Tuesday, December 25, 2012

புதுவருட விடுமுறைக்கால வாழ்த்துக்கள்



பிறக்கின்ற புது வருடம் 2013 உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் அமைதியையும் எடுத்து வருவதாக!

புது வருடத்தில் சந்திப்போம்!

Saturday, December 15, 2012

வணிக சஞ்சிகைகளில் தொழில்நுட்பத் தமிழ்



நேற்றைக்கு வேலைக்குப் போகும் அவசரத்தில் கையில் அகப்பட்ட ஒரு சஞ்சிகையைத் தூக்கி பையில் போட்டுக் கொண்டு புறப்பட்டேன்.வாராந்த ‘குங்குமம்’ சஞ்சிகை. ஏதோ ஒரு பண்டமாற்றடிப்படையில் வீடு வந்து சேர்ந்திருக்கின்றது.

புரட்டிய போது தமிழ் எவ்வளவு அவசர அவசரமாகப் பயனிக்கின்றது என்று தெரிந்தது. நாவல்கள், நெடுங்கதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள் எல்லாம் சுருங்கி ஒரு பக்கக் கதைகளாகவும், துணுக்குகளாகவும்  twitter, Facebook முகப்புப் பக்க வரிகளாகவும் மாறிப்போனதைக் காண முடிந்தது.

ஒரு சிறுவரியில் நச்சென்று சொல்லி விட்டுப் போவதை போகிற போக்கில் பார்த்து விட்டுப் போகும் அவசரம்!

தமிழில் அது மெல்லச் சுவறுகிறது.

காலமாற்றம் ஒன்று கண்ணில் தெரிகிறது.

தமிழும் இலக்கியமும் கூட இடம்மாறி அவசர அவசரமாக ஓடுவதாகத் தோன்றுகிறது. எண்ணிம யுகத்துக்குள் புத்தாடை புனைந்தவாறு புதுத் தமிழ் நிற்கிறது. தொழில்நுட்பம் எழுத்தாளர்களை வாசகர்களாகவும் வாசகர்களை எழுத்தாளர்களாகவும் இடம்மாற்றிப் போட்டிருப்பதால் இணைய வெளி எங்கும்; மக்கள் கூடும் சமூக வலைத்தளங்கள்  எங்கும்; சிறுகதைகளுக்கான கருக்கள் மலிந்து கிடக்கின்றன. ஒரு நையாண்டியோடு நகைச்சுவையோடு உதட்டில் மலருமொரு குறுநகையோடு இரண்டு வரியில் தமிழ் இப்போதெல்லாம் அதைச் சொல்லிப் போகிறது.

கலைப்படுத்தல், இலக்கியமயப்படுத்தல், அழகுபடுத்தல் எல்லாம் வேண்டாத ஒன்றாய் ’சிம்பிளாய் ரெண்டு வரி’ என்ற அளவில் குறுகிப் போயிற்று.

“வீரம் அன்று; விதி அன்று; மெய்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக் கென்னுடல்
பாரம் அன்று: பகை அன்று - பண்பொழிந்து,
ஈரம் இன்றி, இது என் செய்தவாறு நீ?”

என்று வாலி இராமனைப் பார்த்துக் கேட்குமிடத்தை வாலிவதைப் படலத்தில் பார்த்து, படித்து,ஆசிரியரிடம் கேள்வி கேட்டு,கேட்டு, ரசித்து,வியந்து, பாடி,பாடமாக்கி,புளோகாங்கிதமடைந்த காலங்கள் எல்லாம் போயே போயிற்று.

இப்போதெல்லாம்

பேதைப் பெண்ணே,
நட்ட மரத்துக்கு நீரூற்ற மறந்து விட்டு
பட்ட மரத்துக்கு ஏனடி
பம்செட் வைக்கிறாய்?

என கேலி செய்யும் காலமாய் ஆயிற்று காலம்! :-)

இலக்கியத்தனம் அதன் சுவையுணர்ச்சி ரசனை அதை ஆழ்ந்து அனுபவிக்கும் தன்மை குறிப்பிட்ட ஒருசாராருக்கென ஒதுங்கிப் போகிறதோ? சுருங்கிப் போகிறதோ? கால வெள்ளம் தகவல் குப்பைகளை வாழ்வாதாரமாக்குகிறதோ? யாருக்கும் நின்று கேட்க பொறுமையும் அவகாசமும் இல்லாமல் மாய மானைத் தேடி தமிழும் ஓடுகிறது.

அவற்றை வணிகப்பத்திரிகைகளும் சிறப்பாகப் புரிந்து கொண்டிருக்கின்றன.

நான் பார்த்த சஞ்சிகையில் கிடைத்த தகவல்கள் சுவாரிஷமாகவும் இருந்தன. கொஞ்சம் ஆழமாய் இவற்றைப் பார்த்தோமானால் இவைகளுக்குள் எல்லாம் சிறுகதைகளுக்கான கருக்கள் / விதைகள் ஒழிந்திருப்பதையும் கண்டு கொள்வீர்கள்.

சில :

1. ஒரு அஞ்சு வருஷம் கஸ்டப்பட்டா அரசியல் வாதியாயிடலாம்.ஆனா, அதுக்கப்புறம் வாழ்க்கை முழுக்கக் கஸ்டப்பட்டாலும் மனுஷன் ஆக முடியாது.

2.’கொலையும் செய்வாள் பத்தினி’
என் மனைவி சமைக்க ஆரம்பிச்ச பின்னால தான் இதுக்கு அர்த்தம் புரிஞ்சுது.

3.கடவுளுக்கு நம்மப் பிடிக்கல்லனா டாக்டர்கிட்ட அனுப்புறாரு. டாக்டருக்கு நம்மப் பிடிக்கல்லனா கடவுள்கிட்ட அனுப்புறாரு.

4.பொங்கல் சாப்பிட்டும் தூக்கம் வரல்லன்னா உலகில் வேறெந்த மருந்தும் உங்கள தூங்க வைக்காது.

5.சூதும் வாதும் தூங்கி வழிகிறது அரசாங்கத்திடம். கேட்டால் அதெல்லாம் ’அரசியல் சானக்கியம்’ என சமாதானம் சொல்லப்படுகிறது.

