Wednesday, July 14, 2010

வரலாற்றுப் பாதையில் தவற விட்ட ஆட்டுக்குட்டி - 1

அண்மையில் கையில் கிட்டிய 'உயிர்நிழல்' சஞ்சிகையில் வாசிக்கக் கிடைத்த சிங்களத்திலிருந்து ரிஷான் ஷெரீப் பாலும் பஹீமா ஜெஹானாலும் தமிழாக்கம் செய்யப் பட்ட இரண்டு கவிதைகள் சிங்கள மக்களின் - குறைந்த பட்சம் இளகிய மனம் கொண்ட - மனித நியாயங்களை இன உணர்வுக்கப்பால் இருந்து சந்திக்கும் கவிஞனை தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டின.

அது நொந்து போயிருக்கும் தமிழ் மனங்களுக்கு சிறிது ஆசுவாசத்தையும் கூட அளிக்க வல்லதாக இருந்தது.அந்தக் கவிதைகளோடு சேர்த்து இனி வரும் சில வாரங்களுக்கு மேலும் சில கலைப் படைப்புகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வது என் விருப்பம்.

அதற்கு முதல் தமிழும் சிங்களமும் தெரிந்த அன்பர்கள் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுதல்
தமிழ் இலக்கியத்துக்கும் சிங்கள இலக்கியத்துக்கும் வளம் சேர்க்கும் என்பதற்கும் அப்பால் மொழியால் பகை கொண்ட இரு இனங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வைக்க ஒரு பாலமாகவும் அது இருக்கும்.

இன்று உங்களோடு பகிர இருக்கின்ற கவிதை சிங்கள மொழியில் மஹேஷ்.முனசிங்ஹ என்ற கவிஞர் எழுதியது. அதனைத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பஹீமா ஜஹான்.இதனைப் பிரசுரம் செய்திருகிறது உயிர்நிழல் இதழ் 32.

இக் கவிதையின் களம் வன்னியில் 'மனிதாபிமான' நடவெடிக்கையின் போது கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கற்பிணித் தாயொருவரின் புகைப்படத்தைப் பார்த்த ஒரு சிங்களக் கவிஞன் ஒருவரின் உணர்வுகள்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சமும் ஒன்று உண்டு. நாம் (தமிழர்) 'இன அழிப்பு' என்று வரையறுப்பதை அவர்கள் (சிங்களவர்) 'மனிதாபிமான' என்ற சொற் தொடரால் வரையறை செய்கின்றனர்.முரண்பாடு என்பது இந்த இடத்திலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது போல் தோன்றுகிறது.ஆனாலும் எனது பேசு பொருள் அரசியலல்ல; மாறாக இலக்கியமே!அத்துடன்,இது பற்றிப் பேசுவதற்கு என்னிடம் வல்லமையும் போதிய அறிவும் பரீட்சயமும் இல்லாமையால் அதனைத் தவிர்த்து கவிதைக்குள் நுழைகிறேன்.

பிறக்காத கவிதைகண்களைக்கூடத் திறக்காத
குருவிக் குஞ்சொன்று
தாயின் கற்பத்துக்குள்ளேயே
சதை வேடர்களுக்கு
இரையானது
வெடித்துத்
துண்டுகள் வேறாகிய
தொப்புள் கொடியின் மேலாக
எச்சில் படுத்தப் படாத இறகொன்று
இரத்தம் தோய்ந்து வெளிப்பட்டது.

பச்சிளம் உதடுகளில்
கறப்பதற்குத் தழும்பிப் பார்த்திருந்த
முலைக்காம்புகள் ஊடாக
கண்ணீரை ஒத்த பாற்துளிகள் வழிந்தன
குருதியோடு குருதி கலந்து
தாய்ப்பாலின் நிறமடைந்து
பேசாத பெருநிலமும்
பெருமூச்செறிந்து
விம்மியழுதது கேட்டது

பிள்ளை கனவுகள் கண்டிருக்கும்
பாற்சிரிப்பு முகத்தில் பூத்திருக்கும்
தாய் கனவுகள் வளர்த்திருப்பாள்
வெள்ளைச் சிரிப்பை மெல்லக் கேட்டிருப்பாள்
வெறி பிடித்தவர்கள் வந்து
கனவுகளை வெடிக்கச் செய்திருக்கலாம்
தசைத் துண்டுகள் மீது
ஊறிக் கலைந்து சென்றிருக்கலாம்

