Friday, August 27, 2010

மின்னாமல் முழங்காமல் வந்த மழை


லைசன்ஸைப் பார்த்துப் பார்த்து போய்க் கொண்டே வேலைத்தலம் போய்ச் சேர்ந்தேன் என்று சொன்னேன் தானே! அதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் இதை.


இப்போது கொஞ்சம் என் வேலை இடத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அது ஒரு அரச திணைக்களம்.தபால் திணைக்களம்.பல்லாயிரம் ஊழியர்கள் கண்டம் முழுவதும் வேலையில் இருக்கிறார்கள்.அதில் நான் ஒரு சிறு துளி.அது மக்களுக்குப் பல பிரிவுகளில் பல சேவைகளை வழங்குகிறது.நான் வேலை செய்கின்ற பிரிவின் பிரதான வேலை தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வருகின்ற போகின்ற தபால்கள்,பாசல்களைப் பெற்று அவற்றை பிரித்து பகுத்து (உட்பிரிவுகளின் படி)அவர்களுக்கு அனுப்பி வைப்பது காலையில் வேலை செய்கின்றவர்களுடய வேலை.(5 மணி நேரம்.6-11)

மாலையில் 5 மணி நேரம் வேலை செய்கின்றவர்கள் காலையில் பிரித்து வைத்து விட்டுப் போன தபால்கலைத் திணைக்கள ஊழியர் மூலமாகக் கொடுத்தனுப்பி விடுவதும்,அவர்களிடம் இருந்து வருகின்ற தபால்கள்,பாசல்கள்,உள்நாட்டு வெளிநாட்டு கடுகதிக் கடிதங்கள் போன்ற வற்றை அவர்களுக்கான சலுகை விலையில் கணனியில் பதிவு செய்வதும்;ரசீதை அவர்களுக்கு அன்றே அனுப்பி வைப்பதும் அவர்களது வேண்டுகோள்களுக்கேற்ப தபால் திணைக்களத்து பொருட்களைக் கொள்வனவு செய்து அனுப்பி வைப்பதுமாகும். சில வேளைகளில் அவசர காரியமெனில் கூரியரை ஒழுங்கு படுத்தி அந்த பொருள் குறிப்பிட்ட நேரம் போய்ச் சேர ஒழுங்கு செய்வதும் மாலையில் வேலை செய்பவரது பொறுப்பு.

நான் சொனி நிறுவனத்துக்கும் அரச பாதுகாப்பு திணைக்களத்துக்குமான வெளியே செல்லும் தபால்களுக்குப் பொறுப்பாக இருந்தேன்.(இது நான் சொல்வது சுமார் 10 வருடங்களுக்கு முந்திய கதை)

இந்தச் சந்தர்ப்பத்தில் பல நூற்றுக்கணக்கான அரச தனிப்பட்ட நிறுவனங்கள் பல ஒப்பந்த அடிப்படையில் நம் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்ட படியால் அவர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப் பட்டிருந்தன. திடீரென நம் தலைமையகம் இவற்றைத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இப்பகுதி வேலைகளை விற்று விட்டது. அதனால் அங்கு வேலை செய்த தபால் திணைக்களத்து ஊழியர்களுக்கு 3 வாய்ப்புகளைத் தந்திருந்தார்கள்.

1.குறிப்பிட்டளவு சன்மானத்தைப் பெற்றுக் கொண்டு வேலையில் இருந்து நீங்கிச் செல்லலாம்.
2.புதிய நிறுவனத்தோடு அதே அளவு சம்பளத்தில் சேர்ந்து கொள்லலாம்.
3. வேறு இடத்துக்கு மாற்றம் தரும் வரை தாமதிக்கலாம்.

நான் 3 வது தீர்மானத்தை எடுத்திருந்தேன்.(அது பிரித்தானிய கொலனிக்குள் நம் நாடு இருந்ததன் எச்சம்.:)

அதனால் இப்போது எனக்கு என் வேலையோடு, புதிய நிறுவனத்துக்கு வேலையைக் கற்றுக் கொடுக்க வேண்டிய வேலையும் இருந்தது.5 மணி நேரம் என்பது தரப்பட்டிருக்கின்ற வேலையைச் செய்து முடிக்கவே போதுமானதாக இருக்கும். அதற்குள் புதிதாதச் சில வேலைகளும் சேர்ந்து கொள்வதால் 12 - 5 மணி வரையுமான வேலை சில வேளைகளில் கூடுதலான நேரத்தையும் எடுக்கும். ஆனாலும் வரவுப் பதிவேட்டில் 12 - 5 என்றே பதிந்து செல்வது வழக்கம்.நானே ராணி நானே பொறுப்பு என்பதால் வந்த ஒரு வித பொறுப்புணர்வு என்று சொல்லலாம்.எப்போவாவது இருந்து விட்டு முகாமையாளர் வருவார். நலமா? வேலை எப்படி? என்று கேட்டு விட்டுப் போவார். அவ்வளவு தான். வேலை கை நழுவிப் போக இருப்பதால் வந்த அசிரத்தை என்றும் இதனைக் கொள்ளலாம்.

