அண்மையில் அவுஸ்திரேலியப் பார்ட்டி ஒன்றுக்குப் போனேன்.
வெளி நாட்டினரின் பார்ட்டிகளைப் பற்றி தனியாகவே ஒரு பதிவெழுதலாம்.இது அதைப் பற்றியதல்ல வெனினும் அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல எனக்கு நீங்கள் இடம் தர வேண்டும்.
அவுஸ்திரேலியர்களுடய பார்ட்டிகளுக்குப் போனால் அங்கே வைக்கப் பட்டிருக்கின்ற உணவு வகைகளும் அலங்காரங்களும் தனியொரு விதமாக இருக்கும்.ஒரு பக்கம் பேக் செய்யப் பட்ட உணவு வகைகள் இருக்கும். அதன் அடுத்த கட்டமாக சண்ட்விட்ச்சுகள் அழகாக வெட்டப் பட்டு அடுக்கப் பட்டிருக்கும். அதனைத் தாண்டி வர, பேக் செய்யப் பட்ட உப்பு பிஸ்கட்டுகளும் டிப் என்று சொல்லப் படுகின்ற வகையறாக்களும் சீஸ் கட்டிகளும் இருக்கும். அதனையும் தாண்டி வந்தால் பழவகைகள் அழகாக தோலோடு கைபாடாது நறுக்கி வைக்கப் பட்டிருக்கும்.
அதிலும் பழ வகையறாக்கள் நிறம்,பழக்குடும்பம்,சுவை,என்று வகை பிரிக்கப் பட்டு பெரிய வாயகன்ற தட்டில் வைக்கப் பட்டிருக்கும்.உதாரணமாக றொக்மிலன், வோட்டர் மிலன்,ஹணிமிலன் ஒரு வகை.வாழைப்பழம், மண்டரின், திராட்சை போன்ற விதையற்ற - அப்படியே நாமாக உரித்துச் சாப்பிடக் கூடிய பழ வகைகள் இன்னொரு வகை.தோடம் பழம் தனியொரு வகை.இவ்வாறு அவைகளும் பிரிக்கப் பட்டிருக்கும்.
அதனையும் தாண்டிப் போக,உணவுக்குப் பின்பான இனிப்பு வர்க்கங்கள் கொலு வீற்றிருக்கும்.பிளேற்றுகள், கப்புகள், கத்திகள்,கரண்டிகள்,முள்ளுக் கரண்டிகள் அவையவற்றுக்குரிய இடங்களில் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கும்.
சம்பெயின்,திராட்சைரசம்,மதுரசம்,பழரசம்,தண்ணீர் இவை இருக்கிற இடம் தனியாக.
அவரவர் தனக்குத் தனக்குப் பிடித்தவற்றை தமக்குத் தேவையான நேரங்களில் எடுத்த படி தத்தமக்குப் பிடித்த இடங்களில் உட்கார்வர்.அண்மையில் சென்ற பார்ட்டி ஒன்றில் மேற்கூறிய வண்ணமாக உணவுப் பொருட்கள் இடம் பிடித்திருக்க, மென்மையான ஒளியில், வண்ணமான கலவையில்,ஒரே ரசனை கொண்ட பல்லின மக்களை கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது.
அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளும் தனித்தன்மை மிக்கதே!அவரவருக்கு செளகரிகமான ஆடைகள்.அவரவருக்குப் பிடித்த படி அவரவர்.நீளக் கூந்தல் கொண்ட ஆண்,ஆணைப் போல தலைமயிரை வெட்டிக் கொண்ட பெண்,நீல,மண்ணிற,பச்சை, கறுப்புக் கண்களைக் கொண்டோர், கறுப்பு, றோசாவர்ணம், மஞ்சள், மண்ணிற மனிதர்கள்.
இந்த வேறுபாடுகள் எல்லாவற்றுக்கும் அப்பால் அவர்களுக்குள்ளாக ஒளிர்ந்த படி இருக்கும் தனித்தன்மைகளே அங்கு பிரதானமாய்; பிடித்தமானதாய்;பிரகாசமானதாய்;சுதந்திரம் மிக்கதாய் ....அவையே அங்கு ஒளிரக் கண்டேன்.அவர்களைச் சுற்றி அவ்விடயங்களைக் கேட்கும்,பகிரும் ஆர்வத்தோடு சிலர். அது அழகானதொரு தனி வேறுலகம்.
கலைகளை நேசிக்கும் கலைஞர்கள்....
பெண்களை நேசிக்கும் பெண்கள்....
