்கமாகப் போகும் கடைகளில் இருக்கும் நண்பர்களுக்கும் கொண்டுசென்று கொடுப்பார். தங்கையையும் அழைத்துச் சென்று அவர்களுக்குப் பெருமையோடு அறிமுகப்படுத்துவார்.

 நான் அதிகாலைகளில் வேலைக்குப் புறப்படுவதாக இருந்தால் தான் அதற்கு முன்னே எழும்பி எனக்கு உணவு தயார் செய்து பெட்டியில் போட்டுத் தந்து விடுவார். மாலையில் வரும் போது எனக்காக ஏதேனும் சிற்றுண்டி செய்து விட்டுக் காத்திருப்பார். பிறகு எல்லோருமாக இருந்து சிற்றுண்டியும் தேநீரும் அருந்திய படி அந் நாட்களில் அப்பா கடைக்குப் போய் வாங்கி வைத்து விட்டு எனக்காகக் காத்திருக்கும் திரைப்பட சீ டீ யைப் போட்டு படம் பார்ப்பது என்றைக்கும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள். 

அவுஸ்திரேலியாவுக்கு வந்த பிறகு அரசாங்கக் கொடுப்பனவுகளில் வசதியாக அவர் இருந்த போதும், மிகவும் அடக்கமாகவும் எளிமையாகவும் சிக்கனமாகவும் இருந்தார். ஒரு போதும் அநாவசிய ஆடம்பரங்களிலோ பகட்டுகளிலோ தேவையற்ற பேச்சுகளிலோ அவர் ஈடுபட்டதில்லை. அவற்றில் ஆர்வம் காட்டியதுமில்லை. ஊரில் உள்ள தன் ஏழை உற்றார் உறவினர்களுக்கு உதவிகள் செய்தார். ஊரில் தன் ஏழை அயலார் ஒருவரின் பிள்ளைகள் இரண்டுபேரைப் படிப்பித்து பொறியியலாளராக ஆக்கி வைத்தார். பல தொண்டு நிறுவனங்களுக்கு மாதாந்தம் / வருடாந்தம் என்று பணம் கொடுத்தார். ஆனால் அது பற்றி அவர் வேறு யாரிடமும் மூச்சுக் கூட விட்டதில்லை. கொடுத்தது பற்றி யாரிடமும் அவர் பீற்றிக் கொண்டதுமில்லை. 

நண்பர் உறவினர்களோடு அளவளாவுவதிலும் இடங்கள் பார்ப்பதிலும், புதிய புதிய உணவுகளை ருசிபார்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு social groups மிகுந்த ஆதரவினை வழங்கியது என்று நான் உறுதியாகச் சொல்வேன். CMRC யைச் சேர்ந்த Biljana, Shantha, Concila ஆகியோரை அவர் மிகுந்த மதிப்போடு சிலாகித்துப் பேசுவார். Multi cultural mothers group நடாத்தி வந்த Biljana வோடு தாங்கள் போன கன்பரா பயணம் பற்றியும் அவர் பயணத்தின் போது வாங்கிக் கொடுத்த Chicken burger பற்றியும் சொல்வார். அவர் மிகுந்த விருப்பத்தோடு அத்தகைய வகுப்புகளுக்குச் சென்று வந்தார். 

அவரிடம் இருந்த பல திறமைகள் குடத்துள் விளக்காகவே இருந்து விட்டது என்பதை இப்போது தான் நினைத்துப் பார்க்கிறேன். சிறந்த நிர்வாகியாக அவர் இருந்தார். வீட்டை சிக்கனத்தோடும் திறம்படவும் அதே நேரம் தம் அயலார் உற்றார் உறவினர்களுக்கு கொண்டும் கொடுத்தும் வாங்கி நல்ல உறவுகளைப் பேணுபவராக அவர் இருந்தார். ஆடு, மாடு, கோழி, நாய் பூனை எல்லாம் எங்களோடும் வாழ்ந்தன. எங்கள் பாடசாலை நாட்களில் எங்கள் பாடசாலைச் சீருடைகள் மற்றும் வெளியிலே போடும் ஆடைகளையும் அவரே எங்களுக்குத் தைத்துப் போட்டார். இறுதி வரை தன் சேலைகளுக்கான பிளவுஸ்களைத் தானே தைத்துப் போட்டார். 

Smoking, சட்டைகள், cross stitch தையல்கள் எல்லாம் அவருக்கு மிகவும் கைவந்த கலைகளாக இருந்தன. Knitting இல் கைதேர்ந்தவராக அவர் இருந்ததோடு எங்களுக்கும் தன் நண்பர்களுக்கும் பெருந்தொகையான மப்ளர்களைப் அவரவர் பிறந்த நாள்களுக்குப் பின்னிப் பரிசளித்திருக்கிறார். கூடவே சிறு குழந்தைகளுக்கான Knitting சட்டைகள் மற்றும் பூப்போட்ட சட்டைகள் தைத்து தன் பூட்டப் பிள்ளைகளுக்கு போடும் படி தன் பேரப்பிள்ளைகளுக்கு அவர்கள் தன்னைப் பார்க்க வந்த சந்தர்ப்பங்களில் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். படங்களுக்கு வண்ணம் தீட்டுவதில்; புத்தகங்கள் வாசிப்பதில் மிக்க ஆவல் கொண்டவர். கோவிட் காலத்துக்கு முன்னர் வரை இலங்கையில் இருந்து வரும் தினக்குரல் வாரப் பத்திரிகை, தென்னிந்தியாவில் இருந்து வரும் ஆனந்தவிகடன், குங்குமம் ஆகிய பத்திரிகைகளை வாராந்தம் பதிவுசெய்து வாங்கிப் படித்து வந்தார். அதிலிருந்து தனக்கு பிடித்த பகுதிகளை ஒரு கொப்பியில் எழுதியும் வெட்டி ஒட்டியும் வைத்திருந்தார். அவை எல்லாம் பொக்கிஷங்கள்.

         அவர் செய்த பல craft வேலைகளுக்குள் அவர் செய்த scrapbook இனை அவர் காலமான பிறகு தான் முழுமையாகப் பார்க்க முடிந்தது. அது CMRC யினால் நடாத்தப்பட்டு வந்த Biljana வின் தலைமையில் நடந்த ‘Multi cultural mothers group இல் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக அவர் பேணி வைத்திருந்த அதன் சில பகுதிகளை இந்தப் பதிவைத் தொடர்ந்து நீங்கள் பார்க்கலாம். அதில் அவரது ’சொந்த உலகம்’ எப்படியாக இருந்தது என்பதையும் நீங்கள் பார்க்கலாம். 

விதைக்குள்ளே ஒரு விருட்சம் மறைந்திருக்கிறது; ஒரு ஒளிக்கீற்றுக்குள்ளே ஏழு வண்னங்கள் மறைந்திருக்கின்றன; ஒரு பூவுக்குள்ளே தான் தேனும் வாசமும் பொதிந்திருக்கிறது; பாலுக்குள்ளே மறைந்து போயுள்ளது ஒரு குழந்தைக்கான பரிபூரண உணவு.. எள்ளுக்குள்ளே நல்லெண்ணையும் மூங்கில் குளாயுக்குள்ளே பாடலும் ஒழிந்து போயிருக்கிறது. ஆனாலும் அவை எல்லாம் அவையாக வெளிப்பட ஒரு உந்துதல் தேவையாக இருக்கிறது. அதனை நான் அம்மாவுக்குக் கொடுக்கவில்லை என்ற குறை என்னை இப்போது துன்பமுற வைக்கிறது. பல திறமைகளை தன்னுள் வைத்துக் கொண்டும் அவர் அமைதியோடும், அன்போடும் அடக்கத்தோடும் மன நிறைவோடும் ஒரு பெருந்தகையாக வாழ்ந்து போயிருக்கிறார். 

அது போலவே இறுதிக் காலம் வரை STARTTS நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் தமிழ் மூத்த குடிமக்களுக்கான நிகழ்ச்சிகளுக்கும் போய் வருவார். மக்களோடும் சமூகத்தோடும் இணைந்து வாழ்வதில் பெரும் விருப்பம் கொண்டிருந்த அவருக்கு இத்தகைய சமூகம் சார்ந்த கூட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்து வந்தன. குறிப்பாக STARTTS நிறுவனத்தில் பணி புரியும் சுபத்திரா அவர்களை எப்போதும் ‘நல்லபிள்ளை’ என்று வர்ணிப்பார். இத்தகைய தொண்டு நிறுவனங்களின் பணி குறிப்பாக வயதானவர்களின் வாழ்வில் எத்தகைய மகிழ்ச்சியையும் மனநிறைவினையும் வழங்குகிறது என்பதை நான் நேரிலே கண்டு அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். இலவசமாகக் கிடைக்கப் பெறும் இத்தகைய சேவைகள் மேலும் மேலும் பெருக வேண்டும்; மனங்கள் உளமகிழ்வுற வேண்டும்.

