Wednesday, April 15, 2009

சொற்சிலம்ப விளையாட்டு

தமிழ் இலக்கியத்தில் சிலேடைகள், சொற்சிலம்பங்கள்,விடுகதைகள் எனப் பல விளையாட்டுக்கள் உண்டு.இங்கு சில விளையாட்டுக்கள் உள்ளன. விடைகளைக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

விளையாட்டு ஒன்று;

இப்பாடல் அழகிய சொக்கநாதபிள்ளை பாடியது.

"முற்பாதி போய்விட்டால், இருட்டே ஆகும்;
முன் எழுத்து இல் லாவிட்டால், பெண்ணே யாகும்;
பிற்பாதி போய்விட்டால், ஏவற் சொல்லலாம்;
பிற்பாதி யுடன் முன் எழுத்து இருந்தால், மேகம்;
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி;
தொடர் இரண்டாம் எழுத்து,மா தத்தில் ஒன்றாம்;
பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா!
புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!

என்ன சொல்லென்று கண்டுபிடிக்க முடிகிறதா?


விளையாட்டு இரண்டு,

இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர்.

முன்னொரு ஊரின் பேராம்;முன்னெழுத்து இல்லாவிட்டால்
நன்னகர் மன்னர் பேராம்;நடுஎழுத்து இல்லாவிட்டால்
கன்னமா மிருகத்தின் பேர்;கடைஎழுத் தில்லாவிட்டால்
உன்னிய தேனின் பேராம்;ஊரின் பேர் விளம்புவீரே!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

விளையாட்டு மூன்று;

இப்பாடலைப் பாடியவர் கொட்டாம்பட்டிக் கருப்பையா பாவலர்.

'தேங்குழலப் பம்தோசை யித்தியமா உடலில்
திகழ்வடையப் பழம்பணியா ரங்கள்எலா நீத்தே
ஓங்கியழு தலட்டுப்பல காரமுழ அனைமார்க்கு
ஒடுங்கிப்பா யசநிகர்த்த உற்றார்க்கு மஞ்சி
வீங்கிபக்கோ டாமுலையில் பூந்தினவு கொண்டுன்
விரகத்தில் அதிரசமுற் றன்பிட்டு வந்தாள்
தாங்குதனின் கடன் செந்தில் வேலரசே அவணின்
றன்பாலா அடைதலெழில் தருமுறுக்குத் தானே!'

இதில் 12 பலகார வகைகள் சொல்லப் பட்டிருக்கின்றன.அதனூடாக இன்னொரு கருத்தும் பொதிந்திருக்கிறது.முடிந்தால் இரண்டு பொருள்களையும் பின்னூட்டத்தில் தாருங்கள்.

போவதற்கு முன் ஒரு பாடல்,

வெள்ளரிக் காயா? விரும்பும்அவ ரைக்காயா?
உள்ளமிள காயா? ஒருபேச் சுரைக்காயா?

நயம்;

ஒரு பெண்ணைப் பார்த்து நீ உள்ளமிளக மாட்டாயா? ஒரு பேச்சுரைக்க மாட்டாயா? என்பதைப் புலவர் பா நயம் தோன்ற வெள்ளரிக்காய்,அவரைக்காய், மிளகாய்,பேச்சுரைக்காய் முதலிய பெயர்களைக் கொண்டு இப் பாடலைப் பாடியுள்ளார்.பாடிய புலவர்,அழகிய சொக்கநாதபிள்ளை.

8 comments:

  1. 1.புதையல்.
    2.மதுரை
    3.தேன்குழல்,அப்பம்,தோசை,பணியாரம்,லட்டு,பாயசம்,பகோடா,அதிரசம்,முறுக்கு,அடை,வடை,பிட்டு.
    இப் பாடலின் பொருள் விரகதாபத்தில் விருந்தளிக்கும் பெண்ணைப் பற்றியது.(வர்ணனைகளும் வேணுமோ..ஹி ஹி..)

