Monday, August 7, 2017

வில்லிசை சின்னமணி ( 30.3.1936 - 4.2. 20015)

               
வில்லிசை என்பது தமிழருடய பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றாகும்.

இக் கலை வடிவம் எவ்வாறு தோன்றிய தென்பதற்கு நாடோடிக் கதை ஒன்றுண்டு. முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் வேட்டையாடப் போன போது மான் ஒன்றை வேட்டையாடிய பின் அதன் குட்டியின் எதிர்காலம் குறித்து வருந்தினான் என்றும்; அதற்கு அமைச்சர் இறைவனை இசையால் மனமுருகிப் பாடினால் இச் செயலை அவன் மன்னித்து அருள் புரிவான் என்றும்; இசை ஒன்றுக்கே இறைவன் மயங்க வல்லவன் என்றும் கூற மன்னன் வில்லைத் தரையில் வைத்து அம்பால் அதனைத் தட்டி இசை எழுப்பினான் என்றும்; வில்லின் வளைந்த பகுதி தரையில் நிலையாக நிற்காத காரணத்தால் அதற்கு குடி தண்ணீர் கொண்டு சென்ற முட்டியை முட்டுக் கொடுத்து நிறுத்தினான் என்றும்; அதன் மீது தட்ட டும் டும் என்று நாதம் எழுந்ததென்றும்; அமைச்சர் அதற்கு தந்தனத்தோம் என பின் பாட்டுப் பாட அரசரோடு வந்த ஏனைய படையாட்கள் அதற்கு தலையாட்டி ஆமாம் போட இக் கலை வடிவம் பிறந்ததென்றும் ஒரு செவி வழிக் கதை கூறுகிறது.

தமிழரின் சிந்தனை மரபினதும் இசை மரபினதும் மூலக் கூறாகக் கொள்ளத்தக்க இவ் இசைக் கலை வடிவம் சலங்கைகள் கட்டப்பட்ட வில்லும் தடியும் குடமும் அத்தோடு உடுக்கை தாளம் போன்ற துணைக் கருவிகளாகளையும் கொண்டமைந்தது.

புராண இதிகாசக் கதைகளூடாக நடப்புக் கால சமூகப் பிரச்சினைகளை சொல்லும் இவ் இசை கலந்த வில்லுப் பாட்டு 7 வகையான உள்ளடக்கங்களைக் கொண்டது. முதற்பகுதி காப்பு. இதில் விக்கினங்கள் இன்றி நிகழ்வு நடக்க வேண்டி இறைவனை வேண்டுவது. அடுத்து வருவது வருபொருள் உரைத்தல். இது கருப்பொருள் பற்றிய விளக்கத்தை உரைக்கும். அடுத்து குருவணக்கமும் அதைத் தொடர்ந்து அவையடக்கமும் சொல்லப்படும். அதில் பிழை நேருமிடத்து பொறுத்தருள வேண்டும் என்பது எடுத்துரைக்கப் படும். அதைத் தொடர்ந்து நாட்டு வளம் சொல்லப்பட்ட பின் முக்கியமான கதைப் பகுதிக்கு வருவர். கதைப்பகுதியின் நிறைவில் எல்லோரும் நலம்பெற மங்கலம் பாடி நிகழ்வு நிறைவடையும். இது ஓர் எளிமையும் அழகியலும் சார்ந்த கலை வடிவமாகும்.

பாட்டிடையிட்ட பிரதான கதைப் பகுதியில் சம காலச் சமூகப் பிரச்சினை புராண இதிகாசக் கதைகளோடு தொடர்பு படுத்தி இசையிடை கொண்ட கதைப் பா வடிவமாக கற்பனையும் அழகியலும் சால்பும் நுட்பமான சமூகப் பார்வையும் புராண இதிகாசக் கதைப்பரீட்சயமும் கலந்ததாக பாட்டிடையிட்ட இசைக்கதையாக ராகம், இலேசான ஆட்டம், இசை, ஒத்தோதல் பண்புகளால் ரசிகர்களை வசீகரிக்கும்.