ஆண்களை நேசிக்கும் ஆண்கள்......
சுதந்திரத்தை நேசிப்போர்.....
இயற்கையை ரசிப்பவர்......
தன்னைத் தேடித்திரிவோர்.......
சேவையில் சுகம் காண்போர்.....
மிருகங்களின் உரிமைக்காகப் போராடுவோர்...
மனிதமே மகத்தானது என்போர்....
ஆத்மீகத்தில் விடை கண்டவர்கள்...
இவற்றில் எல்லாம் கடவுளைக் காண்போர்...
புத்திஜீவிகள், பத்திரிகையாளர் என நீண்ட பட்டியல் அது.
இப்படியாக அது ஒரு சுவையான பழக் கலவை.
இங்கு நான் போனேன் என்பதற்காகவே காலாசாரத்தின் காவலர்கள் என்னோடு மனஸ்தாபப் பட்டுக் கொண்டனர்.அதனால் அதனை இத்தோடு நிறுத்திக் கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.
அங்கு வெட்டி வைக்கப் பட்டிருந்த பழக்கலவையில் இருந்த அழகு என்னவென்றால் அவை கைபடாது வெட்டி வைக்கப் பட்டிருந்தமை தான்.அந்தப் பென்னாம் பெரிய விதைகள் இல்லாத றொக் மிலன் பாதியாகக் கீறப் பட்டு அது மேலும் நீளவாட்டாகக் கீறப்பட்டு பின்னர் அது குறுக்குத் துண்டுகளாக தோலோடு வெட்டி வைக்கப் பட்டிருந்தது.சிவப்பும் பச்சையும் கலந்த அதன் வண்ணம் மேலும் வெளிச்சத்தில் பிரகாசிக்க,அந்தக் கைபடாத தன்மை அதற்கொரு வசீகரத்தை அளித்துக் கொண்டிருந்தது.
நாம் கூட அதில் பழப்பக்கத்தை கை வைக்காமலே தோலினைப் பிடித்த படி உண்டு களிக்க முடியும்.
அதன் சுவை தனி.முள் இல்லா றோஜா மாதிரி இது கைபடாக் கனி.:)
நம்முடைய பார்ட்டிகள்;அதில் நாம் பேசும் விடயங்கள்;ஆடைகளில்,ஆபரணங்களில் நாம் காட்டும் அதீதம்,பணம், தொழில்,அந்தஸ்து இவற்றைச் சுற்றியதான சூழல்,உணவுகளில் வழிந்து நிற்கும் எண்ணை,அதில் நாம் சேர்க்கும் மசாலா வகையறாக்கள்,மூன்று வீடு வரை பரவும் சாப்பாட்டு மணம்-இவை பற்றி நான் பேசவில்லை.சும்மா நினைவுக்கு வந்தது அவ்வளவு தான்.:)அதனால் என்னோடு யாரும் கோவிக்க வேண்டாம்.
அந்தக் கைபாடாமல் வெட்டப் பட்ட பழம் போல ஒரு பாடலை இன்று உங்களோடு பகிர ஆசை.
புறநானூறு - பாடல் 57. பாடிய புலவன்; காவிரிப்பூம் பட்டிணத்து காரிக் கண்ணனார்.
பாடப் பெற்றவர்;பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறன்.
“வல்லார் ஆயினும்,வல்லுனர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என் எனின்
நீயே,பிறர்நாடு கொள்ளும் காலை, அவர் நாட்டு
இறங்கு கதிர்க் களனி நின் இளையரும் கவர்க!
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க!
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு;நின்
நெடுநல் யானைக்குக் கந்து ஆற் றாவே!”
சொல் விளக்கம்;
வல்லார்- கல்வித்திறம் அற்றவர், வல்லுனர்-திறன் உடையவர்கள்,மாயோன் - திருமால்,மாறன் - பாண்டியன் நன்மாறன்,இறங்கு கதிர் - முற்றிச் சாய்ந்த நெற்கதிர்,இளையர் - வீரர், நைக்க - அழிக்க,ஒன்னார் - பகைவர், செகுத்தல் - கொல்லுதல், கடிமரம் - காவல் மரம்,தடிதல் - அழித்தல்,ஓம்பு - தவிர், கந்து - கட்டுத் தறி.
சாரம்;
இப் புலவன் அயல் நாட்டுப் புலவன். பாண்டிய மன்னன் தன் தாய் நாட்டின் மீது படையெடுக்கப் போகிறான் என்ற செய்து காதில் வந்து விழுகிறது.புலவனுக்குத் தெரியும் பாண்டியனின் படைபலம்,மற்றும் வீரம். போர் ஒன்று வந்தால் நாடு என்னவாகும் என்பதையும் ஏழைப் புலவன் நன்கறிவான்.
