Monday, November 11, 2019

ஆசி.கந்தராஜாவின் ’கள்ளக் கணக்கு’ குறித்து....


'ஒரு சிறுகதையில் இருந்து சிறுகதையைக் கழித்து விட்டால் எது மிஞ்சுகிறதோ அதைத் தான் வாசகன் ’வீட்டுக்கு’ எடுத்துச் செல்லுகிறான்’- இந்த சிறுகதை குறித்த அழகிய கூற்று, அண்மையில் வாசிக்கக் கிட்டிய ‘கள்ளக்கணக்கு’ என்ற தலைப்பிடப்பட்ட எழுத்தாளர் ஆசி. கந்தராஜா அவர்களின் சிறுகதைத் தொகுதியில் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதி இருந்தது.

முத்துலிங்கம் அவர்களுடய சிறுகதை ஒன்று ( ‘வேதாகமத்தின் முதல் பாவம்; 9.10.19 பக்: 50 - 59) அண்மையில் ஆனந்தவிகடனில் பிரசுரமாகி இருந்தது. உடனே மனம் இந்த சமன்பாட்டை அந்தக் கணக்குக்கு போட்டுப் பார்த்தது.

கச்சித விடை வந்து சேர்ந்தது.

விடை வருகிற போது வரும் குதூகலிப்பும் அது சார்ந்த சூழல் விரியும் போது புலப்படும் காட்சிக் கோலங்களும் எழுத்தாளனை தூக்கி நிறுத்திக் கொண்டாட தோன்றும். அது  வாசகன் அனுபவம் செய்யும் ஒரு வித எக்காளக் கிறுக்கு.

இந்தப் புரிதலோடு காலச்சுவடு பதிப்பகத்தாரால் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட பேராசிரியர். ஆசி.கந்தராஜாவின் சிறுகதைகளுக்குள் ஒரு ஆறுதலான நாளொன்றில் புக முடிந்தது.

புலம்பெயர்ந்தோர் இலக்கியங்கள் குறித்து பல்வேறு விதமான பார்வைகள் தமிழர் மத்தியில் உண்டு. 30 - 50 வருடங்களுக்கு மேலான காலப்பகுதியை புலம்பெயர்ந்தோர் கடத்தி விட்ட போதும்; மனதளவிலும் உணர்வுகளின் அடிப்படையிலும் அவர்கள் இன்னும் ஊரிழையில் இருந்து அறுபடாத வேரினைக் கொண்டிருப்பது என்பது ஒருபுறம் இருக்க, ‘புலம்பெயர்ந்தோர்’ என்ற பொது தலைப்பின் கீழ் ஒட்டுமொத்த புலம்பெயர்  இலக்கிய வெளிப்பாடுகளை ஆய்தல் என்பது எத்தனை பொருத்தப்பாடு உடையது என்பதும் கேள்விக்குரியது.

ஒவ்வொரு புலம்பெயர்ந்த நாடுகளும் தனக்கென தனியான சில பண்பாட்டு அலகுகளை கொண்டிருக்கிறன. புவியியல் அமைவிடம், தட்பவெப்பம்; மொழி, ஆட்சிமொழியுடனான ஊடாட்டம், பொருளாதாரம், தொழில், அரச ஆதரவு, மக்கள் மனோ பாவம், தமிழர்களின் இவற்றின் மீதான ஊடுருவல்; அவற்றைத் தம் வாழ்க்கைக்கு அமைவாக அமைத்துக் கொண்ட பாங்குகள் எல்லாம் நாட்டுக்கு நாடு வேறுபாடுடையன. அதன் பொருட்டு இனி நாம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பொது தலைப்பின் கீழ் நம் இலக்கியங்களை வகைப்படுத்தலைத் தவிர்த்து, இனி அந் அந் நாட்டு தமிழர் இலக்கியமென வகைப்படுத்துதல் பொருத்தப்பாடுடயதாக இருக்கும் என்பது என் கணிப்பு.

