Monday, March 11, 2013

கலாசாரக் கலப்புகள்

இன்றய வேலை நேர இடைவேளையில் வாசிக்கக் கொண்டுபோன ஆனந்தவிகடனில் ராஜு முருகனின் ஆக்கத்தில் வந்திருந்தது ஒரு வாசகம். 

மனைவிக்கும் கணவனுக்குமான புரிதலை ஒரு வீணை திருத்தும் ஒருவரின் வாயிலிருந்து வருவதாக அந்த வாசகம் அமைந்திருந்தது. (ஆ.வி.6.3.13.பக்:90) அது இது தான். ”.....இது ஒரு அண்டஸ்டாண்டிங். ...பெருமாளுக்கும் நமக்கும் இருக்கிற மாதிரி......” 

உனக்கு தெரியும் ’நான் ‘ஆர் என்று. அந்தரங்க ஒழிவு மறைவு அகத்திலும் புறத்திலும் இல்லாத  ஒரு இயல்பாய் இருப்பதற்கான ‘இருக்கும்’  வசதி! இந்த ’இடத்தைப்’ பெற்றுக் கொள்ளும் வரைதான் புது மணத்தம்பதிகளிடையே முரன்பாடுகள் அதிகரித்துக் காணப்படும். அந்த முரன்பாடுகள் கூட ஒருவித  இருப்புக்கான நகர்ச்சி தான். அதன் பின்,அது ஒரு தனித்துவமான அந்தரங்கப் புரிதல்! நிறையையும் குறைகளையும் பரஸ்பரம் கண்ட பின்னர் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு வாழ்க்கைப் பாதைக்கு எனக்கு என்றென்றைக்கும் நீ தான் என்று வாழும் ஒரு பந்தம்.( இதனை எழுதுகின்ற போது ஓர் இணையத்தளத்தில் “எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள்” என்று ’சின்ன மடுமாதா... குருசுமரத்தடியில்....’ என்ற தலைப்பில் ப.வீ. ஸ்ரீரங்கன் எழுதி இருந்த மென்மையில் ஊறிய அவரின் ஆத்மானுபவ வரி நினைவில் நிழலாடிப் போகிறது.)


இப்படியான புரிதல்கள் ஏனோ சில தம்பதிகளிடத்தே நிகழாமலும்; சில குடும்பங்களுக்குக் கிட்டாமலும் போய் விடுகின்றன. வெளிநாடுகளில் அது இன்னும் இயல்பாகி விடுகிறது. 

பெண்களையும் ஆண்களையும் தமிழ் சமூகம் திருமணத்துக்கு தயாராக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு என்னிடத்தில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. கனவுகளோடு இருக்கிற: கனவுகளோடும் கற்பனைகளோடும் மட்டும் இருக்கிற  இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சங்கடங்களும் ஆளுமை முரண்பாடுகளும் கூட திருமணத்தில் இருக்கிறது என்ற உண்மை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். 

ஒரு பிரச்சினையை சமாளிக்கும் வல்லமையை ; விட்டுக் கொடுத்தலின் வெற்றியைப் பற்றி எல்லாம் கூடச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தனியே பட்டமும் பதவியும் பணமும் சந்தோஷமும் குதூகலமும் தான் வாழ்வென ஒரு மேம்போக்கான எண்ணத்தோடு வாழ வருபவர்களால் குறிப்பாக வெளிநாட்டு வாழ்வில் அவை தெரியப்படுத்தப் படுவதே இல்லை.


நேற்றய தினம் என் வேலைத் தோழி ஒருத்தியின் வீடு குடிபுகுதல் விழா. தெரிந்தெடுக்கப்பட்ட நண்பர்களுக்கு மாத்திரமான அழைப்பிதழ் என்று வருந்தி வருந்தி அழைத்திருந்தாள். அவள் வியற்நாமியப் பெண்.

அப்படி அவள் என்னை அழைத்ததற்கு தனிப்பட்ட ஒரு காரணமும் இருந்தது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயான விவாகரத்துப் பெற்றுக் கொண்டு தனித்து வாழ்ந்து கொண்டிருந்த அவளோடு இப்போது இணைந்து வாழ்வது எம்மோடு வேலை செய்யும் ஒரு தமிழ் இளைஞன். அவ் இளைஞனும் திருமணமாகிய சொற்ப வருடங்களுள் விவாக ரத்துப் பெற்றுக் கொண்டவன் தான்.


