Wednesday, October 1, 2025

The Rocks; Sydney Market

 The Rocks!

சிட்னி மாநகரத்தின் மத்தியில் விளங்கும் ஒரு இடம்.

அங்கே ஒரு சந்தை!

வார இறுதிகளில் அது கூடுகிறது.

சிட்னி வாழ் மக்களின் கைவினைகளையும்; கைவினைகள் செய்வோரையும்;  சிட்னி மண்ணின் கல் வகைகளையும் அங்கு கண்டு வாங்கி மகிழலாம்.

நானும் என் தோழி கீதாவும் போன நேரம் வசந்தகாலக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனால் சற்று அதிகமான கடைகள்; அதிகமான மக்கள் கூட்டம்.

கொஞ்சம் அதிகப்படியான விஷேஷம்.

எங்களுக்கும் தற்செயலாகத் தான் கிடைத்தது அந்த அதிஷ்டம். நாம் போன காரியம் வேறு என்றாலும் எங்கே இந்த மக்கள் கூட்டம் அள்ளும் பட்டுக் கொண்டு போகுது என்று எமக்கு வந்த ஆர்வத்தினால்; அவர்களைப் பின் தொடர்ந்த போது தான், இந்தச் சந்தையைக் கண்டு கொண்டோம் என்றால் பாருங்களேன்!

இனி நான் பேசவில்லை; படங்கள் பேசட்டும். அவ்வப்போது மட்டும் தேவைப்பட்டால் வந்து தலைகாட்டுகிறேன்.







மேலே உள்ள இந்தப் பெண் ஒரு நீர்வண்ண படங்கள் தீட்டும் படைப்பாளி. அவள் தன் படங்களை விற்பனை செய்யும் கூடாரத்தை அங்கு அமைத்திருக்கிறாள். கூடவே, கைப்பைகள் தயாரித்து அதில் தன் நீர்வண்ணப் படங்களை பதித்து கைப்பை விற்பனைகளும் செய்கிறாள்.
அவளைச் சந்தித்து, அவளின் கலைவிற்பன்னங்கள் பற்றியும் உரையாடி, அவளிடம் இருந்து பொருட்கள் வாங்குவதில் ஓர் அலாதி திருப்தி எனக்கு. 

அவளிடம் ஒரு பை வாங்கினேன். அழகான ஹாபர்பிறிட்ஜ் படமும் அதன் மருங்கில் கட்டிடங்களும் ஜக்கரண்டா பூமரங்களும் இருப்பது போல அவள் தன் நீர் வண்ண ஓவியத்தை அதில் செய்திருந்தாள். 

இந்தப் பை மட்டுமல்ல; அங்குள்ள அநேக பொருட்கள் கொஞ்சம் விலை அதிகம் தான். அதற்குக் காரணமும் இருக்கிறது; அவை கைகளால் செய்யப்படுபவை; கூடவே அதைச் செய்தவர்கள் தாமும் அங்கு நின்று அவற்றை விற்பனை செய்கிறார்கள். மாநகரத்தில் இடத்திற்கும் ஒரு விலை இருக்கத்தானே செய்கிறது. கூடவே அவர்களின் நேரமும் அதில் செல்வாக்குச் செலுத்துகிறதல்லவா? அத்துடன் ஒரு கலைஞனுக்கு அவனின் கைப்பணி வேலைக்கு கொஞ்சம் கூடக் கொடுத்தால் தான் என்ன? இல்லையா? எவ்வளவு பொருட்களை அநாவசியமாக வாங்கித் தள்ளுகிறோம்..... இவர்களுக்குக் கொஞ்சம் கூடக் கொடுத்தால் தான் என்ன?

இப்போது அந்தப் பையைத் தான் நான் காவித் திரிகிறேன். அதைப் பயன் படுத்துவதில் ஒருவித சந்தோஷம்; திருப்தி! அந்தப் பையைக் காவும் தோறும் அந்தப் பெண்ணும், அவளின் புன்னகையும், அவளது பணிவன்பான இயல்பும், அத்தோடு அவளின் கலை வெளிப்பாடும் என்னை இன்னொரு படி மகிழ்ச்சிக்குரியதாக ஆக்குகிறது! ஒரு கலையைத் தூக்கிச் செல்வதைப் போல ஒரு புளகாங்கிதம்!!

ஒன்றும் பேசப்போவதில்லை என்று விட்டு இவ்வளவு பேசி விட்டேன் பாருங்களேன்.....








