அண்மையில் சமஸ்கிருதக் கவி காளிதாசரை படிக்கவேண்டும் என்றொரு விபரீத ஆசை ஒன்று எனக்குத் தொற்றிக் கொண்டது.
முன் ஒரு தடவை தனிநாயகம் அடிகளாரைப் படித்த போது அவர் சொல்லி இருந்த சாகுந்தலத்தின் ஒரு இடம் மறக்கவொண்ணாததாக அடிமனதில் அமர்ந்திருந்ததும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். அது என்னவென்றால், சகுந்தலை தன் தந்தையாரைப் பிரிந்து போகிற காட்சி. அதனை விபரிக்க ஒரு உவமையை காளிதாசர் சொல்கிறார். மலபார்கரைகளில் (மலையாளக் கரைகளில் ) செழித்து நிற்கிற சந்தன மரத்தினைப் பற்றிப் படர்ந்திருக்கிற கொடியை அந்த மரத்தில் இருந்து பிரிப்பதைப் போல சகுந்தலை தந்தையை விட்டுப் பிரிந்து போகிறாளாம்.
இது காளிதாசர் உவமை வழி சொல்லும் அழகியல் சார்ந்த புலமை அழகு. இந்தப் புலவனின் அழகே இந்த உவமைகள் தானே! அதனைப் புரிந்து கொள்ளாத மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் தன் புலமையைக் காட்டும் படியாக அதிலிருக்கிற விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தன் கவிதைகளின் வழியாக நமக்குக் கதை சொல்லிக் கொண்டு போகிற ஒரு மொழிபெயர்ப்பை வாசித்தேன். மேலுமொருவரின் மொழிபெயர்ப்போ எனில் ‘சந்தன மரத்தில் இருந்து அதன் பட்டையை உரிப்பதைப் போல சகுந்தலை தந்தையைப் பிரிந்து போகிறாளாம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருந்தது.
இன்னும் எனக்கு மூலமொழியில் காளிதாசர் எப்படிச் சொல்லி இருக்கிறார் என்றே தெரியவில்லை......
உண்மையில் ஒருவருடய ஆக்கத்தை மொழிபெயர்க்க முயல்பவர்கள் முதலில் நல்ல ரசிகர்களாக இருக்க வேண்டும். இரண்டாவது அப் படைப்பின் முக்கியத்துவத்தையும், அதன் அழகியலையும், சொல்ல வரும் கருத்தையும் அது எழுந்த கால பண்பாட்டு வாழ்க்கைச் சூழலையும் உள்வாங்கி இருக்க வேண்டும். பிறகு கொஞ்சம் காலமெடுத்து அதனை அசை போட வேண்டும். அசைபோடுதல் என்று நான் சொல்வதன் தாற்பரியம் என்னவென்றால், அது எழுந்த பண்பாட்டு அரசியல் பொருளாதார சூழலை மட்டுமன்றி அந்த ஆசிரியனைப் பற்றியும் படிக்க வேண்டும். அறிதல் வேண்டும். அந்தப் படைப்பின் ஆத்மாவைப் பற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் இரண்டு மொழிகளின் மீதான புலமை அவசியப்படும்.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு சமூகப் பொறுப்புணர்வோடு கூடிய ஒரு செயல். முடிந்தால் மாத்திரமே செய்ய வேண்டிய ஒன்றும் கூட. இதனைச் செய்வதால் யாருக்கு அல்லது எதற்கு என்னவிதமான பயன் அல்லது பலன் என்பதை நமக்கு நாமே ஒருதடவை கேள்வி கேட்டு நம்மை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதனை மொழிபெயர்ப்பதற்கான தகுதிப்பாடு நமக்கு இருக்கிறதா என்பதையும் அதன் வழியே ஒரு தடவை நமக்கு நாமே உறுதிப்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.