அக்கா குடும்பத்தவர்கள் தாம் வந்த புதிதில் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று காட்டிய டொல்பின்கள் பற்றியும் என் தங்கை யாமினியிடம் சுவிஸ் நாட்டுக்குப் போன போது தாம் புறாக்களுக்குத் தீனி போட தங்கையின் குழந்தைகளோடு போன இடங்கள் பற்றியும் மிக ஆசையோடு சொல்வார். 

’ஏன் அம்மா நான் உங்களை ஒரு இடமும் கூட்டிக் கொண்டு போகயில்லையே? தாய்லாந்து, மலேசியா எல்லாம் போனனாங்கள் தானே!’ என்று கேட்டால், என்தோழி செளந்தரியை அவர் எப்போதும் சுட்டிக் காட்டிச் சிலாகித்துப் பேசுவார். ' நீ எங்க என்னை வெளியில கூட்டிக் கொண்டு போனனீ. செளந்தரி எல்லோ அந்த இடங்களைக் காட்டினது' என்று எனக்குச் சொல்வார். அது உண்மையும் கூடத்தான். என் தோழிகள் அம்மாவோடு மிகுந்த அன்புறவோடும் நட்போடும் பழகி வந்தார்கள். கீதா, கெளரி, சுதா, செல்வி, சுபத்ரா,பானு,பானுவின் கணவர் ரவி எல்லோரையும் இந்த நேரம் நன்றியோடு நினைவு கூருகிறேன். நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அவருக்கு உற்ற துணையாகவும் ஆதரவோடும் இருந்தீர்கள்.

எனது தந்தையார் 22.2.22 காலமானதில் இருந்து அவரை ஒருவித மனப்பாரம் அழுத்தியபடியே இருந்தது. அவரது இழப்பு அவரை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கி இருந்தது. அவர் அதனை வெளிப்படையாகக் சொல்லாது விட்டாலும் அவரது முகம் களையிழந்து போயிற்று. அதிலிருந்து அவர் உடல் உபாதைகளுக்கு ஆளாகத் தொடங்கினார். இருந்த போதும் அவர்கள் இருவரும் வந்த காலத்தில் இருந்து  அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த டொக்டர் வதனி அவவை சிறப்பாகவும் அக்கறையோடும் கவனித்து வந்தார். அம்மாவிற்கும் தன் வைத்தியர் மீது எப்போதும் ஒருவித Loyalty யும் நன்றியுணர்வும் கடைசிவரை இருந்தே வந்தது. வைத்தியசாலையிலும் அவர் உயர்தரமான சிகிச்சையே பெற்று வந்தார். 

இறுதியாக என் தந்தையாரைப் போலவே தனது 85 வது வயதில் யாருக்கும் பாரமில்லாமல் யாருக்கும் எந்தக் கஸ்ரமும் கொடுக்காமல் உறக்கத்தின் போது மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக 24.4.24 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  தொழிலாளர் தினமான 1.5.24 அன்று நமக்காகவே உழைத்த அந்த உயிர் இறைநிழலில் இளைபாறிக் கொண்டது. 6.5.24 அன்று என் தங்கையின் பிறந்ததினத்தில் அன்று அவர் தன் இறுதிப் பயணத்தை இப் பூவுலகில் நிறைவு செய்தார்.

அவர் ஒரு கர்மவீரராக தன்வாழ்வை முறைப்பாடுகள் எதுவும் சொல்லாத வகையில் இந்தப் பூமிக்குப் பாரமில்லாமல் வாழ்ந்து போனார். ஓர் உன்னதமான வாழ்க்கை முறை ஒன்றை எங்களுக்கு அவர் வாழ்ந்து காட்டிப் போயிருக்கிறார். சிக்கனம், கட்டுக் கோப்பு, ஒழுக்கம், அடக்கம், எளிமை, பண்புநலம், கொண்ட ஓர் ஆத்மா தன் இருப்பை வாழ்ந்ததன் வழி எங்களில் இருத்தி விட்டுத் தன் பயணத்தை இப் பூவுலகில் இனிதே நிறைவு செய்து கொண்டது.

அதி அழகிய குணநலன்களைத் தன் அழகாக வரிந்து கொண்ட ஓர் ஆத்மா; உன்னதமான இந்த வாழ்க்கைத் துணை; பிள்ளைகளின் மகிழ்வில் தன் மகிழ்வைக் கண்ட இந்த உத்தம தாய் இறை நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவரின் அருட்கருணை வழிகாட்டட்டும்.

அம்மா! நீங்கள் வாழ்ந்து காட்டி விட்டுச் சென்றுள்ள உங்கள் காலடிகள் எங்கள் பாதைக்கு வழிகாட்டட்டும்!

யசோதா.பத்மநாதன்.

மகள்.


அப்பா: ஆறுமுகம் . பத்மநாதன்

 

                 – ஒரு தண்ணீர் இரகசியம் - 

உலக வரைபடத்தில் சிறு புள்ளியாய் தோன்றும் இலங்கை தீவின் நுனிமுனையில் 17.11.1936 ம் ஆண்டு பிறந்து, மாபெரும் தீவான அவுஸ்திரேலியக் கண்டத்தில் 22.02.2022 ம் ஆண்டு இயற்கை எய்தி, உலகப் பிரபல்யம் பெற்ற ஒப்ராஹவுஸ் / ஹாபர்பிறிட்ஜ் முன்னிலையில் உள்ள கடலில் சங்கமமான ஒரு சமானிய மனிதன் சொன்னதும் நான் அறிந்ததுமான கதை இது.

வீமன்காமம், தெல்லிப்பழையப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் – செல்லமுத்து தம்பதிகளுக்கு 17.11.1936 ல் முதல் மகனாகப் பத்மநாதன் பிறந்தார். இவருக்கு முன்னர் பிறந்த குழந்தைகள் எதுவும் நீடித்து நிலைத்திருக்க முடியாத ஆயுளைக் கொண்டமைந்தமையால் இவர் பிறந்ததும் இவரைக் ‘கொடுத்து வாங்கி’ கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்கள். இவருக்குப் பிறகு, அன்னலட்சுமி, பாலசிங்கம், குணரத்தினம், கனகரத்தினம், ரஞ்சிதமலர், யோகராசா என சகோதரர்கள் பிறந்தனர்.

சகோதரர்கள் பலர் இருந்த போதும் தாயாருக்கு மூத்தவரான இந்த மகன் மீது இருந்த அதீத பாசத்தினால் பள்ளிக்குப் போகும் பிரியம் இல்லாத போதும்; பாடல்கள், திரைப்படங்கள் மீதான நாட்டம் அதிகரித்த போதும்; நண்பர்கள் கூட்டு அதிகரித்து மது, புகைத்தல் என்பவற்றின் மீதான விருப்பம் கூடிய போதும்; மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த இவரின் தந்தையின் சொல் கேளாமல் திரிந்த போதும்; தாயாரின் ஆதரவினைப் பெற்றவராக அவர் இருந்தார். சுவர் ஏறிக் குதித்து நடுச் சாமங்களில் திரைப்படம் பார்க்கப் போகும் அவருக்கு நடிகை பானுமதியை மிகவும் பிடிக்கும். 

இவர்கள் சிறுவர்களாக இருந்த போது அவரின் தாயாரின் சகோதரர்களும் தந்தையாரின் சகோதரர்களும் அருகருகாக வாழ்ந்து வந்தனர். மிக நெருக்கமாக உறவினரோடும் சகோதர வாஞ்சையோடும் அவர்கள் வாழ்ந்து வந்ததால் அப்பாவின் தகப்பனாரின் சகோதரியான என் தாயாரின் தாயாரோடு குடும்ப உறவும் பந்தமும் நீடிக்கும் பொருட்டு பிள்ளைகள் பற்றிய ஒரு கூட்டு உடன்படிக்கை ஒன்றினை அவர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டனர். அதன் படி என் தகப்பனாரின் தங்கையான அன்னபூரணியை ஆறுமுகம் அவர்களின் தங்கை (சின்னம்மா) மகனான நடராசாவும் அவர்களின் மகளான கமலேஸ்வரியை என் தகப்பனாரும் உரிய காலம் வரும் போது மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த உடன்படிக்கை.

