Saturday, November 26, 2016

தன்னுணர்வு


அண்மையில் எனக்கு மிகவும் பிடித்தமான இந்தக் கவிதையை மீண்டும் ஒரு தடவை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இது நீலாவாணன் என்ற இலங்கையின் கிழக்கத்தியக் கவி பாடி வைத்துப் போனது. ஒரு பாடும் மீனின் பெளர்ணமிப் பாடல் இது.

துயில்

இந்த உலகில்
இருந்த சில நாழிகையில்
எந்தச் சிறிய உயிரும்
என் ஹிம்சையினால்
நொந்தறியா...
யாருமெனை நொந்ததிலை" என்கின்ற
அந்த இனிய நினைவாம்....
அலங் கிர்தத் தாலாட்டுக் (கு)
என்னிதயம் தந்து...
பழம் பிசைந்த
பால் கொஞ்சம் ஊட்டப்
பருகி, அதைத் தொடர்ந்து
கால் நீட்டிப் போர்த்தேன் என்
கம்பளியால்.

தாலாட்டில் மாலாகி
என்னை மறந்து துயில்கையில்....
வீண் ஒப்பாரி வைத்திங்(கு)
உலகத்தைக் கூட்டாதே!

அப்பால் நடப்பை அறிவேன்...
அதை ரசிக்க
இப்பயலை மீண்டும்
எழுப்பித் தொலைக்காதே!
தப்பாக எண்ணாதே,
தாழ்ப்பாளைப் பூட்டிவிடு!

மேளங்கள் கொட்டி, என்றன்
மேட்டிமையைக் காட்டாதே!
தாளம் மொழிந்து
நடிக்காதே! என் பயண
நீளவழிக்கு, நில
பாவாடை தூவாதே!
ஆழம் அகலம்.....
அளந் தெதுவும் பேசாதே!

மோனத்தில்உன் உணர்வை மொண்டு,
இதய நெடும் வானத்தில்
நீ தீட்டி வைத்திருக்கும்
என்னுடைய தீன உருவை
முழுதும் வடித் தெடுத்து
மீன் விழியில் இட்டு விளக்கேற்றி
தொட்டிலில் நம்
காவியத்தைப் பாடிக் களி!

பின், இயற்கையொடும்
சாவியலை எள்ளிச் சிரி!

இக் கவி மனம் தன்னுணர்வை - தன்னைப்பற்றிய அறிதலை பகிர்ந்து போன விதம் அது! ‘உன் அழகை என்னால் வர்ணிக்க முடியாது; ஆனால் அதனை என்னால் யாழில் வாசிக்க முடியும்’ என்று  எங்கோ எப்போதோ ஒரு பழைய சிரித்திரன் சஞ்சிகையில் வாசித்த வசனத்தைப்  போல இந்தக் கவிதையும் எனக்கு.

இப்போது அந்த யாழின் வாசிப்பைக் கேட்போமா?

புத்த பகவானின் அருளுரையைக் கேட்க மரத்தடியில் சீடர்கள் கூடி இருந்தார்கள். சற்று நேரத்தில் பகவான் அமைதியும் தெய்வீக புன்னகையும் முகத்தில் மலர வந்து மர நிழலில் அமர்ந்தார். மேலே குருவிகளின் பேச்சொலி; பழுத்த இலை ஒன்று காற்றில் மிதந்து மிதந்து மெல்ல அவர் மீது வந்து விழுந்தது; தென்றல் எல்லோரையும் வருடிக்கொண்டு போனது....புத்தர் அமைதியாக அவற்றை எல்லாம் உள்வாங்கிய படி அமர்ந்திருந்தார்.

வெகு நேரமாயிற்று. அவருடய அமைதியின் காரணம் சீடர்களுக்குப் புரிய வில்லை. அதன் காரணமாக சீடர்கள் மத்தியில் சலசலப்பு ஆரம்பமாயிற்று.

புத்தர் எழுந்து கொண்டார். ’இன்றய பாடம் முடிந்து விட்டது’ என்று கூறி நடந்தார்.

தன்னுணர்வை; இயற்கையின் ஒரு வித ஸ்பரிசத்தை; பிரபஞ்ச பாஷையை அனுபவம் கொள்ளல்.....
எத்தகைய ஓர் அற்புதம்......



Saturday, November 19, 2016

தாகூரும் பாரதியும்.....

இது தேவையா என்றொரு கேள்வி எனக்கு எழாமல் இல்லை. இரு வேறு அழகுகளை ஒப்பிடுதல் எவ்வகையில் பொருத்தமென்பது என் மனதில் எழுந்த கேள்வி. தவிரவும் வண்ன வண்னப் பூக்கள் என்றொரு புத்தகம் பற்றி சொல்லவும் வேண்டுமாயிருக்கையில் இது தேவை தானா என்றொரு கேள்வி குடைகிறது.

இத்தகைய பொருத்தமின்மைக்கு மனம் சொன்ன சமாதானம் இது விமர்சனமோ ஒப்பீடோ அல்ல; மாறாக, இரு யுகக் கவிஞர்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தை எப்படி தமக்குரிய விதமாகப் பார்த்திருக்கிறார்கள் என்பதைக் காண்பதுவே!