6.வாழ்க்கைய உருப்படியா வாழணும்மா ‘வாழ்க்கை ஒரு... ‘என்று ஆரம்பிக்கிற எந்த தத்துவத்தையும் கண்டுபிடிச்சிடக்கூடாதுப்பா.

7.இப்பல்லாம் நேரத்துக்கு ஒழுங்கா கரண்ட் போக மாட்டேங்குது.

8.தோழா... தோழா... தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்....
அப்பத் தான் உன் பொக்கட்டுல என்ன வச்சிருக்கான்னு எட்டிப் பாக்கலாம்.

9. எவ்வளவு புன்னகைக்க வேண்டும் என்பதை அனுதினமும் கற்றுக் கொடுக்கிறது நகர வாழ்க்கை.

10. எனக்கு விருப்பமில்லா விடயங்களில் இருந்து என்னைக் காப்பாற்றி விடுகிறது மறதி.

11.பெண்கள் கண்களால் பார்ப்பதை இவன் தன் இஸ்டப்படி மொழிபெயர்த்துக் கொள்கிறான்.

12.சில நிமிடங்களில் வெளிப்படுத்திய காதலை, வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து நிரூபிக்க வேண்டி இருக்கிறது.

13.அடேங்கப்பா என அசத்திய ஒரு விஷயம் ‘அட, போங்கப்பா, எனச் சலிக்கவும் வைப்பதுண்டு.

14.’பாலூட்டி வளர்த்த கிளி’ பாடலக் கேட்டிட்டு கிளி பால் குடிக்குமா என்று கேட்டால் முறைக்கிறாங்க.

15.வீட்டருகே செல்லும் காரை குரைத்துக் கொண்டே துரத்திச் சென்று விட்டு, தனக்குப் பயந்து கார் ஓடிவிட்டதென கர்வத்தோடு வரும் நாயைக் கொஞ்சத் தோன்றுகிறது.

16. டம்ளருக்குள் அடிக்கும் புயல் தேனீரை ஆற்றவே பயன் படுகிறது.

17.சிறுவீடு
ஒரு தோட்டம்
சில பூக்கள்
நிலா
நீ
வா காதலிக்கலாம்.

18.பறவைகளின் வாழ்வில் பரிநாம வளர்ச்சி என்பது கிளைகளில் இருந்து வயர்களுக்குத் தாவியதே.

19.சக மனிதர்களாகப் பார்க்காமல் பிற மதத்தினராகப் பார்க்கும் மதங்கள் உண்மையில் இறைவனையும் தலைகுனிய வைக்கின்றன

20.ஆண்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் நிம்மதியா இருக்கணும்.பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாம நிம்மதியா இருக்கணும்.

சின்னஞ்சின்னனாய் பூக்கும் சிறு சிறு கவிதைகள் (நன்றி: ஆ.வி.)
1.
.தாத்தா பார்த்த ஆறு
அப்பா பார்த்த நீர்
நான் பார்த்த மணல்
மகன் பார்க்க எது?

-ராஜா. சந்திர சேகர் -

2.
ஃபேஸ்புக்கில் கிரிக்கெட்டர்களை
விமர்சித்தேன்
ஆர்க்குட்டில் அரசியல் பேசினேன்
புளொக்கில் திரையுலகை பின்னி எடுத்தேன்.
ஸாரி... அப்பா
உங்களிடம் அடுத்த வாரம் பேசுகிறேன்

- சந்திரா.சிவபாலன்.-

3.
முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்
ஒரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும் படி கேட்டாள் அவள்
அவனும் சொன்னான்.
‘இதெல்லாம் ஒரு காரணமா?’
என்றவளையும் சேர்த்து
இப்போது இவனிடம்
ஆயிரத்தியொரு காரணங்கள் இருந்தன.

- பா. ராஜாராம்.-

4.

நாங்கள் கூட பாபர் மசூதிகள் தான்
இடிப்பதற்கு எத்தனையோ பேர்
கட்டத் தான்
யாருமில்லை.

(யாரோ)

5.

என் சட்டையில்
எத்தனை ஓட்டைகள்
எதிர் வீட்டு ஜன்னலில்
எத்தனை சட்டைகள்?

(யாரோ)



Wednesday, December 5, 2012

தமிழ் ஆவண மாநாடு 2013





 நூலகம் நிறுவனம் தனது எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆவணமாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளது. இம்மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுவதாக நூலகம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது பற்றிய விபரங்களை வலைப்பதிவு நண்பர்களுக்காக இணைக்கிறேன்.


திகதி
ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில், 2013
இடம்
கொழும்பு தமிழ்ச் சங்கம், இலங்கை
மின்னஞ்சல்
noolahamfoundation@gmail.com
தொலைபேசி (இலங்கை)
0094 112363261


அறிமுகம்
இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தல் பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய , எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், 2013ம் ஆண்டில் தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது ஆண்டு விழாவுடன் கூடியதாக ”தமிழ் ஆவண மாநாடு 2013” ஐயும் நடாத்தவிருக்கின்றது. 'தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம் மாநாடு எதிர்வரும் 2013 ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறும்

 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

பல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும். 

ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயப்பரப்புகள்
1.     வரலாறு, தொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும்
2.     ஒலி, ஓளி, புகைப்பட ஆவணங்கள்
3.     தனிமனித ஆளுமைகள், நிறுவனங்கள்
4.     சமூகத்தை ஆவணப்படுத்தல்
5.     மொழி இலக்கியப் பதிவுகள்
6.     அறிவுப்பகிர்வும் கல்வியும்
7.     ஆவணப்படுத்தலில் தொழினுட்பப் பயன்பாடுகள்
8.     எண்ணிம நூலகங்கள் [Digital Libraries], இணையத் தளங்கள், தரவுத் தளங்கள்
9.     நூல் விபரப்பட்டியலும் நூலகவியலும்
10.   கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும்

ஆய்வரங்குகளில் பங்குபெற்ற விரும்பும் ஆய்வாளர்கள், தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான முன்வரைவை 400 சொற்களுக்கு மேற்படாதவாறு அனுப்பி வைக்க வேண்டும். இம் முன்வரைவு 15-01-2013 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவை தமிழ் ஒருங்குறி [Unicode] எழுத்துருக்களில் தட்டச்சிடப்பட்டு மின்னஞ்சலில் noolahamfoundation@gmail.com அனுப்பப்படுவது விரும்பத்தக்கது. அதேவேளை தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், நியமிக்கப்பட்ட ஆய்வறிஞர்களைக் கொண்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட முன்வரைவுகள் பற்றிய விபரம் இரு வாரங்களுக்குள் அவற்றை அனுப்பியவர்களுக்கு அறிவிக்கப்படுவதோடு மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிப்பதற்கான அழைப்பும் பதிவுசெய்தல் பற்றிய விபரங்களும் அறிவிக்கபடும்.