10ம் வகுப்புவரை படித்துத் தேறி கூட்டுறவு முகாமையாளராகப் பதவியேற்றிருந்த அப்பா, பெற்றோரால் திட்டமிடப்பட்ட உடன்படிக்கையின் பேரில் 1963ம் ஆண்டு தன் தகப்பனாரின் தங்கை மகளான கமலேஸ்வரியையும் கமலேஸ்வரியின் மூத்த அண்ணனான நடராசா (முன்னாள் சுங்கத்திணைக்கள ஆணையாளர்) அப்பாவின் தங்கையான அன்னபூரணியையும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்தின் பின் வேலை நிமித்தம் பல இடங்களுக்கும் இடம்மாறி மூன்று பெண்பிள்ளைகளாக சாந்தி, யசோதா, யாமினி என நாமும் பிறந்து பாடசாலையில் சேரும் காலம் வந்த போது ஓமந்தையில் நிரந்தரமாகக் காணி வாங்கிக் குடியேறினார். 

ஓமந்தை வீடு அவர் உழைப்பில் உருவாகிய இல்லம். அது ஒரு பூஞ்சோலை; பழச் சோலை. ஆடு, மாடு, நாய் பூனை, கோழி என பல உயிரினங்கள் எங்களோடு சமனாய் வாழ்ந்த வாழ்வில்லம். கமுகு, தென்னை, பலா, வாழை, லாவுல், கோப்பி, கொய்யா, மா போன்ற பயந்தரு மரங்கள் மாத்திரமன்றி; யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து பலவிதமான குறோட்டன் செடிகளும் கொண்டுவந்து வைத்து வீட்டை அழகு படுத்தினார். மல்லிகைப் பந்தல் அமைத்து அதன் மொட்டவிழும் வாசப்பூக்கள் உதிர இரவுணவின் பின் சீமேந்து இருக்கையில் இருந்து படிகளில் நாமிருக்க நம்மோடு பகிர்ந்து கொண்ட தன் ஒழிவுமறைவில்லாத பால்ய காலக் கதைகளை நிலவும் நன்கறியும்.

அங்கு எங்களோடு வளர்ந்த வாய் பேசா ஜீவன்களின் மேல் அவர் கொண்டிருந்த நேசம் அசாதாரனமானது. நாய், பூனை, ஆடு, மாடு, கோழி என்பன மட்டுமன்றி பூங்கன்று, மரக்கன்று, பழக்கன்றுகள் கூட வாடப் பொறுக்காதவர்; அவைகளுக்குரிய ஊட்டச் சத்தினையும் தண்ணீரையும் அவர் ’குடித்தாலும்’ கொடுக்க மறந்ததில்லை. அவைகளும் தம் அன்பை வெளிக்காட்ட தவறியதே இல்லை. அதனால் தானோ என்னவோ அவர் உயிர் இந்த உலகைப் பிரிந்த போதும்; உடல் உலகை பிரிந்த போதும்; அஸ்தி நீரில் கலந்த போதும் வருண பகவான் பூவைப் போல மழையை மாரி எனச் சொரிந்து அவரை ஆசீர்வதித்தான். அது ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வாகவே இருந்தது. 

அது ஒரு தண்ணீர் இரகசியம். பிரபஞ்ச பாஷை. அப்பாவுக்கும் இயற்கைக்கும் இடையே இருந்த ஓர் இரகசிய பரிவர்த்தனை. 

தண்ணீரை அவர் தண்ணீராகவே செலவு செய்தார். மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பழக்கன்றுகளுக்குப் போகும் அதே அளவு தண்ணீர் பூங்கன்றுகளுக்கும் செல்லும். தன் பட்டி மாடுகளுக்கு இறைக்கப்படும் தண்ணீர் எப்போதும் ஊர் மாடுகளுக்குமானதாகவே இருக்கும். வாய்க்கால் வழியோடும் தண்ணீர் புல்லுக்கும் பொசியுமுன் நாம் குளிக்க தொட்டியை நிறைத்து விட்டே செல்லும். ஊர் கொக்குகளும் காகங்களும் புலுனிக் குஞ்சுகள், சிட்டுக் குருவிகளுமாகப் பறவைகள் வாய்க்கால் தண்ணீரில் கூட்டமாய் வந்து குளித்துச் செல்வது ஒரு கண்கொள்ளாக்காட்சி. எமக்கு இறைச்சி வாங்கும் போது வளர்ப்பு நாய்களுக்கும் தனியாக ஒரு இறைச்சிப் பொதி வாங்கப்பட்டிருக்கும். சாப்பிடும் போது அருகில் நிற்கும் பூனைக்கு முதலில் ஒருபங்கு வைக்கப்படும். 

அந்த ’ஓமந்தை வீடு’ ஓமந்தையில் இருந்து 3 மைல்கள் யாழ்ப்பாணப் பக்கமாக அமைந்திருந்தது. அது தான் நாங்கள் எல்லோரும் ’வாழ்ந்த வீடு’. முன்புறம் யாழ்ப்பானம் கண்டி வீதியையும் பின்புறம் கொழும்பு யாழ்ப்பான ரயில் பாதையையும் கொண்டமைந்த 5 ஏக்கர் மேட்டு நிலம். அத்தனை ஈழப் போராட்ட இயக்கத்தினருக்கும் ஓரு சரணாலயமாக அன்று அது விளங்கியது. 

தமிழர்களின் எல்லைக்கும் இராணுவ எல்லைக்கும் இடையே எங்கள் வீடு அமைந்து விட்டிருந்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சி தான். ஆனாலும் அது முன்பின் தெரியாத மக்களுக்கு கொடுத்த அடைக்கலம் பெரிது. எல்லையில் பெரிய கிணறு தோட்டம், நிழல் தரு மரங்கள் சகிதம் அந்த இடம் இருந்ததால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளுக்கு நல்லதொரு தங்குமிடமாக எங்கள் வீடு அமைந்திருந்தது. இன்றும் எங்களை அறிந்தவர்கள்; நாம் மறந்து விட்டவர்கள் உங்கள் வீட்டில் நாம் நின்றுவந்தோம் என்று சொல்லுகிற போது; எம் தந்தை தாயாரின் தாராள மனதை அவர்கள் பாராட்டும் போது; மனம் நெகிழும். இன்றும் பலரின் வாழ்வின் முக்கிய தருணங்களில் அடைக்கலம் கொடுத்த அந்த வீடும் வாழ்வும் பலரின் மனங்களில் நிலைத்திருக்கும் என்றே நம்புகிறேன். அது ஒரு மண்வாசனை நிறைந்த அழகிய நிலாக்காலம்!

எனினும் அவர் குடியை விட்டாரில்லை; புகைத்தலைக் குறைத்தாரில்லை; பணத்தினைச் சேகரிக்கும் பண்பு அவரிடம் சிறிதளவும் இருக்கவில்லை. என் தாயார் அதைப் பற்றிப் பேச்செடுக்கும் போதெல்லாம்; 3 பெண்பிள்ளைகள் குறித்த எதிர்காலம் பற்றிய கரிசனையை வெளிப்படுத்தும் போதெல்லாம் மேல் கூரையைக் காட்டி ‘அவன் தருவான்’ என்பார். ’கள்ளமில்லா வெள்ளை உள்ளத்தின்’ நம்பிக்கை அதில் தெரியும். அப்போது ஒரு மந்திர; மந்தகாச புன்னகை அவர் முகத்தில் தவழும். கடவுள் தன்னைக் கைவிட மாட்டார் என ஆழமாக நம்பியவர் அவர். கடவுளோடான அவரது உறவு பூரண சரனாகதி என்பதாகத் தான் இருந்தது. பொறுப்பு முழுவதையும் தான் நம்பிய மேலிருக்கும் ஒருவன் மீது போட்டு விட்டு ’பாரமற்று’ மகிழ்ச்சியாக இருந்தார். 

அவரை நன்கு அறிந்து கொண்ட, மிகச் சிறந்த, உண்மையான நண்பர்கள் அவருக்கு வாய்த்தது உண்மையில் அவரின் அதிஷ்டம் அல்லது ஒருவித குடுப்பனை என்றே நான் நம்புகிறேன். அவர்கள் இந்த ’ஊதாரிக் குடிகாரனுக்காக’ எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள். இவரும் அவர்கள் மீது உண்மையான அன்பை வைத்திருந்தார். அவர் நம்பியவர் யாரும் அவரைக் கைவிட்டதில்லை. அவர் தன் சகோதரர்களுக்கும் என் தாயாரின் சகோதரர்களுக்கும் கூட தன் நண்பர்களையே திருமணம் முடித்து வைத்தார். அப்பாவை எல்லோரும் ’பெரியண்ணை’ என மரியாதையோடு அழைப்பதற்கும் அன்பு கூருவதற்கும் அவரிடமிருந்த இந்த தன்னலமில்லாத ஏதொன்றையும் எதிர்பாராமல் உதவும் அவரின் நற்குணமே காரணமாகும். 