5 விடயங்களை எடுத்துக் கொண்டு அவர்கள் உலகையும் உணர்வுகளையும் எவ்வாறு அணுகியிருக்கிறார்கள் என்று பார்க்க விளைகிறது இப்பதிவு.

1.பிரபஞ்ச சக்தி (பிரம்மம்)
2. மனம் (ஆண்மா)
3.அன்பு
4.தேச விடுதலை
5. இறப்பு.

1. பிரபஞ்ச சக்தி:

பாரதி பிரபஞ்சத்தை சக்தியாகக் கண்டவர். அவர்
‘ துன்பமில்ல நிலையே சக்தி
தூக்கமில்ல கண்விழிப்பே சக்தி
அன்புகனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த திருவே சக்தி
இன்பமுதிர்ந்த முதிர்வே சக்தி
எண்னத்திருக்கும் எரியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி

சோம்பல் கெடுக்கும் துணிவே சக்தி
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம் பழம் தன்னில் சுவையே சக்தி
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி
பாம்பை அடிக்கும் படையே சக்தி
பாட்டினில் வந்த களியே சக்தி
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி

வாழ்வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி
விண்னை அளக்கும் விரிவே சக்தி
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி
உள்லத்தொளிரும் விளக்கே சக்தி

என்றதோடு மட்டுமல்லாது தன் வாழ்க்கைக்கு தேவையானவைகளையும் அவளிடமே வேண்டிப் பெற்றவர் பாரதி. காணி நிலம் வேண்டும் என்ற போதிலும் மோகத்தைக் கொன்று விடு என்ற போதிலும் எண்ணிய காரியங்கள் முடிய வேண்டும் என்ற போதிலும்,அவளையே அவர் கேட்டார்.
‘விசையறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீ சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனகெதும் தடையுளதோ?

என்று கேள்வி கேட்கும் அளவுக்கு சக்தியோடு நெருக்கமான உறவு முறையையும் அவர் பேணி இருந்தார். அத்தகைய நம்பிக்கையும் உறுதிப்பாடும் இவ் வுலகத்தை இயக்கும் சக்தி மேல் அவருக்கு இருந்தது.

இன்னுமொரு இடத்தில்
‘இயற்கை என்றுரைப்பார் - சிலர்
இணங்கும் ஐம்பூதங்கள் என்றிசைப்பார்
செயற்கைச் சக்தி என்பார் உயிர்
தீ என்பார் அறிவென்பார் ஈசனென்பார்
.....
அன்புறு சோதி என்பார் - சிலர்
ஆரிருட் காளியென்றுனைப் புகழ்வார்
இன்பமென்றுரைத்திடுவார்  - சிலர்
எண்ணெரும் துன்பமென்றுனை இசைப்பார்
....
என்று தொடரும் பாடலிலும் அவர் உலகை இயக்கும் பிரம்மத்தை அவர் சக்தியாகக் காணும் பாண்மையைக் காணலாம்.

எல்லாம் சக்தி மயம் என்று எண்ணிய / நம்பிய பாரதி அவளைப் போற்றிப் பாடியும் காணி நிலம் வேண்டும் என்று வேண்டிப் பாடியும்  மோகத்தைக் கொன்று விடு என்று கட்டளை இட்டுப் பாடியும் உனக்கதை அருள்வதில் தடைஏதுமுளதோ? என்று கேள்வி கேட்டும் பாடிய பாரதி ஓரிடத்தில் உடைந்து போய் விடுகிறான். இவை எல்லாம் மாயை தானோ என்று விரக்தி நிலைக்குப் போய் விடுகிறான். விதியை பலமாக நம்ப ஆரம்பித்து விடுகிறான். நான் ஏன் இந்த மாயையான அற்ப அழகுகளில் மூழ்கிப்போய் கிடக்கிறேன் என்று தளர்ந்து போகிறான். மனம் தளர்ந்து போயுள்ள அந்த விரக்தி நிலையிலும் கூட சக்தியிடமே  உடைந்து சரணடைகிறான். உடைந்து போய் அவன் அழும் பாடல் மனதை உருக்க வல்லது.

‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனம் தானோ? பல தோற்ர மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச் செறிவே நீங்களெல்லாம்
கானல் நீரோ? வெறும் காட்சிப் பிழை தானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய் தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையில் என்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?

காண்பதுவே உறுதி கண்டோம் கண்பதல்லால் உறுதி இல்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம்’

என்று அவன் முடித்து வைக்கையிலும் அவன் சக்தியை உறுதிஎன்றே காண்கிறான். சக்தியை அவன் உலக இயக்கத்தில் கண்டு உறுதி என்ற முடிவுக்கு வருகிறான்.

அவன் தமிழ் நாடு பெற்றெடுத்த உலக அரங்குக்குள் போக வாய்ப்பேதும் கிட்டாத மிடுக்கான தமிழகக் கவிஞனாக வாழ்ந்து மறைந்தவன்.