தெரிவு செய்யப்பட்ட முன்வரைவுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமது இறுதி வடிவத்துடன் 01-03-2013 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளின் இறுதிவடிவம் 5000 சொற்களுக்கு மேற்படாததாக இருத்தல் வேண்டும்.
மாநாட்டு அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் நூலக நிறுவனம் மாநாட்டின் ஆரம்ப நாள் அன்று வெளியிட உள்ள மாநாட்டுச் சிறப்பு மலரில் இடம்பெறும். கட்டுரையாளர்கள் மற்றும் பதிவு செய்த பங்குபெறுவோர் அனைவருக்கும் மாநாடு நடைபெறும் நாட்களில் மாநாட்டு சிறப்பு மலர், வெளியீடுகள், கோப்புக்கள் போன்றவை வழங்கப்படும்.

முழுப்பெயர், மின்னஞ்சல், வதிவிட முகவரி ஆகிய விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை அனுப்புதலுக்கும் பிற தொடர்புகளுக்குமான முகவரி: 


Noolaham Foundation 
No 7, 57th Lane, (Colombo Tamil Sangam)
Colombo-06, Sri Lanka
Phone (Land): 0094 112363261





Monday, December 3, 2012

என் நாட்குறிப்பின் சில பக்கங்கள்.........





சாகேதத்தைச் சேர்ந்த ஆர்ய, சொர்னாச்சி, அஸ்வகோஷ்.


பாடலிபுத்ரத்து பிக்கு அவன். காந்தாரநாட்டில் பெளத்தத்தைப் பரப்புவதற்காக கனிஷ்கன் சங்கத்தாரைக் கேட்ட போது அவர்கள் அஸ்வகோஷை அனுப்பிவைத்தார்கள். அவன் கனிஷ்கனின் தலைநகரான பெஷாவாரை அடைந்த போது சகர - கிரேக்க - துருக்கிய - பாரசீக - பாரத நாட்டு நாகரிகங்கள் யாவும் ஒன்றாகக் கலந்திருந்த சங்கம் ஒன்று வந்திருப்பதாக கனிஷ்கன் உணர்ந்து கொண்டதாக ஒரு குறிப்புச் சொல்கிறது. அந்த அளவுக்கு அவன் எல்லா தத்துவங்களையும் கற்று அவற்றில் இருந்த சிறந்த அம்சங்களை எல்லாம் இணைத்து அவற்றைப் பாரத மயப்படுத்தி பாரத தத்துவபாரம்பரியத்துக்குப் புது வழியைக் காண்பித்தான் என்பர்.

அவற்றோடு அவன் காவியங்கள், நாடகங்களை எல்லாம் எழுதினான். அவனது புத்த சரிதம்,செளந்தரியானந்தம் ஆகிய இரண்டும் இணையற்ற காவியங்கள். அவனது சாரி-புத்ர-பிரகரன் என்ற நாடகம் 1700 வருடகால பழைமை மிக்கது. அவனது இதயராணி பிரபா பற்றிச் சிறந்த கவிதைகளை எழுதினான்.

அவனது எல்லா சிருஷ்டிகளிலும் அவன் தன் பெயரை “ சாகேதத்தைச் சேர்ந்த ஆர்ய சுவர்னாட்சியின் புதல்வன் அஸ்வகோஷ் எழுதியது” என்று முத்திரை இட்டிருந்தான்.

இதன் மூலம் தான் பிறந்த இடத்துக்கும் தன் தாய்க்கும் அழியாப் பெருமையை வரலாற்றில் விட்டுச் சென்றிருக்கிறான்.

பேனாபிடிப்பவர்கள்; வெகுசனதொடர்புசாதனங்களைக் கையாளுபவர்கள் கொஞ்சம் இது பற்றிச் சிந்திக்கலாம்.

உங்களுடய தனி முத்திரை எது?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

22.11.2012


சுமார் 12 வருடங்களுக்கு முன் நான் வேலையில் சேர்ந்த நாள் இது. இந்த 22ம் திகதியோடு எனக்கேதோ ஒரு அழிக்கமுடியாத கணக்கு ஒன்று இருக்கிறது. முக்கியமான முடிவுகள் பல இந்தாநாளில் எனக்கு நிகழ்ந்திருக்கின்றன. புலம்பெயர்ந்தது ஒரு 22ம் திகதி. வாகன அனுமதிப் பத்திரம் கிட்டியது ஒரு 22ம் திகதி. என் முதல் கார் வாங்கிய போது அதனை வருடாந்தம் புதிப்பிக்க வேண்டிய அனுமதிப்பத்திரம் எடுக்கவேண்டிய கடசி நாள் 22.11.

அதனால் கடந்து போன 22ம் திகதியைக் கொஞ்சம் பயத்தோடு சந்திக்க ஆயத்தமானேன். எல்லாவற்றிலும் வலு கவனமாக இருந்தேன். அவதானமாக வாகனம் ஓடினேன். கேட்டவர்களுக்கெல்லாம் வாகனம் ஓடும் பாதையை இலகுவாக விட்டுக் கொடுத்தேன். நண்பர் ஒருவர் வேலைக்கு கொண்டுசென்று விடக்கேட்ட போது கொண்டு சென்று விட்டேன். அப்போது கூட இந்த 22ம் திகதி பற்றி உரையாடியபடியே போனோம்.

வேலைக்குப் போகும் வரை எல்லாம் சுபம்! வேலை முடிக்க கடசி 2 மணித்தியாலங்கள் இருக்கும் போது மேலிடத்தில் இருந்து எனக்கு வருமாறு அழைப்புக் கிட்டியது. என்னவென்று தெரியாமல் மேலிட உத்தரவுக்குப் போவதென்பது இறந்த பின்பு judgment Day க்குப் போவது போல! எல்லோரும் என்னை இராணுவம் அழைத்துச் செல்லும் ஒரு அப்பாவியைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள். அந்தப் பார்வையின் வீச்சு எனக்குத் தெரியும். திகிலூட்டும் பார்வைகள் அவை!

