ஒரு நாள் குருவானவரிடம் ஒருவர் வந்தார்.சுவாமி! இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று வினவினார்.அதற்குக் குரு உணவுண்டேன்; பின்பு நன்றாகத் தூங்கினேன் என்றார்.இதில் என்ன பெரிய விடயம் இருக்கிறது என்று வந்தவர் நினைத்தார்.அதனைக் கேட்டும் விட்டார். அதற்கு சுவாமி சொன்னார்; நான் உணவுண்ணும் போது உணவுண்ணும் தொழிலை மட்டுமே செய்தேன்.வேறெதனையும் எண்ணவில்லை. உறங்கும் போது உறங்குதலாகிய செயலில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்றார்.
இதனை வாசித்தபோது ஒரு நேரத்தில் நாம் எத்தனை விடயங்களில் கவனம் செலுத்துகிறோம் என்றும்;அதனால் ஒன்றையும் முழுமையாக உள்வாங்கவோ அனுபவிக்கவோ முடியாது போய்விடுகிறது என்றும் தோன்றியது.அது போலவே சொற்களை நாம் பாவிக்கின்ற போதும் அதன் அர்த்தங்களையும் முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்துகிறோமா என்பது பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டியதாயிருந்தது.அதனால் எப்போதோ அறிந்து வைத்திருந்த இரண்டு சொற்களுக்கான விளக்கப் பதிவாக இப்பதிவு அமைந்திருக்கிறது.
வாஞ்சை:-
பாசத்தில் தோய்ந்த சொல் இது.
பொதுவாக வாஞ்சை என்ற சொல் அன்பினக் குறிக்கும்.இச் சொல் குறிக்கும் அன்பு என்பது அன்பின் வகைகளில் சற்று விசேடமானது.பிள்ளை தந்தை/தாய் மீது கொள்ளும் அன்பினை வாத்சல்யம் என்று சொல்வதைப் போல; காதலர் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் அன்பைக் காதல் என்று சொல்வதைப் போல; நண்பர்கள் தமக்கிடையே உள்ள அன்பை நட்பு என்று சொல்லிக் கொள்வதைப் போல; வாஞ்சை என்ற சொல்லும் ஒரு விசேட அன்பைக் குறித்து நிற்கிறது.
ஒரு தாய்ப்பசு கன்று ஈனும்போதும் பின்னர் தன் பிள்ளைக்குப் பாலூட்டும் போதும் அதன் அழுக்குகளையும் சிறுநீரையும் நாவினால் நக்கிச் சுத்தப் படுத்தும்.அதனையிட்டு அது ஒரு போதும் அசூசை கொள்வதில்லை.மேலும் அது பாலூட்டும் போது கன்றின் உடல் பாகங்களையும் நாவினால் சீர்படுத்தும்.அன்பின் நிமித்தம் பால் பெருக்கெடுத்து ஓடும்.அதனுடய அன்பின் முன்னால் கன்றினுடய குறைகளோ அழுக்குகளோ அதன் கண்களுக்குத் தெரிவதில்லை.மேலும் அதனுடய செயற்பாட்டின் மூலம் கன்றின் மீதான அதன் அன்பு பெருக்கெடுத்து ஓடுவதையே நாம் காண்கிறோம்.அத்தகைய அன்பினையே வாஞ்சை என்ற சொல் குறிக்கிறது.
அதாவது,எந்த ஒரு அன்பு குறைகளையும் நிறைகளாகக் காண்கிறதோ அல்லது எங்கு குறைகள் எதுவும் குறைகளாகக் கண்ணுக்குத் தெரியாமல் அன்பு ஒன்றே விகாசித்து பொலிந்திருக்கிறதோ அங்கு வாஞ்சை நிறைந்த அன்பு நிலவுகிறது என்று அர்த்தமாகும்.(எப்போதோ யுகமாயினியில்(?) வாசித்தது)
ஊழியம்:-
வலி சுமந்த சொல் இது.
2009 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிட்னியில் நடந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையில் இருந்து மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் இந்தச் சொல்லுக்குச் சிறப்பான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார்கள். அதனை இங்கு தருகிறேன்.
ஊழியம் என்பதற்கான ஆங்கில மொழியாக்கம் labour என்பதாகும்.தாய்மைப் பேறடைந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் செல்லும் அறையை labour room என்கிறோம்.ஏனெனில் வலியோடு கூடிய குழந்தை பெறுதலாகிய வேலையை அவள் அங்கு செய்கிறாள்.அதனால் ஊழியம் என்பது உடலை வருத்தி வலியினை உணர்ந்து பெறப்படும் பயன்பாடு ஆகும்.அதனால் labourer என்பது ஊழியர் அதாவது உடலினை வருத்தி வேலை செய்து பயனைப் பெறுபவர்களைக் குறிக்கிறது.
அதாவது உடல் உழைப்பினால் செய்யப் படுவது ஊழியம். அதனால் உடலினை வருத்தி வேலைசெய்து வருமானம் பெறுபவர்கள் ஊழியர் என்ற சொல்லால் அழைக்கப் படுகிறார்கள்.
அதனால் இலிகிதர் போன்ற தொழிலில் உள்ளவர்களை அரச ஊழியர் என்று சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை.
மொழி விற்பன்னர்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.
பட உதவி;நன்றி,இணையம்
(பதிவு மறு பிரசுரம்.ஈழத்து முற்றத்திலும் இது பதிவாகியுள்ளது)