எந்த ஓர் இனத்தினதும் உண்மையான அழகை நாம் கிராமங்களில் தான் காணலாம். தாலாட்டு, காதல், கிண்டல், தொழில் பாடல் விளையாட்டுப் பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என விரியும் கிராமத்தார் தம் வாழ்க்கைக் கோலங்களில் கொட்டிக் கிடக்கும் அப்பளுக்கற்ற அழகுகள் தனித்திறம் வாய்ந்தவை.
அண்மையில் தேடிக்கொண்டு போன சிலவற்றுக்குள் அகப்பட்டுக் கொண்டன சில யாழ்ப்பாணத்தானின் வாழ்வியல் கோலங்கள்.
“எண்சாண் உடம்புக்குச் சென்னி சிறந்திடும்
என்றே உரைப்பர் அது போல
பொன் சேரிலங்கைச் சிரமெனவே வரும்
புண்ணியமோங்கிடும் யாழ்ப்பாணம்”
எனச் சின்னத்தம்பிப் புலவர் பாடிய யாழ்ப்பாணத்தின் பிரதான குறியீடாய் அமைவது பனை மரம். அதன் சிறப்பையும் அவர் இவ்வாறு உரைப்பார்.
“ கோள்நிலைகள் மாறி மாரி மழை வாரி வறண்டாலும்
கொடிய மிடி வந்து மிகவே வருத்தினாலும்
தான் நிழலளிதுயர் கலாநிலயமே போல்
தந்து பல வேறு பொருள் தாங்கு பனையோங்கும்”
நெய்தல் நிலப்பரப்பு சுற்றி வர! சுண்னக்கற்பாறை சார்ந்த நில அமைப்பு. கடுமுயற்சியினால் செய்யப்படும் விவசாயம். ஆண்டான் அடிமை குடிமை வழி வந்த இறுக்கமான சாதி,சமூக அமைப்பு. இந்தப் பிரதேசத்து விவசாயக் குடிகள் பற்றி மகா கவி இப்படிச் சொல்வார்.
“மப்பின்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாதி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது காளை இழுக்காது
எனினுமந்தப்பாறைபிளந்து
பயன் விளைப்பான் என்னூரான்“
இந்த வரண்டு போன பூமியில் கல்வி ஒன்றே முன்னேறத்தக்க ஒரே மார்க்கமாய் இருந்ததாலோ என்னவோ இம் மக்கள் கல்வியில் பெரு நாட்டமும் மூளை சாலிகளாகவும் இருந்தனர். அதனால் வாத்தியார்களுக்கு சமூகத்தில் நல்ல பெருமையும் மரியாதையும் கூட இருந்தது. திண்ணைப்பள்ளிக் கூடங்கள் இருந்த காலத்தில் மாணவர் ஒருவர் ஆசிரியரிடம் இருந்து விடைபெறும் பாங்கில் அமைந்த இந்தப் பாடலைப் பாருங்கள்.
“காலமை வந்தோமையா
கருத்துடம் பாடம் பெற்றோம்
சீலமாய் எழுதில் கொண்டோம்
தேவரீர் மனதிற்கேற்பக்
கோலமாய் நீறு பூசிக்
குழந்தைகள் பழஞ்சோறுண்ணச்
சீலமாய் அனுப்புமையா
தேவரீர் மனதிற்கேற்ப”
இங்கத்தய மாம்பழமும் நல்ல ருசி என்பர். இதன் சுவையை கவிஞர் சச்சிதானந்தன் இப்படிச் சொல்வார்.
“ நீதி பிழைப்பிக்கும்: நேர்மை தவறுவிக்கும்
பாதிப் படிப்பில் பதவி தரும் - ஏதுக்கும்
ஓம் பட்டிசைவிக்கும் ஒன்றன்றோ யாழ்ப்பாண
மாம்பழத்துத் தீஞ்சுவையின் மான்பு”
இங்கிருந்த பனையில் இருந்து செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை பேரா.சி. கணபதிப்பிள்ளை இப்படிச் சொல்வார்
“அழகுறு வண்னம் அமைவுறப் போட்டுத்
தொழிலமை வனிதையர் திறமையாலிழைத்த
பெட்டியாய் குட்டான் பெயர் பெறு கதிர் பாய்
அடுக்குப் பெட்டியும் சுடும்
பிட்டவி நீத்துப் பெட்டியும் சுண்டும்
பனையின் குருத்தை பதனமாய் வார்த்து
பன்னிறம் தீட்டிய பன்னோலை கொண்டு
கைவல் இளையர் கருதி இளைத்த
ஆனைப் பெட்டியும் அழகிய தேரும்
கொட்டைப் பெட்டியும் கிலுக்குப் பெட்டியும்
எனவாங்கு,
இன்னணம் நெருங்கிடு பன்னங் கடைகளும்”
எனத் தொடரும் அப்பாடல் பனையோலையில் இருந்து பெறப்பட்ட பயன்களைச் சொல்லும். பனையின் பயனை மட்டுமல்ல ஒருவர் பனையில் ஏறி பனங்கள்ளை எடுக்க கீழே ஒருவர் நின்று மீசை வருடும் காட்சி ஒன்றை என்ன அழகாய் சொல்கிறார் என்று பாருங்கள்.
