Monday, March 31, 2014

ஈழத்தின் கிழக்குத் தமிழ் பற்றும் வடக்குத் தமிழ் பற்றும்

ஈழத்துத் தமிழ் கவிஞர்கள் இருவரின் தமிழ் பற்றிய பாடல்கள்


பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதி லுள்எனைப்
பூட்டி வதைத்தாலும் -என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் -உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் -ஒரு
செங்களம் ஆடி வரும்புக ழோடு
சிரிக்க மறப்பேனா?

-காசிஆனந்தன்-

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா – உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா.
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா – தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை – ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை.
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை – இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்று களிப்பேன் – உயிர்
பாயும் இடங்களிலே என்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் – அங்குக்
காயும கிழங்குகளை தின்று மகிழ்வேன்.

மாடமிதிலை நகர் வீதிவருவேன் – இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்.
பாடியவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் – இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் – பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் – அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து – அங்கு
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்.
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா – என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா – கவிக்
கள்ளைக் குடித்தவெறி யேறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் – அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிட வேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை – அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை.
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்.

ஈழத்து, யாழ்பாணத்து, மாவிட்டபுரம் பாவலர் க.சச்சிதானந்தன்




Sunday, March 23, 2014

வாழ்க்கை பற்றி இவர்கள் சொல்கிறார்கள்


Death asked Life :Why does everyone love you and hate me.
Life replied :
Because I am a beautiful Lie and you are a painful Truth



Temple is a 6 letter word
Church is a 6 letter word
Mosque is also a 6 letter word
Geeta is a 5 letter word
Bible is a 5 letter word
Quran is also a 5 letter word


A Lovely Logic for a beautiful Life:
Never try to maintain relations in your life
Just try to maintain life in your relations



Always welcome the problemsBecause problems give you dual adviceFirst, you know how to solve itSecond, you know how to avoid it in future




3 stages of Life:
Teen Age – Has time; energy – But no Money
Working Age – Has Money; Energy – But No Time
Old Age – Has Money; Time – But No Energy






We are very good Lawyers for our mistakes
Very good Judges for other’s mistakes


World always say – Find good people and leave bad ones.
But I say, Find the good in people and ignore the bad in them
Because No one is born perfect


A fantastic sentence written on every Japanese bus stop.Only buses will stop here – Not your time So Keep walking towards your goal



Negative Thinkers focus on Problems
Positive thinkers focus on Solutions

Never hold your head high with pride or ego.
Even the winner of a gold medal gets his medal only when he bows his head down



Define TODAY
                     This is an Opportunity to Do A work better than Yesterday

                                   

        African Saying:
 If you want to walk quick, walk alone
                   If you want to walk far, walk together together


Monday, March 17, 2014

நகைகள்



சிட்னி முருகன் கோயில் திருவிழா. இன்று தீர்த்தமாம்.

தென்னகத்தில் இருந்து பிரபலமான புடைவைக் கடைகள் வந்து வியாபாரம் முடித்துப் போய் விட்டன.

லொக்கர்களில் கிடந்த நகைகள் யாவும் வெளியே மறுபடி வந்து மீண்டும் லொக்கர்களுக்குள் போகும். சில பல வீடுகளில் களவுகளும் போகும்.

இது தான் நகைகள் பற்றி பதிவெழுதக் காரணமா என்றால் இல்லை.

அண்மையில் திரு. தனபாலசிங்கம் ஐயா அவர்கள் தந்த ‘சிலப்பதிகாரச்  சிந்தனைகள்’ CD முதல்பாகத்தை ஒரு பாட்டம் கேட்டேன். அதில் ஒரு இடம் வந்தது. அது மாதவி அணிந்த நகைகள் பற்றிய பட்டியல் பாட்டு. அவள் சுமார் 30க்கு மேற்பட்ட நகைகளை அணிந்து தன்னை அழகு படுத்தி இருக்கிறாள்.



அந்தப் பாடல் வரிகள் இவைதான்.

”நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து, 85

குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து, 90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம் 95

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து, 100

கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து, 105

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள், 110

இதைப்பார்த்ததும் ஈழத்தின் வடபுலத்தைச் சேர்ந்த பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய காதலியாற்றுப்படை என்ற புத்தகத்தில் - (1903 - 1968 ) நாட்டார் வாழ்வியலைப் பதிவு செய்த அந்தக் கவிதை இலக்கியத்தில் - வந்த அணியப்பட்ட நகைகள் பற்றிய பட்டியல் பாட்டு நினைவுக்கு வந்தது. அந்தப் பாடல் இது தான்.



” நன்னாள் பார்த்து பொன்னை உருக்கி
மணவினைக்கென்றே வரைந்திடு தாலியும்
அட்டியல், பதக்கம், பிலாக்கு, மூக்குத்தி,
பூரானட்டியல்,கீச்சிக் கல்லட்டியல்,
கடுகுமணிக்கொலுசு, கவுத்தோர் காதுப்பூ,
வாளி, சிமிக்கி, வளையல், தோடு,
பட்டணக்காப்பு, பீலிக்காப்பு,
பாதசரமொடு சங்கிலிச் சிலம்பு
தூங்கு கடுக்கண், நட்டுவக்காலி,
அரும்புமணிமுரு கொன்றப்பூவும்,
ஒட்டியாணம், மொழிபெறு நுதலணி
அரைஞாண் கயிறொடு அரைமூடிச் சலங்கை
சித்திர வேலை செய்திடும் போது........”

எனப் பட்டியல் இட்டபடி தொடர்கிறது இப்பாடல்.

பண்டய தமிழர் வாழ்வில் அணியப்பட்ட நகைகளின் பட்டியலைப் பார்க்கும் போது மலைப்பே மிஞ்சுகிறது.

1. அழகியலில் தமிழருக்கு இருந்த புலமை, நாட்டம் மற்றும் செய்நுட்பத் திறமை என்பது ஒன்று.

2. பெண்கள் எவ்வளவு தூரத்துக்கு புறத்தே தம்மை அழகுபடுத்திக் கொள்வதில் நாட்டமுடன் இருந்திருக்கிறார்கள் என்பது இன்னொன்று.

இந்தப் புற அழகு இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று பொன்னகை. இரண்டு புன்னகை. முன்னதை விட பின்னது கொஞ்சம் செளகரிகம் என்ற போதும் இன்றும் அது மட்டும் போதும் என்று சொல்லும் பெண்ணோ ஆணோ இல்லை.

இவை இரண்டையும் விட அழகு படுத்தும் சாதனம் ஒன்று உண்டு. உண்மையான அழகை நாம் அங்கு தான் காண இயலும். அது குணத்தினால் நிகழ்வது. தன்னை அகத்திலே / உள்ளத்திலே குணங்கள் என்ற அணிகலனால் தன்னை அழகு படுத்திக் கொள்வது.

கடந்த வியாழனன்று எதிர்பார பிரகாரமாக ஒரு பெண்கள் தினக் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. பரமற்ராவில் அமைந்திருக்கின்ற புலம்பெயர்ந்தோர் வள நிலையம் அந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அங்கு அகதியாக வந்து தம்மை வெற்றிகரமான பெண்களாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட பெண்கள் தம் தாம் வாழ்வில் பெற்ற அனுபவப் படிப்பினைகளை பார்வையாளர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.

நான் அதில் 3 விடயங்களைப் பொறுக்கிக் கொண்டேன்.

1.BUILD YOURSELF - உங்களைக் கட்டி எழுப்புங்கள். உங்களுக்குள் இருக்கும் பலம் என்ன என்பதை அடையாளம் காணுங்கள், பலவீனங்களை உங்களுக்கு நீங்களே சரியான நீதிபதியாக இருந்து கண்டு பிடியுங்கள். உங்களைச் சரியாக விளங்கிக் கொண்ட பின் பாதையை தீர்மானியுங்கள். முன்னால் பாதை இல்லையா? நீங்கள் போடுங்கள். முன்னேறுங்கள். உங்கள் வலப்புறம் திரும்பி “Happy women's day" சொல்லுங்கள். நாம் எல்லாம் ஓரினம் என்று உறுதி கொள்ளுங்கள். பெருமைப் படுங்கள்.

