Wednesday, October 13, 2010

ஒரு ரசிகையின் பார்வையில் MELODIC RHYTHMS

கடந்த 9ம் திகதி மாலை ஆறு மணிக்கு நூலக மண்டபம் ஒன்றில் நடன விருந்தொன்றுக்கு அழைப்பிதழ் வந்திருந்தது.பிரபல நாட்டிய ஆசிரியையும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் 'பண்பாட்டுக் கோலங்கள்' என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து அளிப்பவருமான திருமதி கார்த்திகா கணேசரின் மாணவிகளின் நடன நிகழ்ச்சி அது.

கடந்த வருடமும் இதே போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வந்து சென்ற அனுபவம் எனக்குத் தந்த பாடத்தின் பயனாக முதலில் கமறாவை தயார் நிலையில் வைத்துக் கொண்டேன்.கடந்த வருடத்தில் நடந்த செம்பு நடனம், தாம்பாளத்தில் நின்று செய்த நடனம்,மற்றும் இதுவரை நான் பார்த்திராத இந்திய மண்ணின் நடனங்களும் அவற்றில் இருந்த நேர்த்தியும் கமறாவுக்குள் அவற்றை அடக்கி விட முடியவில்லையே என்ற வருத்தமுமே அதற்குக் காரணம்.

வழக்கம் போல எளிமையான ஆடம்பரங்கள் அற்ற மேடை!அளவான மண்டபம்,மென்மையான ஒளியமைப்பு.எல்லோரும் பார்க்கத் தக்கதான இட அமைவு,மென்மையாக இசைத்துக் கொண்டிருந்த வாத்ய ஒலி, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடித் திரிந்த பண்பாட்டு உடையணிந்த சிறிசுகள்,துப்பட்டாக்கள் சிறு பொருட்களால் ஏற்கனவே புக் செய்யப் பட்டிருக்கின்ற இருக்கைகள்,இந்திய சீன வெள்ளை முகங்கள் என மண்டபம் நிறைய ஒரு வித்தியாசக் கலவை!

அட, அப்பாவின் நண்பர் வந்திருக்கிறார். எங்களைப் போல 15 நிமிடங்கள் முன்னதாக.கடந்த வருடம் தனியாக வந்திருந்தவர் இம்முறை தன் மகள் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தார்.மகிழ்ச்சியாக இருந்தது.சற்றே நேரம் செல்லச் செல்ல இருக்கைகள் நிறைந்தன.அட, என் அக்காவும் தன் குடும்பத்தோடு வந்திருக்கிறாரே! நிச்சயம் முதல் வருட நிகழ்ச்சி பலரையும் பிடித்துக் கொண்டிருக்கிறதென்பது புரிந்தது.

நேரம் 6 மணியைக் கடந்து கொண்டிருந்தது.ஏன் பிந்துகின்றது என்ற வினா மனதுக்குள் எழுந்த போது ஒளியமைப்பைச் சரி பார்த்துக் கொண்டிருந்தவர் கண்ணில் பட்டார். அட, இவ்வளவு நேரமும் நின்றவர் இப்ப தானா இதைச் சரி பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

6.15. மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று.எல்லா நிகழ்ச்சிகளையும் படம் பிடிக்க நான் இருந்த இடம் தோதாக அமைய வில்லை.ஒன்றை ஒன்று மிஞ்சும் விதமாக அமைந்திருந்த நடன நிகழ்ச்சிகளில் பரதம்,குச்சுப்புடி,பாம்பு நடனம்,பொலிவூட் நடனங்கள் என ஆசிரியரின் கைவண்ணம் சிறப்பாக அதில் மின்னியது.போன முறை இடம்பெற்ற ஆசிரியரின் கைவண்ணங்கள் இம்முறை இல்லாது புதிய வடிவில் நடனங்கள் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன.அது எனக்கு சற்று ஏமாற்றமாகவே போய் விட்டது.அந்த நடனங்களை - அந்த நடனப் பெண்மணிகளை எல்லாம் சேர்த்து கார்த்திகா இன்னொரு நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.இந்த இடத்தில் ஆசிரியருடய ஆழுமை பற்றிச் சற்றே சொல்லுதலும் பொருத்தம்.