“நரை தோல் இயனம் அரையில் கட்டி
அதன் கீழ் முட்டி அசைதர விட்டு
மார்போடணையத் தோலது தூக்கி
உரனுரு தளை நார் காலினை மாட்டிக்
கால் மடித்து உன்னிக் கரு நெடும் பனைமிசை
பாலை தட்டிப் பார்த்துச் சீவி
ஏர் தரும் ஊசலோடு இயனத்தசையும்
இன் கள் முட்டியொடு இறங்கும் போதில்
அடி மரத்திருந்து நுனி வரை நோக்கி
நாநீர் ஊறி உதடு வருடி
பெரு மகிழ்வோடு பிளாவை ஏந்தி
அருவிலை கொடுத்து நறவினை மாந்திக்
களிப்புறு மாக்கள் விளிப்புறு கும்பலும்”
எனத்தொடர்கிறது அப்பாடல். நாடோடிப் பாடல் ஒன்று கள்ளை,
“பட்டாங் கத்தி பள பளென
பாலையன் கோட்டை நறறென
பனையும் கருத்திருக்கும்
பனை வட்டும் சிவந்திருக்கும் - அதிலே
இறக்கிய நீரைப் பருகினால்
தலை கிறுகிறுக்கும்”
எனக் கூறுகிறது.
நையாண்டியும் நகைச்சுவையும் கலந்து வடமராட்சிப்பகுதியில் வழங்கிவரும் இந்தப்பாடல் ‘கள்ளுக்கடவுளை’ இப்படிப் போற்றுகிறது, ( யாழ்ப்பாணப் பண்பாடு; மறந்தவையும் மறைந்தவையும், பேரா.எஸ்.சிவலிங்கராஜா, குமரன் பதிப்பகம், 2014, பக்.109 -10.)
‘ தேடுதற்கும் வகையறியேன் - உன்
திருக்கோயில் தவறணையைத் தேடிக்கொண்டு
ஓடிவரும் பக்தர்க்கு குறைவே இல்லை
உன்னுடய கிருபையினைச் சொல்லிச் சொல்லிப்
பாடுதற்கும் வகையறியேன் - பாளை வேந்தா!
பாவிகளை மகிழ்விக்கும் பான தேவா!
நீடுலகில் எம் போன்ற ஏழைகட்கு
நீயின்றி யாருதவி சொல்லுமையா!’
பஞ்ச புராண வடிவில் அமைக்கப்பட்ட அடுக்கில் மேற்கண்டது தேவாரமெனவும் கீழே வருவது புராணம் எனவும் அமைந்திருக்கிறது.
‘ சண்டையிலே பிறப்பாய் போற்றி
சல்லியைப் பறிப்பாய் போற்றி
பண்டைய முதல்வா போற்றி
பாளையில் பிறப்பாய் போற்றி
மாதரைக் கெடுப்பாய் போற்றி
கண்டவர் சிரட்டை ஏந்தும்
கடவுளே போற்றி போற்றி’
என்று சொல்லிப் போகும்.
இந்த நாடோடிப் பாடல்களின் அழகு அதன் எளிமை; இயற்கையாய் அமைந்து விடும் எதுகை மோனை - இவைகள் தான். அவை நற்சுவை பயப்பன. இந்த வரிகள் நாடோடிப் பாடல்களின் ரசனைக்காக!
“ சிற்றொழுங்கையாலே செருப்பழுது
போற செப்பம்
ஆரென்று பார்த்தேன்
என் அழகுதுரை மாமி மகன்”
“ஏன் காணும் நிற்கிறீர் றோட்டிலே
கொஞ்சம் இளைபாறிப் போங்காணும் வீட்டிலே”
இவை நிற்க,
ஆனால் இவ்வாறு இறங்கி வரும் கள்ளினை குடித்த உயர் குடியினர் இவற்றைப் பெற்றுக் கொடுத்த மக்களை கண்ணியமான முறையில் போற்றவில்லை: மதிக்க வில்லை. அது பற்றி ஆங்கிலேயர் காலத்துக் குறிப்புகளில் நிறைய சான்றுகள் உண்டு. உயர்சாதியினருடய கிணறுகளில் தண்ணீர் அள்ளக் கூடாது என்றும்; பெண்கள் காதணிகள் அணியக் கூடாதென்றும்; உயர் சாதியினருக்கு அவர்கள் வழங்குகின்ற மரியாதைகளில் ஏதொரு குறையும் இருக்கக் கூடாதென்றும்; திருமணப் பந்தலில் வெள்ளைத் துணியால் அலங்காரம் செய்யக் கூடாதென்றும் சட்டங்கள் அமுல் படுத்தப் பட்டிருந்தன.
