கடந்த ஞாயிற்றுக்கிழமை 29.8.21 அன்று SBS தமிழ் தேசிய வானொலியில் ஒலிபரப்பான நம்மதமிழ் நிகழ்ச்சிக்காக எழுதிய ஆக்கம் இது. எடிட் செய்யப்பட்ட 7/8 நிமிட நிகழ்ச்சியைக் கேட்க கீழ்வரும் இணைப்பை அழுத்திக் கேட்கலாம்.
நம்ம தமிழ் - ஒளவையின் மான உணர்வு
எடிட் செய்யப்படாத எழுத்துருவில் அமைந்த பகுதி கீழே வருகிறது.
மானம் உள்ளவன் தமிழன் என்று எங்களை நாங்களே சொல்லிக் கொள்ளும் மரபொன்று எங்களிட்ட இருக்கு. அது உண்மைதானா எண்டு பாக்கிறது இண்டைக்கு எங்கட நோக்கம்.
சிவன் நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே எண்டு நக்கீரன் சிவனுக்கே சவால் விட்டார் எண்டும்; கண்ணகி பாண்டியமன்னனின் வாயிலோனைப்பார்த்து
வாயி லோயே வாயி லோயே
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே!
என்று அறக்கோபம் கொண்ட கண்ணகியும், யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யமனை அஞ்சோம் எண்டு இந்து சமயம் சார்ந்த தமிழ் தொண்டர்கள் நிமிர்ந்து நிண்டதையும் திருப்பாவை பாடிய ஆண்டாள் ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம் எண்டு கண்ணனுக்கு உறுதி அளிக்கிறதையும் மாணிக்கவாசகர், ‘எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்! எண்டு கடவுளோட உரிமையோட கதைக்கிறதையும் பார்க்கேக்க அதெல்லாம் தமிழின்ர; தமிழன்ர ஒருவித வீர வசனம்; மான உணர்வின்ர; தான் நம்புற ஒண்டின் மீதான அதீத நம்பிக்கையின் வழி வந்த உரிமைக் குரல்; உறுதி மொழிகள்; வாழ்வியலின் மொழி எச்சங்கள் எண்டுதான் படுகுது.
ஏனெண்டா இதின்ர தொடர்ச்சி பாரதியார் வரைக்கும் வந்திருக்கு. நரை கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங் கூற்றுக்கு இரை யெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" எண்டு அவரும் பராசக்தியை கோவத்தோட கேட்டிருக்கிறார். ‘மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி வழியில் நடந்தான் மாவீரன்; என்றொரு பாட்டு ஈழத்தமிழ் வாயில இருந்தும் புறப்பட்டதும் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.
இப்பிடியான இந்த கோபங்களுக்கு; சூழுறையளுக்கு; மான ரோச குணங்களுக்கு; அடிப்படையாக இருந்தது அறம் சார்ந்த நியாயப் பாடுகள் தான். தான் கண்டு கொண்ட உண்மை என்ற ஒன்றின் மீதான அதி தீவிர நம்பிக்கை; தனக்கு சரி எனப் பட்ட ஒன்றுக்காக உயிர், வாழ்வு, நட்பு எல்லாவற்றையும் துச்சமாக கருதும் ஒரு மனப்பாண்மை; அறமும் தர்மமும் உண்மையும் முன்னுக்கு நிக்குமெண்டால் கடவுளும் எனக்கு ஒரு தூசிதான். அவருக்கே நான் சவால் விடுவன். எண்ட ஒரு தார்மீக கோபம் தான் அது.
தமிழுக்கு அப்பிடி ஒரு கம்பீரம். தமிழ்வாழ்வான அறமே அவனது அனைத்து செயல்களுக்குமான ஆழமான அடிப்படை.
கம்பனும் கூட, மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? எண்டு சோழ அரசனோடு கோவிக்கிறார்.
இப்பிடி ஒரு கோபம் சங்க காலத்து தமிழ் திராவிட பெண்ணான ஒளவைக்கும் வந்திருக்கு. ஒரு கொடை வள்ளலான அரசனோட அவளுக்கு கோபம். இத்தனைக்கும் அந்த அரசன் பாரி வள்ளல். கேட்பவர்களுக்கு இல்லையென சொல்லாது வாரி வளங்கும் வள்ளல் அவன். ஒளவையின் நட்பினனும் கூட. அதியமான் நெடுமான் அஞ்சி எண்ணுறது அவரின்ர பேர். ஒரு நாள் ஒளவை அதியமானை பாக்க வாறா. வாயில் காவலன் அவவ உள்ள போக விடாமல் மறிச்சுப் போட்டான். அது தான் அவவுக்கு கோபம். நடந்தது என்னவோ அவ்வளவு தான். கோபமும் மான உணர்வும் அவவுக்கு முன்னால வந்திட்டுது.
