Thursday, March 26, 2009

நினைவுகளில்.....!

போர் சூழ்ந்த தாய் நாட்டில் இருந்தது நான் வாழ்ந்த கிராமம்.விவசாய பூமி.பின் பக்கம் புகையிரதப் பாதையும் முன் பக்கம் யாழ் - கண்டி வீதியும் எல்லைகளாகக் கொண்ட 5 ஏக்கர் நீள் சதுர நிலப் பகுதி.

மனிதர்கள் மட்டுமன்றி குரங்குகள், மயில்கள்,கிளிகள்,கொக்குகள் வண்ணப் பறவைகள்,வண்ணாத்திப் பூச்சிகள்,மான்,மரை, பன்றி,யானை என்று எல்லோரும் நம் உறவினர்கள்.அடிக்கடி வந்து சுகம் விசாரித்துப் போவார்கள்.அன்பின் மிகுதியால் உரிமையோடு குரங்குகள் மாங்காய்களையும், யானைகள் தென்னங்கன்றுகளையும் வந்ததன் அடையாளமாய்க் கொண்டு போவதுமுண்டு.

அவர்கள் போதாதென்று வீட்டில் நாய்,பூனை, ஆடு, மாடு, கோழி என்றும் சில உறவினர்கள்.நாய் பூனையோடு கோவிப்பதும்,ஆட்டுக்குட்டிகள் கதிரையில் ஏறித் தூக்கம் போடுவதும் கோழிகள் முற்றத்தில் அடிக்கடி எச்சம் போடுவதும் அன்றாட நிகழ்வுகள்.

சகல கனி வர்க்கங்களாலும் தென்னை மரங்களாலும் பூஞ்செடிகளாலும் குரோட்டன்களாலும் ஒரு மலிகைப் பந்தலாலும் சூழப்பட்டு மூன்று அறைகளாய் கட்டப் பட்ட எங்கள் கல் வீடு வெள்ளையாய் நடுவில் நின்றிருந்தது.

பாமர மக்களால் சூழப்பட்ட கிராமம் அது. அருகில் ஒரு பிள்ளையார் கோயில்.காலையும் மாலையும் கோயில் மணி கேட்கும்.எங்கோ கூலி வேலை முடித்துப் போகும் ஆண்களும் பெண்களும் நம் கிணற்றில் தொட்டியில் நிறைத்திருக்கும் தண்ணீரில் குளித்துக், கலகலத்து ஈரத்துணியை கழுவிப் பிளிந்து தோளில் போட்டபடி வீட்டுக்கு வருவார்கள்.

முற்றத்தில் வந்து பெண்கள் குந்தினார்கள் என்றால் அவர்களுக்குக் காசு கடனாகவோ அல்லது தேனீரோ அல்லது தம் குறை நிறைகளை அம்மாவிடம் சொல்ல வேண்டிய தேவை ஏதோ இருக்கிறது என்று அர்த்தம்.அதுவே ஆண்களாக இருந்தால் கிடுகோ, தேங்காயோ, மண்ணெண்ணையோ,தென்னம் மட்டைகளோ தேவை என்று அர்த்தம்.அதுவே சின்னப் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுடய புதுச் சட்டை தைக்கப்பட வேண்டும் அல்லது சாரம் மூட்டப் பட வேண்டும் அல்லது தாயார் முட்டை அல்லது காசு கடன் வாங்கி வரும் படி அனுப்பப் பட்டிருப்பார்கள்.சில வேளை பாலும் பழவர்க்கங்களும் அவர்களது வேண்டுகோளில் ஒன்றாய் இருக்கும்.எளிமையிலும் நேர்மையோடும், கண்ணியத்தோடும், மரியாதையோடும் வாழ்ந்த சனங்கள்.

நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து நிற்குக் காலங்களில் 'என்னங்கம்மா, பெரிய தங்கச்சி வந்திருச்சா' என்று தவறாமல் ,லெமென் பவ்'பிஸ்கட்டோடு கேட்டு வரும் கறுப்பையா,பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு என்னைத் தவறாமல் பார்க்க வரும் புஸ்பா, வெற்றிலைக் காவி படிந்த பற்களால் மிக அருமையாய் வெகுளியாய் சிரித்தபடி வரும் பூமணி,சிறு வயதில் என் தங்கையோடு கூடி விளையாடிய பாலன்,தடியில் ரின் மூடி பொருத்தி கார் விளையாடும் கால்சட்டை'கட்டி' இருக்கும் சிறு பிள்ளைகள்,5,6மைல்கள் சைக்கிளில் 'சாவகச்சேரி'பிலாப்பழத்தை கட்டிக் கொண்டு 'என்னவாம் கிறஜுவட்' என்றபடி வரும் பனங்கட்டி மாமா,நான் தவறாமல் விசிட் பண்ணும் பக்கத்து வீட்டு பாலன் கமத்தன்ரி.முன் வீட்டு மோனைச் சித்தப்பா,தனியாக வசித்து வந்த வேலு,.......