‘வொல்காவில் இருந்து கங்கை வரை’ புத்தகத்தை மொழிபெயர்த்த கண. முத்தையாவை ஒரு தடவை நினைத்துக் கொள்ளுகிறேன். ‘தன்னை அறியும் விஞ்ஞானம்’ புத்தகத்தை மொழிபெயர்த்த கே. ராமசுப்பிரமணியம் என்பாரை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் எல்லோரும் அதனை ஒரு தொண்டாக; சமூக பற்றுறுதியோடும் பொறுப்புணர்வோடும் ஒரு வித பக்தியோடும் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தையும் தார்ப்பரியத்தையும் அறிந்தவர்களாக அதனைச் செய்திருக்கிறார்கள். ஒரு தவத்தைப் போல தமிழையும் மூல மொழிச் சிந்தனையையும் வளம்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் இன்றய காலங்களில் பெரும்பாலானவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் நேரடியாக ஒரு ஆக்கத்தைப் பார்த்துவிட்டு, அதனை அப்படியே மொழியாக்கம் செய்ய முனைகிறார்கள். ஆகையினால் அது உயிரற்ற உடலைப் போல ஆகி விடுகிறது.
ஆகையினால், மொழிபெயர்ப்புகள் குறித்தும்; யார் அதனை மொழிபெயர்க்கிறார்கள் என்பது குறித்தும்; நாம் ஒரு சிறந்ததும் தெளிவானதுமான பார்வையைக் கொண்டிருத்தல் அவசியம். இல்லையெனில் அது விபரீதமாகப் போய் விடும் ஆபத்து அதில் அதிகம் உண்டு. அது மூல மொழிக்கு நாம் செய்யும் மொழித்துரோகமெனினும் மிகையில்லை.
இந்த ஒரு அவதானச் சூழலில் இருந்து கொண்டுதான், மொழிபெயர்ப்புகளுக்குள் நுழைவது பாதுகாப்பானது. இப்போது விரிந்துகிடக்கிற பரவலான சகலருக்குமான வாய்ப்புச் சூழல்கள் எல்லோரையும் படைப்பாளியாக்கி விடுகிறது; பணமிருந்தால் புகழையும் பிரபலத்தையும் கூட அது கொடுத்து விடுகிறது. நண்பர்களைப் பலவாறாகப் அது பெருக வைக்கிறது. இலகுவாக சமூக வலைத்தளங்கள் அவைகளை ஊதிப் பெருப்பித்து வீங்கச் செய்து இன்னொரு தளத்துக்கு உயர்த்திக் கொண்டும் சென்று விடுகிறது....
இப்போதைய ’வலை சூழ்’ வாழ்க்கைச் சூழல் அவ்வாறானது. ஆகையால் கவனமாய் ‘நடந்து செல்லுதல்’ அவசியம்.
அது நிற்க,
கடந்த சில மாதங்களின் முன் கனலி என்றொரு சிறந்த இணையப் பத்திரிகையில் கீழ்வரும் இந்த கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புக் கவிதையைப் படித்தேன்.
என் படகு பெரிதாய் எதிலோ மோதியுடைந்து
ஆழ்கடலுக்குள் மூழ்கிவிட்ட உணர்வு
ஆனால் எதுவும் நடக்கவில்லை
எதுவுமில்லை... நிசப்தம்... அலைகள்...
எதுவும் நடக்கவில்லையா?
அல்லது எல்லாமே நடந்து முடிந்துவிட்டதா?
இப்போது நாம் அமைதியாய் நின்றிருப்பது
அடுத்த பிறவியிலா?
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவரான ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் என்பாரின் ( 1881 - 1958 ) இந்தக் கவிதையை ஆங்கில வழியில் இருந்து தமிழுக்கு ’கனலி’ யூடாக எடுத்து வந்த கீதாவின் கவிதை அது.
( இதனைக் காண இங்கே கனலி அழுத்துங்கள் )
இந்தக் கவிதை வாழ்வுக்கும் இறப்புக்குமான ஓர் உயிரின் இடமாற்றத்தை ( Transformation ) எளிமையாக அறிவிக்கிறது என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.