இத் தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கென தனியாக ஒரு கிணறு கட்டிய போது அதற்குள் நஞ்சினை ஊற்றிய சம்பவம் இம் மக்கள் எவ்வாறான துவேச மனப்பாண்மையைக் கொண்டிருந்தனர் என்பதற்குத் தக்க சான்றாகும். தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகள் பள்ளிக் கூடங்களில் படிக்க அனுமதி கிட்டி இருக்கவில்லை. இந்தப் பிள்ளைகள் எப்படியான கஸ்டங்களை அந்த ஆதிக்க சமூகத்தில் பெற்றிருந்தனர் என்பதற்கும் அவர்களை வளர விடாமல் தடுத்ததில் எத்தகைய மூர்க்கத்தனமான கொள்கைகளை உயர்சாதியினர் பின் பற்றினார்கள் என்பதற்கும் பின் வரும் ஆறுமுக நாவலரின் கருத்து தக்க சான்று.
ஆறுமுகநாவலர் பின்வருமாறு எழுதுகிறார்: ’வண்ணார்பண்ணையிலுள்ள வெஸ்லியன் மிஷன் இங்கிலீசுப்பள்ளிக்கூடத்தில் ஒரு வண்ணாரப்பையன் மூன்று நான்கு வருஷம் படித்தவன். இவ்வருஷத்திலே மற்றப் பிள்ளைகள் ‚ இவ்வண்ணானை எங்களோடிருத்திப் படிப்பிக்கின் நாங்கள் இப்பள்ளிக்கூடத்தை விட்டுவிடுவோம்’ என்றார்கள். அதுபற்றி முதலுபாத்தியார் தாங் கிறிஸ்தவராயிருந்தும், வண்ணானைத் தள்ளிவிட்டார். வண்ணான் பறங்கித் தெருவில் இருக்கிற வெஸ்லியன் பாதிரியிடத்தே போய், தனக்கு கிறிஸ்து மதமே சம்மதமென்றும், தனக்கு ஞானஸ்நானம் செய்து தன்னை அங்குள்ள வெஸ்லியன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டான். பாதிரியார் தாம் அதற்கு உடன்பட்டும், அவனைச் சேர்த்துக்கொள்ளுமபடி தமக்குக் கவர்மெண்ட் ஏசண்டு எழுதிய கடிதம் பெற்றும், அப்பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் சுதேச குருமாரும் உபாத்தியாயர்களும் உடன்படாமையால், வண்ணானைச் சிலகாலம் அடிக்கடி அலைத்துப் பின் ஓட்டிவிட்டார். அவன் இப்போது நெடுந்தூரத்திலுள்ள கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறான்.
அப்பள்ளிக்கூடத்திற்றானே 1847ஆம் வருடம் ஒரு நளப்பையன் படித்தலைக்கண்டு ஏறக்குறைய ஐம்பது பிள்ளைகள் ஓட்டமெடுக்கவும் அந் நளப்பையனைத் தள்ளாத பாதிரியாரைப் பித்தரென்று நினைத்தரோ! நளவனிலும் தாழ்ந்தசாதி வண்ணானென்று கொண்டாரோ! சாதி வேற்றுமை பாராட்டுதல் கிறிஸ்து நாதருக்குஞ் சம்மதமென்று விவிலிய நூலில் எங்கேயாயினும் இப்போது கண்டாரோ? வண்ணானுடைய ஆன்மா பரமண்டலத்தில் இடம்பெறாதென்று தேவதூதன் சொப்பனத்தில் வந்து சொல்லக்கேட்டாரோ! தேவவாக்கினும் பெரிது தம்மைச் சேவிக்குஞ் சுதேச குருமார், உபாத்தியாயர்கள் வாக்கென்று தெளிந்தாரோ! வண்ணானைப் பற்றி மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிவிட்டால், அவர்கள் இருக்குஞ் சம்பளத்தினாலும் அவர்கள் பொருட்டுக் கவர்மெண்டார் உதவும் பணத்தினாலும் தமது பை நிரம்பாதேயென்று பயந்து விட்டாரோ! யாழ்ப்பாணத்திலே சாதி வேற்றுமை அறுத்துக் கிறிஸ்து மதத்தை நிலைநாட்ட வல்லவர்கள் பொருள்வாஞ்சைப் பிசாசா வேசிகளாகிய இந்தப் பாதிரிமாரும் சுதேச குருமாரும் தானோ! சபாசு! சபாசு!’
19ம் நூற்றண்டின் பிற்பகுதியில் எழுந்த பாடல் ஒன்று
‘வண்ணார் வடுகர் பணிக்கர் பண்டாரம்
மடப்பள்ளியர் பரதேசிகள் சட்டையும்
எண்ணுஞ் சரிகையும் உறுமாலும் போட்டிப்போ
யான் பிரபென்கிறார் பாருமடி’
எனப் பாடுதல் காண்க.
