Saturday, May 19, 2018

புத்தகங்களும் மூன்று கேள்விகளும்...




கடந்த ஏப்பிரல் 23ம் திகதி புத்தக தினத்தைக் கொண்டாடினோம். 

அது குறித்த எந்த விழிப்புணர்வும் எனக்கு இருக்கவில்லை.- ஒரு அரச வானொலி ஊடகம் அது குறித்து வினாக்கள் தொடுக்கும் வரை.- அந்த ஒலித்தொகுப்பைக் கேட்ட போது தான் வில்லியம். ஷேக்‌ஷ்பியரின் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றாக அமைந்த ஏப்பிரல் 23ஐ புத்தக தினமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தி இருந்தது என்பது தெரியவந்தது. கூடவே ஷேக்‌ஷ்பியர் ஆங்கில இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்புக் குறித்தும் ஆங்கிலம் என்ற மொழிக்கு அவர் உருவாக்கிக் கொடுத்த சுமார் 2000 வரையான புதிய சொற்கள் குறித்தும் அவர்  எப்படி ஆங்கில மொழியை தன் பங்களிப்பால் வளமாக்கி வைத்தார் என்பது பற்றியும் புதிய தகவல்களைப் பெற முடிந்தது.

தமிழுக்கு அப்படி வளம் சேர்த்தோர் யார் யார் எல்லாம் என்பது குறித்த சிந்தனை அங்கிருந்து ஆரம்பித்தது எனக்கு....

அது அவரவர் சிந்தனை, ஆழம், அறிவு, தேடல், பார்வைகள், ஆர்வம், இருப்பு குறித்த பின்னணி, அனுபவங்கள்  இவைகள் காரணமாக  வேறுபடலாம். அவைகளை அவரவர் சிந்தனைக்கு விட்டுவிடுவது பாதுகாப்பனதும் சிறந்ததுமாகும். இல்லையேல் இலங்கையர் இவர் தான் என தமிழ் நாட்டினர் இவர் தானென இலக்கு திசைமாறிப் போய் விடும்.

இப்போது புத்தகங்களில் இருந்து சடுதியாக தமிழுக்கு திசை மாறினோமே அது மாதிரியாக....

{ ஆங்கிலேயர்கள் என்ற ஓர் இனம் உருவாகியது குறித்தும் ஆங்கில மொழி உருவாகியது குறித்தும் விபுலானந்த அடிகளார் ஆங்கில வாணி என்றொரு கட்டுரையில் அழகாக எழுதிச் செல்கிறார். ஆர்வமூட்டக் கூடிய அந்தக் கட்டுரையில் முழு உலகிலும் அப்பப்போ சம காலத்தில்  நடந்த சம்பவங்களை சொல்லிச் செல்வதனூடாக முழு உலக அரங்கினையும் அங்கே ஒரு மேடை நாடகத்தைப் பார்க்கும் பாங்கிலான மொழிநடையில் விபரித்துச் செல்லும் அழகில் அவரின் பண்பு நலமும் மிளிரக் காணலாம். ஓரிடத்தில்,
 ’திருநாவுக்கரசு சுவாமிகள் நமது நாட்டிலிருந்த காலத்திலே அராபி நாட்டு மக்கா மாநகரிலே முகம்மது நபி அவதரித்தார்.’எனச் சொல்லிச் செல்வது சும்மா ஒரு உதாரணம் தான். ( இலக்கியக் கட்டுரைகள்; விபுலானந்த அடிகள், ஆங்கில வாணி .1973; பக்.84) }

அது நிற்க,

நாங்கள் புத்தகங்களுக்கு வருவோம்.

அவர்கள் மூன்று கேள்விகளைக் கேட்டார்கள்.

1. இதுவரை நீங்கள் படித்த புத்தகங்களுள் உங்கள் மனதில் இன்றும் பதிந்து போயிருக்கிற புத்தகம் எது? ஏன்?

2. அண்மையில் நீங்கள் படித்த அல்லது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் எது?

3. புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என்ற கூற்றுக் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்.... உடனடியாக இவற்றுக்கு பதில் வரவேண்டும் என்பது நிபந்தனை.:)

.........................

என்னைப் பொறுத்தவரை என் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் எது என்று கேட்டால் அது ராகுல சங்கிருத்தியாயன் எழுதி தமிழில் மொழிபெயர்ப்பாக வந்த ‘வொல்காவில் இருந்து கங்கை வரை’ என்ற புத்தகத்தை மிக உறுதியாகச் சொல்லுவேன். ஏனென்று கேட்டால் ஒரு புத்தகம் ஒரு மனிதனின் சகல இருப்புகளையும் மறுசிந்தனைக்கு உட்படுத்த வைக்கும் ஒரு ரசவாதத்தை அது நிகழ்த்தியது தான்.