ஆனால் தாகூர் அப்படி இல்லை. பிரபு வம்சத்தில் பிறந்த மனிதர் அவர். வெளிநாடுகளுக்கு போகின்ற வாய்ப்புகள் பல பெற்றவர். ஆங்கில மொழி பாண்டித்தியமும் வெளிநாட்டுப் பிரபுக்களின் நட்புறவும் பெற்ற வங்கக் கவி. அதன் காரணமாகவே அவருக்கு உலக அரங்குக்கு தன் கீதங்களையும் பாடல்களையும் கொண்டு செல்லும் வல்லமை கிட்டியது. நோபல் பரிசு பெறும் சாத்தியமும் வாய்த்தது.

நோபல் பரிசு பெற்ற போது தாகூர் வழங்கிய ஏற்புரை அவரது கீதங்களைப் போலவே அழகானது; வசீகரமானது. அதனை அழகாக வங்க மொழியில் இருந்து நேரடியாக தமிழுக்கு த.நா. குமாரசுவாமி அவர்கள் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். அதனை சா. குமாரசுவாமி அவர்கள் ‘தாகூர் சிறுகதைகள்’ என்ற பெயரில் தொகுத்திருக்கிறார்.  அதில்,

‘.....
எனது வாழ்கையில் இலக்கியப் படைப்புகள்எப்படி என் இளமைப் பருவத்தில் இருந்து உருப்பெற்ரு வளர்ந்தன என்பது நினைவில் உள்லது. எனது இருபத்தைந்தாவது வயது வரை கங்கைக் கரையில் உள்ல ஒரு தனிமையான கிராமத்துப்  படகு வீட்டில் தனிமையில் வாழ்ந்தேன். இலயுதிர்காலத்தில் இமயமலையில் இருந்து வரும்  காட்டு வாத்துக்களே எனது துணை. அந்தத் தனிமையில் இயற்கையின் அழகை பொங்கி வரும் மதுவை அருந்துவதைப் போல அனுபவித்துள்லேன். தனது சிறிய ஒலிகள் மூலமாக தன்னை எனக்குத் தெரிவித்து என் கனவுகளுக்கு கவிதை வடிவம் தந்து கல்கத்தா பத்திரிகைகள் மூலம் என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்த இந்தத் தனிமையை நான் பயன் படுத்திக் கொண்டேன்....இப்படியான எனது வாழ்க்கை என் நாட்டு மக்களுக்கு புதிர். இந்தப் புதிர் வாழ்க்கை மக்களின் ஆர்வத்தில் இருந்து என்னைக் காப்பாற்றி வந்தது. எனக்கு அதில் திருப்தியே.
......
சூரியன் மறையும் மாலை நேரங்களில் தனிமையில் அமர்ந்து நிழல்களைப் போல தோற்ரமளிக்கும் மரங்களைக் கவனிப்பேன். மதிய நேரத்தின் அமைதியான தருணங்களில் குழ்ந்தைகளின் கூச்சல் தொலைவில் இருந்து மெதுவாக எனக்குக் கேட்கும். எனக்கு இந்தக் குழந்தைகலின் மகிழ்ச்சிக் குரல்களும் பாடல்களும் மரங்களை நினைவூட்டும். ஏனெனில் இந்த மரங்களும் அந்த மகிழ்ச்சியான பாடல்கலைப் போன்று பூமியின் இதயத்தில் இருந்து பீறிட்டு விண்னைத்தொடும் நீரூற்ருக்கள் போன்ரவை.அவை எனக்கு மனித குலத்தில் இதயத்திலிருந்து ஏக்கங்கள் மற்றும் மகிழ்ச்சியின் மொத்த வெளிப்பாட்டின் குறியீடுகளாகிய நாமும் நம் ஏக்கக் குரல்களை விண்ணுக்கு அனுப்புகிறோம். இதை நான் என் இதயத்தின் அடித்தளத்தில் உணர்ந்ததால் கீதாஞ்சலி என்ற கவிதை நூலை எழுதினேன்.

அப்பாடல்களை நான் விண்ணில் ஒளிரும் நட்சத்திரங்களுக்குக் கீழே எனக்கு நானே பாடிக்கொள்வேன்.மீண்டும் புலர்காலைப் பொழுதிலும் மதியப் பொழுதுகளில் வெளி உலகுக்கு  நான் வரவேண்டும் என்ற எண்ணம் என்னை ஆட்கொள்ளும் வரையிலும் பாடிக்கொண்டேயிருப்பேன்.....’

இவ்வாறு தொடரும் அவருரை எவ்வாறு அவர் தனிமையில் இருந்தபடி இயற்கையில் இருந்து உலக வாழ்வை புரிந்து கொண்டார் என்பதையும் கருணை மிக்க அவரிதயம் எவ்வாறு அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது என்பதையும் சொல்லப் போதுமானதாக இருக்கும் என்பது என் எண்னம்.

அவர் தனிமையில் இருந்து இயற்கையை முழுவதுமாகப் பருகி அதில் தன் பிரம்ம சக்தியைக் கண்டு தன் கருணையான இதயத்தில் அதன் ஆற்றல்களை எல்லாம் நிரப்பிக் கொண்டு தன் கீதங்கள் மூலம் அதை அவர் அவ் ஆற்ரல்களின் வீரியத்தை உலகுக்கு அளித்தார் என்பது என் அபிப்பிராயம்.

