கடந்த வாரம் தமிழ் இலக்கியம் தொடர்பாக எதையோ தேடிக்கொண்டு போன போது கண்ணுக்குக் கிட்டிய ஓரகராதி சூடாமணி நிகண்டு என்ற ஆரம்ப காலத் தமிழ் அகராதி. இவ்வகராதி 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டலபுருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டதென்றும்;அது 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விருத்தப்பா வகையில் ஆக்கப்பட்டதென்றும்;இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டிருக்கின்றது என்றும் விக்கிபீடியா குறிப்பிடுகின்றது.
அது விளக்கங்களோடு ஆறுமுக நாவலரினால் 1938ம் ஆண்டு சென்னையில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது.இன்று வழக்கொழிந்து போன பல தமிழ் சொற்கள் அதில் காணப்படுகின்றன.ஆணின் தலைமயிர், பெண்ணின் தலைமயிர், மேலுதடு,கீழுதடு என்பவற்றுக்கெல்லாம் தனியான தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன; அவை புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பது தமிழின் தனித்துவத்துக்கும் அதன் நுட்பம், செறிவுத்தன்மை(richness)என்பவற்றுக்கு நல்லதொரு சான்றாகும்.அவ் அரிய பொக்கிஷத்தை முழுவதுமாக நூலகம்.நெற் ரில்(www.noolaham.net) மிகத் தெளிவாகவும் எளிதாகவும் தரவிறக்கிக் கொள்ள முடிகிறது.அவர்களுடய தமிழ் பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
அதனோடு சமாந்தரமான வகையில் தமிழுக்குக் காணப்படுகின்ற இன்னொரு இயல்பு 247 எழுத்துக்கள்.குறிலென்றும் நெடில் என்றும் ஒலிப்பவை சில.மெல்லினமாகவும் வல்லினமாகவும் இடையினமாகவும் ஒலித் தரமுள்ளவை மேலும் சில.ங,ழ, என்ற எழுத்துக்களோடு ஃ என்ற எழுத்தும் தனக்கென தனித்த இயல்புடையன. எழுத்தின் ஓசையும் எழுத்தின் அழகும் சேர்ந்து அது நினைத்தவாறெல்லாம் வளைந்தும் நெகிழ்ந்தும் கொடுக்கக் கூடியவாறு அமைந்திருப்பதால் சொற்களும் அதன் நெகிழ்வுத் தன்மையும் இன்னும் நுட்பமும் அழகும் வாய்ந்ததாக விளங்குகின்றது.
ஆனால் வெளி நாடுகளில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கின்ற மாணவர்கள் இதனால் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்கிறார்கள்.சிறப்பாக பேச வாசிக்கத் தெரிகின்ற மாணவர்கள்; தமிழ் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொள்கின்ற மாணவர்கள் கூட எழுத்துப் பிழைகள் விட்டு எழுதுவதனால் பரீட்சைக்குத் தோற்றுவதில் தயக்கம் காட்டுகின்றார்கள்.
ழ,ள, ன,ண,ர,ற என்பனவற்றின் வேறுபாடுகளை விளங்கவைப்பதும் புரியவைப்பதும் அவற்றை தெளிவு படுத்துவதும் மிகுந்த சிரமமாக இருக்கின்றது.நம்மில் எத்தனை பேர் ழ,ள வேறுபாட்டை உணர்ந்து பேசுகிறோம்? நாம் கூட இரண்டையும் ஒன்று போலவே பேசிக் கொண்டு மாணவர்களை வேறுபாட்டோடு பேசவும் உணர்த்தவும் செய்தல் என்பது நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்யம்?
கடந்தவாரம் முழுக்க முழுக்க எனது சிந்தனை உலகு இதற்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.எவ்வாறு மாணவர்களை இந்த சிக்கலுக்குள் இருந்து மீட்டெடுத்துக் கொண்டுவருவதென்பது குறித்த கேள்விகளுக்கு இங்கு வருகின்ற யாரேனும் விடை தெரிந்தால் கூறுங்கள். அது மிகுந்த உபயோகமாக இருக்கும்.
அதற்கு நான் கண்டு கொண்ட ஒரு சிறு விடயம் என்னவென்றால் அந்த எழுத்துக்கள் வரக்கூடிய சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதப் பயிற்சி கொடுப்பது தான். சொற்களையும் பொருளையும் விளங்கப் படுத்தி உச்சரிப்பின் இயல்பையும் தெளிவு படுத்த முனைந்து அதற்கான ஆங்கில அர்த்தத்தையும் கொடுத்து விட்டு அடுத்தவாரம் அதில் சொல்வதெழுதுதல் கொடுப்பது ஓரளவுக்கு பயனுடயதாக இருக்கும் என்று நினைத்தேன்.
அதன் ஒரு கட்டமாக சில சொற்களை வேலை இடைவேளையின் போது எழுதிக் கொண்டிருக்கும் போது என் நண்பன் றே(Ray) என்ன செய்கிறாய் என்ற படியே வந்தான்.விடயத்தைச் சொன்னேன். அவன், "Huckleberry Friend" என்றொரு அமெரிக்க ஆங்கில வார்த்தை இருக்கிறது தெரியுமா என்று கேட்டான். தெரியாதே அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.
உங்களுக்கு எப்போதேனும் ஒரு சடப்பொருள் அல்லது ஒரு அஃறிணை உயிர் நட்போடு இருந்திருக்கிறதா? நம்பிக்கையான ஒரு நட்பாக சிறு பிள்ளைகள் வைத்திருக்குமே கறடிப் பொம்மை அது மாதிரி, சில பாடல்களில் வருமே "வெண்முகிலே சொஞ்ச நேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு" என்பதில் வரும் வெண்முகில் மாதிரி,வீட்டுப் பிராணிகளோடு சிலர் தம் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வார்களே அது மாதிரி,அவர்களிடம் சொல்லி பிரச்சினை தீராது என்ற போதும் அதனிடம் சொல்வதில் ஓராறுதலைக் காண்பார்களே அது மாதிரியான ஒரு சினேகிதத்தை "Huckleberry Friend" என்று சொல்வார்களாம்.அதற்கு "Moon River" என்றொரு பாடலும் இருக்கிறது என்று கூறினான் றே.அந்தப் பாடலையும் இத்தோடு இணைத்திருக்கிறேன். அதில் அழுத்தி அப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்.
YouTube - Sarah Brightman - Moon River (Lyrics)
என்னுடய கேள்வி என்னவென்றால் அதற்கு இணையான தமிழ் சொல் இருக்கிறதா?
யாரேனும் இதற்கொரு தமிழ் வார்த்தை சொல்லி விட்டுப் போங்களேன்!
வணக்கம்; இதை ஒட்டி நிறைய எழுத வேண்டி இருக்குங்க... இது ஒரு உவமைச் சொல். அதற்கான பொருளை மனதில் கொண்டு தமிழ்ப்படுத்தும் போது... வசந்துய்வன் என்ற சொல்லே இணையான சொல்... நான் வார ஈறில் எனக்குத் தெரிந்த பின்னணியைப் பதிகிறேன். நன்றி!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteவிரிவான விளக்கத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றியும் கூடவே.
http://maniyinpakkam.blogspot.com/2010/11/huckleberry-friend.html
ReplyDeleteகைத்தடி (HUCKLEBERRY FRIEND)