Sunday, July 14, 2024

புறம் - 256

பாடல்:

 ”கலம்செய் கோவே! கலம் செய் கோவே!

அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய

சிறுவெண் பல்லி போலத் தன்னொடு

சுரம்பல வந்த எமக்கும் அருளி,

வியன் மலர் அகன் பொழில் ஈமத்தாழி

அகலிது ஆக வனைமோ

நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!” - (புறம் 256)

 - (பாடியவர் பெயர் தெரியாது)


தெளிவுரை:

ஈமத்தாழி (அந்தக் காலத்துச் சவப்பெட்டி) செய்யும் பெரியவரே! 

வண்டிலின் சக்கரத்தோடு அமர்ந்திருக்கிற பல்லியும் சக்கரத்தோடு சேர்ந்து பயணிக்கிற மாதிரி, நானும் என்னுடய தலைவனோடு ( கணவனோடு) சேர்ந்து  எல்லா இன்பதுன்பங்களிலும் சேர்ந்தே பயணித்து ( இதுவரை) வந்து விட்டேன்.

அதனால் அவருக்கு ஈமத்தாழி செய்யும் போது ( சவப் பெட்டி) அந்த  ஈமத்தாழியில்  எனக்கும் கொஞ்சம் இடம் வைத்து சற்றே அகலமாகச் செய்ப்பா. என்கிறாள் இந்தப் பெண்.

அளவு அழகாக இருக்கிறது இந்தப் பாடல் இல்லையா? முதலாம் நூற்றாண்டில் இப்படி ஓர் அழகிய கணவன் மனைவி இருந்திருக்கிறார்கள் பாருங்கள்!

இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து இருந்தது மாதிரி போகிற பயணத்திலும் தன் தலைவனோடு சேர்ந்தே போக விரும்புகிறாள் இந்தப் பெண்.

இந்தப் பாடலை இன்று தற்செயலாகப் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை  எனக்குத் தந்தவர் திருமதி. சந்திரலேகா. வாமதேவா அவர்கள். இன்று அவரைச் சந்திக்கச் சென்ற போது, அவர் தான் படித்த புறநானூற்றுப் பாடல் ஒன்று பற்றிப் பேசினார். அதை ஒரு தடவை பார்ப்போம் என்று புத்தகத்தைத் தட்டிய போது தான் இந்தப் பாடல் கண்ணில் தட்டுப்பட்டது.

ஆர்வம் திசைமாறி இங்கு கொண்டுவந்து விட்டு விட்டது.

வாழ்க்கைப் பயணமும் அது போலத் தானே!

மேலும், இந்தச் சவப்பெட்டி தொடர்பாக நடந்த ஒரு சம்பவமும் கூடவே நினைவுக்கு வந்தது. அது ஈழத்தின் போர் காலம். நான் அப்போது யாழ்ப்பாணத்தில் படிப்பின் நிமித்தம் தங்கியிருந்தேன். போர் உச்சமடைந்த காரணத்தால் ஊருக்குத் திரும்பிய போது பயணம் தடைப்பட்டு சாவகச்சேரியில் நம் உறவினர் ஒருவரின் வீட்டில் நிற்கவேண்டியதாகிப் போயிற்று. 

எங்கும் போர் வாசனை! குண்டு வீச்சுகள்!! போர் தன் கோரமுகத்தை எங்கும் காட்டிய படி இருந்தது. சாவகச்சேரியில் கூட போர் விமானங்களும் குண்டு வீச்சுகளும் நிகழ்ந்த வண்ணமாகவே இருந்தது. அதனால் மக்கள் எல்லோரும் விளக்குகளை அணைத்து விட்டு வீடுகளுக்குள்ளும் பங்கர்களுக்குள்ளும் முடங்கியிருந்த காலம் அது! பலர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்து கொண்டும் இருந்தார்கள்.

என் உறவினர்களுக்கு இரண்டு சிறு பிள்ளைகள் இருந்ததால் அவர்கள் வீட்டை விட்டுச் செல்வதில்லை என்ற முடிவில் இருந்தார்கள். ஒருநாள் இரவு வீட்டுக்குள் மாத்திரம் ஒரு விளக்கை ஏற்றி வைத்து விட்டு எதிர்கால நிலைமைகள், போர்கால நிகழ்வுகள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். 

அப்போது தகப்பனார், உறுதிபட நாம் வீட்டை விட்டு எங்கும் ஓடப் போவதில்லை என்றும்; தற்செயலாகக் குண்டு விழுந்து தான் இறக்க நேர்ந்தால் தனக்கு ஒரு சவப்பெட்டி வாங்கி தன்னை எரித்து விட்டு நீங்கள் போனால் அது போதும் எனக்கு என்று தன் மகனாரிடம் கூறி, அதை மாத்திரம் செய்து விடு என்றார்.