தாகூரின் பாடல்கள் மென்மையான இறகுகள் வருடும் ஸ்பரிசம் போன்றவை; பேராற்ரலை மென்மையோடு போற்றுபவை; இந்த மென்மை இயல்பும் கருணையும் அன்பும் பொலியும் மொழியும்  அவருக்கு தனிமையும் பொருளாதார சுபீட்சமும் அவருக்கு அளித்தவையாக இருக்கலாம்.

அவர் இயற்கையின் ஆற்றலையே கடவுளாகக் காண்கிறார். அதில் இருந்தே அவர் உலகைப் புரிய முயல்கிறார். அதனால் அவர் கேள்விகள் எதுவும் கேட்காதவராகவும் ஏற்றுக் கொண்டு அமைதி காணும் போக்கு கொண்டவராகவும் விளங்குகிறார். அந்த அமைதியையே அவர் கவிதைகள் உலகுக்கு வழங்குகின்றன. வரும் துன்பங்களை; இடர்களையும்  ஏற்றுக் கொண்டு அனுபவித்து வருபவை அவர் கவிதைகள். அங்கு அன்பும் கருணையும் எளிமையும் ஏற்றுக் கொள்ளலுமே மிகுந்துள்ளன.

அவரது நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்பை சி.ஜெய பாரதன் அவர்கள் மிக அழகாக தமிழில் தந்திருக்கிறார். நன்றியுடன் அவற்றில் இருந்து உலக ஆற்றல் பற்றிய அவரது பார்வைகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

என்னிசைக் கீதம்

கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

காற்றினிலே வருமென் கீதம், குழந்தாய்!
உனைத் தழுவி
ஆசைக் கரங்கள் போல்
அணைத்துக் கொள்ளும்!
உனது நெற்றி மீது முத்தமிட்டு
இதழால் ஆசி அளிக்கும்!
தனித்துள்ள போது உன்னருகில் அமர்ந்து
உனது செவியில்
முணுமுணுக்கும் என் கீதம்!
சந்தடி இரைச்சலில் நீ தவிக்கும் போது
அரண் அமைத் துனக்கு
ஏகாந்தம் அளிக்கும், என் கீதம்!
இரட்டைச் சிறகுகள் போல்
என் கீதம்
உன் கனவுகள் உயிர்த்தெழ
உந்துசக்தி தரும்!
கங்கு கரையற்ற காணாத காட்சிக்கு
உன் இதயத்தை
ஏந்திச் செல்லும் என் கீதம்!
நடக்கும் பாதையில்
காரிருள் சூழும் போது உனக்கு
நன்றியுடன்
வழிகாட்டும் என் கீதம்,
வானத்து விண்மீனாய்!
உன்னிரு கண்ணின் மணிக்குள்
அமர்ந்து கொண்டு
உன் நெஞ்சின் விழிகளுக்கு
ஒளியூட்டும், என் கீதம்!
மரணத்தில் எந்தன் குரல் மங்கி
மௌன மாகும் போது,
உயிருள்ள
உன்னித யத்தில் போய்
ஓசையிடும்
என் கீதம்!

************

கீதாஞ்சலி (1)
உடையும் பாண்டம்

கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

அந்திமக் கால மின்றி என்னை
ஆக்கியுள்ளாய் நீ!
உவகை அளிப்ப தல்லவா அது உனக்கு?
உடையும் இப்பாண்டத்தை
மீண்டும், மீண்டும்
வெறுமை ஆக்குவாய் நீ!
புத்துயிர் அளித்து,
மறுபடியும் அதை நிரப்புவாய் நீ!
குன்றின் மீதும், பள்ளம் மீதும் நீ
ஏந்தி வந்த
புல்லின் இலையான
இச்சிறு
புல்லாங்குழல் விடும் மூச்சுக் காற்றில்
கால மெல்லாம்
புதிய கீதங்கள் பொழிய வைப்பாய் நீ!
உந்தன் தெய்வீகக் கரங்கள்
என்மேல் படும்போது,
எந்தன் நெஞ்சம்
உவகையின்
எல்லை மீறிச் செல்லும்!
மேலும் அதில்
ஊகிக்க முடியா
உரைமொழிகள் உதிக்கும்!
அளவின்றி
அள்ளி அள்ளிப் பெய்த உந்தன்
கொடைப் பரிசுகள்
எனது இச்சிறு கைகளில் மட்டுமே
கிடைத்துள்ளன!
கடந்து
போயின யுகங்கள்!
ஆயினும்
இன்னும் நீ இப்பாண்டத்தில்
பொழிந்து பொழிந்து கொட்டுகிறாய்!
அங்கே
காலியிடம் உள்ளது இன்னும்,
மேலும் நீ நிரப்பிட!

