Saturday, August 1, 2009

பாலி ஆறு நகர்கிறது


அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் இரு மருங்கும்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச்சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்

ஆனாலும்
அமைதியாய்
பாலி ஆறு நகர்கிறது
அந் நாளில்
பண்டார வன்னியன்
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன் தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்குதலைத் திட்டமிட்டு
புளுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நின்மதியில்
சற்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது


இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்அதே மறைப்பில்
இன்றும் குளிக்கின்றார்
எங்களது ஊர் பெண்கள்
ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலியாறு நகர்கிறது.

வ.ஐ.ச.ஜெயபாலன்,
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற நூலில் இருந்து.

4 comments:

  1. பருவ மழை பலமாகப் பெய்து ஓய்ந்த ஒரு பகல் பொழுதில் பொங்கிப் பாய்ந்தோடும் பாலியாற்றின் அழகை அதன் பசுமை நிறைந்த கரையிலிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு சிறுவயதில் ஒரு நாள் கிட்டியது. அதன் பின்பு கவிஞர் ஜெயபாலனின் கவிதையை எண்பதுகளின் தொடக்கத்தில் படித்த போது பாலியின் சலசலப்பை மீண்டும் கேட்கும் ஆசை மனதில் பற்றிக்கொண்டது. உங்கள் பதிவை படித்த போது அந்த ஆசை மேலும் பேராசையாக மாறிக் கொண்டது. என்றோ ஒருநாள் துப்பாக்கி வேட்டுக்களும் கண்ணி வெடிகளும் ஓய்ந்த வேளையில் அந்த ஆசை நிறைவேறும்....

    ReplyDelete
  2. இது நான் என் கவிதையின் உருவத்தை தேடிக் கணடபின் எழுதிய முதல் கவிதை. அதன்முன் மரபுசார்ந்து ”காதலும் வாழ்தலும் பிரிந்து செல்லும் ஒரு சந்தியிலே தடுமாறுகின்றேன்” என்பதுபோல எழுதிவந்தேன். இந்த கவிதையின் முழுமைதான் எனது முறுங்காவியம் “ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்” அந்த குறுங்காவியத்தின் மின் பிரதி இப்போது நூலகத்தில் கிடைக்கிறது
    http://noolaham.net/project/03/278/278.pdf

    ReplyDelete
  3. என்னுடைய கவிதை உருவம் பற்றிய தேடல் முடிந்த கையோடு எழுதிய முதல் கவிதை இது. அதன்முன் “சாதலும் வாழ்தலும் பிரிந்து செல்லும், ஒரு சந்தியிலே தடுமாறுகின்றேன்” என காதல் கவிதைகள் வீரம் சமத்துவம் புரட்ட்சி என மரபுக் கவிதைகள் எழுதிவந்தேன். எனது “பாலியாறு நகர்கிறது’ ” கவிதையின் வளற்ச்சிதான் குறுங்காவியமான ”ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்” அந்த காவியத்தின் மின் பிரதி நூலகத்தில் கிடைக்கிறது

    http://noolaham.net/project/03/278/278.pdf

    ReplyDelete
  4. நன்றி கவிதை ஆசிரியர்.திரு.ஜெய பாலன் அவர்களுக்கு.

    ReplyDelete