2. ACCEPT THE SITUATION THAT YOU ARE  IN.- நீங்கள் இப்போது இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்லதோ கெட்டதோ, கூடாதோ நல்லதோ அது தான் நீங்கள் இப்போது இருக்கும் நிலைமை. அதனை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு ஏற்க மறுத்தால் நீங்கள் இந்த இடத்தை விட்டு எங்கும் போக முடியாது. நீங்கள் இப்போது இருக்கும் நிலையை ஏற்றுக் கொண்ட பின், இனி இந்த இடத்தில் இருந்து எங்கு போகலாம் என்பதை சுதந்திரமாக உங்கள் திறமை கொள்ளளவு ( Capacity )என்பவற்றுக்கேற்ப தீர்மானியுங்கள்

3. AT T I T U D E - இதனைச் சொன்னவர் ஒரு இந்தியப்பெண். 70களின் ஆரம்பத்தில் தன் 18வது வயதில் தனியாக ரஷ்யாவுக்குச் சென்று பட்டம் பெற்றுவந்த முதல் இந்தியப்பெண்.Open to new situation என்பது வாழ்க்கை அவளுக்கு கற்றுக் கொடுத்த பாடம். அது மதமோ, பண்பாடோ, பழக்கவழக்கமோ, வாழ்க்கை முறையோ... எதுவாக இருந்தாலும் மனதை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.  படிக்கும் / கற்றுக் கொள்ளும், புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் ஆவலுடன் மனதைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குண இயல்பை அதிலிருந்து வரையறுத்துக் கொள்ளுங்கள்.அது தான் நீங்கள்.



“ நீ என்பது உடலா, உயிரா, பெயரா?
  மூன்றும் இல்லை - செயல்”  

    - வைரமுத்து. கோச்சடையானில்.

இப்போது எது நமக்கு நகை? பொன்னகையா? புன்னகையா? குண இயல்பா?

Monday, March 10, 2014

உ.வே.சா. போட்டுத்தந்த பாதைவழியே இலக்கிய சந்திப்பு – 17 – குழுவினர்


அது ஒரு பொன்மாலை நேரம்.

23.2.14.

பரமற்றா பூங்காவினுள் இருக்கும் தேநீர் விடுதிக்கு முன்பாக இருக்கும் மணிமண்டபம்.

Image

                                       Image

உ.வே.சா. போடுத்தந்த சங்கத் தமிழ் வீதி வழியே நம்மை ஒளைவையிடம் அழைத்துச் செல்ல வந்திருந்தார் நம் தமிழ்குறுமுனி தனபாலசிங்கம் ஐயா அவர்கள்.

Image


ஒரு வீட்டில் குடி இருக்கும் இரு சூரியர்கள் பானு, ரவி. எப்போதும் சரியான நேரத்துக்கு 5 நிமிடங்கள் முன்னால் வந்து எனக்கு மிஸ்கோல் தந்து வரவை உறுதிப்படுத்தும் மழைக்காரி ஷிரயா, ஐந்து மணிவரை நாட்டிய வகுப்புகளை நடத்தி விட்ட பின்னாலும் களைப்பற்று புத்துணர்வோடு எப்போதும் தவறாமல் கலந்து கொள்ளும் நம் பலமான தூண் கார்த்திகா, மற்றும் நான் 4.30க்கு வேலை முடித்து வரும் போதே சுடச்சுட கொழுக்கட்டைகளைச் செய்து தகுந்த டப்பாக்களில் செம்மையுற அடுக்கி தானும் தயாராகி நிற்கும் என் அம்மா, எப்போதேனும் அபூர்வமாய் ஆனால் நம் நிகழ்ச்சிகளின் விடயங்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் சரியான தருணங்களில் நிகழ்ச்சிகளைக் கைகொடுத்து தூக்கி விடும் புத்தர் எல்லாவற்றுக்கும் மேலாக 4.45 மணிக்கே தன் வீட்டுக்கு வெளியிடத்தில் இருந்து உறவினர்கள் வந்திருக்கிறார்கள் என்ற போதும் பாரியாரோடு வந்து விட்டேன் என அறியத்தந்த குறுமுனிவர் தனபாலசிங்கம் ஐயா அவர்கள் ( இவர்கள் இடம் தெரியாது தடுமாறி நின்ற போது நம் அன்பு புத்தர் தான் அவர்களை அழைத்து வந்திருந்தார்) …. இப்படியாக எல்லோரும் ஒன்று சேர்ந்த போது மாலை 5.10ஐக் கடந்து விட்டிருந்தது. ( திரு.சத்தியநாதன் அவர்கள் தனக்கின்று வேலைநாள் என்பதால் வர இயலாமையை ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி இருந்தார்.)

வரலாற்று வீதி வழியே பின்னோக்கிப் பயணப்படுகிறோம்.

ஐயா முன்னோக்கிப் போக நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம்.

Image


Image


வீதி வழியே பின்னோக்கி பயணிக்கையில் அந்த வரலாற்றுப்பயணத்தில் இந்த வீதி போட்டுத் தந்தவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார் ஐயா.

நம் சந்திப்புக்கு அன்று குழுமியவர்கள் ஒன்பது பேர்.அது போதுமாக இருந்தது அவரைப்பின் தொடர. கன்று தாயின் பின்னால் துள்ளியோடும் கன்றுக்குட்டிகளாய் நாம் அவரை – அவர் சொல்லைப் பின் தொடர்ந்தோம்.



Image

Image

Image

Image

Image

Image

Image


நேரடியாகவே நிகழ்ச்சிக்குள் நுழைந்தோம்.

ஐயா அவர்களை முதலில் நான் அறிமுகப்படுத்த வேண்டும்.இல்லை என்றால் என் ஆத்துமம் சாந்தி பெறாது. இவர் இலங்கையின் வடபுலத்தில் இணுவில் என்ற சிற்ரூரில் பிறந்து கொக்குவில் இந்துக்கல்லூரியில் கல்விகற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு பிறகு கனக்கியலில் மேலதிக படிப்புக்காக லண்டனில் சிலகாலம் தங்கி( 1974ம் ஆண்டுக்காலப்பகுதி) இருந்து 1979 ல் சிட்னிக்கு வந்தவர்.மிகவும் வலிந்து கேட்டுப் பெற்ற தகவல்கள் இவை.

அவருடய கல்வித்தகைமையும் வாழ்க்கை ஓட்டமும் வேறாக இருந்த போதும் சொந்த ஆர்வத்தின் நிமித்தம் தமிழ் இலக்கியம் ஆங்கில இலக்கியம் முதலானவற்றைக் கற்றறிந்ததாகச் சொன்னார். தன்னைப்பற்றிச் சொல்வதில் மிகுந்த கூச்சசுபாவம் உள்ளவராக இருந்தார். நமக்குக் கொடுப்பதற்காக “சிலப்பதிகார சிந்தனைகள் என்ற அவருடய வானொலியில் ஒலிபரப்பான இலக்கிய ரசத்தை இறுவட்டில் அடைத்துக் கொண்டு வந்திருந்தார். அதற்கு ஆனசெலவைப் பெறுமாறு வேண்டிய போது தீ சுட்டதைப் போல பதறிப்போனார்.

தான் ஒன்றும் பெரிய இடத்துப் பையன் இல்லை என்றும் ஒருவாறு லண்டனுக்குப் போய் அங்கு லண்டனில் கல்விகற்ற போது பகுதி நேர வேலைக்கு தான் எதிலும் தேர்வாகவில்லை என்றும்; தான் சிறிய மனிதராக இருந்த காரணத்தால் ஒரு நாடகக் கம்பனியில் இடைவேளையின் போது பொருட்கள் விற்கும் வேலை தான் தனக்குக் கிட்டிற்றிறென்றும்; அது தனக்கு இலவசமாகவே ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்ததென்றும் அதனால் ஆங்கில இலக்கியத்தின்பாலும் நாட்டம் ஏற்பட்டதென்றும் கூறினார். (ஐயா அவர்களை அந்தக் கணத்திலேயே நமக்கு ஆங்கில இலக்கிய சுவையை அறியத்தர வேண்டிக் கொண்டோம்) ஆங்கில இலக்கியங்கள் கூடுதலாக மன போராட்டங்களை உள்ளூர நிகழும் கேள்விகளைப் பதிலை சொல்வது போல் அமையப்பெற்றவை என ஐயா அவர்கள் சொன்ன முதல் கூற்றே நமக்கு புதிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. அதனை அர்ச்சுணனின் போர்களத்து மனப்போராட்டக் காட்சியோடு  ஒப்பிட்டுப் பேசினார்.