( இது போன்றதான கருவை கொண்டதான ஓர் அவுஸ்திரேலிய சிறுகதை ‘ A long wait' இனை கடந்த வருடம் SBS வானொலி மொழிபெயர்த்து ஒலிபரப்பாக்கியது. அதனை சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள் மொழிபெயர்த்து, தன் குரலில், புலமையோடு தருவதை கீழ்வரும் இணைப்பை அழுத்தி கேட்கலாம். A long wait இவைகள் எல்லாம் ஒரு இறப்பின் போதான உயிரின் இடமாற்றத்தை சிந்திக்கும் செயல் நுட்பங்கள். )
ஆனால் அண்மையில் கீதாவின் இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கும் அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளர் ஹென்றி லோஷனின் ‘என்றாவது ஒரு நாள்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வேறு சில புது கதைகளைப் பார்த்த பின்னால் மொழிபெயர்ப்புலகில் கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் இக் கவிதை கச்சிதமாகப் பொருந்திப் போவது போல தோன்றுகிறது.
மிக இலகுவாகவும் எளிமையாகவும் வியக்கத்தக்க வகையிலும் நடந்து முடிந்து விடுகிறது அந்த லாவகம் மிக்க transformation.
அவரின் மொழிபெயர்ப்பு கதைகளையோ கவிதைகளையோ படித்து முடித்து விட்ட பின்னால் இரண்டு விடயங்கள் மனதில் கூடாரம் போட்டு தங்கியும் தேங்கியும் விடுகின்றன. லாவகமாக அதே நேரம் ஒரு வித எளிமையோடும் ஒரு செயலைச் செய்து முடித்து விட்ட கைவண்ணம் என்பது ஒன்று. மற்றயது தெரிவு செய்த பொருளும் அது வெளிப்படுத்தும் காட்சிப் படிமமும் என்பது மற்றொன்று.
கனலியில் வெளி வந்திருக்கும் கீதாவின் மற்றொரு மொழிபெயர்ப்புக் கவிதை இது.
’ஒரு றோஜாவைப் போல
ஒவ்வொரு இதழாய் பிய்த்தேன் உன்னை
உள்ளிருக்கும் உன் ஆண்மாவைக் கண்ணுற
என்னால் அதைப் பார்க்கவே இயலவில்லை.
ஆனாலும் சூழ்பரப்பு யாவிலும் எங்கெங்கும்
நிலத்தின் கடலின் நீள்எல்லை வரையிலும்
ஏன் அந்த முடிவிலியிலும் கூட வியாபகம் கொண்டிருந்தது
அளப்பரியதும் உயிர்ப்புமான ஒரு பரிமளம்’
இப்படியாகத் தான் இறுதியாக ஒரு ’பரிமளம்’ அவரின் கைவண்ணத்தில் பிரகாசிக்கிறது. நிஜமாகவே!
