Wednesday, February 26, 2020

ஆஸ்பத்திரிகள்.....


’போதனா’ வைத்திய சாலைகள்.....

பாடசாலைகள் சொல்லிக்கொடுக்காத பாடங்களை சொல்லிக் கொடுக்கும் கல்விச் சாலை அது!

அவை புதிய உலகங்களையும் புதிய மனிதர்களையும் புதிய வாழ்க்கை ஒன்றினையும் அறிமுகப்படுத்துகின்றன; வாசல்களைத் திறந்து வைக்கின்றன.

வெளி மனிதர்களையும் - அவர்களின் வாழ்க்கைத் தெரிவுகளையும் - அதன் உள்ளார்ந்த பக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன.

மேலும், சகல மனிதர்களுக்கும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் காத்திருப்புகளின் தார்ப்பரியத்தையும் போதிக்கின்றன.

வாழ்க்கையின் ’உண்மைகளைத்’ தோலுரிக்கின்றன.

உங்களுக்கு நானொன்று சொல்லவா?

வாழ்க்கையில் இக்கட்டுகளும் இயலாமைகளும் சோதனைகளும் வர வேண்டும்; வர விடுங்கள்.

வாழ்க்கையோடு எதிர்பாராமல் கைகுலுக்கும் அவைகளே நம் உன்னத நண்பர்கள். இதுவரை நாம் நம்பியவைகள் எல்லாவற்றையும் அலங்காரங்கள் ஏதும் இன்றி அப்படியே மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட ஒரு பழத்தைப் போல உள்ளங்கைகளில் பரிசளிப்பன.

அது ஒரு வரமாகும்.

வாழ்தலின் இன்னொரு பக்கம் அதன் மூலமாகவே விரிவு பெறுகிறது; உண்மைகள் புலர்வு கொள்ளுகின்றன! மலர்வு பெறுகின்றன.. அது வாழ்வின் அர்த்தத்தை; அதன் பெறுமதியை; இருப்பின் சிறப்பை; கொண்டாட்டத்தின் இன்றியமையாமைகளை சொல்லிக் கொடுக்கின்றது.
சந்தோஷத்தின் பெறுமதியை எடை போடவும் அதுவே சொல்லித்தருகிறது.

ஆஸ்பத்திரிகள்; ‘போதனா’ வைத்தியசாலைகள்.....

மனசாட்சி பேச ஆரம்பிக்கும் இடம்!

கடந்த காலங்கள்; அவ்வப்போது தட்டிக் குட்டி அடக்கி வைக்கப்பட்ட செய்த நன்மைதீமைகள் எல்லாம் தயக்கமின்றி எழுந்து நின்று நியாயம் கேட்கும். கூடவே, உண்மை தடைகள் ஏதுமின்றி எழுந்து நின்று வியாபகம் கொள்ளும்.

வைத்தியசாலைகள் மனிதனை தனக்குத் தானே நீதிபதியாக இருந்து பரீட்சைக்குட்படுத்த நிர்ப்பந்திக்கும்  பரீட்சைக் கூடம்!

மேலும், அது மனித நேயத்தைச் சொல்லிக் கொடுக்கும் கல்விச் சாலைகளுமாகும்....

தேவதைகளும் தெய்வங்களும் உலவும் இடம் ஆஸ்பத்திரி.
கைமாறு கருதா உதவி மற்றும் எதிர்பார்ப்பு இல்லாது வழங்கும் அன்பு - இவைகளின் பெறுமதி சார்ந்த ருசிகளை சொல்லித்தரும் அம்மா போன்றது  அது!

மறக்க முடியாத பக்கங்களை ஆஸ்பத்திரிகள் வாழ்க்கை மீது எழுதிச் செல்கிறன....

அவைகள் ஆத்மாவில் பதிவாகின்றன.

பிள்ளைகளும் பள்ளிச் சிறார்களும் வந்து கற்கவேண்டிய ‘வாழ்க்கைப் பள்ளிக் கூடம்’ ஆஸ்பத்திரி.

அது மெழுகு போன்ற  குழந்தை உள்ளத்தை கூர்உளியால் செதுக்கி சூட்சுமமான ஒளிபொருந்திய மனித உருவத்தைக் கொடுக்க வல்லதாக இருக்கிறது.

உள்ளே இருக்கும் இன்னொரு சூட்சும மனிதனை செப்பனிட்டுச் சீர் செய்கிறது; மேலும் மனிதனாக அவனை உருவாக்கிக் கொடுக்கிறது.