நாம் ஒரு அரிய பொக்கிஷத்தினைக் கண்டு பிடித்த   உணர்வினைப் பெற்றிருந்தோம்.

ஐயா அவர்கள் இன்று சங்க காலத்து ஒளைவையை அறிமுகப்படுத்த  நாம் அவளைக் காணத் தயாரானோம்.அவளைக்காண நம்மை சங்ககால சமூக சபைக்குள் அழைத்துப் போனார் ஐயா.முதலில் சங்ககால நூல்கள் வழியாக போக வேண்டி இருந்ததால் அந்த நூல்வந்த வழியை சொன்னார்.

இதிலிருந்து தமிழ் அருவி ஒன்று தங்குதடை இன்றி எதுகை மோனைகளோடும் பாடல் வரிகளோடும் ஓடுவதைக் கற்பனை செய்க!

நீங்கள் எப்போதேனும் 1 – 3 ம் நூற்றாண்டுக்குரிய தமிழ் எப்படி இன்றய நிலையை அடைந்தது என்பது பற்றி சிந்தித்ததுண்டா?

அங்கு தான் ’தமிழ் தாத்தா’, ‘வாழ்ந்த ஒரு தமிழ் நூலகம்’ பற்றிய அறிமுகம் நமக்குத் தேவைப்படுகிறது. கல்லில் எழுதப்பட்ட தமிழ் எழுத்து பிராமி வரி வடிவங்கள் பின்னர் சமண முனிவர்கள் தமிழ் கடமையாக அவற்றை ஏட்டில் எழுதி வைக்க சமயக்காழ்ப்புணர்ச்சியால் அவை வெளிவராது இருப்பது கண்டும் அறியாமையால் அவை கறையானுக்கு இரையாவதன் முன்னர் அவற்றை மீட்டு மிகப்பக்குவமாக அச்சுக்கு அத்தமிழ் இலக்கிய பொக்கிஷங்களை கொண்டுவந்த பெரு மனிதர் இவர்.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், இலக்கணநூல்கள், பிரபந்தங்கள் என இன்று நமக்குக் கிட்டியுள்ளவை எல்லாம் உ.வே.சா. உயிர்ப்பித்தவையே.

அவர் தன் என் சரித்திரம் என்ற அவரது முற்றுப்பெறாத இறுதி நூல் இவ்வாறு கூறுகிறது..”….சேலம் ராமசாமி முதலியாரைச் சந்தித்தார்.என்ன என்ன படித்திருக்கிறீர்கள் என அவர் கேட்ட போது ஐயர் தாம் படித்த அந்தாதி கோவை, பிள்ளைத்தமிழ் நூல்களை எல்லாம் வரிசையாக ஒப்பித்தார்.இவற்றை எல்லாம் படித்து என்ன பிரயோசனம் என அவர் கேட்க, மேலும் தான் படித்த நூல்களின் பட்டியலை ஐயர் வாசித்தார். கம்பராமாயணத்தைப்படித்துள்ளதாகவும் அவர் சொன்னர். இவை எல்லாம் பிற்காலத்து நூல்கள் தாமே? பழங்காலத்து நூல்களான சங்கப்பாடல்களை படித்திருக்கிறீர்களா? சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை படித்ததுண்டா என்று ராம சாமி முதலியார் கேட்டார்.

நம் தமிழ் இலக்கிய வரலாற்றின் திசைவழியை தீர்மானித்த கேள்வியாக அது அமைந்தது. அதன் பிறகு தான் அய்யர் அவர்களின் வேட்டை துவங்கியது. சமண இலக்கியமான சீவக சிந்தாமணியை தெளிவுறப்புரிந்து கொண்டு பதிப்பிக்கும் நோக்கில் சமண சம்பிருதாயங்களை கும்பகோணத்தில் இருந்த சமணர்களிடம் சென்று பாடம் கேட்டுத்தெரிந்து கொண்டார் ஐய்யர்……அரசாங்கத்தாரும் கிறிஸ்தவ மிசனறிமார்களும் மட்டுமே பயன்படுத்தி வந்த அச்சுயந்திரத்தை 1835ஆம் ஆண்டு முதல் இந்தியர்களும் பயன்படுத்தலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டதைத்தொடர்ந்து ஓலைச்சுவடியாக இருந்த தமிழ் நூல்கள் அச்சுப்புத்தகங்களாக வரத்துவங்கின…….எனத்தொடரும் அவர் தமிழ் வரலாற்றுச் சரிதம் தன் பதிப்புத்துறையில் அவர் கொண்ட சிரமம் பற்றி இப்படிச் சொல்கிறது. (அவர் இது பற்றிச் சொல்லி இராவிட்டால் நமக்கு இதன் சிரமம் அவரின் தமிழ் தொண்டு பற்றி தெரிய வராமலே போயிருக்கும்.)

’……..சங்க இலக்கியங்கள், காவியங்கள் என 1878 துவங்கி 1942 வரை 62 ஆண்டுக்காலம் 102 நூல்களை உ.வே.சா. பதிப்பித்திருக்கிறார்.இந்த ஓலைச்சுவடிகளுக்காக ஊரூராக அவர் அலைந்தார். வீடு வீடாகக் கையேந்தி நின்றார்.

செய்யுள் வாய்ப்பாடு எல்லாம் அன்று மனப்பாடம்தான். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஒரு இடத்தில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுதிப் பழக வேண்டும். ஒரு சில மாத பயிற்சிக்குப் பிறகு சுவடி எழுதப் பயிற்சி கொடுக்கப்படும். .சிலேட்டில் எழுதும் பழக்கம் மிகப் பிற்காலத்தில்தான் வந்தது.

எழுதப் பயன்படுத்தும் சுவடியை பனை ஓலையிலிருந்து தயாரிப்பார்கள். அந்த பனை ஓலைச்சுவடியில் எழுதுவது ஒரு தனிக்கலை. சுவடியில் எழுதுவதற்கு நீண்ட நாள் பயிற்சி வேண்டும். எழுத்தாணி என்ற கருவியைக்கொண்டு சுவடிகளில் எழுதுவார்கள். எழுத்தாணியால் எழுதும்போது மேலாக எழுதினால் எழுத்து தெரியாது. அழுத்தி எழுதினால் சுவடி ஒடிந்துவிடும். எங்காவது ஒரு மூலையில் ஒடிந்தாலும் அந்த சுவடியை தூக்கி எறியவேண்டியதுதான். ஒரு சுவடியில் பத்து பதினைந்து பாடல்களை கூட எழுதுவார்கள். நிதானமாகவும், அதிக அழுத்தம் கொடுக்காமலும் எழுத வேண்டும். எழுதத் தொடங்கிய சில நிமிடங்களில் கை வலி எடுக்க ஆரம்பிக்கும்.

அப்படி வலியை அனுபவித்த மாணவன் ஒருவன் எரிச்சலில் பாடிய பழைய பாட்டு ஒன்று உண்டு.

ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா
வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா

என்பதுதான் அந்த மாணவனின் புலம்பல் பாட்டு.

நாம் இன்று எழுதும்போது எழுத்துக்கு புள்ளி வைக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுகிறோம். சுவடியில் புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை. ஏனென்றால் புள்ளி வைத்தால் ஓலை ஒடிந்து போய்விடும். ஆகையால் புள்ளி எங்கே தேவை என்பதை படிப்பவர்கள் தெரிந்து உணர்ந்து படிக்கவேண்டும். உதாரணமாக கம்பம் ,ரம்பம் என்ற சொற்களை கமபம ,ரமபம என்றுதான் சுவடியில் எழுதுவார்கள்.