கடுமையான வித்துவச் சொற்களைக் கையாளாமலே மிக நேர்த்தியாகவும் நளினமாகவும் அதே நேரம் வசீகரமாகவும் மொழியைக் கையாளும் கலை கைவரப் பெற்றவர் கீதா. உதாரணமாக ‘மேக்வாரியின் நண்பன்’ என்றொரு கதை. மதுச்சாலை உரையாடல்களைக் கொண்டமைந்த, நட்பின் உயர்வை பேசும் அற்புதமான ஒரு கதை. அதில் ஒரு காட்சி விரிகிறது. ஒரு குடிகாரன் மேசையருகில் வந்து நிற்பதை விபரிக்கும் இடம் அது. ‘.....அந்த மகா மோசமான ஜென்மம் தன்னைக் கட்டுப்படுத்தியவனாய் அமைதி காத்தான். அவனது கைகள் மேசையின் விளிம்பை இறுக்கிப் பிடித்திருந்தன. விறைப்பாய் நின்ற கைகளுக்கிடையே தலை தொங்க, அழுக்குத் தரையை சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு தலையை நிமிர்த்தி மெல்லிய குரலில் பேசினான்....’ (பக் 147)
சண்டைக்குத் தயாராகும் அந்தக் குடிகார நண்பனை விபரிக்கும் இடம் இது. ‘.......அவன் கடையின் பின்புறம் சென்று, கையிலிருந்த கண்ணாடிக் குவளையை வீசி எறிந்தான். தொப்பியைத் தூக்கி எறிந்தான். கால்சராயை இடுப்புவாரில் இறுக்கிப் பிடித்தான். அது கணுக்காலுக்கு மேலே துக்கிக் கொண்டு நின்றது. மேற்சட்டையின் கைகளை மடித்து விட்டான்......’ (பக். 151)
ஓர் ஆரம்ப கால அவுஸ்திரேலிய ஆங்கில மொழியிலமைந்த ஒரு கதையாடலை; அதன் காட்சிப் படிமங்களை மிக எளிய தமிழில், புரியும் படியான கொச்சையற்ற அழகு மொழியில் பிடித்துவரும் லாவகமும்,காட்சி விபரிப்பும் ஒரு நாடகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை எடுத்து வரும் ஆற்றலும் கீதாவின் மிகப்பெரிய பலம்.
புதர் காடு, ஓடைக்கரை, மது விடுதி,ரோமக்கத்தரிப்பு நிலையம், தனிமைத் தருணங்கள், போக்கிரிப்பயல், அரைமனம், சகாயவிலை,கொட்டகை, விலவண்டி, தீவனப் பயிர்.... இவ்வாறாக பெருகி வரும் சொற்களுக்கான மூல மொழியாடல் என்னவிதமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதனை தமிழுக்கு மடைதிருப்ப எத்தனை பிரயத்தனங்களை அவர் மேற்கொண்டிருக்கக் கூடும்? எனினும் எத்தனை அநாயாசமாக அதனை இலகு தமிழுக்கு திருப்பி விடுகிறார் என்பது ஆச்சரியம்.
கீதாவின் மொழிபெயர்ப்பினூடாக ஹென்றியை அறிய முயல்கின்ற போது அவருடய பெரும்பாலான கதைகள் ஒரு மனித சுபாவத்தை ஒரு காட்சிப் பின்னணியில் மிகத் துல்லியமாக எடுத்துரைப்பனவாக அமைகின்றன. புறத்தோற்றத்தினாலன்றி கதாபாத்திரங்கள் அவர்களின் அன்றாட குண இயல்புகள் வழியாகவே ஹென்றியால் கட்டமைக்கப்படுகிறார்கள். உன்னிப்பாக மனித சுபாவத்தை கவனித்து, தன் கதையில் இயல்பாக நடமாட விடும் ஹென்றியின் உச்சபட்ச திறமை கீதாவின் கைவண்ணத்திலும் சிதைவின்றி வந்திருக்கிறது. பிறைட்டனின் மைத்துணி, பொறுப்பிலி, மேக்வாரியின் நண்பன், ஆசிரியர் செய்த பிழை, சமையல்காரரின் நாய், அவள் பேசவில்லை, ஒற்றைச்சக்கரவண்டி, சீனத்தவனின் ஆவி, மந்தை ஓட்டியின் மனைவி போன்ற கதைகள் ஒவ்வொரு மனிதர்களையும் துல்லியமான காட்சிப்புனைவுகளாக மனித உருவங்களுக்கு அவரவர் தனித்துவமான குணங்களூடாக உயிர் கொடுத்த பாத்திர வார்ப்புகளாக நம் கண்முன்னே உலா வருகிறார்கள். அவர்கள் வேறு மொழி பண்பாட்டு சிந்தனைச் சூழலில் இருப்பவர்களாக இருக்கின்ற போதும்.....அது மொழியை லாவகமாகக் கையாளத்தெரிந்ததால் வந்த விளைவென்றே எனக்குத் தோன்றுகிறது.