இதுவே நான் 'வாழ்ந்த' கூடு.எனக்கு 'உண்மை வாழ்வை' உணர்த்திய காடு.

இன்று கூடு பிரிந்த பறவைகளாய்.......

யார் யார் எங்கெங்கோ....?

எங்கிருந்தாலும் வாழ்க நீவீர்!

பாதுகாப்பாய்! பாதுகாப்பாய்!! பாதுகாப்பாய்!!!

Thursday, March 19, 2009

சிந்திய முத்துகள்

எடுக்கவா? கோர்க்கவா?

தமிழர் வரலாற்று மணற் பரப்பில் நவரத்தினங்களாய் புதையுண்டு கிடக்கும் இலக்கியச் செல்வங்கள் எத்தனையோ! சில அடையாளம் காணப் பட்டன; சில பட்டை தீட்டப் பட்டு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றன;சில கேட்பாரில்லாமல் சிந்துண்டு போயுள்ளன.

சில தனிப்பட்ட புலவர்கள் பாடி வைத்த பாடல்கள் அத்தகைய தன்மையின.அவர்களில் பலர் ஊரின் நடுவிலே உலாவித் திரிகின்ற பயன் தரும் கனி மரங்களைப் போல் இருந்திருக்கின்றனர்.வறுமையும் வசதியின்மையும் அவர்களை மண்ணுக்குள் தள்ளி விட்டன.அவர்கள் மிளிராது போயினர் எனினும், தனிப் பாடல்களாய் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் ஆங்காங்கே தோற்றம் காட்டுகின்றன.அவ்ர்களிடம் திருவள்ளுவர், கவிச் சக்கரவத்திகள், சான்றோர்கள் ஆகியோரிடம் இருக்கின்ற திறமைகள் போல சில வேளை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் அறிவின் எல்லைகளுக்குள் அகப்பட்ட சாதாரணமான கருத்துக்களையும், இயற்கை அழகுகளையும் வசீகரிக்கத்தக்க வகையில் சொல்லும் சமர்த்தியம் இவர்களுக்கு இயல்பாகவே உண்டு.அவ்வாறு மண்ணுக்குள் புதைந்து கேட்பாரற்றுக் கிடக்கும் சில தனிப் பாடல்களை தருவது இந்தப் பதிவின் நோக்கம்.

யார் பாடியது என்று தெரியவில்லை ஒரு பாடல் இருக்கிறது.இதோ, சூரியன் உதிக்கிறது;சூரியகாந்திப் பூ முகம் மலர்கின்றது;மஞ்சள் மகரந்தங்களால் முகம் மினுக்கி, சூரியன் செல்லும் திசை நோக்கித் தவம் கிடக்கிறது அம் மலர்;இந்தக் 'கள்ளத்'தவத்தை சூரியனின் உண்மைக் காதலியாகிய கமலமலர் கண்டால் சிரிக்குமோ? அழுமோ ஆரறிவார் என்று அழகுறக் கற்பனை கொள்கிறது கவிஞ மனம். பாடல் இது தான்,

"மஞ்சட் குளித்து முகமினுக்கி நல்ல
மாயப் பொடி பூசி நிற்குநிலை
கஞ்ச மகள்வந்து காணிற் சிரிக்குமோ
கண்ணீ ருகுக்குமோ ஆரறிவார்."

என்ன காரணமோ தெரியவில்லை. அந்தக்காலத்தில் வறுமையும் புலமையும் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருந்திருக்கின்றன.இப்போது கூட அது விதிவிலக்கல்ல. இன்றய எழுத்தாளர்களின் நிலை பற்றி திருப்பூர்.கிருஷ்னன் அவர்கள் கார்த்திகை '08 யுகமாயினியில் மிகவும் விசாரப் பட்டு எழுதியிருந்தார்.பொன்னாடைக்குப் பதிலாக ஒரு வேட்டியையாவது போர்த்தக்கூடாதா?உடுத்துக் கொள்ளவாவது பயன்படுமே! என்று கேட்டிருந்தது தான் ஞாபகம் வருகிறது.

படிக்காசுத் தம்பிரான் என்ற புலவரும் அதற்குத் தப்பவில்லை.அந்தக் காலத்தில் புலவர்கள் வள்ளல்களைப் பாடிப் பரிசுப் பொருட்களைப் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். இப் புலவர் சீதக்காதி என்ற வள்ளலை புகழ்ந்து பாடிய பாடல் இது.


"காய்ந்து சிவந்தது சூரியகாந்தி; கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்; தொல் பல நூல்
ஆய்ந்து சிவந்தது பாவண்ணர் நெஞ்சம்; அனு தினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி திருக்கரமே!"