**************
கீதாஞ்சலி (2)
இசைப் பாடகன்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இன்னிசைக் கீதத்தைப் பாடென்று
என்னை நீ
ஆணையிடும் போதென்
நெஞ்சம் திறந்து பெருமிதத்தில்
பூரிக்கிறது!
உன் முகத்தை நோக்கும்
என் விழிகள்
மடை திறந்து
வீழ்த்தும் நீர்த் துளிகள்!
வாழ்க்கை நெடுவே என்னை
துன்புறுத்தும்
இன்னல், வெறுப்பு, வேறுபாடு எல்லாம்
கனிந்துருகி
இனிய ஓர் சீரமைப்பில்
ஏகிச் சங்கமிக்கும்!
உன் மீது நான் கொண்டுள்ள
மதிப்பீடு
அகண்ட கடல் நெடுவே
பயணம் துவக்கும்
ஆனந்தப் பறவைபோல்
விரிக்கும் தனது
சிறகுகளை!

இன்னிசைக் கீதத்தை பாடும் போதுன்
செவிகள் சுவைத்து
இதயம் இன்புறும்
என்பதை நான் அறிவேன்!
உன்னரிய சன்னிதிக்கு முன்னால்
ஓரிசைப் பாடகனாய்
வருவதையே
விரும்புகிறேன் நான்!
வேட்கை மிகையாய் இருப்பினும்
என் கரங்கள் நீட்சிக்கு
எட்டாத
உன் பாதங்களை
வெகு தூரம் விரிந்து செல்லும் என்
கீதச் சிறகின் முனைதான்
தொட முடிகிறது!
இன்னிசைக்
கீதத்தை பாடிக் கொண்டுள்ள போதே
ஆனந்தப்
போதையில் மூழ்கி
மெய்மறந்து நான் உன்னை
நண்பா!
என்று அழைத்தேன்
என் அதிபனே!

*****************
கீதாஞ்சலி (3)
உன்னிசைக் கீதம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இன்னிசையில் கானத்தை,
எவ்விதம் நீ பாடுகிறாய்
என்பதை நான் அறிந்திலேன்
என்னரும் அதிபனே!
உன் கீதத்தைக் கேட்டு
காலங் காலமாய்
மௌனத்தில் மூழ்கி
உள்ளம் வியப்பில் ஆழ்ந்தது!
உலகெங்கும் பரவி விளக்கேற்றும்,
உன் கானத்தில் எழும்
ஒளிச்சுடர்!
உன் கானம் விடுகின்ற
உயிர் மூச்சு
அண்டவெளியில்
வான்விட்டு வான் தாவும்!
புனித நீரோடை போல
கரடு முரடான
கற்பாதைத் தடைகளைக்
கடந்து
முன்னோக்கி விரைந்தோடும்,
உன்னினிய கானம் !

பாடிவரும் உன் கானத்துடன்
ஒன்றாய்க் கலந்திட
நாடி ஏங்கும் என்னிதயம்!
வீணாய் அதற்கு
ஓரிசைக் குரலைத் தேடிப்
போராடும்,
என் மனது!
உரை நடையில் உன் கானத்தை
ஓதுவேன் ஆயினும்
இசை கலக்க முடியாமல்
குழம்பிக்
கூக்குர லிடுவேன்!
கால வரம்பில்லாத
உன்னரும் இன்னிசைக் கானத்தின்
பின்னலில்
என் இதயத்தைக் கட்டி
அந்தோ நீ!
வசப்படுத்தி வைத்துள்ளாய்
என் அதிபனே!

*****************
கீதாஞ்சலி (4)
என் வாழ்வில் கட்டுப்பாடு

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இது என் வாழ்வின்
வாழ்வைப் பற்றிய வரலாறு.
என் அங்கம் அனைத்தையும்
புத்துயிர் அளிக்கும்,
உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை
என்னிதயம் உணர்வதால்
ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்
என் உடம்பைத்
தூயதாய் வைத்திருக்க!
ஆதி மூலக் காரணியான
நித்திய ஒளியை எனது
நெஞ்சில் தூண்டி விடும்
சத்திய நெறியே
நீயென்று
முக்தி பெற்ற நான்
உண்மைக்குப் புறம்பட்ட அனைத்தையும்
எண்ணாமல் இருக்க
எந்நாளும் முயல்வேன்.

இதயக் கோயிலின்
உட்புறச் சன்னிதியில் நீ
திருப்பீடம் அமைத்து ஆசனத்தில்
இருப்பிடம் கொண்டுள்ளது
நினைவில் இருப்பதால்,
உள்ளத்தைக் களங்கப் படுத்தும்
தீவினை எல்லாம்
நெஞ்சத்தை நெருங்க விடாமல்
நீக்க முயல்வேன்,
பூக்கள் மேல் கொண்டுள்ள
என் மோகத்தைக்
குன்றாமல் வைத்துக் கொண்டு!
உனது பேராற்றல் இதுவரை
எனக்கு ஊட்டியுள்ள
மன உறுதியே
எப்போதும் என்னை இயக்கும் என்பது
தென்பட்டு வருவதால்,
நன்னெறி முறைகளைக்
கடைப்பிடித்துச்
சிரமப்பட்டு முயல்வேன்,
நடத்தையின் மூலம் என்னை
உனக்கு
எடுத்துக் காட்ட!

