Sunday, August 5, 2018

அந்தப் புறா குறித்து.....மிருகங்கள், பறவைகள் குறித்து கூர்ந்து அவதானிக்கும் மனநிலை அவசர உலகில் பலருக்கும் வாய்ப்பது அரிது. நானும் அவர்களில் ஒருத்தி.

கடந்த சில வாரங்களின் முன்னர் மல்லிகைச் செடி வைத்திருக்கும் பூச்சாடியினுள்ளே வருவதும் மண்ணைக் கிண்டிக் கிளறுவதும் பறப்பதுமாக ஒரு சிறு புறா வந்து போய்க் கொண்டிருந்தது.

ஏற்கனவே இவைகள் இங்கு வந்து தங்கி விடக் கூடாது என்பதற்காக வலை ஒன்று வாங்கி அடைத்து விட்டிருந்தது என் பொருள்முதல்வாய மனநிலை. ஒரு விதமான ‘என் இடம்’ என்ற ஒரு அடாவடித்தனம் எனவும் இதனை மொழிபெயர்க்கலாம்.

இருந்த போதும் கட்டிய வலைகளை மீறி; அதற்குள் நாம் விட்டிருக்கும் ஒரு சிறு பலவீனத்தைக் கண்டு கொண்டு, அதற்கூடாகத் தம் மெல்லிய உடலை வளைத்து நெளித்து வெகு இலாவகமாக உள்ளே வந்து விடுகின்றன அவை களில் இரண்டு....

’இந்த உலகம் சகல உயிரினங்களுக்குமானது’ என்ற உண்மையை எந்த ஒரு கல்வித்திட்டங்களும் போதிப்பதோ சொல்லிக் கொடுப்பதோ இல்லைத் தானே? நாம் சொல்லிக் கொடுப்பதெல்லாம் ’வல்லது வாழும்’ என்ற தத்துவக் கோட்பாட்டைத் தானே?

சரி அது போகட்டும்.

பிறகு ஒரு நாள் எந்த ஒரு முன்னறிவித்தலும் இல்லாமல் அதாவது கூடு கட்டியோ அல்லது வேறெந்த முகாந்திரங்களும் இல்லாமல் அச் சிறு புறா பூச்சாடிக்குள் முட்டை இட்டுவிட்டிருந்தது.

மறுநாள் இன்னொரு முட்டை.

இதென்னடா அநியாயமாயிருக்கு என்று பார்த்தால் அவர்கள் இரண்டு பேராக வேறு அடைகாக்க ஆரம்பித்தார்கள். ஆனால், எப்போதும் யாராவது ஒருத்தர் முட்டையோடு ஐக்கியமாக விட்டுப் பிரியாது இருந்தார்கள்.

ஆனால் இரவுகளின் போது இரு முட்டைகளும் தனியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த என் தங்கை ‘இது புது புருஷன் பெண்டாட்டி போல; பொறுப்பில்லை’ என்றாள். ஆனால் போட்டி போட்டுக் கொண்டு தம்பதியர் இருவருமாக அதிகாலையில் ஓடி வரும் ஆவலைப் பார்த்தால் அவ்வாறு இருக்கும் போலவும் தெரியவில்லை. பிறகு ஒரு நாள் heater போடாத இரவொன்றில் ஒரு புறா தொடர்ந்து அடைகாக்கும் போது தான் ‘ஓஹோ....heater வெளியே தள்ளும் குளிர் தான் அவைகளை இருக்க விடாது துரத்துகிறது என்பதைக் கண்டு கொண்டோம்.

இப்போது என்ன குளிரெனினும் கம்பளி ஆடைகளை அதிகம் அணிந்து கொள்ளுகிறோம். குறிப்பாக ‘குளிர்கிறது’ என்று அடிக்கடி முறைப்பாடு சொல்லும் என் தந்தையார் இப்போதெல்லாம் முணுமுணுப்பதில்லை. எல்லோரும் அதற்கேற்ப நம்மை நாமே அனுசரிக்கப் பழகிக் கொண்டோம்.