அவர்கள் இப்போது வீடு வாங்கி குடிபுந்திருக்கிறார்கள். அதற்குப் பெயர் "Living together." இங்கு பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். கணவன் மனைவி உறவுக்கு அப்பாற்பட்ட சேர்ந்து வாழும் உறவு. அது அவுதிரேலிய சட்ட திட்டங்களால் அங்கீகரிக்கப் பட்டது. திருமணம் செய்து கொள்ளாமலே அவர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும்; சொத்துக்களைச் சேர்ந்து வாங்கவும் சட்டம் அவர்களை அனுமதிக்கிறது. விரும்பிய நேரம் பிரிந்தும் செல்லலாம். அதற்கு அவர்களைச் சட்டம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. நீதிமன்றம் ஏறி இறங்கத் தேவை இல்லை. திருமணம் ஆகி விட்டதே என்பதற்காக சேர்ந்திருக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.அன்பும் பிணைப்புமே அவர்களை இணைத்து வைத்திருக்கிறதே தவிர, சட்டமும் சமூகமும் அல்ல.  நட்பும் புரிந்துணர்வும் சார்ந்த ஒன்றாக இருக்கும் இந்த உறவுஅது. 

விரும்பாத இடத்து வலிகள் எதுவும் இன்றியே பிரிந்து போகவும் அனுமதிக்கிறது அது. கணவன் மனைவி என்ற சட்ட ரீதியான உறவு மாதிரி இது தேவையற்ற மனக்கிலேசங்களைத் தருவதில்லை: பிடித்திருக்கிறதா இணைந்திருக்கிறோம்: பிடிக்கவில்லையா நண்பர்களாகவே பிரிந்து விடுகிறோம்: அதற்கு தயாரான மனநிலையிலேயே எப்போதும் இருப்பதால் ஒருவர் மீது ஒருவர் எப்போதும் அன்போடும் உண்மையோடும் நட்போடும் உண்மையான அக்கறையோடும் வாழ்கிறோம் என்கிறார்கள்.

நாம் வேலை செய்கிற பகுதி வேறாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் சந்தர்ப்பம் நிகழும் போதெல்லாம் சில தமிழ் சொற்களைக் இப் பெண் என்னிடம் இருந்து கேட்டறிந்து கொள்வாள். தமிழ் பெண்கள் நீளக் கூந்தல் வைத்திருக்கிறார்கள் என்று தானும் நீளக் கூந்தல் வளர்க்கத் தொடங்கி விட்டாள். விதவிதமான சமையல் செய்து அசத்துவாள். வீட்டு உள்ளக அலங்காரங்களில் மிகுந்த சிரத்தை எடுத்து இணையங்களிலும் கடைகளிலும் தேடி தன் அடையாளம் தெரியும் படியாக அலங்கரிப்பாள்.


வாழ்க்கை சந்தர்ப்பங்களால் நிறைந்திருக்கிறது: வாய்ப்புகள் எங்கனும் கொட்டிக் கிடக்கிறது. காலமோ மிகச் சொற்பமாக இருக்கிறது. வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழவே எல்லோரும் பிரியப்படுகிறார்கள்.அது ஒரு விதமான ஓட்டப் போட்டி மாதிரி. சேர்ந்து ஓட முடியாதவர்கள் தோற்றுப் போகிறார்கள். அல்லது அவர்களின் ஓட்டவேகத்தோடு ஓடுபவர்களோடு துணை சேர்ந்து கொள்கிறார்கள். மெல்ல ஓடுகிற தமிழ்பெண்ணைத் தோற்றுப் போனவளாகச் சமூகம் காண்பது தான் ஒரு சோகம்.

