Sunday, July 12, 2026

collage works

 வணக்கம் நண்பர்களே!

எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? நானும் சில பல சுகங்கள் மற்றும் சுகவீனங்கள், வீட்டு வேலைகள், திருத்தவேலைகள் என்பவற்றோடும் அன்றாட அலுவல்களோடும் நலமே இருக்கிறேன்.

நீங்களும் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

முன்னரைப் போல இங்கு இப்போது அதிகம் வருவதில்லை. இன்று பல மாதங்களுக்குப் பிறகு இங்கு வரும் போது  பிறந்த வீட்டுக்கு வருவதைப் போல ஒரு மகிழ்ச்சி.

ஒரு காலத்தில் இந்தப் பக்கம் தான் எனக்கு தாய் மடியைப் போல இருந்தது. முகம் தெரியாத எத்தனை உறவுகளைச் சந்தித்தோம்! எழுத்தின் வழி ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டோம். இப்போது அவர்கள் எல்லாம் என்னவாகி இருப்பார்கள் ?

வித விதமான சமூக வலைத்தளங்களின் அறிமுகங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பக்கமாக நகர்த்தி விட்டிருக்கக் கூடும்.

என்னைப் போலவே!

இப்போது நான் அதிகம் You tube வீடியோக்கள் அதிகம் பார்க்கிறேன். அதில் சொல்லப்படும் சில பரீட்சார்த்த முயற்சிகளை நானும் பரிசோதித்துப் பார்க்கிறேன்.அதிலேயே அதிகளவு நேரத்தைச் செலவிடுகிறேன்.

அதில் அண்மைக்காலமாக என்னை ஆட்கொண்ட விடயம் Collage Art என்று சொல்லப் படுகிற விடயம். எக்கச்சக்கமான செய்முறைகளோடு கூடிய வீடியோக்கள் யூரியூப்பில் கானக்கிடைக்கின்றன.

அது ஒருவகை கலை வடிவம் என்று சொல்லப்படுகிறது. செலவு அதிகம் தேவைப்படாது. பழைய சஞ்சிகைகள், கலண்டர் படங்கள், விற்பனை நிலையங்களில் கிடைக்கும் இலவச விளம்பரங்கள்.... போன்ற இவைகள் தான் மூலதனம்.

இவற்றைக் கொண்டு உங்கள் கற்பனைக்கு ஏற்ர விதமாக நீங்கள் ஒரு உருவத்தைக் கற்பனை செய்து புதிய வடிவத்தை உருவாக்குவது தான் இதன் அடிப்படை.

மிக ஆரம்பத்தில்செய்த சில உருவங்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ல விரும்புகிறேன். இவௌ ஒரு பாலர் பள்ளிப் பிள்ளை ஒன்றின் சித்திரங்களைப் போன்றது.

பொதுவாக மிகக் குறைந்தது மூன்று வேறுபட்ட வடிவங்களை ஒன்றாக்கி புதிய கற்பனை வடிவங்களை உருவாக்க வேண்டும். நான் அதிக பட்சம் இரண்டு வடிவங்களைத் தான் ஒன்றாக்கி இருக்கிறேன்.

நீங்களும் ஒரு தடவை இந்த வேடிக்கையான வேலையைச் செய்து தான் பாருங்களேன்.

இது ஒரு புதிய அனுபவமாக எனக்கு இருந்தது.

மீண்டும் சந்திப்போம்.




















































Monday, April 27, 2026

நியுசிலாந்து - 1 - புற்கள், மரங்கள், மாடுகள், மலைகள் மற்றும் சில மனிதர்கள்....

நண்பர்களே!
பல நாட்களுக்குப் பிறகு இங்கு வருகிறேன். எல்லோரும் நலம் தானே? என்னுடய இரு தசாப்தங்களாகப் பாவனையில் இருந்த கணனி தன் வாழ்வை அண்மையில் நிறுத்திக் கொண்டு விட்டதால் இத்தனை தாமதம். கூடவே நியூசிலாந்துக்கும் போய் வந்ததால் மேலும் சில தாமதங்களும் பின்னடைவுகளும் நேர்ந்து விட்டது. கூடவே படங்களை பதிவேற்றுவதில் மேலும் சில சிரமங்கள்...

ஒரு படியாக இன்று முழுநாளும் உட்கார்ந்து என் நண்பர் ஒருவரின் உதவியோடு தமிழ் எழுத்துருவை தரவிறக்கம் செய்து கொண்டு விட்டதால் உடனடியாக ஒரு பரீட்சார்த்தப் பதிவாக இந்தப் பதிவைப் பதிவேற்றுகிறேன்.

விரிவான பதிவோடு விரைவில் வருகிறேன். அதுவரை நியூசிலாந்தில் எடுத்த இந்தப் படங்களையும் காணொளியையும் உங்களுக்குப் பரிசாகத் தந்து செல்கிறேன்.

உங்கள் வரவுக்கு நன்றி.











Sunday, February 1, 2026

Memory lane -1 - பயணித்த பாதையில் பூத்த ஒரு பூ (முன்னுரை)

 வருகை தந்திருக்கும் எல்லோருக்கும் முதலில் எனது உளமார்ந்த புதுவருட நல்வாழ்த்துக்கள்.

பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டு எல்லோருக்கும் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் உடல் சுகங்களையும் எடுத்து வரும் ஆண்டாக அமையட்டும்.

எனக்கும் அதுவே வேண்டுதலாக இருக்கிறது.

