Saturday, November 2, 2013

காருண்யம்



கடந்த வாரத்தில் ஓரு நாள்.

ABC 24 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி. அது 24 மணி நேரமும் செய்திகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசை.அன்றய நாளின் நாட்டு நிலவரங்களை எந்த நேரம் போட்டாலும் அறிந்து கொள்ளலாம் என்பதால் என் வசதிக்கு அது ஒரு வாய்ப்பான அலைவரிசை.

அன்றய அவுஸ்திரேலியரின் பரபரப்பான செய்தி ஜோர்டான் நாட்டுக்கு இங்கிருந்து உணவுக்காக ஏற்றுமதியாகும் செம்மறியாடுகள் குரூரமான வகையில் கொலை செய்யப்படுகின்றன என்பது தான். அதனை உயிரோட்டமாக ஆதாரத்தோடு போட்டுக்காட்டி நம் மனங்களை ஒரு தடவை ஸ்தம்பிக்கச் செய்து விட்டது அன்றய செய்தி.

அவற்றை நடத்தியவிதம் பார்த்து மனித குலத்தின் மீது கொலைவெறி எனக்கு!

அது ஏனோ தெரியவில்லை இப்படியான இடம் வருகின்ற பொழுதில் எல்லாம் எனக்கு ரொம்ப கோபம் வருகிறது. போன பிறப்பில் ஏதேனும் ஒரு வீட்டுப் பிராணியாய் இருந்து எதிர்பாரா சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்டு விட்டேனோ என்னமோ.ஆத்மாவில் படிந்து போயிருக்கிற ரணகளம் அது!

மேற்கூறிய அந்த நிகழ்வைப்பார்த்த போது தொழில்கட்சி ஆட்சியில் இருந்த போது இந்தோனேஷியாவுக்கு இதே காரணத்துக்காக ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடுகளுக்கு இவ்விதமான குரூரங்கள் நடந்ததைக் காட்டிய போதும் அதைப்பார்த்த துர் அதிஷ்டசாலி நான். பின்னர் அந் நாட்டுக்கு இக்காரணம் ஒன்றால் உயிருள்ள ஆடுகளின் ஏற்றுமதியை அவ் அரசு தடை செய்திருந்தது. நாட்டுக்கு நட்டம் என்ற பொழுதிலும். அப்போது ரொம்பவும் மனசுக்கு ஆறுதலாக இருந்தது. அவுஸ்திரேலியர்களுக்கும்.

இந்தோனேஷியாவோடு நம் நாட்டுக்கு இதனால் பல நட்டங்கள். அயல் நாடு என்பது இன்னொரு பெருங்காரணம். இந் நாட்டுக்கு வருகிற அகதிகள் அங்கு தரித்தே வருகிறார்கள் என்பதால் அந் நாட்டோடு நல்லுறவை வைத்துக் கொள்ளுதல் இந் நாட்டுக்கு மிக முக்கியம்.

அப்படி இருந்த போதிலும் மிகக் கடுமையாக ஆடுகளின் ஏற்றுமதியை கெவின் ரட் / ஜூலியா.கில்லாட் தொழில் கட்சி நிர்வாகம் முற்று முழுதாகத் தடை செய்திருந்தது. (இப்போது வலதுசாரிக்கட்சி வந்ததும் அதை நீக்கிவிட்டது வேறு விடயம்.)

இந்த இந்தோனேஷியாவைப் பற்றி சொல்லும் போது இன்னொரு விடயம் ஞாபகம் வருகிறது. அங்த நாட்டில் யானைகள் அதிகம். தந்தங்களுக்கு அதிக கிராக்கி. அதனால் ஆண் யானைகளை தந்தத்துக்காகக் கொல்வதும் அங்கு அதிகம். அதனால் குடும்பங்களாக வாழும் யானை இனம் கூட்டமாக வருகின்ற போது மனிதர்களைக் கண்டால் ஆண் யானை மாத்திரம் மரங்களின் பின்னால் ஒழிந்து கொள்ளுமாம். அவைகளுக்கு தந்தத்தினால் தான் மனிதர்கள் தம்மைக் கொல்கிறார்கள் என்பது தெரிந்திருப்பதாக BBC தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்திருந்தேன் எப்போதோ.

அது இருக்கட்டும்.

மேற்கூறிய நிகழ்ச்சி நடந்து அடுத்த நாள் அலைவரிசை 7 இல் காலை ஒளிபரப்பில் போட்டி போட்டுக் கொண்டு மிருகங்கள் மற்றய இனங்களோடு கொண்டுள்ள உறவுகள் பற்றிய ஒளிப்படங்களைப் போட்டுக் காட்டினார்கள். ஒரு பசு மாடு சிலமாதங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு வாஞ்சையோடு பால் கொடுப்பதையும் ஆதுரத்தோடு நக்கி விடுவதையும் அழகுற ஒன்று சொல்லிற்று. வோறொன்றின் கோடிப்புறத்தில் வாழும் பன்றியும் நாயும் இணைபிரியாத் தோழர்களாக இருப்பதை காட்டிற்று.  புலி ஒன்று ஒரு சிறு குரங்குக் குட்டியை கண்ணும் கருத்துமாய் போற்றி வளர்ப்பதை வேறொன்று சொல்லிற்று.

இவ்வாறு கடந்த வாரம் ஒன்று ஓடி முடிந்திருக்க இன்றய சனிக்கிழமை தீபாவளி.

தீபாவளி வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.(அதச் சொல்ல மறந்து போச்சு பாருங்க. இன்றய தீபவளி நாள் பிஜி இந்தியர்களுக்கு புது வருடமும் கூட.)