சிட்னிக்கு வந்த பின்னரும் மிகச் சிலரையே தன் நண்பர்களாக அவர் ஏற்றுக் கொண்டார். எப்படியோ அவர்களும் அப்பாவின் ஆத்மார்த்தமான நண்பர்களாக விளங்கினார்கள். ஒரு தொலைபேசி அழைப்பில் அவர்கள் எல்லோரும் அவருக்கருகில் இருந்தார்கள். அவர் உரிமையோடு வேண்டுவனவற்றை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உடனடியாக அவருக்காக நிறைவேற்றிக் கொடுத்தார்கள். அதில் யாழ்ப்பாணத்தில் இருந்த செல்வரட்னம் மாமா,( 20.3.22 அன்று அவர் காலமானார்)  சிட்னி லோயர். செந்தில் அவர்கள், மயில் அங்கிள், குடும்பநண்பர் விமலன் குடும்பத்தினர், ATBC வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பாஸ்கரன், ஜெயச்சந்திரா ஆகியோர் முக்கியமானவர்கள்.

அவரது பால்ய நண்பர்களில் ஒருவரான மாதவன் என்பார் 70 களில் லண்டனுக்குக் குடிபெயர்ந்த பிறகு என் தந்தையாருக்கு ஒரு ரேப் றைக்கோடரைப் பரிசளித்திருந்தார். அப்பாவின் திருமணத்தின் போது ஒரு சொனி ரான்சிஸ்டரை என் தாயாரின் அண்ணன் அப்பாவுக்கு பரிசளித்திருந்தார். இவை இரண்டையும் அவர் கண்ணும் கருத்துமாகப் பேணி வந்தார். அதில் பக்திப் பாடல்களை இசைக்க விட்டு விட்டு அவர் கேட்கும் தோரணை அவர் இசையிலும் பாடல்வரியிலும் எத்துணை உன்னதமான ஈடுபாட்டினைக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும். அந்தப் பாடல்களை எல்லாம் யாழ்ப்பானம் போய் ’விக்ரர் அண்ட் சன்ஸ்’ கடையில் எழுதிக் கொடுத்து ஒலிப்பதிவு செய்து கசட்டாக வரிசைக் கிரமமாக அடுக்கி வைத்திருப்பார். அதில் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் பல்வேறு விதமான குணபாவங்கள் அவர் முகத்தில் தோன்றி மறையும். இசையில் அவர் முழுவதுமாக மூழ்கி மெய்மறந்து போவார். 

ஞாயிற்றுக் கிழமை என்றால் அன்று எங்களின் கொண்டாட்ட நாள். அவர் தன் வானொலி, ரேப்றைக்கோடர், சைக்கிள் என்பவற்றை சிங்கர் ஓயில் போட்டு சிறப்பாகத் துடைப்பார். சிறுவர்களாக இருக்கும் எங்கள் மூன்று பேருக்கும் அரப்பு எலிமிச்சங்காய் போட்டு அவித்த பொருட்களை தலைக்குப் பூசி எங்கள் எல்லோரையும் கிணற்றடியில் நன்றாக முழுக வார்ப்பார். அதன் பிறகு வரிசையாக நடுங்கிக் கொண்டு நிற்கும் எங்களுக்குத் தலை துவட்டி சட்டை போட்டு பவுடர் போட்டு தலையை நன்றாக மேவி இழுத்து விடுவார். பிறகு தானும் போய் முழுகி வருவார். அன்று மதியம் ஒரு பெரு மாமிச விருந்து நமக்குக் காத்திருக்கும். 

வீட்டில் வேலி கட்டுவது; பாசல் கட்டுவது; வாய்க்கால் இழுப்பது என்பவற்றில் எல்லாம் அவரிடம் ஒரு தனி அழகும் நேர்த்தியும் உறுதியும் இருக்கும். சரியாகச் செய்யாதவிடத்து நாங்களும் நன்றாகப் பேச்சை வாங்கிக் கட்டிக்கொள்வோம். இறுதிக்காலம் வரை அவர் வழக்கமாக அமர்ந்திருக்கும் கதிரைக்கு முன்னால் இருக்கும் மேசையில் ஒரு டையறி, பேனா, கண்ணாடி, Business directory, தொலைபேசி எல்லாம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். டையரியில் தன் மனம் கவர்ந்தவர்களின் பிறந்த தினங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பன குறிக்கப்பட்டிருக்கும். இழுப்பறைகளில் சீராக அடுக்கி வைக்கப்பட்ட புது பற்றறிகள், கடித உறைகள், கயிறு, குறடு, திருத்து கருவிகள், எழுது தாள்கள், பல்வேறு ரக பேனாக்கள் போன்றன இருக்கும். ஓர் ஒழுங்கும் நேர்த்தியும் அவரிடம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அது அவரின் நடையுடை பாவனைகளிலும் தெரியும். ஆனாலும் இத்தகைய நற்குணங்களைக் கூட அவர் எங்களிடம் திணிக்கவில்லை. நம்மை நாமாக வளரவிட்டார். அவர் ஒரு பொழுதிலும் உண்மை, நேர்மை, அன்பு, பாசம், பற்று, கருணை என்பவற்றில் துளியளவும் குறை விட்டதில்லை. குடியின் மீது எத்துணை நாட்டம் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு அவர் குடும்பத்தின் மீதும் அத்துணை பிரியமானவராக இருந்தார்.

அவருடய மன உறுதியை காணும் சந்தர்ப்பம் எமக்குக் கிட்டியது என் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு முன்னரான சில நாட்களில் தான். ஒரு நாள் அங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருந்த படி மிகச் சாதாரணமாக ’நான் இன்றிலிருந்து இந்த குடியையும் புகையையும் விடப் போகிறேன்’ என்று சாதாரணமாக அறிவித்தார். நாங்கள் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனை தரம் எத்தனை பேர் சொல்லியும் கேட்காதவர்; மற்றும் குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்று நாம் நினைத்திருந்த இந்தக் கருதுகோள்களை எல்லாம் தவிடு பொடியாக்கி விட்டு அப்போதைக்குப் பிறகு எப்போதைக்குமே அவர் ஒருபோதும் இவை இரண்டையும் தொடவில்லை!! தொடவே இல்லை!!! நாங்கள் எல்லோரும் ஆச்சரியப்படும் படி அவரின் நண்பர்கள் அழைக்கின்ற போதும் அதனை மறுத்து வேண்டாம் என்று சொல்கிற மனஉறுதியை அவர் கொண்டிருந்தார். என் தந்தை என்று நான் பெருமை கொள்ளும் படியாக அவர் இந்த மன உறுதியை எங்கள் முன் நிரூபித்துக் காட்டினார். அவர் உயிர் பிரியும் வரை அவர் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் என்பது எத்துணை பெரிய ஆத்மபலம் இல்லையா? 

அவரது இறைநம்பிக்கை எத்துணை ஆழமானதாக இருந்ததென்பதற்கு பிள்ளைகள் ‘சீதனம் இல்லாமலே’ மணமுடித்துக் கொண்டதும் ஒரு நிரூபணமாகும். மூத்த மகளான சாந்தியை டொக்டர். ஜெகன்நாதன் அவர்களின் ஏக புதல்வன் கதிர்காமநாதனும் கடைசி மகளான யாமினியை முள்ளியவளையைச் சேர்ந்த செல்வராசா அவர்களின் கனிஷ்ட புதல்வன் ஜீவராசாவும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். நடுவில் பிறந்த யசோதா கல்வியில் தேறி தனக்கென, ’நிமிர்ந்த நெஞ்சமும் நேர்கொண்ட பார்வையும்’ கொண்ட ஒரு வாழ்வை தனக்குப் பிடித்தபடி அமைத்துக் கொண்டார். நாங்கள் சிட்னிக்கு வந்ததன் பிறகு, என் இளைய சகோதரி மணமுடித்து சுவிஸ் போன பிறகு, அவர்கள் சில வருடங்கள் கொழும்பில் இருந்தார்கள். அப்போது அவர் கான்சர் நோய்க்கு ஆளாகிக் குணமானார். இங்கு 2007ம் ஆண்டு சிட்னி வந்து ஒரு சத்திரசிகிச்சைக்குப் பிறகு பூரண குணமானார். 