கடந்த வருட இறுதி எனக்கு ஒரு முழுமையான வாழ்வின் இறுதிக் கொண்டாட்டமாக; என் தங்கையின் ஊரில்; அவளின் அன்பில் திக்கு முக்காடி களித்த கோலாகலமான கொண்டாட்டமாக அமைந்தது.

சுவிற்சிலாந்து - ஒரு சுவர்க்க பூமி.- அது குறித்த பயண அனுபவங்கள் ‘memory lane' என்ற தலைப்பில் தொடர் பதிவாக எழுத இருக்கிறேன். அங்கு மாத்திரமன்றி லண்டன், ஜேர்மனிக்குப் போன அனுபவங்களும் புதுமையானவையாக இருந்தன. அதிலிருந்த ஒரு சிறு துளி தான் இன்றைக்கு உங்களோடு பகிர இருப்பது.

ஏனென்றால் ஊருக்கு வந்து இருவாரங்கள் ஆகி எங்கிருந்து எழுத்தை ஆரம்பிக்கலாம் என்று எண்ணும் தோறும் இந்த ஒரு காட்சி மட்டும் என் நினைவில் இருந்து எழுது எழுது என்று சொல்லிக் கொண்டு அகலாது நிற்கிறது. 

அத்தோடு இன்னொரு விடயமும் குறிப்பிட வேண்டி இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு விடயம் பற்றி நினைத்தீர்கள் என்றால் தானாகவே அது குறித்த விடயங்கள் நம்மை வந்தடைகின்றன.

இது விடயத்திலும் எனக்கு அவ்வாறே ஒரு அற்புதமான தகவலும் கிடைத்தது.  ( அடுத்த பதிவில் அது வரும்)

அது தவிர, நான் இப்போது சட்ட ரீதியாக ஒரு ‘மூத்தகுடிமகள்’ என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஆகையினால் பின்வரும் எழுத்தோட்டங்களைப் பார்த்து நீவீர் தயவுகூர்ந்து முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டுவிடவேண்டாம் என்றும் அன்புரிமையோடு கேட்டுக் கொள்ளுகிறேன்.

இந்த முதுமையை அங்கீகரித்தல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கிறது. பாட்டியாகும் பாக்கியம்; அரசாங்கத்தின் மூத்த குடிமகளுக்கான அட்டை, பயணங்களில் கிடைக்க இருக்கும் சலுகைகள் என்று அது ஒரு விதமான புதுமையான அனுபவமாக இருக்கிறது.

வேறொரு உலகத்திற்குள் நுழைந்து விட்டதைப் போல...

சரி, அது இருக்கட்டும்,  வந்த விடயத்திற்கு வருகிறேன். 

நான் இலண்டன் மாநகருக்கும் சென்றிருந்தேன் என்று சொன்னேன் அல்லவா? அங்கு Victoria & Albert museum  செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

அது ஓர் அற்புதமான வாய்ப்பு. 

சொற்களுக்குள்; கமறாவுக்குள்; வீடியோவுக்குள் அடக்க முடியாத - கண்களுக்குள் மட்டும் தேக்கி வைத்திருக்கக் கூடிய; பார்த்து மட்டுமே அனுபவிக்கத் தக்க அரிய அனுபவம் அது!

என்னை அழைத்துச் சென்ற என் தம்பி ஜெயந்தனின் அருமை மகள் பிரதீஷனா பற்றியும் இந்த இடத்தில் நான் அவசியம் சொல்லியாக வேண்டும். 

அந்த இளம் பெண் என்னை ஒரு ராணியை அழைத்துச் செல்வதைப் போல; என்னுடய ஆர்வத்துக்கும், தேடலுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், சிலிர்ப்புகளுக்கும்,  நான் எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் என்னோடு ஈடுகட்டி; என் விருப்பத்தை மதித்து, எந்த ஒரு களைப்பையோ, நேரம் போவதையோ கருத்தில் கொள்ளாது, பார்ப்பதை முழுமையாகப் பார்க்க வேண்டும்; எந்த ஒரு இடையூறுமின்றிப் பார்க்க வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, எனக்கொரு அற்புதமான அனுபவத்தைச் சாத்தியப் படுத்தினாள் அந்த இளம் சிட்டு. அந்த இளம் பெண்ணை என்னால் நிஜமாகவே என்றைக்கும் மறக்க இயலாது. என்னை அவள் ஒரு ராணியைப் போல உணர வைத்தாள்;.பல விதங்களிலும்.

ஜெயந்தன் காயத்ரி தம்பதிகளில் மூத்த மகள் என்று பெருமையோடு நான் சொல்லக் கூடிய அந்தப் பருவ மகளுக்கு எனது தாய்மை நிறைந்த என் அன்பும் ஆசீர்வாதங்களும்!

 ’பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பிய ஓருயிர்’

சரி அது நிற்க! ( சிந்தனையை ஒழுங்கு படுத்துவது சிரமமாக இருக்கிறது. ஆகையினால் எழுத்தும் அங்கும் இங்குமாக ஓடித்திரிகிறது. அது குறித்து என்னைப் பொறுத்தருள்க!)

அந்த நூதன காட்சிச் சாலையில் பார்த்த ஒரு சிற்பம் இது.


இந்தச் சிற்பத்தில் இந்தத் தாடி வைத்த ஆணின் வெட்கம் அல்லது நாணம் எத்துணை அழகாக இருக்கிறது பாருங்கள்!

காதலிக்கும் ஆண்களே!

தாடி வைத்துக் கொள்ளுங்கள்!

( காட்சி தொடரும்....)