Sunday, March 1, 2009

அழைப்பிதழ்

ஆழமும் அமைதியும் அடக்கமும் கொண்ட சின்னப் பெண் ரசிகா "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" என்று என் வீட்டிலும் விருந்து போடச் சொல்லி விட்டார்.அதனால் இவ் வாரம் புதிதாகப் பல விருந்தாளிகள் வீட்டுக்கு வரப் போகிறார்கள்.மகிழ்ச்சியாக இருக்கிறது.

விருந்துண்ட வீடுகளை ஒரு தரம் நினைத்துப் பார்த்தேன்.
வித்தியாசமாக நான் விருந்து படைக்க வேண்டாமா என்ன? ஹேமா( வானம் வெளித்த பின்னும்) கவிதையாலே ஒரு சிறப்பைச் சேர்த்து ஈழத்தின் வழக்கொழிந்த சொற்களை கூட்டஞ்சோறு என்ற தலைப்பின் கீழ் செட்டாகத் தந்திருக்கிறார்.ஊரில் பாவிக்கும் சொற்களைக் கொண்டே கமலும் ஒரு பதிவு போடப் போகிறாராம்.நைஜீரியா ராகவன் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து ஜம்மென்று அம்மி குழவி வரை வந்து விட்டார்.

என் பக்கத்து வீட்டுக் காரர் ரசிகா அருகி இல்லாது போய் விட்ட சில விடயங்களை விடாமுயற்சியோடு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.நெருங்கிய உறவுக்காரர் பூபதி திரைப் படப் பாடல்களூடாகச் சிறப்பாக மலர்ந்திருக்கிறார்.

இனி நான் என்ன செய்யட்டும்? ஒரே மலைப்பாக இருக்கிறது.


யாழ்ப்பாணத்துக் காலை நேரம்:-

இருக்க, நிக்க இப்ப எனக்கு நேரமில்லை.நாற்சார வீடெண்டா சும்மாவே! முதுகொடிஞ்ச வேலை.வீடு தூசு தட்டி,கூட்டி, சீமேந்துத் தரை கழுவி,சாம்பிராணிப் புகை போட்டு,சாமிக்கும் பூவும் விளக்கும் வைத்து,வெளி முற்றமும் கூட்டிப் பெருக்கி, புழுதி கிளம்பாமல் தண்ணி தெளித்து,தலை வாசலில் மாவிலைத் தோறணமும் கட்டியாச்சு.முற்றத்தில மல்லிகைப் பூக்கள் பந்தலுக்குக் கீழ கொட்டுண்டு கிடக்குது தான். பொறுக்கி எடுக்க இப்ப நேரமில்லை.அதப் பிறகு பாப்பம்.

பால் வாங்க வாற அம்மானின்ர சின்னப் பொடியன் இன்னும் வரக் காணன். வந்தால் மதிலில ஏத்தி உயரத்தில இருக்கிற செவ்வரத்தம் பூக்களை ஆய்ந்து தரச் சொல்லலாம். அவன் அந்தக் காலமையிலையும் பூவரசமிலையில பீப்பீ ஊதிக் கொண்டுதான் வருவான்.சொல்வழி கேளான்.

தூரத்தே கோயில் மணி கேக்குது.யாரோ ஒரு கறுப்புத் தாத்தா வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நெற்றி, கைகள், மார்பில எல்லாம் வீபூதி பூசிக் கொண்டு உரத்த குரலில தேவாரம் பாடிக் கொண்டு றோட்டால போகிறார்.மதிலைத் தாண்டி வீதி ஓரம் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் நித்திய கல்யாணிச் செடிகள் பூத்திருப்பதெல்லாம் இந்தத் தாத்தாவுக்காகத் தான்.தன்னுடய பைக்குள் அவற்றைப் போட்ட படியே அவர் நடந்து போறார்.

பள்ளிப் பிள்ளைகளும் பாட சாலைக்குப் போகத் தொடங்கி விட்டார்கள்.நேரம் இப்ப 8 மணி சொச்சமாக இருக்க வேணும்.சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னலிட்டு திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாகப் போவது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்.

எங்கட தாத்தாவும் விடிய வெள்ளன புலவுக்குப் போட்டார்.அது அவற்ற முதுசக் காணி.சங்கதி என்னண்டா அவர் காம்புக் சத்தகத்தையும், உழவாரத்தையும்,அலுவாங்கையும் கொண்டு போனாரோ தெரியேல்லை.அசண்டையீனமா விட்டிட்டுப் போட்டார் போல கிடக்கு. கதியால் போட என்ன செய்யப் போறாரோ தெரியாது.அவருக்கும் இப்ப மறதி கூடிப் போச்சு.இப்ப காதும் சரியாக் கேக்கிறயில்ல.ஆனா பாவம், செரியான பிரயாசை.