ஹென்றியின் இந்த ஆழுமைப் புலத்தை நன்கு விளங்கிக் கொண்டவராக கீதாவும் இருந்திருக்கிறார் என்பதுவும் அதன் பலத்தை; சிறப்பை தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதோடு அதனை அவர் ரசித்து, விதந்து தன் அநாயாசமான மொழிவீச்சின் வழியாக அந்த குணங்கள் நிரம்பிய உருவங்களை எம் கண்முன்னே உலவ விடுகிறார் என்பதும் கீதாவின் மொழிபெயர்ப்புகளை நாமும் ரசிக்க இன்னொரு முக்கிய காரணம்.. அது ஒரு பொறுப்புணர்வின் பாற்பட்டது. மூல ஆசிரியனுக்கும் கொடுக்கும் உயர்வான மரியாதை அது!
கீதாவின் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற இந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அடங்கிய முதலாவது தொகுப்பை படித்த நாளில் இருந்து நான் அவரின் மீது மதிப்பு கொண்ட ரசிகையாகி விட்டேன். அதற்கு அவரது இந்த பொறுப்பு மிக்கதான குண இயல்பே முக்கிய காரணம்.
குணம் என்று இங்கே நான் முக்கியமாகச் சொல்ல வருவது என்னவென்றால் மொழிமீது அவர் கொண்டிருக்கிற விசுவாசம்; மூல படைப்பாளியின் மீது அவர் கொண்டிருக்கும் பற்றுறுதியும் ஒருவிதமான விசுவாசம் கலந்த அன்பும் பொறுப்புணர்வும், அதனை தமிழுக்கு தர அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் அதற்கு அவர் கொடுக்கும் நேரமும் உழைப்பும். ஓர் ஆலயம் தன் பிரசாதத்தை பக்தர்களுக்குக் கொடுப்பதைப் போல ஒருவித பவித்திர உனர்வோடு அதனை தமிழ் இலக்கிய உலகில் அவர் சமர்ப்பிக்கும் அந்தப் பாங்கு....
‘என்றாவது ஒருநாள்’ என்ற இந்த இரண்டாம் பதிப்பில் மேலும் சில புதிய சிறுகதைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன. அத்தனையும் முத்து முத்தான சிறுகதைகள். ஆரம்ப கால அவுஸ்திரேலியர்களின் வாழ்வை; பாடுகளை; உணர்வுச் சித்திரங்களாக்கி ஹென்றி லோஷன் உலவவிட; அதற்கு எந்தவிதமான பாதிப்பும் நேர்ந்து விடாதவாறு பக்குவமாக அதனை அதன் அத்தனை தார்ப்பரியங்களோடும் அதனைத் தமிழுக்குத் தந்து தமிழுக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் கீதா.
இருந்த போதும், ‘என்றாவது ஒருநாள்’ என்ற இந்த இரண்டாம் பதிப்பை முதற்பதிப்பில் வந்த அதே அளவு கதைகளோடு தந்து விட்டு, இன்னுமொரு மொழிபெயர்ப்புத் தொகுதியை இதில் பிரத்தியேகமாக இனைக்கப்பட்டுள்ள 7 கதைகளோடு, மேலும் சில கதைகளையும் மொழிபெயர்த்து இன்னொரு புத்தகமாகத் தந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
மேலும், ‘என்றாவது ஒருநாள்’ என்ற புத்தகத் தலைப்பு ஹென்றி லோஷனின் ஒரு சிறுகதையின் தலைப்பாக இருந்திருக்கிறது. அதனால் கீதா அந்தத் தலைப்பை இந்தப் புத்தகத்துக்கு வைத்திருக்கக் கூடும். ஆனால், அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளர் ஹென்றி லோஷனின் மொழிபெயர்ப்புகள் என்பதை இந்தத் தலைப்பு எந்த விதத்திலும் வெளிப்படுத்தவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது; ஹென்றி லொஷன் சிறுகதைகள் என்று அடைப்புக் குறிக்குள் அது இடம்பெற்றிருக்கிற போதும்.... மாறாக, ஹென்றி லோஷன் சிறுகதைகள் என்று பொதுவாகத் தலைப்பிட்டிருந்தால் அது இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ என்று எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.