படிப்பவர்கள் சொல் அமைந்திருக்கும் நிலைக்கு தக்கபடி படித்து பொருள் கொள்ள வேண்டும். பழைய உரைநடை ஆசிரியர்கள் முற்றுப்புள்ளி இல்லாமல் எழுதுவார்கள். வாக்கியங்கள் நீண்டதாக இருக்கும். இந்த ஓலைச் சுவடிகளில்தான் காலம் காலமாக எல்லா பழைய இலக்கியங்களையும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் .

கல்வியறிவு உள்ளவர்கள் எல்லோரும் சுவடியில் எழுதுவதில்லை. சுவடியில் எழுதியவர்கள் எல்லோரும் நிரம்ப படித்தவர்களும் இல்லை. ஓரளவு கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் சுவடி எழுதுவதை தொழிலாகக் கூட மேற்கொள்ளுவார்கள். தேவையான அளவுக்கு கல்வியறிவு இல்லாதவர்கள் சுவடி எழுதியதால் தான் பலபிழைகள் ஏற்பட்டுவிட்டன. இப்படித்தான் பழைய இலக்கியங்களில் பல பாடல்களுக்கு பாடபேதம் நிறைய ஏற்பட்டது. புலவர் எழுதியதற்கு மாறான சொல் உள்ள பாடல்களை பாடபேதம் உள்ளதாக குறிப்பிடுவார்கள்.

இப்படி எழுதிய சுவடிகளை பூச்சி அரிக்காமல் காப்பாற்றுவது மிகக் கடுமையான வேலை. வசம்பு என்ற நாட்டு மருந்து பொருளை சுட்டு அதன் கரியை மஞ்சள் சாற்றில் கலந்து வேறு சில பச்சிலை சாற்றையும் கலந்து ஒரு குழம்பு தயாரிப்பார்கள். அந்த குழம்பை சுவடிகளில் தடவி வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படிச் செய்யாவிட்டால் சுவடியை பூச்சி அரித்து விடும்.

அடிக்கடி பழைய சுவடிகளில் உள்ள இலக்கியங்களை புதிய சுவடிகளில் எழுதிக்கொண்டு பழைய சுவடிகளை அழித்துவிடுவார்கள். இந்த பழைய சுவடிகளை ஆற்று நீரில் போட்டால் நதியில் நீர் வளம்பெருகும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆடிப் பெருக்கு காலத்தில் சுவடிகளை வெள்ளத்தில் போட்டு தமிழர்கள் பல பழைய இலக்கியங்களை அழித்திருக்கிறார்கள்.

பல சைவ மடங்களிலும் புலவர்களுடைய சந்ததியினர் வீடுகளிலும் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய கிடைத்தன சைவ மடங்களில் இருந்த ஆழ்ந்த கல்வி ஞானம் உள்ள பல தம்பிரான்கள் உள்பட பலருக்கு அங்கே உள்ள ஓலைச்சுவடிகளின் உள்ளடக்கம். என்ன அவை என்ன நூல் என்பது தெரியாது. .இதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை இருந்த உண்மை நிலை. மாற்றுச் சமய நூல்களை படிக்கக் கூடாது என்று சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கூறி வந்ததால் பல சமய நூல்கள் கவனிப்பாரற்று அழிந்து போயின. அப்படி அழிந்த நூல்களில் பெருமபாலனவை சமண, பௌத்த மத நூல்களும் பல சமயச் சார்பற்ற நூல்களும்தான். உதராணமாக எந்த சமயத்தைப் பற்றியும் பேசாமல் இயற்கை வளத்தைப் பாடிய முத்தொள்ளாயிரம் என்ற நூலின் ஒரு மிகச் சிறிய பகுதிதான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

சங்க காலத்திலும் அதற்கு பிறகும் சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சுவடியில் இலக்கியங்களை எழுதுவதை ஒரு கடமையாகச் செய்து வந்தார்கள். அந்த சுவடிகளை பணமோ பொருளோ கொடுத்து தனவந்தர்கள் வாங்குவார்கள். அப்படி அவர்கள் எழுதியதெல்லாம் பெரும்பாலும் நீதி நெறிமுறைகளை போதிக்கும் அறநூல்கள்தான்.

தங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அல்லது நீத்தார் நினைவு நாட்களில் இந்த சுவடிகளை தனவந்தர்கள் தானமாகக் கொடுப்பது வழக்கம். இதை கிரந்த தானம் என்று கூறுவார்கள். சாஸ்திரதானம் என்றும் சொல்வதுண்டு. கிரந்த தானம் என்பது பழங்காலத்தில் சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. பிறகு சைவ சமயத்தாரும் இந்த வழக்கத்தை மேற்கொண்டனர். நீத்தார் நினைவு நாட்களில் நிலையாமையைப் பற்றி குறிப்பிடும் தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலிருந்து சில பாடல்களை அச்சிட்டு சிறிய புத்தகமாக விநியோகம் செய்யும் பழக்கம் பலவிடங்களில் உண்டு. இலங்கையில் வாழும் சைவ வெள்ளாளர்கள் மத்தியில் கிரந்த தானம் செய்யும் வழக்கம் பெரிய அளவில் இன்றும் உண்டு.

சுவடிகளைத்தேடுவது ஒரு போராட்டம் எனில் அவற்றைப் பதிப்பிப்பது அடுத்த போராட்டம்.ஏனெனில் ஒரு நூலைப்பாடிய புலவர் தம்மிடம் பாடம் கேட்கும் மானவர்களுக்கு அதைச் சொல்லிக் கொண்டே வருவார். அவர்கள் அதை ஏட்டுச் சுவடியில் எழுதுவார்கள்.இடையிடையே ஆசிரியர் கூறும் மற்ற மற்றச் செய்திகளையும் அவர்கள் இரண்டு இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைத்துக் கொள்வதுண்டு. மற்ரவர்கள் அதைப்பார்த்து பிரதி செய்து கொள்ளும் போது அந்தக் குறிப்புகளை பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதி விடுவார்கள். இதே போன்று எழுதுவதில் ஏராளமான பிழைகள்  ஏற்படும்.சுவடிகளில் மேற்கோள் செய்யுள்களைப் பிரித்தறிவது கடினம். உரை இல்லாத மூலங்கள், எழுத்தும் சொல்லும் குறைந்தும் பிறழ்ந்தும்,திரிந்தும் பலவாறு வேறுபட்டிருக்கும். சில சுவடிகள் சிதைந்தும் கிடைக்கும். மிகுந்த பொறுமையுடனும் பொறுப்புடனும் வேறுபிரதிகளுடனும் உரையாசிரியர் குறிப்புகளுடனும் ஒப்பிட்டுப்பார்த்து இரவு பகலாக உழைத்து மெய்ப்பு திருத்தி உ.வே.சா. இப்பதிப்புகளைக் கொண்டுவந்தார் என்பர்.

உ.வே.சா. அவர்கள் குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பிக்க முயலும் பொழுது அதில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவு பெறாமலே இருந்தனவாம்.

அதனைத் தெளிவுபடுத்திப் பதிப்பித்தாராம். அதனைப் போலவே சிலப்பதிகாரமா அல்லது சிறப்பதிகாரமா என்ற ஐயப்பாடு எழுந்து சிலப்பதிகாரம் தான் என்று அவர் முடிவு எடுப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்பட்டது என்பர்.

ஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில் உண்டாகும் துன்பம் மிக அதிகம். அச்சுப் பிரதியில் உள்ளவாறு ஏட்டுச் சுவடி அமைந்திராது. சுவடியில் எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள் கொம்பு கால் புள்ளி முதலியவை இரா. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு தெரியாது. அடிகளின் வரையறைகளும் இரா. இது மூலம், இஃது உரை, இது மேற்கோள் என்று அறியவும் இயலாது. எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும். ஏடுகள் அவிழ்ந்தும் முறை பிறழ்ந்தும் முன் பின்னாக மாறியும் முழுதும் எழுதப் படாமலும் இருக்கும் என்று உ.வே.சா. பதிப்புப் பணியின் சிக்கல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இத்துணை இடையூறுகளுக்கு இடையிலும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் ஏராளம்.

