இன்றய காலங்களில் இல்லாது ஒழிந்து போய் விட்டவற்றுள் ஒன்று இந்தச் சாக்குக் கட்டில். இதனைச் சாக்குக் கட்டில் என்றதற்கு காரணம் இந்த கட்டில் ஆரம்ப காலங்களில் சணல் என்ற பயிரில் இருந்து திரிக்கப் படும் நூலான சாக்கு என்ற பலமான ஆனால் மெல்லிய கயிறினால் பின்னப்படும் (பொருட்களைக் கட்டி வைக்கவும் ஏற்றிச் செல்லவும் பயன் படும் பெரிய பைகள் இவற்றினால் செய்யப்படுபவை.) நீளத் துணியினால் இவ் வகைக் கட்டில்கள் செய்யப்பட்டன.
சணல் கயிற்றினால் பின்னப்படும் அத்தகைய நீளப்பின்னல் வகையான துணிகள் ஒரு ஆளைத் தாங்க வல்ல பலமும் காற்றோட்டத்துக் கேற்ற இடையிடையே துவாரங்களும் கொண்டது. சுவாத்தியத்துக் கேற்ரது.
அநேகமாக இவ்வகைக் கட்டில்கள் விவசாயப் பின்னணிகளைக் கொண்டமைந்த வீடுகளில் பிரபலமாகக் காணப்பட்டன. அதற்குக் காரணம் தோட்டங்களுக்குக் இரவுக் காவலுக்குச் செல்லும் விவசாயிகள் ஒரு மரத்தின் கீழோ அல்லது தற்காலிகமாகக் கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு குடிசையினுள்ளோ எடுத்துச் செல்லவும் வைக்கத் தக்கதுமாக இருக்கும் அதன் இயல்பான அம்சம் விவசாயிகளுக்கு மிகுந்த பயனுடயதாக இருந்தது. இலகுவான பாரமற்ற தன்மை, இடத்தை பிடிக்காது ஓரமாக வைக்கத் தக்க அதன் பருமன், இலகுவாக எடுத்துச் செல்ல ஏதுவான அதன் இயல்பு என்பன மறு நாள் தம் வீடு நோக்கி கொண்டு வரும் வசதியை அவர்களுக்கு வழங்கியது.
தொழில் செய்து விட்டு வந்து வியர்வையோடும் களைப்போடும் படுக்க வரும் உழைப்பாளிகளுக்கு சணல் கயிற்றினால் பின்னப்பட்ட இவ்வகைக் கட்டில்கள் காற்றினை உட்செல்லவும் வெளிச்செல்லவும் வசதி படைத்திருந்ததால் மிகுந்த பயனுடயதாக இருந்தன.
படம்: நன்றி; கூகுள் இமேஜ்
சாதாரண வீடுகளில் மாமர, வேப்ப மர நிழல்களிலும் இவ்வகைக் கட்டில்கள் இருந்ததுண்டு.
காலப்போக்கில் நாகரிக வளர்ச்சி சாக்கினை அழகில்லை என்றும்; நாகரிகம் இல்லை என்றும்; மலினமானது என்றும்; ஒதுக்கி விட, அந்த இடத்தை கன்வஸ் துணிகள் பெற்றன.
பெயர் மட்டும் அப்படியே நிலைத்திருக்க துணி மட்டும் மாறிய வரலாறு இவ்வாறு தான். மேலே படத்தில் காட்டப்பட்டிருப்பது கன்வஸ் துணியினால் ஆன சாக்குக் கட்டிலே!
காலப் போக்கில் இந்தச் சாக்குக் கட்டிலே இல்லாது போய் விட்டது. அந்த இடத்தை நிரப்ப வேறு மாற்று எதுவும் இல்லாது போய் விட்டது என்ற போதும் ‘சோம்பேறிக் கட்டில்’ என அழைக்கப்படும் Lazy chair / Easy chair பிடித்திருக்கிறது என்று ஒருவாறு சொல்லலாம். இந்த வகைக் கட்டில்கள் உலகெங்கும் ஓர் அளவு பிரபலமானவை.
படம்; நன்றி; கூகுள் இமேஜ்
ஆனால் இந்தச் சாக்குக் கட்டில்கள் இலங்கையில் சிங்களத் தமிழ் சமூகங்களிடையே மிகப் பிரபலமாக புளக்கத்தில் இருந்து மறைந்து போயின.
இந்தப் புகைப்படம் கொழும்பில் உள்ள ஒரு தொடர்மாடிக்கட்டிடத்தின் கீழே அக் கட்டிடக் காவலாளி பாவிப்பதற்காக ஒரு ஒதுக்குப் புறத்தில் காணப்பட்டது.
கண்டது 2.10.17. புகைப்படம் எடுத்தது 26.10.17. இடம் கொழும்பு, வெள்ளவத்தை.
புகைப்படம்; யசோதா.பத்மநாதன்.