Saturday, November 26, 2016

தன்னுணர்வு


அண்மையில் எனக்கு மிகவும் பிடித்தமான இந்தக் கவிதையை மீண்டும் ஒரு தடவை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இது நீலாவாணன் என்ற இலங்கையின் கிழக்கத்தியக் கவி பாடி வைத்துப் போனது. ஒரு பாடும் மீனின் பெளர்ணமிப் பாடல் இது.

துயில்

இந்த உலகில்
இருந்த சில நாழிகையில்
எந்தச் சிறிய உயிரும்
என் ஹிம்சையினால்
நொந்தறியா...
யாருமெனை நொந்ததிலை" என்கின்ற
அந்த இனிய நினைவாம்....
அலங் கிர்தத் தாலாட்டுக் (கு)
என்னிதயம் தந்து...
பழம் பிசைந்த
பால் கொஞ்சம் ஊட்டப்
பருகி, அதைத் தொடர்ந்து
கால் நீட்டிப் போர்த்தேன் என்
கம்பளியால்.

தாலாட்டில் மாலாகி
என்னை மறந்து துயில்கையில்....
வீண் ஒப்பாரி வைத்திங்(கு)
உலகத்தைக் கூட்டாதே!

அப்பால் நடப்பை அறிவேன்...
அதை ரசிக்க
இப்பயலை மீண்டும்
எழுப்பித் தொலைக்காதே!
தப்பாக எண்ணாதே,
தாழ்ப்பாளைப் பூட்டிவிடு!

மேளங்கள் கொட்டி, என்றன்
மேட்டிமையைக் காட்டாதே!
தாளம் மொழிந்து
நடிக்காதே! என் பயண
நீளவழிக்கு, நில
பாவாடை தூவாதே!
ஆழம் அகலம்.....
அளந் தெதுவும் பேசாதே!

மோனத்தில்உன் உணர்வை மொண்டு,
இதய நெடும் வானத்தில்
நீ தீட்டி வைத்திருக்கும்
என்னுடைய தீன உருவை
முழுதும் வடித் தெடுத்து
மீன் விழியில் இட்டு விளக்கேற்றி
தொட்டிலில் நம்
காவியத்தைப் பாடிக் களி!

பின், இயற்கையொடும்
சாவியலை எள்ளிச் சிரி!

இக் கவி மனம் தன்னுணர்வை - தன்னைப்பற்றிய அறிதலை பகிர்ந்து போன விதம் அது! ‘உன் அழகை என்னால் வர்ணிக்க முடியாது; ஆனால் அதனை என்னால் யாழில் வாசிக்க முடியும்’ என்று  எங்கோ எப்போதோ ஒரு பழைய சிரித்திரன் சஞ்சிகையில் வாசித்த வசனத்தைப்  போல இந்தக் கவிதையும் எனக்கு.

இப்போது அந்த யாழின் வாசிப்பைக் கேட்போமா?

புத்த பகவானின் அருளுரையைக் கேட்க மரத்தடியில் சீடர்கள் கூடி இருந்தார்கள். சற்று நேரத்தில் பகவான் அமைதியும் தெய்வீக புன்னகையும் முகத்தில் மலர வந்து மர நிழலில் அமர்ந்தார். மேலே குருவிகளின் பேச்சொலி; பழுத்த இலை ஒன்று காற்றில் மிதந்து மிதந்து மெல்ல அவர் மீது வந்து விழுந்தது; தென்றல் எல்லோரையும் வருடிக்கொண்டு போனது....புத்தர் அமைதியாக அவற்றை எல்லாம் உள்வாங்கிய படி அமர்ந்திருந்தார்.

வெகு நேரமாயிற்று. அவருடய அமைதியின் காரணம் சீடர்களுக்குப் புரிய வில்லை. அதன் காரணமாக சீடர்கள் மத்தியில் சலசலப்பு ஆரம்பமாயிற்று.

புத்தர் எழுந்து கொண்டார். ’இன்றய பாடம் முடிந்து விட்டது’ என்று கூறி நடந்தார்.

தன்னுணர்வை; இயற்கையின் ஒரு வித ஸ்பரிசத்தை; பிரபஞ்ச பாஷையை அனுபவம் கொள்ளல்.....
எத்தகைய ஓர் அற்புதம்......8 comments:

 1. நீலாவாணன் படைப்புகள் அருமை
  தொடருங்கள்

  ReplyDelete
 2. மெளனம் பழகப் பழக பிரபஞ்ச ரகசியங்களை உணர எளிதாகிறது. அந்த வித்தை கைவந்திட, பேசவும் கேட்கவும் சுவை குன்றி தனிமை இனிதாகிறது. 'சும்மா இரு சொல்லற', 'தனிமை கண்டதுண்டு; அதிலே சாரம் இருக்குதம்மா'என்றதெல்லாம் அனுபவ மொழிகள் தானோ தோழி!

  பதிவின் தொடக்கக் கவிதையின் பாடுபொருளான இறுதி வரி, 'இயற்கையோடும் சாவியலை எள்ளிச் சிரி' என்றது பொட்டென மண்டையில் தட்டியது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நிலா,
   நலமா? நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை நிலா. சத்தங்களும் சலசலப்புகளும் எதையும் எடுத்து வருவதில்லை.
   உங்களுக்கும் கவிதை பிடித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

   நீங்கள் ஏன் முன் போல அடிக்கடி எழுதக் காணோம்? எழுதுங்கோ ஏதாவது படிச்சத; பிடிச்சத...பார்த்தத, கேட்டத, உணர்ந்தத...

   Delete
 3. Replies
  1. நன்றி குமார்.

   அவர் வாழ்ந்த பிரதேசத்தில் (இலங்கையின் கிழக்குப் பகுதி) பெளர்ணமி நாட்களில் நள்ளிரவு வேளைகளில் மீன்கள் பாடும் இனிய ஓசையைக் கேட்கலாம் என்று சொல்லுவார்கள்.

   Delete
 4. நீங்கள் ஏன் முன் போல அடிக்கடி எழுதக் காணோம்?//

  உங்க தூண்டுதல் எனக்கு ஊக்கம் தருகிறது. விரைவில் பழையபடி வலையில் உலவுவேன் தோழி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி நிலா!
   எழுதுங்கோ. எழுத வேணும்!!

   Delete