எங்கோ எப்போதோ ஒரு மணிவாசகம் ஒன்று பார்த்தேன். அது,
‘உயர்ந்தவர்கள் கருத்துக்களை விவாதிக்கிறார்கள். சாதாரணமானவர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். கீழ்தரமானவர்கள் அடுத்தவரைப் பற்றி விமர்சிக்கிறார்கள்.’ - இதனை எங்கள் நடைமுறை வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்தால் அதில் மறைந்திருக்கின்ற தத்துவத் தார்ப்பரியம் தானாகப் புரிய வரும். அதனால் இந்தக் கருத்தோடு ஒரு தத்துவ நேசம் எனக்கு உண்டு.
அது போல ஒரு பெண்னின் அழகை வர்ணிக்கவும் சங்க காலத்தில் இருந்து நவீன காலங்கள் வரை வியக்கத்தக்க வாசகங்கள் இருக்கின்றன. சிலர் அங்கங்களை வசீகரமாக வர்ணிப்பார்கள். அது பார்த்தவுடன் வசீகரிக்கின்ற வகை. மேலோட்டமானது என்று கூடச் சொல்லலாம். வேறுசிலர் குண இயல்பை விலாவாரியாகச் சொல்லி பிறகு இத் தன்மையானவள் இவ் வகையினள் என்று சொல்வார்கள். இது இன்னொரு வகை. கொஞ்சம் நடுத்தரமான வர்ணனை/ பார்வை என்று இதனைக் கொள்ளலாம். கொஞ்சம் புத்திசாலித்தனமான; மாயை கலைந்த பார்வை என்று வேண்டுமானால் அதனை வைத்துக் கொள்ளலாம்.
அதில் இந்த வர்ணனை வகுப்பில் இன்னொரு வகை இருக்கின்றது என்பதை இன்று தான் கண்டேன்.
அண்மையில் கி.ராஜநாராயணன் எழுதிய சிறுகதை ஒன்றை வாசித்தேன்.(அவர்கள் அப்படியே இருக்கட்டும்) அதில் அவர் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்த வேண்டும். அதை அவர் எவ்வளவு நுட்பமாக எம்முன் நிறுத்துகிறார் என்பதை அப்படியே தருகிறேன்.
............................................
.......செம்மண் கரையிட்ட அகலமான கோலத்தில் மிதித்து விடாமல் அந்தப் பூசணிப்பூவைப் பார்த்த படியே வீட்டுக்குள் நுழைகிறேன்.கோயிலைப்போல வீடுகளுக்கும் ஒரு வாசம் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன்.
நுழைந்தவுடன் பளிச்சென்று ஒரு பாட்டனார் மீசையும் தலையும் வெளேர் என்று சிரிப்போடு எங்களைப் பார்த்துத் தலையசைத்தார். வாங்கோ என்பதைப்போல. சோபாக்கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.
வீட்டின் உள்ளே இருந்து இனிமையான ஒரு பெண் குரல் பாடும் ஓசை கேட்டது. அந்தப்பாட்டனாரைக் கடந்து உள்ளே போனதும் பனை நார் கட்டிலில் அந்தப் பாட்டனார் போலவே ஒரு பாட்டி திண்டில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.பொக்கைவாய் சிரிப்போடு எங்களைப் பார்த்து உள்ளே போகும் படி சொன்னாள்.
போனோம்.
குடிக்க எங்களுக்கு மோர் தந்தார்கள். இன்று வரைக்கும் அந்த மோரை மறக்க முடியவில்லை. அப்படி ஒரு ருசியான மோர்..................ருசி உறவை நீடிக்கும் போல. அந்த வீட்டோடு ஏற்பட்ட நட்பு முப்பது ஆண்டுகளாகியும் நீடிக்கிறது.அந்த வீட்டு மனுசர்களுக்கு மன ஒட்டுதல் அதிகம் என்பேன்.......................
அந்த வீட்டின் முன்னால் இறங்கியதும் வீட்டுக்காரர்கள் என்னைப்பார்ப்பதற்கு முன்னால் என்னை வரவேற்பது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் தலை நீட்டி நிற்கும் தங்க அரளிச் செடியின் பூக்கள் தான். அந்த வீட்டுக்காரர்களைப் போலவே அதுவும் தலையை அசைத்து, ‘வாரும் வே’ என்று சொல்லி விடும்.
வீடுகளுக்கு அழகு என்று என்னவெல்லாமோ செடிகள் இருக்கின்றன. ஒரு துளசிச் செடி போதுமென்று சிக்கனமாக இருக்கும் வீடுகளும் உண்டு. இந்த வீடு அப்பிடி இல்லை. செடி கொடிகள் பேரில் அப்படி ஒரு பிரியம்.அடங்காத பிரியம். பூக்கள் வாங்க வெளியில் போக வேண்டாம். பூஜைக்கானாலும், தலையில் வைத்துக் கொள்ளவும், வரும் விருந்தாடிகளுக்குத் தலையில் வைத்துவிடவும் வேண்டிய அளவுக்கு வீட்டின் தோட்டமே கொடுத்து விடும்.
மல்லித்தழையும் கறிவேப்பிலைக் கொழுந்தும் அடுப்படியில் இருந்தே எட்டிப் பறித்துக் கொள்ளலாம். புதினாக் கீரைக்கு மட்டும் அந்த வீட்டு மண்ணில் இடம் இல்லை. காரணம் அதை அவர்கள் அசைவத்தோடு சேர்ந்த்து விட்டார்கள். புதினா அனுதாபிகளுக்கு இது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். என்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. சைவத்தில் தீவிர சைவம் என்றெல்லாம் இருக்கும் போல இருக்கு!