இரண்டு மூன்று நாட்களில் போரின் உக்கிரம் மேலும் அதிகமாயிற்று. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் இடம்பெயர்ந்து விட்டார்கள். குண்டுகள் அருகருகாக விழ ஆரம்பித்து விட்டன. நமக்கும் இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தம். 

என் மாமி ’இனி பிள்ளையளை வச்சுக் கொண்டு இருக்க ஏலாது; நாமும் வெளிக்கிடுவோம்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். இவற்றை எல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த மகன் சொன்னார், ‘அப்பா நாங்களும் இப்பவே ஒரு சவப்பெட்டியை வாங்கி வைத்திருப்போமா? தற்செயலாக ஏதாவது ஒண்டு நடந்து, எனக்குச் சவப்பெட்டி வாங்க முடியாமல் போயிற்றா பிறகு நான் என்ன செய்யிறது? என்று கேட்டார்.

.........இப்படி எத்தனை எத்தனை கதைகள்.......சில சுவைக்கத் தகுந்தவை,...சில சிரிக்கத் தகுந்தவை... சில கதைக்கத் தகுந்தவை... சில அசை போடத் தகுந்தவை.....சில மறக்க முடியாதவை..... சில மறக்கக் கூடாதவை......மேலும் சில மறக்கவே முடியாதவை.....

4 comments:

  1. எவ்வளவு அழகான பாடல்! எவ்வளவு ஆழமான அன்பின் வெளிப்பாடு! புறநானூற்றுப் பாடலோடு உங்கள் வாழ்க்கை அனுபவமும் பின்னி மனம் நெகிழச்செய்துவிட்டது. ஈழத்தின் போர்க்கால வாழ்க்கை குறித்து அறியும்போதெல்லாம் மனம் திடுக்கிடுகிறது. அந்தக் கொடுமையான சூழலில் குழந்தைகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே மனம் நடுங்குகிறது.

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா.

    இந்தப் புறப் பாடலில் தலைவி தான் தேரோடு பயணித்ததாக இல்லாமல் வண்டில் சக்கரத்தில் இருந்து அந்தப் பல்லி போலப் பயணித்ததாகச் சொல்கிறாள். அதிலே ஒரு நுட்பமான கருத்தும் தொக்கி நிற்கிறது. தலைவன் தேரில் பயணிக்கும் போது அதில் ஏற்றத் தாழ்வுகள் / ஏற்ற இறக்கங்கள் இல்லை. அது ஒரு சீரான வேகம்; சீரான பயணம்.
    ஆனால் ஒரு தேர்ச் சக்கரத்தில் இருந்து பயணிக்கிற போது சக்கரம் கீழே போகும் போது அதனோடு சேர்ந்து கீழே போக வேண்டும். அது உயருகிற போது ( மேலே வருகிற போது) அதனோடு சேர்ந்து மேலே வர வேண்டும்.
    தலைவி அப்படி எல்லாம் வாழ்வை அனுபவித்த போதும் - சக்கரத்தில் அந்தப் பல்லி போல - வாழ்வை தலைவனோடு சேர்ந்து ஓரமாகப் பயணித்ததையும் - சொல்லாமல் சொல்கிறது இந்தப் பாடல்.
    இருந்த போதும் இறுதிப் பயணத்தில் கூட தலைவனோடு சேர்ந்து தானும் ஒரே ஈமத்தாழியில் இருந்து விட வேண்டும் என்று வேண்டுகிறாள் என்றால் அவளது அன்பு எத்துணை பெரியதாக இருந்திருக்க வேண்டும்! இல்லையா கீதா!!
    அழகான பாடல் தான் கீதா. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மை யசோ. ஒருவருடைய உணர்வுகளை வளவளவென்று வார்த்தைகளை வீணடிக்காமல் சின்னஞ்சிறு உவமையால் எவ்வளவு தீர்க்கமாகவும் நுட்பமாகவும் வாசிப்பவர்களுக்குக் கடத்திவிடுகிறார்கள் இந்தப் புலவர்கள்!

      Delete
  3. ஓம் கீதா, அது மட்டுமில்லை; எவ்வளவு பொருத்தமாகவும் கனகச்சிதமாகவும் இயற்கையில் இருந்தே உவமைகளை எடுத்தாண்டுள்ளார்கள் சங்கத்துப் புலவர்கள்! அற்புதமான இயற்கையான, இயல்பான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாக அவர்கள் இருந்ததால் தான் அப்படியான உவமைகளும் அவர்களுக்குக் கைகூடி இருந்துள்ளது போலும்!
    நன்றி கீதா மீண்டும் வந்து பதில் தந்ததற்கு.

    ReplyDelete