கூடவே, இந்த அவுஸ். புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்குள் தமிழக,மலேசிய, சிங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர் என்பதும்; அவர்களின் பார்வைப்புலங்கள் தமக்குரியதான பண்பாட்டு வீரியத்தின் தனிப்பட்ட வீச்சுக்களைக் கொண்டிருக்கின்றன என்பதும்; அவைகளும் நுட்பமாகப் பார்த்து பதிவு செய்யப்பட வேண்டியவை என்பதும் முக்கியமானதாகும். இவைகளுள் தீர்க்கப்பட வேண்டி இருக்கும் சில நுட்பமான சிக்கல்களும் அடையாளம் காணப்பட வேண்டியவை. இவைகள் எல்லாம் - அதன் சாதக, பாதகங்கள் உட்பட - ’அவுஸ்திரேலிய புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள்’ என்ற வகைப்பாட்டுக்கு தனித்துவமான இயல்பினை தர வல்லன.

ஆசி கந்தராஜாவின் எழுத்துக்களை அந்த வகையில் பார்க்கிற போது, அது பல்வகையான தனித்துவமான பக்கங்களை விரித்து வைக்கிறது. அவருடய பண்பாட்டுப் பின்னணி, கல்விப்புலமை, இந் நாடு அதற்குக் கொடுத்திருக்கிற இடம், அதன் வழி அவருக்கு விரிந்த உலகு, அதனைப் பார்க்கும் அவருக்கு மட்டுமே அமைந்ததான  ‘எழுத்தாளப் பார்வை’ - இவைகள் எடுத்துக் கொண்டு வரும் விடயங்கள் அவுஸ். தமிழுக்கு மட்டுமே உரியதானதாக விளங்கும் அதே வேளை உலகத்தமிழருக்கு புதிய ஒரு பார்வையை நல்குவனவாகவும் உள்ளன.

இதன் பாணி வேறு; பார்வை வேறு; சிந்தனைத்தளம் வேறு; இந்த மனித மூளை தனக்குள் பதித்து வைத்திருக்கிற புலமைப்புலம் வேறு. இவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்த இந்த எழுத்தினை ஆழ்வோன் கண்டு பிடித்த கருவின் உரு வேறு.

இவருடய கதைகள் அவுஸ்திரேலியாவைப் பிரதான  தளமாகக் கொண்டிருப்பினும் அவருடய மனநிலை இலங்கையர் மனநிலை கொண்டது. கால்களை அவுஸ்திரேலியத் தளத்திலே ஊன்றி, மனதளவிலே ஈழத்தமிழ் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட ஒரு எழுத்தாள உள்ளம், தனக்குத் தொழில் வழி  பார்க்கக் கிட்டிய உலகப் பண்பாட்டையும் வாழ்க்கைமுறையையும் கண்டுணர்ந்து அதனை நம் வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து புனையப்பட்ட கதைகள் அவருடயவை. ஆங்காங்கே புன்னகைப்பன.

எனினும் அவை புன்னகை அல்ல; அது ஒரு சிறு கீற்றே. சிவந்த சீமேந்துத் தரையில் முத்துக்களைச் சிந்தி விட்டால் தெறித்தோடி நின்றபடி மெல்லியதாகப் பிரகாசிக்கும் உண்மையின் எழில் கொண்டது இக்கதைகள். அவைகள் கண்ணைப் பறிக்கும் நியோன் வெளிச்சங்கள் அல்ல; குத்துவிளக்கின் சுடர் கொண்டிருக்கும் ஒளிபோன்றது. அந்த சுடரின் ஒளியை அறிவினதும் உண்மையினதும் எழில் மிக்கது எனவும் மொழிபெயர்க்கலாம்.

அவைகளின் அடிச்சரடாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஒலித்துக் கொண்டிருக்கிறது.

முதலாவது கதை யப்பானை காட்டுகிறது; நாம் கற்பனையில் வைத்திருக்கிற ஜப்பானுக்கும் அவர் காட்டும் யப்பானுக்கும் இருக்கும் வேறுபாடு கற்பனைக்கும் நடைமுறைக்கும் இடையே இருக்கிற வேறுபாடு. இரண்டாம் கதை நம் ஊரில் நம் மன உலகில் நிகழ்கிறது. நம் இருப்பினையும் சிந்தனைகளையும் கேள்வி கேட்கிறது. மூன்றாம் கதை ஆபிரிக்காவில் நிகழ்கிறது. அவர்களுடய பண்பாடுகளையும் அதன் வழியான அவர்களுக்கே உரித்தான வாழ்வியல் நியாயங்களையும் தமிழ் பண்பாட்டின் முன்னே அப்பட்டமாகப் பரப்பி வைக்கிறது. அதிலிருக்கும் ஒரு மெல்லதிர்வு தமிழ் பண்பாட்டுக்கு புதிது. தமிழ்  பண்பாட்டின் காவலர்களை; சமூகத்தை மெல்ல யோசிக்கச் செய்யும் அது!

