Wednesday, October 6, 2010

போவோமா ஊர்கோலம்!

கடந்த வார இறுதி (2,3,4 ஒக்ரோபர்)எங்களுக்கு நீண்ட வார இறுதி. திங்கள் கிழமையும் சேர்த்து விடுமுறை.சில வேளைகளில் ஞாயிற்றுக் கிழமையும் வேலை செய்ய வேண்டி வருகின்ற எனக்கு அபூர்வமாக அந்த நாளும் வேலை செய்ய வேண்டி வரவில்லை.

அவுஸ்திரேலியாவில் வசந்தகாலம். வருடத்திலேயே மிக அருமையான கால நிலையைக் கொண்ட நேரம் இது.என்ன செய்யலாம் என்று யோசித்த படி வானிலை அறிக்கையைப் பார்த்தால் முழு வாரமும் மழையும் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் என அது சொல்லியது.அதனால், வீட்டில் இருந்த படி கொமன்வெல்த் விளையாட்டுக்களைப் பார்க்கலாம் என்று ஒரு சாராரும் வீட்டினை; வீட்டுத் தோட்டத்தினை மீள் ஒழுங்கு படுத்தலாம் என்று இன்னொரு சாராரும் சொன்ன போதும் பலமான ஆதரவு கன்பராவில் இருக்கும் மலர் கண்காட்சியைப் பார்ப்பதற்கு இருந்ததால் இறுதியில் அங்கு போவதெனத் தீர்மானம் ஆயிற்று.

அக்கா குடும்பத்தினரும் நாமுமாக இரண்டு கார்களில் புறப்பட ஆயத்தமான போது முதன் முதல் நான் எடுத்து வைத்தது என் கமறாவைத் தான். வேறென்ன உங்களையும் அங்கு அழைத்துச் செல்வதற்காகத் தான் அந்த ஏற்பாடு.(அதற்காக நான் ஒன்றும் சிறந்த படப்பிடிப்பாயினி என்று நினைத்து விடாதீர்கள். இப்படித்தான் நான் விடயங்களைக் கற்றுக் கொள்வது வழக்கம்.:)

கன்பரா சிட்னியில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர்கள்.110 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தால் சுமார் 3 மணி நேரத்தில் கன்பராவைச் சென்றடைந்து விடலாம்.(இளைப்பாறிச் செல்லும் நேரங்கள் உட்பட)ஒரே நாளில் திரும்புகின்ற என்ணம் இருந்ததாலும் அன்று நமக்கு நேரம் மாறியதாலும் பழைய நேரம் 7.30க்கும் புதிய நேரம் 8.30க்கும் பயணம் ஆரம்பமாயிற்று.

புறப்பட்ட நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. சுதந்திரமாகப் பயணிக்க அது நல்ல வாய்ப்பாயிற்று.சிட்னியில் இருந்து பயணிக்கின்ற பாதையின் இரு மருங்கிலும் பார்ப்பதற்கென்று அதிகம் எதுவுமில்லை. சிட்னி நகர் புறத்தைத் தாண்டிப் போனால் வரும் அகன்ற பெரிய வெளிகளில் குதிரைகளும் செம்மறி ஆடுகளும் மேய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். மற்றும் படி பார்ப்பதற்கு அதிகம் எதுவுமில்லை.மேலே உள்ள படங்களும் அவற்றை உங்களுக்குச் சொல்லியிருக்கும். முதலாவது புகைப்படம் நாம் ஓய்வுக்காக நின்ற ஓரிடத்திலிருந்து எடுத்தது.மேலே உள்ள புகைப்படம் நாம் மலர்க் கண்காட்சிப் பிரதேசத்துக்குள் பிரவேசித்த உடன் பக்கவாட்டாகக் காணப்பட்ட பழங்காலத்து பியானோ என்று அறிந்தோம். இரண்டு டொலர்களைப் போட்டால் அது அருமையாக இசைக்கிறது.மேலே உள்ள படம் பிள்ளைகளுக்காக அமைக்கப் பட்டிருந்த விளையாட்டுத் திடல்.( பாடசாலை விடுமுறை இப்போது)குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் அங்கு குழந்தைகளாக மாறியிருந்ததைக் காண முடிந்தது.