இன்றய நாள் தமிழ் பாடசாலையில் தமிழ் வகுப்பு. என் இந்தியத்தோழி தன் மகள்மார் படித்த தமிழ் புத்தகங்கள் சிலவற்றை எனக்கு பரிசளித்திருந்தாள். அதில் ஒரு பாடம். டயறிக் குறிப்பொன்று. ஒரு சிறுமி ஒரு சம்பவத்தை விபரிக்கிறாள். அது ஒரு கதையைப் போனறு உருவாக வாய்ப்புகளும் இருக்கிற மாதிரியான டயறிக் குறிப்பு.

அந்தக் குறிப்பு இது தான். அவள் பாடசாலை முடித்து வீடு திரும்புகிறாள். சில சிறுவர்கள் ஒர் ஓணானை அடிக்கிறார்கள். ஏன் அடிக்கிறீர்கள் என்று இவள் கேட்கிறாள். அவர்கள் அது தம்மைப் பார்த்து முறைப்பதாகச் சொல்லி, இவளைப் புறக்கணித்து விட்டு, அதனை அடித்துக் கொல்கிறார்கள். அவளுக்கு இந்தக் காட்சியை மறக்க முடியவில்லை. ஏன் அதனைக் கொன்றார்கள் என்பதற்கு இவளால் பதிலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தக் காட்சி அவள் மனதில் ஆழமான சம்பவமாக பதிகிறது. அவளால் அந்த நிகழ்ச்சியை மறக்க முடியாது என்று முடிகிறது அந்த டயறிக் குறிப்பு. மேலும்  கதை. இன்றய ஒரு பக்கக் கதை மாதிரி.

இதனை வாசித்து அதில் இருக்கிற சில இடங்களை விரித்தும் விபரித்தும் கூறி விட்டு, உங்களுக்கு இப்படியாக ஏதேனும் மறக்க முடியாத படி சம்பவங்கள் ஏதும் நடந்ததா  நடந்திருந்தால் அது பற்றி நாம் உரையாடுவோம்  என்று உரையாடினோம். சும்மா என்றால் தமிழே வாயில் வராது. இப்படி ஒன்றைச் சொன்னால் எப்படியோ தமிழில் அதை அவர்கள் விபரிக்கும் போது அவர்கள் வாயில் இருந்து தடக்கி தடக்கி வரும் வார்த்தைகள் அத்தனை அழகாய் இருக்கும்.

ஒருத்தி தான் வளர்க்கும் கோழிகள் மற்றும் சேவல் பற்றிச் சொன்னாள். மற்றொருத்தி தானும் நாய்குட்டியும் சந்தித்த முதல் நாளை விபரித்தாள். மிகுதிப்பேர் என்ன சொன்னார்கள் என்று கேட்கிறீர்களா? அதற்குத்தான் நேரமே கிடைக்கவில்லையே! அத்தனை ஆர்வமாய் சொல்ல அத்தனை விடயங்கள் அவர்களிடம் இருந்தது. மிகுதி அடுத்த வாரம் தொடரும் என சொல்லி விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

என்னமாய் அவர்களிடம் காருண்யம் கனிந்திருக்கிறது தெரியுமா?

நாட்டின் சாராம்சம் அவர்களிலும்!!

பெருமையாயும் மகிழ்ச்சியாயும் இருந்தது.

கூடவே கவலையாயும் இருக்கிறது. குரூரம் நிரம்பிய இந்த உலகில் இந்தப் பிள்ளைகள் எப்படிப் பிழைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற பயம் தான் அது.

எப்படி பிள்ளைகளை வழி நடத்துவது? தர்மம் என்று சொன்ன வழியூடாகவா?
இன்று வாழும் சமூகத்துக்கு ஈடாக எப்படி வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்ப்து பற்றியா?


தார்மீகப் பயம் ஒன்று தொற்றிக் கொண்டிருக்கிறது. தடுமாற்றமாகவும் இருக்கிறது. தாய்மார்கள், தந்தைமார்கள், பெரியவர்கள், அறிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

முன்னர் ஒரு காலம். அப்போது என் கிராமத்து பாடசாலையில் உயர்தர வகுப்பு பரீட்சை எடுத்து விட்டு வீட்டில் இருந்த காலம். அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அப்பாடசாலையில் தமிழும் சமயமும் சமூகக்கல்வியும் 4ம் வகுப்புக்கும் 8ம் வகுப்புக்கும் படிப்பித்துக் கொண்டிருந்தேன். அதில் கொல்லாமை பற்றிய ஒரு பாடம்.அது சமய பாடத்தில் தானாக இருக்க வேண்டும். அந்தப் பாடத்தால் ஈர்க்கப்பட்ட மாணவி ஒருத்தி வீட்டில் தான் இனி மச்சமாமிசம் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்ததால் அவ்வீட்டுக்காரர் எனக்கு கடிதம் ஒன்று கொடுத்தனுப்பி இருந்தார்கள். பிள்ளைகளுக்கு இவ்வாறான விடயங்களைப் போதிக்கும் போது கவனமாக இருக்கும் படி.

அந்தப் பயம் மறு படி இப்போதும். நான் சீரியஸாகத்தான் கேட்கிறேன்.

தயவு கூர்ந்து நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கள்.



2 comments:

  1. மனிதன் எதை விட்டுவைத்தான்...ஆக்கத்திற்கும் அழிவுக்கும் அவனே காரணம் பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. ஒரு துளி கண்ணீர் சமுத்திரத்தண்ணீரில் கலந்து காணாமல் போய் விடுவதைப் போல தான் நாம் பேசுகின்ற காருண்யங்களும்.

    எங்கே யாரை எட்டப் போகிறது புத்தன்?

    நன்றி உங்கள் வருகைக்கும்.

    ReplyDelete