.....................
இவர்கள் வீட்டு குளிப்பறையில் நான் பார்த்த அதிசயம் ஒன்று: வென்னீர் அடுப்பு வெளியில் இருக்கும்.வென்னீர் பானையின் வாய் மட்டும் குளியல் அறைக்குள் இருக்கும்.குளிப்பாளி வென்னீர் அடுப்பின் புகையைப் பார்க்க முடியாது.கொடியடுப்பு முறையில் செய்யப்பட்டிருந்தது. இப்படி முயற்சி செய்து கட்டியிருக்கும் இந்த வீட்டார் யாரும் வென்னீரில் குளிப்பதில்லை. என் போன்ற சோதாக்கள் தான் கோடையிலும் குளிப்பதற்கு வென்னீரோ வென்னீர் என அவயமிடுவது.
வென்னீர் குளியல் காரர்களை இவர்கள் ரொம்பத்தான் கேலி பண்னுகிறது உண்டு. ஆனால் பச்சைத்தண்ணீரில் குளிக்கும் இவர்களுக்கு, காபி மட்டும் சூடு எச்சாக இருக்க வேண்டும். இலையில் விழும் சாதமும் அப்படித்தான்.
இந்த வீட்டில் இருந்த நாய்களெல்லாம் கூட எனக்குச் சினேகம் தான். தனது எசமானர்களுக்கு நண்பன் என்பதால், என்னையும் நண்பனாக ஏற்றுக் கொண்டு விட்டன. கண்டவுடன் வாலாட்டிப் புன்னகையைத் தெரிவிக்கும். பூனைகளிடம் இந்த ஜம்பம் பலிக்காது. பூனைகளுக்கு மட்டும் அயலார் எப்பவும் அயலார் தான்.
இந்த வீட்டில் வாழ்ந்த அடுப்படித் தவசிப்பிள்ளைகளில் உதவிக்கு இருந்த பையன்களில் - இப்போதும் சட்டென்று ஞாபகத்துக்கு வருவது ஒர் ஊமையன்...............வாய் பேச முடியாது தான். அவ்னுடய கண்கள் பேசும்.வாய் தவிர அவன் அங்கங்கள் எல்லாம் பேசும்........முகம் பார்த்துப் பரிமாறுவதில் சமர்த்தன். எந்தத் தொடுகறி நமக்குப் பிடித்தம் என்பதை அதை நாம் பார்க்கும் விதத்தில் இருந்தே கண்டு பிடித்து அதன் படி பரிமாறுவான் .
அந்த வீட்டு வில்வண்டிக்கு விலை உயர்ந்த ஓங்கோல் காளைகள் வாங்கி வந்திருந்தார்கள்.அதைப் பார்க்க உள்ளூர், பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ரசனையுடைய மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமங்களில் அது வழக்கம் தான்.
வந்தவர்கள் காளையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சமையலறைக் குட்டனோ வந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் பார்க்கும் விதங்களை அவர்களுக்குத் தெரியாமல் நமக்குத் தன்னுடய முகத்தின் மூலமாக அங்கு இருந்த படியே உருப்பரப்பிக் கொண்டிருந்தான். மகிழ் கலந்த வியப்பு, ஆனந்தம், திருப்தி,பொறாமை கலந்த முகம் இப்படி.. இப்படி...அன்றய பார்வை முடிந்த அந்தி நேரத்தில், மம்மல் பொழுதில் தொழுவத்தின் தலைவாசல் படியில் சூடம் பொருத்தி திட்டிக் கழிப்பான் சமையலறைக் குட்டன்.
அந்த வீட்டுக்கு நான்கு வாசல்கள். தலைவாசல், தொழுவாசல், தோட்ட வாசல், புறவாசல். எந்தவித சோலியும் இல்லாமல் அந்த வீட்டைப் பார்க்க என்றே வருவார்கள் மக்கள்.
ஒரு வீட்டுக்கு ஊரிலும் சுற்றிலும் பேரும் புகழும் சேர்ந்து தொனிக்கிறது என்றால் பல காரனங்கள் இருக்கும். அதிக செல்வம் உள்ளதாக, அதனால் செல்வாக்கும் கூடியதாக, அந்த வீட்டில் பெண்களும் ஆண்களும் பார்ப்பதற்கு அம்சமாக தெரியும் படியாக, நல்ல யோக்கியர்களாக இருந்தாரகள்.
இவை அனைத்தோடும் இந்த வட்டகையிலேயே இப்படி ஒரு கூடிய அழகும் குணமும் கொண்ட ஒரு பெண்ணும் அந்த வீட்டினுள் இருந்தாள். அதனாலேயே அந்த வீடும் அழகு பெற்றது. தூரத்தில் இருந்து அந்த வீட்டைப் பார்த்தவர்கள் அவளுடய அழகோடேயே சேர்த்துப் பார்த்தார்கள்.
.......................................
இந்த வீட்டுப் பண்பாட்டை ;பாரம்பரியத்தை; குண இயல்பை; வாழ்க்கைக் கோலத்தை உள்வாங்கி வளர்ந்த ஒரு பெண்ணழகை மனக் கண்ணால் பார்க்க முடிகிறதா?
என்ன ஒரு அபூர்வ அழகு!!
ராஜநாராயணா.......
( நன்றி: ஆனந்த விகடன்,9.1.13. பக்: 94 - 99. அவர்கள் அப்படியே இருக்கட்டும்: சிறுகதை)