வெய்யில் ஏறிவிட்டுது இன்னும் பினைஞ்ச பினாட்டையும் புளியையும் நடு முத்தத்தில வைக்கேல்லை எண்டு பாட்டி வேற அங்க பிலாக்கணம் பாடத் தொடங்கீயிட்டா.அவவின்ர பூராடம் கேக்கிறதெண்டா அவவின்ர சிநேகிதி பொன்னம்மாக்கா,பொட்டுக்கால வந்து தலைவாசல்ல நிண்டு ஒரு குரல் குடுக்க வேணும்.அப்ப பாக்க வேணும் நீங்கள் அவவ.

இண்டைக்கு நல்லா வெய்யில் எறிக்கும் போல தான் கிடக்கு.புளுக்கொடியலையும் காய விட்டா நல்லது தான்.அதுக்கு முதல் வெத்திலத் தட்டத்தையும்,பாக்குவெட்டியையும்,பாக்குரலையும் சாவியையும் கொண்டு போய் அவவின்ர கையில் குடுத்துப் போட வேணும்.இல்லாட்டிக்கு அவவிட்ட வாய் குடுத்துத் தப்பேலாது.

தாத்தாவுக்கு அடுப்பில குரக்கன் புட்டு அவியுது.அவருக்குச் சலரோகம் கன காலமா இருக்குது.இவ்வளவு காலமும் சாப்பாட்டால தானே கட்டுப் படுத்திக் கொண்டு வாறார்.குரக்கன் புட்டும் எப்பன் பழஞ் சோறும் பழங்கறியளும் கொஞ்சம் சம்பலும் சட்டிக்கை போட்டுக் குழைச்சுப்போட்டு 2 மிளகாய்ப்பொரியலையும் தட்டில வச்சு மூடிவிட்டா மனுசன் வந்து சாப்பிடும்.பாவம் களைச்சுப் போய் வாற மனுசன்.

இனி நானும் நிண்டு மினைக்கிட ஏலாது. மூண்டாவது வழவுக்கை போய் நல்ல தண்ணி அள்ளிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு,மத்தியானப் பாட்டத் தொடங்க வேணும்.வறண்ட பூமி தானே பாருங்கோ,நிலம் எல்லாம் சுண்ணாம்புக் கல்லு.அதால சவர் தண்ணி.எண்டாலும் சனம் நல்லாப் பாடுபடுங்கள்.

அடுத்த வீட்டு பொன்னம்மாக்கன்ர மே(மோ)ள் பாவாடை ஒண்டு தச்சுத் தாங்கோ எண்டு முந்த நாள் துணியை தந்திட்டுப் போனவள்.குடைவெட்டுப் பாவாடையோ சுருக்குப் பாவாடையோ எண்டு கேக்க மறந்து போனன்.இனி,எக்கணம் வந்து துள்ளப் போறாள்(குதிக்கப் போறாள்)இன்னும் தைக்கேல்லை எண்டு.தண்ணி அள்ளப் போகேக்கை ஒருக்கா கண்டு கேக்க வேணும்.

அது சரி,நீங்கள் எல்லாம் வருவீங்கள் எல்லே? அதால முதலே வேல எல்லாத்தையும் முடிச்சுப் போட்டன் எண்டா நல்லது.பிறகு இடயில ஒருக்கா போய் செல்விக்கு கழுநீர் தண்ணி வைக்கிறது மட்டும் தான்.மாத்தியானம் ஒருக்கா மாத்தியும் கட்ட வேணும்.சில வேளை நீங்கள் இருக்கிறீங்கள் எண்டுட்டு பாட்டி அதச் செய்தாலும் செய்வா.

இஞ்ச பாருங்கோவன்,கோடியில செல்விப் பசு குரல் குடுக்குது.இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப் போட்டுது.பாவம் அவளும் இளங் கன்றுக்காறி.உண்ணாணை அது ஒரு லட்சுமி தான்.சொம்பு நிறைய அது தாற பாலக் கறந்து, சாம்பலும் தென்னந்தும்பும் கொண்டு விளக்கின சருவத்தில,அல்லது மண்சட்டியில, சாணத்தால மெழுகின விறகடுப்பில வச்சுக் காச்சினா வாற வாசம் இருக்கே அதுக்கு ஈடு இணை இல்லை.