இத்தகைய சாதித்தன்மைகள் இருந்தது மாத்திரமல்லாமல் உயர் சாதியினர் தமக்குள்ளும் அடிபாடுகளைக் கொண்டிருந்தார்கள். அவற்றை நாசுக்காகச் சில பாடல்கள் ஆங்காங்கே சொல்லிச் செல்கின்றன. பக்தியைப் பாட வந்த ஒருவர் அதற்குள் சமூகத்தை பொதித்து வைத்துப் பாடி இருக்கும் இந்தப் பாடலைப் பாருங்கள்.
“ கான மயிற் செங்காட்டுக் கோழி
கடுவிடத்திற் கரந்துறையும் கரிய நாகம்
ஞான விழி யோகியரிற் தூங்கும் பூனை
நாவிரண்டு கூறுடைய உடும்பொடு, ஆடு
போன வழி நனைய அழும் ஓநாய் இந்தப்
பூவுலகை தலைகீழாய் பார்க்கும் வெளவால்
ஆன இவை எல்லாம் அடியாராகி
ஆகடியம் செய்வதுமுன் ஆடலோ சொல்”
யாழ்பாணத்து மக்கள் வேத சமயத்தை இலகுவாக ஒப்பவில்லை. தன் குடும்பத்தால் ஒதுக்கப் பட்ட பெண் ஒருத்தி ஒரு சாவீட்டில் இப்படி ஒரு ஒப்பாரி வைக்கிறாள். இரு சமயத்தாருக்கும் இருந்த அன்பின் ஊடலை இந்த சாவீட்டுப் பாடல் ஒன்று இவ்வாறு சொல்கிறது.
“ என்ர ஆத்தை, நீ வேத சமயமென
இவை
விரும்பி அழ மாட்டினமாம்
நாங்கள் சைவ சமையமெணை
என்னோட சொருகி அழ மாட்டினமாம்
ஊர் தேசம் விட்டாய்
என்ர ராசாத்தி
உறவுகளைத்தான் மறந்தாய்
மேபிள் துரைச்சி எண்டு
இஞ்ச
மேட்டிமைகள் பேசுகினம்
ஊரும் அழவில்லையெணை
என்ர ராசாத்தி
உன்ர உறவும் அழவில்லையெணை”
இவ்வாறு வேத சமயத்துக்கு மாறிய பெண்ணொருத்தியின் உறவுக்காரர் அவர்களைப் பார்த்து தம் நடத்தை வேறுபாடுகளைக் சோகத்தோடு கலந்து துக்கப்பகிர்வு பாடல்களூடு சொல்லக் காணலாம். மேலும்,
“படலையிலே ஆமணக்கு
என்ர ராசாத்தி
நீ பெத்தவைக்கு
நான் பாவக்காய் ஆகினனே!
வேலியிலே ஆமணக்கு
என்ர ராசாத்தி
நீ பெத்தவைக்குநான்
வேப்பங்காய் ஆகினனே!
தன் சகோதர முறையானவர்களை தம் தாயைச் சாட்டி “நீ பெத்தவைக்கு” என்று சொல்வதைக் காண்க. மற்றும் ராசாத்தி, கிளி, குஞ்சு, செல்லம் போன்ற பெயர்கள் பொதுப் பயன் பாட்டில் இருப்பதையும் இப்பாடல் புலப்படுத்துகிறது.
தாய் வீட்டு ஒப்பாரி ஒன்று இப்படிப் போகிறது.
“ என்ர ஆத்தை
நீ
வாரி வரத் திண்டிருந்தன்
என்ர
வண்ண வண்டி வாடுதணை
என்ர ஆத்தை
நீ
கோலி வரத் திண்டிருந்தன்
என்ர கோலவண்டி வாடுதணை”
இதில் ஆத்தை என தாயைக் குறிப்பதனையும் எணை என வழங்கும் பேச்சொலியினையும் காணலாம்.
இன்னொருத்தி சாவீட்டில் இப்படி கோவித்துக் கொள்கிறாள்.
”சொருகி வச்ச ஏப்பை எல்லாம்
இப்ப
சோறள்ள வந்ததெணை
போட்டுடைச்ச கோழி முட்டை
இப்ப
போர்ச்சேவல் ஆச்சுதணை”
இறந்து போன தன் பெற்றோருக்கு தன் நிலையைப் போய் சொல்லும் படி சாவீடொன்றில் ஒரு பெண் இறந்தவரைப் பார்த்து இப்படி ஒரு விண்ணப்பம் வைத்து ஒப்பாரி வைக்கிறாள்
“ என்ர அப்பு
நீ போய் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்ச
சோத்தால வாடயில்லை
உங்கட சோகத்தால
வாடுதெண்டு
என்ர அப்பு நீ போய் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்ச காசால வாடயில்லை
உங்கட கவலையால வாடுதெண்டு”
இவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை உறவுக்காரர் கூடும் தருணங்களில் நாசுக்காக சொல்லிப் போகும் சமூகப்பாங்கினை இவ்விதமான ஒப்பாரிப்பாடல்களில் சிறப்பாகச் சொல்லக் காணலாம்.