மேலே இருக்கிற பெண்மணி அழகழகான வாழ்த்து அட்டைகள் செய்கிறாள். ஓரளவு வாங்கக் கூடிய விலையிலேயே அதனை விற்பனையும் செய்கிறாள். முப்பரிமான அட்டைகள் Bookmark இனை இணைத்தபடியாக வடிவமைக்கப்பட்ட வாழ்த்து அட்டைகள் என அவை வகைமாரியாக இருக்கின்றன.
இவளுடய கடையில் விற்பனையும் அதிகமாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இவளிடம் இருந்து நானும் சில வாழ்த்து அட்டைகள் வாங்கினேன். அவை அழகிலும் தரத்திலும் தனித்துவத்திலும் சிறந்து விளங்குவனவாக இருந்தன.





மேலே இருக்கிற பெண்மணி தானே அவுதிரேலிய விலங்குகளை வண்ணமாகத் தீட்டி, உயர்தர பருத்தி மற்றும் கம்பளி மேலாடைகளில் அவற்றைப் பதித்து, விற்பனை செய்கிறாள். வேறெங்கும் பெற முடியாத தனித்துவமான கைவண்ணமும் உயர்தர /உறுத்தல்கள் தராத நூல்களினால் நெய்யப்பட்ட ஆடைகள் என்பதாலும் அதற்கும் விலை சற்று அதிகம் தான். 

மறுநாள் தம் 21வது திருமண நிறைவுநாளைக் கொண்டாடிய என் ஆத்மார்த்தமான நண்பர்களுக்கு பரிசளிபதற்காக நானும் அதில் சிலவற்றை வாங்கினேன். மகிழ்ச்சி இரட்டிபானது. ஒரு கலைஞிக்கு தன் பொருள் பரிசீலிக்கப்பட்டு மக்களால் வாங்கப்படுவதில் ஒரு மகிழ்ச்சி; நமக்கும் ஒரு தனித்துவமான ஒரு பொருளை அந்த கலைஞியையும் கண்டு அளவளாவி வாங்கிச் செல்வதில் ஓர் அலாதியான திருப்தி!



மேலே இருப்பவை சில சந்தைக் காட்சிகள். கூடாரத்திற்குள்ளும் தனியாகவும் அவை இருக்கின்றன.






அவுஸ்திரேலியக் கல் வகைகள் பற்றிச் சொன்னேன் இல்லையா? அவுஸ்திரேலியக் கனிய வளங்களை சுரண்டி ஆபரணமாக்கி விற்பனை செய்யும் கைங்கரியத்தைச் செய்பவர்கள் இவர்கள் தான். ஓபல் என்று சொல்லப்படும் கல்லில் இருந்து இவர்கள் ஆபரனங்களைச் செய்து விற்பனை செய்கிறார்கள். அதில் சிறப்பான அம்சம் என்னவென்றால் ஒரு கற்பாறையில் அந்த ஓபல் எப்படி இருக்கும் என்பதையும் அப்படியே எடுத்து வந்து காட்சிப்படுத்தி இருந்தார்கள். நமக்கு நேரடியாகச் சென்று பாறைப் பகுதிகளைப் பார்க்க முடியாவிட்டாலும் இங்கு பார்த்து அதனை நான் அறிந்து கொண்டதோடு ஒரு ஆபரணமும் அந்தக் கல்லின் அழகிற்காக வாங்கிக் கொண்டேன்.

ஆசை ஆரை விட்டுது பாருங்கள்! :)






அவுஸ்திரேலிய நாட்டு தபால் முத்திரைகளை அச்சொட்டாக முப்பரிமான வடிவில் சட்டகத்தில் அமைத்து விற்பனை செய்வதையும் காண முடிந்தது.





applique work என்று சொல்லப்படுகிற துணிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து பொருத்தி அவுஸ்திரேலிய விலங்குகளையும் சூழலையும் தையலால் உருவாக்கி  அதனை கைப்பையில் தைத்து அதனை விற்பனை செய்கிறாள் மேலே உள்ள இந்தப் பெண்மணி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்; ஒன்று போல் ஒன்று இல்லை என்பதையும் சொல்லி ஒரு கைப்பையில் தன் கைப்பட கையெழுத்தும் போட்டுத் தந்தாள் இந்தப் பெண்மணி. 