தன் நாட்டில் இருந்து இன் நாட்டுக்கு கால் நடையாக வருகிறான் புலவன்.வந்து மன்னனைக் காண்கிறான். கண்டு இவ்வாறு உரைக்கிறான்.
வல்லவர்களும் சரி எளியவர்களும் சரி உன்னைப் புகழவே செய்கிறார்கள். மாயோனை ஒத்த புகழுக்குரிய,அவ்வாறு உரைக்கத் தக்க சிறப்புடையவன் நீ.உனக்குச் சொல்வதற்கு என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது.
அது என்னவென்றால்,பிறருடைய நாட்டை நீ கவருகின்ற போது (நீ என்னவோ அதனைச் செய்யத் தான் போகிறாய்,அதனால்)உன் வீரர்கள் முற்றித் தலை சாய்த்துக் கிடக்கும் நெற்கதிர்கள், மற்றும் வயல் வெளிகளை அழித்துக் கொள்ளையடிப்பதாயின் கொள்ளையிடுக;அந்த நலம் விளைகின்ற பெரிய ஊரை நெருப்பிட்டு அழிக்க விரும்பினால் அதனையும் செய்க;நீயும் உன் வீரர்களும் உங்கள் ஒளி பொருந்திய நெடிய வேலால் போர் வீரர்களைச் சாய்ப்பினும் சாய்க்க;
ஆனால்,அந்தக் காவல் மரத்தை மட்டும் ஒன்றும் செய்து விடாதே! அது உன்னுடய யானையைக் கட்டுவதற்குக் கூட பலமில்லாதது மன்னவா!
இப் புலவனின் தாய்நாட்டின் மீதான பாசம் என்னை அலைக்கழித்த படியே இருக்கிறது.
உங்களுக்கு எப்படி?
விருந்து பற்றிய சுவையான செய்திகளும் போர் குறித்த அவலமும்.... என்னவொரு முரண்! தேன் பாட்டிலை எடுக்கும் போது அடுத்து வரப்போகும் மருந்து பற்றி அறியாச் சிறுபிள்ளையாய் ஆகி விட்டேனோ ... உள்ளிருக்கும் விஷம் முறித்து வெளியேற்ற மருந்தின் அவசியமும் உரைக்கிறதென் மரமண்டைக்கு. அக்கறையுடன் தேடித் தேடித் தரும் தங்கள் சுவை அபாரம் தான் தோழி... புலவனின் தாய் நாட்டுப் பற்று நம்மையும் பீடித்து அலைகழிக்கும் விதமாய் தானிருக்கிறது.
ReplyDeleteசங்கத்துப் பாடல்களைப் படிக்கப் படிக்க ஒரு புது உலகு முன்னால் தோன்றுகிறது நிலா.
ReplyDeleteபாருங்கள் ஒரு மரத்தின் மீது இப் புலவன் காட்டுகிற நேசத்தை.
இதைப் போல இன்னொரு பெண் போரில் நாடு வெற்றி கொள்ளப் பட்டுவிட்ட பின் அந்த நாட்டில் ஒரு முல்லைக் கொடி கொள்ளையாகப் பூத்துச் சொரிந்து போய் இருக்கிறது.அதைப் பார்த்து அவள் கேட்கிறாள். ‘நாங்கள் எல்லாம் துக்கித்திருக்கும் போது உன்னக்கென்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது என்று பேசி,‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே’ என்று கேட்கிறாள்.- முல்லைப் பூ மீது அத்தனை கோபம் அவளுக்கு!
இன்னொரு பாடல் மரம் ஒன்றைத் தான் தண்ணீர் ஊற்றி வளர்த்ததால் அது தன் சகோதரி என்று கூறி, அதன் கீழ் தன் காதலனைச் சந்திக்க வெட்கமாக இருக்கிறது.அதனால் அவ்விடத்துக்கு தான் இனி வர மாட்டேன் என்று தன் காதலனுக்குக் கூறுகிறாள்.
இயற்கையோடு இயற்கையை நேசித்து வாழ்ந்த அக்கால வாழ்க்கையைப் பாருங்கள் நிலா!
நாகரிகம்,விஞ்ஞானத் தொழில் நுட்பம் என்று நாங்கள் எங்கே போய் நிற்கிறோம் இன்று!