உயர்திணை: யார்? ஏன்? – 2013 –
சுமார் ஒரு வருட காலமாக அமைதியான இலக்கிய சந்திப்புகளை மாதாந்தம் நடத்தி வருகிறது உயர்திணை அமைப்பு.
இப் புது வருடத்தில் அது தன்னை உருப்படுத்தும் ஒரு முயற்சியாக தன்னை இனம் காட்டிக் கொள்ள முனைகிறது.
’உயர்திணை’ சிட்னியைச் சேர்ந்த மரபு சார்ந்த பதவிகள் எதையும் கொண்டிராத குழுவாகச் சேர்ந்து இயங்கும் ஓர் இலக்கியசபையாகும்.
அது சிட்னியில் கடந்த மாசி மாதம் 2012 இல் இருந்து மாதம் ஒரு தடவை அமைதியாக இலக்கியச் சந்திப்புகளை நிகழ்த்தி வருகிறது.
கலை இலக்கியத்தில் மனிதத்தையும் உண்மையையும் நேர்மையையும் மானுட சுபீட்சத்தையும் அழகுகளையும் அவலட்சணங்களையும் அதன் சவால்களையும் மறைபொருள்களையும் தேடுதலும் சொல்லுதலும் கடந்த வருடத்தில் அதன் இருப்பாகவும் இயல்பாகவும் இருந்து வந்திருக்கிறது.
அது தன் இலக்காகவும் நோக்காகவும் கட்டுப்பாடற்ற பேச்சு எழுத்து கருத்து சுதந்திரத்தையும் அரசியல் சார்பற்ற எல்லைகள் ஏதுமற்ற உலக மனிதாபிமானத்தையும் சகிப்புத்தன்மையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
மேலும்,
கலா இலக்கிய வெளிப்பாடுகளில் வாழ்வியலின் தரிசனங்கள் வெளிப்படும் ஆற்றை ஆய்தலும் ரசித்தலும் மேலும், அவற்றில் ரசனைகளை ரசங்களை காணுதலுக்கும் சுவைத்தலுக்குமான மகிழ்வெளியாக மாதம் ஒருமுறை கடசி ஞாயிறில் அது தன் இலக்கிய சந்திப்புகளை நிகழ்த்தும்.
அது தனிப்பட எழுதியதை ரசித்ததை பார்த்ததை வியந்ததைப் பகிரும் ஒரு உயிரோட்டமுள்ள களமாகவும் மொழி இட கலாசார எல்லைகளற்ற உரையாடலுக்கான தனி வெளியாகவும் கலைஞர்கள் இலக்கியவாதிகள் ரசிகர்கள் சந்திக்கும் ஒரு நிகழ்வாகவும் இருக்கும்.
புதிய பாதைகள்: புதிய ரசனைகள்: புதிய கலை இலக்கிய உத்திகள் இவற்றை இனம் காணுதலும் பகிர்தலும் தமிழுக்கு அவற்றை அறிமுகம் செய்தலும்
கலை இலக்கியத்துறையில் உயர்தர ரசனையைப் பேணுதலும் அவற்றின் சவால்களை ஆராய்தலும் அவ்வாறான படைப்புகளுக்கு ஆதரவு வழங்குதலும்..
ஒற்றுமையினதும் புரிந்துணர்வினதும் அடிப்படையில் விமர்சனத்தினூடாக தரமான கலை இலக்கியப் படைப்புகளையும் கலைஞர்களையும் இனங்காணுதலும் சமூகத்தில் அதன் இருப்பை உறுதிப் படுத்தலும்.
புதிய தலைமுறைக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் இனம் கண்டு தமிழுக்குப் புதிய வாசல்களைத் திறந்து வைத்தல்.
கலை இலக்கியம் சிகிச்சையாகும் ஆற்றை ஆய்வு செய்தலும் பயன் படுத்தலும்.
அவுஸ்திரேலியத் தமிழரின் வாழ்வியலை – நம் கலை இலக்கியத்தினூடாகத் தமிழுக்கு வந்த புதிய சிந்தனைகளை ஆராய்ச்சி நோக்கில் அணுகுதலும் இலக்கிய வடிவில் ஆவனப்படுத்தலும்
கலைஞர்கள் இலக்கியவாதிகளுடன் சந்திப்புகளை ஏற்படுத்துதலும் கலை,இலக்கிய அறிவுப் பகிர்வும்
போன்ற நோக்கங்களைக் கொண்டு இயங்க ஆரம்பித்துள்ளது.
ஆர்வமுள்ள அனைவரையும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள பரிவன்போடு அழைக்கிறது உயர்திணை அமைப்பு.
உயர்திணை அமைப்பினரின் இணையப் பக்கம்:
www.http://uyarthinai.wordpress.com