Sunday, July 19, 2009

சோகம்



இரத்தத்தின் அறிகுறி ஏதுமில்லை,எங்குமே இல்லை
எல்லா இடங்களிலும் நான் தேடிப் பார்த்து விட்டேன்.
கொலையாளியின் கைகள் சுத்தமாக இருக்கின்றன.
விரல் நகங்களோ பளீச்சென்று இருக்கின்றன.
கொலைக்காரன் ஒவ்வொருவனுடய சட்டைக் கைகளிலும்
எந்தக் கறையும் இல்லை.
இரத்தத்தின் அறிகுறி இல்லை;சிவப்பின் சுவடு இல்லை,
கத்தி ஓரத்தில் இல்லை,வாள் முனையிலும் இல்லை.
தரையில் கறைகள் இல்லை,கூரையும் வெள்ளை நிறம்.

சுவடேதுமில்லாமல் மறந்து போன இந்த இரத்தம்
ஏடேறிய வரலாற்றின் ஒரு பகுதியல்ல;
அதனிடம் சென்றடைய
எனக்கு வழி காட்டுபவர் யார்?
பேரரசர்களுக்கான சேவையின் போது
சிந்தப்பட்ட இரத்தமல்ல-
அது பட்டம் பெருமை பெற்றதுமல்ல,
அதன் எந்த ஒரு ஆசையும் பூர்த்திசெய்யப்படவில்லை.
பலிச் சடங்குகளுக்காக வழங்கப்பட்டதல்ல அது.
கோயிலிலுள்ள புனிதக் கோப்பையில்
பிடித்து வைக்கப் பட்டதுமல்ல.
எந்த ஒரு சண்டையிலும் சிந்துப்பட்டதல்ல-
வெற்றிப் பதாகைகளில் எழுத்துக்களைப் பொறிப்பதற்கு
யாராலும் பயன்படுத்தப் பட்டதுமல்ல.

ஆயினும் யாருடய செவிக்கும் எட்டியிராத அது
தன் குரலைக் கேட்கச் சொல்லி இன்னும்
கூக்குரலிடுகிறது.
கேட்பதற்கு யாருக்கும் நேரமில்லை;விருப்பமில்லை.
கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தது
இந்த அனாதை இரத்தம்.
ஆனால் அதற்கு சாட்சி ஏதுமில்லை.
வழக்கு ஏதும் பதிவு செய்யப் படவில்லை.
தொடக்கம் முதலே இந்த இரத்தத்திற்கு ஊட்டமாக இருந்தது
தூசி மட்டுமே.
பிறகு அது சாம்பலாயிற்று,சுவடு எதனையும்
விட்டுச் செல்லாமல்
தூசிக்கு இரையாயிற்று.

கவிஞர்;

ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ்

பட உதவி; நன்றி;இணையம்.

இராணுவ முகாம்களில் சித்திரவதைகளினால் கொல்லப்பட்டு சுவடேதும் இல்லாமல் காணாமல் போய் விட்ட ஆயிரமாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு இக் கவிதை சமர்ப்பணம்.

1 comment:

  1. அது ஒரு பலஸ்தீனக் கவிதை. அதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் சார்ந்த மக்கள் மீதுள்ள அக்கறையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். மக்களுக்காகாக உழைப்பதாகப் பாசாங்கு செய்து பொதுமக்களிடம் பணம் சேர்த்து காமக் களியாட்டங்களில் தம்மை மறந்து திரிந்தவர்கள் எல்லோரும் ஓடி ஒழிவதற்கு இடம் தேடி அலைகிறார்கள். தமது மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட உங்களைப் போன்ற ஒரு சிலரே அவர்களது அவலம் பற்றி அனுதாபம் கொள்கிறார்கள்.

    ReplyDelete