இப் புலவர் வாழ்ந்த காலம் கி.பி.1686-1723 என்று அறியப் படுகிறது.
இப் பாடலைப் பார்க்கும் போது கர்ணன் திரைப் படத்தில் கர்ணனின் ஈகையைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்று உங்களுக்கு ஞாபகம் வரலாம். அது'கொடுத்துச் சிவந்தன கர்ன மாமன்னர் திருக்கரமே'என்று முடியும்.சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய பாடல் அது.

புலவர்கள் தம் வறுமையை வேடிக்கையாகவும், நையாண்டியாகவும், நகைச்சுவையாகவும் கூடப் பாடி இருக்கிறார்கள்.அவர்கள் மிகக் கோபக்காரர்களும் கூட.இரட்டையர்கள் இதில் வெகு சமர்த்தர்.இவர்களில் ஒருவர் குருடர்; மற்றவர் முடவர்; இருவரும் புலவர்கள்.குருடரின் தோளில் முடவர் ஏறிக் கொள்வார்.முடவர் வழிகாட்ட, குருடர் அவ்வழி நடப்பார்.முடவர் காட்டும் வழியோ குருடருக்கு குன்றும், குழியுமாக இருக்கும்.இதனால் சலிப்புற்றுப் பாடிய பாடல் இது.இவர்களில் முதல் பாதியை ஒருவர் பாட, மற்றவர் மறு பாதியை முடிப்பார்.முதல் பாதியைக் குருடர் பாடுகிறார்,

"குன்றுங் குழியும் குறுகி வழி நடந்து
சென்று திரிவதென்றுந் தீராதோ?"

என்று அவர் அடி எடுத்துக் கொடுக்கிறார்.அவர் தோளில் குஷியாகக் குந்தியிருக்கும் முடவர் அதற்கு பதில் கூறுகிறார், இப்படி,

"- ஒன்றுங்
கொடாதானை கோவென்றும் காவென்றுங் கூறின்
இடாதோ நமக்கிவ் விடர்."


இங்கு கோ என்பது பசு; காம தேனு.கா என்பது கற்பக தரு.இரண்டும் வேண்டுவனவற்றை இல்லையெணாது வழங்குவன.( உணவினை வழங்கும் அட்ஷய பாத்திரம் போல :) )

காளமேகம் என்றொருவர் இருக்கிறார். கோபத்திற்கும், நையாண்டிக்கும், புலமைக்கும் மிகப் பேர் போனவர்.இவரும் வறியவர் தான்.


'இம்' என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
'அம்' ந்ன்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? - சும்மா
இருந்தால் இருந்தேன்; எழுந்தேனே ஆயின்
பெரும் காள மேகம் பிள்ளாய்!


என்று தன்னைப் பற்றிப் பாடியவர்.இம் என்பதற்கு முன் 700.800 பாட்டுகளும்,அம் என்று சொல்லிய மட்டில் 1000 பாட்டுகளும் பாடி முடிந்து விடுவேன்.சும்மா இருப்பேன்; எழும்பினேன் என்றால் மழை போல் பாட்டுகள் பொழிவேன். பிள்ளை, நான் கவி காளமேகம் கண்டியளோ என்பது அப்பாட்டின் பொருள். காள மேகம் என்பது மழை பொழியத் தயாராக இருக்கும் மேகம்.

இந்தக் காளமேகத்தார் பெரும் கோபக்காரர்.வறுமையோடும் வாழ்ந்தவர்.சோழ தேசத்துச் சத்திரம் ஒன்றுக்குச் சாப்பிடப் போகிறார்.புலவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் முன் குடும்பி வைத்த பிராமணர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.பரிசாரகர் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்க, பிராமணரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.அவர் குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரது முன்குடுமி சாப்பாட்டுக்குள் விழுந்து விட்டது.அவர் சாப்பிடுவதை நிறுத்தாமலே குடும்பியை எடுத்து உதறினார். அது முன்னால் சாப்பிட்டுக் கொண்டிருந்த காள மேகத்தின் மேல் விழுந்துவிட்டது. வந்ததே கோபம்.கோபத்தோடு பிறந்தது பாடல்,


"சுருக்கவிழ்ந்த முன் குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனை ஒருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்!"

எப்படி இருக்கிறது கோபமும், பாடலும்?

அவரது சாப்பாடு, சுகபோகம் எல்லாம் சத்திரத்தில் தான்.அதிலும் அவருக்கு சாப்பாடு நேரத்திற்கு வந்து விட வேண்டும்.இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் இரவுச் சத்திரத்தில் சாப்பாடு ஆக்க சற்றுத் தாமதமாயிற்று.அது தாமதமானால் என்ன? காள மேகத்திற்குப் பாடல் பொழிய ஆரம்பித்து விட்டது. இப்படி.


"கத்து கடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும் - குத்தி
உலையிலிட ஊருறங்கும்; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்."