இனி விடயத்துக்கு வருகிறேன்.(ஆலாபனை எல்லாம் முடிந்து விட்டது)வழமை போல் வந்து கையெழுத்திட்டுப் பொருட்களைப் பொறுப்பேற்று வேலை ஆரம்பித்து சுமார் 2 மணி நேரம் இருக்கும். என் முகாமையாளர் மைக்கல் பிறவுன்( எங்கள் முன்னாள் பிரதமர் கெவின் ரட் மாதிரி இருப்பார்) வந்தார். எமக்கிடையிலான் உரையாடல் கீழ் கண்டவாறு இருந்தது.

நலமா யசோதா?
நலம் நீங்கள் எப்படி மைக்?
(அதற்குப் பதில் இல்லை)வேலை எப்படிப் போகிறது?
வழமை போல.
பிரச்சினை ஏதேனும் உண்டா?
இது வரை இல்லை. சுமூகமாகப் போகிறது.
புது நிறுவனத்தினர் உன்னோடு எப்படி நடந்து கொள்கிறார்கள்.
நட்போடும் ஒத்துழைப்போடும்.
நேரம் உனக்குப் போதுமானதாக இருக்கிறதா?
சற்றுக் கடினம் தான் ஆனாலும் சமாளிக்கக் கூடியதாக இருக்கிறது.
முழு நேரமாக வேலை செய்ய உனக்குச் சம்மதமா?
என்ன? போஸ்டிலா?
ஆம் நாளையில் இருந்து உன்னால் அதனை ஆரம்பிக்க முடியுமா?
!!!!!!உண்மையாகத் தான் கேட்கிறாயா?
ஆமாம். ஒருவர் ராஜினாமாச் செய்திருக்கிற படியால் அதனையும் சேர்த்து நீ செய்ய வேண்டி இருக்கும்.
நேரம்?
9 - 5.
நிச்சயமாக. என்னை நீ தெரிவு செய்ததற்கு நன்றி.
நாளை காலை வேலை ஆரம்பிக்கு முன்பாக என் காரியாலையத்துக்கு வந்து உன் நியமனக் கடிதத்தைப் பெற்றுச் செல்.வாழ்த்துக்கள்.

முழு நேர வேலைக்குத் தவம் கிடந்த நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

மின்னாமல் முழங்காமல் பெய்த மழை அது.

அது என் வாழ்வுக்கான சுபீட்சமான பாதை திறக்கப் பட்ட நாள்.

நவம்பர் மாதம் 22ம் திகதி.

6 comments:

 1. உங்கள் சந்தோஷ மழையில் நானும் நனைந்துவிட்டேன்...உங்கள் முந்தைய பதிவுகளும் வாசித்திருக்கிறேன்.உங்கள் பதிவுகளின் ரசிகை நான்... :)

  ReplyDelete
 2. மிக்க மகிழ்ச்சி ஹாசினி.

  புன்னகையோடு உங்கள் கை கோர்த்து இன்னும் பல அனுபவ நவரசக் கதைகள் சொல்ல ஆசை.

  நீங்கள் ஓடி விடாமல் இருக்க வேண்டும்:)

  ReplyDelete
 3. கட்டாயம் சொல்லுங்கள்...பின்னூட்டம் இடுகின்றேனோ இல்லையோ உங்கள் பதிவுகளை தவறாமல் வாசித்து ரசிக்கின்றவர்களில் நானும் ஒருத்தி....:)

  ReplyDelete
 4. நிச்சயமாக!:)

  அப்ப கஸ்டப் படுறதெண்டு முடிவெடுத்திட்டீங்க?:)

  இந்தப் பக்கம் வாரம் தோறும் 5,6 பேர் தவறாமல் வந்து போகும் தடம் அறிவேன்.பதிவு போட்ட பின் அவர்கள் வந்து விட்டார்களா என்பதை ஒரு வித வாஞ்சையோடும் ஆவலோடும் எதிர்பார்ப்பேன்.

  வந்து போனார்கள் என்பதைக் கண்ட பின் ஒரு விதமாய் மனம் மகிழ்ச்சி கொள்ளும்.

  அவர்கள் வந்து போன தடம் காணும் வரை இங்கு அடிக்கடி நானும் வந்து பார்த்துப் போவேன்.

  என் பக்கத்து நிரந்தர நண்பர்கள் இவர்கள்.

  இலங்கை 2
  இந்தியா 2
  டென்மார்க் 1
  மெல்போர்ன் 1

  வேறு ஓரிரண்டு பேர் அவ்வப்போது வந்து போவர். அது போனஸ் :)

  ReplyDelete
 5. //அப்ப கஸ்டப் படுறதெண்டு முடிவெடுத்திட்டீங்க?:)//

  தோழி என்று சொல்லிட்டீங்க..வேற வழி....;)(சும்மா தான்)

  ReplyDelete
 6. :))

  கொஞ்சம் பொறுங்கோ. பதிவு தயாராகிக் கொண்டிருக்கு!!

  ReplyDelete