இத ஒரு விதத்தில ஒரு வித ஞானச் செருக்கு எண்டும் சொல்லலாம். ஏனெண்டா காவலன் போக விடாமல் மறிச்சது தன்ர ஞானத்துக்கு மேல விழுந்த ஒரு இழுக்கு எண்டு அவ நினைச்சிட்டா. அது ஒரு அறிவின்ர கனல். இந்தச் அறிவுச் செல்வத்தை தான் கம்பரும் ’அரசரோடென்னை சரியாசனம் வைத்த தாய்’ என்று கல்வித்தெய்வத்தை புகழ்ந்துரைப்பார்.
தன்ர அறிவுச்செல்வத்துக்கு வந்த இந்த அவமரியாதையை ஒளவையால பொறுக்க முடியேல்ல. தமிழரின்ர வாழ்க்கையை அறிய முடிகிற முதல் எழுத்திலக்கியமா இருக்கிற சங்ககால தமிழ் இலக்கியத்தில ஒரு பெண்ணா; புலவரா இருந்து கொண்டு அப்பிடி ஒரு ரோசமுள்ள பாட்ட அவ பாடி இருக்கிறா.
அவமானங்களைச் சகிக்க முடியாதவனா தமிழன் எப்பவுமே இருந்து வந்திருக்கிறான் என்ணுறதுக்கும் இந்தப்பாட்டு ஒரு சான்றுதான்.
அவ அப்ப பாடின பாட்டுத் தான் இது. புறநானூறு எண்ட சங்க இலக்கியத்தில வாற 206 வது….பாட்டு இது.
வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
5 பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.
பசியை விட மானம் பெரிசா இருந்திருக்கு அவவுக்கு. திறமைக்கு மதிப்புத் தராத இடத்தில இருக்க மாட்டன் எண்ட அறக் கோவம் இருந்திருக்கு அவவுக்கு. தன்ர அறிவும் ஞானமும் ஒரு பெரும் தகுதியா தன்னோட இருக்கேக்க தனக்கு எங்க போனாலும் சோறு கிடைக்கும் எண்ட நம்பிக்கை அவவுக்கு இருந்திருக்கு. அது அறிவு கொடுத்த நம்பிக்கை; திறமை கொடுத்த நம்பிக்கை!!
இந்தப் பாட்டில வாயில் காவலன பார்த்து, வாயிலோயே வாயிலோயே எண்டு கூப்பிட்டு வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை’ எண்டு சொல்லுறா. வரிசை எண்ட இந்தச் சொல்லு தகுதி தராதரம் பார்த்து எண்டு சங்க காலத்தில பொருள் கொள்ளப்பட்டிருக்கு. பரிசு தாரதா இருந்தா தகுதி தராதரம் பார்த்துத் தர வேணும். தானம் மாதிரிக் குடுக்கக் கூடாது எண்ணுறது அவவின்ர வாதம்.
பிறகு சொல்லுறா,
விரைவா ஓடுற குதிரையள வச்சிருக்கிற அரசனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை அறியாதவனா? அல்லது, என்னை அறியாதவனா? அறிவும் புகழுடையவர்கள் பசியால் இறந்தார்கள் எண்டு சொல்லத்தக்க வறுமைப்பட்ட உலகமில்ல இது. அதால, என்ர யாழையும், மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு நான் போகிறேன். மரம் வெட்டுற தச்சனின்ர திறமை வாய்ந்த பிள்ளைகள் கோடாலியோட காட்டுக்குப் போனால் விறகுகளா கிடைக்காது? அது போலத்தான் இந்த உலகம். நான் எங்க போனாலும் அங்கே எனக்கு சோறு கிடைக்காமல் போகாது.
எண்டு சூழுரைச்சுப் போட்டு போற பாட்டு அது. அவவின்ர தமிழ் புலமை மேல அவவுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது எண்ணுறது மட்டுமில்ல; அதுக்கு ஒரு இழுக்கு வந்த சகிச்சுக் கொள்ள முடியாத தமிழ் மான உணர்வும் அதுக்குள்ள இருக்கு. அது தமிழ் கொடுத்த நம்பிக்கை. அரிவு கொடுத்த நம்பிக்கை. ஞானம் குடுத்த நம்பிக்கை.
எப்பேற்பட்ட தமிழன் வாழ்வு அது!!
தமிழ் அதனை - தமிழ் வாழ்வைக் கைப்பற்றி நமக்கு பாதுகாப்பாக நம்மிடம் ஒப்படைச்சிருக்கு.
அது ஒளவை எண்ட திராவிடத் தமிழ் பெண்னின்ர குணாம்சமா தமிழன்ர மான ரோச உணர்வின்ர தொடக்க கால எச்சமா இந்த பாடலின் வழியாக நிரூபனமாகி இருக்கு.