இருந்த போதும், ஹென்றிலோஷனையும் ஆரம்பகாலகட்ட அவுஸ்திரேலிய வாழ்வியலை நமக்கு மிக இலகுவாக அறியத்தந்தமைக்கும் கீதாவுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதை விட, என் ஆத்மார்த்தமான நன்றியறிதலைச் சொல்லவே நான் பெரிதும் பிரியப்படுகிறேன்.
ஏனென்றால் அவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியத்துக்கு அதன் ஆரம்பகால பங்களிப்பாளராக தன் கடமையை செவ்வனே செய்து நிலையாக தன் இடத்தைத் தக்க வைத்திருக்கிறார்.
அவரிடம் இருந்து மேன்மேலும் பல அவுஸ்திரேலிய இலக்கியப் படைப்பாளிகளின் இலக்கியச் செல்வங்கள் அவரின் வழியாகத் தமிழை அலங்கரிக்க வேண்டும் என்பது என் ஆசை.
இறுதியாக விடைபெற்றுச் செல்லு முன்னர் ‘கனலி’ இணையப் பத்திரிகையில் அவரால் மொழிபெயர்க்கப் பட்ட இந்தக் கவிதையோடு விடைபெறுதல் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
( முழு நிலவு வானை வியாபித்து, ஒளியால் பரிபாலித்த படி, பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதன் குளிர்மை மிக்க திவ்ய ஒளி உலகை ஒளியால் குளிப்பாட்டுகிறது. அதனை ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் தன்மொழியில் தர, அதை கீதா தமிழுக்குத் தருகிறார், இப்படியாக....)
கதவு திறந்திருக்கிறது
சில்வண்டு ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது
நீ நிர்வாணமாகத்தான் வலம் வரப் போகிறாயா
அவ் வயல்களினூடே?
அழிவில்லாத நீர் போல
எல்லாவற்றினுள்ளும் நுழைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறாய்
நீ நிர்வானமாகத் தான் திரியப் போகிறாயா
அக் காற்றினில்?
துளசிச் செடி தூங்கவில்லை
எறும்பு சுறுசுறுப்பாய் இயங்குகிறது
நீ நிர்வானமாகத்தான் உலவப் போகிறாயா
வீட்டில்?
அன்புத் தோழி கீதாவின் திறமையை அழகாகப் பதிவிட்டது சிறப்பு.
ReplyDeleteஉங்கள் முதல் வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி. :)
ReplyDeleteபடைப்பாக்க மனநிலையிலிருந்து நான் விலகி நிற்கும் தருணந்தோறும் மீண்டும் என்னை உட்செலுத்துபவை உங்களுடைய ஊக்கமிகு வரிகளே. அதற்காக என் மனமார்ந்த நன்றி தோழி. ஹென்றிலாஸனை இந்த அளவு சிலாகித்து ரசித்து விமர்சித்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது. கதையின் தலைப்பு குறித்த உங்கள் கருத்து ஏற்புடையதே. ஒருசில காரணங்களுக்காய் இது போன்ற பரிந்துரைகளைத் தவிர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. கனலியில் வெளிவந்த ஜுவான் ரமோன் கவிதைகளையும் இங்கு சுட்டியிருப்பது மகிழ்வளிக்கிறது. அன்பும் நன்றியும் தோழி.
ReplyDeleteநன்றி கீதா.
