Friday, June 9, 2017

சுந்தா.சுந்தரலிங்கம் ( 5.11.1930 )

             
தேன் சுவை சொட்டும் பலாப்பழத்திற்கும் மதுரச் சுவை கொண்ட மாம்பழத்திற்கும் பெயர் போன இடம் ‘குழைக்காடு’ என வர்ணிக்கப் படும் சாவகச்சேரி.

இங்கு பிறந்த சுந்தாவுக்கு இவை இரண்டையும் ஒன்றாக்கி கொஞ்சம் கோயில் மணி ஓசையையும் சேர்த்துக் குழைத்த குரல்!
குரலில் தெளிவு,கம்பீரம், வசீகரம்,கனிவு இருந்த அதே நேரம், மொழிப்புலமை, சமயோசித புத்தி, சாதுர்யம், சூட்சுமம், என்பனவும் அதனோடு இயல்பாகக் கலந்திருந்தன.

ஒலிபரப்புக் கலை மீதான அபரிதமான ஈடுபாடும் கலைமனப்பாங்கும் மேலதிகமாய் அதனோடு  இணைந்து கொண்டது.
அதிலிருந்து முகிழ்ந்த குரல் ஆழுமை சுந்தா! காற்றிலே கலை நெய்த கலைஞர் அவர்!

அவர் ஓர் ஒலிபரப்பாளுமை மட்டுமல்ல; பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளர், நடிகர், ஒப்பனைக் கலைஞர், மேடை நிர்வாகி, நிகழ்ச்சி முகாமையாளர், புகைப்படக் கலைஞர் என  பல்வேறு கலைகளின் உச்சங்களையும் தொட்டவர்! எனினும் எளிமையும் அடக்கமும் அன்பும் நட்பும் உதவும் மனப்பாங்கும் கொண்டவர் என இன்றும் நண்பர்களால் நினைவுகூரப்படுபவர்!

அவர் பிறந்தது சுதந்திரத்திற்கு முன்பான 5ம்திகதி..11ம் மாதம்.1930.
சுதந்திரத்தின் பின் தமிழ் புது நடை போட்ட காலம். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முனைப்போடிருந்த பொழுது. பொழுது போக்குகளோ தொலைக்காட்சி சேவைகளோ அற்றிருந்த காலத்தில் வானொலி – Air Magazine – ஆக மிளிரத் தொடங்கிய காலச் சூழல். (பொருத்தம் இருக்கென்று நினைத்தால் இந்த இடத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் பற்றிய வரலாற்றைச் சொல்லும் இக் குரல் பதிவை இதற்குள் சேர்க்கலாம். 5&6; 0 -20/53 செக்கன்)
இங்கு வானொலி நாடக நடிகராக சேர்ந்த போது சுந்தாவுக்கு வயது 21.
பின்னர் செய்தி வாசிப்பாளராக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நேர்முக வர்ணனையாளராக வளர்ந்தார். செய்தி வாசிப்புகளுக்கு வரும் ஆங்கில அறிக்கைகளை உடனடியாக மொழிபெயர்க்க வேண்டி இருந்தமை பின்நாளில் அவரை சமகால பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளராக்கியது.
இப்பதவி அவருக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்புகளைப் பெற்றுத்தர பீபீசி அவரை பயன்படுத்தி பீபீசி சுந்தா என்ற பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்தது.

செய்திவாசிப்பாளரே மரண அறிவித்தல்களையும் வாசிக்க வேண்டி இருந்ததால் தந்தி சேவையில் இருந்து ஆங்கிலத்தில் வரும் மரணச் செய்திகளை பெயரைக் கொண்டு அவரவர் மத நம்பிக்கைகளுக்கேற்ப அதனை பிழையறச் சொல்வதில் அவரது சமயோசிதமும் சாதுர்யமும் துலங்கியது.
விவேக சக்கரம், பஞ்சபாணம்,செய்தி வாசிப்பு, நேர்முக வர்ணனைகள், கீர்த்தி மிக்க இசைத்தொகுப்பு நிகழ்ச்சிகள், விளம்பர வடிவங்கள் எல்லாம் அவரால் நிகழ்த்தப்பட்டவை.