இவைகளைச் செய்கையில் தான் என்ன ஒரு சந்தோஷம்!

ஆனால் அவர்களுக்கு நம்மைக் குறித்து எந்த ஒரு பயமும் இருப்பதாகத் தோன்றவில்லை. நாம் அடிக்கடி அந்தப் பக்கம் உடுப்புகள் காயப் போட, எடுக்க, கூட்ட,  பூஞ்செடிகளுக்கு நீரூற்ற பெரிய பாத்திரங்களைக் கழுவினால் காய வைக்க என பல கருமங்களுக்காக அந்தப் பக்கம் போக வேண்டி இருக்கும்; பெரும்பாலும் ஒவ்வொரு நாளும். அவைகளுக்கு மிக அருகில் போவோமெனினும் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அமர்ந்திருக்கும் அப்புறா  என்னை பெயர் சொல்ல முடியா ஒரு உன்னத மனநிலைக்கு என்னை; என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தாரையும் இட்டுச் செல்லும்.

அது எம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை எத்தகைய தளத்தில் ஏற்பட்ட ஒரு நம்பிக்கையாக அது இருக்கக் கூடும்?

தம் இடத்தை இன்றுவரை ஒரு எச்சத்தைத் தானும் இட்டு அசிங்கப்படுத்தவில்லை அவைகள். சுள்ளிகள், குச்சிகள் கொண்டுவந்து தமக்கான கூட்டையும் அவை அமைத்துக் கொள்ளவில்லை. சிலவேளை குச்சிகளைக் கொண்டுவர வகை தெரியாதிருந்திருக்கக் கூடுமோ...?

இப்போது நம்முடய ஆடைகள் காயப்போடும் கொடி மற்றப்பக்கமாகத் திரும்பி விட்டது. யாரும் அதிகம் அதற்குள் நடமாட்டம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை சொல்லாமலே எல்லோரும் அனுசரிக்கிறோம். வெளியே எங்கேயாவது போய் விட்டு வந்தாலும் கண் நேரடியாக அவைகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதைக் கண அவாவுகிறது...

இப்பொழுதெல்லாம் எங்களுக்கிருக்கிற ஒரே கவலை இவைகள் சுகமாகக் குஞ்சு பொரித்து அவைகளை வளர்த்து ஆளாக்கி அதிலும் முக்கியமாக அண்டன் காக்கைகளின் கூரிய அலகுகளில் இருந்து தன் குஞ்சுகளைக் காத்து பின் சுதந்திரமாக அவை பறந்து போக வேண்டுமே என்பது தான்.

உண்மையில் இந்த உலகை; பிரபஞ்சத்தை இன்னொரு உயிரினத்தோடு பகிர்ந்து கொள்ளும் போது ஏற்படும் உவகைக்கு வேறேதும் ஈடு இணை இல்லை!

உண்மையாக!

2 comments:

  1. உண்மை தான் ....சக மனிதனுக்கே இடத்தை பகிர்ந்து கொள்ள மனம் இடம் கொடுக்குதில்லை இதில் நாம் எனைய உயிரினங்களுக்கு இரக்கப்படுவதற்கு ஒர் உன்னத மனநிலை வேண்டும்...அருமையான பகிர்வை பகிர்ந்து கொண்டமைக்கு ந‌ன்றிகள்.

    ReplyDelete
  2. நன்றி புத்தன்.
    இதில் இரக்கம் என்று எதுவுமில்லை. நாங்கள் வெறும் பார்வையாளர்கள். பறவைகள் அதிலும் குறிப்பாக புறாக்களின் உலகில் நம்மை அவர்கள் நம்பிக்கையான ஓரிடத்தில் வைத்திருக்கத் தூண்டிய மனித குணாம்சம் எதுவாக இருக்கக் கூடும் என்பது குறித்த கேள்வி தான் எனக்கிப்போது.....

    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி புத்தன்.

    ReplyDelete