சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் ஒரு சிறுகதை படித்தேன். அது சுரேந்திரநாத் என்பவர் எழுதிய தீராக் காதல் என்ற கதை.அது இப்படித் தொடங்குகிறது."கடவுள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒழித்து வைத்திருப்பார்.எனக்கு அது..." என்று ஆரம்பிக்கும்.
என்னுடய வாழ்விலும் வந்த ஓர் அற்புதமான தருணம் இது.அப்போது நான் பகுதி நேரமாக பிற்பகல் 12 மணி தொடக்கம் 5 மணிவரை வேலைக்கு (நகர் புறம் என்பதால் தொடர் தொடரூந்தில்) பயணித்துக் கொண்டிருந்த காலம்.அதனால் காலையில் இருந்த நேரத்தை கார் பழகுவதற்கு ஒதுக்கிக் கொண்டேன்.ஒரு மணி நேரம் பழக 35 டொலர்கள் கொடுத்து பழகிப் பரீட்சைக்கு மேலும் காசு கட்டி பரீட்சை நேரம் ஓடுவதற்காக காருக்கு வாடகையாக(பழகிய கார் என்றால் ஓடுவது சுலபமில்லையா)மேலும் பணம் கொடுத்து பழகிய காரையே வாடகைக்குப் பெற்று, பரீட்சைக்கு முதல் 2 மணி நேரம் பயிற்சியும் பெற்றுத் தயாராகக் காரியாலயத்தில் குந்தியாயிற்று.
பரீட்சகர் வெளியே வந்து என்னை வருமாறு அழைத்த கையோடு எனக்குப் பதட்டம் ஆரம்பமாயிற்று.என் பயிற்சியாளரிடம் வாழ்த்தினையும் திறப்பையும் பெற்றுப் பரீட்சகருடன் நடந்து வெளியே வந்தேன்.காரை எடுக்குமாறு கூறினார் பரீட்சகர். எனக்கு காரை எப்படித் திறப்பதெனத் தெரியவில்லை.பாருங்கள் பல மாதங்கள் பயிற்சி பெற்ற அதே காருக்கு எப்போதும் திறந்தவாறே கார் இருப்பதால் எனக்கு காரை திறக்கும் வழி தெரியவில்லை.(றிமோட் கொன்றோல்)அட இந்தச் சின்ன விடயம் கூட எனக்குத் தெரியவில்லையே என்று மனம் அலுத்துக் கொண்டது.நான் முழித்துக் கொண்டு நிற்க,போய் உன் பயிற்சியாளரை அழைத்து வா என்றார் பரீட்சகர்.மனம் கணக்குப் போட்டது.சரி ஒரு பிழை.முதற் கோணல் முற்றும் கோணலாயிற்றே.மனம் சோர அவரை அழைத்து வந்தேன்.
அவர் வந்து அசட்டுப் புன்னகையோடு திறந்து விட,காரை ஸ்டாட் பண்ணினேன். காரியாலய வளாகத்தை தாண்டி இடது புறம் திருப்பு என்று ஆணை பிறந்தது.அந்த இடத்தில் இருந்த ஸ்ரொப் சைன்னுக்கு கிவ் வே கொடுத்து இடது புறம் திருப்பினேன்.ப்ரீட்சகர் அதனைக் குறித்துக் கொண்டதை 'மூன்றாவது கண்'கவனித்துக் கொண்டது.மனம் அடச் சீ 2 வது பிழை என்றது. தொடர்ந்து கொமாண்டிங் தந்து கொண்டே இருந்தார் பரீட்சகர்.
முன்னால் தரித்து நிற்கிற காருக்குப் பின்னால் றிவேர்ஸ் பாக் செய்து விட்டு நீ சரி என்று நினைத்த பின் எனக்குக் கூறு என்றாள். இதற்கு மிகக் கடும் பயிற்சி எடுத்துக் கொண்டாலும் சற்று நான் இடறுகின்ற இடம் இது. எனவே வலு அவதானமாகவும் ஆறுதலாகவும் சரியாகவும் பாக் பண்ணினேன்.அதில் எனக்கொரு ஆறுதல்.கெட்டிக்காரி என்று எனக்கு நானே மனதுக்குள் ஒரு சான்றிதழையும் கொடுத்து விட்டு பாக் பண்ணியாயிற்று என்றேன் கியர் றிவேஸில் இருக்கத் தக்கதாக.சரி இனி எடுக்கலாம் என்றாள். கியரை டிறைவ்வுக்குக் கொண்டு வரும் போது நினைத்தேன். சரி மூன்றாவது பிழை.
அதன் பின் மனம் ஒரு தெளிவான தீர்மானத்துக்கு வந்திருந்தது. சரி இம்முறை லசென்ஸ் கிடைக்கப் போவதில்லை.அடுத்தமுறை கவனமாக பார்ப்போம் கிட்டத் தட்ட 120 டொலர்கள் கொடுத்து 3 தவறுகளைப் படித்திருக்கிறேன் என்று மனம் தீர்ப்பினை வழங்க, அதன் பின் தெளிவான நிதானத்தோடு கார் சுமூகமாக ஒரு தவறுகளும் நேராமல் இருப்பிடத்தை வந்தடைந்தது.
தீர்ப்புக்குக் காத்திருக்கின்ற அப் பொழுதில் பயிற்றுனர் பரீட்சை எப்படி என்று கேட்டார். நான் மூன்று தவறுகளைச் சொன்னேன்.மனம் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தது.அது தன்னை எப்போதும் சிறப்பாகத் தயார் படுத்திக் கொள்கிறது.மனதுக்குத் தெரியாத தவறு என்று ஒன்று இருக்கிறதா என்ன? அது தன்னைச் சரியாக இடம், சூழல், நிலைமை - இவற்றிற்கமைவாகத் தன்னைத் தானே சிறப்பாகத் தகவமைத்துக் கொள்கிறது.