( பதிப்பித்தலில் இருக்கின்ற சிக்கல் நிலை பற்றி சி.வை. தாமோதரம்பிள்ளை இப்படிச் சொல்கிறார்.” பதிப்புச்சிக்கல் பற்றி அவர் குறிப்பிடும் போது ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏட்டைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது என்று சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணியில் நேரிடும் சிக்கல்களை எடுத்துக் காட்டுகிறார். (கலித்தொகை பதிப்புரை)

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.

கிடைத்தற்கரிய இத்தகைய ஏடுகளின் அருமை தெரியாமல் அவை எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வந்தன என்பதை “என் சரித்திரம்” என்ற புத்தகத்தில் அவர் ஆதங்கத்தோடு விவரிக்கிறார். வரகுண பாண்டியர் வைத்திருந்த சில ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவற்றைப் பற்றி விசாரித்தார் உ.வே.சா. குப்பை கூளங்களாக கிடந்த சுவடிகளை என்ன செய்வதென்று தெரியாததால் ஆகம சாத்திரத்தில் சொல்லியிருந்தபடி செய்துவிட்டோம் என்று கூறினார் அறங்காவலர் ஒருவர். என்ன செய்தீர்கள் என்று உ.வே.சா கேட்க, பழைய ஏடுகளையெல்லாம் கண்ட இடத்துல போடக்கூடாதாம். ஏடுகளையெல்லாம் நெய்யில் நனைத்து ஒரு பெரிய குழி வெட்டி அக்னி வளர்த்து அதுல தான் போட வேண்டுமாம். அந்த ஏடுகளையெல்லாம் அப்படிதான் செஞ்சோம் என்று கூறினார். அதிர்ந்து போய் உள்ளம் பதறினார் உ.வே.சா. இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படி சொன்னால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும். என்று கொதித்துப் போனார் உ.வே.சா.

மற்றொரு இடத்தில் பழைய சுவடிகளை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த பதில் இதுதான்… “ஐயா எல்லாச் சுவடிகளும் நல்லா மக்கி போச்சு, பல சுவடி ஒடைஞ்சு போச்சு அதுல என்ன எழுதியிருக்குன்னு எங்களுக்கு படிக்க தெரில…சும்மா வீணா இடத்தை அடைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்லி எல்லா சுவடிகளையும் ஒரு கோணிப்பையில் கட்டி ஆடி பதினெட்டுன்னைக்கு ஆத்தோட விட்டுட்டேன்”… என்று கூறினாராம். இதுபோன்ற மூடச் செயல்களால் எத்தனை கருவூலங்கள் கரைந்தும், செந்தீயில் பொசுங்கியும் போயிருக்கும் என்று எண்ணி உயிர் உருக கலங்கினார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இவற்றையெல்லாம் கடந்துதான் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற நூலை 1887-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். ஒரு நல்ல சிறந்த இலக்கியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டோம் என்று அகமகிழ்ந்தார்.

1906ம் ஆண்டு தமிழ் தாத்தா தமிழ்நூலகம் உ.வே.சா.அவர்களுக்கு ‘மகா மகோ பாத்தியாய’ என்ற பட்டத்தை இந்திய அரசு வழங்கிய போது பாரதியார் அவரைப்பற்றி பாடிய வரிகள் இவை.

“ நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே”.

இவ்வாறு தமிழ் அறிஞர்கள் எல்லாம் சிரமப்பட்டு போட்டுமுடித்து கட்டிக்காத்து தந்த இந்தத் தமிழ் வீதி வழியாக நாம் சங்க காலத்துக்குள் புகுகிறோம்.


Image

Image

Image

அதோ ஒளைவையில் குரலும் குடிலும் தூரமாய் தெரிகிறது……

சங்ககாலத்து ஊருக்குள் நுழைகிறோம்.






Sunday, March 9, 2014

இலக்கிய சந்திப்பு - 17 - ஐ முன் வைத்து: 8.3.14ல் சங்க காலத்தில் ஓளவை என்றொருத்தி.....



பெண்கள் தின வாழ்த்துக்கள்!


உலகத்தில் நலிந்த; பாதிக்கப்பட்ட; பெண் என்ற காரணத்தினால் பாதிப்புக்குள்ளான - உள்ளாகிக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களையும் இந் நாளில் நினைவு கூருவதோடு அவர்களுக்காக அவர்கள் பாதையில் தடைக்கல்லாய் இருக்கும் ஒரு சிறு கல்லையாவது நகர்த்துவோம் என இந் நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

அது அவர்கள் மனதில் ஒரு புத்துணர்ச்சியை - வாழ்வின் மீதான பற்றை - ஒரு நம்பிக்கையை ஊட்டுவதாக இருந்தால் கூட அது ஒரு கல் நகர்த்தல் தான்.

இலக்கிய சந்திப்பு - 17 -

இந்த நிகழ்வு நடந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. இது சம்பந்தமான பதிவு இரண்டு பகுதிகளாக விரித்து எழுதியது இன்னும் Draft வடிவத்திலேயே இருக்கிறது.

அதற்குக் காரணமும் இருக்கிறது.

அன்றய தினம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தவர் ‘குறுமுனி’ தனபாலசிங்கம் ஐயா அவர்கள். இலக்கியத்தை அதன் அழகை - சுவையை - ரசத்தை - அதைத் தரும் பாங்கை - அந்த மனிதரிடம் இருக்கும் ஆளுமையை - மொழி வசீகரத்தை - பன்மொழிப் புலமையை - எல்லாவற்றுக்கும் மேலாக மேன்மையான மனிதப்பண்பை - எதைச் சொல்வது என்பது எனக்குள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டி இருந்த ஒரு கேள்வி.

(ஐயா அவர்கள் நம் உயர்திணை அன்பர்களுக்காக  உவந்தளித்த ”சிலப்பதிகார சிந்தனைகள்” கேட்கக் கேட்க அந்த மனிதர் பால் மதிப்பும் இலக்கியத்தின் பால் தீரா பெருமையும் மேலோங்கிய வண்ணம் உள்ளது)

எடுத்தாண்ட விடயத்தலைப்பு “ சங்க காலத்து ஒளவை”

எப்போதோ எங்கோ வாசித்தேன். ஒரு சிறந்த கலைப்படைப்பு வாசகனை கலையாளி ஆக்கி விடுமாம்.

அன்றய நாளும் அவ்வாறே ஆனது. அவர்  காட்டி விட்டுப் போன இலக்கிய காட்சிகள் நம்மை மூலப்படைப்புகளை வாசிக்கத் தூண்டி விட்டன. அது வேறெங்கோ என்னை இழுத்தடித்துக் கொண்டு போய் விட்டன. ஆற்றோடு போகும் சருகு போல் என கணியன் பூங்குன்றனார் வாழ்க்கையை வர்ணித்தது போல...

 "மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்"

என்பார் அவர்.

இலக்கிய சந்திப்பு - 17 -  கிளப்பி விட்ட சிந்தனைகள் - அதனை எழுத்துக்குள் இழுத்து வருவதன் சிரமங்கள் மற்றும் தனிப்பட்ட வேலைப்பழுக்கள் போன்ற இன்ன பிற காரணங்கள் இப்படியாகத் தள்ளிப் போட மேலும் சில காரணங்களாயிற்று.

“எல்லாம் நன்மைகே” இல்லையா?

இன்று பாருங்கள் சர்வதேச பெண்கள் தினம். சந்திப்பில் நாங்கள் கண்டதோ சங்ககாலத்தில் கம்பீரத்தோடு இலக்கிய நடை போட்ட ஒளவை!

பெண்கள் தினத்துக்கு இந்த பதிவு பொருத்தமாயிற்றென்பதால் இலக்கிய சந்திப்பு பற்றிய இரண்டாம் பாகம் முதலாவதாக இப்போது!