அவளிடம் இருந்து நான் வாங்கிய கைப்பையில் கோலா என்ற அழிந்து வரும் இனமாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிராணி ஒன்று மரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. அதனையும் நான் இப்போது பெருமையோடு காவித் திரிகிறேன் என்றால் பாருங்களேன்... :)






மேலும் சில கடைகளின் அணிவகுப்புகள்; சாப்பாட்டுக் கடைகளும் அவற்றில் உள்ளடக்கம். தோசைக்கடையும் அங்கு இருந்ததென்றால் தென்னகத்தின் பெருமை தான் என்னே!!


பிரபலமான ஹாபர் பிறிட்ஜ் இற்குக் கீழேயும் கடைகள்...





மேலே இருப்பவை கடை; கடைவீதி; கூட்டம் மற்றும் கூடாரங்கள்...







இது ஒரு ஆபரணக் கடை. மேலே உள்ள பெண்மணி தேவதைகளை பென்ரனாகச் செய்து அந்தத் தேவதைகளுக்கும் பெயரும் கொடுத்து அவற்றை மாலையில் கோர்த்து விற்பனை செய்கிறாள். மிக அழகான அலங்கரிப்பில் வெள்ளை நிறத்தேவதை; பொன்நிறத் தேவதை; கறுப்பு, பச்சை, சிவப்பு என வண்ன வண்ணமாக தேவதைகளை உருவாக்கிய; உருவாக்கி வரும் பெண்மணி இவள் தான். விருப்பமானவர்கள் அந்தத் தேவதையைத் தனியாகக் களற்றி திறப்புக் கோர்வையிலும் அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். விலை தான் கொஞ்சம் அதிகம். என்றாலும் இரண்டு வாங்கினேன். ( யசோதா! போதும் இனி அடங்கு என்று உள்ளே ஒரு குரல் ஒலித்துக் கொண்டு தான் இருந்தது.சத்தடியின் சாட்டில் அதனை நான் கேட்கவில்லை. :))





இது ஒரு வித்தியாசமான கூடாரம்! என்னெவென்று உங்களால் அனுமானிக்க முடிகிறதா? இவர்கள் அன்பையும் இரக்கத்தையும் மக்களிடம் பரப்புகிறார்களாம். எப்படி? இது ஒரு கடிதம் எழுதும் இடம். பாரம்பரிய முறைப்படி கதிரை,மேசை, தாள், கடித உறை, பேனா எல்லாம் இவர்களே தருகிறார்கள்.
விருப்பமானவர்கள் அங்கு அமர்ந்து யாரோ முன்பின் தெரியாத ஒருவருக்கு ஏதேனும் ஒரு தகவலை; அன்பை; அறிவுரையை; வாழ்வின் தத்துவத்தை; வாழ்க்கைக்கான ஒரு வழியை அல்லது தான் சரியென பின்பற்றும் ஏதாவது ஒன்று பற்றி எழுதி கடித உறையில் இட்டு நீல நிற தபால் பெட்டிக்குள் போட்டு விட வேண்டும். 
நீங்கள் ஒரு கடிதம் எழுதி போட்டீர்கள் என்றால்; வேறொருவர் எழுதிய கடிதம் ஒன்று உங்களுக்குப் பரிசாகக் கிடைக்கும். அதனை நீங்கள் யாரோ ஒருவர் உங்களுக்குத் தந்த பரிசாக எடுத்துக் கொள்வதோடு அன்பையும் இரக்கத்தையும் மகிழ்ச்சியையும் நீங்களும் அனுபவம் செய்யலாம்.

அருமையான யோசினையாக இது இருக்கிறதல்லவா?

நானும் ஒன்றை எழுதிக் கொடுத்து ஒரு கடிதத்தைப் பரிசாகப் பெற்றுக் கொண்டேன். எனக்கு வந்த கடிதம் ஒரு பல்கலைக்கழக மாணவி ஒருவர் எழுதியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவள் அதில் எழுதி இருந்த வாசகம் ‘ கடவுளை நீ நம்பினால் நீ ஒரு போதும் தனியாக இருப்பதாக உணர மாட்டாய். கடினமான சூழலை நீ எதிர் கொள்ளும் போது கடவுளை நீ நம்பு. அவரிடம் முறையிடு; அவர் ஏதோ ஒரு உருவெடுத்து உனக்கு உதவ முன் வருவார்’ என்று எழுதி இருந்தாள்.

அதுவும் ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது.


























கடை வீதி பல ரகம்; பல வகை...ஒவ்வொன்றும் ஒரு விதம்.


படப்பிடிப்பு: யசோதா. பத்மநாதன்.
திகதி: 12.09.2025 

No comments:

Post a Comment