மறு நாள் பயிற்சிக்கு நேரத்தை பயிற்றுனரிடம் குறித்துக் கொண்டு, தொடர்ந்து சிற்றிக்கு வேலைக்குப் போக வேண்டி இருப்பதால் நானே காரை ஓட்டி ரயில் நிலையம் வரை போகிறேன் என்று அவரிடம் வேண்டுகோளையும் விடுத்து விட்டுக் காத்திருந்தேன். 10 நிமிடங்களின் பின் அழைப்பாணை வந்தது.
பதில் இவ்வாறு இருந்தது."கொன்கிறாஜுலேஷன்ஸ்.யூ பாஸ்ட் த டெஸ்ட்".
ஒரே தடவையில் சித்தியடைந்த என் மன நிலையைப் பிறகு சொல்லவும் வேண்டுமா?
குதூகல மனதோடு அந்தப் புதிய லசென்ஸை அடிக்கடி திறந்து பார்த்துக் கொண்டே வேலைக்கும் போய்ச் சேர்ந்தேன்.காணுகின்ற மனிதர்கள்,மரங்கள்,வாகனங்கள் எல்லாம் அழகாக இருந்தன.நானும் ஒரு கார் வாங்கி....என்று கற்பனை விரிய பிடித்தமான கார், வண்ணம், மொடல் என்று மனம் ஒரு புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.
உண்மையில் கார் லசென்ஸ் என்பது, புது உலகுக்கான திறப்புத் தான்.சுதந்திரம் கைப்பிடிக்குள் வந்த நாள் அது.
கொஞ்சம் பொறுங்கோ, அடுத்த வாரம் வரை.சொல்ல இன்னுமொரு பாதி இருக்கிறது. அது அடுத்த வாரம் தொடரும்.அதையும் சொன்னால் தான் இந்த நாளின் அற்புதம் பூரணமாகும்.:-)
உண்மைதான்..உங்கள் மகிழ்ச்சியை நானும் பகிர்ந்துகொள்கிறேன்...:)
ReplyDeleteஎங்கள் சொந்த கணிப்பில் எதிர்மறையாக நாங்கள் நினைத்திருக்கும் முடிவு அதற்கு மாறாக வரும்போது அந்த சந்தோசம் அளவிடமுடியாதது தான்...நீங்கள் சொல்கின்ற விதம் கூட நல்ல அழகு...உங்கள் பதிவுகளை தமிழ்மணம் போன்ற தளங்களில் இணைத்தால் இன்னும் பலருடன் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்குமே...
உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி ஹாசினி.நீங்கள் நலமா?
ReplyDeleteஎதிர்பாராமல் ஒன்று கிட்டும் போது அந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் ஏது?
அந்த நாள் ஒரு பொன் நாள்.
மனிதர்களைக் கவர்தல் அச்சத்திற்குரியது தோழி.
சும்மா இருப்பதே சுகம்:)
நலம்..நாடுவது அதுவே...:)
ReplyDeleteசில தனிப்பட்ட காரணங்களுக்காக பதிவுலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருக்கிறேன்...தற்காலிகமாகத்தான்..:)
அதனால் தான் உங்கள் முந்தைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடமுடியவில்லை....
//மனிதர்களைக் கவர்தல் அச்சத்திற்குரியது தோழி.சும்மா இருப்பதே சுகம்:) //
உண்மைதான்...ஆனால் அருமையான அழகான எனக்கு பிடித்த பதிவுகள் வரவேற்பு இல்லாமல் அநாதரவாக நிற்பது போன்ற ஒரு உணர்வு..ஒரு சின்ன வருத்தம்...அதுதான்....:)
'என் வழி தனி வழி!'அந்த ரகசியத்தைச் உங்களுக்குச் சொல்லவா?:)
ReplyDeleteபல பதிவுகளை அன்றாடம் போய் பார்ப்பேன்.ஏதேனும் சிறப்பாகப் பிடித்திருந்தால் அவர்கள் 'என்ரகம்' என்று தோன்றினால் கொஞ்ச நாளைக்குப் போய்ப் பார்ப்பேன்.நம்பிக்கை வந்த பின் அவர்களுக்கு ஒரு பின்னூட்டம் போடுவேன். அவர்கள் ஒரு தடவை நான் வந்த தடம் அறிந்து என் பக்கத்தை ஒரு தரம் எட்டிப் பார்ப்பார்கள்.
அவர்களுக்கு இப்பக்கம் தன் பாட்டில் அறிமுகமாகும்.
அது போதும் போல இருக்கும் எனக்கு.
உங்கள் மனப் பகிர்வு மகிழ்ச்சிப் படுத்துகிரது என்னை.நீங்கள் பின்னூட்டம் போடா விட்டாலும் தொடர்ந்து வர வேணும்.என் நிரந்தர நண்பர்களுள் நீங்களும் ஒருவர்.மறக்கக் கூடது அதை!
ம்ம்...நான் கூட பதிவுகளை எழுதும்போது மற்றவர்களின் அங்கீகாரத்துக்காக என்பதை விட என் மனத்திருப்திக்காக தான் எழுதுவேன்..எனவே உங்கள் வழியை நானும் ஆதரிக்கிறேன்....:)
ReplyDeleteஉங்கள் பதிவுகளில் அதை என்னால் உணரமுடிகிறது.
ReplyDeleteஉங்களைக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி எனக்கு.
கரம் கோர்த்துக் கொள்கிறேன் உங்களோடு.