வயது, இடமாற்றம், சுவாத்தியங்கள், வாழ்க்கை மாற்றம் எல்லாம் எல்லோரையும் பாதிக்கும் புலம்பெயர்வில் நாம் எல்லோரும் சந்திக்கும் ஒன்று தானே! அந்த வகையில் முதுமையை அவர் ஏற்றுக் கொண்ட விதம் எடுத்துக் காட்டாய் அமையத்தக்கது. சிறந்த அவதானியாக இருப்பதன் வழியாக முதுமையை அவர் எதிர்கொண்டார். ’ Age gracefully’ என்பதன் அர்த்தத்தை நான் அவரிடம் கண்டேன். முதுமையை அவர் கனிவோடு ஏற்றுக் கொண்டார். தேவையான போது தேவையறிந்து மெளனமாக எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் பேருதவிகளை நல்கினார். தன்னைச் சரியாகக் கவனித்துக் கொண்டார். காரணமற்று யார் மீதும் தன் பாரத்தைச் சுமத்தாது பார்த்துக் கொண்டார். தேவையான அளவு மெளனத்தைத் தனதாக்கி அவதானத்தை மேம்படுத்தி வசீகரமான வாழ்க்கையை தனதாக்கிக் கொண்டார். அநாவசியமாகக் கதைப்பதை அவர் என்றைக்கும் விரும்பியதில்லை. நான் அறிந்து அவர் ஒரு போதும் எது பற்றியும் முறைப்பாடுகள் சொன்னதில்லை. சலித்துக் கொண்டதில்லை. தன் அவதானத் திறமையினால் சகல விஷயங்களையும் அறிந்து வைத்திருந்தார். அவர் யாரைப் பற்றியும் வேறொருவரோடு பேசுவதில்லை. அதே நேரம் ஒருவரிடம் ஒரு சிறப்புக் குணத்தைக் கண்டு விட்டால் அதனை உடனடியாகவே அவரிடம் சொல்லிச் சிலாகிக்கவும் அவர் தயங்கியதில்லை. தனக்கென தனியான நடை, உடை, பாவனைகளைக் கொண்டிருந்த, மந்திரப் புன்னகை புரியும், பெண்டில்ஹில்லின் லோக்கல் எம்ஜீஆர் அவர். இது தான் நான் கண்ட அப்பா.

ஆனால், ஒரு விடயத்தில் மட்டும் அவர் தன்னை ஒரு போதும் மாற்றிக் கொள்ளவில்லை. அவருக்கு எப்போதும் அம்மாவின் கையால் சமைக்கப்பட்ட உணவு வேண்டி இருந்தது. தாயாரும் தன்னால் இயலாத போதும் விருப்போடு அதனைச் செய்து கொடுத்து வந்தார். சிட்னி அவர்கள் உறவை எது விதத்திலும் மாற்றி அமைக்கவில்லை. அவர்களுடய கணவன் மனைவி உறவு ஊரில் எப்படி இருந்ததோ அதிலிருந்து அது எள்ளளவும் மாறுபாடடையவில்லை. இருவருமே அதில் உறுதியான தெளிவான குண இயல்பை வெளிப்படுத்தினார்கள். அது மிக இயற்கையான இயல்பான மாறவோ மாற்றவோ பிரயத்தனம் எதுவும் எடுக்காத இயல்புத் தன்மையைக் கொண்டிருந்தது. அழகான உறுதியான அன்பு, புரிந்துணர்வு, Discipline life style என்ற அடித்தளத்தில் இருந்து எழுப்பப்பட்ட அந்த உறவு இறுதி வரை மிக உறுதியாக இருந்தது. 

இடைக்கிடை வரும் அம்மாவுடனான சிறு சிறு மனத்தாங்கல்களை அவர் ஒரு சிறு இதழ்பிரியும் நகைச்சுவையோடு கடந்தார். ‘எப்ப என்னைக் கடவுள் கூப்பிடப் போறாரோ தெரியேல்லை’ என்று அம்மா ஒரு நாள் அலுத்துக் கொண்ட போது, ‘அவசரப்படாதையணை; எல்லாரும் சேர்ந்து போவம்’ என்றது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அவரது நாளாந்த உணவு உறங்கும் தேநீர் நேரங்கள் எப்போதும் ஒரே சீராக சரியாக நடந்து வரும். குளிர் காலத்திலும் இதுவே நியதியாக இருந்தது. அப்பா காலை 6.00 க்கு விழித்தெழும் போது அம்மா 5.30க்கு விழித்தெழுந்து தயாராக இருப்பார். காலைத் தேநீர், உணவு மற்றும் நடைப்பயிற்சி முடித்து வந்ததும் 10.00 மணிக்கு தேநீர். பின்னர் மதியம் 12.30 க்கு உணவருந்தி விட்டுப் படுத்தார் என்றால் 2.45 க்கு எழும்புவார். முகம் கழுவி திருநீறு பூசி தன் இருக்கையில் வந்தமர்ந்தார் என்றால் அம்மா தேநீரோடு நிற்பார். மாலை 7.00 மணிக்கு இரவுணவு முடிந்து விடும். இந்த நேரக்கணக்கில் நான் அறிந்து இருவரிலும் ஊரிலும் சரி இங்கும் சரி மாற்றங்கள் ஒரு நாள் கூட நிகழ்ந்ததில்லை. அவர்கள் சீரான ஒரு வாழ்வு முறையில் இருந்தார்கள். 

நம்மைப் பிரிந்து கொண்டிருக்கும் முதல் தலைமுறையின் உன்னதமான அடித்தளம் கொண்ட வாழ்வுமுறையின் உதாரண பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தார்கள். அதற்கு, அவருக்கேற்ற அவரைப் புரிந்து கொண்ட மனைவி கிடைத்தது அவரின் பேரதிஷ்டம். அவருக்கும் அது நன்றே தெரிந்திருந்தது.

இறுதிக் காலங்களில் ’என்னவோ நடக்கிறது நடக்கட்டும்; எல்லாம் அவன் செயல்’ என்று அடிக்கடி சொல்லும் அவர், வாழ்க்கையின் போக்கைப் புரிந்து கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவ மனநிலையில் இருந்தார். இறுதியாக சுமார் ஒரு மாதகாலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்து 22.202.2022 அன்று தனது 85வது வயதில் அமைதியான முறையில் இவ்வுலகை அவர் நீத்தார். 

அவர் தன் வாழ்க்கையை; அன்பும் நேர்மையும் மிளிர, வாய்பேசா உயிர்களோடும் தன்னைப் பகிர்ந்து கொண்டு, இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி, நல்லதொரு குடும்பவாழ்வை சுமூகமாக வாழ்ந்து மறைந்தார். இசையால் தன் ஆத்மாவைக் குளிர்வித்தார்; நட்பினால் வாழ்க்கையைச் சிறப்பித்தார். மன உறுதியால் வாழ்ந்து காண்பித்தார்! 

அவர் ஒரு ‘பாசக்கார பய’!

வாழ்க்கை எதையோ கற்றுத்தர முயற்சிக்கிறது. அது எது என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. அப்பாவின் வாழ்க்கையில் அது ஒரு நம்பிக்கை தரும் ரகசியம். அவரின் வாழ்வும் முடிவும் ’தண்ணீர் வழி’ உணர்த்தும் பாடம் இது தான்.

மாபெரும் சமுத்திரத்தில் இருந்து தண்ணீர் மேகமென மேலே போய், மழை என இறங்கி, நதியாக மாறி, மீண்டும் கடலை அடைகிறது….இதே சம்பவம் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அது ஒரு வட்ட வடிவாக நிகழ்கிறது….

அதன் கரையோரம் முட்டை போட்டு விட்டுப் போய் விட்ட பின்பும் ஆமைக் குஞ்சுகள் தாமாகக் தாம் வாழவேண்டிய கடலைக் கண்டடைவது எங்ஙனம்?. பாலூட்டி மிருகங்களின் குழந்தைகள் எப்படிப் பாலிருக்கும் இடத்தைத் தானாகவே கண்டுபிடிக்கின்றன? போரில் சிதறியும் அங்கிருந்த அதே உற்றாரும் அயலாலும் இயல்பாக இங்கும் நமக்கருகிருத்தல் எப்படி சாத்தியமாயிற்று?   

