Thursday, April 7, 2016

கண்டறியாத கதைகள் - 3 - புலிப்பல் பதக்கம்

ஆண்களின் கழுத்தினை அலங்கரிக்கும் புலியினுடய பல்லினை பதக்கமாகக் கொண்டிருக்கும் அணிகலன் இதுவாகும்.

தமிழ் பண்பாட்டு மரபில் வீரமும் காதலும் விதந்து போற்றப்பட்டு வந்ததைத் தமிழ் இலக்கியவரலாறு எடுத்துரைக்கும்.போரில் வெற்றி கண்டு வந்த இளைஞர்களைப் பெண்கள் விரும்பி மணம் செய்து கொண்டார்கள்.

ஆண்களும் தம்மை வீர வழி வந்ததைக் காட்டும் ஒரு மரபாகவே புலிப்பல் பதித்த ஆபரணங்களை அணிய ஆரம்பித்தனர். ஆரம்ப காலங்களில் ஆண்கள் வீரக் கழல், வீரக்கண்டை, சதங்கை, அரையணி,அரை நாண், பவள வடம்,தொடி, கங்கணம்,வீரவளை, கடகம், மோதிரம்,கொலுசு, காப்பு, பதக்கம்,வகுவலயம், கழுத்தணி,வன்னசரம், முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகிய அணிகலன்களை அணிந்தனர் என அறிய முடிகிறது. (மேற்கோள்:தமிழ் நாட்டு அனிகலன்: சாத்தான் குளம்,அ. இராகவன்)














இலக்கிய வரலாற்றில் புலிப்பல் 

ஆரம்ப காலத்தில் கழுத்தில் அணியும் அணிகளை எல்லாம் தாலி எனவே அழைத்தனர்.அச்சுத்தாலி, முளைத் தாலி,புலிப்பல் தாலி,ஐம்படைத்தாலி என அவை பெயர் பெற்றிருந்தன. ( இவ் ஐம்படைத்தாலியில் சங்கு,சக்கரம், வில், வேல், வாள் ஆகியவற்றின் உருவங்கள் இருந்தன. அவை அன்றும் குழந்தைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட்டன. இன்று அவை பஞ்சாயுதமாக குழந்தைகளுக்கு அணிவிக்கப்படுவது நோக்கத்தக்கது.) 




அகநானூற்றின் 54வது பாடல்”பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பி மணித்தாலி” எனக்குறிக்கும் வரியில் இருந்து  சிறார்கள் தம் கழுத்தைச் சுற்றி புலிப்பல் கோர்த்த  ஆபரண்த்தை அணிந்தது பற்றி அறியமுடிகிறது. 
பொன்னால் ஆக்கப் பட்ட இதில் புலிப்பல் கோர்க்கப்பட்டது .அதன் காரணத்தால் இது புலிப்பல் தாலி என அழைக்கப்பட்டது. 

குழந்தைகளின் கழுத்தில் புலிப்பல் கோர்க்கப்பட்ட ஆபரணத்தை அணிவித்தால் அது அவர்களைக் கண்ணூறினின்றும் காக்கும் என அவர்கள் நம்பியதைப் புறநானூற்றின் 374 வது பாடலின் 9வது வரி சொல்லி நிற்கிறது.”புலிப்பல் தாலி புன் தலைச் சிறார்” என வரும் வரி அதனை உறுதிப்படுத்துகிறது.(மேற்கோள்: செம்மொழித் தமிழ் இலக்கியம் உணர்த்தும் மக்களின் வாழ்க்கை முறைகள் பகுதி 2: முனைவர். சி. சேதுராமன்,இணைப்பேராசிரியர், தமிழ்துறை,மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை)

சிலப்பதிகாரத்தில் தெய்வ சக்தி கொண்ட சாலினி என்பவளை கொற்றவை போல அலங்காரம் செய்த போது எயினர் இன மக்கள் புலிப்பல் தாலி அணிவித்ததாக ஓரிடம் வருகிறது.அது கொற்றவையின் அணியில் ஒன்றெனச் சொல்லப்பட்டதால் புலிப்பல் தாலி ஒரு வீரத்தின் சின்னமெனக் கருதப்பட்டதாகக் கொள்ள இடமுண்டு. 

மேலும் சிலப்பதிக்காரம் “மறங்கொள் வரிப்புலி வாய் பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி  நிரை பூட்டி ..” (சிலப்பதிகாரம் 12,27, வரி 28) அதாவது அஞ்சாத வலிமையுடய புலியின் வாயைப் பிளந்து பெற்ற வெண்பற்களை ஒழுங்கான மாலையாகக் கோர்த்த புலிப்பல் தாலி  என வருவதில் இருந்து புலிப்பல் தாலியின் பின்னணியில் இருந்த வீரத்தை ஒருவாறு கண்டு தெளியலாம்.