என் வேலை வளாகத்துக்குள்ளேயே அவ்விடம் போய் சேர 3 நிமிடம் பிடிக்கும். போகும் போது நான் என்ன செய்தேன் என சுயபரிசோதனை செய்து பார்த்தேன். குறைந்த பட்சம் தாக்குதலுக்கு என்னைத் தயார் படுத்தும் மூளை மனதுக்குக் கொடுக்கும் சமிக்ஞை அது. அது எனக்குள்ளான என் மனமும் மூளையும் பேசிக்கொள்ளும் பாஷை .தெரிந்தவரை தவறேதும் செய்யவில்லை என்பது சொற்ப ஆறுதல். நிறைய சுகயீனம் காரணம் காட்டிய விடுமுறைகளை எடுத்திருக்கிறேன். உண்மையில் சுகவீனம் அற்றிருந்த பொழுதிலும். அது ஒரு காரணமாக இருக்கலாம் என மனம் அனுமானித்தது.

இவ்வாறு எண்ணமிட்டபடியே போன போது அங்கே என்னுடயமேலதிகாரி, என் மேலதிகாரிக்கு மேலதிகாரி, அவருடய மேலதிகாரி என மூன்றுபேர் வரிசையாக உட்கார்ந்தபடி என் வரவுக்காகக் காத்திருந்தார்கள்.மனம் திக்கென்றது. விடயம் சற்றே பெரிதெனத் தோன்றியது.

உட்கார்ந்த பின் கேள்விகள் கேட்கப்பட்டன.

1,உள்ளக இடமாற்றத்துக்கு விண்னப்பித்திருந்தாயா?

ஆம். பலவருடங்களுக்கு முன் விண்ணப்பம் போட்டிருந்தேன். என் பெயர் விருப்புத் தேர்வுப் பட்டியலில் இருந்தது.

2.வேலைக்கான வாய்ப்புள்ளதாகக் கடிதம் வந்ததா?
ஆம் வந்தது. நான் வருவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன்.

3.சில வினாக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.அவ் வினாக்களுக்கு நீ விடை அளிக்க வேண்டும். தயாரா?

ஆம்,தயார்! ( பலகேள்விகள் கேட்கப்பட்டன. என்னுடய விடைகளும் இதுவரை என் வேலைத்தலத்தில் நான் சார்ந்த வேலை ஒழுங்குமுறைகளும் பரஸ்பரம் திருப்தியாக இருப்பதாகவும் விடுமுறைகள் எடுப்பதினால் அது விடயத்தில் சற்றே கவனம் எடுக்கவேண்டும் என்றும் ஒரு புள்ளியில் இருசாராரும் திருப்திப் பட்டு கையொப்பம் வைத்துக் கொண்டோம்.

முடிந்ததென்று எழுந்து கொண்ட போது. இரு இரு இன்னுமொரு விடயம் இருக்கிறது என்றார் மேலதிகாரி.கேள்விக்குத் தயாராகி கண்கள் அவரை நோக்க இருக்கையில் மீண்டும் அமர்ந்து கொண்டேன்.

15.11.12 அன்று நம் இலாகாவைச் சார்ந்த யாரோடாவது தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தாயா?

இந்தக் கேள்வி எனக்கு முதலில் விளங்கவில்லை. இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னபோது ஆமாம் என்றேன்.காரணம் அந்தப் புது இட வேலைக்கான வெற்றிடம் வந்திருக்கிறது என்ற தகவல் எனக்குக் கிட்டிய போது முடிவினை எடுப்பதற்கு முன் அந்த இடத்தையும் வேலையையும் பார்க்க எண்னியதால் அந் நிலயத்தாரோடு தொடர்பு கொண்டு வந்து பார்க்க அனுமதி கேட்டிருந்தேன்.

அந்தத் தொலைபேசி உரையாடலில் என்ன நடந்தது? முழுவதுமாகச் சொல்லவும்?

அந்தத் தொலைபேசி இலக்கத்தை நம் நிர்வாக அலகில் இருந்து பெற்றுக் கொண்டேன். அந்தத் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டபோது ஆண்குரல் ஒன்று பேசியது.(பெயர் நினைவில் இல்லை) தான் விடுமுறையில் சென்றிருக்கும் ஒருவருக்காக பதவியில் இருப்பதாக அக்குரல் தெரிவித்தது. நான் காரணம் கூறி ...........இவரோடு கதைக்க வேண்டும். அவரது தொலைபேசி இலக்கம் வேண்டும் என்று கேட்டேன். அவர் தந்தார்.

அவர் தந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டேன். அது தவறான இலக்கமாகும். அந் நபர் நான் தவறாக எடுத்து விட்டேன் என்பது பற்றிச் சற்றே கடுமையாக நடந்து கொண்டார். தவறுக்கு மன்னிப்புக் கோரி தொடர்பைத் துண்டித்து விட்டு மேற்சொன்ன நபருக்கு மீண்டும் சரியான தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தொடர்பு கொண்டேன். நம்மிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. தன்னுடய நிலயத்தின் முதன்மையான மேலதிகாரியின் பிரதான தொலைபேசி இலக்கம்  இது சம்பந்தப்பட்ட நிர்வாக சேவையில் இருப்பவருக்குத் தெரியாதிருப்பது பற்றி நான் நான் என் ஆட்சேபனையைப் பிரஸ்தாபித்தேன். அது அவரைக் கோபப்படுத்தியது. அவர் தொலைபேசியைத் துண்டித்தார்.

நான் மீண்டும் நம்முடய நிலயத்தின்  நிர்வாகப் பகுதிக்கு தொலைபேசி எடுத்து பொருத்தமான இலக்கத்தைப் பெற்று மேலதிகாரியோடு கதைத்து நேரத்தை ஒழுங்குபடுத்தி இடத்தையும் வேலையையும் பார்த்து வந்தேன்.

அவ்வளவுதான்.

நீ மிகவும் rude ஆக அந் நபரோடு நடந்து கொண்டதாக மேலதிகாரிக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதால் அது சம்பந்தமான விசாரணைகள் நடாத்தும் படி உதரவு வந்திருக்கிறது.

