Wednesday, February 13, 2019

கிளிகள் அமர்ந்து போன கிளைகள்....

விருட்சமொன்று வீழ்த்தப்பட்ட போது.....

இந்த மனநிலையை எவ்வாறு சொல்வதெனத் தெரியவில்லை.

கலித்தொகையில் தோழி ஒருத்தி சொல்வாளே! அடியேய் இந்தப் புன்னை மரத்தடியில் காதலனைச் சந்திக்க வெட்கமாக இருக்கிறது. இவள் எனக்கு தங்கை முறை. என்னோடு சேர்ந்து வளர்ந்த புன்னைமரத்தாள் இவள் என்பது மாதிரி....

முல்லையும் பூத்தியோ என்று இன்னொருத்தி கோவித்துக் கொண்டாளே; தன் தலைவன் சாந்தன் போருக்கு போய் வீரமரணம் அடைந்த பின்னாலும் என் வீட்டுக் கொல்லையில் இப்படி பூத்துக் குலுங்கி சந்தோஷமாக இருக்கிறியே என்று முல்லையோடு சொந்தம் கொண்டாடியது போல.....

என்வீட்டுக் கொல்லையிலும் இருந்த ஒரு விருட்சத்தை; ஒவ்வொரு நாள் காலையிலும் லொறிக்கிட் கிளிகளும் குயில்களும் பெயர்தெரியாத மஞ்சள் மூக்குக் குருவிகளும் மகிழ்ந்து குலாவ அடைக்கலம் கொடுத்து, நமக்கு குளிர்மையான நிழலும் கண்ணுக்கு இதமான இயற்கைக் காட்சிகளையும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் தந்து கொண்டிருந்த அவளை ஒரு மணித்தியாலத்துக்குள் இருந்த இடமே தெரியாத படிக்கு கொலை செய்து கொன்றொழித்து போய் விட்டார்கள் கட்டிடக் காவலர்கள்.

31.1.19 என் வீட்டுத் தோட்டத்தில்...

31.1.19 என் வீட்டுத் தோட்டத்தில்...

5.2.2019 என் வீட்டுத் தோட்டத்தில்...


5.2.2019 என் வீட்டுத் தோட்டத்தில்...

6.2.2019 விருட்சம் ஒன்று வீழும் முன்...

6.2.2019 வீழ்ந்த இடம்...

6.2.2019 அடையாளமே அற்றுப் போன அதன் இடம்...


அதுவும் என்னவோ மற்றெல்லா மரங்களையும் விட அதி விரைவாக மதாளிச்சு வளர்ந்து என் வீட்டு ஜன்னல் ஓரமாக கிளைவிட்டு ஏதோ சொந்தக்காரர் போல உரிமையோடு காற்றுக்கு ஆட ஆரம்பித்து ஒரு 2, 3 வருஷம் தான். என் வீட்டு மல்லிகையையும் முல்லையையும் கூட அதில் ஏற்றி விடலாம் என ஆவல் கொண்டிருந்தேன்.

அதன் வேர் என்னவோ அத்திவாரத்தைப் பெயர்க்கப் பார்க்கிறதாம்.....

கிளிகள் அமர்ந்து போன அந்தக் கிளைகள்...

அந்தப் பெயர் தெரியாத பாக்கியவதி போய் விட்டாள். இந்த மல்லிகையும் முல்லையும் தான் எனக்கிப்ப இயற்கைத் துணை. மல்லிகையும் முல்லையும் இப்ப என் வீட்டு ஜன்னலோரம் சிரிச்சுக் கொண்டிருக்கினம்.

இந்த மல்லிகைகளும் முல்லைகளும் இருக்கே! இவை நள்ளிரவில் தான் முகை அவிழ்கின்றன. இந்தக் கோடைகால இரவுகளில் ஜன்னலைத் திறந்து வைத்து விட்டு உறங்கினால் இந்த பூ வாசனை அறைக்குள்ளே வந்து ஒரு விதமான சங்கேத பாஷையில் இயற்கையின் உன்னத  ரகசியங்களைப்  பேசிச் செல்கிறது.

இந்தப் பூக்களைக் குறித்தும் அதன் வாசம் குறித்தும்  மேலும் தகவல்களை அறிய கூகுள் பண்ணிப் பார்த்த போது தமிழில் பூவின் பருவங்கள் குறித்து அழகிய ஒரு தகவல் கிட்டியது.

