அண்மையில் ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன்.
அதில் ஓரு உளவியலாளர், இரண்டு பிளஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூடி விவாதித்த விடயம் அமெரிக்காவில் விவாகரத்துக்குப் பின்னர் பெண்கள் பிளாஸ்டிக் சத்திரசிகிகிச்சை நிபுணர்களை நாடி பல ஆயிரக்கணக்கான டொலர்களைச் செலவளித்து தம் உடலைத் திருத்திக் கொள்ளுகிறார்களாம். ஏற்கனவே மனநிலையில் இலகுவாக உடைந்து போகும் தன்மையில் உள்ள இத்தகைய பெண்களிடம் இந் நிபுணர்கள் உரையாடி மேலும் மேலும் உடல்திருத்தங்களைச் செய்யக் கோரி பல் ஆயிரக் கணக்கான டொலர்களைக் கறக்கிறார்களாம்.
மிக சூடாகவும் சுவாரிசமாகவும் நடந்த இந்த விவாத இறுதியில் உளவியல் நிபுணர் அமெரிக்க விவாக ரத்தான பெண்களுக்கு விடுத்த கோரிக்கையும் விண்ணப்பமும் கீழ் கண்ட 3 விடயங்களுக்குள் அடங்கி விட்டிருந்தது.
1. நீங்கள் உண்மையாக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். அது உங்கள் முகத்தில் இயல்பாக ஜொலிக்கட்டும்.
2.உங்கள் நடைஉடை பாவனையில் சீரான நடைமுறையைக் கொண்டு வாருங்கள். சரியான நேரம் சரியான உணவு, அளவான தூக்கம், பொருத்தமான உடற்பயிற்சி, நல்ல நண்பர்கள், செய்கின்ற காரியத்தில் முழுமையான ஈடுபாடு, இவற்றை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.
3. நீண்டகாலமாக திருமணத்துக்கு முன்னர் செய்ய வேண்டும் என்றிருந்த; பின்னர் விடுபட்டுப் போய் விட்ட நீண்ட அந்தக் கனவை நனவாக்குங்கள். அது உங்களுடய தன்னம்பிக்கையை மீட்டுத் தரும். அந்தப் பயணத்தில் உங்களுக்கான வாழ்வு எழுதப்பட்டிருக்கக் காண்பீர்கள்.
பொதுவாக பார்த்தால்,
எமக்கு தன்னம்பிக்கை குறைகிற போது எதிர் மறை எண்ணங்கள் நம்மைப் பீடிக்கின்றன. அவை சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் விபரீத கற்பனைகளையும் மிக இலகுவாகத் தூண்ட வல்லனவாக இருக்கின்றன.
இதனை விளக்க ஒரு முல்லா நஸ்ருதீனின் கதை ஒன்று சொல்வார்கள். அதன் சுருக்கம் இது தான். முல்லா வீட்டில் பணம் திருட்டுப் போயிற்று. முல்லா அது பக்கத்து வீட்டுக் காரன் தான் திருடியது என பலமாக நம்பினார். பக்கத்து வீட்டுக் காரரின் நடவெடிக்கையை முல்லா உன்னிப்பாக அவதானித்தார். பக்கத்து வீட்டுக் காரரின் நடவெடிக்கைகள் யாவும் அவரை ஒரு திருடனாகவே காட்டிற்று. பின்னர் முல்லா அப்பணம் வேறொரு இடத்தில் வைக்கப் பட்டிருந்ததை தாமதமாக உணர்ந்தார். இப்போது முல்லா பக்கத்து வீட்டுக் காரரை கவனித்தார். அவரின் நடவெடிக்கைகள் யாவும் அவரைத் திருடனாகக் காட்டவில்லை. என்று அக்குறுங்கதை முடிகிறது.