:).

எங்கோ போய் விட்டேன்.ஏதோ எழுதப் போய் எதிலேயோ வந்து முடிந்திருக்கிறது இந்தப் பதிவு.இலக்கியத்துக்குள் நடக்கப் புகுந்தால் அது இப்படித்தான்.நம்மை மறந்து தொலைந்து போய் விடலாம்.எம்மை அறியாமல் அது எங்களை எங்கோ கொண்டு சென்று சேர்த்து விடும்.அங்கு மலிந்து கிடக்கும் செல்வங்கள் அப்படி! வளங்கள் அத்தகையன.

விடயத்திற்கு வருவோம்.இரட்டையரும், காளமேகமும் ஓரளவு அடையாளம் காணப் பட்டவர்கள் தான்.தனிப்பட்ட புலவர்களின் வித்துவச்சிறப்பும் சொல்சிலம்பமும் இன்னும் நயக்கத்தக்கன.அது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். இப்போது நீங்கள் போவதற்கு முன் இன்னொரு பாட்டு.

மதுர கவி என்று ஒரு புலவர்.அவர் ஒரு வள்ளலைக் கண்டு பாடிப் பரிசு பெற்று விடை பெற ஆயத்தப்பட்ட போது அவ் வள்ளல்,'ஏன் இப்படிப் பறக்கிறாய்' என்று வினவ, அவர் இப்படிப் பாடுகிறார்.

கொக்குப் பறக்கும்,புறா பறக்கும்,
குருவி பறக்கும், குயில் பறக்கும்,
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்; நானேன்
பறப்பேன்? நராதிபனே!
திக்கு விசயம் செலுத்தியுயர் செங்கோல்
நடாத்தும் அரங்கா! நின்
பக்கமிருக்க, ஒருநாளும் பறவேன்!
பறவேன்! பறவேன்!

என்கிறார். நராதிபன் - நரர்கள் - மனிதர்கள் - நராதிபன் - மனிதர்களுக்குத் தலைவன். என்பது பொருள்.

Monday, March 2, 2009

தலைப்பாகைத் தமிழ்

வழக்கொழிந்த தமிழ் சொற்களுக்காக;


நாட்டு வளம்

ஒன்று:-

சீவக சிந்தாமணியிலே ஏமாங்கதம் என்றொரு நாடு, அது பற்றிய வருணணை இது,

"காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகி னெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடை கீறி பருக்கை போழ்ந்து
தேமங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமங்கதமென்று இசையாற் றிசைபோய துண்டே"

நயம்: தென்னைகள் காய்த்துக் குலுங்குகின்றன.பாரம் தாங்காமல் அவை பழுத்து வீழ்கின்றன.அது வீழ்கின்ற அதிர்ச்சியினாலே, அதற்குக் கீழே நிற்கின்ற கமுகு மரங்களின் இனிய தேனைப் பொதித்து வைத்திருக்கின்ற பாழைகள் கீறுப் பட்டுப்(வெடித்து) பூங் கொத்துகள் தாறு கிழிகின்றன.அவற்றுக்கு அயலிலே இருக்கின்ற மாம்பழங்கள் கொட்டுப் படுகின்றன,வாழைப் பழங்கள் சிந்துப் படுகின்றன, ஏமாங்கதம் என்ற நாட்டிலே!

எவ்வளவு வளம் நிறைந்த நாடு பார்த்தீர்களா? நாட்டிலே மட்டுமா! ஏட்டிலே! பாட்டிலே யுமல்லவா வளம் கொளிக்கின்றது?

வழக் கொழிந்த சொல்;

தொடை- பாளை, போழ்ந்து- வெடித்து.


இரண்டு:-

தமிழ் இலக்கியப் பரப்பில் ஒளவையாருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் நடக்கும் வித்துவச் சண்டை எப்போதும் பிரசித்தம்.இது அதனோடு சேர்ந்த ஒரு பாடல் தான்.சுருக்கம் கருதி அதனைத் தவிர்த்து விட்டு நாட்டு வர்ணணையோடு மட்டும் நிற்கிறேன்.இது ஒட்டக் கூத்தர் பாடிய பாட்டு,

"வெள்ளத் தடங்காச் சினை வாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்து மழை
துளியோடிறங்கும் சோநாடா..."

நயம்: கரை புரண்டு வரும் வெள்ளத்துக்குள் குதித்தோடி வரும் கருக்(சூல்) கொண்ட வாளை மீன் வேலியிலே நிற்கின்ற கமுகு மரத்தின் மீது துள்ளிப் பாய்ந்து,மழை பொழியத் தயாராய் இருக்கின்ற முகிலையும் கிழித்து, மழைத் துளியோடு கீழே இறங்குகின்ற வளத்தினைக் கொண்ட சோழ நாட்டவனே...என்று போகிறது அப்பாடல்.