*****************


*****************
கீதாஞ்சலி (7)
உன் ஆடம்பர ஒப்பனைகள்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எனது கவித்துவ
மனது
ஒருங்கே புறக்கணிக்கும்,
உனது
ஒய்யாரக் கவர்ச்சி
ஆபரணங்களை!
ஒப்பனை புரிவதும்
ஆடம்பர ஆடை அணிவதும்
பெருமை தரவில்லை
உனக்கு!
நமது
நட்பின் இணைப்பை
நாசம் செய்வது
நகை அலங்காரம்!

உனக்கும்
எனக்கும் உள்ள
உறவின்
குறுக்கே நுழைவது!
நெருங்கி உள்ள போது
உனது
அணிகள் உண்டாக்கும்
சலசலப்பு ஓசை
முணுமுணுக்கும்
உன் இனிய மொழிகள்
என் செவியில் விழாமலே
அமுக்கி விடும்!

மகாகவிப் பெருமானே!
உந்தன்
திருப்பாதங்களின்
அருகே
அமர்ந்துள்ளேன்! என்னுள்ளத்தை
அவமானப்படுத்தும்
கவிஞன் என்னும்
கர்வம்
மகத்தான நின் காட்சி முன்னே
மாய்ந்து போனது!
நேரான பாதையில்
சீராகச் சென்று
எளிய வாழ்வைப் பின்பற்ற
வழியை மட்டும்
நாடுவேன்,
புல்லிலைப் புல்லாங் குழல்
உன்மீது
மெல்லிசை பொழிந்து
மீட்டுவது போல!

கீதாஞ்சலி (11)
இறைவன் எங்கிருக்கிறான் ?

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!
மெய்வருந்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டு இருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்,
உழைப்பாளி
கூடவே குடியுள்ளான் இறைவன்!
புனிதமான
உன் காவி மேலங்கி
உடையை எறிந்து விட்டு
புழுதி நிரம்பிய
பூமிமேல் கீழிறங்கி
உழவரைப் போல்
உன் பாதங்களைப் பதித்திடு!

குடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு
விடுதலையா?
எங்கே காணப் போகிறாய்
அந்த விடுவிப்பை?
படைக்கும் போதே
நமை ஆளும் அதிபன்,
பந்த பாசப் பிணைப்புகளைச்
சொந்தமாய் மேற்கொண்டு
களிப்புடன்
அளித்து வந்திருக்கிறான்,
உயிர்களுக்கு!
நிரந்தரமாய் நம் எல்லோரையும்
தன்னுடன்
இரண்டறப் பிணைத்துள்ளான்
இறைவன்!
தியானத்தை நிறுத்தி விட்டு
வெளியே வா!
தீபாராதனை, மலர்கள், சாம்பிராணி,
அகர் பத்திகளின்
நறுமணப் புகை அனைத்தையும்
புறக்கணித்து விடு!
உன் ஆடைகள்
கறைபட்டுக் கந்தலானால் என்ன?
தீங்கென்ன நேரும் உனக்கு?
மெய்வருந்திப் பணிசெய்யும்
உழைப்பாளியை
சந்தித்து
நில் அவனருகே நீ,
நெற்றி வேர்வை நிலத்தில்
சிந்தி!

கீதாஞ்சலி (36)
என் பிரார்த்தனை

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இதுவே நான் செய்யும்
பிரார்த்தனை இறைவா!
நெஞ்சில் முளைக்கும் தாழ்ச்சி
எண்ணத்தின்
வேரை நோக்கி அடி!
ஓங்கி அடி!
இன்ப துன்பத்தை எளிதில் தாங்கிட
எனக்குப் பொறுமை அளித்திடு!
நற்பலன்கள் விளையும் பணிகளை
நான் பாசமுடன் புரிய
நல்கிடு உறுதி!
வறியோரை என்றும் மறவா திருக்கவும்,
நெறியிலா மூர்க்கர் முன்பாக
முழங்கால் மடக்கி
என்றும்
வணங்கா திருக்கவும், எனக்கு
வைராக்கியம் கொடுத்திடு!
தினச் சச்சரவி லிருந்து விடுபட்டு
மனம் அப்பால் சென்று,
எனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க
மனத் தெளிவைத் தந்திடு!
அத்துடன்
எனது ஆற்றல் முழுவதையும்
ஒப்படைத்து
உன் ஆசைப் பணிக்கு
பாசமோடு உழைத்திட
எனக்குச்
சக்தியை அளித்திடு!


கீதாஞ்சலி (63)
வழிகாட்டித் துணைவன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நானறியாத புதிய தோழர்களைத்
தானாக அறிமுகம்
பண்ணி வைத்தாய் எனக்கு!
என்னை வரவேற்று உபசரிக்க
அன்னியர் இல்லத்தே
ஆசனங்கள் அளித்தாய் நீ!
தூரத்து மனிதரை அழைத்து எனது
ஓரத்தில் அமர வைத்தாய்!
தெரியாத வழிப்போக்கனை
உரிமையாய் எனக்குத்
தமையனாய் ஆக்கினாய்!
பிறந்தகம் விட்டுப்
பிரிய நேர்ந்திடும் போது,
கரிந்து போனதென் உள்ளம்!
புதிய தளத்தில் என் பூர்வத் தடம்
பதிந்திருந்தது,
மறந்து விட்ட தெனக்கு!
நிறைந் தங்கே நீ
இருப்பதுவும்,
தெரியாமல் போன தெனக்கு!