உன்னுடயவேலை சம்பந்தப்பட்ட அறிக்கையோடு இப்போது நீ சொன்ன பதிலும் அவரகளுக்கு தொலை நகல் மூலம் சென்றடையும்.

இப்பொழுது நீ செல்லலாம்!

வேலை காலி என்பது சொல்லாமலே விளங்கிற்று!
புல்லுக் கூட பல்லை உடைக்கும் என்பதும் கூடவே!

very expensive lesson!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சொல்லுகின்ற ஒரு சொல்


கதவைத்திறந்து வெளியே வந்த போது வெட்கமும் அவமானமும் மனதைக் கவ்வி இருந்தது. இப்படியான ஒரு மனநிலையில் நடந்து என் வேலையிடம் நோக்கிப் போனேன்.

பல நூற்றுக்கணக்கான வேலையாளர்கள் மத்தியில் இந்திய இளைஞர்கள் சிலர் அங்கு துப்பரவுத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்களைக் காணுகின்ற போது புன்னகைப்பது வழக்கம். அன்றய அப்போதய மனநிலையில் எதிர்கொண்ட ஒரு இந்திய இளைஞனைக் காணவும் புன்னகைக்கவும் தவறினேன்.

நடந்து சென்றவன் நின்று புன்னகைத்து நீ நலமாக இருக்கிறாயா? என்று கேட்டான்.

அந்த நேரத்துக்கு அந்தக் கேள்வி எனக்கு மிக வேண்டி இருந்தது.

இல்லை நான் நலமாய் இல்லை.என்ற போது ஒரு நாள் போல ஒரு நாள் இருப்பதில்லை சகோதரி. அது தானே வாழ்க்கையின் சுவாரிசம்.ஆனால் ஒரு போதும் என்னைப் பார்த்தால் சிரிக்க மறக்காதே! அது எங்களுக்கு எவ்வளவு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகின்றது என்பதை நீ உணர்வாயா? என்றான்.

அப்போதய மனநிலையில் எனக்கு அவனது பேச்சு ஆதரவான அமுதமாய் நோய் தீர்க்கும் மருந்து போல இருந்தது.

புல்லுக் கூட பல்லை உடைக்கும் என்றால் சமயா சமயங்களில் சாதாரணமாய் கொடுத்துவிட்டுப் போகிற ஒரு சின்னப் புன்னைகை கூட மனதுக்கு மருந்தாய் அமையும்.

அமைந்தது!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் ஒரு நாள் தமிழ் வகுப்பு


இன்று சனிக்கிழமை தமிழ் பாடசாலை நாள். என்னிடம் 9ம்10ம் வகுப்பு மாணவ மானவிகள் சுமார் 12 பேர் படிக்கிரார்கள். ஒரு குறும்படம் ஒன்றுகாட்டி பரீட்சை ஒன்றுக்கான வினாக்கள் கொடுக்கத் திட்டமிட்டிருந்தேன். படம் மனுஷி. வினாத்தாளின் கடசிக் கேள்வி இப்படம் சொல்லும் சேதி (Massage) என்ன என்பது.அவர்கள் தந்த விடைகள் பின்வருமாறு:

1.கலியாணத்தை வடிவாப் பாத்து பொருத்தமா என்று பார்த்து, நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து அவசரம் இல்லாமல் கட்டோணும். இல்லாட்டி இப்பிடித்தான் நடக்கும்.

2.பொம்பிளைப்பிள்ளையள் தான் வீட்டில எல்லா வேலையளும் செய்வார்கள். ஆம்பிள்ளையள் சும்மா இருந்து தொலைக்காட்சி பாக்கிறதும் சாப்பிட்டுத் தூங்கிறதும் தான் வேலை. பொம்பிளையள் என்னவானாலும் ஆர்வத்தோட வேலை செய்வார்கள்.

3.ஆண்கள் கலியாணத்துக்குப் பிறகு வீட்டில ஒண்டும் செய்ய மாட்டினம்.பெண்கள் நிறைய வேலை செய்து ஆண்கள Credit/satisfaction  எடுத்துக் குடுப்பினம்.communication இல்லாட்டி கூடாது. bed room ல தான் அவருக்கு அவரோட wife விருப்பம். lack of communication damage a relationship.

4.இந்தப் படம் ஒரு தமிழ் கல்யாணத்தை எங்களுக்குக் காட்டுது.

பெண்கள் தான் வீட்டுவேலைகள் செய்கிறார்கள்.வீட்டில் ஆண் ஒண்டும் செய்யமாட்டார். ஆண்கள் தங்களுக்கு ஒன்று வேண்டும் எண்டாத்தான் கதைக்க வருவார்.ஆண்கள் உதவி செய்ய மாட்டார்கள் ஆனா நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும்.

5. இக்கதை சொல்லுகின்ற செய்தி, ஆண் அவர் பொண்டாட்டியுடன் கதைக்க மாட்டார். பெண் இடுப்புவலியோட எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறாள்.அவள் வலியோடு எல்லாம் செய்தாள்.

எனவே, இக்கைதை சொல்லுகின்ற செய்தி ரெண்டு பேரும் சேர்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.

6. (மாணவன்) ஆண், பெண் இருவரும் சேர்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.

7.பெண்கள் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஆண்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நீ மாட்டலே மாயனோரா.............


இன்றய அதே நாள் பாடசாலை முடிய குடும்பத்தாரோடு சிட்னி முருகன் ஆலய கலாசாரமண்டபத்தில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஸ்ரீமதி.பத்மலக்‌ஷ்மி,சுரேஷின் அதி அற்புத நடன நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கும் வாய்ப்புக் கிட்டியது அது ஒரு பெரும் பேறு. அற்புத முக பாவங்கள்,எழில் மிகு தோற்றம், அடக்கமான ஆனால் அழகான ஆடை அணிகள்!

சிறந்த ஒரு கல்யாணவிருந்துண்ட மனநிறைவு! அதுவும் இலவசமாய் என்றால் பாருங்களேன்!!

ஆனால் எனக்கிருக்கின்ற அங்கலாய்ப்பு என்னவென்றால் இங்கு நடனம் பயிலுகின்ற பலநூற்றுக் கணக்கான பிள்ளைகளில் 3 - 5 அளவிலான மானவிகளும் அதே அளவான ஆசிரிய மணிகளும் வந்திருந்தது தான்.