60களில் இலங்கைக்கு மாஸ்டர் சிவலிங்கம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட  இக்கலைவடிவம் திருப்பூங்குடி ஆறுமுகம், சிறிதேவி வில்லிசைக்குழு, உடப்பு சோமஸ்கந்தர் வில்லிசைக்குழு, சோக்கல்லோ சண்முகம் வில்லடிப் பாட்டிசைக்குழு, வானொலிக்கலைஞர் சற்சொரூபவதி நாதன், மற்றும் சுலோச்சனா போன்ற பெண் வில்லிசையாளர்கள் இத் துறைக்கு வந்த போதும் சின்னமணி வில்லிசைக்குழுவே இறுதி வரை கொடிகட்டிப் பறந்தது.  ஈழத் தமிழ் பகுதிகளில் இக் கலைவடிவம் அறியப்படவும் விரும்பப் படவும் வனப்பும் செல்வாக்கும் பெறவும் வில்லிசைச் சின்னமணி என பின்னாளில் அறியப்பட்ட க. ந. கணபதிப்பிள்ளை என்பாருக்கு முக்கியமான இடம் உண்டு. மார்ச் 30ம் திகதி 36ம் ஆண்டு பருத்தித்துறை மாதனை என்ற இட்த்தில் பிறந்த கணபதிப்பிள்ளை தமிழ் ஆசிரியராக்க் கடமையாற்றியவர்.

அவர் 1957ல் ஆசிரியராகக் கடமையாற்றிய போது தமிழக நாடக மேதைகள் டீ.கே.எஸ் சகோதரர்களோடு இணைந்து நாடக நிகழ்வுகளில் பங்குபற்றியதன் காரணமாக அவருக்கு கலைவாணர் என் எஸ் கிருஷ்னனுடன் தொடர்பு கிட்டியதன் காரணமாக நாடக உத்தி, வில்லிசை நுட்பங்களை அவரிடம் இருந்து கற்றுத் தேர்ந்து தன் குருவான கலைவாணரின் பெயரில் நாடக மன்றத்தை உருவாக்கி வில்லிசை என்ற கலை வடிவத்தை ஈழத்தமிழரின் பாரம்பரிய இசைக் கலை வடிவங்களுள் ஒன்றாக்கினார்.

வில்லிசை என்றால் சின்னமணி என்று சொல்லும் அளவுக்கு அவர் இக்கலையில் பாண்டித்தியமும் புலமையும் அனுபவமும் பெற்றிருந்தார். சகலரும் ரசிக்கும் படியாக கதை சொல்லும் ஆற்றலும் புராண இதிகாச காப்பியங்களில் அவருக்கிருந்த பரீட்சயமும் அவருக்கு உலகெங்கிலும் இருந்து பல பல பட்டங்களை வாங்கிக் கொடுத்தன. வில்லிசை வேந்தன், வில்லிசை மன்ன்ன், வில்லிசைப் புலவர், முத்தமிழ் மாமணி, வில்லிசை அரசன், வில்லிசைக் கலை ஞான சோதி, பல்கலை வேந்தன், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், வில்லிசைத் திலகம், ஜன ரஞ்சக நாயகன், நவரசக் கலைஞன், வில்லிசைப் புலவர், கலா வினோதன் வில்லிசைப் பேரொளி, ஆகியவை அவற்றுள் சில. 1998இல் இலங்கை அரசின் கலா பூஷண விருதையும் 2003 இல் வட மாகாண ஆழுனர் விருதையும்  பெற்றவர் அவர்.
நடிப்பு இசை நடனம் தமிழ் சமயம் போன்ற துறைகளில் பாண்டித்தியம் கொண்டிருந்த இவர் ஹாமோர்னிய இசைக் கலைஞர் நல்லூர் சோம சுந்தரம், எஸ் ரீ அரசு ஆகியோரின் துணையுடனும் ஆசீர் வாதத்துடனும் 2.2. 68இல் தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய முற்றலில் பெருந்தொகையான மக்களின் முன்னிலையில் கலைவாணர் வில்லிசைக் குழு என்று தான் உருவாக்கிய வில்லிசைக் குழுவின் மூலமாக அரங்கேற்றம் கண்டார்