இந்த வியற்நாமியப் பெண் ஒரு தமிழ் ஆணின் விருப்பங்களை அப்படிப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தாளா அல்லது அவளது இயல்பே அது தானா என்று தெரியவில்லை. அவள் அதி அற்புதமாக தன் துணையைப் புரிந்து கொள்ள ; அன்பைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறாள் அல்லது அத்தகைய அன்போடு இருக்கிறாள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அத்தனை பட்சத்தோடும் அக்கறையோடும் அன்றைக்கும் அவள் நடந்து கொண்டாள். ’அன்பே’ என அவள் தமிழில் அவனை அழைப்பது அவன் மீதான அவளின் அன்பின் வெளிப்பாடெனவே எனக்குத் தோன்றுகிறது. என்னை அவள் தன் வீட்டுக்கு அழைக்கும் போது ’நீங்கள் வந்தால் ..............மிகுந்த சந்தோஷைப்படுவார்.’ அதற்காகவேனும் வாருங்கள் என்று அழைத்திருந்தாள்.( வேலையில் இருவரும் வேறு வேறு தளங்களில் வேலை செய்கிறார்கள்)


அங்கு நான் போன போது தாமதமாகி விட்டது. பல உணவுகள் பலராலும் பகிரப்பட்டு விட்டன. அங்கு, அவள் வீட்டில், எடுத்த உணவுப் பொருட்களையும் வீட்டின் வடிவமைப்பையுமே இங்கு காண்கிறீர்கள். (இணையத்தளங்களில் தனிப்பட்டவர்களின் படங்களைப் பிரசுரிப்பதில் எனக்குச் சம்மதமில்லாததால் வீட்டின் முழுப்பரிமானங்களோடும் இருக்கின்ற அவர்களுடய பல  படங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன)

இந்தப் பதிவில் நான்கவதாக இருக்கிற படம் ஸ்பிறிங் றோல் என அழைக்கப் படுகிறது.சோறினை சமைத்து அதனை மாவாக அரைத்து தட்டையான பேப்பர்களாகச் செய்து பக்குவப்படுத்தி காயவைத்து சீனக் கடைகளில் விற்கிறார்கள். அவற்றை வாங்கி அந்த வட்டப் பேப்பரை சுடு நீரில் போட்டவுடன் அது வெந்து மென்மையான துணிபோலாகி விடுகிறது. அதற்குள் றால், கரட், வெங்காயத்தாள், மற்றும் பிற மரக்கறிகளை நீள வாக்கில் வெட்டி நடுவில் வைத்து உருட்டி ஒட்டி விடுகிறார்கள். அதனை சோசில் தொட்டு சாப்பிடுகிறார்கள். செய்ய இலகுவானது: சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. வயிற்றை இலகுவில் நிரப்பி விடத்தக்கதும் கூட. நேரமும் கனக்க எடுக்காது. நாம் விருந்தினர் வந்தால் பஜ்ஜி,வடை, பகோடா என்று செய்வது போல இவர்கள் திடீரென வரும் விருந்தாளிகளுக்கு இதனைச் செய்து கொடுக்கிறார்கள்.


எனக்கு மிகப்பிடித்திருந்தது அதற்கடுத்ததாக இருந்தது தான் . கரும்புத்துண்டை நடுவில் வைத்து றால் சுவை கொண்ட தசைக் கலவையால் அதனைச் சுற்றி உருட்டி பொரித்து கொடுக்கிறார்கள்.கரும்பின் சுவை றாலிலும் றாலின் சுவை கரும்பிலும் ஊறி அது ஒரு அதிசய சுவையாக இருந்தது. புதினமான ஒரு சாப்பாடு. 


ஏனைய பல உணவுகளையும் பான வகைகளையும் படமெடுப்பது அநாகரிகமாகப் பட்டதால் எடுக்கவில்லை. கீழே இருக்கின்ற படம் அவர்களின் முன் பக்க புல் வெளியில் இருக்கும் செம்மறியாடும் குட்டியும். சீமேந்தில் செய்தது.


கீழே இருக்கும் இந்தப் படம் அவள் வீட்டுப் படிக்கட்டின் மூலையில் அமைந்திருக்கிறது.

கீழே இருக்கும் சூரியனோடு இருக்கிற இந்தப் படம் அவளின் வீட்டின் வரவேற்பறையின் ஒரு பக்க சுவர்.

நாம் எல்லாம் சாமியை தனியான அறையில் வைத்து விட்டு சாமியறை அல்லது பெரியறை என்று பெயரும் இட்டு ஆசாரமாக இருப்போம். அவர்களோ இறந்த அன்புகுரியவர்களுக்கு அந்த இடத்தைக் கொடுத்து மெழுகுவர்த்தி ஏற்றி பூக்களும் வைத்து விட்டுத், தாம் வணங்கும் புத்தரை வீட்டு வரவேற்பறையில் பெரும் இடம் ஒன்று கொடுத்து வைத்திருக்கிறார்கள். அதனைத்தான் முதல் இரண்டு படங்களிலும் காண்கிறீர்கள்.