எவ்வளவு செழிப்பான பூமி பார்த்தீர்களா?

வழக் கொழிந்த சொல்;

சினை கொண்ட - கருவுற்ற, சூல்கொண்ட, கற்பமடைந்த.


மூன்று:-

இது புகழேந்தியாரின் சோழ நாட்டு வர்ணணை.புகழேந்தி ஒளவையாருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் இளையவர்.புகழேந்தி பாடுகிறார் இப்படி,

"பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
தனைக் கொண்டெறியும் தமிழ் நாடா..."

நயம்: சேறு பொருந்திய வயலிலே உழுகின்ற உழவர்களுக்குத் தண்ணீர் விடாய்க்கிறது( தாகமெடுக்கிறது).அதற்கு அவர்கள் ஒரு உபாயம் செய்கிறார்கள்.குரங்குகள் எல்லாம் பலாக்கனிகளைப் பாழ் படுத்துகின்றன என்று பாவனை செய்து கொண்டு குரங்குகளுக்கு நிலத்தில் கிடக்கும் சங்குகளைப் பொறுக்கி எறிகிறார்களாம். உடனே குரங்குகள் கோபம் கொண்டு செவ்விளநீர்களைப் பறித்து உழவர்களின் மேல் விட்டெறிகின்றனவாம். அதன் மூலமாக உழவர்கள் தாக சாந்தி செய்துகொள்ளும் மக்களைக் கொண்ட தமிழ் நாட்டவனே என்று தொடர்கிறது அப் பாடல்.(கவிஞர் சொல்ல வருகின்ற கருத்து இதன் பின்னர் தான் வரும்,சுருக்கம் கருதி அவை இடம் பெறவில்லை.)

வழக்கொழிந்த சொல்;

பங்கம் - சேறு.


நான்கு:-

சரி ஈழ நாட்டு வளத்தையும் சற்றுப் பார்ப்போமே!பறாளை விநாயகர் பள்ளில் எங்கள் சின்னத் தம்பிப் புலவர் இப்படிப் பாடுகிறார்.

"மஞ்சளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள்போல் மடவார்கணஞ் சூழும்
அஞ்ச ரோருரக பள்ளியின் மீமிசை
அன்ன வன்னக் குழாம் விளையாடும்
துஞ்சு மேதி சுறாக்களை சீறச்
சுறாக்களோடிப் பலாக்கனி கீறி
இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே"

நயம்; முகில்களை எட்டுகின்ற மாடங்கள் தோறும் மயில்களைப் போன்ற இளம் பெண்கள் சூழ்ந்திருக்கிறார்கள்.தாமரைக் குளத்தில் அழகான தாமரைப் படுக்கையின் மீது அன்னக் கூட்டங்கள் விளையாடுகின்றன.அதற்குள் (குளத்துக்குள்)உறங்கிக் கொண்டிருக்கும் எருமை மாடுகள் சுறாக்களுக்கு இடஞ்சலாக இருப்பதால் அவைகள்(சுறாக்கள்)(இடமில்லமையால் மேலே துள்ளி)ஓடிப் பலாக் கனிகளைக் கீறி இஞ்சி வேலியின் அருகிலிருக்கும் மஞ்சள் செடியின் மேல் விழும் நாடு எங்கள் ஈழ நாடு என்கிறார் சின்னத் தம்பிப் புலவர்.

வழக்கொழிந்த சொல்:

மஞ்சு- முகில்,பள்ளி - படுக்கை(பள்ளியறை-படுக்கையறை), மேதி - எருமை.


ஐந்து:-

கம்பன் காட்டிய ஈழ வளத்தைப் பார்க்காமல் போக முடியுமா என்ன? அவர் பாடுகிறார் இப்படி,

"மாகாரின் மின் கொடி மடக்கின ரடக்கி
மீகார மெங்கனு நறுந்துகள் விளக்கி
ஆகாய சங்கையினை யங்கையினி னள்ளிப்
பாகாய செஞ்சலவர் வீசு படு காரம்"

நயம்; கார் மேகங்களுக்கிடையே மின்னுகின்ற மின் கொடிகளாகிய மின்னல்களை வலிந்து மடக்கி அடக்கிப் பிடித்து விளக்குமாறு (துடைப்பம்)போல் செய்து மீகாரமாகிய மேல் வீடுகள் (மாடி வீடுகள்,மேல் மாடம்)தோறும்(உட் பரிகைகளில்) வீழ்ந்து கிடக்கின்ற நறுந் துகள் - பூக்களில் இருந்து கொட்டுப் பட்டுக் கிடக்கின்ற மகரந்தத் துகள்களை நீங்குமாறு நன்கு விளக்கி(பெருக்கி,இல்லாது செய்து) பக்கத்திலே ஓடுகின்ற அருவியிலே ஓடுகின்ற தண்ணிரை உள்ளங் கைகளிலே மொண்டு( முகர்ந்து) கொண்டு வந்து தெளிக்கின்ற மாளிகைகள் நிறைந்த நாடு என்கிறார் கம்பர்.எத்தனை அழகான கண்ணுகர் கனி இது!!