அப்பா,

அது போல நாமும் எங்களைக் கண்டடைவோம். நாம் மீண்டும் ஒரு முறை சந்திப்போம். தோற்றம் மாறக்கூடும்; இடங்கள் மாறக்கூடும்; பந்தம் மாறக்கூடும். ஆனாலும் பாசப்பிணைப்பினால் நாம் மீண்டும் எங்களை நாம் கண்டடைவோம்.

பிரபஞ்சம் சொல்லும் வாழ்க்கைத் இரகசியம் இது. அது ஒரு ’தண்ணீர் இரகசியம்’. அப்பாவின் வாழ்க்கை சொல்லும் பிரபஞ்சத் தத்துவம்.

அப்பா, அது வரை இறைநிழலில் இனிதே சுகித்திருக்க பிரபஞ்சத்தின் பேராற்றலை அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.

                                 ஓம் ஷாந்தி.

மகள்: யசோதா.பத்மநாதன். 22.03.2022.

               “உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி

                     விழிப்பது போலும் பிறப்பு”


மார்க்கண்டேயர் மாமா - பன்றிக்கெய்த குளத்துப் பண்ணையார்

 நேற்றய தினம் 20.3.2025 மார்க்கண்டேயர் மாமாவின் இறுதியாத்திரையில் கலந்து கொண்டு விட்டு வந்திருந்தேன். ஒருவிதமான பாரம்! ஓர் அழகிய வாழ்வியலைக் கற்றுத் தந்த பரம்பரை ஒன்று நம்மை விட்டு பிரிந்து போகிறது....

அந்த நினைவுகளின் பாரங்களை எல்லாம் இறக்கி வைக்கும் ஓரிடமாக எனக்கு என் அக்ஷ்யபாத்திரமே விளங்குகிறது. அண்மைக்காலமாக எல்லாமே மனிதர்களின் பிரிவு பற்றிய பதிவுகளாகவே என் பாத்திரம் நிரம்புகிறது என்ற போதும் அது எனக்கு ஒரு வித பேரமைதியையும் தந்து போகிறது. 

மனிதர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள் மிக எளிதாக! 

நினைவுகள் பசுமையாக இருக்கும் போதே அவற்றை எங்கேனும் சேகரித்து வைத்து விடவேண்டும் என்றே இப்போதெல்லாம் தோன்றுகிறது. நமக்கு நாளை மறதி நோய் வரலாம்; எல்லாம் மறக்கப்பட்டும் விடலாம். அதற்கு முதல் எழுதப்படும் இந்த விடயங்கள் எதிர்காலத்தில் யாரேனும் ஒருவர் 19ம் நூற்றாண்டின் இறுதியில் எப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று அறிய முனைந்தால் இந்த வாக்கு மூலங்கள்; நினைவுப் பதிவுகள் அவர்களுக்கு ஒரு சிறு சுடரையாவது ஏற்றி வைத்து விடாதா? 

ஏற்றி வைக்க வேண்டும் என்றே எனக்கு ஆசை. ஏனென்றால் அவர்களுடய வாழ்வு அர்த்தம் நிறைந்ததாகவும் போலிகள் அற்ற உண்மை செறிந்ததாகவும் அதி உன்னதமானதாகவும் விளங்கியிருந்தது. தொழில்நுட்பங்கள் புகுவதற்கு முன்னரான அவர்களின் வாழ்வின் அழகியல்கள் இனி மீட்கப்படாது மீட்டிப் பார்க்க வேண்டிய ஒன்றாகிவிட்டது. நாமும் அதனைச் சொல்லாது போனால் அந்த வாழ்வின் எச்சங்களை அறிவதற்கு  ஒன்று கூட மிஞ்சாது போய் விடும்.

அது நிற்க,

மார்க்கண்டேயர் மாமா - 

உயரமும் உடல்பருமனும் மாநிறமும் கொண்ட ஆஜானுபவமான தோற்றத்திற்குச் சொந்தக்காரன்.

பன்றிக்கெய்த குளத்தில் யாழ்ப்பாணம் - கண்டி வீதி நீட்டிலுமாக சுமார் 10 ஏக்கர் வயல்வெளிக்கும் வீடு வளவு கொண்ட பல ஏக்கர்கள் கொண்ட மேட்டு நிலத்திற்கும் தென்னை மற்றும் கனிதரு மரங்கள் கொண்ட காணிகள், கடை மற்றும் பல சொத்துக்களுக்கும் சொந்தக்காரன். அவரின் கல்வீட்டின் முன்னால் அகலமான விசாலமான வட்ட வடிவில் அமைந்த திறந்த வெளிக் கூடாரம் ஒன்று அந்த வீட்டுக்கு மிகுந்த சோபையைக் கொடுத்துக் கொண்டிருக்கும். 

அந்தக் கூடாரத்தின் உள்ளே சீமேந்தினால் முழங்கால் அளவு உயரத்தில் சுமார் ஒரு அடி அகலத்தில் வட்டமாக எழுப்பப்பட்ட வட்டச் சுவர் மட்டுமே அமைந்திருந்தது. வருபவர்கள் அந்தக் குந்தில் வசதியாக உட்புறமாகவோ வெளிப்புறமாகவோ உட்கார்ந்திருந்து கதைக்கலாம். உள்ளே கதிரை போட்டும் இருக்கலாம்; பாய் விரித்தும் படுக்கலாம். அது சீமேந்து போட்ட வெறும் தரையாக இருந்தது. அதற்கு வாசல்களோ கதவுகளோ சுவர்களோ இல்லை. கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது. அதற்கு மேலே சுற்றிவர தென்னை, பலா, மா மரங்கள் நிழல் தந்து கொண்டிருக்கும். இயற்கையான காற்று இயற்கையான வெளிச்சம், பொருட்கள் எதுவும் இல்லாத எளிமை இவற்றோடு கூடிய அந்தக் கூடாரம் மிகப்பெரியதும்  கூட. ஒரு நேரத்தில் சுமார் 25 - 30 பேர் அந்த வட்டத் திண்ணையில் இருக்கக் கூடிய அளவுக்கு ஓரளவு பெரிய கூடாரம் அது! 

மின்சார வசதிகள் வந்திராத 70களின் நடுப்பகுதி அது. அக்காலத்திலேயே VW வான், றைக்டர், அவற்றுக்கு றைவர், வீட்டுக்கு வேலையாட்கள் என்று பெருவாழ்வு வாழ்ந்தவர் அவர். அங்கு வேலையாட்களும், வீடுவளவினைத் துப்பரவு செய்வோரும்,  தொழிலாளர்களும், வந்து போவோரும், உதவியாளர்களுமென வீடு எப்போதும் ஜே ஜே என்று இருக்கும். சமையல் வேலைகளுக்கு மங்கை அக்காவும் வாகனங்கள் ஓட்ட ராமு அண்ணாவும் அங்கு நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். 

இருந்த போதும் அந்தக் குடும்பம் மிக மிக எளிமையான, ஆடம்பரங்களோ டாம்பீகங்களோ, வறட்டுக் கெளரவங்களோ, பீடிகைகளோ இல்லாத பண்பினைக் கொண்டமைந்திருந்தது. பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மற்றவர்களை எல்லாம் எப்போதும் மரியாதையோடு நடத்தக் கற்பித்திருந்தார்கள். மங்கை அக்கா, ராமு அண்ணா என்று தான் பிள்ளைகள் உதவியாளர்களை அன்போடும் மரியாதையோடும் அழைத்தார்கள். நான் நினைக்கிறேன் மங்கை அக்காவுக்கு இவர்களே தான் திருமணமும் முடித்துக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள். மங்கை அக்கா திருமணமாகிப் போகும் போது நாலாவது பெண்குழந்தை ஆனந்தி சிறு குழந்தை. பிள்ளை மங்கை அக்காவின் பிரிவைத் தாங்க மாட்டாள் என்று  பால் கொடுத்துப் பிள்ளையைத் தூங்க வைத்து விட்டுத் தான் பிரியமனமில்லாமல் மங்கை அக்கா பிரிந்து போனா என்பது இன்னுமென் நினைவில் இருக்கிறது. 

மாமா மட்டுமல்லாமல் அந்தக் குடும்பமே சக மனிதர்களை அப்படித்தான் மதிப்போடும் மரியாதையோடும் பொறுப்போடும் அக்கறையோடும் அன்போடும் நடத்தியது. மாமா பெரிய மனிதராக; பண்ணையாளராக எங்கள் மனங்களில் உயர்ந்து நிற்பதற்கு இந்த உயரிய குணங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகின்றது. 