பகட்டுக்கும் பேருக்கும் பெருமைக்கும் அந்தஸ்துக்கும் கலை பயிலும் நம் கூட்டம். பாரதமோ எனில் கலையைத் தன் ஆத்மாவில் இருத்தி வைத்திருக்கிறது. அதனால் தான் அது அப்படி ஜொலிக்கிறது.இங்கு நடனம் பயிற்றிவிக்கும் நடன் ஆசிரியர்களிடம் கூட அந்த வகையான அர்ப்பணிப்பு, ஆர்வம், நடனத்தைத் தன்னுடயதாக்கி தன்னுடய சுவையாக அதை நமக்கு தரும் இதம் - இதெல்லாம் இல்லை என்று தான் தோன்றுகிறது. பாரத பெண்கள் அதைத் தம் வாழ்வாதாரமாக - வாழ்வின் இருப்பாக - அதை ஒரு பேறாக - வரமாக எண்னுகிறார்கள். நம்மவரோ இறுமாப்புக் கொண்டு விடுவதால் அந்த ஆத்மலயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு விடுகின்றது.

ஆட்கள் போதாதிருந்தது இன்னொருகுறை.60 டொலர் டிக்கட் என்றால் இன்னும் பல சனம் கூடி இருக்கும்! இலவச நிகழ்ச்சி அல்லவா? வந்தால் பெருமை இல்லை. அது கூட ஒரு விதத்தில் நல்லது தான். வந்திருந்த பார்வையளர் கூட்டம் தான் உண்மையான ரசிகர்கள்! மிக வேண்டி இருந்த சபையும் கூட!

1.நவரசங்களைச் செய்து காட்டி சபையிடம் இருந்து என்ன ரசம் என்று கேட்டு பரிசு வழங்கி ரசிகர்களை ஈடுபாடுறச் செய்தார்.

2.பார்வையாளர் தெரிவுக்கு சில பாடல்களைக் கொடுத்து நடனத்தைத் தெரிவு செய்யச் சொன்னார்.

3.சிட்னி முருகன் பற்றிய பாடல் ஒன்றை (யாழ் பாணன் பாடிய முருகா.....என்று தொடங்கி சிட்னியில் கோயில் கொண்டாயோ .....என்று இடம்பெறும் யாழ்ப்பானத்தவர் இயற்றிய கீர்த்தனைக்கு தானே நடனம் அமைத்து சிட்னிமுருகன் சந்நிதானத்தில் அதனை அரங்கேற்றி தெய்வீகம் பொலியச் செய்தார்.

4,இறுதியாக வந்தே மாதரம் பாடி இந்தியக்கொடி பிடித்து தான் பிறந்த நாட்டுக்கு பெருமை சேர்த்து தன் குரு தாய் தந்தை கணவனுக்கு நன்றி கூறி என்றென்றைக்குமாக அவர் முகத்தில் புன்னகை துலங்கியபடி இருக்க நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நீ மாட்டலே மயனோரா ............என்றொரு பாடலுக்கு நடனமாடினார். அது ஒரு வீட்டுவாசலடியில் கனவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கின்ற பிணக்கு. மூக்குத்தி, தோடு, வளையல்கள் என வாங்கித் தருவதாகச் சத்தியம் செய்த காதல் கனவன் அதைச் செய்ய மறுத்து விட்டதால் பெண்ணுக்கு வருகின்ற disappointment. சொன்ன வாக்கைத் தவறவிட்டுவிட்டாய் என்பதால் விளையும் ஒரு பெண்னின் ஆற்றாமை கோபம், கதவை அடித்துச் சாத்தும் லாவகம்! ஆஹா! பிரமாதம்!

ஆத்மீக அர்ப்பனம் என்பது ஒரு வாழ்க்கைமுறை. மூன்றுமணி நேரத்துக்குள் ஒரு வாழ்க்கை முறையை கலையின் ராஜகளையூடாகக் காட்டி விட்டுப் போனாள் அப்பெண்! எனக்கென்னவோ சிட்னி நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.

இது சிட்னி நடனமாதர் கவனத்துக்கு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஆலய தரிசனம்


நான் ஒன்றும் சடங்குகளில் ஆலயத்துக்குச் சென்று கடவுளை வணங்குவதில் எல்லாம் ஆர்வமும் நம்பிக்கையும் அற்றவள். அதற்காக கடவுள் நம்பிக்கை அற்றவள் என்றில்லை. ஆத்மீகத்தில் நம்பிக்கை கொண்டவள். தத்துவங்களில் பற்றுக் கொண்டிருப்பவள், மதங்களைக் கடந்து தத்துவம் என்ன சொலின்றது என்பதை விமர்சனநீதியாகப் பார்த்து பிடித்த விடயங்களை எல்லாவற்றிலிருந்தும் சேகரித்து எனக்கென ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டிருப்பவள்.

பெளத்த தத்துவம் கொஞ்சம், ஹரேராமா ஹரேகிருஷ்னா இயக்கத்தினரின் தத்துவச் சாறு ,தத்துவஞானிகளின் கருத்துக்களில் இருந்து கொஞ்சம், ராஜயோகா இயக்கத்தினரின் தியான வாழ்விலிருந்து கொஞ்சம்,பாரம்பரிய இந்துமத நம்பிக்கைகள் கொஞ்சம் ..என எல்லாம் சேர்த்து குழைத்த கலவை என் ஆத்மீக வாழ்வு! வாழ்க்கை பற்றிய என் வழித்தடங்கள் இவற்றை அடியொற்றியவையே!

இன்று பலவருடங்களுக்குப் பின் கோயிலுக்குப் போனேன். நடன நிகழ்ச்சியைக் காண. பூசை நேரம் இடைவேளை விட்டதால் பூசை பார்த்தேன்.

சரணாகதி தரும் அமைதியை எப்போதேனும் நீங்கள் உணர்ந்ததுண்ட? அது தரும் ஒரு அசாத்தியமான அமைதியை எந்த ஒரு தத்துவமும் தந்து விடாது என்று இப்போது தோன்றுகிறது

அதானால்  கோயிலுக்குப் போங்கள். பூரணமாய் எல்லா கவலைகள், பிரச்சினைகளையும் முற்று முழுதாக நம்பி அவர் கையில் கொடுத்து விட்டு வெறுங்கையோடும் முழு அமைதியோடும் வீடு வாருங்கள்!

