அண்மையில் கடைக்குப் போன ஒரு சந்தர்ப்பத்தில் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள இந்தப் புத்தர் சிலையைக் கண்டெடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்த இந்தப் புத்தர் சிலைக்கு வாய் இல்லை. ஆங்காங்கே வெடிப்புகள் வேண்டுமென்றே உருவாக்கப் பட்டிருந்தது. கண்மூடி மெளத்திலும் தியான நிலையிலும் இருந்தவரை எனக்கு கண்டவுடனே பிடித்திருந்தது.
என்னுடய ஒருவித குணாம்சம் அதிலிருப்பதாக எனக்குத் தோன்றியதும் அதனை வாங்கியதற்கு இன்னொரு காரணம்.
ஞானத்தின் பிறப்பிடமாக மெளனத்தைக் குறிப்பிடுகிறார்கள். அங்கு தான் உண்மைகள் உற்பத்தியாகின்றன. பிறப்பின் அடிப்படைகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கின்றன. சலசலப்புகள், சத்தங்கள் அடங்கி விடுகின்றன. புற உலகின் அல்பத்தனங்கள், அசூசைகள் உங்களை எதுவும் செய்து விடாது. நாம் நமக்கு மெளத்தைப் பரிசளிக்கும் போது தான் நம் ஆத்மா எங்களோடு மெல்லப் பேச ஆரம்பிக்கிறது. ஆத்மீக வெளி ஒன்று உங்களுக்கே உங்களுக்காக மெல்ல தன் வாசல்களைத் திறந்து விடுகிறது. உண்மை தன்னை வெளிப்படுத்துகிறது.
பெரும் பரம்பொருளான பேரருட் சக்தியோடு நமக்கு நேரடியான தொடர்பு சித்திக்கிறது.பெரும் பேரமைதி அகத்திலும் புறத்திலும் வியாபிக்க நாம் இயற்கையோடும் பிரபஞ்சத்தின் சகல உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டவும் நேசிக்கவும் ஆரம்பிக்கிறோம். உலகமே கடவுளின் பேரருட் கருணையில் இயங்குவதை காணவும் புளகாங்கிதம் கொள்ளவும் முடிகிறது. அதன் ஒரு பகுதியாக நாமும் இருப்பதை அனுபவம் செய்கிறோம். எல்லாமே அன்பு மயமாகத் தோற்றமளிக்கக் காண்கிறோம். அது ஒரு வித இறை அனுபவமாக மாறிப் போகிறது. மரம் செடி கொடிகள் மீதும் அன்பு பிறக்கிறது. சகல உயிரினங்கள் மீதும் காருண்யம் பிறக்கிறது.
புறப் பொருட்கள் மீதான ஆசை இல்லாதொழிகிறது. தேவையற்ற பேச்சுக்கள் குறைகின்றன. ஆடம்பரங்கள், ஆரவாரங்களை விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கத் தோன்றுகிறது.....
இந்தத் தனித்திருத்தலில் நாம் விரும்புகிற யாவும் தானாகவே நம்மை வந்தடைந்து விடுகிறது!
தனித்திருத்தல் என்றால் என்ன?
ஒருவர் தன் பெளதீக உடலால் யாரும் அருகில் இல்லாமல் இருத்தல். அவர் உடல் நீதியாகத் தனித்திருந்தாலும் அவர் தனக்கான நண்பர்களை, உறவினர்களை ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் வைத்திருந்தால்; கூடவே தனக்கான 24 மணி நேரத்தில் தன் கனவுகளை, இலட்சியங்களை, விருப்பங்களை, சுய தேவைகளைப் பூர்த்தி செய்தபடி இருந்தால் அவர் தனித்திருக்கிறார் என்று அர்த்தம்.
இவ்வாறான தனித்திருத்தல்கள் தன் சுயத்தை அறிந்து கொள்ள, தன் இலட்சிய பாதையை வகுத்துக் கொள்ள, திட்டமிட, ஆத்மீக தேடல்களை செய்ய, மேலான உண்மைகளை அறிந்து கொள்ள மிக மிக அவசியம். அதனால் தான் சான்றோர்கள் ‘ சும்மா இரு சொல்லற’ என்று சொல்கிறார்கள். தனித்திருத்தல் என்பது சக்தி வாய்ந்தது; சகலராலும் கைவரப் பெறாதது. இந்த தனித்திருத்தலின் வழி கிடைக்கும் மெளனத்தின் வலிமை ஆண்மீக உலகின் உன்னதங்களை உங்களுக்கு; எங்களுக்கு காட்டும். வாழ்வின் உண்மைகளை அறிதலின் வழி ஆத்மஞானம் சித்திக்கும்.
அது தனித்திருத்தல் ஆகும்.
தனிமையோடித்தல் என்றும் ஒன்று இருக்கிறது.
தனிமையோடு இருத்தல் என்றால் என்ன?
அது பலரோடு இருக்கும் போதும் கிடைக்கலாம். தனியாக இருக்கும் போதும் கிடைக்கலாம். ஒருவர் மனதளவில் தனக்கென யாரும் அற்றிருத்தல்; குடும்பத்தவர், உறவினர்கள், நண்பர்கள், என்று யார் இருந்தாலும் தன் மகிழ்வை, கவலையை, குழப்பத்தை யாரோடும் பகிராது அல்லது பகிரத் தக்கதாக யாரையும் நம்பாது இருத்தல். தனக்கென்று ஒரு பாதையைக் கண்டறிய முடியாதவராக இருத்தல்; இலட்சியம், கனவுகள், விருப்பங்கள், தேவைகள், தேடல்கள் இல்லாதிருத்தல். குழப்பமான மனநிலையோடிருத்தல், தனக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதிருத்தல். என்ன வேண்டும் என்ற தெளிவை தனக்குள் கண்டு கொள்ள முடியாதிருத்தல்.
இது தனிமையோடிருத்தல் என்று அர்த்தம்மாகும். தனிமையோடிருத்தல் ஆபத்தான ஒன்றும் கூட. தனிமையோடிருப்பவர்கள் தம்மை சமூகத்தோடு அல்லது மனதுக்கு நெருக்கமானவர்களோடு அல்லது தன் வாழ்வின் விருப்பங்களோடு தம்மை இணைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அல்லாது போனால் அது பெரும் மனக் குழப்பங்களுக்கும் விரக்தி நிலைக்கும் அவர்களை உள்ளாக்கி விடும். அது அவர்களை ஆபத்தில் கொண்டுபோய் சேர்த்து விடும்.
ஆகையினால் பேரன்புடையீர்!
தனித்திருத்தல் என்பது பேரருட் சக்தியினால் அருளப்படும் பெரு வரம்! அது பிரபஞ்சத்தின் பரம் பொருளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள கிடைக்கப் பெற்ற பெரும் பேறு!!
...சிவபுரத்தில் உள்ளார் சிவனடிக் கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து...
( எல்லாம் சிவமயம்.)