பல்கலைத் திறன் கொண்ட இவர் வில்லிசை நிகழ்வின் நடுவில் அமர்ந்து கதை சொல்லும் முறையும் நவரச பாவங்களை முகத்தில் காட்டும் பாவமும் கதையில் வரும் பாத்திரமாக மாறி அவர் நடிக்கும் திறனும் தமிழை அவர் உச்சரிக்கும் விதமும் பாடல்களைப் பொருளுணர்ந்து பாடும் வல்லமையும் சிந்தனைக்கு எழில் சேர்க்கும் நகைச்சுவையும் எதிர் பாரா வித்த்தில் உதிக்கும் கற்பனையும் இவரது வில்லிசைகளில் விரவி நின்ற போது மக்கள் அதனை வெகுவாக ரசித்தனர்.

மரபு வழியான கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்து கொண்டிருந்த திருவிழாக்களில் இவரால் தொடக்கப்பட்டு உருவாகி வளர்ந்த இவ் வில்லிசை வடிவம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இராமாயணம், பாரதம், கந்த புரானம் பெரிய புராணம், ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் தமிழ் இலக்கியப்பரப்பில் சிதறிக்கிடக்கும் பல்வேறு வரலாறுகளையும் பொறுக்கி எடுத்து தன் சமகால சமூக வாழ்க்கைக் கோலங்களோடு அவற்றைத் தொடர்பு படுத்தி வில்லிசையாக்கி அவர் தொடுத்த கலைக் கோலங்கள் மிகப் புகழ் பெற்றவை. வில்லிசை நிகழ்த்தும் போது அக் கதைப் பாத்திரமாகவே மாறிவிடும் அவர்  கலை இயல்பு அவருக்கு தன் நாட்டிலும் தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர், கனடா, சுவீஸ் போன்ற நாடுகளிலும் பெரும் புகழை அவருக்கு ஈட்டித் தந்தது.

தனது 9வது வயதில் குழந்தைக் காத்தானாக காத்தவராயன் கூத்தில் நடித்ததோடு தொடங்கிய இவரின் கலையுலகப் பிரவேசம் தனது மாமனாரான நாட்டியக் கலைஞர் வி.கே. நல்லையாவிடம் நடனத்தையும் இசையையும் கற்றுக் கொண்டும் பெற்றோரிடம் தமிழ் புராண இதிகாச வரலாறுகளைக் கற்றுக் கொண்ட படியும் பாடசாலைப் படிப்பில் தமிழ் புலமை கொண்ட படியும் தொடர்ந்த்து. தன் சகோதரனான க.நா. நவரத்தினம் உடன் இணைந்து நடனம், காவடி, கரகம் முதலான கலைகளில் தேர்ச்சி பெற்றார்.

இசை நாடகத் துறையிலும் சிறந்த கலைஞராக அவர் விளங்கினார். இசை நுட்பம் நிறைந்த பாடல்களையும் பல வரலாறுகளை எடுத்துரைக்கும் நீண்ட வசனங்களை கொண்டமைந்த பாத்திரமான இயமனாக நடிப்பதிலும் புதிய இலக்கணங்களை ஏற்படுத்தினார். மேலும் நட்சத்திரத் தரகர், தோட்டி, சத்திய கீர்த்தி, போன்ற பாத்திரங்களிலும் தனித்துவமாக மிளிர்ந்தார். சுருதி சுத்தமாகக் காத்தவராயன் கூத்தை பாடி நடிக்கும் திறன் கொண்டவர்களில் இவரும் ஒருவர். வண்ணைக் கலைவாணர் மன்றத்தால் நிகழ்த்தப்பட்ட நாடகங்களான இன்பக்கனவு, திப்பு சுல்தான், வீரமைந்தன், சாம்ராஜ் அசோகன், சரியா தப்பா போன்ற நாடகங்களில் பங்கெடுத்தார்.  1962ல் அரிச்சந்திரா மயாணகாண்டத்தில் நான்கு வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார். நாரதராகவும் நட்சத்திரராகவும் அயல் வீட்டுப் பிள்ளையில் ஒருவராகவும் சுடலையில் மேளம் அடிப்பவராகவும் ஒரே நாடகத்தில் பல்வேறு பாத்திரங்களை ஏற்றார். சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் யமனாகவும் காத்தவராயன் கூத்தில் காத்தானாகவும் கிருஷ்னராக ஆரியமாலாவாக வண்ணார நல்லியாக, மந்தரையாக என பல்வேறு பாத்திரங்களையும் அநாயாசமாக செய்து காட்டினார். பாடும் திறனும் பாத்திரத்துக்கேற்ப பொருந்திப்போகும் நடிப்புக் கலையும் அவருக்கு கைவந்திருந்தது. பயிற்சியும் கற்பனா சக்தியும் அவற்றுக்கு முழுமையினைக் கொடுத்தது.