பாரசீகக் காதல் ஒன்றை உள்ளங்கையில் வைக்கும் மற்றய கதை காதலின் இன்னொரு பரிமானத்தை இஸ்லாமிய பண்பாட்டுப் பின்னணியில்; அது திறந்து விடப்பட்ட கலாசாரப் பின்னணியில் படும் தடுமாற்றத்தை முன் வைக்கிறது. லெபனான் / சிரியா சிறுவனின் அகதி வாழ்வு சொல்லும் மற்றய கதை உலகத்தின் இன்னொரு கோணத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

விதி போடும் முடிச்சினை மெல்லக் கட்டவிழ்க்கும் இன்னொமொரு கதை நம் பண்பாடு சார்ந்திருக்கிறது. பண்பாட்டு அதிர்ச்சிகளும் வாழ்க்கை போடும் புதிர்களும் அதனைக்கட்டவிழ்க்கும் போது காணும் மனிதக்  கோலங்களும் என பயணித்தலின் வழி வாழ்க்கையின் சூட்சுமமான அர்த்தங்களை விளக்குகிறது.

அது போன்ற அமானுஷ தொடர்பியல் ஒன்றை மனித மிருக உறவு வழி சித்தரிக்கும் கதை அடுத்து வருவது. மனிதர்களோடு மட்டுமன்றி, மிருகங்கள் மற்றும் மரம் செடி கொடி இவைகளோடு ஊடாடும் ஒருவரால் கண்டறியத்தக்க அமானுஷ தொடர்பாடல் ஒன்றை இக்கதை விபரிக்கிறது.

இலங்கை இந்தியத் தமிழ் அடையாளங்களுக்குள் இருக்கும் ஒரு நுண்ணிய இடைவெளியை எடுத்துக் காட்டும் அடுத்த கதையைக் கடந்து போனால் வருவது ஒரு படிமக்கதை. ஷோஷலிச நாட்டு வாழ்வியலையும் அவைகளின் இயலாமைகளையும் சீன தேசத்து வாழ்வியல் ஒன்றின் மூலம் விளக்கியபடி நகரும் கதை அது. இந்த எழுத்தாளரிடம் இருக்கும் ஷோஷலிச சிந்தனைகளை அதனூடே நாம் ஊகிக்க முடிகிறது என்பது கதைகளை மீறி எழுத்தாளன் வெளித்தெரியும் ஒரு நுட்பமான இடமென அடையாளம் காண முடிகிறது. அடுத்ததாக வரும் கதை மனித மனங்களை விமர்சிக்கிறது. மனிதரின் மிருக பக்கம் ஒன்று எவ்வாறு தன்னை தோலுரிக்கிறது என்பதை அது வெளிப்படையாக முன்வைக்கிறது.

‘வினை விதைத்தவன் வினையறுப்பான்’ என்பதை உருக்கமாக முன்வைக்கும் கதை அடுத்து வருவது. சூட்சுமம் என்ற அதன் தலைப்பு வெகு கச்சிதம். ’காதலின் அடிப்படை வேதியல் மாற்றமே’ என்பதோடு முடிவுக்கு வருகிறது இந்தச் சிறுகதைத் தொகுப்பு.

வாசிக்க சுவாரிசமான இக்கதைகள் உலகப்பண்பாட்டினை தமிழ் கண்வழி விரித்துவைக்கிறது. அதில் அவுஸ்திரேலிய மண்ணின் பங்களிப்பை; அது கொடுத்த வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அந்த வகையில் இது அவுஸ்திரேலிய தமிழரின் தமிழ் இலக்கிய வகைக்கு உரித்தானதுமாகும்.

அந்த வகையில் தான் இவருடய ’கறுத்தக் கொழும்பான்’ என்ற புத்தகத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் சொன்ன முன்னுரையில் ’எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் கதைகளில் இருக்கும் புன்னகையை இவரின் எழுத்துக்களிலும் காணமுடிகிறது’ என்ற கூற்றை முற்றாக மறுக்க முடிகிறது.

இது அதுவல்ல;

இது  சிவந்த பளிங்குத் தரையில் சிந்தி விடப்பட்ட உண்மை மிளிரும் அவுஸ்திரேலியத் தமிழ் முத்துக்கள்! 

No comments:

Post a Comment