மிச்சம் அது நல்லதோ கூடாதோ அவன் செயல்.எல்லாம் நன்மைக்கே என்ற ஞானோதயத்தை அது தரும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

stress ஆக எனக்கென்று இருக்கிறது சில வழிகள் :-)


உங்களுக்கு எப்போதேனும் மற்றவர்களுக்குச் சிறியதாகத் தெரியும் விடயங்கள் உங்களுக்கு அதி முக்கியமானதாக; சகித்துக் கொள்ள முடியாததாக இருந்திருக்கிறதா?

எனக்கு இருக்கிறது.

1.குளாயில் தண்ணீரை வீணே ஓட விட்டு விட்டு  பக்கத்தில் நிற்பவரோடு கதைத்துக் கொண்டு நிற்பவரைக் கண்டால் (பெரும்பாலும் வேலைத்தலத்தில்)

2. வேலையிடத்தில் கைதுடைக்க வைக்கும் தாள்களை ஒரு தொகையாக அள்ளிக் கொண்டு போபவர்களைப் பார்த்தால் (ஒன்று நன்றாகப் போதும்)

- இவைகள் எல்லாம் என்னுடயதில்லை என்கின்ற போதிலும்!

3.எல்லோரும் இருக்கின்ற இடத்தில் சத்தம் போட்டு கதிரையை இழுத்துக் கொண்டு செல்பவர்களைக் கண்டால், சத்தத்தைத்தைக் கேட்டால்.

4.சத்தம் போட்டு சாப்பிடுபவர்கலை, உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்பவர்களைக் கண்டால், கேட்டால்

5.சுவாரிசமாக ஒரு மேடை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது சத்தம் போட்டு தம்மிடையே உரையாடிக்கொண்டிருப்பவர்களைக் கண்டால்

6.உரத்துப் பேசியபடி இருக்கும் தொலைபேசி உரையாடல்கள்

7.லிப்ட்டின் பட்டினை பல தரம் அமத்துபவர்களைக் கண்டால்

8.கணனிப் பொத்தான்களைப் பலமாக அழுத்துபவர்களைக் கண்டால்; அது போல பியானோ பட்டின்களை மென்மையாகக் கையாளத் தெரியாமல் பலமாக அதனை அடிப்பவர்களைக் கண்டால் ( சில விரல்கள் அத்னோடு விளையாடுவது போல இசையைத் தருவிக்கும்.அதனைப் பார்ப்பதே ஒரு நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதைப் போலிருக்கும்.)

9.அவசரமாக எங்கேனும் போய் கொண்டிருக்கும் போது 80 zone இல் 50 அல்லது 60இல் முழு lane இனையும் parallel ஆகப் பிடித்துக் கொண்டு ஓடுகின்ற track காரர்களைக் காணுகின்ற போது.

10. SMS செய்யுங்கோ நான் முக்கியமான கூட்டத்தில் இருப்பேன் என்று சொன்னால் போன் பண்ணுபவர்கள்! phone அந் நேரம்  silent mode இல் இருக்கும் நீங்கள் தகவலை அதில் பதிவு செய்து விடுங்கள் நான் பிறகு பேசுகிறேன் என்று சொன்னால் அதனைச் செய்யாமல் உங்களுக்கு போன் பண்னினனான். அது massage க்குப் போகுது. அது தான் இப்ப call பண்ணினனான் என்று சொல்பவர்களைக் கண்டால், மேலும் 10 மணிக்குப் பிறகு call பண்ணுங்கோ என்றால் தவறாமல் 9 மணிக்கு call பண்ணுபவர்களைக் கண்டால்.....ஏன் இப்படி இருக்கிறார்கள்?

அல்லது நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

இப்படிக் கொஞ்சம் இருக்கிறது stress ஆக எனக்கென்று சில வழிகள்!

சுஜாதா 1983 இல் எழுதிய “முதல்மனைவி” என்ற சிறுகதை மனதில் நிழலாடிச் செல்கிறது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இவை மிகச் சூடாக இருக்கின்றன. இவற்றைக் கொஞ்சம் ஆறப்போட வேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. எப்போதேனும் அப்படிச் செய்து பார்த்திருக்கிறீர்களா?

நம்மை நாம் சரிபார்த்துக் கொள்கின்ற இடம் அது.

அடுத்தவாரம் மீண்டும் ஒரு தடவை இதனைச் சரிபார்த்து மனம் சரி என்றால் மட்டும் பிரசுரிக்கும் உத்தேசம்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வொல்காவில் இருந்து கங்கைவரை 


பல வருடங்களாகத் தேடிக் கொண்டிருந்த ”வொல்காவில் இருந்து கங்கை வரை” என்ற புத்தகம் இணையத்தில் வாசிக்கக் கிட்டுகிறது. இப்பக்கத்தின் அருகில் இருக்கின்ற விருப்பத்தேர்வுப் பட்டியலில் TVU என்ற இனையப்பக்கத்தில் இருந்து அப்புத்தகத்தை இணைத்திருக்கிறேன்.

நேரமும் விருப்பமும் உள்ளவர்கள் அதனை முகவுரையில் இருந்து ஆறுதலாக வாசிக்க ஆரம்பியுங்கள். அது உங்களை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.



^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

25.11.12
ஒரு சந்தோஷப் பொதி


சிங்கைநகரில் இருந்து கண்னன், ஷைலு, 3மணிநேரவேறுபாடு இருக்கின்ற ஒரு மாநிலத்தில் இருந்து ( Western Australia ) கிருபா அவர் மனைவி, Melbourne மாநிலத்தில் இருந்து மம்மி,டடா, குமரன், மற்றும் சூட்டி, அவவின் கணவர், இரண்டு குழந்தைகள் என ஒரு நாள் காலை சந்தோஷப் பொதி ஒன்று என் வீட்டு வாசல் வழி உள் நுழைந்தது.

அவ்வளவு தூரம் இருந்து என்னைக் காண வந்திருந்தார்கள். பிரமிப்பாய் பரவசமாய் ஒரு வித உணர்வு!

குழந்தைகளோடும் வயதானவர்களோடும் சுமார் 12, 13 மணிநேர கார் பயணம் செய்து! சுமார் 17 வருடங்களின் பின்னால் கண்டோம்! பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?