.....................................

ஊருக்குள் நுழைகிறோம்.

முறம் எடுத்து புலி விரட்டிய பெண்ணும் முல்லைப்பூவோடு கோவித்துக் கொண்ட பெண்ணும் எதிரே கம்பீரமாய் வரும் பிசிராந்தையரும் செவிலித்தாய் விரட்ட விரட்ட சாப்பிடாமல் ஓடித்திரிந்த மகள் எப்படி கனவன் வீடடைந்து வறுமையிலும் செம்மையாய் வாழ்கிறாள் என வியந்து நிற்கும் தாயாரும்,(நற்றினை 110)

‘சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி,
மருகில் பெண்டிர் அம்பல் தூற்’ (149 நற்றினை) றிய படி புறம் பேசும் பெண்களுமாக ஒரு பக்கமும்  இன்னொரு பக்கம், தான் வளர்த்த புன்னை மரத்தை தன் தங்கையாக நினைத்து அம்மரத்தின் கீழ் தலைவனைக் காண நாணமுறும் பெண் இன்னொரு பக்கமாக (நற்றினை172) இருக்கிற ஊர் அது.

சில பல வீடுகளில் மாப்பிள்ளைமார் - அது தான் கணவர் மார் - பரத்தைகளிடம் போய் விட்டு வீடு திரும்புகிறார்கள். வரும் போதே சமாதானத்திற்காக சொந்தக்காரரையும் அழைத்து வருகிறார். இந்த அப்பாவித் தலைவி சொந்தக்காரரை கண்ட மாத்திரத்திலேயே அகமும் முகமும் மலர சமையல் செய்யத் தயாராகி விட்டாள், அவன், அந்தக் கள்வன் உள்ளூர ‘சரி இனி எல்லாம் சுகமே என உள்ளூர மகிழ்ந்து போகிறான். இப்படியும் ஒரு சிறுகுடிலுக்குள் நடக்கிறது காட்சி. (நற்றினை120) இன்னொரு இடத்து தலைவனோ வீட்டுக்கு வரும் போதே முன் ஜாக்கிரதையாக முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த புதல்வனைத் தூக்கிக் கொண்டு மனைக்குள் நுழைகிறான்.(நற்றிணை 250)

காதலை தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள் ஒரு காதலி இப்படி, எடியே, ’நான் பிரிவினால் சாகப்போகிறேன். நான் சாவதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அதற்குப்பிறகு நான் மீண்டும் பிறக்கும் போதும் அவன் என்னை மறந்துவிடுவானோ என்று தான் எனக்கு அச்சமாக இருக்கிறது’  (நற்றினை 397) என்கிறாள் அவள்.

குறுந்தொகைப்பெண்கள் அம்மா மாரிடம் காதலுக்காக கோலினால் அடி வாங்கி இருக்கிறார்கள்.  அடியே! உன் மனதை கவர்ந்து உன் உடலைத் தீ ண்டிப் போன காதலனை அறிவாயா என்று கேட்டால் மலைக்கு அந்தப்பக்கம் தான் இருக்கிறான் என்று சமாதானம் சொல்கிறாள், அடி மோட்டுப் பெண்ணே, முகவரி தெரியாமலே காதலித்திருக்கிறாயே இப்ப என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டால் அவனை விட்டுவிடுவேனா என்ன? ஊரூராக நாடுநாடாகவேனும் போய் தேடி கண்டுபிடித்து விட மாட்டேனா என வீம்பு பேசுகிறாள்.  இப்படி,

“நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ? “  - வெள்ளி வீதியார்; நற்றினை 130 -

என்ன நிலத்துக்கு கீழ நாக கன்னியரத் தேடிப் போகப்போறாரோ? வானம் ஏறி மேல வான் மகளிரத் தேடிப் போகப்போறாரோ? கடலேறி நாக கன்னியிட்ட போகப்போறாரோ? இங்கனேக்க நாட்டுக்குள்ளேயும் ஊருக்குள்ளேயும் தானே இருக்கப் போகிறார் என்று ஒரு வித நாட்டாண்மையோடு வருகிறது பதில்.

 அடியே, அவன் உன்னைத் தெரியாது என்றால் என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டால் ‘அவன் அப்படிச் சொல்ல முடியாதே; நம் சந்திப்புக்குச் சாட்சியாக நாரை ஒன்று நின்றதே என்கிறாள்.

(சங்க காலத்துக்கு முன்னால் இளமகளிரை பிறர் கவர்ந்து செல்லாமல் பாதுகாக்க அவளுடய இடுப்பில் கயிற்றைக்கட்டி மற்ற புறக்கயிறை தங்கள் கையில் தாய்மார் வைத்திருந்தார்கள். இரவு நேரத்தில் அவர்களின் கால்களில் கயிறுகட்டிக் காத்திருந்தார்கள். நாகரிகம் முதிர்ந்த காலத்தில் இடுப்புக்கயிறு மேகலையாகவும் (ஒட்டியாணம்) கால்கயிறு சிலம்பாகவும் மாறியது.பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு பெண்ணின் கால் சிலம்புகளைக் களற்றும் சடங்கு ‘சிலம்புக்கழி நோன்பு’ என்றழைக்கப்பட்டதென பலசுந்தரம் கூறுகிறார். ) (தமிழ் அவுஸ்திரேலியன் பெப்பிரவரி 2014 பக்; 77 ‘காதலைத் தின்ற சங்கப் பெண்கள்; பிரபஞ்சன்)

இப்படியான பெண்கள் கூட்டத்துக்குள் ஒளைவை என்பவள் யாராக இருக்கும்?ஒளவை என்பவள் இவளாக இருக்குமோ அவளாக இருக்குமோ என மனம் அலைபாய ஒளவை என்பவள் இவ்வாறெல்லாம் இல்லை என்ற படியே எம்மை இன்னும் இன்னும் நடத்தி ஊருக்குள் கூட்டி வந்தார் ஐயா.

அப்படி என்றால் எப்படி இருப்பாள்? ஒளவையார் திரைப்படத்தில் வந்த சுந்தராம்பாள் மாதிரி தெய்வீக முகப்பொலிவோடும் நெற்றி நிறைய நீறோடும் சற்றே வளைந்த முதுகோடும் பொல்லூன்றி வருவாளோ?

அப்படியும் இல்லை என்றார்.அவர் அறிமுகப்படுத்தப்போகிற ஓளவை எப்படியானவள் என காண ஆவல் கொண்டோம்.

1. அரசரோடு கன கம்பீரமாக சரியாசனம் இருந்தவள். தமிழ் கொடுத்த இருக்கை அது.

2. அரசனுக்காய் தூது போய் பெண்ணில் லாவகத்தோடு பெருமையை மிடுக்கோடு சொல்லி வந்தவள்

3. ஏழைகளுக்கு வழிகாட்டி வாழ வழிவகை சொன்னவள்.

4.ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என உயர்குடி அரசனோடும் சமமாய் நின்று காட்டியவள்.

5. வரலாற்றில்; இலக்கியத்தில் ஒரு பெண்ணாய் தன்னைப் பதிந்து கொண்டவள்.

இவள் மூதாட்டி இல்லை. திருநீறுக்குள் தன்னை மறைத்துக் கொண்டவள் இல்லை. தமிழ் ஒளி வீச கம்பீரமாய் வாழ்ந்து காட்டிப் போனவள்.அவளுடய பெயரை புனை பெயராக வைத்துக் கொண்டு பின் வரும் நூற்றாண்டுகளில் மேலும் இரண்டு ஒளவைகள் வந்தார்கள்.