இலவசமாக....

அது அவனை உன்னத மனித ஜீவியாக தனக்குத் தானே தன்னை நல்லவனாக அறிமுகப்படுத்தும் அந்தரங்க நீதிபதி! ஒரு ஆத்மகரமான சுகானுபவத்தின் சுகத்தை; அதன் ஜீவிதத்தை அது உள்ளங்கைகளில் பரிவோடு  பரிசளிக்கிறது.

சமரசம் உலவும் இடமுமாக இருக்கிறது ஆஸ்பத்திரி. சக மனிதனை நிபந்தனைகள் இல்லாமல் நேசிக்கச் சொல்லிக் கொடுக்கும் ஆச்சிரமம் அது!

அதற்கு செலவில்லாத ஒரு குறைந்த பட்ச புன்னகை போதுமாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அதனால் தான் ஆஸ்பத்திரி ஆதரவையும் அன்பையும் குறைந்த பட்சம் ஒரு புன்னகையையும் அதன் பெறுமதியையும் எடைபோட உதவும் தராசாகவும் சில சமயத்தில் மாறிப் புன்னகைக்கிறது.

’காலமாக’ - காலம் சொல்லிக் கொடுக்கும் பாடமாக - அது சமயா சமயங்களில் முடியுமானவர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.

பள்ளிக்கூடம் மட்டுமா அது? இல்லை;

கைமாறு கருதா உதவிகள் -
நிபந்தனைகள் இல்லாத அன்புகள் -
புன்னகைகளோடும் உதவிகரமான இதயங்களோடும் நடமாடும் மனித உயிர்கள் -
ஆஸ்பத்திரிகளின் உன்னத அழகுகள்! அவை இருண்ட வானில் ஆங்காங்கே பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் போல்வன.

சில உயிர்கள் விடைபெறுதலும் புதிய உயிர்களின் வரவுகளும் நடக்கும் மூல ஸ்தானம் ஆஸ்பத்திரி.

பிரிவுகளின் துயர்களும் கோபங்களின் ஆற்றாமைகளின் இயலாமைகளின் வலிகளும் ஏமாற்றங்களின் குரூர முகங்களும் ஆஸ்பத்திரிகள் கொண்டிருக்கும் இன்னொரு முகம் ஆகும்; உருவம் இல்லாமல் ஆங்காங்கே அலைந்து கொண்டிருக்கும் உணர்வுத்தொகுதி அது! ஆமானுஷமாய் அலையும் ஆவி போல்வது...
அது இருளே ஆகும்.

மனிதமும் மிருகாம்சமும் கலந்து ஒன்றாகச் சமைத்த கட்டிடக் கனி ஆஸ்பத்திரி.

அமுதமும் விஷமும் ஒன்றாய் கலந்து உருவான உருவம் அது!  பென்னாம் பெரிய வாழ்க்கை முகம் அது!!

என்றாலும் பயம் கொள்ள வேண்டியதில்லை. தன்னந்தனியாக சந்திக்க நேரும் குரூர மனித உயிரினத்தை விட அது ஒன்றும் பயப்படத்தக்க வஸ்து அல்ல.

ஒரு நல்ல ஆசிரியனைப் போல, பெரும்பாலான சமயங்களில் அது ஒரு வாழ்க்கைக் கல்லூரி. அவ்வளவே!

பெற்றோர்களே!,

உங்கள் பிள்ளைகளை ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து வாருங்கள். வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பக்கங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
இரக்கத்தையும் உதவியையும் ஆதரவையும் - அதன் பெறுமதிகளையும் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்.
பிள்ளைகள் அவற்றின் ருசிகளை அறிய உதவுங்கள். கூடவே அவற்றின் இன்றியமையாமைகளையும்.

மனித வாழ்வின் விழுமியங்களை; இன்றியமையாமைகளை; பணமும் பணம் சார்ந்த வாழ்வும் வல்லமையோடு மறைந்து வைத்திருக்கும் நாங்கள் காட்ட விரும்பாத; அந்த விழுமியக்கனியை குழந்தைகளுக்குச் சுவைக்க கொடுங்கள்.

அவன் வல்லவனாகட்டும்;
நல்ல மனிதனாக உருவாகட்டும்!

‘சேவையே உன்னை மேலோன் ஆக்குகிறது’