முகப்பின் இரு மருங்கிலும் பியானோவும் விளையாட்டுத் திடலும் அமைந்திருக்க கண்ணுக்கு எட்டிய பரப்பு வரை பூக்களின் காடு!அவற்ரைப் பார்த்த படி வாருங்கள்.இடையிலே ஒரு புறத்தில் சேர்க்கேஸ் நடந்து கொண்டிருந்தது.பூக்களைப் பார்ப்பதில் அடங்கா ஆவல் இருந்ததால் இங்கு அதிகம் மினைக்கெட வில்லை.ஆனால் இந்த மனிதன் பாத்துக் கொண்டிருக்கும் சிறார்களையும் பங்கு பெற வைத்து அவர்களுக்கு மிட்டாய்கள் சிறு பரிசுப் பொருட்களும் கொடுத்துக் கொண்டிருந்தது பிள்ளைகளை ஆர்வம் கொள்ளச் செய்திருந்தது.

கீழே இருக்கும் படம் இடையில் இருந்த மலர்க் கண்காட்சியில் எடுத்தது. உள்வீட்டு அலங்காரத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப் பட்ட மலர்களால் பலவித சாடிகளில் அலங்காரமாக பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது. சீனர்கள் இதில் மிக வல்லவர்கள். நேர்த்தியும் கலை உணர்வுமாக அவர்களால் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த பல சாடிப் பூக்களை எப்போதும் பலர் மொய்த்துக் கொண்டிருந்ததால் தனியாக அதனை எடுக்க முடியாது போய் விட்டது.

கீழே இருக்கும் படம் அங்கு இருந்த 'திருவிழாக் கடையில்'எடுத்தது.பல கலைப் பொருட்கள் தொப்பிகள்,அலங்காரப் பொருட்கள்,மாலைகள்,குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், தேநீர் சாலைகள்,என்று கடைகளுக்கும் குறைச்சல் இல்லை. ஆனால் விலை தான் சற்றே அதிகம்.புன்னகையோடு நிற்கின்ற விற்பனைப் பெண்கள் தம் அழகுப் புன்னகைக்கும் சேர்த்தே விலை வைப்பார்கள் போலும். ஆனால் சும்மா சொல்லக் கூடாது எல்லாம் அழகான பொருட்கள் தான்!இனித் திரும்புகின்ற நேரம் ஆகி விட்டது.சிட்னி நோக்கி புறப்பட ஆரம்பித்தோம்.

இந்த இடத்தில் ஒரு விடயம் அவசியம் சொல்ல வேண்டும். பல நூறு மைல் தூரங்களை இணைக்கும் வீதிகள் மிகுந்த நேர்த்தியாக இருப்பதும் இடையிடையே காணப்படும் இளைப்பாறும் இடங்கள், சிரம பரிகாரம் செய்யும் இடங்கள், அவை எல்லாம் அவற்றுக்குரிய சுத்தத்தோடும் தண்ணீர், பேப்பர், கைகளை உலர்த்தும் கருவிகள், கண்ணாடிகள் இத்யாதிகள் சகிதம் சிறப்பாகப் பராமரிக்கப் படுகின்றன. அவசர தொலைபேசித் தொடர்புகளுக்கான வசதிகளும் ஆங்காங்கே செய்யப் பட்டிருக்கின்றன.இதற்காக அரசாங்கத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

கீழே இருக்கின்ற படம் திரும்பி வரும் வழியில் நின்ற ஓரிடம்.பிரமாண்டமும் தத்ரூபமுமாக அமைக்கப் பட்டிருக்கும் செம்மறி ஆடு இது.இதன் நான்கு கால்களுக்கும் கீழே கடை இருக்கின்றது.இளைப்பாறிச் செல்ல உகந்த இடம் இது. நமக்கான தேநீர்சாலையும் வாகனத்துக்கான தேநீர்சாலையும்(பெற்றோல் நிரப்பும் நிலையம்)இங்கு இருக்கின்றது.

சிட்னிக்குப் போகும் பாதை.(எங்கே முடியும் இப்பாதை? தெரியவில்லை)கீழே உள்ள இரு படங்களும் ச்சும்மா:)

காரோட்டும் வளை கரம்!

110ல் போகவேண்டிய இடத்தில் கொஞ்சம் கோடினேஷன் பிழைச்சுப் போச்சு!ஒருகால் ஆக்சிலேட்டரில் ஒரு கை ஸ்ரியறிங் இல் மறுகையில் கமறா இருந்ததால் 110 கிலோ மீற்றர் வேகம் 100 ஆகிவிட்டது.இந்தப் படத்தில் சரியாகிவிட்டது!:)ஊர்வலம் பிடிச்சிருக்கா?

(குறிப்பு: கடந்த புதன் கிழமை எழுத ஆரம்பித்த பதிவை இன்று வெள்ளிக் கிழமை தான் பிரசுரிக்க முடிந்தது.புதன் கிழமையே வந்து பார்த்துப் போனவர்கள் மன்னிக்க!)

No comments:

Post a Comment