நம் ஒவ்வொருவருடய வாழ்க்கையும் ஒரு பயணம் என்றால் அதில் சந்திகள், திருப்புமுனைகள், விபத்துக்கள், சுவாரிஷங்கள் என்றெல்லாம் இருக்கும் தானே.

என் வாழ்விலும் அப்படி சில கணங்கள் இருக்கின்றன.ஞாபக ஏடுகளில் மறக்கமுடியாத பக்கங்கள் அவை.

1.A/L பரீட்சைபெறுபேறு வந்த நாள்

2.பல்கலைக்கழக முதல் நாள்

3.முதல்வருட பெறுபேறு வந்த நாள்

4.அதே பல்கலைக்கழகத்தில் வேலைநியமனக் கடிதம் வந்த நாள்

5.புலம்பெயர்ந்த நாள்

6.நிரந்தரகுடியுரிமை அனுப்பப்பட்டிருக்கிறது, நீ அண்மையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்குச் கடவுச் சீட்டோடு சென்று உன் நியமனத்தைப் பெற்றுக் கொள் என ஒரு எதிர்பாரா நாளொன்றில் மஞ்சுளா.கருணரட்ன என்ற சிங்களப் பெண்மணி தொலைபேசியில் சொன்ன அந்த நாள்

7.சிட்னியில் நான் செய்த முதல்வேலை

8.கார் லைசன்ஸ் கைக்கு கிட்டிய போது.

9.என் முதல் கார்

10. கனணியின் அறிமுகமும் தமிழ் எழுத்துரு அறிமுகமும் கிடைத்த தருணம்
............................
..........................

அதனோடு கூடவே இந்த 25ம் திகதியும் !

சந்தோஷத்தை என்னவென்று சொல்ல!!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

01.12.12
நேர நெருக்கடியுடனான ஒரு சனிக்கிழமை:


இன்றய நாள் என் அக்கா மகள் திவ்யாவின் பிறந்த தினம்.மூன்று வயதினைப் பூர்த்தியாக்கும் வர்ஷாவுக்கும் இதே நாள் பிறந்த தினம்.வர்ஷா பிறந்ததில் இருந்து என் கண்பார்க்க வளர்ந்தவள். இரண்டுமே அவசியம் போக வேண்டிய இடங்கள்.காலையில் இருவருக்கும் பிறந்த நாள் பரிசுகள் வாங்க வேண்டும், கார் கழுவக் கொடுக்க வேண்டும். என் தந்தையாருக்கு வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்திருந்த ஒரு பொருள் வார இறுதி நாளில் மாத்திரம் என்று மலிவு விலைக்கு போட்டிருந்தார்கள். அது வேறொரு இடம். அதுவும் வாங்க வேண்டும். இதற்கிடையில் என் தனிப்பட்டமுடி திருத்த வேலை ஒன்றுக்காக ஏற்கனவே நேரத்தைப் பதிந்து வைத்திருந்தேன். மற்றும் மாலை 2.00 - 4.30 மணி வரை தமிழ் பாடசாலை. அன்று முக்கியமான HSC மாணவர்களுக்கான ஆசிரியர் பெற்றோர்க்கான கூட்டம் ஒன்று பாடசாலை முடிந்த பின் இருப்பதாக வேறு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அதற்கு வேறு நின்றாக வேண்டும்.

மாலை ஆறுமணிக்கு என் ஆத்மார்த்தமான உறவுக் கூட்டம் - இளைஞர்களின் கூட்டுழைப்பில் என் மதிப்புக்குரிய பல்துறை வித்தகர் கோகிலா மகேந்திரன் அவர்களின் நெறியாழ்கையில் ஒரு நாடகம் அரங்கேறுகிறது. அதற்கும் அவசியம் போயாக வேண்டும். வருவீங்களோ வருவீங்களோ என்று கேட்ட அந்த இளைஞர் குரல்களை அத்தனை இலகுவில் புறக்கணித்து விட முடியாது. மேலும் மறு நாள் காலை 7.00 மணிக்கு வேலை.குறைந்த பட்சம் அதிகாலை  5.30 க்கேனும் எழுந்தாக வேண்டும்.

ஞாயிறுமாலை வேலை முடித்து வந்ததும் 5.00 மணிக்கு இலக்கிய சந்திப்பு. போன மாத சந்திப்பின் அறிக்கை இன்னும் தயாரில்லை. அதற்கான ஆயத்தங்கள் எதுவுமில்லை.

வீட்டுவேலைகள், வீடு துப்பரவாக்குதல்,சமையல், உடுப்புகளை தோய்த்துலர்த்தல் இவை பற்றி இது வரை நான் பேசவே இல்லை என்பது ஒரு புறமாக இருக்கட்டும்.

திட்டமிடல், எதற்கு முன்னுரிமை கொடுப்பது, எவற்றைத் தவிர்ப்பது?

தட்டு நிறைய உணவுகள். வயிறோ ரொம்பச் சிறிது!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒரு சின்னச் சந்தோஷம்


அவசர அவசரமாகக் கார் கழுவுமிடத்தில் என் காரைக் கொண்டு நிறுத்தினேன். புன்னகையோடு வந்தவன் அதே அவன் தான். அவனை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மஞ்சள் நிற இடுங்கிய கண்களைக் கொண்ட கொறிய இளைஞன். காரைக் காதலிப்பவன். வேலையில் நிபுணத்துவத்தைக் காட்டுபவன். முன்னர் ஒரு தடவை அவனைப்பற்றி  ஒரு பதிவு கூடப் போட்டிருக்கிறேன்.

காரை ஒரு நோட்டம் விட்ட படி முன்னர் ஒரு தடவை இந்தக் காரை நான் கழுவி இருக்கிறேன்  என்றான்.

உண்மைதான்.

எத்தனை நூற்றுக் கணக்கான கார்களைக் கழுவி இருப்பான் அவன். அதற்குள் என் காரை நினைவு வைத்திருக்கிறானே! என்பது என் இன்றய நாளுக்கான மகிழ்ச்சி!

நேர நெருக்கடிக்குள்ளும் அவன் சொன்னது தென்றலாய் மனதில் நிழலாடிய வண்ணம்.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நெருக்கடிக்களும் அதனிடையே சின்னச்சின்னச் சந்தோஷங்களுமாக என் நாட்குறிப்பின் பக்கங்கள் நிரம்புகின்றன!

உங்கள் நாட்குறிப்பின் பக்கங்கள் என்ன மாதிரி?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^