ஒருத்தி சோழர்காலத்தில் வாழ்ந்தவள்.கம்பர் காலத்துக்கு சமகாலத்தில் வாழ்ந்தவள்.இவளுடய புலமைக்கு அவளுடய நிந்தாஸ்துதிப் பாடல் ஒன்றே போதும். ( அவலட்சனம் என்பதற்கு அவள் சொன்ன சொற்பதம் எட்டேகால் லட்சணமே! ஏன் தெரியுமா தமிழ் எண்ணில் 8 என்ற இலக்கத்தை சுட்டுவது ‘அ’ கால் அளவைச் சுட்டுவது ‘வ’ அவலட்சணமே என்பதற்கு அவள் எடுத்தாண்ட அடி எட்டேகால் லட்சணமே! எப்படி இருக்கிறது இந்த நிந்தாஸ்துதி! )(ஞானம் பெப்பிரவரி 2014 ‘பரனில் கண்டெடுத்த பைந்தமிழ் கருவூலங்கள்; பாலாபக்கம்) அடுத்த ஒளைவை கிட்டத்தட்ட 16ம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவள். இந்த ஒளவை தான் ஆத்திசூடி கொன்றை வேந்தன் எல்லாம் பாடி ஒளவை பாட்டியாக மனதில் நிலைத்திருப்பவள்.

நாங்கள் காணப்போவதோ சங்க காலத்து original ஒளவை! இவளைத்தான் நாம் தமிழுக்குள் தொலைத்து விட்டோம்.பண்பாட்டுக்குள் தவற விட்டு விட்டோம். அவளை இலக்கிய சந்திப்பில் புழுதிக்குள் கிடந்து கண்டெடுத்துத் தந்தவர் ஐயா அவர்கள்.

இவளுடய பாடல்கள் அகநானூறு, புறநானூறு,நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் இருக்கிறது. தன்னை ஒரு தமிழ் பெண்ணாக வரலாற்றில்; இலக்கியத்தில் நிலை நிறுத்திப் போனவள் ஒளவை.

அதையிட்டும் பெண்கள் சற்றே பெருமைப்பட்டுக் கொள்லலாம்.

இவள் எப்படி இருப்பாள் என்று காண ஆவலாய் இருக்கிறது தானே! அவள் புறநானூறு - 89 இல் தன்னை வர்ணிக்கிறாள் இப்படி.

பாடல் இது தான்.

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்ஐயும் உளனே!


உரை: “மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னை விழித்துக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.

இப்பாடலில் இருந்து இவள் ஒரு விறலி என்றும் (பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டுபவள் விரலி)  மைதீட்டிய கண்களும் வட்டமான நெற்றியும் கொண்டவள் என்றும் எடுப்பான இடுப்பில் அழகிய அணிகலன்களை அணிந்திருப்பவள் என்றும் இப்பாடலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அஞ்சியும் ஒளவையும்:

இவள் உயர்குடி மக்கள் இடத்தில் மிகுந்த செல்வாக்கு. தமிழ் கொடுத்த இறுமாப்புடன் கூடிய செல்வாக்கு அது. அஞ்சியும் ஒளவையும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவனோ அரசன். அவளோ தமிழ் புலமை வளர்த்தெடுத்த தமிழ் சீமாட்டி. “இரு பேராண்மை செய்த பூசல்” என ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆழுமைப்பண்பை பேராண்மை என்று விழித்து பெண்ணுக்கு ஆழுமைப்பண்பில் சம அந்தஸ்து கொடுத்தவள். அப்படியே வாழ்ந்தும் காட்டியவள். அதனாலே அவளுக்கு அரசனோடு சரியாசனம்.அரசனோடு சேர்ந்து கள்ளடிக்கிற அளவுக்கு சினேகிதம் என்றால் பாருங்களேன்! அந்த சினேகத்தைச் சொல்கிறது இப்பாடல். (புறம் 236)

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!

பொருள் என்னவென்றால்:

சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பலரோடும் பகிர்ந்து உண்பான். பெருமளவு சோறு இருந்தால், அதையும் மிகப் பலரோடு கலந்து உண்பான்.

எலும்போடு கூடிய தசை கிடைத்தால் அதை எமக்கு அளிப்பான். அம்புடன் வேல் தைக்கும் போர்க்களமானால் தானே சென்று நிற்பான். நறுமணமுள்ள தன் கையால் புலால் மணக்கும் என் தலையை அன்போடு தடவுவான். இவையெல்லாம் கழிந்தன. அவன் மார்பைத் துளைத்த வேல் பெரிய பாணர் கூட்டத்தினரின் அகன்ற பாத்திரங்களை ஊடுருவிச் சென்று, இரப்போர் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் துன்பம் மிகுந்த கண்களில் ஒளி மழுங்க, அழகிய சொல்லும் ஆராய்ந்த அறிவும் உடைய புலவர்களின் நாவிலும் சென்று வீழ்ந்தது.

எமக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் இப்பொழுது எங்குள்ளானோ? இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள தேனொழுகும் பெரிய பகன்றை மலரைச் சூடுவோர் இல்லாததுபோல் பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர் மிகப் பலர்.

இந்த இடத்தில் இவளுடய கவிப்புலமையப் பாருங்கள்! அம்பு பாய்ந்து அஞ்சி இறந்து பட்டான். அந்த அம்பு புறக்கண்ணுக்குத் தான் அஞ்சியைத் தாக்கியது. ஆனால் அதன் தாக்கம் அல்லது அது உண்மையாக தாக்கியது எங்கெங்கெல்லாம் தெரிகிறதா? அது பாணர் கூட்டத்தின் அகன்ற பாத்திரங்கள் – பாணர்களின் அன்றாட வாழ்க்கையை (அவன் கொடை கொடுத்து வந்திருக்கிறான்) இரப்போர் கைகளைத் துளைத்து – இனி இரப்பவர்களுக்கு கொடுப்பார் எவரும் இல்லை. சுற்றத்தாரின் கண்களில் ஒளி மழுங்க – சுற்றத்தாரும் இனி கம்பீரமாய் பவனி வர முடியாத படிக்கு; புலவர்களுடய நாவிலும் சென்று வீழ்ந்திருக்கிறது அந்த அம்பு. இனி புலமையும் அறிவும் உடைய  புலவர்கள் நா எழுந்து பாடி இன்புறவும் சாத்தியமில்லை. என்ன அழகாய் தெளிவாய் சுருக்கென தைக்கத் தக்கதாய் சொல்லி இருக்கிறாள் பாருங்கள்.

இப்பாடலில் இருந்து சமபந்தி போசனத்தை செய்தது மாத்திரமல்ல நறுமணம் உள்ள தன் கையால் புலால் மணக்கும் அவள் தலையை வருடிக் கொடுக்கிற அளவுக்கு  அன்பு பாராட்டுகிற நண்பனாகவும் அஞ்சி இருந்திருக்கிறான் என்று தெரிகிறது இல்லையா?

இந்த இடத்தில் நம் கார்த்திகா - நாட்டியக்கலாநிதி - அவர் நாட்டியப்பாடசாலை நடத்துபவர். மேலும் நாட்டியக்கலை பற்றிய புத்தகங்கள் பல வெளியிட்டவர். இப்போதும் புதிய ஒரு நாட்டியகலை சம்பந்தமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருப்பவர். அவர்  “நித்ய சுமங்கலிகளின்” வேரை ஆராய்ந்து கொண்டிருப்பவர். இந்த இடத்தில் ஒளவை அதன் மூலத்தில் இருந்திருப்பாளோ என்பது அவரது சந்தேகமாக இருந்தது.

அதற்கு இல்லை என்பதும் இது தூய நட்பே என்பதும் ஐயா அவர்களின் பதிலாக இருந்தது. (அஞ்சி தன் அத்தை மகளை மணந்திருந்தான் என்றும் அவளும் பாவன்மை படைத்தவளாக இருந்தாள் என்றும் ஒரு கிடைத்திருக்கிற தகடூர் யாத்திரை என்ற நூலில் ஒளவை சொல்லி இருக்கிறாள் என்று ஓர் இணையச் செய்தி கூறுகிறது.) அதே நேரம் நெடுமான் அஞ்சிக்கு பொகுட்டெழினி என்றொரு மகன் இருந்து தந்தை காலமான பின் இவன் அரசு கட்டில் ஏறும் வரை ஒளவை அவர்களோடு நட்புறவோடு இருந்ததற்கும் சான்றுகள் உண்டு)

இப்படி எல்லாம் உரிமையும் நட்பும் அன்புறவும் கொண்டிருந்தவளுக்கு ஒரு நாள் ரோசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அது வெகுமதி அளிக்க தாமதமாகி விட்ட கோபம். தமிழ் பொங்கி எழுந்து விட்டது. தன்மான உணர்வும் தான். பாடல் பிறந்தது இப்படி:

“வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“ (புறம் 206)

இப்பாடலின் பொருள்.