பிறப்பு, இறப்பு மூலமாகச்
மானிடர் தோன்றும் இவ்வுலகிலும்,
அடுத்துப் புகும் உலகிலும்,
முடிவில்லாமல் சுற்றி வரும்,
வாழ்க்கை நியதிக்கு
வழி காட்டித்
துணைவன் நீ ஒருவனே!
முன்பின் தெரியா தவரோடு
என்னைப் பந்தபாச மென்னும்
உன்னதப் பிணைப்பில்,
பின்னி யிருக்கிறாய் நீ!
உன்னை அறிந்தவர் எவரும் எனக்கு
அன்னியர் ஆகார்!
என்னை அவர் அண்டி வந்தால்,
கதவுகள் சாத்தப் படா!
வாழ்க்கை மேடையில்
திருவிளை யாடுவோன்
உருவினைத் தொட்டு,
உவப்புடன் வணங்கி
அவனை
ஒருபோதும்
மறவா திருக்கும் மனத்தை
அருள்வாய் எனக்கு!


கீதாஞ்சலி (79)
மனவலியைத் தாங்குவேன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இந்தப் பிறப்பில் நேராக நின்னைச்
சந்திக்கும் கட்டம்
எனக்கில்லை என்றாகி விட்டால்,
உனைத் தெரிசிக்கும் வாய்ப்பிழந்தேன்
என்பதை
உணர வேண்டும் நான்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
வணிக உலகிலே
மணிக் கணக்காய் ஊழியத்தில் உழன்று,
தினமும் செல்வம் சேர்த்து
எனது பை நிரம்பி வழிந்தாலும்,
எதுவும் முடிவில்
சம்பாதிக்க வில்லை எனும் உணர்ச்சி
வெம்பி மேவுகிறது என்னிடம்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!

பெரு மூச்சுடன் களைத்துப் போய்,
தெரு ஓரத்து மண்தூசியில்
தணிந்த கட்டிலின் மீது நான்
குந்தும் போது, எனது
நீள்பயண மின்னும் கண்முன் உள்ளதென
நானுணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
என்னறையில் தோரணங்கள் கட்டிப்
புல்லாங்குழல் இசை பொழிந்து,
சிரிப்பு வெடிகளில்
ஆரவாரம் செய்யும் போது,
வரவேற்று உன்னை நான் வீட்டுக்குள்
அழைக்க வில்லை யென
உணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!

*****************

கீதாஞ்சலி (83)
என் கண்ணீர் முத்தாரம்..!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அன்னையே! சோகத்தில்
சிந்துமென்
கண்ணீர்த் துளிகளை எல்லாம்
ஓர் முத்தார மாய்க்
கோர்த்துச் சூட்டுவேன்,
உன்னெழில் கழுத்தினில்!
விண்மீன் பரல்கள்
நடமிடும்
ஒளிச் சலங்கைகள்
ஒப்பனை செய்கின்றன உன்
திருப்பதங்களை!
ஆயினும்
கழுத்தில் தொங்குமென் முத்தாரமே,
ஊஞ்சல் ஆடுது
உன் மார்பின் மீது!

செல்வமும், புகழும்
தேடி வருகின்றன, நினது
திருவருளால்!
அவற்றை அளிப்பவனும் நீ!
பெற முடியாமல்,
நிறுத்தி விடுபவனும் நீ!
ஆயினும்
என்னைச் சார்ந்தவை,
என் துயர்கள் அனைத்தும்
முழுமையாய்!
என் துன்பங்களை
உன்னிடம் சமர்ப்பிக்கும் போது,
வெகுமதி
அளிக்கிறாய் எனக்கு
நளினமாக!

கீதாஞ்சலி (86)
மரண தேவனுக்கு வரவேற்பு .. !

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அதோ! மரண தேவன்
எதிரில் நிற்கிறான்,
எனது வாசற் கதவருகிலே,
உனது வேலையாள் அவன்!
எவருக்கும் தெரியாத தூரக்
கடல் கடந் தெனது
வீட்டிற்கே,
வந்து விட்டான்
உந்தன் கட்டளை நிறைவேற்ற!
காரிருள் கப்பி விட்ட திரவில்!
குடிகொண்ட தச்சம்
நெஞ்சில்! ஆயினும்
தீபத்தை கையில் கொண்டு
திறக்கிறேன்,
முன்வழிக் கதவை!
வரவேற் கிறேன் நான்,
சிரம் தாழ்த்தி
மரண தேவனை!
உந்தன் தூதுவன்தான்
வந்து நிற்கிறான்,
வாசலில்!