சிலருக்கு கலையின் புனிதத் தன்மை மிகவும் முக்கியம். கலை கலையாக மாற்றங்கள் ஏதுமின்றி அப்படியே படைக்கப் படுவது பிடிக்கும்.அதன் புனிதத்துவத்தில் ஓர் அழகு இருப்பதென்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், சிலருக்கு நடைமுறையோடு ஒட்டியவாறு மாற்றங்களோடு செல்வது பிடிக்கும்.ஒருவரிடம் இருக்கும் பார்வை, திறமை, சமூகத்தைப் பார்க்கும் கண்ணோட்டம்,சொல்ல விரும்புகின்ற செய்தி - இவை எல்லாவற்றையும் இந்த இரண்டாவது இயல்பு சிறப்பாகக் கொண்டு வரும்.இத்தகைய விரிவான பார்வை தான் புதிய சிந்தனைகளுக்கான ஆரம்ப ஊற்று.அந்த வகையில் கார்த்திகா இரண்டாம் ரகம்.புதிய கண்ணோட்டம், பார்வை,தெளிந்த சிந்தனை, அதனை சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல்,கற்பனை வளம் ஆகியன கைவரப் பெற்றவர் கார்த்திகா.

அத்துடன் தனி இனம், மதம், கோட்பாடுகள் என்பவற்றுக்கப்பால் தனக்கென தனியான பார்வை, துணிவு, தன்னம்பிக்கை என்பனவும் கைவரப் பெற்றவர்.கற்பனையாற்றல்,அதனை வெளிப்படுத்தும் திறன், நேர்மையான சமூக நோக்கு என்பன கலைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியதில் தனித்துவமான கம்பீரமான கலைஞியாக கார்த்திகா மிளிர்கிறார்.அவற்றை அவரது நிகழ்ச்சியில் நன்குணர முடிந்தமை இந் நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு.

நடன நிகழ்ச்சிகள் தயாரிக்கப் பட்ட விதம், உடை நிறத் தெரிவு, அலங்காரம்,இடையில் எந்தத் தொய்வும் ஏற்படாமல் இதனைப் புன்னகையோடு நடத்திய பெண்மணி, பிரதம விருந்தினர் உரை என மிக விறு விறுப்பாகவும் அடுத்து என்ன என்ற ஆர்வத்தை ஊட்டும் படியாகவும் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தது மிகச் சிறப்பு.

ஒரு மாணவி அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தில் வந்து ஆடிய நிகழ்ச்சியும் அது சொல்லி நின்ற தத்துவமும் வெளிப்படுத்திய செய்தியும் கலை என்பது எவ்வளவு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதை இயல்பாகச் சொல்லி நின்றது.


பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர். காந்தராஜாவும் பாரியாரும்.நடன ஆசிரியர் கார்த்திகா. கணேசர் நன்றியுரை ஆற்றுகிறார்.சில படங்களை எடுக்க முடியாமல் எனக்கு முன்னால் இருந்த 5,6 வயது மதிக்கத் தக்க சிறுவன் கையை உயர்த்தி மேடை நடனத்தை தானும் ஆடிய படி இருந்தான்.அது நிகழ்ச்சியின் வசீகரத்துக்கு எடுத்துக் காட்டு.

நிகழ்ச்சிகள் எல்லாம் இனிதே நிறைவு பெற்று வெளியேறும் போது என் அக்காள் சொன்னாள் 'நீ இந்த சீடீக்கள் விற்பனைக்கு வெளி வந்தால் மறக்காமல் எனக்கும் ஒன்று வாங்கித தா. வச்சு வச்சுப் பாக்கலாமடி' இது என் அக்காள்.அவர்களைத் தாண்டி வெளியே வந்த போது என் தந்தையின் நண்பரையும் மகள் குடும்பத்தினரையும் சந்தித்தேன்.அவரது மகளுக்கு 2,3, வயதுகளில் பிள்ளைகள்.இன்று என் அப்பாவின் வற்புறுத்தலுக்காகவே வந்தேன். இந்த ரீச்சர் எங்க இருக்கிறா? அங்க தானோ வகுப்புகள் எடுக்கிறா? இன்னும் 2 வருஷம் போக அவவிட்ட என்ர மகளையும் விட வேணும்.'


நல்ல நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் தேவை இல்லை.அது தானாகவே எல்லோரையும் வசீகரிக்கும்.விளம்பரங்கள் எதுவுமற்று நடந்த இந்நிகழ்ச்சிக்கு வந்த சனக்கூட்டம் அதற்கு ஒரு நல்ல சான்று.

மூன்று மணி நேரங்கள் - மிக சிறப்பாக அளிக்கப்பட்ட விருந்து - நேரத்துக்குக் கிட்டிய மிக உயர் சன்மானம் - அது கார்த்திகாவும் மாணவிகளும் எங்களுக்குத் தந்த மறக்க முடியாத பரிசு!

அடுத்த வருடமும் போக வேண்டும்.

No comments:

Post a Comment