வழக்கொழிந்த சொல்;

மாகார்-கார் மேகம், காரம்-வீடு, மீகாரம்-மேல்வீடு, மின் கொடி-மின்னல், அங்கை -அகங்கை,உள்ளங்கை.


ஐந்து பாடல்கள்; பத்துச் சொற்கள்.பத்து வந்து விட்டது தானே?


இன்னும் ஒரு சொல் இருக்கிறது. அதனை விட்டு விட்டுப் போக மனம் வரவில்லை.அந்தச் சொல்,

கார்த்திகைப் பூ - செங்காந்தள் மலர்.


(கார்த்திகை மாதங்களில் வரண்ட பிரதேசங்களில் பூப்பது. சிவப்பும் மஞ்சளும் அதனுடய நிறம். 6 மெல்லிய நீளமான ஓரங்கள் சுருள் சுருளாக அமைந்த அடியில் அகன்று முன் புறம் உள் நோக்கிக் குவிந்த இதழ்களைக் கொண்ட அழகிய பூ.கொடி வகையைச் சார்ந்தது. ஈழத்தில் வேலி ஓரங்களில் கார்த்திகை மாதங்களில் பூத்திருக்கும்.

ஈழ விடுதலைப் போரில் முதல் போராளி இறந்தது ஒரு கார்த்திகை மாதம்.அதனால் இது ஈழத் தமிழர்களின் தேசியப் பூ. மஞ்சளும் சிவப்பும் எங்கள் தேசிய நிறம்.)


விடுதலை வேள்வியில் ஆகுதி ஆகிய அனைத்து போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் "தலைப்பாகைத் தமிழின்" மண்டியிட்ட வணக்கங்கள்.

ஓம் சாந்தி.



நான் தெரிவு செய்திருக்கும் மூன்று பேர்;

1) ஜெயன் மகாதேவன் - சீரிய சிந்தனைகளின் சொந்தக் காரன்.
http://jeyan15.blogspot.com

2) உமா பார்வதி -அன்பாலும் ஜீவகாருண்யத்தாலும் என்னை ஆகர்ஷித்தவர்.
http://umashakthy.blogspot.com

3) கானா பிரபா - பண்பான மனிதர்.
http://kanapraba.blogspot.com

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் பற்றி (குறைந்த பட்சம் 10) நீங்கள் ஒரு பதிவு போடுவதோடு மேலும் 3 பதிவர்களை நீங்கள் தெரிவு செய்யவும் வேண்டும்.

ரசிகாவுக்கு நன்றி.
http://rasigarasigan.blogspot.com

Sunday, March 1, 2009

அழைப்பிதழ்

ஆழமும் அமைதியும் அடக்கமும் கொண்ட சின்னப் பெண் ரசிகா "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" என்று என் வீட்டிலும் விருந்து போடச் சொல்லி விட்டார்.அதனால் இவ் வாரம் புதிதாகப் பல விருந்தாளிகள் வீட்டுக்கு வரப் போகிறார்கள்.மகிழ்ச்சியாக இருக்கிறது.

விருந்துண்ட வீடுகளை ஒரு தரம் நினைத்துப் பார்த்தேன்.
வித்தியாசமாக நான் விருந்து படைக்க வேண்டாமா என்ன? ஹேமா( வானம் வெளித்த பின்னும்) கவிதையாலே ஒரு சிறப்பைச் சேர்த்து ஈழத்தின் வழக்கொழிந்த சொற்களை கூட்டஞ்சோறு என்ற தலைப்பின் கீழ் செட்டாகத் தந்திருக்கிறார்.ஊரில் பாவிக்கும் சொற்களைக் கொண்டே கமலும் ஒரு பதிவு போடப் போகிறாராம்.நைஜீரியா ராகவன் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து ஜம்மென்று அம்மி குழவி வரை வந்து விட்டார்.

என் பக்கத்து வீட்டுக் காரர் ரசிகா அருகி இல்லாது போய் விட்ட சில விடயங்களை விடாமுயற்சியோடு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.நெருங்கிய உறவுக்காரர் பூபதி திரைப் படப் பாடல்களூடாகச் சிறப்பாக மலர்ந்திருக்கிறார்.

இனி நான் என்ன செய்யட்டும்? ஒரே மலைப்பாக இருக்கிறது.