ReplyDeleteஉங்களைப் போன்ற மொழிபெயர்ப்பு வல்லமை கொண்டவர்கள் தமிழைப் போலவே செம்மொழியாகவும் அயல் மொழியாகவும் இருக்கும் சமஸ்கிருத இலக்கியங்களையும் அதன் தரத்தோடும் அழகியலோடும் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்து தரவேண்டும் என்பது என் ஆசை கீதா.
சாகுந்தலத்தையே நம்மால் தமிழில் படிக்க முடியவில்லை என்பது எத்தனை வருத்தத்திற்குரியது!
சுணங்கிச் சோர்ந்திருக்கும் இக்கணத்திலும் என் சுணக்கம் நீக்கும் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறீர்கள். உங்களால்தான் நானும் காளிதாசனைத் தேடிப் போனேன். போன இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட உவமையின் மூலத்தைக் கண்டேன். சாகுந்தலம் என்னும் சாகரத்தின் கரையில் நின்று கால் நனைக்கும்போதே இவ்வளவு உவப்பு எனில் உள்ளிறங்கினால்? ஆவல் மேலிடுகிறது.
ReplyDeleteசாகுந்தலத்தில் தந்தையைப் பிரிந்து செல்லும் சகுந்தலையின் நிலைக்கு உவமையாக காளிதாசன் மூலத்தில் என்ன எழுதியிருக்கக்கூடும் என்று அறியத் துடிக்கும் உங்கள் ஆவல் என்னையும் தொற்றிக்கொண்டுவிட, தேடலில் இறங்கினேன்.
ReplyDeleteमलय पर्वत से उखड़ी चन्दन-लता की तरह पिता की गोदी से छूट-कर मैं वहाँ जिऊँगी कैसे?
இது இந்தி மொழிபெயர்ப்பு. மலைய பர்வதத்திலிருந்து வேரோடு பிடுங்கப்பட்ட சந்தனமரக் கன்றினைப் போல, தந்தையின் அரவணைப்பிலிருந்து விடுபட்டு அங்கே எங்ஙனம் வாழ்வேன் நான்? என்கிறாள். சந்தன் லதா என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் சந்தனக்கொடி என்று வரும். சந்தனமரம்தானே இருக்கிறது? கொடி எங்கே இருக்கிறது? இந்த இடத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் குழம்பிப்போக நிறைய வா ய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கே லதா என்பது இளம் மரக்கன்றைக் குறிப்பதாக இந்தி மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்படுவது ஓரளவு பொருத்தமாகவே தோன்றுகிறது.
ஓ... அப்படியா கீதா? அதனை அறிந்து சொல்ல நீங்கள் மேற்கொண்ட பிரயத்தனங்களுக்கும், அதனை இங்கு என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கும் என் மனமார்ந்த அன்பும் நன்றியும்.
ReplyDeleteபாருங்கள்! ஒரு சொற்தொடருக்கே எத்தனை விதமான மொழிபெயர்ப்புகளை தந்திருக்கிறார்கள்?
மொழிபெயர்ப்புகளைப் படிக்கவே மிகவும் பயமாக இருக்கிறது கீதா.....
//மொழிபெயர்ப்பு என்பது ஒரு சமூகப் பொறுப்புணர்வோடு கூடிய ஒரு செயல். முடிந்தால் மாத்திரமே செய்ய வேண்டிய ஒன்றும் கூட. இதனைச் செய்வதால் யாருக்கு அல்லது எதற்கு என்னவிதமான பயன் அல்லது பலன் என்பதை நமக்கு நாமே ஒருதடவை கேள்வி கேட்டு நம்மை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதனை மொழிபெயர்ப்பதற்கான தகுதிப்பாடு நமக்கு இருக்கிறதா என்பதையும் அதன் வழியே ஒரு தடவை நமக்கு நாமே உறுதிப்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.//
ReplyDeleteஅருமையான விளக்கம்.
சிரத்தையோடு படித்து கருத்தும் இட்டமைக்கு மிக்க நன்றி திரு.
ReplyDelete