உன்னைப் பலி கொண்ட காட்டுமிருகங்கள்
கொள்ளையடிக்கிறார்கள்
பிறந்த பூமியை
மோப்பம் பிடிக்கிறார்கள்
நித்தமும் இரத்த சுவை வேட்டைகளை
பிறந்திருந்தாலும்
வாழ்வொன்று எங்கே இருக்கும்
பறக்கின்ற வானத்தையும்
அவர்கள் எடுத்திருக்க

அழாமலே இருக்கிறேன்
வன்னி அதிக தூரமெனக்கு.பொறுத்திருக்கிறேன்
அசையாத
பச்சிளம் இறகை நோக்கி
கனவொன்றில்
எனது கையினைக் கொண்டு சென்று
விரலை (அது)பற்றுமோ என
பார்த்திருக்கிறேன்.சில குறிப்புகள்:-


1. இக் கவிதையில் வரும் 'வன்னி அதிக தூரமெனக்கு' என்ற வரி சொல்லி நிற்கும் அர்த்தங்கள் ஏராளம்.ஒரு இனத்தால், மொழியால், இடத்தால்,மனதால், பகை உணர்வால் மிகவும் பிளவுபட்டு போரில் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கும் போது மனிதம், நியாயம்,உண்மை - இவற்றுக்கு அங்கு இடமேது?

தமிழ் மக்களின் மனதுக்குத் தூரமாக என்ற அர்த்தத்திலும் இதனைக் கொள்ளலாம்.

கையாலாகத தன் நிலை எனவும் கொள்ளலாம் இதை.

2. மிக அழகாகத் தமிழில் இதனைக் கொணர்ந்த சகோதரி பஹீமா வுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துக்களும்.

3......
மூலப் பிரதியில் 'நித்தமும் இரத்த சுவை வேட்டைகளை' என்று ஒரு வரி அமைக்கப் பட்டிருந்தது.அதனை 'நித்தமும் இரத்த வாடைகளை'என்று அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று தோன்றியது.

4.'வாழ்வொன்று எங்கே இருக்கும்'என்பதன் பின்னால் வினாக்குறியும்(?)'அவர்கள் எடுத்திருக்க' என்பதன் பின்னால் வியப்புக் குறியும்(!) போடப்பட்டிருந்தால் கவிதை சொல்ல வரும் உணர்வுகளை அக்குறியீடுகள் இன்னும் சற்று அழுத்திச் சொல்ல வல்லதாக இருந்திருக்குமோ என்றும் தோன்றியது.


அவரிடம் எனக்கு சில ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள், விண்ணப்பங்களும் உண்டு.

1.சிங்கள பாஷையில் வந்திருக்கும் இவ்வாறான அல்லது பிரபலமான கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரு காலத்தின் பணியை நீங்கள் ஆற்றுதல் வேண்டும்.இருபாஷைகளையும் அறிந்து வைத்திருக்கின்ற அதே நேரம் சிறந்த கவிஞையாகவும் பிரகாசிக்கிற உங்களால் அதன் சிறப்பும் மென்மையும் நளினமும் மாறாமல் அதனை எடுத்துவர முடியும். இழைக்கப்பட்ட மன வலிகளுக்கப்பால் பெருந்தன்மையும் புரிதலும் கொண்ட பெண்ணிடம் கேட்கும் ஒரு விண்ணப்பம் இது.

11.அது போலவே தமிழில் வெளி வந்திருக்கிற கவிதைகளையோ கலைப்படைப்புகளையோ கூட பெரும்பாண்மையான இனத்தவர் மத்தியில் எடுத்துச் செல்வதால் ஒரு பரஸ்பர புரிந்துணர்வுக்கு வழி சமைக்கலாமில்லையா சகோதரி?

111. அவ்வாறு ஏற்கனவே நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றால் அதற்கான எதிர்வு கூறல்கள் எவ்வாறு இருந்தன என்று அறிய ஆவலுடையேன்.அடுத்தவாரம் ரிஷான் ஷெரீப் மொழி பெயர்த்த ஒரு கவிதைப் பகிர்வு இடம் பெற இருக்கிறது.