இவரது வீட்டுக்கு அருகாகத் தனி வீடொன்றில் மார்க்கண்டேயர் மாமாவின் வைத்தியராக இருந்து ஓய்வு பெற்ற தந்தையும் தாயாரும் வசித்து வந்தார்கள். தாத்தா, பாட்டி என்று தான் நாமும் அவர்களை அழைத்தோம். கால்களில் காயங்கள் பட்டால் அவர் தான் எங்களுக்கு மருந்து போட்டு விடுவார். அந்தத் தாத்தா ஆங்கிலேயர்களைப் போல நல்ல உயரமும் அழகும் மெல்லிய தோற்றமும் கொண்டவராக இருந்தார். மாமாவின் மூத்த மகள் தமயந்தியும் அவரது சாயலைக் கொண்டவராகக் காட்டுக்குள் வசிக்கும் ஒரு தேவதையைப் போல பேரழகும் பேரொளியும் கொண்டவராக விளங்கினார். அவரிடம் இருந்தது ஓர் அசாத்தியமான பேரழகு. அதனால் தான் அவருக்கு தமயந்தி என்று பெயர் வைத்தார்களோ தெரியாது.

அப்போது நாங்கள் அதே யாழ் வீதியில் அவர்களுடய வயல் காணி முடிகிற இடத்திற்குச் சமீபமாக சுமார் ஒரு மைல் தொலைவில் குடியிருந்தோம். அது ஒரு சிறு கிராமம் என்பதால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது. கிட்டத்தட்ட சம வயதுடையவர்களாக நாங்கள் இருந்தததனால் தமயந்தியக்கா, தனஞ்செயன், சூட்டி, ஆனந்தி மற்றும் அவ்வப்போது அவர்களிடம் வந்து போகும் சுபாங்கி ( இவர் மிக இலகுவாகவும் அழகாகவும் French கொண்டை போடுவார். அது அவருக்கு அத்தனை எடுப்பாக இருக்கும். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாக நானும் போட்டுப் பார்ப்பேன். அது எனக்கு எட்டாக் கொம்பாகவே இருந்தது. :) என்றொரு உறவுக்காறப் பேரழகுப் பெண்ணுமாக இதனைபேரும் விளையாட்டுத் தோழர்களாக இருந்தோம். ( சுபாங்கி எவ்வளவு அழகான பேர்! கர்னனின் மனைவியின் பெயர் சுபாங்கி)  இருந்தபோதும் என் மூத்த சகோதரி சாந்தி தான் அவர்களின் விருப்பத்துக்குரிய அந்தரங்க சினேகிதியாக இருந்தார். ( அதிலொன்றும் எனக்கு வருத்தமில்லை. :) என்றாலும் அதனை நான் கவனித்திருந்தேன்.) 

நாங்கள் அப்போது 6ம் வகுப்பு 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். மாமா தமயந்தி அக்காவை ஒவ்வொருநாளும் 10 மைல் தொலைவில் இருக்கும் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்தில் தன் வானில் அழைத்துச் சென்று விட்டு விட்டு மீண்டும் மாலையில் போய் வானில் அழைத்து வருவார்.  நாங்கள் அப்போது அதே பாதையில் மூன்று மைல் தொலைவில் இருந்த ஓமந்தை மகாவித்தியாலயத்தில் படித்து வந்தோம். பஸ் வராமல் நாம் காத்து நிற்கும் போதெல்லாம் சிவாண்ணையின் பால்வானும் அவ்வப்போது வீதியால் போகும் லொறிகளும், மாமாவின் நீல நிற VW வானும் தான் எங்களை வீட்டுக்கு அழைத்து வரும். காத்திருக்கும் எல்லோரையும் ஏற்றி அவரவர் வீட்டில் இறக்கிவிடும் பணியை அவர்கள் வீட்டுக்கும் அப்பால் வரை சென்று இறக்கி விட்டு வரும் அந்த வான். அப்போதெல்லாம் தமயந்தியக்கா முன் சீட்டில் இருப்பார். என் அக்காவுக்கு மட்டும் முன் சீட்டில் அவவுக்கருகில் இடம் கிடைக்கும். நாங்கள் எல்லோரும் பின்னால் ஏறவேட்டியவர்களாக இருந்தோம் என்பதை இப்போது புன்னகையோடு நினைவு கூருகிறேன்.

இவ்வாறாக என் பால்ய காலத்து பழைய மறக்க முடியாத நினைவுகளில் மாமாவும் அந்த ஊரும், வீடும் அங்கு நாம் வாழ்ந்த வாழ்வும் நினைவிருக்கிறது. அவர்கள் வீட்டில் சோறு கறியாக்கி விளையாடியதும்; அவர்கள் வீட்டின் பின்னால் அவர்களது வயல் வெளிக்கு சமாந்தரமாக கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மாரிகாலத்தில் நிரம்பி நிற்கும் குளத்தில் நீச்சலடித்ததும்;சேர்ந்திருந்து வானொலியில் தணியாததாகம் நாடகம் கேட்டதும்; அந்த வட்டக் குடிலுக்குள் நாங்கள் விளையாடிய விளையாட்டுகளும் இன்றுவரை நெஞ்சில் நிறைந்திருக்கிறது. 

தன் மனைவியை அவர் இளவயதில் இழந்து விட்டிருந்தாலும் தன் நான்கு பிள்ளைகளையும் தனி ஒருவராக இருந்து சிறப்பாக வளர்த்து ஆளாக்கினார். தன் பிள்ளைகள் எல்லோருக்கும் சிறந்த வாழ்க்கையை அவர் உருவாக்கிக் கொடுத்தார். இவற்றை எல்லாம் விரித்துக் கொண்டு போனால் அது முடிவின்றித் தொடர்ந்து கொண்டே போகும். அதனால் ஒரு விடயத்தை மட்டும் சொல்லி இந்த நினைவு மீட்டலை நிறைவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

இது என் தகப்பனார் பேச்சுவாக்கில் ஒருநாள் சொன்னது தான். நாங்கள் அப்போது புது வீடு ஒன்று கட்டிக்கொண்டிருந்தோம். சுவர்கள் எழுப்பப்பட்டு கூரை வேலைகள் முடிந்த பின்பும் ஓடு மட்டும் போடப்படாமல் இருந்தது. சில நாட்களில் மாமா அவ்வப்போது நகர்வலம் வரும் அரசரைப் போல வீதி வழியாக ஒரு பவனி போவார். வளவுகளுக்குள் உரிமையாளர்களின் நடமாட்டத்தைக் கண்டால் இறங்கி வந்து நலம் விசாரிப்பார். எந்த ஒரு வரவேற்போ உபசாரமோ அவருக்கு தேவைப்படுவதுமில்லை; அவற்றை அவர் எதிர்பார்ப்பதும் இல்லை. அது ஒரு தன்னிச்சையான செயலாக நடக்கும் ஒன்று.

 அன்றும் அவர் அப்பாவை கண்டுவிட்டு இறங்கி வந்து ஏன் இன்னும் ஓடு போடவில்லை என்று கேட்டாராம். அப்பா அதற்கு, வங்கிக் கடன் இன்னும் வந்துசேரவில்லை; அதற்காகக் காத்திருக்கிறேன் என்றாராம். ‘நான் தாறன் காசு, முதலில ஓட்டைப் போட்டு முடி; பிறகு காசு வந்தாப்பிறகு தா’ என்று சொல்லி அன்றே உடனடியாக 5000 ரூபாய்களை அவர் கொடுத்தார் என்று அப்பா சொன்னார்.

அது தான் அவர் குணம்; அது தான் அவர் இயல்பு. பரஸ்பர மனிதர்கள் மேல் நம்பிக்கையும் பற்றுதலும் அன்பும் அக்கறையும் கொண்டவராக அவர் விளங்கினார். இலங்கையரான எங்களிடம் பண்ணையார் முறை இல்லாதிருந்த போதும் அவர் எனக்குப் பண்ணையாராகவே தோற்றமளிக்கிறார். அவர் ஒரு பண்ணையார் தான். பன்றிக்கெயதகுளத்துப் பண்ணையார். தான் வாழ்ந்ததோடு அந்த ஊர்வாழ் குடிமக்களையும் வாழவைத்த பண்ணையார். திடீர் திடீரென அவர் மேற்கொள்ளும் திக் விஜயங்களில் செழித்தது அச் சிறு கிராமம். 