‘மூடிய சமூகமாக வாழ்ந்த யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் மாற்றங்கள் இலகுவாக ஒப்புக்கொள்ளப்படவில்லை.ஆங்கிலேயரால் மாற்றங்கள் வந்த போது அவற்றை வேடிக்கையாகவும் நையாண்டியாகவும் புறந்தள்ள அவை முனைந்தன. இரண்டாம் பதிப்பாக 1933ம் ஆண்டு வெளிவந்த ‘தற்கால நாகரீக வேடிக்கைப்பாக்கள்’ பாகம் மூன்று என்ற நூலில் அதன் ஆக்க கர்த்தா. மண்டைதீவு. பிரம்மஸ்ரீ.அகிலேஸ்வர சர்மா இயற்றிய கீழ் வரும் இப்பாடல் படித்து இன்புறவும் தக்கது. ( யாழ்ப்பாணப் பண்பாடு; மறந்தவையும் மறைந்தவையும், பக்.111)
பிள்ளை பெற்ற பெண்களுக்கும்
பிரண்டி வேணும் - இப்போ
பிட்டு அள்ளித் தின்பதற்கும்
கரண்டி வேணும்
முள்ளுக் கொண்டு இறைச்சிகள் குத்தித்
தின்ன வேணும்
முழுவதும் வெள்ளைக் காரர் போல்
மின்ன வேணும்.
தயிர் கடைந்து பழஞ்சோறுண்டார்
அந்தக்காலம் - கோப்பித்
தண்ணீர் பருகித் தியங்குகிறார்
இந்தக் காலம்
வயிரத் தூண் போல் வாழ்ந்திருந்தார்
அந்தக் காலம் - நொய்ந்த
வாழைகள் போல் தோன்றுகிறார்
இந்தக் காலம்
நாட்டிற் கள்ளை வேண்டாம் என்று
தள்ளுகிறார் - இப்போ
நாகரீக விஸ்கிகுடித்துத்
துள்ளுகிறார்
வீட்டிற் காசை அன்னியர் கையில்
கொட்டுகிறார்
விறண்டிப் பெட்டிக்காகத் தீர்வை
கட்டுகிறார்.’
அது போல கோதுமை மாவின் வரவைப் பழிக்கும் இந்தப்பாடலைப் பாருங்கள் அது,
‘வந்தம் மாவும் வழுவி - எங்க
சொந்தம்மாவும் நழுவி
மந்த மாகத் தழுவி - கோ
தம்ப மாவும் வந்திருக்கிறா - அவவும்
நிந்தமல்ல சொந்தம்மாவைப் பார்’
என்கிறது.
பெண்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை
‘ கோலக் குயில் மொழி சேலைப் பழி விழி
வாலைப் பெண்களலங்காரம் - இந்தக்
காலத்திலே மஸ்லின்சேலை உடுத்தியவர்
காட்சி கொடுத்தல் சிங்காரம்
பட்டிணக்காப்புக் கல் அட்டியல் தோட்டுக்கும்
கெட்டகாலம் வந்து போச்சே - இப்போ
கெட்டிக் கொலுசொடு கொத்தமல்லிக் காப்புக்கும்
கஷ்ட காலமாச்சே’
என்றும்,
‘தாவணி பாவாடை எறிந்தார் - இப்போ
சல்லடையாம சில்க் சைஸில் நல்லுடை செய்வார்
பூ மணவார் ‘பெளடர்’ மணப்பார்
புடவை கட்டும் வேடிக்கை புகலுவேன் கேளும்’
என்றும் பெண்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை பதியும் வாய்மொழி இலக்கியங்கள் ஆண்களிடம் இடம்பெற்று வரும் மாற்றத்தை பின் வருமாறு புகலுகிறது.
‘மூக்குத் துவாரமளவிலே மீசை
முறுக்கவேலாது மிலிற்றறி வீசையாம்
பார்க்கச் சிரிப்பு வருகுது கூழைவால்
பட்ட நாய் போலெல்லோ பாருமடி’
நாளாந்த சொல் வழக்கில் தாயை ஆச்சி என்றும் தந்தையை அப்பு அல்லது ஐயா, அப்பா என்றும் மூத்த தமக்கையாரை அக்கா எனவும் வழங்குதல் மரபாய் இருந்தது. ஆனாலும், பேச்சு வாக்கில் “கொப்பர் என்னவாம்?” கோச்சி என்ன செய்யிறா?” கொக்கா வந்திட்டாவே? என்று உரையாடுவது அண்மைக் காலம் வரை இருந்து வரும் பேச்சு முறை. இவை விளையாட்டுப் பாடல்களில் சிறப்பாகத் தொக்கி நிற்பதைச் சிறுவர்களின் விளையாட்டுப் பாடல்களில் காணலாம்.