வாயிற் காப்போனே! வாயிற் காப்போனே!
வள்ளன்மை மிக்கவர்களின் செவிகளில் நல்ல சொற்களை விதைத்து,
தமக்குத் தேவையான பரிசிலை விளைவிக்கும் ஆற்றல் மிக்க உள்ளத்தைக் கொண்ட பரிசிலர்கள் எப்போதும் செல்லும் அடைக்காத வாயிலை உடையவனே!

தலைவனாகிய அதியன் தான் தன் தரம் அறியமாட்டானா?
இல்லை என் தரத்தை அறியமாட்டானா?

அறிவும், புகழும் உடையவர்கள் மாய்ந்தால் உலகம் வறுமைப்படுவதில்லையே!

ஆதலால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம்.
எங்கள் இசைக்கலங்கள் கொண்ட பைகளைக் கட்டிக்கொண்டோம்.(இவள் விரலி என்பதற்குஇதுவும் ஒரு சாட்சி)

மரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு (கோடாலியோடு) காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எப்படி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி எத்திசை சென்றாலும் அத்திசையில் சோறு கிடைக்கும்.

என்ன ரோசம் பாருங்கள். இது தமிழ் கொடுத்த தீரம்தானே?

(பிறகு நெடுமான் அஞ்சி வெகுமதிகளைக் கொடுத்தான் என்றும் அவள் பிரிந்து போகின்ற போது அவளுடய பிரிவாற்றாமல் கொள்ளைக்காரர்களை அனுப்பி அவள் பொருளைச் சூறையாட வைத்து அவளைத் திரும்பி ( கோபத்தோடு ) வரச் செய்தான் என்றும் கதை உண்டு. பிரிவாற்ற முடியா அத்தனை நேசம் அவனுக்கு இவள் பால்.

இவன் இவளுக்கு நெல்லிக்கனி ஈந்தது பற்றி சொல்ல வேண்டியதில்லை தானே!

பெண்கள் - குறிப்பாக ஒளவை அரசகாரியமாக தூது போயிருக்கிறாள். அது அரச தூது. போரை நிறுத்தும் வல்லமை கூட பெண்ணுக்கும் தமிழுக்கும் சங்கத்தில் வாய்த்திருந்ததற்கு இவ் ஒளவை சாட்சி. இவள் ஒரு தடவை தொண்டமான் என்பானிடம் போய் அஞ்சியைப்பற்றிச் சொல்கிறாள் இப்படி.

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.

பொருளை உரை வழி இணையம் இப்படித்தருகிறது.

தொண்டைமான் : வாருங்கள் புலவரே...
தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவரே தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது...

ஔவையார் : எனக்கும் மகிழ்ச்சி மன்னா...

தொண்டைமான் : அதியனின் நாட்டிலிருந்த தாங்கள் வந்திருக்கிறீர்கள்..
எனது வீரம், படை பலம் ஆகியவற்றைத் தாங்கள் அறிந்து கொள்ளுவது அவசியமாகும்...
வாருங்கள்...
பாருங்கள்.......
எனது படைக்கருவிகள் எவ்வளவு புதிதாகவும் கூர்மையாகவும் உள்ளன.............?

ஔவையார் : ஆம் நீ சொல்வது உண்மை மன்னா..... !

தொண்டைமான் : எப்படி இருக்கிறது எனது படைக்கருவிகள்...

ஔவையார் : இக்கருவிகள் மயிலின் தோகையால் அழகு செய்யப்பட்டு மாலை சூட்டப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலையுடைய அகன்ற மாடத்தில் உள்ளன..
பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது.

தொண்டைமான் : சரியாகச் சொன்னீர்கள்...
அதியனின் படைக்கருவிகளை விட எனது படைக்கருவிகள் எவ்வளவு புதியன, கூர்மையானவை என்பதைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்....!

ஔவையார் : ஆம் மன்னா...

உனது படைக்கருவிகளைப் போல அதியனின் படைக்கருவிகள் இல்லை. அவனுடைய கூரிய நுனியுடைய வேல் முதலான ஆயுதங்கள் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து கொல்லனது பணிக்களரியில் எந்நாளும் கிடக்கின்றன.

ஔவையார் பாடலின் உட்பொருள்...

ஔவையார் பாடலின் பொருள் மேலோட்டமாகப் பார்த்தால் தொண்டைமானைப் புகழ்வது போலவும் அதியனை இகழ்வது போலவும் அமையும்.

தொண்டைமானின் படைக்கலங்கள் அழகுற விளங்குகின்றன என்னும் புகழ்ச்சிக்கு.......

நீ அதிகம் போர்க்களம் காணாதவன்....
ஆனால் அதியன் போர்க்களத்தில் தான் எந்நாளும் இருப்பவன்...

உனது கருவிகள் மாலை சூட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவன் எந்நாளும் போர் புரிவதால் அவனது படைக்கருவிகள் யாவும் கூர்மையின்றி கொல்லன் களரியில் தான் கிடக்கும் என்பதே உட்பொருளாக அமைகிறது..

ஏழை விறலிக்கு  வழிகாட்டிய ஒளவையை இப்போது பார்ப்போம்.

அதியமான்பால் பரிசில் பெற்றுச் சென்ற ஒளவையார், வழியில் ஒரு
இடத்தில் தன் சுற்றத்தோடு  தங்கியிருந்த விறலி யொருத்தியைக்
கண்டார். அவள் தான் உற்று வருந்தும் வறுமையைத் தெரிவித்து,
“கவிழ்ந்துகிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்?”
என ஏங்கியிருப்பது கண்டு, “சில்வளை விறலி, சேய்மைக்கண்ணன்றி
அண்மையிலேயே நெடுமானஞ்சி உள்ளான்; அவன்பாற் செல்வாயாயின்,
அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருள் நிரம்ப உடையன்;
அலத்தற்காலையாயினும் புரத்தல் வல்லன்; அவன் பாற் செல்க”என,
இதனால் ஆற்றுப்படுத்துள்ளார்.

இது தான் அந்தப்பாடல்.

 ஒருதுலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
சுரனமுத லிருந்த சில்வளை விறலி
செல்வை யாயிற் சேணோ னல்லன்
 முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே.  (103)

இவளை  இப்போது

1. அரசரோடு கன கம்பீரமாக சரியாசனம் இருந்தவள். தமிழ் கொடுத்த இருக்கை அது.

2. அரசனுக்காய் தூது போய் பெண்ணில் லாவகத்தோடு பெருமையை மிடுக்கோடு சொல்லி வந்தவள்

3. ஏழைகளுக்கு வழிகாட்டி வாழ வழிவகை சொன்னவள்.

4.ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என உயர்குடி அரசனோடும் சமமாய் நின்று காட்டியவள்.

5. வரலாற்றில்; இலக்கியத்தில் ஒரு பெண்ணாய் தன்னைப் பதிந்து கொண்டவள்.

என்று சொல்லலாமில்லையா?

எங்கே தொலைத்தோம் இன்றிவளை?

இப்பாடகளூடாக இவளைக் நமக்கு அடையாளம் காட்டியது யாவும்  இலக்கிய வித்தகர் ’குறுமுனி’தனபாலசிங்கம் ஐயா அவர்கள்.

ஐயா அவர்களுக்கு நன்றி

இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்.

( பிற்குறிப்பு: நேரமின்மை கருதி பாடல்களும் உரையும் இணையத்தில் இருந்து பெறப்பட்டிருக்கின்றன. நன்றி இணையம்)










Saturday, March 1, 2014

வாழ்க்கையின் அடிப்படைகள்; பார்த்ததில் பிடித்தது