அவர் வாழ்ந்த அமோகமான வாழ்வை சிறு வயதில் கண்டவ:ள் நான். அந்தச் செழிப்பின் சாரல் என்மீதும் ஏதோ ஒருவகையில் பட்டுச் சுவறி இருக்கிறது. பிறகு நாங்கள் எல்லோருமே வாழ்க்கைச் சுழலில்:- போர்ச் சூழலில் சிக்கி எங்கெங்கோ தூக்கி வீசப்பட்டோம். யார் யார் எங்கு போனோம் என்பதே தெரியாதிருந்தது. என்றாலும் எந்த ஒரு விதியோ அல்லது பூர்வ ஜென்மத்துப் பந்தமோ அல்லது பிரபஞ்சத்தின் பேரருட் சக்தியோ நாம் மீண்டும் சிட்னியில் ஒரே இடத்தில் வசிக்கவும் காணவும் பழகவும் தெய்வனுக்கிரகம் பாலித்திருந்தது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களினால் உலக நாடுகள் எங்கனும் மனிதர்கள் தூக்கி எறியப்பட்ட போதும் நாம் மட்டும் மீண்டும் ஒரே நாட்டில் ஒரே இடத்தில் ஒரே சிற்றூரில் அருகருகாக வாழ்க் கிடைத்த தெய்வானுக்கிரகத்தை என்னவென்று சொல்வது!

நமக்குத் தெரியாத ஏதோ ஒரு வல்ல சக்தி நம்மை வழிநடத்துகிறது. ஏதோ ஒரு மின்சார வசதியில்லாத குக்கிராமத்தில் அருகருகாக வசித்த நாம் இடையில் முற்றிலுமாகக் காணாமல் போய், மீண்டும் வேறொரு தேசத்தில் அருகருகாகவே வாழப் பாத்தியதைப் பட்டிருக்கிறோமென்றால் இதனை என்னவென்று அர்த்தப் படுத்துவது! நம்முடய புலன்களுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று நம்மை வழிநடத்துகிறது என்று தானே இதற்கு அர்த்தமாகும்? 

போய் வாருங்கள் மாமா! இது நாள் வரை நம்மை வழிநடத்திய அந்த மாபெரும் சக்தி உங்களைக் கைவிட்டு விடாது.

மீண்டும் நாங்கள் சந்திப்போம். இறுதிவரை உங்கள் சுயத்தை இழக்காது, தனிமரமாக நின்று, ஓர் எடுத்துக்காட்டான வாழ்வை; கர்ம வீரனாக; கம்பீர பிராகிருதனாக இந்த வாழ்வை நீங்கள் கம்பீரமாக வாழ்ந்து காட்டிப் போயிருக்கிறீர்கள்.

Hat's off to you maama! 

You are an inspiration for me and many.!

Wednesday, January 8, 2025

2025

 2025க்குள் நுழைந்தாயிற்று.

60 களின் ஆரம்பத்திற்குள்ளும்....

அதனால் எனக்கு சில அனுபவங்களும் அவற்றினை எழுதுவதற்கான யோக்கியதைகளும் இருப்பதாக எனக்கு நானே சில தகுதிப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறேன்.

2024 பல உயிரிழப்புகளை; அன்பானவர்களின் பிரிவுகளைத் தந்த ஓராண்டாக அமைந்தது.

பல அனுபவங்களை; வாழ்வின் உண்மைகளை அச்சொட்டாக அனுபவம் செய்த ஆண்டாகவும் அது அமைந்து விட்டது.

அம்மா,

ஈஸ்வரி அன்ரி,

செளந்தரியின் ( என் சினேகிதி) அம்மா

வாமதேவா ஐயா,

கெளரியின் அக்காவின் கணவர்

என இப்படி நீள்கிறது பட்டியல்.

அவ்வப்போது வந்து போகும் உடல் உபாதைகளைத் தள்ளி ஒரு புறமாக வைத்து விட்டு பார்த்தால் மறுவளமாக மனதுக்கு பிடித்த வேலை; விருப்பங்களை; அபிலாஷைகளை நிறைவேற்றக் கிடைத்த சந்தர்ப்பங்கள், ஒத்துழைக்கவும் பாராட்டவும் அமைந்த அன்பான சக ஆசிரியர்கள், வீதியில் கண்டாலும் புன்னகைத்து வாழ்த்துக் கூறும் பள்ளிக் குழந்தைகள், பாரம் பகிரும் நல்ல தோழமைகள் என வாழ்வில் இனிமைகளும் இல்லாமல் இல்லை.

நேற்றும் இன்றும் கோடைகாலத்தில் அபூர்வமாக மழையும் குளிருமாக இருக்கிறது. இந்த அமைதியான பொழுதும் அமைதியான வீடும் விடுமுறை காலப் பொழுதுகளும் தொலைக்காட்சியில் ஒலிக்கும் பழைய மெல்லிசைப் பாடல்களும் ஒரு விதமான பிரிவுத் துயரைத் தருவதாக இருக்கிறது.

என்றோ ஒரு நாள் நாம் இழந்த எல்லோரையும் சந்திப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இழப்புகளை நாம் தவிர்க்க முடியாது. அது இவ்வுலக வாழ்வின் நியதி. நாங்கள் எல்லோரும் ஒரு பயணப் பொதியோடும் Expire Date இருக்கிற paasport ஓடும் Holiday spot ஆன இந்த உலகத்துக்குள் பிரவேசித்திருக்கிறோம். இங்கு எங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு சொந்த இல்லம் திரும்புவோம். அதுவே நம் வீடு. நிரந்தர இருப்பிடம். மழை பூமியை நனைத்து மரம்செடி மற்றும் பூமியின் உயிர் வாழிகளை மகிழ்வித்துவிட்டு கடல் நிலைக்கு மீள்கிற மாதிரி!

ஆனால், நமக்கு மீண்டும் வேறொரு இடத்தில் வேறொரு உருவில் வேறொரு ’சுற்றுப் பயணம்’ வாய்க்கலாம். அங்கும் நாம் நேசித்தவர்கள்; நம்மை நேசித்தவர்கள்; வழிப்போக்கர்கள், நண்பர்களைச் சந்திக்கலாம். அவர்கள் ஒரு செல்லப் பிராணியாகவோ அல்லது பூஞ்செடி, பயன் தரு மரம், அயலார், நண்பராகவோ அல்லது வெறொரு பந்த நிமித்தமாக வந்து சேரலாம். அந்த உயிரிகள் - ஆத்மாக்கள் தம்மை தாம் யார் என்று மற்றவர்களோடு அடையாளம் கண்டு கொள்ளாமலே கொடுப்பனவற்றைக் கொடுத்து பெறுவனவற்றை பெறும் வாழ்வாகவும் அது அமையலாம். அப்போது நாம் நம் ‘கொடுக்கல்வாங்கல்களை’ அன்பின் பரிமாற்றங்களைத் திருப்பிக் கொடுத்தும் கொள்ளலாம்.

அதுவரை நினைவுகளோடு வாழ்ந்திருப்போம்.

புதுவருடத்தின் தொடக்கத்தில் அமையும் இந்த முதல் பதிவை ஒரு மகிழ்ச்சி தந்த அனுபவத்தோடு முடிக்கலாம் என்று நம்புகிறேன்.

நேற்றய தினம் ஒரு படத்திற்கு வண்ணம் தீட்டினேன். இந்தப் படப் புத்தகம்   மில்லி. மறோட்டா வினது மரத்தில் வாழும் உயிரிகள் என்ற வண்ணம் தீட்டும் புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது.





மனதுக்கு இதம் தரும் எனது மனமருந்து - ’மனதுக்கான மருந்து’ இந்த வண்ணம் தீட்டுதல். அண்மைக்காலமாக ஒரு பூந்தோட்டத்தையும் தயார் செய்து வைத்துள்ளேன். உங்களுக்கு எது மனதுக்கு இதம் தரும் பொழுது போக்கு? 

அண்மையில் இன்ஸ்டாவில் ஒரு றீல் பார்த்தேன். ஒரு மூடியுள்ள ஜாரில் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வில் நிகழும் குறைந்த பட்சம் ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தையாவது எழுதி அதில் போட்டு வாருங்கள். வருட இறுதியில் அதனை எடுத்துப் படித்துப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்பதும்; எவை எவை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்ற சுய அடையாளமும் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

அதனையும் இப்போது ஆரம்பித்திருக்கிறேன்.

நீங்களும் அப்படி ஒன்றை ஆரம்பியுங்களேன்!


சிவன் அவர் என் சிந்தையுள் நின்ற அதனால்;

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,

அஸ்ஸலாமு அலைக்கும்!