திருத்தொண்டர் புராணம் ”இரும்புலி எயிற்றுத் தாலி குடையிடை மனவுகோத்து”  - எனச் சொல்வதில் இருந்து தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து தன் வீரத்தின் சின்னமாக ஆண் அதனைத் தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டான் என்பதை அறிய முடிகிறது. அதனை அவர்கள் புலிப்பல் தாலி என அழைத்தார்கள்.

தன் வீரியத்தைத்; தன் ஆற்றலை; வீரபராக்கிரமத்தை; கன்னிப் பெண்ணுக்கு  நிரூபித்து பெண்ணெடுத்த மரபு வழி வந்த தமிழின் அழகு அது! அதன் எச்சமாக இன்று மிஞ்சி இருப்பது இந்தப் புலிப்பல் பதக்கம் ஒன்று தான்.

புலிப்பல் பதக்கம் அணிதல் இன்று வரைத் தொடர்கிறது. புலிப் பல்லிற்குத் தங்கத்தினால் பூண் போட்டு அழகுக்காகக் கற்களும் பதிக்கப்பட்டு நீண்ட சங்கிலியில் அதைத் தொங்க விட்டு அதனை இன்று வரை ஆண்கள் பயன் படுத்துகிறார்கள். ஆனாலும் அதன் மரபு வழியான வரலாற்றுப் பாரம்பரியத்தை இன்றய சந்ததியினர் குறிப்பாக வெளிநாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகள் அறியாதவர்களாக வளருதல் வருந்தத் தக்கதன்றோ?

4 comments:

  1. [quote]தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து தன் வீரத்தின் சின்னமாக ஆண் அதனைத் தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டான் என்பதை அறிய முடிகிறது. அதனை அவர்கள் புலிப்பல் தாலி என அழைத்தார்கள்.[quote]புலிப்பல் தாலியின் இலக்கிய விளக்கத்துக்கு நன்றி......அந்தகாலத்தில் மிருகவதை பயங்கர‌மாக நட‌ந்திருக்கு....இப்ப மிருக வதை சட்டமிருப்பதால் ஆண்கள் நகைகடையில் வாங்கி அணிகின்றனர்...

    ReplyDelete
    Replies
    1. :) வணக்கம் புத்தன், வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
      அக்காலங்களில் அகம் புறம்; காதல் வீரம் அவ்வளவு தான். இப்போது வீரம் காட்டும் மரபு போய் அதன் எச்ச சொச்சமாக இந்தப் பல்லு மட்டும் எஞ்சி இருக்குப் போல!

      /இப்ப மிருக வதை சட்டமிருப்பதால் ஆண்கள் நகைகடையில் வாங்கி அணிகின்றனர்/

      இந்தக் காளை மாட்டை அடக்கும் ஜல்லிக் கட்டுக்கும் இந்த வீர மரபுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ?

      Delete
  2. சுவாரசியமான இலக்கிய மேற்கோள்களுடன் புலிப்பல் பதக்கம் குறித்த அருமையான தொகுப்பு. வீரத்தின் அடையாளமாக அக்காலத்தில் அணியப்பட்ட இவ்வணிகலன்கள், சில காலம் முன்புவரையிலும்கூட திரைப்படங்களில் அதிகமாகக் காண்பிக்கப்பட்டுவந்தன. என் தம்பி மனைவிக்குக் குழந்தை பிறந்தபோது அவனுடைய பாட்டனார் வீட்டிலிருந்து பரம்பரை நகையென்று பரிசாக வந்து அணிவித்தார்கள். நான் நிஜத்தில் பார்த்தது அப்போதுதான். :))) இப்போதைய தலைமுறை பற்றி சொல்லவா வேண்டும்! இப்படியொரு ஆவணப்பதிவைத் தொடரும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள் மணிமேகலா.

    ReplyDelete
  3. வணக்கம் கீதா :)
    ஒரு வீர மரபின் எச்ச சொச்சம்....

    புலிப்பல் தாலி என ஆண்கள் தம் ஆற்றலைக் காட்ட வந்த ஒன்றும்; பெண் சுயம்வரம் நடத்தி ஆணை தெரிவு செய்த முறையும் பிறகு எப்போது மருவி பெண்களுக்கு தாலி எனவும் ஆண்கள் பெண்ணைத் தெரிவு செய்வதுமாக மாறிற்று எனத் தெரியவில்லை கீதா.

    வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பல சுவாரிசமான சம்பவங்கள் அகப்படும் போல....

    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி கீதா.

    ReplyDelete