நீங்கள் எல்லாரும் வாருங்கோ! உங்களுக்கு கொஞ்சம் கற்கண்டு போட்டுக் காச்சி, ஆத்தி அளவான சூட்டோட மூக்குப் பேணியில பக்குவமா ஊத்தித் தாறன்.அதை ஒருக்கா அன்னாந்து குடிச்சுப் பாருங்கோ. பிறகு நீங்களே சொல்லுவியள் நல்லா இருக்கெண்டு.

நீங்கள் கட்டாயம் எல்லாரும் வருவீங்கள் தானே? வாற புதன் கிழமை நீங்கள் வருவீங்கள் எண்டுதான் இவ்வளவு ஆரவாரம்.மறக்கக் கூடாது.வந்திட வேணும்.


குறிப்புகள்:


செட்டாக - நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி - அகில்

பொறுக்கி - ஒன்றொன்றாக

அம்மான் - மாமா

பொடியன் - பையன், அதன் பெண்பால் பொடிச்சி

சொல் வழி - புத்திமதி

கேளான் - கேட்க மாட்டான்

சொச்சமாக - கிட்டத்தட்ட

கொட்டுண்டு - சிந்துப் பட்டு

ஆய்ந்து - பிடுங்கி

காணன் - காணவில்லை

வீபூதி - திருநீறு

பள்ளி - பாட சாலை

சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்

குருத்துகள் - இளம் பிள்ளைகள்

புலவு - தோட்டம்

முதுசம் - பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி - புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் - கவலையீனம்

கதியால் - வேலி

காம்புக் சத்தகம் - ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் - குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு - ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை - முயற்சி

புளுக்கொடியல் - பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி - பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் - வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி - பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் - புறுபுறுத்தல்

பூராடம் - விடுப்பு,விண்ணாணம்

கோடி - கொல்லைப் புறம்

பொட்டு - வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை - உன் மீது ஆணையாக

எப்பன் - கொஞ்சம்

வழவு - காணி

சவர் - உப்பு

எல்லே - அல்லவா

ஏலாது - முடியாது

மே(மோ)ள் - மகள்

பாவாடை - முழங்கள் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் - இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் - கோவிக்கப் போகிறாள்

போகேக்க - போகும் போது

களு நீர் - சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் - வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி - பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அன்னாந்து - மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் - ஆர்ப்பரிப்பு

( இவை ஈழத்துப் பேச்சு வழக்கும், பழக்க வழக்கங்களும்,வாழ்க்கை முறையும், நாம் நாளாந்தம் பாவிக்கும் சொற்களும் ஆகும்.)

5 comments:

 1. wow! உன்னாணை சொல்லுறன் அசத்தியிட்டீர் பிள்ளை. விபூதிப் பூச்சும் செவ்வரத்தம் பூவும் உழவாரமும் இப்பிடி ஒண்டொண்டாப் பொறுக்கி செட்டாக கோத்து மாலையாக போட்டிருக்கின்றீர். சர்வகலாசாலையிலை படிச்சால் போதுமே? படிச்சதை பாவிக்கவும் எல்லே தெரியவேணும்.

  நன்றாக இருந்தது மனிமேகலா உங்கள் பதிவு.

  ReplyDelete
 2. ஓமணை! ஓமணை!! புதன் கிழமை வருவியளோ? உங்கட சினேகிதப் பிள்ளையளயும் கூட்டிக் கொண்டு வாங்கோ!பாத்துக் கொண்டு இருப்பன்.

  ReplyDelete
 3. பதிவைப் படிச்சன். உண்மையிலையே நல்லா இருக்கு. மறந்துபோன கன விசயங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறீங்கள். அப்படியே அச்சொட்டா யாழ்ப்பாணத்துக் கதை. எனக்கு சாதாரணமா யாராவது ஈழத்தமிழ் கதைச்சாலே சந்தோசம் பிய்ச்சுக்கொண்டு வந்திடும். இங்கை சென்னையிலை வேற மாதிரித் தமிழ்தானே... ஊருக்குப் போனால் ஏதோ கேட்காததைக் கேட்டது மாதிரி காதைத் திறந்துகொண்டு இருப்பன். ஊரும் போச்சு. பேச்சும் போச்சு.:(

  ReplyDelete
 4. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி தோழி.தொடர்ந்து என் குறைகளையும் எனக்குச் சுட்டிக் காட்டுங்கள்.பல கால அனுபவமும் திறமையும் கொண்டவர் நீங்கள்.நீங்கள் இங்கு வந்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

  ReplyDelete
 5. யாழ்ப்பாணம்... யாழ்ப்பாணம்...யாழ்ப்பாணம்
  ok ok...

  மனே! ஓங்கெட எழுத்தி நல்லா தான் இரிக்கி. .

  ReplyDelete