5 comments:

 1. உங்கள் இப்பதிவு குறித்து மகிழ்வடைகிறேன்.உங்கள் திருத்தங்கள் குறித்தும் நன்றியைத் தெரிவித்தக் கொள்கிறேன்

  தற்போது எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான ஓரிரு சிங்களக் கவிஞர்களின் கவிதைகளில் நிகழ்ந்து முடிந்த அழித்தொழிப்புக்கு எதிரான குரலே ஓங்கி நிற்கிறது.இதில் மஹேஷ் முனசிங்ஹ, மஞ்சுள வெடிவர்தன ஆகியோர் முக்கியமானவர்கள்.தமிழ்ர்களுக்கு ஆதரவாக எழுதப்பட்ட 'மஞ்சுள வெடிவர்தன' வின் "தலைப்பிழந்த தாய் நிழம்" தொகுப்பை ரிஷானும் நானும் இணைந்து மொழிபெயர்த்துள்ளோம்.அது 'உயிர் நிழல்' ஊடாக வெளிவரும் என நினைக்கிறேன்.
  சிங்களவர்- தமிழர் -முஸ்லிம்கள் ஆகிய நாம் இலக்கியத்தினூடாகவாவது ஒன்றிணைய முடிந்தமை மிகுந்த மகிழ்வைத் தருகிறது.

  தமிழை சிங்களத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் நான் இறங்கவில்லை.சிங்கள் மொழியறிவு தான் என்னிடமுள்ளது. சிங்களக் கவிதைகளை எழுதும் திறமை என்னிடமில்லை. அதனால் தமிழ்க்கவிதையைச் சிங்களத்திற்குக் கொண்டு செல்லும்போது அதன் அழகைச் சிதைத்துவிடுவேன் என்ற அச்சத்தினால் நான் தயங்குகிறேன்.

  உயிர் நிழலில் வெளிவந்துள்ள மஹேஷ் முனசிங்ஹ வின் "இன்னும்" , "விடைபெறல்", "எஞ்சிய தமிழன் ஒருவனிடமிருந்து" ஆகிய கவிதைகளையும் நான் மொழிபெயர்ப்புச் செய்திருந்தேன்.அவற்றில் ரிஷானின் பெயர் தவறுதலாக இடம்பெற்றுள்ளது.

  ReplyDelete
 2. அன்பின் நண்பருக்கு,

  எனதும் சகோதரி ஃபஹீமாஜஹானினதும் முயற்சிகள் குறித்து உங்களது கருத்துக்களைப் பதிவாக இட்டமைக்கு நன்றி நண்பரே.

  //இதில் கவனிக்க வேண்டிய அம்சமும் ஒன்று உண்டு. நாம் (தமிழர்) 'இன அழிப்பு' என்று வரையறுப்பதை அவர்கள் (சிங்களவர்) 'மனிதாபிமான' என்ற சொற் தொடரால் வரையறை செய்கின்றனர்.முரண்பாடு என்பது இந்த இடத்திலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது போல் தோன்றுகிறது.//

  இங்கு முரண்பட ஏதுமில்லை நண்பரே. இந்த இன ஒழிப்பு நடவடிக்கையை இலங்கை அரசு அப்பொழுது 'மனிதாபிமான நடவடிக்கை' எனப் பெயரிட்டது. அதைத்தான் ஆசிரியர் இங்கு கிண்டலடித்திருக்கிறார். 'கர்ப்பிணித் தாயொருவரைக் கொல்வதில் என்ன மனிதாபிமானம் இருக்கிறது?' என மறைமுகமாகக் கேட்டிருக்கிறார்.

  இந்தக் கவிதையை எமது மொழிபெயர்ப்பு வலைத்தளத்தில் இட்டிருக்கிறேன்
  http://rishantranslations.blogspot.com/2010/07/blog-post_15.html

  ReplyDelete
 3. பஹீமா,ரிஷான் உங்கள் வரவுக்கும் பின்னூட்டங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி."தலைப்பிழந்த தாய்நிலம்" காண வெகு ஆவல்.

  மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  உங்களால் ஒரு சிறு தமிழ் கவிதையையேனும் சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.அப்போது தான் இப்பயணம் பூரனமடையும் இல்லையா கவிஞர்களே?

  உயிர் நிழல் காலத்தின் கட்டளையைச் சிறப்பாகச் செய்து வருகிறது.அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  நன்றி ஜீவகுமாரன்.

  ReplyDelete