யாழ்ப்பாணத்துக் காலை நேரம்:-

இருக்க, நிக்க இப்ப எனக்கு நேரமில்லை.நாற்சார வீடெண்டா சும்மாவே! முதுகொடிஞ்ச வேலை.வீடு தூசு தட்டி,கூட்டி, சீமேந்துத் தரை கழுவி,சாம்பிராணிப் புகை போட்டு,சாமிக்கும் பூவும் விளக்கும் வைத்து,வெளி முற்றமும் கூட்டிப் பெருக்கி, புழுதி கிளம்பாமல் தண்ணி தெளித்து,தலை வாசலில் மாவிலைத் தோறணமும் கட்டியாச்சு.முற்றத்தில மல்லிகைப் பூக்கள் பந்தலுக்குக் கீழ கொட்டுண்டு கிடக்குது தான். பொறுக்கி எடுக்க இப்ப நேரமில்லை.அதப் பிறகு பாப்பம்.

பால் வாங்க வாற அம்மானின்ர சின்னப் பொடியன் இன்னும் வரக் காணன். வந்தால் மதிலில ஏத்தி உயரத்தில இருக்கிற செவ்வரத்தம் பூக்களை ஆய்ந்து தரச் சொல்லலாம். அவன் அந்தக் காலமையிலையும் பூவரசமிலையில பீப்பீ ஊதிக் கொண்டுதான் வருவான்.சொல்வழி கேளான்.

தூரத்தே கோயில் மணி கேக்குது.யாரோ ஒரு கறுப்புத் தாத்தா வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நெற்றி, கைகள், மார்பில எல்லாம் வீபூதி பூசிக் கொண்டு உரத்த குரலில தேவாரம் பாடிக் கொண்டு றோட்டால போகிறார்.மதிலைத் தாண்டி வீதி ஓரம் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் நித்திய கல்யாணிச் செடிகள் பூத்திருப்பதெல்லாம் இந்தத் தாத்தாவுக்காகத் தான்.தன்னுடய பைக்குள் அவற்றைப் போட்ட படியே அவர் நடந்து போறார்.

பள்ளிப் பிள்ளைகளும் பாட சாலைக்குப் போகத் தொடங்கி விட்டார்கள்.நேரம் இப்ப 8 மணி சொச்சமாக இருக்க வேணும்.சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னலிட்டு திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாகப் போவது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்.

எங்கட தாத்தாவும் விடிய வெள்ளன புலவுக்குப் போட்டார்.அது அவற்ற முதுசக் காணி.சங்கதி என்னண்டா அவர் காம்புக் சத்தகத்தையும், உழவாரத்தையும்,அலுவாங்கையும் கொண்டு போனாரோ தெரியேல்லை.அசண்டையீனமா விட்டிட்டுப் போட்டார் போல கிடக்கு. கதியால் போட என்ன செய்யப் போறாரோ தெரியாது.அவருக்கும் இப்ப மறதி கூடிப் போச்சு.இப்ப காதும் சரியாக் கேக்கிறயில்ல.ஆனா பாவம், செரியான பிரயாசை.

வெய்யில் ஏறிவிட்டுது இன்னும் பினைஞ்ச பினாட்டையும் புளியையும் நடு முத்தத்தில வைக்கேல்லை எண்டு பாட்டி வேற அங்க பிலாக்கணம் பாடத் தொடங்கீயிட்டா.அவவின்ர பூராடம் கேக்கிறதெண்டா அவவின்ர சிநேகிதி பொன்னம்மாக்கா,பொட்டுக்கால வந்து தலைவாசல்ல நிண்டு ஒரு குரல் குடுக்க வேணும்.அப்ப பாக்க வேணும் நீங்கள் அவவ.

இண்டைக்கு நல்லா வெய்யில் எறிக்கும் போல தான் கிடக்கு.புளுக்கொடியலையும் காய விட்டா நல்லது தான்.அதுக்கு முதல் வெத்திலத் தட்டத்தையும்,பாக்குவெட்டியையும்,பாக்குரலையும் சாவியையும் கொண்டு போய் அவவின்ர கையில் குடுத்துப் போட வேணும்.இல்லாட்டிக்கு அவவிட்ட வாய் குடுத்துத் தப்பேலாது.

தாத்தாவுக்கு அடுப்பில குரக்கன் புட்டு அவியுது.அவருக்குச் சலரோகம் கன காலமா இருக்குது.இவ்வளவு காலமும் சாப்பாட்டால தானே கட்டுப் படுத்திக் கொண்டு வாறார்.குரக்கன் புட்டும் எப்பன் பழஞ் சோறும் பழங்கறியளும் கொஞ்சம் சம்பலும் சட்டிக்கை போட்டுக் குழைச்சுப்போட்டு 2 மிளகாய்ப்பொரியலையும் தட்டில வச்சு மூடிவிட்டா மனுசன் வந்து சாப்பிடும்.பாவம் களைச்சுப் போய் வாற மனுசன்.