கதையின் சுருக்க வடிவம் ”மனமே எல்லாம்” என்பததே! ஆனால் கண்ணுக்குப் புலனாகாத இந்த அந்தரங்கங்களின் இருப்பிட அங்கமான மனம் எங்கே கேட்கிறது? முதலில் எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லையே! என்று அங்கலாய்க்கிறீர்களா? அதுவும் சரி தான்.
எப்படி ஒரு விடயத்தை நாம் அணுகுகிறோம் என்பதும்; எமது வாழ்வியல் விழுமியச் சிந்தனைகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அதில் எவ்வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும்; எவ்வளவு பலமாக நம்மை அது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என்பதும் பயம் தரும் விடயமாக இருக்கிறது.
”அறம் - பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிய” பண்பாட்டில் அது கடினமும் கூட.
மாற்றங்கள் தவிர்க்க முடியாதது என்ற போதும் மாற்றங்கள் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு ஆண் திருமணம் செய்யும் போது அவள் மாற மாட்டாள் என்று திருமணம் செய்கிறாராம். ஆனால் அவள் மாறி விடுகிறாளாம். ஒரு பெண் அவர் மாறுவார் என்ற நம்பிக்கையோடு திருமணம் செய்கிறாளாம். ஆனால் அவர் மாறிவிடுவதில்லையாம் என்று அண்மையில் எங்கோ வாசித்தேன்.
நம் நம்பிக்கைகளே நாங்கள். நம் நம்பிக்கைகளே நம்மை ஆழுகின்றன, வழி நடத்துகின்றன. நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும் போது - இது வரை நாம் சரி என நினைத்த ஒன்றை - இது தான் சரி என்று நினைத்த ஒன்றை ஒருவர் இலகுவாக உடைத்து வெளியேறும் போது நாம் நொருங்கிப் போகிறோம். சுக்கு நூறாக நம் வாழ்வு சிதறிப் போவதை காண்கிறோம்.
இங்கு தான் வெறுப்பு,பொறாமை, பழியுணர்வு, நிர்கதி நிலை, என்னசெய்வதென அறியா இடர் இவைகள் எல்லாம் வந்து சேர்கின்றன.
ஒவ்வொருவரிடமும் நல்ல இயல்புகளும் தீய இயல்புகளும் கலந்தே இருக்கின்றன. பலர் தம் அறிவு, ஆற்றல், சூழல், குடும்பம், சுய சிந்தனை, குடிப்பிறப்பு,வாழ்விடம், சமூகம், உயிரியல் மூலக்கூறுகள், பரம்பரை அலகுகள், ஹோமோன்களின் தாக்கம், வயது, அனுபவம் போன்ற பல காரணிகளின் தாக்கத்தால் தம் குண இயல்புகளைத் தீர்மானித்துக் கொள்ளுகிறார்கள்.
அதன் விளைவினால் விளைந்த வேறொருவர் இன்னொரு தனி நபரைப் பார்க்கின்ற போது தன் அடையாளங்கள் நம்பிக்கைகளின் ஊடாக ஒருவரை நல்லவர் எனவும் தீயவர் எனவும் தீர்மானித்துக் கொள்ளுகிறார்கள்.
இன்னொரு விதத்தில் நல்லவரெனவும் தீயவர் எனவும் எவரும் இல்லை எனவும் வாதிடலாம். தீயவர் எனக் கருதப்படும் ஒருவர் வேறொரு நபருக்கு அவரின் மனக்கண்ண்டியில் நல்லவரெனவும் தென்படலாம்.
மனிதர்கள் வளர்ந்து கொண்டும் மாறிக்கொண்டும் இருப்பது இயற்கை. சில இடத்தில் வளர்ச்சி நிலை, மாற்ற நிலை ஒருவருடய வேகத்தினதும் திசையினதும் போக்கில் இருந்து வேறுபட்டு அமைகின்ற போதும் சிக்கல்கள் தோன்றுகின்றன.
இவை காலப்போக்கில் தொடர்பாடலைப் பாதிக்கிறது. எடுத்ததற்கெல்லாம் கோபம் வருகிறது. ஈர்ப்பின்மையையும், அதிர்ப்தியையும் சண்டைகளையும் முரண்பாடுகளையும், கோபதாபங்களையும் அவை விளைவிக்கின்றன.