ஒரு ஒட்டுமொத்த மானுடத்தின் வளர்ச்சியினை மிருகமாக நாம் தோன்றி வாழ்ந்த காலத்தில் இருந்து ஒரு யுகப் பயணமூடாக நம்மை அழைத்துச் சென்று, எப்படி மனித இனம் படிப்படியாக விலங்குகளில் இருந்து வேறுபடத் தொடங்கியது; சந்தித்த சவால்கள் எத்தனை; பெண் மனித விலங்கின் ஆற்றலும் வழிநடத்தலும் எவ்வாறு இருந்தது; பின்னர் நிலையான குடியிருப்புகளும், பயிர்ச்செய்கையும்,ஆயுதங்களும், மொழியும் உருவாகிய பாங்கு; போர்கள்; அரசு ஒன்றின் உருவாக்கம்; குழு வாழ்க்கை இயல்பு; தோன்றிய பின்னணி, காலப்போக்கில் பொருளாதாரமும் அதிகாரமும் அரசும் எவ்வாறு தோற்றம் பெற்றது; முக்கியமாக சமயங்களின் உருவாக்கம் தோன்றியதன் உள்லார்ந்த அர்த்தங்கள்......எனத் தொடரும் அது கதை உருவில் வசீகரமாக விபரித்துச் செல்லும் பாங்கில் வடிவமைக்கப் பட்டிருந்தது.

உங்கள் முழு நம்பிக்கைகளையும் பார்வைகளையும் மறுவாசிப்புக்கும் மறுபார்வைக்கும் உட்படுத்த வல்ல அந்தப் புத்தகம் என் அறிவை விசாலிக்கச் செய்ததில் - அது கூடத் தவறு - மறு பார்வைக்கு - முழு சமூகமும் பண்பாடும் வரலாறும் வாழ்க்கைமுறையும் கட்டமைத்து நம்பவைக்கப் பட்ட சகல கருத்துருவாக்கத்தையும் புத்தகம் ஒன்றால் புரட்டிப் போட முடியும் என்று நான் அறிந்து கொண்ட வகையிலும் இந்தப் புத்தகம் என்னால் மறக்க ஒண்ணாதது. அறிவுக்கு கிடைத்த பெரு விருந்து அது! இந்தப் புத்தகத்தை நான் என் பல்கலைக்கழக நாட்களில் வாசித்திருந்தேன்.

கத்தி இன்றி ரத்தம் இன்றி புரட்சி ஒன்று நடக்குது பார்!

ஆனால், அதன் பின் வாழ்க்கை வெள்ளத்தில் நீந்தும் பல்லாயிரம் கோடி உயிர்களுள் ஓடும் ஒரு சிறு காய்ந்த சருகு நான் என்ற ஞானத்தை வாழ்க்கையும் கீழ்க்கண்ட சங்கப் பாடலும் வழங்கிய பின்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

இப்படி ஒரு ஞானம் வந்த பிறகு; அதாவது வெள்ளத்தின் வழி ஓடும் ஒரு காய்ந்த சருகு ஒன்றின் பயணம் தான் வாழ்க்கை என்பதை அனுபவம் சொல்லித் தந்த பிறகு, வாசித்த ஒரு புத்தகம் மனதை சாந்தப் படுத்தியதில்; வருடிக் கொடுத்ததில்; ஆதரவு தந்ததில் பல கேள்விகளுக்கான விடைகளை நம் அறிவுக்கு ஏற்ற விதத்தில் விளக்கம் தந்ததில் என்னை மிகவும் கவர்ந்தது.

அந்தப் புத்தகம் ‘ தன்னை அறியும் விஞ்ஞானம்.’ ஹரே ராமா ஹரே கிருஷ்னா இயக்கத்தாரின் வெளியீடாக வந்த இந்தப் புத்தகம் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். மிக அருமையான மொழிபெயர்ப்பு என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். விஞ்ஞானம் விட்ட வெற்றிடத்தை மிகச் சிறப்பாக நிரப்பவல்ல இந்தப் புத்தகம் உங்கள் ஆண்மா கேட்கும் கேள்விகளுக்கு ஒரு குழந்தைக்கு தாய் காட்டும் பரிவோடு விளக்கங்களைத் தருகிறது. அதில் எந்த ஒரு மதப்பரப்பல் அறிகுறிகளும் இல்லை. இந்து தத்துவத்தின் அடிப்படையும் அது தானே! ‘தென்னாடுடய சிவனே போற்றி; எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற விரிந்த அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் harmony கோட்பாட்டுச் சிந்தனை அங்கும் தொனிக்கக் காணலாம்.

அது, அதாவது, இந்த ‘உலகம் தழுவிய சிந்தனைக் கோட்பாடு’ ஒரு தமிழ் கோட்பாட்டுச் சிந்தனையும் கூட. இது குறித்தே ஒரு தனிப்பதிவு எழுதலாம்....

இதில் என்னை நானே உள்நோக்கிப் பார்க்கத் தூண்டியதும் முடிந்ததுமான விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு புத்தகங்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிரான விடயங்களைப் பிரதி பலிக்கின்றன என்ற விசித்திர தோற்றப்பாடு தான். என்னே ஒரு contrast!

சிலவேளைகளில் மனதுக்கும் அறிவுக்கும் போட்டி ஒன்று வருமே அது மாதிரி. ஒன்று அறிவைத் திருப்திப் படுத்தியது; மற்றயது மனதைத் திருப்திப் படுத்தியது...

சரி, இந்த ஒரு கேள்விக்கே இப்படி ஒரு நீண்ட பதிவு ஆகி விட்டதால் இத்தோடு நிறுத்திக் கொள்ளுகிறேன்.

இந்த முதலாவது கேள்விக்கான உங்கள் அபிப்பிராயங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு இருக்கிறேன்.