எனினும் அவர் வில்லிசைத்துறையையே தன் துறையாக்கிக் கொண்டார். தொடக்க காலத்தில் இலங்கையில் வில்லிசை நிகழ்த்தி வந்த திருப்புங்குடி ஆறுமுகம்  அவர்களின் வில்லைசை நிகழ்வில் நகைச்சுவைக் கலைஞராகவும் பக்கப்பாட்டுப் பாடுபவராகவும் உடுக்கைக் கலைஞராகவும் தன்னை பயிற்றுவித்துக் கொண்டவர்.

ஈழத்தில் தவிலுக்கு தட்சணாமூர்த்தி எவ்வாறு புகழப்படுகிறாரோ இசை நாடகத்திற்கு வைரமுத்து எவ்வாறு பேசப்படுகிறாரோ, அது போல வில்லிசைக்கு சின்னமணி புகழ்ந்து பேசப்படும் ஒருவர்.

வில்லிசைக்கான கருப்பொருள் கதைப் பொருள் பல்வேறு பட்டனவாக இருக்கும். துணைக்கதைகள், தொடர்கதைகள், கிளைக்கதைகள், பாரதம் இராமாயணம், இதிகாசங்கள், புராணங்கள், வரலாற்றுக் கதைகள், விசேட நாட்கள், கிறீஸ்தவக் கதைகள், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் நல்வழி என தமிழ் களஞ்சியத்தில் இருந்து கருப்பொருளை எடுத்துக் கொண்டு வில்லிசைக்குரிய கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு கதை சொல்லும் முறை, கதை விளக்கம், நகைச்சுவை பாடல்களின் ஏற்ற இறக்கம் சுருதி லயம் தாளம் பக்கவாத்தியம் எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு ஆற்றுகைக்குரிய நேரகாலம் அறிந்து, பார்வையாளர் தரம் அறிந்து, ரசிகர்களைக் கட்டிப் போடும் புத்தி சாதுர்யத்துடன் எல்லோரையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் திறமை கொண்டிருந்தார். நாடகத்துறை அனுபவம் அவருக்கு பாத்திரத்தோடு ஒன்றி வில்லிசையைக் கொண்டு செல்ல உதவியது.
2015 ஏப்பிரல் நான்காம் திகதி இவ்வுலகை அவர் நீத்த போது ஈழத்தமிழுக்கு வில்லிசை என்பது ‘ஈழத்தின் பாரம்பரிய இசைக்கலை வடிவம்’ என்ற பெருமையை உரித்தாக்கி விட்டுச் சென்றிருந்தார்.

அது ‘வில்லிசை சின்னமணி’

கண்ணகி என்ற தலைப்பிலான சின்னமணியின் வில்லிசையை கீழ்வரும் இந்த இணைப்பில் சென்று காணலாம்.

https://www.youtube.com/watch?v=ZX9_4xOM4VY



வில்லிசை சின்னமணி அவர்களைப்பற்றி SBS வானொலியில் ‘தமிழ் தடம்’ நிகழ்ச்சியில்  6.8.17 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியினை கீழ் வரும் இணைப்பில் சென்று கேட்கலாம்.



 http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/thamil-thadam-villisai-chinnamani?language=ta

SBS வானொலிக்கும் இவ்வாறான தேடலை எனக்குள் ஏற்படுத்தி வானொலியில் அதற்கான இடத்தையும் தந்த SBS தமிழ் வானொலியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றேமண்ட். செல்வராஜ் அவர்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றி.