    ReplyDelete
  2. வாவ் சூர்யா!! :).மெத்தச் சரி.

    வேண்டாம்!வேண்டாம்!! இது போதும்.:))

    ReplyDelete
  3. கண்டு பிடித்து விட்டதால் இன்னொரு பரீட்சை வைக்கவா? இது ஒரு சிலேடை விளையாட்டு.இந்தப் பாடலுக்குள் மூன்று சொற்கள் ஒழிந்துள்ளன.அந்த மூன்று சொற்களைக் கொண்டும் இப் பாடலுக்கு மூன்று விதமான பொருள் கொள்ளலாம்.எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? பாடல் இது தான்.

    'நீரின் உளதால்,நிறம்பச்சை யால், திருவால்
    பாரில் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப்
    பல்வினையை மாற்றுதலால் பாரீர்! பெருவான்
    வில்விண்டு நேர்வெற் றிலை.'

    ReplyDelete
  4. கொஞ்சம் கடினம் தான்.
    வெற்றிலை,வானவில், வில்
    போன்றன வந்து போகின்றன.
    அத்துடன்..திருவால் என்பது திருமால் என வருமோ....?
    எதற்கும் நேரமுள்ளநேரம் முயற்சித்துப் பார்க்கிறேன். கண்டிப்பாய் பதிலிடுவேன்.
    sooryavinothan@gmail.com
    mail me if you dont mind.

    ReplyDelete
  5. சரி, முயற்சி செய்யுங்கள்.பாடலை மறு முறை சரி பார்த்து விட்டேன்.தவறொன்றும் நேரவில்லை.

    முடிந்த யாரும் முழுமையான பதிலைத் தரலாம்.

    ReplyDelete
  6. என்னளவில் இரு விடுகதை வெண்பா எழுத இது தூண்டியது.



    1). முதலீர் எழுத்து மிகுதி எனவாம்
    இதத்தின் எதிர்ப்பாம் இறுதிப் பகுதி
    பதவியில் உள்ளோர் பெறுவ திதுவாம்
    உதவிடச் செய்யும் விடை!


    2). முற்பாதி பேரில் மிகுந்த அருளன்றோ
    பிற்பாதி பேரோ பொருளின் பொருளே.
    முதலிரு கண்டிட வெண்மையு மில்லை
    முதல்வராய் வந்து மொழி!



    விடுகதைப் பாக்கள் முதல் முறையாக முயற்சி செய்வதால் மிகவும் எளிமையாகவே தந்திருக்கிறேன்.

    நீங்க சொல்லுங்க.

    ReplyDelete
  7. என்னளவில் இரு விடுகதை வெண்பா எழுத இது தூண்டியது.



    1). முதலீர் எழுத்து மிகுதி எனவாம்
    இதத்தின் எதிர்ப்பாம் இறுதிப் பகுதி
    பதவியில் உள்ளோர் பெறுவ திதுவாம்
    உதவிடச் செய்யும் விடை!


    2). முற்பாதி பேரில் மிகுந்த அருளன்றோ
    பிற்பாதி பேரோ பொருளின் பொருளே.
    முதலிரு கண்டிட வெண்மையு மில்லை
    முதல்வராய் வந்து மொழி!



    விடுகதைப் பாக்கள் முதல் முறையாக முயற்சி செய்வதால் மிகவும் எளிமையாகவே தந்திருக்கிறேன்.
    இந்த இரண்டு வெண்பாக்களுக்கு மறுமொழி அளியுங்கள். மிகவும் எளிது. மிகமிக எளிது.

    ReplyDelete
  8. உங்கள் வரவுக்கு நன்றி இப்னு.வணக்கங்களும் உரியதாகுக!

    பதில் சரியா என்று சொல்லுங்கள்.

    1)வெகுமதி.

    2)திருமதி.

    ReplyDelete