ஒழித்துப் பிடித்து விளையாட்டொன்றின் போது ஒருவருடய கண்ணை ஒருவர் பொத்திக் கொண்டு,
“ கண்னாரே கடையாரே
காக்கணுமாம் பூச்சியாரே
ஈயாரே எறும்பாரே
கோச்சி(ஆச்சி) என்ன காச்சினாள்?
(கண் மூடுப்பட்டவ) கூழ்
கூழுக்கு கறி என்ன?
(கண் மூடுப்பட்டவர்) புழு
(கண்னை அவிழ்த்து விட்டு விட்டு)
பெரிய புழுவாய் பிடிச்சுக் கொண்டோடிவா!
கண் பொத்தி விளையாட்டில் இன்னொரு விதமான பாடலும் பாடப்படுவதுண்டு. அது,
“கண்னாரே கடையாரே
காக்கணமாம் பூச்சியாரே
ஈயாரே எறும்பாரே
உங்களம்மா என்ன காச்சினாள்( சமைத்தாள்)
கூழ் காச்சினாள்
கூழுக்குள் என்ன விழுந்தது?
ஈ விழுந்தது.
ஈ எல்லாம் தட்டி
எறும்பெல்லாம் தட்டி
உனக்கொரு காயும்
எனக்கொரு பழமும்
கொண்டோடி வா”
(ஈயும் எறும்பும் பூச்சியும் புழுவும் இப்பாடல்களில் எடுத்தாளப்பட்டமைக்குக் காரணம் தெரியவில்லை)
அது போல பெண்களின் கிள்ளுப்பிராண்டி நுள்ளுப் பிராண்டிப் பாடல் இப்படியாய் போகும்.
“கிள்ளுப் பிராண்டி நுள்ளுப் பிராண்டி
கொக்கா(அக்கா) தலையில என்ன பூ?
முருக்கம் பூ.
முருக்கம்பூவத் திண்டவளே
பாதி விளாங்காய் கடிச்சவளே
பாட்டன் கையை
மு-ட-க்- கு-
வித்துவான் வேந்தனாரின் ஊஞ்சல் பாட்டொன்றில் மெத்தப் புழுகாய் (மிகச் சந்தோஷமாய்) என்ற நாட்டார் சொல்வழக்கு கையாளப்படும் பாண்மை ரசிக்கத்தக்கது.
“தம்பி வந்து பாரடா
தமிழும் ஊஞ்சல் ஆடுறாள்
வெம்பி வெம்பி அழுதவள்
மெத்தப் புழுகாய் ஆடுறாள்”
இன்னுமொரு ஊஞ்சல் பாட்டு ஊரினை மையப் படுத்தி ”கச்சாயிற் புளியிலே ஊஞ்சலும் கட்டி கனகராயன் தோப்பிலே தோட்டமும் செய்து” என வரும்.
குடும்ப உறவுகளில் காதல் ஒரு விலத்தப்பட்ட சமாச்சாரமாகவே யாழ்ப்பாணத்து மக்களால் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. இருந்தாலும் காதலும் நிகழ்ந்தே வந்திருக்கிறது. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? பெரும்பாலும் கட்டுப்பாடான கிடுகுவேலிக் கலாசாரத்தில் பெண்ணுக்கு விடுதலை கிணற்றடிக்குப் போகும் வேளை தான். குடத்தில் தண்ணீர் எடுத்து வரும் பெண்ணைக் கண்டு விட்ட ஒருவன் பாடுகிறான் இப்படி.
“தண்ணிக் குடமெடுத்து
தனி வழியே போற கண்ணே
தண்ணிக் குடத்தினுள்ளே
தழும்புதடி என்மனசு”
அப்படியே சில காலம் போக சம்மதம் கேட்கும் நாள் வருகிறது. இப்படிச் சொல்கிறான் அவன்
“ சந்தனப் பொட்டடி நானுனக்கு
சாந்து சவ்வாதடி நீ எனக்கு
சந்தனப் பொட்டுக்கும் சாந்து சவ்வாதுக்கும்
சம்மதமோ முத்து வீராயி?
குத்துவிளக்கடி நானுனக்கு
கொவ்வைப் பழமடி நீ எனக்கு
குத்து விளக்குக்கும் கொவ்வைப் பழத்துக்கும்
சம்மதமோ முத்து வீராயி?
காதலிக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து குடும்பத்தார் வைக்கும் சட்டதிட்டம் பற்றி கீழ் வரும் இப்பாடல் சிறப்பாகச் செப்புகிறது.
“கடப்பைக் கடந்து
காலெடுத்து வச்சியெண்டால்
இடுப்பை ஒடித்து வேலி
இலுப்பையின் கீழ் போட்டுடுவேன்
வாசல் கடந்து வழிகண்டு போனியெண்டால்
வேசை மகளே உன்னை
வெட்டுவேன் இரண்டு துண்டாய்”
என்கிறார்கள் குடும்பத்தார்கள். எனினும் ஒரு வழிகண்டு காதலன் வீட்டு வாசல் வரை வந்து விட்டான்.அப்பாவிக் காதலனுக்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. அவன் மீது பச்சாதாபப் பட்டு பெண் பாடுகிறாள் இப்படி.