HAPPY HARMONY DAY! 
21.03.2013
11 comments:

 1. நிறைவான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. புலம்பெயர்ந்த நாடுகளில் ஏற்பட்டு வரும் இத்தகைய மாற்றங்கள் மற்றும் பண்பாட்டு உள்வாங்கல்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் செந்தாமரைத் தோழி?

  ReplyDelete
 3. ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகனுடன் இப்பொதுதான் ஸ்கைப்பில் கதைக்கும் போது தன் இல்லத்தில் குடியேறும் இந்த மாதிரி Living together ஜோடியைப்பற்றி பகிர்ந்து கொண்டார் .. சொல்லிவைத்த மாதிரி தங்கள் பதிவிலும் பகிர்ந்திருக்கிறீர்கள்.ஆச்சரியமளித்தது ..

  //"Living together." இங்கு பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். கணவன் மனைவி உறவுக்கு அப்பாற்பட்ட சேர்ந்து வாழும் உறவு. அது அவுதிரேலிய சட்ட திட்டங்களால் அங்கீகரிக்கப் பட்டது. திருமணம் செய்து கொள்ளாமலே அவர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும்; சொத்துக்களைச் சேர்ந்து வாங்கவும் சட்டம் அவர்களை அனுமதிக்கிறது.//

  நமது கலாச்சாரம் முரண்படுகிறது ..
  அவர்களை புண்படுத்தாமல் இருந்தால் போதும் .

  ReplyDelete
 4. அருமையான... நிறைவான பகிர்வு....

  ReplyDelete
 5. /நமது கலாச்சாரம் முரண்படுகிறது ..
  அவர்களை புண்படுத்தாமல் இருந்தால் போதும் ./

  அழகாய் சொன்னீர்கள் தோழி.

  இளம் தமிழ் சமூகத்திடேயும் காலப்போக்கில் இத்தகைய பண்பாடு சுவறவே செய்யும். மரபு ரீதியான திருமணத்தின் தார்ப்பரியங்கள் சொல்லிக் கொடுக்கப்படாதிருக்கும் போது;பெற்றோரிடையே முரண்பாடுகளை அன்றாடம் காணுகின்ற போது;மற்றும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள விரும்பாதிருக்கும் போது.......

  அவை தவிர்க்கப்பட முடியாததுமாய்.....

  புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் கலாசாரம் என்பது அவ் அவ் நாட்டுக்கேற்ற படி தனித்துவமான சில பண்புகளையும் தன்னோடு இணைத்த படி ஒரு புது வித தமிழ் கலாசாரமாய் பரினமிக்கப் போகிறது.

  இத்தகைய பண்பாட்டு அதிர்வுகளும் இளம் பிள்ளைகளை வைத்திருக்கிற தமிழ் பெற்றோரை ஒரு பதட்டத்திலேயே எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 6. நன்றியும் மகிழ்ச்சியும் குமார். உங்களிடையேயும் நான் இந்தக் கேள்வியைத் தான் கேட்கப் போகிறேன்.

  குமார் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இந்தப் புது வித வாழ்வு முறை பற்றி?

  ReplyDelete
 7. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்,
  காண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_15.html

  ReplyDelete
 8. அருமையான எழுத்து நடை. . .

  ReplyDelete
 9. அரசன்! ராஜா! என்ன ஒரு பெயர் பொருத்தம் பாருங்கள்.இரண்டு வேந்தர்களின் வரவுக்கும் பகிர்வுக்கும் என் அன்பார்ந்த நன்றியும் நல் வரவும்!

  இன்றய நாள் மலர்ந்தது உங்கள் கருத்துக்களால். வேறென்ன நான் சொல்ல?

  பொதுவாக ஒதுங்கி வாழும் தன்மையுள்ளது இந்தப் பக்கம். இப்போது வெளிச்சம் அதன் மீது. மகிழ்ச்சியும் கூச்சமும் பொறுப்புமாய் .....

  நன்றி. தொடர்ந்து வாருங்கள்!

  ReplyDelete
 10. நன்றி முல்லை. முதன்முதலாய் வந்திருக்கிறீர்கள் போலும்! நல்வரவு.

  ReplyDelete