ஆரம்பத்தில் வானொலி நாடக நடிகராக இருந்த காரணத்தால் பழக நேர்ந்த பல்வேறு நாடக/ இலக்கிய ஆழுமைகளின் நட்பும் அவரது வீட்டு மொட்டைமாடி நாடக ஒத்திகைக்கு ஏற்ற இடமாக இருந்ததும் ஒலிபரப்பு சேவைக்கு அப்பாலும் நாடக ஈடுபாடு வெளிப்படக் காரணமாயிற்று.
இதன் காரணமாக ஒன்றுகூடல்கள், தைப்பொங்கல்., தீபாவளி நாட்களில், விகடத் துணுக்குகளோடு ஸ்கிறிப்ட் இல்லாமலே திடீரென ஒரு கருவை மனதில் கொண்டு நாடகம் போடும் அளவுக்கு நாடகம் மீதான ஆர்வமும் விருப்பமும் ஆளுமையும் வளர்ந்திருந்தது.

இந் நாடக மீதான ஆர்வம் ஒப்பனைக்கலை, மேடை நிர்வாகம், நிகழ்ச்சி நிர்வாகம் போன்றவற்றிலும் அவரின் திறமையை வளர்க்க உதவின.
அவை மேலும் வளர்ந்து அக் காலத்தில் மிக செலவான பொழுதுபோக்காகக் கருத்தப்பட்ட புகைப்படத் துறையின் பால் அவரை நகர்த்தின. அவரது புகைப்படங்கள் பல புத்தகங்கள், அட்டைப்படங்கள், கலண்டர்கள், சீடி முகப்புகளை அலங்கரித்தன.

இவ்வாறு அவரை ஒலிபரப்புத் துறை பல உச்சங்களுக்கு இட்டுச் சென்றாலும் அவருக்கு மிக பிரபலத்தையும் உலகார்ந்த புகழை ஈட்டிக் கொடுத்ததும் அப்பலோ விண்வெளிக்கலம் முதன் முதல் சந்திரனில் தரை இறங்கியபோது செய்யப்பட்ட நேர்முக வர்ணனையே! தமிழக, இலங்கை மக்களிடம் இருந்து வந்து குவிந்த பாராட்டுக் கடிதங்களும் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த Lyndon  Johnson  தன் கைப்பட எழுதிய பாராட்டுக் கடிதமும் கையொப்பத்தோடு கூடிய புத்தக அன்பளிப்பும் தன் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய தருணம் என தன் மன ஓசையில் சுந்தா குறிப்பிடுகிறார்.
சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்புத் துறையில் கொடி கட்டிப்பறந்த சுந்தா சிந்திக்க வைத்தும், சினேகமாய் உறவாடியும் றேடியோ சிலோன் சுந்தா, அப்பலோ சுந்தா, பாளிமண்ட் சுந்தா, பீபீசி சுந்தா என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டார். புகழப்பட்டார்.

தன் இறுதிக் காலத்தைச் சிட்னியில் சக்கர நாற்காலியில் கழித்த சுந்தா இசையே தன்னை உயிர்ப்போடு உலாவ வைத்திருக்கிறது என்று கூறி தான் அடிக்கடி கேட்டு ரசித்து மகிழும் பஞ்சரத்ன கீர்த்தனையில் வரும்
 “எந்தரோ மஹா நுபாவுலு அந்தரிக்கி வந்தனமு” அதாவது ’எங்கெல்லாம் பெரியோர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் எனது வணக்கம்’ என்ற பாடல் வரியை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார். அவருக்குத் தடம் நிகழ்வு சொல்வதும் அதுவே.

               “எந்தரோ மஹா நுபாவுலு அந்தரிக்கி வந்தனமு”.

( யசோதா.பத்மநாதன் SBS இற்காக 21.1.17.)

கடந்த 4.6.2017 அன்று SBS வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியைக் கேட்க விரும்பின் கீழ்வரும் இணைப்பிற்கு செல்க)

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/thamil-thadam-sundha-sundharalingam?language=ta