அது நிற்க,
ஓர் உறவு சிறந்ததென்பதையும் நமக்கு மிகப் பொருத்தமானது என்பதையும் எவ்வாறு நாம் கண்டறியலாம்?
அந்த உறவு உங்களிடம் மறைந்தும் மறையாமலும் இருக்கின்ற சிறந்த இயல்புகளை வெளியே கொண்டு வருவதாக இருந்தால்; மகிழ்ச்சியை, சந்தோஷத்தை, பாதுகாப்பை, பெருமையை, தன்னம்பிக்கையை உங்களுக்கு ஏற்படுத்துவதாக இருந்தால் அது உங்களுக்குரிய உறவு!
மண்ணுக்குள் மறைந்திருக்கிற விதை மேலே மழைத்துளி விழுவதைப் போன்றது அது.
மாறாக வேதனையை, பொறாமையை, வெறுப்பை, விருப்பமின்மையை, கவலையை, சந்தேகத்தை, மனதுக்கு ஒரு படபடப்பை, பயத்தை அது தொடர்ந்து தருவதாக இருந்தால் -
அது தனிமனித சிந்தனை, பாரம்பரிய நம்பிக்கை, வாழ்க்கையைப் பார்க்கின்ற பார்வை என்பவற்றின் அடிப்படையில் அமைவதாக இருந்தால் அது உங்களுக்குரியதானதல்ல.
மனதுக்கு ஒரு விதத்தில் அந்த உறவு பிடித்திருந்ததாக இருந்தாலும் கூட!
ஆழ்ந்து பார்த்தால் அந்தப் பிடிப்பு கூட நம் தன்னநம்பிக்கையீனத்தின்; ஒரு அவநம்பிக்கையின்; ஒரு பாதுகாப்பின்மையில் பிடியில் அந்தப் பிடிப்பு அமைந்திருக்கக் காணலாம்.
’இரகசியமாகச் சொல்லப்படும்; செய்யப்படும் செயல்கள் யாவும் தவறானவை’ என்றார் காந்தி.
விலகி நடந்து பாருங்கள்!
ஒரு வித சுதந்திரம்; விடுதலை; கட்டுக்களில் இருந்து விடுபட்ட ஓருணர்வு; மனம் லேசான தன்மை; ஒரு வித சந்தோஷம் இவற்றை நீங்கள் உணர்வீர்கள்!
( அதே நேரம் நீங்கள் ஒருவரில் தங்கியில்லை என்பது எல்லையற்ற சுதந்திரத்தை தருவதால் ‘வேலியற்ற பயிரை மேய’ உதவிக் கரம் நீட்டிப் பலர் வரக் கூடும். இங்கு பெண்கள் பொறுப்பையும் தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் கூர் தீட்டிக் கொள்ள வேண்டும். “அவரவர் பயம் அவரவர் தர்மம்” என்பார் எஸ்போ. இந்த இடத்தில் தான் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.)
எல்லாவற்றையும் நீங்களாகவே உங்களுக்கே உங்களுக்கான கால அவகாசத்துக்குள் செய்து முடித்து விடுகின்ற போது தன்னம்பிக்கை மலரக் காண்பீர்கள்.
அது முகத்தில் புத்துணர்வையும் புன்னகையையும் தோற்றுவிக்கும். அந்தப் புன்னகை யாரும் பார்க்கிறார்கள் என்பதற்காகவாக அல்லாமல் இயல்பாக மலர்ந்து சத்தமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் வாசம் தரும் பூவைப் போலானதாக எப்போதும் இயல்பாக முகத்தில் மலர்ந்திருக்கும்
A happy woman is a beautiful woman.
Enjoy the simple things in life!
வாழ்க்கை என்பது என்ன ? எல்லாம் ஓர் அனுபவம் தான்! :)