1. அரும்பு: பூ ஒன்று தோன்றும் அறிகுறி தென்படும் நிலை.

2. நனை: அரும்பு வெளியில் தெரியும் நிலை.

3.முகை: நனை முத்துப் போல உருப்பெறும் நிலை.

4. மொக்குள்; நறுமணத்தைத் தனக்குள் கொண்டிருக்கும் நிலை. ( முகை மொக்குள் உள்ளது நாற்றம் - திருக்குறள்)

5. முகிழ்: வாசத்தோடு மலரும் நிலை

6. மொட்டு: கண்ணுக்கு தெரியும் குவிந்திருக்கும் நிலை

7. போது: மொட்டு மலரத் தயாராகி இருக்கும் புடைத்துப் பெருத்த நிலை.

8.மலர்: புதிதாக மலர்ந்த நிலை

9.பூ: பூத்திருக்கும் நிலை

10. வீ: உதிரும் நிலைக்கு வந்து விட்ட பூ.

11.பொதும்பர்: ஒரு கெட்டில் பூக்கள் பலவாக குலுங்கி நிற்கும் நிலை.

12. பொம்மல்: உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்.

13. செம்மல்: உதிர்ந்த பூ பழைய பூவாக முதிர்ச்சி பெற்று சருகாகும் நிலை.

பாருங்கள் ஒரு பூவின் சகல பருவங்களையும் உன்னிப்பாகக் கவனித்து அதன் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி, துல்லியமான விளக்கத்தைக் கொண்டிருக்கும் ஒரு மொழி எத்துணை சிறப்பு வாய்ந்தது!

இவற்றைப் பார்த்த போது தமிழின் அழகு, செழுமை, நுட்பமாக ஒவ்வொன்றையும் பார்த்து பெயர் சூட்டி நிற்கும் அதன் மொழிவளம் ; அதன் பிரதிநிதிகளாக நாம் இன்று இவைகளை எல்லாம் மறந்து விட்டு நிற்கும் நிலை... இவைகள் எல்லாம் மனத்திரையில் வந்து மோதுது.....

அந்தக் கிளிகள் அமர்ந்து விட்டுச் சென்ற அந்தக் கிளைகளைப் போலவே இந்த மொழியும் இன்று சோபையிழந்து போயினவோ? ......

இது போல பருவ நிலைகள்; ஆண்பெண் பருவங்கள், உறவுப் பெயர்கள், காற்று, தண்ணீர் என ஒவ்வொன்றுக்கும் எத்தனை நுட்பமாகத் தனித்தனி சிறப்புச் சொல் வைத்து அழைத்த தமிழ் எத்துணை எழில் வாய்ந்தது. ஆண்களுடய தலைமுடியை.............என்றும் பெண்களுடய தலைமுடியை  குந்தளம் என்றும் அழைத்ததாக எங்கோ படித்த ஞாபகம்.

கூந்தலுக்கான பெயர்களே பல உள. அவற்றுள் சில இவை. கூழை, ஓதி,சிரியல், சுரியல், கோதை, கூரல், கொப்பு, முச்சி, சிகழிகை, மராட்டம், பரிசாரம், குந்தளம், விலோதம், மிஞ்சிகம், தம்மிலம் என்பவை அவற்றுள் சில.

இதிலும் அதன் அலங்காரங்கள் பல திறத்தன. உச்சிமுடிப்பு, சுருட்டி முடிப்பு, தொகுத்து முடிப்பு, பின்னி முடிப்பு, பின்செருகி முடிப்பு, வகுத்து முடிப்பு, விரித்து முடிப்பு, முடித்து விரித்தல் எனச் சிகை அலங்காரங்கள் இலக்கியங்களில் பலவாறாக விரிகின்றன.

அப்பாப்பா.... தமிழ் தான் எத்தனை நுட்பமானது.

கிளிகள் அமர்ந்து போன கிளைகளைப் போல இன்று தமிழும் அதன் சிறப்பினை உதிர்த்துவிட்டு  நிற்பதைப் போல ஓருணர்வு....


மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும் செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல -  நூற்கியந்த
சொல்லின் வனப்பே வனப்பு. (சிறுபஞ்ச மூலம் 35)

( உகிர் - நகம்.)