இனி நானும் நிண்டு மினைக்கிட ஏலாது. மூண்டாவது வழவுக்கை போய் நல்ல தண்ணி அள்ளிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு,மத்தியானப் பாட்டத் தொடங்க வேணும்.வறண்ட பூமி தானே பாருங்கோ,நிலம் எல்லாம் சுண்ணாம்புக் கல்லு.அதால சவர் தண்ணி.எண்டாலும் சனம் நல்லாப் பாடுபடுங்கள்.

அடுத்த வீட்டு பொன்னம்மாக்கன்ர மே(மோ)ள் பாவாடை ஒண்டு தச்சுத் தாங்கோ எண்டு முந்த நாள் துணியை தந்திட்டுப் போனவள்.குடைவெட்டுப் பாவாடையோ சுருக்குப் பாவாடையோ எண்டு கேக்க மறந்து போனன்.இனி,எக்கணம் வந்து துள்ளப் போறாள்(குதிக்கப் போறாள்)இன்னும் தைக்கேல்லை எண்டு.தண்ணி அள்ளப் போகேக்கை ஒருக்கா கண்டு கேக்க வேணும்.

அது சரி,நீங்கள் எல்லாம் வருவீங்கள் எல்லே? அதால முதலே வேல எல்லாத்தையும் முடிச்சுப் போட்டன் எண்டா நல்லது.பிறகு இடயில ஒருக்கா போய் செல்விக்கு கழுநீர் தண்ணி வைக்கிறது மட்டும் தான்.மாத்தியானம் ஒருக்கா மாத்தியும் கட்ட வேணும்.சில வேளை நீங்கள் இருக்கிறீங்கள் எண்டுட்டு பாட்டி அதச் செய்தாலும் செய்வா.

இஞ்ச பாருங்கோவன்,கோடியில செல்விப் பசு குரல் குடுக்குது.இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப் போட்டுது.பாவம் அவளும் இளங் கன்றுக்காறி.உண்ணாணை அது ஒரு லட்சுமி தான்.சொம்பு நிறைய அது தாற பாலக் கறந்து, சாம்பலும் தென்னந்தும்பும் கொண்டு விளக்கின சருவத்தில,அல்லது மண்சட்டியில, சாணத்தால மெழுகின விறகடுப்பில வச்சுக் காச்சினா வாற வாசம் இருக்கே அதுக்கு ஈடு இணை இல்லை.

நீங்கள் எல்லாரும் வாருங்கோ! உங்களுக்கு கொஞ்சம் கற்கண்டு போட்டுக் காச்சி, ஆத்தி அளவான சூட்டோட மூக்குப் பேணியில பக்குவமா ஊத்தித் தாறன்.அதை ஒருக்கா அன்னாந்து குடிச்சுப் பாருங்கோ. பிறகு நீங்களே சொல்லுவியள் நல்லா இருக்கெண்டு.

நீங்கள் கட்டாயம் எல்லாரும் வருவீங்கள் தானே? வாற புதன் கிழமை நீங்கள் வருவீங்கள் எண்டுதான் இவ்வளவு ஆரவாரம்.மறக்கக் கூடாது.வந்திட வேணும்.


குறிப்புகள்:


செட்டாக - நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி - அகில்

பொறுக்கி - ஒன்றொன்றாக

அம்மான் - மாமா

பொடியன் - பையன், அதன் பெண்பால் பொடிச்சி

சொல் வழி - புத்திமதி

கேளான் - கேட்க மாட்டான்

சொச்சமாக - கிட்டத்தட்ட

கொட்டுண்டு - சிந்துப் பட்டு

ஆய்ந்து - பிடுங்கி

காணன் - காணவில்லை

வீபூதி - திருநீறு

பள்ளி - பாட சாலை

சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்

குருத்துகள் - இளம் பிள்ளைகள்

புலவு - தோட்டம்

முதுசம் - பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி - புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் - கவலையீனம்

கதியால் - வேலி

காம்புக் சத்தகம் - ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் - குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு - ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை - முயற்சி

புளுக்கொடியல் - பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி - பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் - வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி - பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் - புறுபுறுத்தல்

பூராடம் - விடுப்பு,விண்ணாணம்

கோடி - கொல்லைப் புறம்

பொட்டு - வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை - உன் மீது ஆணையாக

எப்பன் - கொஞ்சம்

வழவு - காணி

சவர் - உப்பு

எல்லே - அல்லவா

ஏலாது - முடியாது

மே(மோ)ள் - மகள்

பாவாடை - முழங்கள் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் - இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் - கோவிக்கப் போகிறாள்

போகேக்க - போகும் போது

களு நீர் - சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் - வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி - பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அன்னாந்து - மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் - ஆர்ப்பரிப்பு

( இவை ஈழத்துப் பேச்சு வழக்கும், பழக்க வழக்கங்களும்,வாழ்க்கை முறையும், நாம் நாளாந்தம் பாவிக்கும் சொற்களும் ஆகும்.)