கரங்களைக் குவித்து,
மரண தேவனை வணங்குவேன்,
கண்ணீர் சொரிய!
திருப் பதங்களைத்
துதிப்பேன்,
இதயச் செல்வத்தை
அர்ப்பணம் செய்து!
திரும்பிச் செல்வான், மரண தேவன்
ஒருநாள்
கட்டளை நிறைவேற்றி,
எந்தன்
காலைப் பொழுதை
வெறும்
கருநிழ லாக்கி!
வெறுமையான என் வீட்டில்
புறக்கணித்த
தனி ஆன்மா மட்டும்
எஞ்சி நிற்கும்,
எனதிறுதிக் கொடையாக
உனக்கு!

கீதாஞ்சலி (90)
மரணம் கதவைத் தட்டும் போது!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்ன வழங்கப் போகிறாய் நீ,
மரண தேவன் வந்து,
உன்னில்லக் கதவைத் தட்டும்
அந்நாள்?
விருந்தாளிக்கு வாழ்க்கை
உருவாக்கிய என் முழுச் சடலத்தைத்
தருவதாக முன் வைப்பேன்!
ஒருபோதும் மரண தேவனை,
வெறுங்கையுடன்
திருப்பி அனுப்ப
விரும்ப வில்லை நான்!

இலையுதிர் காலப் பொழுதிலும்,
வேனிற் கால இரவுகளிலும்,
நானினிதாய்ச் சுவைத்த
நாட்களை எல்லாம்,
நானளிப்பேன்
அவன் முன்பாக! என்
ஊதியங்கள் அனைத்தையும்,
உடன் அளிப்பேன்!
சுறுசுறுப்பாய் உழைத்தென் வாழ்வில்
பெருக்கிய வற்றையும்,
தருவேன் அவனுக்கு,
என் ஆயுள்
தருணம் முடியும் தறுவாயில்,
மரண தேவன்
வருகை தந்தென்,
வாசற் கதவைத் தட்டும் போது!

*****************
கீதாஞ்சலி (95)
ஒருபுறம் நீக்கும்! மறுபுறம் சேர்க்கும்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இம்மைப் பிறப்பின் தலை வாசலை
எப்போது தாண்டினேன்
என்பதை அறிய வில்லை
நான் முதலில்!
நடுக் காட்டினில்,
நள்ளிரவு வேளையில்
மொட்டு விரிந்தாற் போல,
மாய வாழ்வில் என்னை,
மலர வைத்த மகாசக்தி எது?
பொழுது விடிந்ததும்,
ஒளிமயம் கண்களில் பட்ட போது,
ஒருகணம் உணர்ந்தேன்,
இந்த உலகுக்கு,
நானோர் அன்னியன் அல்லன்
என்பதை!

பெயரும் வடிவமு மில்லாத
மாயச் சிற்பி, என்
தாயுருவின் அன்புக் கரங்களில்
தாலாட்டப் படும்
சேயாக உண்டாக்கி
ஆட்கொண்டான் என்னை!
அது போலவே
மரணத்திலும் புலனுக்குத்
தெரியாத ஒன்று
நிகழப் போவதை நானறிவேன்!
வாழப் பிறந்ததை நேசிக்கும் நான்
வாழ்க்கை முடிவில்
வரப்போகும்
மரணத்தையும்
வரவேற்பேன் வாஞ்சை யாக!
வலது முலையி லிருந்து தாய்
விலக்கும் போது,
வீறிட்டழும் குழந்தை!
அடுத்த கணத்தில் இடது முலைக்கு
அன்னை மாற்றும் போது,
அமைதியுறும் சேய்!

உன் மர்மங்களை அறியேன்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உன்னை எனக்குத் தெரியும் என்று
மாந்தரிடையே
பீத்திக் கொண்டேன் நான்!
என் படைப்புகள் அனைத்திலும் உள்ள
உன் படத்தை
உற்று நோக்குவர் மற்றவர்.
என்னருகில் வந்து உடனே
“யார் அவன் படத்தில்?”
என்றெனைக் கேட்கிறார்!
பதில் தர முடியாது அவர் முன்
பரிதவிப் படைவேன்!
உண்மையாய்
என்னால் கூற இயலாதென
எடுத்துரைப்பேன்!
துடுக்காய்த் திட்டி வெளியேறுவர்
வெறுப்போடு!
நீயோ
வீற்றிருப்பாய் அங்கே
முறுவலோடு!

நின்னரிய கதைகளை
என்னினிய கீதாஞ்சலியாய்
எழுதி நீடிக்க வைப்பேன்!
உன்னுடைய மர்மங்கள்
என்னிதயத்தைக் கீறிக் கொண்டு
பொங்கி எழும்!
அருகில் வந்து மற்றவர்
“அவை கூறும் அர்த்தம் என்ன”
என்றெனைக் கேட்கிறார்!
பதில் தர முடியாது அவர் முன்
பரிதவிப் படைவேன்!
“அந்தோ எவருக்குத் தெரியும்
அவை கூறும் அர்த்தங்கள்?” என்று
தவிர்த்து நிற்பேன்!
வெளியேறுவர் கேலி செய்து,
வெறுப்போடு!
நீயோ
வீற்றிருப்பாய் அங்கே
முறுவலோடு!