“வட்டமிட்டு வட்டமிட்டு
வாசலுக்கு வாறவர்க்கு
திட்டமொன்று சொல்ல
திறம் போதாதென் கிளிக்கு”
மேலும்,
“ ஆளரவம் கண்டு ஆக்காண்டி கத்துதையோ
ஆராலும் கண்டாலும்
என் அன்புக் கிளி என்ன செய்யும்?
எனப் பரிதவிக்கிறாள்.
திறம் - திறமை: கிளி- அன்புக்குரியவர்களை ; ஆண் பெண் இரு சாராரையும் கிளி, குஞ்சு, ராசாத்தி, செல்லம் என அழைக்கும் மரபு யாழ்ப்பாணத்தவர் மத்தியில் உண்டு. அது இங்கும் எடுத்தாளப்பட்டிருப்பது காண்க.
வீட்டில் சந்தேகம் பற்றிக் கொண்டு விட்டது. இவ்வளவு நேரமும் என்ன செய்தாய் என்று கேட்கப்படும் கேள்விக்கு பெண் இப்படிச் சொல்கிறாள்.
“ கோழி அடைத்து வைத்தேன்
கொழி அரிசி குத்தி வைத்தேன்
தாழ துலா தாழ்த்தி
தண்ணி நிறைத்து வைத்தேன்
தேங்காய் துருவி வைத்தேன்
தேவைக்கு அரைத்து வைத்தேன்
பாங்காய் சமைப்பதற்கு
பட்ட கஸ்ரம் இவ்வளவோ?
எனக் கேட்கிறாள். அவள் வீட்டுக்குள் அடைக்கப் பட்டு விட்டாள். காதலனுக்கோ அவளைக் காண வழி இல்லை.அவன் வந்தார் வரத்தாரைப் பார்த்து பாடுகிறான்.
“சிட்டுப் போல நடையழகி
சிறுகுருவித் தலையழகி
பட்டுப் போல மேனியாளை
பாதையிலே பாத்தீங்களோ?
கோரை மயிரழகி
குருவிச்சை பொட்டழகி
பவளம் போல் பல்லழகி
பாதையிலே பாத்தீங்களோ?
பட்டம் போல நெற்றி
பவளம் போல வாயழகி
முத்துப் போல பல்லழகி
முன் போகக் கண்டீரோ?
வாகை மரமேறி
வடக்கே தெற்கே பார்க்கும் போது
தோகை மயில் போல
தோகையாளைக் கண்டீரோ?
குழந்தைகளைக் கொஞ்சுகின்ற பாடல்கள் பல இன்று வழக்கொழிந்து போய் விட்டன. குழந்தைகளையும் தாயையும் பராமரிக்கும் முறை பாரம்பரிய இயற்கை வைத்திய முறையைப் பெரிதும் சார்ந்திருந்தது. குழந்தை பெற்ற தாயை 5 வகையான இலைகுழைகளைப் போட்டு அவித்த சுடு நீரினால் குளிப்பாட்டுவார்கள். குழந்தைக்கு நாவூறு படாமல் கறுப்புப் பொட்டுக் காச்சி நெற்றியிலும் கன்னத்திலும் வைப்பார்கள்.
அப்போது பாடுகின்ற பாடலாக
“காக்கா காக்கா மை கொண்டுவா
காலைக் குருவி பழம் கொண்டு வா
கிளியே கிளியே ஓடி வா
கிண்ணத்தில் பால் கொண்டு வா
என்று பாடுவார்கள். அது இன்னொரு விதமாக,
காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கு குழந்தைக்கு தேன் கொண்டு வா
கிளியே கிண்னத்தில் பால் கொண்டு வா
எனவும் பாடப்படுவதுண்டு.
குழந்தைக்கு நாள் தோறும் காலையில் நல்லெண்ணை வைத்து அங்கங்களை நன்றாகப் பிடித்து விட்டு அவ் அங்கங்கள் சிறப்பாக வரும்படியாக நீவி காலை இள வெய்யிலில் கிடத்துவார்கள். குறிப்பாக மூக்கு, காது, முன் வாய், கை கால் விரல்கள், இவைகளைப் பிடித்து விடுவதோடு தலை உருண்டையாக வருவதற்காக ஏணை கட்டி ஏணையிலும் போடுவார்கள். குழந்தைகளுக்கு கை கால்களைப் பிடித்து விடும் போது அவற்றுக்கு சில பாடல்களையும் கதை பேச்சுக்களையும் சொல்லிய படி செய்வார்கள்.
குழந்தை சற்றே வளரும் பருவத்தில் குழந்தையை மடியில் இருத்தி சாய்ந்தாடல் பாடலும் சப்பாணி வெட்டு பாடலும் பாடி அவர்களோடு ஆடுவதும் வழக்கம்.
“சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப் பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புராவே சாய்ந்தாடு
பச்சைக் கிளியே சாய்ந்தாடு
பவலக் கொடியே சாய்ந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு
தோகை மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பக தருவே சாய்ந்தாடு
கண்டே தேனே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு”
என பாடி மகிழ்வர். குழந்தை கை கொட்டுவதை சப்பாணி கொட்டுதல் என்பர். அவ்வாறு செய்கின்றபொழுதுகளில் கால்களையும் கைகளையும் மடக்கி சில பாடல்கள் பாடப்படுவதுமுண்டு. அவை கை கால்களை அசைவிக்கும் பயிற்சி முறைக்காக செய்யப்பட்டு வந்தது. அவற்றுக்கான பாடல்கள் ஒரு கருத்து சார்ந்ததன்றி எதுகைக் மோனை சார்ந்ததாக இருக்கும். உதாரணமாக;
ஆலாப் பற பற
அழகு பற பற
கொக்கு பற பற
கோழி பற பற
குருவி பற பற
என காணும் பட்சிகளைக் காட்டிப் பாடுவது போல இருக்கும்.
இது போல
“ஆத்து வாழை குலை போட
ஆரனும் பெண்டிலும் கூத்தாட
முத்தத்து வாழை குலை போட
முத்தனும் பெண்டிலும் கூத்தாட
வேலியில் வாழை குலை போட
வேலனும் பெண்டிலும் கூத்தாட
பக்கத்து வாழை குலை போட
பத்தனும் பெண்டிலும் கூத்தாட
என்ற விதமாகப் பாடுவார்கள். இவற்றுக்கு கால்களைச் சப்பாணி போல மடித்தும் கைகளை மேலும் கீழும் உயர்த்தியும் அபிநயம் செய்த படி பாடி மகிழ்வர்.
தாய் மார் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடும் பாடல்கள் தனித்திறம் தனித்தரம் வாய்ந்தவை. தொட்டிலுக்குள் நித்திரைக்காக குழந்தையை விட்டு தொட்டிலை ஆட்டிய படி பாடப்படும் பாடல்கள் தாய்மாரின் எண்ணத்துக்கும் கற்பனைக்கும் வளம் சேர்ப்பவை. மனதுக்கு எட்டிய பாங்கில் அப்பாடல்கள் அமைந்திருக்கும்.பொதுவாக எவ்வகைத் தாலாட்டிலும்
“பச்சை இலுப்பை வெட்டி
பால் வடியத் தொட்டில் கட்டி
தொட்டிலுமோ பொன்னாலே
தொடு கயிறோ முத்தாலே
முத்தென்ற முத்தோ நீ
முது கடலின் ஆனி முத்தோ
சங்கீன்ற முத்தோ
சமுத்திரத்தின் ஆனி முத்தோ? போன்ற வரிகளும்
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராடித்து நீயழுதாய்?
கண்மணியே கண்ணுறங்காய்
கண்ணை அடித்தது யார்?
கற்பகத்தைத் தொட்டது யார்?
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடித்தாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் பண்ணி வைப்போம்
பாட்டி அடித்தாரோ
பாலூட்டும் கையாலே?
அத்தை அடித்தாளோ
அமுதூட்டும் கையாலே?
மாமன் அடித்தானோ
மகிழ்ந்தெடுக்கும் கையாலே
அண்ணன் அடித்தானோ
அணைத்தெடுக்கும் கையாலே”
போன்ற விதமாக அமைந்திருக்கும்.
இவ்வாறான பாடல்கள் தனியே யாழ்ப்பணத்துத் தமிழுக்கு மட்டும் உரித்தானவையல்ல என்ற தகவலையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவை பரவலாக வன்னி, கிழக்கு மாகாண தமிழ் வாழ்வியலிலும் கலந்தே இருந்தன. தனியே ஒரு குறிப்பிட்ட மாவட்டத்துக்கோ அங்குள்ள ஒரு குறுகிய சமூக மக்களுக்கோ சொந்தமானவையல்ல. ஆனாலும் மேலே குறிக்கப்பட்டுள்ள பாடல்களில் பல யாழ்ப்பாணத்து வாசனையை மிகுதியாகக் கொண்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்பது என் அபிப்பிராயம்.
கிழக்கு மாகாணம், வன்னி நிலப்பகுதி மற்ரும் மலையகப் பகுதிகளில் வழங்கப்பட்டு வந்த பாடல்கள் அவ் அவ் மண்சார்ந்த தொழில் சார்ந்த வாழ்வியல் சார்ந்த வகைகளில் பல தனித்துவமான கூறுகளையும் அழகியலையும் சமூக வெளிப்பாடுகளையும் கொண்டமைந்துள்ளன.
சந்தர்ப்பம் வாய்த்தால் அவைகளையும் தனித்தனியாக பதிவேற்ற ஆவல்.