Wednesday, July 21, 2010

வரலாற்றுப் பாதையில் தவறவிட்ட ஆட்டுக் குட்டி - 2.



சிங்கள மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப் பட்ட இன்னுமொரு அழகான கவிதை இது.மஹேஷ்.முனசிங்ஹ என்ற கவிஞர் தான் இதையும் எழுதியிருக்கிறார். ரிஷான் ஷெரீப் இதனை அழகுற மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.உயிர்நிழல் 32ல் வெளியாகியிருக்கின்ற 11 மொழிபெயர்ப்புக் கவிதைகளில் இதுவும் ஒன்று.

மஹேஷ் முனசிங்ஹவின் பாடு பொருளும் அதனைச் சொல்ல அவர் எடுத்தாளும் மொழி நயமும் தைரியமும் தனித்துவமும் கொண்டவை.பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களுக்கே சரி பிழைகளை தனக்கே உரித்தான உணர்வுகளின் மொழியினூடாகச் சொல்வதற்கு அசாத்தியமான துணிச்சலும் நேர்மையும் தார்மீக உணர்வும் வேண்டும்.அது அவ்வளவு எளிதானதல்ல.உண்மையான வீரன் ஒருவனால் மட்டுமே அது சாத்தியமாகும்.அது அவருக்குச் சாத்தியப் பட்டிருக்கிறது.

கவிதையின் பேசு பொருள் போரும் போரின் பின்பான ஒரு மனச்சாட்சியும் (அது பக்தியும் தர்மமும் நிறந்த பெளத்த மனிதனின் குரல்).ஒரு இராணுவ வீரனின் குரல் எனவும் கொள்ளலாம் இதனை.போரின் வெற்றியை அரசு பறை சாற்றிய பின் புத்த கோயிலுக்குப் போகிறான் இந்த இராணுவ வீரன். கடவுளோடு (புத்தரோடு)பேசுகிறது அவனின் மன சாட்சி. உண்மைகளின் - சத்தியத்தின் ஒளியில் அவன் நடுங்குகிறான்.கவிதையின் தலைப்பு இது தான்;

ஊனமுள்ள இராணுவ வீரனும் புத்தரும்


முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயது வந்தோர்
பிணக் குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்

பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
பிரித் நூலும் கட்டப் பட்டது

'நாட்டைக் காக்கும்' எனக்குக் காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து.

விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்

ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது

கிராமவாசிகளுக்கு மறந்து போயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
என் தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்

கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப் பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்து கிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்

நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையே தானா?

பாளிச் செய்யுளை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க
இரு விழிகளையும் மூடிக் கொள்கிறேன்

கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமல் இருக்கின்றேன்.

கவிதையில் முரண்கள் பேசப் படுகின்றன.போரில் கொல்லப்பட்ட அப்பாவிகளின் உயிர்கள் அவனின் கண்முன்னே வருகின்றன.முதியோர்,காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள்,வயது வந்தோர் என்று தொடரும் பட்டியலில் யாரோடு தான் போரிட்டேன் என்பதும் உண்மையும் அவனை நெருடுகின்றன.நிராயுத பாணிகளான அப்பாவிகளின் முகங்கள் அவனைக் கேள்வி கேட்கின்றன. 'பாவங்களை ஊக்குவிக்கும் துறவிகள்' என கொல்லாமையைப் போதித்த புத்தனின் வழி வந்த துறவிகளின் முரண் பேசப் படுகிறது.'நாட்டைக் காத்தல்'என்ற பெயரின் பின்னால் தாயும் தாய்மையும் விலைப்பட்டுப் போனது சொல்லப் படுகிறது. இவற்றை எல்லாம் தாண்டியும் புத்தர் மகாபுருஷர் என்பது அந்த வீரனுக்குப் புரிந்திருக்கிறது.'என் தலையை ஊடுருவும் உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்' என்பது ஒரு தனித்துவ மொழி.அது பெரும்பாண்மையான எல்லோரையும் தாண்டி அவனுக்கும் புத்தருக்கும் மட்டுமே புரியும் மனசாட்சியின் மொழி.உண்மையான பெளத்தனின் புரிதலுக்கு மட்டுமே உரித்தானது.

ஆங்காங்கே வீழ்ந்து கிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்
அவனுக்குப் புரிகிறது யாரைத் தான் கொன்றேன் என்பது. எல்லோரையும் அப்பாவி மனிதர்களாய்க் காண்கிறான்.எல்லோருக்குமே எனது முகம் என்று சொல்வதில் தொனிக்கும் சோகம்; மென்மையும் ஆழமும் அதே நேரம் அதிலிருக்கும் மனிதமும் அக்கவிஞனின் அழகியலின்,திறமையின் வீரியத்தை சொல்லி நிற்கிறது.

'நூறு ஆயிரமெனக் கொன்றொழித்திருப்பது என்னையே தானா?' என்ன ஒரு சொற்கட்டு!அது சொல்லி நிற்கும் அர்த்தங்கள் தான் எத்தனை!என்னுடைய ஆத்மாவையல்லவா நான் கொன்றொழித்து விட்டு இங்கு வந்து நிற்கிறேன் என்று தர்மத்தின் வழியிலிருந்து தவறிய தன்னையே காண்கிறான்.புத்தரைப் பார்க்க முடியாமல் அவன் கண்கள் அச்சம் கொள்கின்றன; கரங்கள் உயர மறுக்கின்றன. கூனிக் குறுகி புத்தனின் முன்னால் நிற்கிறான் இந்த இராணுவ வீரன்.

ஆனால் இலங்கை தேசம் அதனை வெற்றி எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

உண்மை புத்தனின் முன்னால் ஊனமுற்றுக் கிடக்கிறது.

ரிஷான் மிக அழகாக இதனை மொழி பெயர்த்திருக்கிறீர்கள். சிறப்பான இக்கவிதைத் தெரிவுக்கும் தமிழுக்கு இதனைக் கொண்டு வந்தமைக்கும் என் தோழமை மிக்க நன்றிகள்.அந்த சிங்களக் கவிஞனுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்களும் உரித்தாகட்டும்!

அண்மையில் ஒரு ஹைக்கூ வாசித்தேன்.

"இருண்ட காட்டுக்குள்
வானம் தோன்றி மறைகிறது
அரைக் கணம்
மின்மினிக் கூட்டங்கள்"

உங்களதும் சகோதரி பஹீமாவினதும் மொழிபெயர்ப்புப் புத்தகத்தை வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு படைப்பை விடப் பெரியதும்;வலியதுமாகும்.அதற்கு ஒரு சீரிய நோக்கும் ரசனையும் ஆற்றலும் தன்னலமற்ற தன்மையும் வேண்டும்.நன்றி அதனை சாத்தியமாக்கும் எல்லோருக்கும்.

No comments:

Post a Comment